Vanavil Sirpame Tamil Novels 35

0
1381
அத்தியாயம் 35

கட்டிலில் வாடிப் போய் படுத்து கிடந்தவளைப் பார்த்து எப்பொழுதும் போல பிரபஞ்சனின் நெஞ்சம் காதலால் பூரித்துப் போனது.இரவு முழுக்க தன்னுடைய தேவைகளை கொஞ்சம் கூட முகம் சுளிக்காமல் அவள் நிறைவேற்றிய விதம் ஒரு கணவனாக அவனுக்குப் பெருமையாக இருந்தது.


பிடிவாதம் பிடித்து அவளையே மணப்பது என்று, தான் எடுத்த முடிவு எவ்வளவு தூரம் சரி வரும் என்று ஆரம்பத்தில் பயந்தவனுக்கு இப்பொழுது அந்த பயம் துளியும் இல்லை.ஒருவேளை அப்படி வற்புறுத்தி,மிரட்டி இவளை மணக்காமல் இருந்து இருந்தால் எப்படிப்பட்ட இவளின் காதலை நான் இழந்திருக்க வேண்டியிருந்து இருக்கும்.

ஆரம்பத்தில் அவளின் நடவடிக்கைகளை பார்த்து தான் பயந்தாலும் இப்பொழுது அவனிடம் கொஞ்சமும் கவலை இல்லை. ‘அது தான் எல்லாம் சரியாகி விட்டதே’ என்று எண்ணிக் கொண்டு தான் இருந்தான் அன்று காலை போலீசாரை கண்ணில் காணும் வரை…

அவளுக்கு முன்பாகவே எழுந்தவன் அவளுக்காக காபி போட்டு வழக்கம் போல பிளாஸ்கில் ஊற்றி வைத்து விட்டு அவளுக்கு காலையில் சாப்பிட நூடுல்ஸ் செய்யலாம் என்று எண்ணியவன் வீட்டில் ஏற்கனவே வாங்கி வைத்திருந்த காய்கறிகளை நறுக்கத் தொடங்கினான்.

கேரட்டை வெட்டி முடித்து அடுத்து பீன்ஸை எடுக்கும் பொழுது பின்னிருந்து ஒரு கரம் அவனை அணைத்துக் கொள்ள முகம் கொள்ளாப் புன்னகையுடன் கத்தியை கீழே வைத்து விட்டு அவளை அப்படியே தூக்கி தனக்கு முன்னால் அமர வைத்தவன் உல்லாசமாக அவளைப் பார்வையிட்டான்.

குளித்து முடித்து ஈரத் தலையுடன் ஆங்காங்கே முகத்தில் வழிந்த நீருடன் தலையை சரியாக துவட்டாமல் ஈரத் தலையுடன் தன் எதிரில் அமர்ந்து இருந்தவளை காணக் காண திகட்டவில்லை அவனுக்கு.

“என்ன குஜிலி…அதுக்குள்ளே குளிச்சிட்டியா…இன்னும் கொஞ்ச நேரம் தூங்கி இருக்கலாமே…நானே வந்து எழுப்பி இருப்பேனே…அப்புறம் இரண்டு பெரும் ஒண்ணா சேர்ந்து குளிச்சு இருக்கலாம்ல…”விஷமப் பார்வையுடன் அவன் கேட்க பட்டென்று அவன் தோளில் அடித்தாள் சங்கமித்ரா.

“அய்யே…ஆசை… தோசை…அதுக்கு அப்புறம் என்ன நடக்கும்னு எனக்கு தெரியாதா…இன்னைக்கு அப்படி ஏடாகூடமா எதுவும் நடக்கக் கூடாதுன்னுதான் நான் போய் தனியா குளிச்சுட்டு வந்தேன்…”

“ஏன்டி…உன் புருஷனைப் பார்த்தா பாவமா இல்லையா உனக்கு…”பாவம் போல முகத்தை வைத்துக் கொண்டு தாடையை பிடித்துக் கொண்டு அவன் கெஞ்ச ,வேகமாக அவன் கையை தட்டி விட்டாள் சங்கமித்ரா.

“நேத்து நைட் என்ன சொன்னீங்க…”

“நேத்து நைட்டா? என்ன சொன்னேன்…அது ஏகப்பட்ட விஷயம் சொன்னேன்…எதுக்கும் கொஞ்சம் கிட்டே வா …நல்லா யோசிச்சு சொல்றேன்”கை நீட்டி அவளை அருகே இழுக்க முயல லாவகமாக விலகியபடி அவனுக்கு பதில் அளித்தாள்.

“அடி வாங்கப் போறீங்க…என்னை குலதெய்வக் கோவிலுக்கு கூட்டிட்டு போறேன்னு சொன்னீங்க இல்ல…”

“சொன்னேன் தான்…அதுக்கும் இதுக்கும் என்ன சம்பந்தம்…”என்று பேசியபடியே மீண்டும் அவளை நெருங்க கரண்டியை எடுத்து கையில் வைத்துக் கொண்டு பொய்யாக அவனை மிரட்ட ஆரம்பித்தாள் சங்கமித்ரா.

“உங்களைப் பத்தி எனக்கு தெரியும்…ஒழுங்கா போய் குளிச்சுட்டு வாங்க…கோவிலுக்கு போறதுக்கு முன்னாடி என்னை தொடக்கூடாது புரிஞ்சுதா…”

“இதெல்லாம் ரொம்ப அநியாயம்டி…”என்று சோகமாக முகத்தை வைத்துக் கொண்டவன் தானே யோசித்து அதற்கு ஒரு மாற்று யோசனையையும் கொடுத்தான்.

“பேசாம நாம கோவிலுக்கு சாயந்திரம் போலாமா…”

“எப்படி நேத்து சாயந்திரம் என்னை கிளம்ப சொல்லி ஒரு லூட்டி அடிச்சீங்களே…அந்த மாதிரியா?”முறைப்புடன் கேட்டவளின் குரலில் இருந்த நகைப்பை உணர்ந்தாலும் அதை கண்டுகொள்ளாமல் தன்னுடைய காரியத்திலேயே குறியாக இருந்தான் பிரபஞ்சன்.

“சே!..சே! அப்படி எல்லாம் இல்லை பேபி…இன்னைக்கு கட்டாயம் போகலாம்…”என்றபடி மீண்டும் அவளை நெருங்கி வர…சமையல் அறை மேடையை சுற்றிக்கொண்டு ஒடி அவனை  முறைத்தாள் சங்கமித்ரா.

“ஒழுங்கா கிளம்புங்க”

“சே!…ராட்சசி…சும்மா இருந்தவனை காலையில நீ தானடி உசுபேத்தி விட்ட…இப்ப கிட்ட வரக் கூடாதுன்னு சொன்னா எப்படி?”முகத்தை சோகமாக வைத்துக் கொண்டு கேட்டவன் அவளுக்கு முதுகு காட்டி நின்று கொண்டான்.

“இந்த நடிப்புக்கெல்லாம் நான் ஏமாற மாட்டேன்..போங்க போய் குளிச்சுட்டு வாங்க…”என்று இடுப்பில் கைகளை வைத்துக் கொண்டு அவனை மிரட்ட அவனின் பார்வையோ ஓரக்கண்ணால் அவளது இடையையே அளந்து கொண்டு இருந்தது.

கோபத்துடன் மேடையில் இருந்த ஒரு வெங்காயத்தை எடுத்து அவன் மேல் வீசியவள் ஒற்றை விரல் உயர்த்தி எச்சரிக்க உடனே சமாதானத்திற்கு வந்தான் பிரபஞ்சன்.

“இப்போ என்ன உனக்கு கோவிலுக்கு போகணும்…அவ்வளவு தானே சரி” என்று உடனே ஒத்துக் கொள்ளவும் அவள் மூளையில் மின்னல் வெட்டியது.

‘இவர் இப்படி உடனே ஒத்துக்கிட்டா…அதுக்கு பின்னாடி கண்டிப்பா ஒரு ஆப்பு இருக்குமே’ என்று அவள் யோசித்துக் கொண்டு இருக்கும் பொழுதே அந்த ஒரு நொடியை தனக்கு சாதகமாக்கியவன் மின்னலென விரைந்து அவளை கண்ணிமைக்கும் நேரத்தில் தன்னுடைய கை வளைவிற்குள் கொண்டு வந்தான்.

அவள் திமிர முயற்சி செய்யும் பொழுதே அவள் காதோரம் குனிந்து பேசியவன் மெல்லிய குரலில் முணுமுணுத்தான்.

“கோவிலுக்குத் தானே போகணும்…போகலாம்…அதுக்கும் முன்னாடி மாமனை கொஞ்சம் கவனி…”என்றவன் அவளின் இடையை கரங்களால் இறுக்கி தன்னுடைய தேடலை தொடங்க பூஜை வேளை கரடியாக காலிங்பெல் ஒலித்தது.

“சை!…யாரது காலங்காத்தால …”என்று லேசாக முணுமுணுத்தவன் அவளை விட்டு கொஞ்சமும் விலகாமல் தன்னுடைய சேட்டைகளை தொடர,அவள் தான் அரும்பாடுபட்டு அவனை விலக்கித் தள்ளினாள்.

“யாரோ வந்துருக்காங்க …இருங்க யார்னு பார்த்துட்டு வந்திடறேன்…”அவனது மார்பு ரோமங்களோடு விளையாடியபடி அவள் சொல்ல அவள் கன்னத்தில் அவசர முத்தம் ஒன்றை பதித்துவிட்டு அவளை விலகிப் போனான்.

“நான் போய் பார்க்கிறேன்…நீ முதல்ல போய் தலையை நல்லா துவட்டு”என்று கரிசனமாக கூறியவன் வாசல் கதவை திறந்து பார்க்க அங்கே காக்கி உடையில் போலீசார் நின்று கொண்டு இருந்தனர்.பிரபஞ்சனை கண்டதும் விறைப்பாக ஒரு சல்யூட்டை வைக்க லேசாக தலை அசைத்து அதை ஏற்றுக் கொண்டவன் உள்ளே வருமாறு அவர்களை அழைத்தான்.தயங்கி தயங்கி வீட்டின் உள்ளே வந்தவர்கள் ஹாலில் இருந்த சோபாவில் அமராமல் நின்று கொண்டே இருக்கவும்,கேள்வியாக அவர்களைப் பார்த்தான் பிரபஞ்சன்.

“உட்காருங்க இன்ஸ்பெக்டர்…”

“இல்லை பரவாயில்லை சார்…டுயிட்டில இருக்கோம்…வந்து…”அவர் திணறிக் கொண்டு இருக்க பிரபஞ்சன் எடுத்துக் கொடுத்தான்.

“என்ன விஷயமா இருந்தாலும் சொல்லுங்க சார்…” என்றவன் திரும்பி அப்படியே வீட்டின் உள்ளே திரும்பி குரல் கொடுத்தான்.

“மித்ரா…ரெண்டு காபி கொண்டு வா”

“காபி எல்லாம் வேண்டாம் சார்…”

அதற்கு மேல் அவர்களை வற்புறுத்தாமல் நேரடியாக விஷயத்திற்கு வந்தான் பிரபஞ்சன்.

“சரி…சொல்லுங்க என்ன விஷயமா என்னைப் பார்க்க வந்தீங்க…நான் ஹேண்டில் பண்ணின கேஸ் எதைப் பத்தியாவது தகவல் வேணுமா…”

“இல்லை சார்..அது வந்து…”ஏசிபி என்ற பயம் ஒருபுறம் இருந்தாலும்,டிபார்ட்மெண்ட்டில் நேர்மையான அதிகாரி என்பதாலும் என்கவுண்டர் ஸ்பெசலிஸ்ட் என்பதாலும் எப்பொழுதுமே பிரபஞ்சனிடம் அவனது துறையை சேர்ந்தவர்களுக்கு ஒரு பயம் உண்டு.
அந்த பயம் தான் இப்பொழுது வந்த விஷயத்தை அவனிடம் சொல்ல முடியாமல் அவர்களை தவிக்க வைத்தது.அதற்குள் மித்ரா காபி கொண்டு வந்து விட வந்திருந்தவர்கள் காபியை எடுக்காமல் அவளையே வைத்த கண் வாங்காமல் கூர்மையாக பார்க்க சங்கமித்ராவின் தேகத்தில் மெல்லியதாக நடுக்கம் ஏற்பட்டது.

அவர்களின் பார்வையை நொடியில் கவனித்த பிரபஞ்சன் குரலை கடினமாக்கி பேசினான்.

“இன்ஸ்பெக்டர்…நீங்க இன்னும் வந்த விஷயத்தை சொல்லலை…”என்றவனின் பார்வை கூர்மையாக அவர்களை அளவிட்டபடியே சங்கமித்ராவை உள்ளே போக சொல்லி கட்டளை பிறப்பித்தது.

சங்கமித்ராவும் மறுத்து பேசாமல் அங்கிருந்து கிளம்பினாலும்,அறைக்குள் போவதற்கு முன் வந்து இருந்தவர்களை திரும்பி திரும்பிப் பார்த்தபடியே ஒரு வித கலவர பீதியுடன் தான் சென்றாள்.இது அனைத்தையும் மனதில் குறித்துக் கொண்டவன் வந்து இருந்தவர்களை நோக்கிப் பேசத் தொடங்கினான்.

வந்திருப்பவர்கள் தயங்கிக் கொண்டே நிற்பதைக் காணவும் அவன் முகத்தில் யோசனை வந்தது.எனினும் காவல்துறைக்கே உண்டான மிடுக்குடனும்,கம்பீரத்துடனும் அவர்களின் பதிலுக்காக அவர்களையே கூர்பார்வை பார்த்துக் கொண்டு இருந்தான்.

வந்தவர்களும் எப்படி சொல்வது என்று தெரியாமல் தயங்கியபடியே தாங்கள் கொண்டு வந்திருந்த பேப்பரை நீட்ட யோசனையோடு அதை வாங்கிப் படித்தவனின் முகம் முதலில் வெளிறிப் பின் ஆத்திரத்தோடு அந்த காகிதத்தை தூக்கி எறிந்தான்.

“என் பொண்டாட்டி பேர்ல அரெஸ்ட் வாரன்ட் வாங்கினது யார்?அந்த தைரியம் யாருக்கு இருக்கு…”சிம்மத்தின் கர்ஜனையாக அவன் குரல் ஓங்கி ஒலிக்க அந்த வீடே அதிர்ந்தது.

“சார்…உங்க மாமனார் தர்மராஜ் தான் இன்னைக்கு காலையில் மாஜிஸ்ட்ரேட்டை அவர் வீட்டிலேயே பார்த்து அவசர அவசரமா இதை வாங்கி இருக்கார்.எங்களுக்கு பேக்ஸ் அனுப்பி உடனே கைது செஞ்சு சென்னைக்கு அழைச்சுட்டு வர சொல்லி ஆர்டர்…”

மாமனாரின் பெயரைக் கேட்டதும் அவன் கொதிநிலைக்கே சென்று விட வந்திருந்தவர்களின் மீது கோபத்தை காட்ட முடியாமல் சோபாவை ஓங்கி ஒரு உதை விட்டான்.

“சார் உங்களுக்கு தெரியாதது இல்லை…இது கோர்ட் ஆர்டர்…இதை மதிச்சு உங்க மனைவி எங்க கூட வந்து தான் ஆகணும்…அ…அதனால…”

“ஷட் அப்”என்று ஆங்காரத்துடன் கத்தியவன் வீட்டின் ஹாலை குறுக்கும் நெடுக்குமாக அளக்கத் தொடங்கினான்.

“எதுக்காக என் மனைவியை கைது பண்றீங்க? என்ன கேஸ்?”

“மன்னிக்கணும் சார்…அதை சொல்ல எங்களுக்கு அனுமதி இல்லை.அவங்களை அரெஸ்ட் பண்ணி சென்னைக்கு கூட்டிட்டு வரணும்னு தான் எங்களுக்கு உத்தரவு” என்று அவர் பயந்து பயந்து சொல்ல ஒரு நிமிடம் அவனது பார்வை இடுங்கி பின் தீர்க்கமானது.

“நானே அவளை கூட்டிட்டு வர்றேன்…அவ மேல உங்க சுண்டு விரல் கூட படக்கூடாது புரிஞ்சுதா”எச்சரிக்கும் தொனியில் அவன் விரல் உயர்த்திப் பேச அந்த இரும்புக் குரலை மீறும் எண்ணம் அங்கிருந்தவர்களுக்கு நிச்சயம் இல்லை.

என்ன தான் வேறு வேறு ஊராக இருந்தாலும் பிரபஞ்சனைப் பற்றி அவர்கள் நிறையவே கேள்விப்பட்டு இருக்கிறார்கள்.குற்றவாளிகளிடம் அவன் காட்டும் ரௌத்திரமும்,தவறு செய்து இருந்தால் அது தன்னுடைய மேலதிகாரியாக இருந்தாலும் தயங்காமல் அதை சுட்டிக் காட்டும் அவனது நேர்மையும் அவர்கள் அறிந்த ஒன்று தான்.ஆனால் கட்டிய மனைவியை அவன் கண்ணெதிரே கைது செய்வது என்றால் அவன் எப்படிப்பட்ட மனநிலையில் இருப்பான் என்பதையும் அவர்கள் ஓரளவிற்கு முன்கூட்டியே ஊகித்துத் தான் வைத்து இருந்தார்கள்.

மனதளவில் பெரும் போராட்டம் நடந்து கொண்டு இருந்தது பிரபஞ்சனுக்கு.

‘இதை எப்படிப் போய் அவளிடம் சொல்வது?பயந்து விடுவாளே…ஒருவேளை அழ ஆரம்பித்து விட்டால்…என்னால் அதை எப்படித் தாங்க முடியும்…எத்தனை கஷ்டங்களுக்குப் பிறகு இப்பொழுது தான் அவளும் நானும் வாழ்க்கையைத் தொடங்கினோம்…இப்பொழுது போய் இதை சொன்னால் அவள் என்ன ஆவாள்?என்மீது உயிரையே வைத்திருப்பவள் ஆயிற்றே’ என்றெல்லாம் தனக்குள்ளேயே யோசித்தவன் வேறு வழியின்றி ஒரு முடிவுக்கு வந்தவனாக மனதை கல்லாக்கிக் கொண்டு அறைக்குள் சென்று பார்த்தான்.

சங்கமித்ரா முகத்தில் எந்த சலனமும் இன்றி படுக்கை விரிப்பை சரி செய்து கொண்டு இருந்தாள்.பிரபஞ்சன் அறைக்குள் வந்ததும் நிமிர்ந்து அவனைப் பார்த்தவள் இதழ் பிரிக்காமல் மென்மையாக புன்னகைத்தாள்.

‘எப்படி இவளிடம் சொல்வது…கடவுளே…அவளுக்கு எதுவும் ஆகக் கூடாது’ என்று எண்ணியவன் தொண்டையை செருமிக் கொண்டு பேச முற்படும் முன் அவனை முந்திக்கொண்டு அவள் பேசினாள்.

“நூடுல்ஸ் செஞ்சு வச்சுட்டேன்…எடுத்து சாப்பிடுங்க…இங்கே வீட்டு வேலை பார்க்கிறவங்களுக்கு யாருமே இல்லைன்னு சொன்னாங்க…முடிஞ்சா அவங்களை சென்னை கூட்டிட்டு போய் அங்கே உங்களுக்கு தெரிஞ்ச யார் வீட்டிலயாவது வேலைக்கு சேர்த்து விடுங்க…மறக்காம அப்புறமா குல தெய்வ கோவிலுக்கு போய்ட்டு வந்துடுங்க…நான் கிளம்பறேன்”

அதுவரை அவள் பேசிக் கொண்டு இருந்ததை புரிந்தும் புரியாமலும் பார்த்துக் கொண்டு இருந்தவன் அவளது கடைசி வார்த்தையில் அதிர்ந்து போனான்.

“எங்கே போற மித்ரா…”

“கூட்டிட்டு போக வந்துருக்காங்களே…அவங்களோட தான்”புன்னகை மாறாமல் கூறிவிட்டு அவள் நகர்ந்தாள்.

“மித்ராஆஆஆஆ”அவன் குரலில் அதிர்ச்சி,ஆச்சரியம்,திகைப்பு எல்லாமே கலந்து இருந்தது.

“கிளம்பட்டுமா”என்று புன்னகையுடன் கேட்டவள் அதிர்ந்து நின்ற பிரபஞ்சனை நெருங்கி அவன் கன்னத்தில் மெலிதாக முத்தத்தை பதித்தவள்  அறையை தாண்டி வெளியேறும் முன் அவனது குரல் அவனைத் தடுத்து நிறுத்தியது.

“என்ன நடந்துச்சு மித்ரா?”கடினமாக வெளிப்பட்டது அவன் குரல்.

“இரண்டு கொலை பண்ணி இருக்கேன்…அவ்வளவு தான்” என்று அசால்ட்டாக சொன்னவள் நிதானமான நடையுடன் அறையை விட்டு வெளியேறி தானாகவே சென்று போலீஸ் ஜீப்பில் ஏறி அமர்ந்து கொண்டாள்.

அவள் சென்று சில நிமிடங்கள் கழித்து தான் பிரபஞ்சனுக்கு உணர்வே வந்தது.

‘நான் விஷயத்தை எப்படி இவளிடம் சொல்லி இவளை தேற்றுவது என்று நினைத்தால்…இவள் என்ன இப்படி நடந்து கொள்கிறாள்.கண்டிப்பாக அசாத்திய நம்பிக்கையில் இவள் இப்படி நடந்து கொள்ளவில்லை.ஏற்கனவே எதிர்பார்த்த விஷயம் போல் அல்லவா இவளது நடவடிக்கை இருக்கிறது’என்று எண்ணி திகைத்துப் போனான்.

‘அப்படியானால் இத்தனை நாட்களாக அவள் என்னை விட்டு விலகிப் போனதற்கு உண்மைக் காரணம் இது தானா?…எது எப்படி ஆனாலும் அவளை கண்டிப்பாக காப்பாற்றியே தீர வேண்டும்’ என்ற எண்ணம் உந்த நொடியும் தாமதிக்காமல் வேகமாக வாசலுக்கு விரைந்தான்.

அங்கே கைகளில் விலங்கு மாட்டுவதற்கு ஏதுவாக கைகளை தூக்கிக் காட்டியபடி அவள் நிற்க வந்திருந்த போலீசார் தயங்கிக் கொண்டிருந்தனர்.

ஆத்திரமும் எரிச்சலும் போட்டி போட அவளின் அருகில் போய் நின்றவன் அவளின் கையைப் பற்றி வேகமாக தன்னுடைய காரின் முன்சீட்டில் கிட்டத்தட்ட தள்ளினான்.

“ஸ்டேஷனுக்கு என்னோட காரிலேயே அவளைக் கூட்டிக் கொண்டு வருகிறேன்…என்னுடைய காரை பின் தொடர்ந்து வாங்க”என்று உத்தரவாக சொல்லி விட்டு அவன் காரில் ஏறி சென்று விட வேறு வழியின்று வந்திருந்தவர்களும் அவனது காரை பின் தொடர்ந்து செல்லத் தொடங்கினார்கள்.

காரில் ஏறிய பிரபஞ்சன் கொதிநிலையில் இருக்க,சங்கமித்ரா சிடி பிளேயரை ஆன் செய்து பாடல்களை ஒலிக்க விட்டாள்.

ஆளப்போறான் தமிழன்  உலகம் எல்லாமே
வெற்றிமக வழிதான் இனிமே எல்லாமே
வீரன்னா யாருனு இந்த நாட்டுக்கே அவன் சொன்னானே
வாயில்லா மாட்டுக்கும் அட நீதிய அவன் தந்தானே

பட்டென்று பிரபஞ்சன் அடித்த ஒரே அடியில் காரில் ஒலித்துக் கொண்டிருந்த சிடி பிளேயர் உடைந்து சுக்கு நூறானது.

“இங்கே என்ன நடந்துக்கிட்டு இருக்கு…நீ என்னடான்னா கூலா பாட்டு கேட்டுக்கிட்டு வர்ற…என்ன தான் நடந்துச்சு சொல்லு மித்ரா”எரிச்சலாக கேட்டவனை ஒரு நிமிடம் உற்றுப் பார்த்தவள் புன்னகை மாறாத முகத்துடன் பேசத் தொடங்கினாள்.

“என்னை கேள்வி கேட்கிறதால எந்தப் பயனும் இல்லை…இப்போ பாட்டு போட்டது கூட உங்க டென்ஷனை குறைக்கத் தான்”என்று சொன்னவளின் முகத்தில் இருந்து எதையும் கண்டுபிடிக்க அவனால் முடியவில்லை.

உலக இன்பங்களை எல்லாம் துறந்து விட்ட போதி மரத்தடி புத்தனைப் போல அவள் புன்னகை மாறா முகத்துடன் இருக்க,கண்கள் இரண்டிலும் தீப்பொறி பறக்க உக்ர மூர்த்தியாக காரை அசுர வேகத்தில் செலுத்தினான் பிரபஞ்சன்.

சிற்பம் செதுக்கப்படும்…

Facebook Comments Box
What’s your Reaction?
+1
6
+1
1
+1
1
+1
0
+1
0
+1
0
+1
0

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here