Vanavil Sirpame – Episode 3

7
1512

அத்தியாயம் 3
“உனக்காக நான் எவ்வளவு நேரமா காத்துக்கிட்டு இருக்கேன்.நீ பாட்டுக்கு போனா என்ன அர்த்தம்? வா … என்கூட ஒரு ரெண்டு நிமிஷம் பேசு.அப்புறம் கிளம்பலாம் வா” உரிமையாக கையை பற்ற வந்தான் அவன்.

பதறிப்போய் சுற்றும் முற்றும் பதட்டமாக திரும்பிப் பார்த்தாள் சங்கமித்ரா. ‘என்ன செய்கிறான் இவன்’ என்று கோபத்தோடு அவனிடம் பேசத் தொடங்கினாள்.

“என்ன மிஸ்டர் கொழுப்பா? தனியா போற பொண்ணு கிட்ட வம்பு பண்ணுறீங்களா? நேத்து என்னடான்னா அப்படி பார்த்தீங்க…இப்ப என்னடான்னா கையை பிடிச்சு இழுக்க பார்க்கறீங்க.சின்னதா ஒரு சத்தம் போட்டேன்னு வையுங்க.சுத்தி இருக்கிற எல்லாரும் சேர்ந்து உங்க முதுகில் டின் கட்டிடுவாங்க.ஜாக்கிரதை”

“அடேயப்பா மிரட்டல் எல்லாம் பலமா இருக்கு…ஆமா நடுவில என்னமோ சொன்னியே…ஆங்! நேத்து ஏன் அப்படி பார்த்தேன்னு கேட்டியே? ஆமா நேத்து எப்படி பார்த்தேன்?” என்று ஒரு மாதிரி குரலில் கேட்டுவிட்டு பல மாதிரி அவளை பார்த்து வைத்தான்.

‘அப்படி பார்க்காதேடா கடன்காரா’ மனதுக்குள் திட்டியபடியே அங்கிருந்து நகர முயன்றாள்.
“என்ன பழக்கம் இது? நான் பேசிக்கிட்டே இருக்கும் போது நீ பாட்டுக்கு போற…என்ன அர்த்தம்…ஒழுங்கா நின்னு என் கேள்விக்கு பதில் சொல்லிட்டு போ”அதட்டலாக வந்தது அவன் குரல்.

“யோவ் …என்ன நானும் பார்த்துக்கிட்டே இருக்கேன்.சும்மா மிரட்டிகிட்டே இருக்க? நீ யாரு…உன் கூட எதுக்கு நான் பேசணும்? உன் கேள்விக்கு எல்லாம் எதுக்கு நான் பதில் சொல்லணும்?வந்துட்டார் பெரிய மைசூர் மகாராஜா…வேலையை பார்த்துக்கிட்டு போய்யா”கோபத்தில் என்ன பேசுகிறோம் என்று கூட உணராமல் அவள் பாட்டிற்கு பொரிந்து தள்ளினாள் சங்கமித்ரா.

“இதுக்கெல்லாம் நீ பின்னாடி வருத்தப்படப் போற…”அவன் குரல் ஆழ்ந்து ஒலித்தது.

“வருத்தப்படும் போது உங்களுக்கு சொல்லி அனுப்பறேன்.இப்ப கிளம்புங்க புரியுதா?”

“அதெப்படி கிளம்ப முடியும்…இன்னும் உன்கிட்ட நான் பேச வந்ததை பேசவே இல்லையே.”

“உங்ககிட்ட பேச எனக்கு விருப்பம் இல்லை”

“உன்கிட்டே பேசாமல் நானும் இன்னைக்கு இங்கே இருந்து போற மாதிரி இல்லை”இருவரும் சளைக்காமல் பேசினார்கள்.

பேச்சு தான் நீண்டு கொண்டே போனதே தவிர இருவரும் பின் வாங்காமல் நெடுநேரம் விவாதிக்க சங்கமித்ரா தான் இறங்கி வர வேண்டியதாயிற்று. அவளுக்கு கல்லூரிக்கு செல்லும் நேரம் நெருங்கி விட்டதே.

“எனக்கு காலேஜ்க்கு வேற நேரம் ஆச்சு…மரியாதையா வழி விடுங்க…”

“அந்த எண்ணம் உனக்கு முன்னாடியே இருந்து இருக்கணும்.உனக்கு லேட் ஆனதுக்கு நானா காரணம்? நான் வந்த உடனே என் கூட பேசி இருந்தால் இப்படி லேட் ஆகி இருக்குமா…இப்பவும் ஒண்ணும் கெட்டுப் போகல…ஒரு அஞ்சு நிமிஷம் அமைதியா இரு.நான் சொல்ல வந்ததை சொல்லிடுவேன்” அமர்த்தலாக சொன்னான் பிரபஞ்சன்.

“சொல்லித் தொலை”கடித்த பற்களுக்கிடையில் வார்த்தைகளை துப்பினாள் சங்கமித்ரா

“ஐ லவ் யூ” அவள் கண்களை நேருக்கு நேராக பார்த்தபடி மின்னாமல் முழங்காமல் அவன் சொல்லி விட்டான்.
சங்கமித்ரா அதிர்ச்சியின் உச்சத்தில் இருந்தாள்.

‘என்ன இவன் இப்படி சொல்லித் தொலைச்சுட்டான்.இப்போ என்ன செய்வது’என்று முழித்துக் கொண்டு நின்றவள் அவன் அசந்த நேரத்தில் அங்கிருந்து கிட்டத்தட்ட ஓடி பஸ் ஸ்டாண்டை வந்து நின்று கொண்டாள்.

பிரபஞ்சன் நினைத்து இருந்தால் அவள் செல்லும் பாதையின் முன்னே சென்று அவளை மறித்து நின்று இருக்க முடியும்.ஆனால் அதை செய்யாமல் அவளை பஸ் ஸ்டாண்ட் நோக்கி செல்லும் வரை பொறுமையாகவே அவளை வேடிக்கை பார்த்தவன் அவள் அங்கே சென்றதும் பைக்கை எடுத்துக் கொண்டு அவள் அருகில் போய் நின்றான்.

அவள் கண்களில் இருந்த பயம் அவனை கொஞ்சம் தடுமாற வைத்தது.தேவை இல்லாமல் அவளை பயமுறுத்த வேண்டாம் என்று எண்ணியவன் இனி அவளை தனியே எங்கேனும் அழைத்து சென்று அவளிடம் இதை பற்றி பேச வேண்டும் என்று எண்ணிக் கொண்டவன் அவளை கண்களில் படம் பிடித்தவாறே மெல்ல அவள் அருகில் போய் நின்றான்.

சங்கமித்ரா உள்ளுக்குள் பதட்டமாக இருந்தாள்.இப்படி நடுரோட்டில் வைத்து அவன் இப்படி சொல்வான் என்று அவள் துளியும் எதிர்பார்க்கவில்லை. இதுவரை அவளிடம் பேசவே பயப்படும் ஆண்களுக்கு மத்தியில் இப்படி நடுரோட்டில் வைத்து காதலை சொல்லும் அவனை பார்த்து அவளுக்கு பயம் தான் வந்தது.

“காலேஜ்க்கு டைம் ஆகிடுச்சு பேபி…வா உன்னை நானே இறக்கி விட்டுடறேன்”மற்றவர் கவனத்தை கவராத வண்ணம் அவளை அழைத்தான்.
‘இவனுக்கு திமிர் ஜாஸ்தி தான்.கொஞ்சமாவது போலீஸ்காரர் பொண்ணு அப்படிங்கிற பயம் இருக்கா பாரு.அப்பாவுக்கு தெரிஞ்சா என்ன ஆவது?போலீசுக்கே பயப்படலைன்னா இவன் எவ்வளவு பெரிய ரௌடியா இருக்கணும்.அதனால தான் கொஞ்சம் கூட பயம் இல்லாமல் நடு ரோட்டில் வைத்து என்கிட்டே ஐ லவ் யூ சொல்றான் ’ என்று மனதுக்குள் அவனை திட்டித் தீர்த்தவள் மற்றவர்கள் பார்த்தால் தேவை இல்லாத பிரச்சினை என்று எண்ணத்தில்  அவன் பேசியதே காதில் விழாதது போன்ற பாவனையில் நின்றுக் கொண்டு பஸ் வரும் திசையை பார்த்துக் கொண்டு நின்றாள்.

“இப்போ வந்து வண்டியில ஏறப் போறியா இல்லையா?”குரலை உயர்த்திப் பேசலானான் பிரபஞ்சன்.

அவனுடைய குரல் உயர்ந்ததில் சுற்றி இருந்தோரின் பார்வை இவர்களின் மீது பட்டு விலக இதற்கு மேல் பேசாமல் இருக்கக் கூடாது என்ற “எனக்கு உங்க வண்டி தேவைப் படாது.நான் பஸ்ஸிலயே போய்க்கிறேன்”பார்வையை எங்கோ பதித்து பதில் சொன்னாள் சங்கமித்ரா.

“உனக்கு அந்த ஆப்ஷன் இல்லை மித்ரா…உனக்கு எதிரில் இருப்பது இரண்டே இரண்டு வழிகள் தான்.ஒன்று என்னோடு நீ பைக்கில் வர வேண்டும்…. இல்லேன்னா நீ போக வேண்டிய இடம் எதுன்னு சொல்லு…மாமன் உன்னை அப்படியே அலுங்காம குலுங்காம பூ மாதிரி தூக்கிட்டு போறேன்…இதிலே நீ எந்த முறையை தேர்வு செய்தாலும் அதில் எனக்கு ரொம்ப இஷ்டம் தான்.”

“எனக்கு இது ரெண்டுமே ரொம்ப கஷ்டம்.”

“ஆஹா …ஆஹா…இஷ்டம் கஷ்டம் என்னமா கவிதையா பேசுற செல்லம்..” என்று சிலாகித்தவன் நொடியில் முகபாவனையை இறுக்கமாக்கிக் கொண்டு பேச ஆரம்பித்தான்.

“உன்னை என்னோடு அழைத்து செல்லாமல் நான் இங்கிருந்து ஒரு அடி நகர மாட்டேன் மித்ரா…என்னைப் பற்றி உனக்கு தெரியும்…நான் எடுத்த முடிவை எந்த காரணம் கொண்டும் மாற்றிக் கொண்டது இல்லை.வா… வந்து வண்டியில் ஏறு” அதிகாரத்துடன் ஒலித்தது அவனது குரல்.

இப்பொழுது எப்படி தப்பிப்பது என்ற எண்ணத்துடன் கையை பிசைந்து கொண்டு இருந்தவளின் பார்வையில் பட்டது தூரத்தில் நின்று கொண்டு இருந்த பெண் போலீஸ் தான்.நொடியும் தாமதிக்காமல் அவர்களிடம் போய் நின்றாள்.

‘இதுக்கெல்லாம் அசந்து விடுவேனா’ என்பதை போல ஒரு பார்வை பார்த்துக் கொண்டு இருந்தவன் நின்ற இடத்திலேயே ஆடாமல் அசையாமல் தீர்க்கமான பார்வையுடன் அவளை துளைத்தபடி நின்று கொண்டு இருந்தான்.

‘இவன் என்னுடைய அப்பாவிற்கே பயப்படாதவன் ரோந்தில் இருக்கும் பெண் போலீசிற்கு மட்டும் பயந்து விடுவானா என்ன? இருந்தாலும் முயற்சி செய்து தான் பார்ப்போமே’ என்ற எண்ணத்துடன் அந்த பெண் போலிசை நெருங்கி அவனைக் கைக் காட்டி பேச ஆரம்பித்தாள்.

Facebook Comments Box
What’s your Reaction?
+1
5
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
2

7 COMMENTS

  1. Hi madhu nice ud sema adiradiya irrukan prabanjan aii nan guess panniten avanum police thanae waiting for next ud dear

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here