Vanavil Sirpame Tamil Novels 33

2
1330
அத்தியாயம் 33

அறைக்குள் சங்கமித்ரா குழந்தை போல உறங்கிக் கொண்டிருக்க ஹாலில் இருந்த சோபாவில் அவளையே பார்த்தவண்ணம் அமர்ந்து இருந்தான் பிரபஞ்சன்.அவன் மனதை முழுவதும் ஆக்கிரமித்து இருந்தாள் சங்கமித்ரா மட்டுமே…

‘அவள் என் மீது உயிராய் இருக்கிறாள் என்பது நான் அறிந்த விஷயமே…ஆனால் நான் நெருங்கும் பொழுது என்னை ஏன் அவள் தவிர்க்க நினைக்கிறாள்.இது நாள் வரை அவள் அப்படி இருந்ததற்கு காரணம் ஆரம்பத்தில் நான் அவளிடம் உண்மை சொல்லாமல் ஏமாற்றியது தான் என்று நான் நினைத்துக் கொண்டிருந்தது தவறு என்று இப்பொழுது தோன்றுகிறது எனக்கு…

வேறு ஏதோ வலுவான காரணம் இருக்க வேண்டும்…இல்லையென்றால் அவள் இப்படி நடந்து கொள்ள காரணம் இல்லையே…கண்டிப்பாக இத்தனை நாள் அவள் நடந்து கொண்டது விளையாட்டாக இல்லை.

ஒருவேளை அவளுக்கு தாம்பத்திய வாழ்க்கையை எதிர்கொள்வதில் உடல் ரீதியாகவோ அல்லது மன ரீதியாகவோ ஏதேனும் பிரச்சினை இருக்குமோ…

இப்படி எந்தப் பிரச்சினையும் இல்லையென்றால் அவளிடம் நிச்சயம் ஏதோவொரு ரகசியம் இருக்க வேண்டும்.அப்படி எதை அவள் என்னிடம் இருந்து மறைக்கிறாள் என்று தெரியவில்லை.எதுவாக இருந்தாலும் அவளை காயப்படுத்தாமல் அதை பேசித் தெரிந்து கொள்ள வேண்டும்’ என்று எண்ணியவன் அவள் கண் விழிக்கும் நேரத்திற்காக காத்திருக்கத் தொடங்கினான்.

மாலை ஐந்து மணி அளவில் கண் விழித்த சங்கமித்ரா அமைதியாக எழுந்து குளித்து வேறு ஒரு புடவையை எடுத்து கட்டிக் கொண்டு அதற்கேற்ப அணிகலன்களையும் அணிந்து கொண்டு அறையை விட்டு வெளியேறினாள்.ஹாலில் அமர்ந்து இருந்த பிரபஞ்சனை கண்டதும் மௌனமாக அவனுக்கு அருகில் அமர்ந்து கொண்டாள்.

இதற்கு முன் அவள் இப்படி அவனுக்கு அருகில் வந்து தானாகவே அமர்ந்தது இல்லை என்பது கருத்தில் பட மெல்ல விழி உயர்த்தி அவளைப் பார்த்தவன் கண் இமைக்க மறந்து போனான்.

இளம்பச்சை நிற ஜார்ஜெட் புடவை அவள் மேனியில் ஒற்றையாய் தவழ்ந்து இருக்க,அதற்கு தோதாக மரகதக் கல் பதித்த ஆரம் அவள் கழுத்தை அலங்கரிக்க,தன்னுடைய விழிகளில் மை பூசி மையலோடு அவள் பார்த்த பார்வை ஒரே அடியில் அவனை வீழ்த்தியது என்றே சொல்ல வேண்டும்…

இதோ…இந்தப் பார்வையை தானே அவன் காதலிக்கத் தொடங்கிய அந்த நாளில் இருந்து அவளிடம் எதிர்பார்த்துக் காத்துக் கொண்டிருக்கிறான்.அவன் இதயத்தின் தாளம் தப்பி ஒலிக்கத் துவங்கியது.அவள் அவனை காதலிக்க தொடங்கிய நாட்களில் ஒரு வித பயத்துடன் வெளிப்படும் அவளது காதல் பார்வை இன்று முழு வீச்சுடன் உரிமையாய் அவன் மீது பதிந்தது.

சற்று நேரத்திற்கு முன் அவன் எடுத்திருந்த தீர்மானங்கள் அனைத்தும் காற்றோடு கலந்து போக, பெண்ணவளை ரசிக்க ஆரம்பித்தான் அவன்.

நெற்றியிலிருந்து கழுத்து வரை அவன் பார்வை சோம்பலாக வருடிக் கொண்டே கீழிறங்க ,சட்டென சுதாரித்து பார்வையை வேறுபுறம் திருப்பிக் கொண்டான் பிரபஞ்சன்.

‘பிரபஞ்சா…இது தப்பு…ஸ்ட்ராங்கா இருடா’ என்று அவன் தனக்குள் பேசிக் கொண்டு இருக்க ஒற்றை வார்த்தையில் அவனைக் கலைத்தாள் சங்கமித்ரா.

“மாமா…காதலிக்கும் போது டெய்லி மல்லிப்பூ வாங்கித் தருவேன்னு சொன்னீங்க…கல்யாணம் ஆகி இத்தனை நாளாச்சு…ஒரு நாளாவது உங்க கையால வாங்கி கொடுத்தீங்களா”

‘என்னது மாமாவா…அடியே ஆரம்பத்திலேயே சிக்சர் அடிக்காதே…நான் சின்ன பையன் தாங்க மாட்டேன்’அவளின் அதிரடியில் பிரபஞ்சனுக்கு உதறலெடுத்தது.

‘கொஞ்ச நேரம் முன்னாடி வரை இருந்த உறுதி இவ பண்ற வேலையில எங்கே போச்சுனே தெரியலையே’

“மாம்ம்மா”சிணுங்கலாக அவள் அழைக்க அவனோ இந்த உலகத்திலேயே இல்லை எனலாம்.அவள் கொஞ்சல் குரலில் கிசுகிசுப்பாக அழைத்த விதம் அவனுக்கு போதையற்ற துளைக்கும் பார்வையுடன் அவளையே பார்த்துக் கொண்டிருந்தான்.

“எனக்கு காபி போட கத்துக் கொடுக்கறீங்களா?”தலை சாய்த்து அவள் கேட்ட விதத்தில் அவன் சாய்ந்து போனான் அவள் காலடியில்…

மந்திரித்து விட்டதைப் போல அவள் முன்னால் நடக்க அவனுக்கு பின்னால் அவன் போய் கிச்சனுக்குள் நுழைந்து கொண்டான்.

“முதலில் பாலை எடுத்து அடுப்பில் வைக்கணும்…சரிதானா”தலை சாய்த்து அவள் கேட்க இந்தப் பக்கம் பூம்பூம் மாடு தலை அசைத்தது.

“பால் கொதிச்சதும் அதில காபி பவுடர் போடணும்…சரியா?” மீண்டும் பூம்பூம் மாடு தலை அசைத்தது.

“அப்புறம் சர்க்கரை கலந்து ஆத்தி முடிச்சுட்டா…சுப்பரான காபி ரெடி…சரிதானே மாமா”இந்த முறையும் பூம்பூம் மாடு தலை அசைக்க கிளுக்கிச் சிரித்தாள் சங்கமித்ரா.

“என்ன மாமா எது கேட்டாலும் பூம்பூம் மாடு மாதிரி தலை ஆட்டுறீங்க”

‘காஞ்ச மாடு கம்பங்கொல்லையை பார்க்கிற மாதிரி பார்த்துக்கிட்டு இருக்கேன்…இவ வேற…நேரம் காலம் தெரியாம படுத்துறாளே’தனக்குத்தானே பேசி நொந்து போனான் பிரபஞ்சன்.

ஆளுக்கொரு கப்பில் காபியை ஊற்றி எடுத்துக் கொண்டவள் மீண்டும் ஹாலுக்கு வந்து அமர்ந்து கொண்டு டிவியை போட்டுக் கொண்டு சோபாவில் அமர,அவளிடம் தென்பட்ட இந்த மாற்றத்தின் காரணம் என்ன என்ற யோசனையுடன் அவளுக்கு அருகில் இருந்த ஒற்றை சோபாவில் அமர்ந்து கொண்டான் பிரபஞ்சன்.

அதில் அவள் முகம் லேசாக சுருங்கி தன்னுடைய பிடித்தமின்மையை காட்டினாலும்,சட்டென்று அவள் செய்த அத்தனை செயல்களையும் மறந்து அவளிடம் நெருக்கம் கொள்ள அவனால் முடியவில்லை.ஏதோவொன்று அவனைத் தடுத்தது.அதே நேரம் காதல் கொண்டு மணந்த மனைவி,தானாகவே நெருங்கி வரும் சமயங்களில் அவளை விலக்கி நிறுத்துவது என்பது அவனால் முடியாத காரியமும் கூட.எனவே மௌனமாக அவளின் நடவடிக்கைகளை வேடிக்கைப் பார்க்கத் தொடங்கினான்.

“இங்கே வந்ததில் இருந்தே வீட்டுக்குள்ளேயே அடஞ்சு கிடக்கிறேன்…எங்கேயாவது வெளியில் கூட்டிக்கிட்டு போகலாம்ல…”அவள் இதழ்களுக்கு இடையில் பயணித்து மீண்ட காபி கோப்பையில் இருந்து வெகுவாக பிரயத்தனப்பட்டு பார்வையை திருப்பி தனக்காக ஒரு காபி கப்பை கையில் எடுத்துக் கொண்டான்.

“கோவிலுக்கு போகலாம்…டிரஸ் மாத்திட்டு வர்றேன்”என்றவன் அங்கிருந்து சட்டென்று எழுந்து அறைக்குள் புகுந்து கொள்ள அவனின் பின்னோடு வந்து நின்றாள் அவள்.

“நான் எடுத்துக் கொடுக்கிற டிரஸ் தான் போட்டுக்கணும்…”ஒற்றை விரல் உயர்த்தி அவள் விளையாட்டாய் எச்சரிக்க,அந்த வெண்டைப் பிஞ்சு விரலை இழுத்து வைத்து கடிக்கத் தோன்றியது அவனுக்கு…

அவளாகவே அவனது உடைகளில் இருந்து ஒரு கரும்பச்சை நிற சட்டையையும்,அதற்குத் தோதாக அதே நிறத்தில் பார்டர் வைத்த வேஷ்டியையும் எடுத்துக் கொடுக்க மௌனமாக அதை வாங்கிக் கொண்டவன் குளித்து முடித்து உடையை மாற்றிக் கொண்டு வெளியே வர உற்சாகத்துடன் அவனை எதிர்கொண்டாள் சங்கமித்ரா.

“வாவ்…மாமா செம்மயா இருக்கீங்க…வேஷ்டி உங்களுக்கு ரொம்ப பொருத்தமா இருக்கு”அவனை ரசித்துக் கொண்டே அவள் பேச எட்டி அவளை பிடித்து கைகளுக்குள் அடக்கும் ஆவலை பெரும்பாடுபட்டு அடக்கிக் கொண்டான்.

“இதுக்கு முன்னமே நான் நிறைய தடவை வேஷ்டி சட்டை போட்டு இருக்கேன்…அப்போ எல்லாம் அது உன் கண்ணுக்கு தெரியலையா?”துளைக்கும் பார்வையுடன் அவன் கேட்க,அவளோ அலட்டல் இல்லாமல் பதில் சொன்னாள்.

“வானவில் எப்பவுமே அழகு தான் மாமா…ஆனா அதை ரசிக்கவும் மனநிலை இதமா இருக்கணும் இல்லையா?”

“அப்போ இதுக்கு முன்னாடி நீ இதமான மனநிலைல இல்லைங்கிறத ஒத்துக்கறியா?”

“இப்போ …இந்த நிமிஷம் நான் தெளிவா இருக்கேன்னு சொல்றேன்…”

“அப்போ இத்தனை நாள்…”அவன் பேசிக் கொண்டு இருக்கும் பொழுதே வேகமாக அவனை நெருங்கியவள் தன்னுடைய தளிர் கரங்களால் அவன் வாயை பொத்தினாள்.

“கல்யாணத்துக்கு அப்புறம் முதல் முறையா வெளியே போறோம்…இப்போ எந்த வாதமும் வேணாம்…ப்ளீஸ்!”என்று அவள் தாடையை பிடித்துக் கொண்டு கெஞ்ச,அதற்கு மேலும் மறுப்பு சொல்வானா அவன்.

வீட்டில் இருந்து பக்கத்தில் இருக்கும் கோவிலுக்கு நடந்தே செல்லலாம் என்று முடிவு செய்து இருவரும் நடந்தே சென்றனர்.அந்த ஊரில் ஒரு பழமையான அம்மன் கோவிலுக்கு இருவரும் சென்றனர்.மாலை நேரத்தை கடந்து இரவு நேரம் நெருங்கி இருந்ததால் அதிகமான கூட்டம் இல்லை…

ஆங்காங்கே எதிர்பட்டவர்கள் யார் இந்த புதிய ஜோடி என்பது போல கேள்வியாக பார்த்தாலும் யாரும் எதுவும் கேட்காததால் அவர்களின் மௌனம் தொடர்ந்தது.கோவில் பூசாரி பிரபஞ்சனை சரியாக அடையாளம் கண்டு கொண்டு பாசத்துடன் விசாரித்தார்.

“தம்பி…சௌக்கியமா இருக்கியா…இந்த ஊரையே மறந்துட்டன்னு நினைச்சேன்…இது யாரு?”

“என்னோட மனைவி”என்றவன் லேசாக திரும்பி அவள் முகத்தை பார்க்க அவள் வேண்டுமென்றே அவருக்கு முகம் காட்டாமல் முகத்தை வேறுபக்கம் திருப்பி எங்கோ வேடிக்கைப் பார்த்துக் கொண்டிருக்க அதில் கோபம் அடைந்தவன் அவளின் கையை இறுகப்பற்றி அவளை இந்தப் பக்கம் திரும்பும்படி செய்தான்.

“நல்ல ஜோடிப்பொருத்தம்…தீர்க்க சுமங்கலியா இரு குழந்தை”என்று அவளின் தலையில் கை வைத்து ஆசிர்வதிக்க ஒரு வித பரவசத்துடன் அவரின் ஆசிர்வாதத்தை ஏற்றுக் கொண்டவளை வித்தியாசமாகப் பார்த்தான் பிரபஞ்சன்.

‘என்ன ஆச்சு இவளுக்கு…அறிமுகப்படுத்தி வச்சா மூஞ்சை திருப்பிக்கிறா…வாழ்த்தினா இவ்வளவு சந்தோசப் படறா’

அவளோ அவனது பார்வையை பற்றி எல்லாம் கண்டு கொள்ளாமல் சாமி தரிசனம் முடிந்ததும் ,அவனின் கையோடு கை கோர்த்துக் கொண்டு கோவிலைப் பற்றி வரிசையாக கேள்விகளை கேட்டு தெரிந்து கொண்டாள்.சற்று நேரம் கோவிலில் அமர்ந்து இருந்தவர்கள் எதுவுமே பேசவில்லை.ஆனால் அதே சமயம் அவனின் கையை அவள் விடவுமில்லை….அவன் விடுவிக்க நினைக்கும் பொழுது அதை அவள் அனுமதிக்கவும் இல்லை.

ஒரு வழியாக இருவரும் கோவிலை விட்டு கிளம்பும் பொழுது மணி இரவு எட்டை நெருங்கி இருக்க கோவில் வாசல் வரை நடந்து வந்தவள் கோவில் வாசலை கடந்ததும் சட்டென்று ப்ரேக் போட்டது போல அப்படியே நின்று விட்டாள்.

“என்ன மித்ரா…ஏன் நின்னுட்ட…”கேள்வியாக அவன் பார்க்க,

“என்னை சைக்கிள்ல கூட்டிட்டு போங்க மாமா…ப்ளீஸ்”

“சைக்கிளா…பைக் வீட்டுல இருக்குடா…”

“ஹுஹும்…எனக்கு சைக்கிள்ல போகணும்னு ஆசையா இருக்கு…”

“என்னது? சைக்கிளா…இப்போ இந்த நேரத்தில சைக்கிளுக்கு எங்கே போறது?”

“பொண்டாட்டி ஆசையா கேட்கிறேன்…இதைக் கூட செய்ய முடியலைனா …அப்புறம் நீங்க எல்லாம் என்ன புருஷன்…இதுல பெரிய ஏசிபி வேற”கழுத்தை நொடித்துக் கொள்ள…பிரபஞ்சன் தான் திண்டாடிப் போனான்.

“அடியே…ராத்திரில உனக்கு இந்த மாதிரி ஆசை தான் வருமா” என்று தனக்குள் முணுமுணுத்தவன் அங்கே எதிரில் சைக்கிளில் வந்த ஒருவரை நிறுத்தி எப்படியோ பேசி அவரிடம் இருந்து சைக்கிளை வாங்கிக் கொண்டு வந்தான்.

அவன் சைக்கிள் வாங்கிக் கொண்டு வந்ததும் சின்னப் பிள்ளை போல குதூகலித்தவள்,அவன் சொல்ல சொல்ல கேட்காமல் பிடிவாதமாக சைக்கிளில் முன்புறம் ஏறி அமர்ந்து கொண்டாள்.பிரபஞ்சனால் சொல்லவும் முடியாமல் மெள்ளவும் முடியாமல் தவித்துப் போனான்.

ஏற்கனவே அவன் அவளிடம் கிறங்கிக் கொண்டிருந்த மனதை எப்படி கட்டுபடுத்துவது என்று புரியாமல் அவன் திணறிக் கொண்டு இருக்க அவளோ மேலும் நெருக்கத்தை கூட்டி அவனை சோதித்தாள்.

அவனுக்கு நெருக்கமாக அவள் முன்புறம் அமர்ந்து இருக்க,அவளுடைய தலையில் அவள் சூடி இருந்த மல்லிகையின் மனம் அவனது நாசியை நிறைத்து இன்ப உணர்வுகளை அவனுக்குள் கிளறி விடத் தொடங்கி இருந்தது.அவன் உடலின் செல்கள் அனைத்தும் ஒருவித பரபரப்பில் இருந்ததை அவனால் உணர முடிந்தது.எப்பொழுதும் தெளிவாக இருப்பவன் இன்று மனைவியின் அருகாமையில் தள்ளாடத் தொடங்கினான்.

அதன் விளைவாக சைக்கிளை அவனால் சரியாக ஒட்ட முடியாமல் போக சங்கமித்ராவும் கீழே  விழுந்து விடுவோமோ என்ற பயத்தில் இன்னும் அவனை நெருங்கி அமர்ந்து அவன் கழுத்தை சுற்றி மாலையாக கோர்த்துக் கொள்ள,பிரபஞ்சனின் பொறுமை பறந்தது.அதன் விளைவாக அவன் கைகளில் சைக்கிள் வேகமெடுத்தது.

ஒரு வழியாக வீட்டிற்கு வந்து சேர்ந்து விட அவளை இறக்கி விட்டவன் அவளுடன் சேர்ந்து வராமல் சற்று நேரம் தோட்டத்திலேயே நின்று நடை பயில கொஞ்ச நேரம் பொறுத்துப் பார்த்தவள் வேகமாக வந்து அவனது கைகளை பற்றி உள்ளே இழுத்து வந்தாள்.

“டிபன் என்ன செய்யலாம்னு சொல்லுங்க…”

“எதையாவது செய்”என்று சொல்லிவிட்டு அதற்கு மேலும் அங்கே நிற்காமல் அறைக்குள் சென்று விட்டான் பிரபஞ்சன்.

அவனது தடுமாற்றத்தை எல்லாம் உணர்ந்து கொண்டவள் இன்றோடு இந்தப் பிரச்சினைக்கு முடிவு கொண்டு வந்தே தீர வேண்டும்’என்ற உறுதியுடன் இரவு உணவை சமைத்து விட்டு அவனை உணவு உண்ண அழைத்தாள்.

அவள் என்ன பரிமாறினாள் என்பதை உணரும் நிலையில் கூட இல்லை பிரபஞ்சன்.பார்வையை உயர்த்தும் பொழுதெல்லாம் அவன் கண்கள் ஏடாகூடமான இடங்களில் பதிந்து மீள அவனின் வேட்கை அதிகமானதே தவிர கொஞ்சமும் குறையவில்லை.இப்பொழுது இருக்கும் மனநிலையில் அவளுடன் தனித்து இருந்தால் எல்லை மீறி விடுவோம் என்று தோன்றவே  உணவை உண்ட பின் சட்டையை மாட்டிக் கொண்டு வெளியே கிளம்ப முற்பட கேள்வியாக அவனைப் பார்த்தாளே தவிர ஒன்றும் பேசவில்லை.

கிட்டத்தட்ட் நடுநிசியை தாண்டிய பிறகும் தெருவில் சுற்றியவன் வீட்டிற்குள் நுழைந்தான்.உள்ளே வந்ததும் அவனது பார்வை வழக்கம் போல மனைவியை தேட தனக்காக அவள் முழித்துக்கொண்டு இருப்பாளோ என்ற எண்ணத்துடன் படுக்கை அறையை நெருங்கியவன் சோர்ந்து போனான் அவள் கட்டிலில் தூங்கிக் கொண்டு இருந்ததைப் பார்த்து.

அவளை தொந்தரவு செய்யாமல் அவளுக்கு அருகில் நின்று அவளது முகத்தையே சில நிமிடங்கள் பார்த்துக் கொண்டு இருந்தான்.அந்த இருட்டிலும் கூட மெல்லிய நிலவொளியில் அவளின் அதரங்கள் பளபளப்பாக மின்ன அதை சுவைக்கும் வேகம் மன்னவனுக்குள் ஊற்றெடுத்தது.

தூங்கிக் கொண்டிருக்கும் மனைவியின் அழகை தாபத்தோடு விழிகளால் பருகியவன் அவளையே பார்த்த வண்ணம் அவளுக்கு அருகில் நெருங்கிப் படுத்துக் கொண்டான்.பார்க்க பார்க்க அவனின் தாபம் அதிகரித்ததே தவிர குறைய வாய்ப்பில்லாமல் போனது.மனதின் உணர்வுகளை கஷ்டப்பட்டு அடக்கிக் கொண்டவன் அவளுக்கு முதுகு காட்டிப் படுக்க,அடுத்த சில நொடிகளில் வளைக்கரம் ஒன்று தன் மேல் படிவதை உணர்ந்து வேகமாக திரும்பியவனை மோகனப் புன்னகையுடன் எதிர்கொண்டாள் அவன் மனைவி.

சிற்பம் செதுக்கப்படும்…

Facebook Comments Box
What’s your Reaction?
+1
4
+1
0
+1
2
+1
0
+1
0
+1
0
+1
0

2 COMMENTS

  1. Madhu dear enna partha pavama illaya adutha ud la suspense open pannunga illana bp tablet vangi parcel anupunga

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here