Vanavil Sirpame Tamil Novels 38

0
1305

அன்றைய பொழுது பரபரப்பானதாக விடிந்தது சங்கமித்ராவுக்கும்,அவளது குடும்பத்தினருக்கும்.விடியற்காலை விமானத்தில் வந்து இறங்கிய சத்யாவிற்கும்,அவளது கணவர் சுரேஷிற்கும் பயணக் களைப்பையும் தாண்டி முகத்தில் ஒரு வித பதட்டம் இருந்ததை தர்மராஜ் குறித்துக் கொண்டார்.சாவித்திரிக்கு மூத்த மகளின் திடீர் வருகை முதலில் ஆச்சரியமாக இருந்தாலும் ,சங்கமித்ராவின் வழக்கு இன்று நடைப் பெற போவதால் இருவரும் வந்து இருக்கிறார்கள் என்று எண்ணினாரே தவிர அவர்களுக்கு இந்த வழக்கில் சம்பந்தம் இருக்கும் என்ற எண்ணமே அவருக்கு இல்லை.


காலை ஒன்பது மணி அளவில் அந்த கோர்ட் வளாகமே பரபரப்பாக இயங்கிக் கொண்டு இருந்தது.எள் விழக் கூட இடமில்லாத அளவுக்கு கூட்டம் நிரம்பி வழிந்தது. ஒரு பக்கம் பத்திரிக்கையாளர்கள்,மறுபுறம் போலீஸ் ,இன்னொரு புறம் பொது மக்கள் என்று கூட்டம் அலை மோதியது.மொத்த மீடியாவின் பார்வையும் இப்பொழுது அந்த கேசின் மீது தான் இருந்தது.
‘அசிஸ்டெண்ட் கமிஷனர் பிரபஞ்சன் தன்னுடைய மனைவியின் மீது விழுந்திருக்கும் கொலைப்பழியை எப்படி அகற்றப் போகிறார்? ஒருவேளை ரோட்டில் போகும் ஒருவனைப் பிடித்து இவன் தான் குற்றவாளி என்று நிறுத்தி தன்னுடைய மனைவியை காப்பாற்றி விடுவாரோ’ என்பது போன்ற சூடான விவாதங்கள் ஒரு புறம் இருக்க,பிரபஞ்சனின் நேர்மையான குணத்தை அறிந்து வைத்து இருந்தவர்கள் ‘அதற்கு வாய்ப்பே இல்லை’ என்று மறுத்துப் பேசிக் கொண்டு இருந்தனர்.
மணி பத்தை நெருங்கும் பொழுது ஒவ்வொருவராக தனித்தனிக் காரில் வந்து இறங்கினர்.பிரபஞ்சன் தன்னுடைய காரிலும்,சத்யாவும்,அவளுடைய கணவன் சுரேஷும்,சாவித்திரி ஆகியோர் தனியாக ஒரு காரிலும்,தர்மராஜும்,சங்கமித்ராவும் போலீஸ் ஜீப்பிலும் வந்து இறங்கினார்கள்.
வந்து இறங்கியதுமே பத்திரிக்கையாளர்கள் அவர்களை சூழ்ந்து கொண்டு படபடவென்று புகைப்படங்களைக் கிளிக் செய்து தள்ள…மின்னல் கூட்டத்துக்கு இடையில் மாட்டியது போல அந்த இடமே சில கணங்கள் மின்னியது.அவர்களை சுற்றிலும் சூழ்ந்து கொண்ட போலீஸ்காரர்கள் அரண் போல அவர்களை காத்து நீதிமன்றத்திற்கு உள்ளே அழைத்து சென்றனர்.
நீதிமன்றத்தின் உள்ளே நீதிபதியும்,வக்கீல்களும் அமர்ந்து இருக்க வழக்கு சம்பந்தப்பட்ட ஓரிருவர் மட்டுமே அமர்ந்து இருந்தனர்.பிரபஞ்சன் இந்த கேசில் தன்னுடைய மனைவிக்காக தானே வாதாட விரும்பி முன் கூட்டியே அதற்கு அனுமதியும் வாங்கி இருந்ததால் நீதிபதியிடம் அனுமதி வாங்கிக் கொண்டு எழுந்து நின்றுப் பேசத் தொடங்கினான்.
“மிஸஸ்  சங்கமித்ரா பிரபஞ்சன்…உங்க மேல இருக்கிற குற்றம் இன்னும் நிருபிக்கப் படலை.இப்போ இந்த கேசில் நீங்க தான் குற்றவாளி…ஸோ… நீங்க குற்றவாளிக் கூண்டில் வந்து நில்லுங்க…”என்றவன் சுற்றி இருந்தவர்களைப் பார்த்து பேசத் தொடங்கினான்.
“முதல்ல இந்த கேசைப் பத்தின சில தகவல்களை இங்கே உள்ள எல்லாருக்கும் சொல்லிடறேன்…இது ஒரு இரட்டை கொலை வழக்கு… அமீஷ் மற்றும் தருண் அப்படின்னு ஐடி துறையில் வேலை பார்க்கும் இரண்டு இளைஞர்களின் கொலை வழக்கு…
கொலை நடந்து சில மாசங்களுக்கு பிறகு…அதாவது ஒரு மாசத்துக்குப் பிறகு அவங்க இரண்டு பேரோட பெற்றோரும் பிள்ளைகளை காணோம்னு கொடுத்த கம்ப்ளெயின்ட் பத்தி விசாரிக்கும் பொழுது தான் அவங்க கொலையான விவரமே தெரிஞ்சு இருக்கு.அதுக்கு அப்புறம் தான் இந்த கேஸ் இன்னும் சூடு பிடிக்க ஆரம்பிச்சுது…”
“ஸோ …பிரபஞ்சன் சார் இப்போ என்ன சொல்ல வரீங்க…ஒரு மாசம் கழிச்சு தான் அவங்க அப்பா,அம்மா அவங்களை காணோம்னு சொல்லி கேஸ் கொடுத்து இருக்காங்க..ஸோ அவங்களே கொன்னுட்டு இப்படி மாத்தி பேசறாங்கன்னு சொல்லி உங்க மனைவியை காப்பாத்த போறீங்களா?”கிண்டலாக கேள்வி கேட்டார் எதிர்தரப்பில் நியமிக்கப் பட்ட வக்கீல்.
“கண்டிப்பா இல்லை சார்…பெத்த பிள்ளைங்க ரெண்டு பெரும் ஒரு மாசமா எப்படி இருக்காங்கன்னு ஒரு போன் செஞ்சு கூட விசாரிக்காத அளவில் தான் அவங்க பாசப் பிணைப்பு இருந்து இருக்கு.அதுவும் கூட அவங்க மாசா மாசம் அனுப்பி வைக்கும் சம்பளப் பணம் வராமப் போனதுக்கு அப்புறம் தான் அவங்க கேஸ் கொடுத்து இருக்காங்க…இதன் மூலம் அவங்க பெற்ற பிள்ளைகள் மேலே அவங்க எந்த அளவுக்கு பாசம் வச்சு இருக்காங்கன்னு சொல்ல வர்றேன்”
பிரபஞ்சன் குறிப்பாக இரண்டு பேருடைய பெற்றோர்களை பார்த்துக் கொண்டே பேச அவர்களின் முகம் சிறுத்து அவமானத்தால் தொங்கிப் போயிற்று.
“இருக்கலாம் சார்…அதுக்காக அவங்க பசங்க கொலை பண்ணினவங்களுக்கு தண்டனை கிடைக்கணும்ன்னு அவங்க நினைக்கிறது தப்புன்னு சொல்றீங்களா?”
“நிச்சயமா அப்படி சொல்ல மாட்டேன் சார்.சட்டம் ஒரு போதும் குற்றவாளிகளை தண்டிக்காமல் விடாது.நான் இந்த வழக்கில் உண்மை குற்றவாளியை அடையாளப் படுத்தணும்னா அதுக்கு நீங்க கொஞ்ச நேரம் அமைதியா இருங்க…”என்று அலட்டல் இல்லாமல் பேசி  அவரை அமைதிப் படுத்திவன் தொடர்ந்து பேச ஆரம்பித்தான்.
“மிசஸ் .சங்கமித்ரா முதல்ல உங்ககிட்ட ஒரு கேள்வி…நல்லா யோசிச்சு பொறுமையா பதில் சொல்லுங்க…எந்த பயமும் தயக்கமும் வேணாம்”
முதல் நாள் அவன் குற்றவாளியை நெருங்கி விட்டதாக சொன்னதில் இருந்தே அவளுக்கு உள்ளுக்குள் பெரும் பூகம்பம் நடந்து கொண்டு இருந்தது.இன்று காலையில் கோர்ட் வாசலில் வைத்து அக்காவையும் மாமாவையும் பார்த்த பிறகு அவளின் சந்தேகம் உறுதியாகி விட மேற்கொண்டு தான் வாய் விட்டு எதையும் உளறி வைக்கக் கூடாது என்று உறுதியாக இருந்தாள் சங்கமித்ரா.அப்படி அவள் எதையாவது உளறி வைத்து விட்டால் இத்தனை நாள் அவள் பட்ட பாட்டிற்கு அர்த்தமே இல்லாமல் போய்விடுமே…எனவே இப்பொழுது பிரபஞ்சன் அவளிடம் பேசத் தொடங்கியதும் உள்ளூர பயம் இருந்தாலும் வெளியே அதைக் காட்டிக் கொள்ளவில்லை.
“கேளுங்க சார்”
“அவங்க இரண்டு பேரையும் நீங்க தான் கொலை செஞ்சீங்களா?”
“ஆமா…”ஒரு நிமிடம் கூட யோசிக்காமல் பதில் சொன்னாள்.
“எதுக்காக?”அவளின் முகத்தையே கூர்ந்து பார்த்தபடி அவன் கேட்க,
“அவங்க என்னை மிரட்டினாங்க…”
“ஓ…எதுக்காக உங்களை மிரட்டினாங்க…”
“வந்து…அவங்க இரண்டு பெரும் என்னோட பேஸ்புக் பிரண்ட்ஸ்…நான் அவங்ககிட்டே சாட் (CHAT) பண்ணினப்போ நிறைய பேசினேன். அப்போ ஒருநாள் அவங்க கேட்டாங்கன்னு என்னோட போட்டோ அனுப்பி வச்சேன்.அதை மார்பிங் செஞ்சு வெளியிடுவோம்னு  என்னை மிரட்டினாங்க.”
“அதனால தான் அவங்களை கொலை செஞ்சீங்களா…இல்லை வேற காரணம் எதுவும் இருக்கா?ஏன்னா நீங்க சொல்ற காரணம் நம்பும்படியா இல்லையே”ஆணித்தரமான அவனது பேச்சில் அவளுக்கு வாய் உலர்ந்து போனது.
“அ… அது மட்டும் இல்லை…அவங்க கேட்கும் போதெல்லாம் பணத்தை நான் கொடுக்கணும்னு சொன்னாங்க…அப்…”பாதியிலேயே அவள் நிறுத்த
“ம்…சொல்லுங்க…அப்புறம் வேற என்ன சொன்னாங்க…”தொடர்ந்து அவளுக்கு யோசிக்கக் கூட இடம் தராது அவளை சிந்திக்கவே விடாத வண்ணம் அவனது பேச்சு இருந்தது.
“அவங்க கூட…அவங்க சொல்றப்போ எல்லாம்…அவங்க சொல்ற மாதிரி…”என்று பேசிக் கொண்டேப் போனவள் அதற்கு மேல் பேச முடியாது முகத்தை மூடிக் கொண்டு அழுதாள்.அவள் அழுது முடிக்கும் வரை எந்த உணர்ச்சியும் இன்றி அவளைப் பார்த்துக் கொண்டு இருந்தவன் மனதை கல்லாக்கிக் கொண்டு தொடர்ந்து பேசினான்.
“அவங்க கூப்பிட்டதும் எத்தனை முறை நீங்க போனீங்க”
“இல்லை…நான் போகலை…நான் போகவே இல்லை…”அந்த கோர்ட்டே அதிரும்படி அலறினாள் அவள்.
“பொய்…நீங்க அந்த இரண்டு பேரும் கூப்பிட்ட நேரம் எல்லாம் போய் இருக்கீங்க…அவங்க சொல்படி எல்லாம் கேட்டு இருக்கீங்க…அவங்க கூட ஏற்பட்ட நெருக்கமான உறவினால  நீங்க ஒரு மூணு முறை கருதரிச்சு இருக்கீங்க.அதை ஊருக்கு வெளியே இருக்கிற ஒரு தனியார் ஹாஸ்பிடலில் போய் கலைச்சுட்டும் வந்து இருக்கீங்க…அதுக்கு உண்டான ஆதாரம் இதோ…இங்கே இருக்கு”
“பொய்…இதெல்லாமே பொய்…வீணா என்மேலே இப்படி அபாண்டமான குற்றசாட்டை சொல்லாதீங்க…நான் அவங்களை ஒரே ஒரு தடவை தான் நேரில் பார்த்தேன்.அதுவும் அவங்களை கொலை பண்ணின அன்னிக்கு மட்டும் தான்…அதுக்கு முன்னாடி நான் அவங்களை பார்த்ததும் இல்லை…பேசினதும் இல்லை…”முகத்தை மூடிக் கொண்டு கதறியவளைப் பார்த்து அவனுக்கு கொஞ்சமும் இரக்கம்  வரவில்லை.
அப்படியே திரும்பி நீதிபதியைப் பார்த்தவன் , “ப்ளீஸ் நோட் திஸ் யுவர் ஆனர் (please note this your Honour) என்றவன் முகத்தை கடுமையாக மாற்றிக் கொண்டு அவளிடம் தொடர்ந்து பேச ஆரம்பித்தான்.
“சரி …உங்க பேச்சுக்கே வர்றேன்…நீங்க அன்னிக்கு தான் அவங்களை முதன்முதலா நேர்ல பார்க்கறீங்க…சரி…அதுக்கு முன்னாடி அவங்க கிட்டே போன்ல பேசினது உண்டா இல்லையா?”
“பே..பேசி இருக்கேன்…”
“எப்போ எல்லாம் பேசி இருக்கீங்க…சரியா சொல்லுங்க…”
“அதெல்லாம் எப்படி நியாபகம் வச்சுக்கிட்டு இருக்க முடியும்…எனக்கு நினைவில் இல்லை…”
“சரி தான்…அதை நியாபகம் வச்சுக்கிறது கொஞ்சம் கஷ்டம் தான்…”என்று பிரபஞ்சன் உடனே ஒத்துக் கொள்ளவும் அவளது மூளையில் அபாய மணி அடித்தது.
“அவங்களோட நீங்க போனில் பேசி இருக்கீங்களா?”
“ம்..பேசி இருக்கேன்…”
“எந்த நம்பர்ல”
“97……. நம்பர்ல இருந்து தான்.”
“ஓ…அப்போ 96……. அந்த நம்பர் யாரோடது?”
“எ…என்னோடது தான்”
“உங்களுக்கு எதுவும் சூப்பர் பவர் இருக்கா மிசஸ் சங்கமித்ரா”
“ஏ..ஏன் கேட்கறீங்க…”
“இல்லை…அந்த மாதிரி ஏதாவது சக்தி இருந்தா தான் ஒரே நேரத்தில் ஒரே ஆள் இரண்டு பேர் கூட பேச முடியும்…”என்று அவன் கேட்க அதற்கு என்ன பதில் சொல்வது என்று அவள் முழித்துக் கொண்டு நின்றாள்.பயத்தில் அவளுக்கு உடலெங்கும் வேர்த்து வழியத் தொடங்கியது.அக்காவிற்காக கொலையை செய்யும் பொழுது ஏற்படாத பயம்,இப்பொழுது நிதர்சனத்தில் உண்மையை எதிர்கொள்ளும் பொழுது ஏற்படுகிறது.
“சில விஷயங்களை உங்களுக்கு இங்கே நியாபகப் படுத்த விரும்பறேன் மிசஸ் சங்கமித்ரா…உங்களுக்கும் எனக்கும் திருமணம் முடிவாகி  இருந்த புதிதில் தினமும் இரவில் நாம ரொம்ப நேரம் பேசிக்கிட்டு இருப்போம் உங்களுக்கு நினைவு இருக்கும்னு நினைக்கிறேன்…அப்படி ஒரு நாள் என்னோட நீங்க பேசிட்டு இருந்த அர்த்த ராத்திரியில் உங்களோட பெயரில் பதிவாகி இருக்கிற இன்னொரு நம்பரில் இருந்து கொலை செய்யப்பட்ட தருணுடைய நம்பருக்கு கால் போய் இருக்கு…அதுவும் கிட்டத்தட்ட ஒருமணி நேரம்…இது எப்படி நடந்து இருக்க முடியும்? … கொஞ்சம் விளக்கமா சொல்றீங்களா?”
“அ…அது…அது வந்து…”
“கமான்…ஸ்பீக் அவுட் ஐ சே” (Come on Speak out I say)
“….”
நான் சொல்லட்டுமா?” என்று கேட்டவன் கூட்டத்தினர் பகுதியில் முகமெல்லாம் வியர்த்து வழிந்த படி அமர்ந்து இருந்த சத்யாவின் புறம் தன்னுடைய கூர்மையான பார்வையை வீச அங்கே அத்தனை தூரம் தள்ளி இருந்தும் கூட சத்யாவின் உடலில் நடுக்கத்தை ஏற்படுத்தியது.
சரி உங்க கிட்டே கடைசியா ஒரு கேள்வி…அவரை எங்கே எப்படி கொலை செஞ்சீங்க?”
“அவங்க என்னை ஊருக்கு ஒதுக்குப்புறமா இருக்கிற ஒரு இடத்துக்கு பணத்தோட வர சொன்னாங்க…அங்கே நான் போனப்போ அவங்க இரண்டு பேரும் போதையில மயக்கமா இருந்தாங்க.அப்போ தான் அவங்களை கத்தியால குத்தி கொன்னேன்…”தலையை குனிந்தவாறே அவள் சொல்லி முடிக்க பிரபஞ்சன் தொடர்ந்து கேள்வி கேட்டான்.
“இதெல்லாம் நடந்தது எத்தனை மணிக்கு?”
“மதியம் சுமார் ஒண்ணுல இருந்து இரண்டுக்குள்ள இருக்கும்”
“அவங்களைத் தான் கொன்னுட்டீங்களே…அப்புறம் எதுக்கு அவங்க இரண்டு பேரையும் புதைச்சு வச்சீங்க…அதுவும் உங்க செயினோட”தூண்டிலில் புழுவை வைத்து வீசத் தொடங்கினான் பிரபஞ்சன்.
பாடியை யாரோ எரிக்க முயற்சி செய்யும் பொழுது ஏதோ காரணத்தால் அது பாதியிலேயே நின்று போய் விட்டது என்பது பிரபஞ்சனுக்கு தெரியும்.இருந்தும் அங்கிருப்பவர்களை குழப்புவதற்கு அவ்வாறு மாற்றி பேசினான்.
பிரபஞ்சனின் கேள்வியே அவளுக்கு புதிதாக இருந்தது.அவர்கள் இருவரும் மயக்கத்தில் இருந்த பொழுது கத்தியால் குத்தியவள் அதற்கு பிறகு பயந்து போய் அங்கிருந்து ஓடி வந்து விட்டாள்.அப்படி இருக்கையில் ‘பாடியை வேறு யாரோ அப்புறபடுத்த முயற்சி செய்ததைப் போல இவர் சொல்றாரே’…என்று மேலும் குழம்பியவள் தட்டுத்தடுமாறி பதிலுரைத்தாள்.
“இல்ல ரஞ்…சார்…நான் அவங்க பாடியை எதுவும் பண்ணலை…அவங்களை கத்தியால குத்தினதுக்கு அப்புறம் கத்தியை அங்கேயே போட்டுட்டு நான் ஓடி வந்துட்டேன். செயின் அங்கே தவறுதலா விழுந்து இருக்கலாம். வேற எதுவும் நான் செய்யலை…”
அப்படியே திரும்பி நீதிபதியைப் பார்த்தவன் , “ப்ளீஸ் நோட் திஸ் யுவர் ஆனர் (please note this your Honour) என்றான்.
“நீங்க போகலாம் சங்கமித்ரா…”என்றவன் நீதிபதியிடம் திரும்பி அடுத்து தான் விசாரிக்க வேண்டிய நபரை அழைக்க விரும்புவதாக சொல்லி சத்யாவை அழைக்க உடல் நடுங்க கூண்டுக்குள் வந்து நின்றார் சத்யா.
“உங்களைப் பத்தி சொல்லுங்க சத்யா…”
“என் பேர் சத்யா…”
“வெறும் சத்யாவா?”அவன் பார்வை அவளது கண்களை துளைக்க பதட்டத்துடன் தொடர்ந்து பேசினாள்.
“ச…சத்யமித்ரா….”
“ம்ம்…மேலே சொல்லுங்க”
“எனக்கு கல்யாணம் ஆகி ஒரு குழந்தை இருக்கு…கணவர் அமெரிக்கால வேலை பார்க்கிறார்.”
“ஓ…உங்க கணவர் வெளிநாட்டில் வேலை பார்க்கிறாரா…அங்கே பகல்னா இங்கே இரவு நேரமாச்சே…உங்க கணவர் கிட்டே பேசவே உங்களால முடிஞ்சு இருக்காதே…கைக்குழந்தை வேற இருக்கும் பொழுது எப்படி சமாளிச்சீங்க?”
“கஷ்டம் தான்…எப்படியோ சமாளிச்சுகிட்டேன்…”
“நீங்க உங்க கணவர் கிட்டே எப்போ பேசுவீங்க…அதாவது தினமும் நடுராத்திரிலயா…இல்லை விடிஞ்சதும் பேசுவீங்களா?எப்படி பேசுவீங்க?”
“தினமும் நடுராத்திரி ஸ்கைப்ல பேசுவோம்”
“உங்க ஹஸ்பன்ட் வர்ற வரை வெயிட் பண்ணிட்டு இருப்பீங்களா…இல்லை தூங்கிட்டு இருப்பீங்களா?”
“தூ…தூங்காம காத்திருப்பேன்…”
“பொய்…நீங்க அந்த நேரத்தில் பேஸ்புக் பயன்படுத்துவீங்க சரியா?”
“ஆ..ஆமா..சில நேரம்…”
“திரும்ப திரும்ப பொய் சொல்ல முயற்சி பண்ணாதீங்க சத்யா…உங்களுக்கும் உங்க தங்கச்சி மேலே ரொம்ப நாளா இருந்த பகையை மனசுல வச்சுக்கிட்டு அவங்களை பழி வாங்குறதுக்காக நீங்க செஞ்ச கொலை தான் இது இரண்டும்…”
“இல்ல…இது சுத்தப் பொய்”
“ஓ…அப்படின்னா உங்களோட முழுப்பெயர் சத்யமித்ரா அப்படிங்கிற பேர்ல இல்லாம மித்ரா அப்படிங்கிற பேர்ல ஏன் உங்களோட பேஸ் புக் அக்கௌன்ட் இருக்கு…அது மட்டும் இல்லாம உங்களுக்குனு தனியா மெயில் ஐடி இருக்கும் பொழுது சங்கமித்ராவோட மெயில் ஐடியை எதுக்கு நீங்க பயன்படுத்தி அந்த அக்கௌன்ட்டை ஆரம்பிச்சீங்க…இது எல்லாத்தையும் விட சங்கமித்ராவோட பேர்ல இருக்கிற சிம்கார்டை நீங்க பயன்படுத்த வேண்டியதன் அவசியம் என்ன?”சரமாரியான அவனுடைய கேள்விகளுக்கு பதில் சொல்ல முடியாமல் அவள் திணற சங்கமித்ரா தானாகவே கூண்டுக்குள் ஏறி வந்து பேசத் தொடங்கினாள்.
“இல்லை..இது எதுவுமே அக்காவோட தப்பில்லை…அக்காவுக்கு அந்த அக்கௌன்ட்டை கிரியேட் பண்ணி கொடுத்தது நான் தான்.அக்கா தூங்கிட்டு இருந்ததால அவங்களை தொந்தரவு செய்ய மனசில்லாம நான் தான் என்னோட மெயில் ஐடியை கொடுத்து ஓபன் பண்ணினேன்.அதுல நாங்க இரண்டு பேரும் சேர்ந்து இருக்கிற போட்டோவை ப்ரோபைல் பிக்சரா நான் தான் வச்சேன்”
“அப்போ உன்னோட சிம்கார்ட் எப்படி அவங்க கிட்டே போச்சு…”விடாமல் கேள்விகளை கேட்டான் பிரபஞ்சன்.
“அக்காவுக்கு ஏற்கனவே யூஸ் பண்ணிட்டு இருந்த அவங்க சிம்கார்ட் ப்ரீபெய்ட் தான்.அவங்க கல்யாணம் முடிஞ்ச ஒரு மாசத்துல மாமா கூட அவங்களும் அமெரிக்காவுக்கு போய்ட்டாங்க…அதுக்கு அப்புறம் அவங்க வளைகாப்புக்கு இங்கே அழைச்சுட்டு வரும் பொழுது அந்த நம்பர் அவங்களுக்கு டீஆக்டிவேட் ஆகிடுச்சு…மறுபடி அக்கா அமெரிக்கா போற வரைக்கும் தற்காலிகமா ஒரு நம்பர் தேவைப்பட்டதால நான் தான் என்னோட இன்னொரு சிம்மை கொடுத்தேன்.”எப்படியாவது உடன் பிறந்தவளை காப்பாற்றி ஆக வேண்டும் என்று தன்னை தன்னுடைய கணவன் தவறாக நினைத்தாலும் பரவாயில்லை என்று எண்ணி எல்லாவற்றையும் சொல்லும் சங்கமித்ராவை பாசத்துடன் பார்த்துக் கொண்டு இருந்தாள் சத்யா.
“அப்போ இந்தக் கேசில் எல்லா குற்றத்தையும் செஞ்சது உங்க அக்கா தான்…அப்படி இருக்கும் பொழுது உங்க மேல எதுக்கு எல்லா பழியையும் போட்டுகிட்டீங்க மிசஸ்.சங்கமித்ரா”
“அக்காவுக்கு ஒரு வாழ்க்கை இருக்கு…அது அழிஞ்சு போயிடக் கூடாதுன்னு நினைச்சேன்”
“அப்போ உங்க வாழ்க்கை…”உதடுகள் துடிக்க ஆத்திரத்தோடு கேட்டான் பிரபஞ்சன்

Facebook Comments Box
What’s your Reaction?
+1
1
+1
0
+1
4
+1
0
+1
1
+1
0
+1
0

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here