Vanavil Sirpame Tamil Novels 39

0
1717

“அதை பத்தி எனக்கு ‘அப்போ’ எந்த கவலையும் இல்லை”
“ஓ…சரி சத்யா சொல்லுங்க…அந்த இரண்டு பேர் கூடவும் உங்களுக்கு எப்படி அறிமுகம் ஆனது?”மீண்டும் சத்யாவின் புறம் கேள்விகளை திருப்பினான்.


“அந்த தருண் என்னோட பிரண்டு…”
“பிரண்டுன்னா…ஏற்கனவே தெரியுமா?”
“இல்லை…மியுட்சுவல் பிரண்ட்ஸ் பார்த்து தான் சேர்த்தேன்.மற்றபடி எனக்கு அவரை தெரியாது.என்னோட கணவர் ஸ்கைப்ல வர்ற வரைக்கும் அவர் கூட பேசுவேன்…அ..அப்போ என்னைப் பத்தின விவரங்கள் எல்லாம் அவர்கிட்டே நிறைய சொல்லி இருக்கேன்.ஒருநாள் அவரோட போட்டோ அனுப்பி வச்சுட்டு பதிலுக்கு என்னோட போட்டோ கேட்டார்…நானும் யோசிக்காம கொடுத்துட்டேன்…அதுக்கு அப்புறம் தான் பிரச்சினை ஆரம்பம் ஆச்சு…
தருண் ஒருநாள் வீடியோகால்ல புதுசா ஒருத்தனை கூட்டிட்டு வந்தான்.அன்னிக்கு அவங்க பேச்சு வேற மாதிரி இருந்துச்சு…தனியா வெளியே போகலாம்…புருஷன் தான் கூட இல்லையே…ஜாலியா இருக்கலாம்ன்னு …கொஞ்சம் மோசமா பேசினாங்க…நான் உடனே கோபம் வந்து அவனோட ஐடியை ப்ளாக் பண்ணிட்டேன்.ஆனா அப்பவும் விடாம என்னோட போனுக்கு வாட்ஸ்அப் அனுப்ப ஆரம்பிச்சாங்க.அதுல என்னோட முகத்தை மார்பிங் பண்ணி அசிங்க..அசிங்கமா…வேற மாதிரி”என்று பேசிக் கொண்டே போனவள் சற்று நேரம் நீண்ட மூச்சுக்களை எடுத்துக் கொண்டு அமைதியானாள்.
“ஸோ..அதனால நீங்க அவங்க இரண்டு பேரையும் கொன்னுட்டீங்களா…”
“இல்லை…நான் கொலை செய்யலை…அன்னிக்கு அவங்க என்னை வர சொல்லி இருந்த இடத்துக்கு போய் அவங்களுக்கு சந்தேகம் வராத மாதிரி அவங்ககிட்டே பேச்சு கொடுத்துகிட்டே அவங்களுக்கு தெரியாம அவங்க குடிச்சுக்கிட்டு இருந்த டிரிங்க்ஸ்ல மயக்க மருந்து கலந்து கொடுத்தேன்.அவங்க மயங்கினதும் அவங்களோட மொபைல் அப்புறம் லேப்டாப் எல்லாத்தையும் எடுத்துக்கிட்டு வந்து ஆள் நடமாட்டம் இல்லாத இடத்தில் எல்லாத்தையும் எரிச்சுட்டேன்.”
“இதுவரைக்கும் ஓகே…ஆனா உங்க தங்கச்சி வந்துட்டு போனதுக்கு அப்புறம் அவங்க இரண்டு பேரோட பாடியை யாரோ எரிக்க முயற்சி செஞ்சு இருக்காங்க? அது யார்?”
“…”
“சரி அவங்க இரண்டு பேருக்கும் மயக்க மருந்து கொடுத்ததா சொன்னீங்களே…அது எங்கே வாங்கினீங்க?”
“அது வாங்கலை சார்…என்னோட கணவர் அமெரிக்கால இருந்து அனுப்பி வச்சார்…”
“ஹ…இது என்ன கூத்தா இருக்கு…ஏன் இங்கே எல்லாம் மயக்க மருந்து கிடைக்காதா…எதுக்கு அமெரிக்கால இருந்து அதை கொண்டு வரணும்…நீங்களும் உங்க கணவரும் கூட்டு சேர்ந்து கொலை செஞ்சுட்டு இப்ப என்ன புதுசா கதை சொல்றீங்க”
“ஐயோ…இல்லை சார்…நான் உண்மையத் தான் சொல்றேன்.இந்தப் பிரச்சினையை நான் என்னோட கணவர் கிட்ட பயந்துக்கிட்டே சொன்னப்போ முதல்ல கோபப் பட்டாலும் அப்புறம் என்னை காப்பாத்த நினைச்சார்.ஆனா அவரால அப்போ உடனடியா இந்தியா வர முடியாத நிலைமை.எனக்கு இங்கே கடையில் வாங்க எனக்கு பயமா இருந்துச்சு…அதுக்குத் தான் என் கணவரோட  பிரண்டு ரவி இந்த ஐடியா கொடுத்தார்…”
“என்ன ஐடியா?”
“அமெரிக்கால இருக்கிற ஒரு மூலிகை செடி இருக்காம்…அதைப் இந்தியாவுக்கு அனுப்பி வச்சா அதை முறைப்படி தயார் செஞ்சா அதைப் பயன்படுத்தி அவங்களை மயக்கம் போட வச்சிடலாம்…அதுக்கு அப்புறம் ஆதாரங்களை அழிச்சிடலாம்ன்னு அவர் தான் எங்களுக்கு ஐடியா கொடுத்தார்.எங்களுக்கும் அந்த யோசனை ஒத்து வந்துச்சு…அதனால அந்த செடியை இங்கே வரவழைச்சு அவர் கிட்டே கொடுத்தோம்.அவரே அதை பொடியாக தயார் செஞ்சு கொடுத்தார்.”
“அவர் எந்த செடியை உங்க கிட்டே கேட்டார்…”
“எனக்கு பேர் சரியா நியாபகம் இல்லை…ஆனா நம்ம ஊர் சங்கு பூ மாதிரி ஊதா கலர்ல பூ இருந்துச்சு…”
“எனக்கு நீங்க சொன்னதில் ஒரே ஒரு விஷயம் மட்டும் தான் இடிக்குது…உங்களுக்கு கடைக்குப் போய் மயக்க மருந்து வாங்க பயமா இருந்தா உங்க கணவரோட பிரண்டு கிட்டே சொல்லி இருந்தா அவரே வாங்கிக் கொடுத்து இருப்பாரே…அதுவும் இல்லையா இங்கே நம்ம நாட்டில் இல்லாத மூலிகையா அமெரிக்கால இருக்கப் போகுது…அப்படி என்ன அதில் ஸ்பெஷல்…”
“இந்த கேள்வி எதுவும் அப்போ எங்க மனசில தோணலை சார்…எப்படியோ அந்தப் பிரச்சினைல இருந்து வெளியே வந்தா போதும்னு இருந்துச்சு…நானும் ரொம்பவே பயந்து போய் இருந்தேன்.”
“சரி நீங்க போகலாம்…மிஸ்டர் சுரேஷ்…நீங்க இங்கே வாங்க”
“உங்க பிரண்டு ரவியை உங்களுக்கு எத்தனை நாளா தெரியும்?”
“நானும் அவரும் ஒரே கம்பெனி…அப்படித்தான் அவரை எனக்கு தெரியும்.கிட்டத்தட்ட ஐஞ்சு வருசமா நாங்க பிரண்ட்ஸ்…”
“ஒரே கம்பெனினா…அவரும் உங்க கூட அமெரிக்காலயா வேலை பார்க்கறார்?…”
“இல்லை…அவர் இங்கே சென்னை பிராஞ்சில் தான் வேலை பார்க்கிறார்…எனக்கு பிரமோஷன் கிடைச்சு அமெரிக்கா போறதுக்கு முன்னாடி வரை நாங்க ஒண்ணா ஒரே கம்பனில தான் வேலை பார்த்தோம்.”
“உங்க சொந்த மாமனார் ஒரு போலீஸ்…உங்க சகலை ஒரு ஏசிபி…அவங்ககிட்டே சொல்லி இருந்தா அவங்க இரண்டு பேரையும் பிடிச்சு உள்ளே தள்ளி அவங்களுக்கு தண்டனை வாங்கி கொடுத்து இருக்கலாம் இல்லையா?”
“சரி…நீங்க ஒரு செடி கொடுத்து அனுப்பி வச்சீங்ளே…அது இது தானா?”என்று கேட்டபடி தன்னுடைய மொபைலில் ஒரு செடியைக் காட்ட அவர் ஆமென்று தலையை அசைத்தார்.
“இது என்ன செடி…இதை எதுக்கு பயன்படுத்துறாங்கன்னு உங்களுக்கு தெரியுமா?”
“இதோட பேர் எனக்கு தெரியாது சார்…ஆனா இந்த செடில இருந்து இருமல்,ஆஸ்துமா…இப்படி நிறைய வியாதிகளுக்கு மருந்து எடுக்கறாங்கன்னு என்னோட பிரண்டு சொன்னான்…”
“சொன்னார்னா…உங்களுக்கு அதைப் பத்தி எதுவும் தெரியாதா…அதைப் பத்தி எந்த விவரமும் தெரியாமலே உங்க பிரண்டு சொன்னார்னு அதை வாங்கி அனுப்பிட்டீங்களா?”
“சார்…நான் ஒரு சாப்ட்வேர் என்ஜினியர் செடியைப் பத்தி எனக்கு என்ன தெரியும்…அதுவும் இல்லாம அப்போ இருந்த மனநிலையில் இதெல்லாம் தோணலை…எப்படியாவது அதில் இருந்து வெளியே வந்தா போதும்னு தோணுச்சு”
“அது தான் நீங்க செஞ்ச தப்பு…அப்படி அவசரத்தில் நீங்க எடுத்த முடிவு தான் உங்களை இங்கே கொண்டு வந்து நிறுத்தி இருக்கு…யார் எவர்னே தெரியாத ஒருத்தன் கேட்டான்னு போட்டோ கொடுத்ததால தான் உங்க மனைவியை இங்கே கொண்டு வந்து நிறுத்தி இருக்கு…படிச்ச முட்டாளா இருந்ததால தான் என் மனைவியின் மேலே இந்தக் கொலைப் பழி விழுந்து இருக்கு…”
“ஜட்ஜ் அய்யா அவர்களே இந்தப் படத்தில் இருக்கும் செடியின் பெயர் xxxxxxxx (பொதுநலன் கருதி செடியின் பெயர் மறைத்து வைக்கப்பட்டு உள்ளது)இந்த செடி நம்ம நாட்டில் கிடைக்காது.அமெரிக்கா,லண்டன் உள்ளிட்ட ஒரு சில வெளிநாடுகளில் மட்டுமே கிடைக்கக் கூடியது.
பொதுவா எல்லாரும் நினைக்கிறது இந்த செடி,இருமல்,ஆஸ்துமா போன்ற வியாதிகளுக்கு மருந்து அப்படின்னுதான்.ஆனா இதுக்கு பின்னே ஒரு பயங்கரம் இருக்கு.இந்த செடியை ஒரு குறிப்பிட்ட  முறையில் தயார் செஞ்சு அதை ஒரு நபருக்கு கொடுத்தா…அவருக்கு இயற்கையான முறையில் ஹார்ட் அட்டாக் ஏற்படும்.அதை விட முக்கியமான விஷயம் …பிரேதப் பரிசோதனையில் இரத்தத்தில் இந்த மருந்து கலந்து இருப்பதை சாதாரணமாக கண்டுபிடிக்கவே முடியாது என்பது தான்.
இதை எல்லாம் நான் சொல்றதுக்கு காரணம் அவங்க இரண்டு பேருக்கும் ஏற்கனவே செஞ்ச போஸ்ட் மார்ட்டம் ரிப்போர்டில் எந்த தகவலும் உறுதியா தெரியாததால் இந்த வாரம் மறுபடியும் போஸ்ட் மார்ட்டம் செஞ்சு பார்த்ததில் அவங்க இறப்புக்கு காரணம் ஹார்ட் அட்டாக்ன்னு டாக்டர் ரிப்போர்ட் கொடுத்து இருக்காங்க.அவங்களோட மரணம் அன்னைக்கு காலையில நடந்ததா போஸ்ட் மார்ட்டம் ரிப்போர்ட்ல சொல்லி இருக்காங்க. ஸோ…என்னுடைய மனைவி இந்த கேசில் குற்றவாளி இல்லை.
அதே சமயம் என் மனைவியின் அக்கா சத்யாவோ,சுரேஷோ இந்த வழக்கில் குற்றவாளிகள் இல்லை…உண்மை குற்றவாளி ரவி என்பதையும் இப்போ நடந்த இந்த விசாரணையில் உங்களுக்கு புரிஞ்சு இருக்கும்.”
“பிரபஞ்சன்… அதுக்குள்ளே இந்த வழக்குக்கு நீங்க தீர்ப்பு எழுதறீங்க…தீர்ப்பு எழுதுறது ஜட்ஜோட வேலை…உங்க குடும்பத்து ஆட்களை தப்பிக்க வைப்பதற்காக சம்பந்தமே இல்லாத மூணாவது நபர் மேலே நீங்க பழி சொல்றீங்களோன்னு எனக்கு சந்தேகம் வருது”குறுக்கிட்டு பேசினார் எதிர்த்தரப்பு வக்கீல்.
“அதுக்கு எனக்கு அவசியம் இல்லை சார்.தப்பு செஞ்சது என்னோட மனைவியா இருந்தாலும் அவங்களுக்கு நான் கண்டிப்பா தண்டனை வாங்கிக் கொடுத்து இருப்பேன்…ஆனா அவங்க தப்பே செய்யாதப்ப அவங்களை எப்படி இந்த சட்டத்தால் தண்டிக்க முடியும்…ஏற்கனவே வேறு ஒருத்தரால் கொலை செய்யப்பட்டு இறந்து போன ஒருத்தரை கத்தியால ஒரு தடவை இல்லை…ஆயிரம் தடவை குத்தினாலும் அதுக்கு இதுவரை நம்ம சட்டத்துல எந்த தண்டனையும் விதிக்கப்படலை.அதை உங்களுக்கு நான் சொல்லித் தான் தெரியணுமா என்ன?”
“சரி…உங்க மனைவி குற்றவாளி இல்லைன்னு நீங்க சொல்லலாம்…ஆனா அவங்களோட அக்காவும்,அக்கா கணவரும் இதில் முக்கிய குற்றவாளிகள் தானே…”கிடுக்குப் பிடி போட்டார் வக்கீல்.
“எதை வச்சு சொல்றீங்க…”
“அந்த இரண்டு பேரை கொல்றதுக்கு பயன்படுத்திய அந்த விஷம் அதை வாங்கிக் கொடுத்தவர் சுரேஷ் தானே…”
“அதை அனுப்ப சொல்லி கேட்டவருக்கு தண்டனை தராமல் வாங்கி அனுப்பியவரை எப்படி குறை சொல்றீங்க…அப்படிப் பார்த்தா இந்த பார்சலை ஒப்படைத்த கொரியர் பாயைத் தான் கைது செய்யணும்”என்று அவன் கிண்டலாக பேச அங்கே ஒரு சிரிப்பலை எழுந்தது.
“ஏசிபி சார்… ஒரு முக்கியமான விஷயத்தை நீங்க மறந்துட்டீங்க…சம்பந்தப்பட்ட ரவி என்பவரை இன்னும் நீங்க கைது பண்ணவே இல்லை…அவரை விசாரிக்கவும் இல்லை…அவர் தான் இதெல்லாம் செய்தார் அப்படிங்கிறதுக்கு என்ன ஆதாரம் இருக்கு உங்க கிட்டே…குற்றம் சுமத்தப்பட்ட இவங்க இரண்டு பேர் சொல்றதை வச்சு மட்டும் நாம ஒரு முடிவுக்கு வர முடியாது” டேபிளை தட்டி குரலை உயர்த்திப் பேசினார் வக்கீல்.
“வக்கீல் சார்..அந்த ரவியை நேத்திக்கு முன்தினமே  கோயம்பேடு பஸ் ஸ்டாண்டில் வச்சு அரெஸ்ட் பண்ணியாச்சு…கைது செஞ்ச பிறகு அவர் கொடுத்த ஒப்புதல் வாக்குமூலம், அப்புறம் அதை அவர் எழுதும் பொழுதும்,அவரே உண்மையை ஒப்புக் கொண்ட பொழுதும் பதிவு செய்த வீடியோவை நேற்று ராத்திரியே ஜட்ஜ்கிட்டே  கொடுத்தாச்சு…
அந்த ரவி இப்போ புழல் சிறையில் இருக்கார்…இப்போ அவரை கூட்டிட்டு வந்து இருக்கலாம்.ஆனா இறந்து போன அந்த பசங்க வீட்டை சேர்ந்தவங்க நிறைய பேர் ரொம்ப கோபமா இங்கே இருக்காங்க… அவரோட உயிருக்கு ஆபத்து வரும்கிறதால அவரை இங்கே நேரில் அழைத்து வரலை.அதுக்கு பதிலா அவர் இப்போ ஜெயில்ல இருந்து நேரடியா இங்கே பேசுறதுக்கு வீடியோ காலிங் ஏற்பாடு செஞ்சு இருக்கேன்.”
“நீங்க பாட்டுக்கு உங்க இஷ்டத்துக்கு இப்படி எல்லாம் செஞ்சா அதை எல்லாம் சட்டம் அனுமதிக்காது பிரபஞ்சன்”
“நேத்து ராத்திரியே இதுக்காக ஜட்ஜ் சார் கிட்டே ஸ்பெஷல் பர்மிஷன் வாங்கிட்டேன் சார்…இப்போ மிஸ்டர் ரவி பேசுறதை நீங்க எல்லாரும் கேட்கலாம்”என்று சொன்னவன் சட்டென்று கண் அசைக்க மளமளவென்று சில பொருட்கள் அங்கே வைக்கப்பட்டு பெரிய ப்ரொஜெக்டரில் ரவியின் உருவம் தெரிந்தது.
மைக்கையும்,ஹெட் செட்டையும் அணிந்து கொண்ட பிரபஞ்சன் வீடியோ காலில் ரவியுடன் பேசத் தொடங்கினான்.
“ரவி…மத்தவங்க சொல்ல வேண்டிய தகவலை எல்லாம் சொல்லிட்டாங்க…இப்போ உங்க முறை…என்ன நடந்தது? ஏன் இப்படி செஞ்சீங்கன்னு எல்லாருக்கும் புரியிற மாதிரி சொல்லுங்க”என்று கம்பீரமான குரலில் உத்திரவிட்டவன் எதிரே இருந்த நாற்காலியில் சென்று அமர்ந்து விட முகத்தில் ஆங்காங்கு ரத்த காயத்துடன் பேசத் தொடங்கினான் ரவி.
“என்னோட பேர் ரவி…சென்னை பூந்தமல்லி ஏரியால தான் இருக்கேன்.எம்பிஏ படிச்சு இருக்கேன்.ஐடி கம்பனில வேலை பார்க்கிறேன். காதலிச்ச பொண்ணையே வீட்ல எல்லார் சம்மதத்தோடவும் கல்யாணமும் செஞ்சிகிட்டேன்…
சந்தோசமா இருந்தேன்…ரொம்ப சந்தோசமா இருந்தேன்…கல்யாணம் ஆகி இரண்டு வருஷம் ஆகியும் எங்களுக்கு குழந்தை பிறக்கலை…பட் …அதை நினைச்சு நானோ நித்யாவோ வருத்தப்படவே இல்லை.ஒருத்தர் மேலே ஒருத்தர் உயிரா இருந்ததால அது எங்களுக்கு பெருசா தெரியலை.அந்தக் குறையைக் கூட கடவுள் தீர்த்து வச்சார்.
நித்யா கர்ப்பம் ஆனா…அவளை…அவளை அப்படிப் பார்த்துகிட்டேன்” கடந்த கால நினைவுகளால் அவன் கண்கள் கலங்கி பார்வையை மறைத்தது.ஓரிரு நிமிட இடைவெளி எடுத்துக் கொண்டவன் தன்னை சமாளித்துக் கொண்டு மீண்டும் பேசத் தொடங்கினான்.
“அவளுக்கு எப்பவுமே காலையில மசக்கை தொந்தரவு ஜாஸ்தியா இருக்கும்…மயக்கம் ,வாந்தின்னு ரொம்ப கஷ்டபடுவா…அதனால காலையில அவளுக்கு முன்னாடியே நான் எழுந்திருச்சு அவளுக்கு வேண்டியது எல்லாம் ரெடி பண்ணிட்டு ஹார்லிக்ஸ் போட்டு வச்சுட்டு தான் அவளை எழுப்புவேன்.
அன்னைக்கும் அப்படித்தான் அவளை எழுப்பினேன்…ஆனா நித்யா… என்னோட நித்யா எழுந்திரிக்கவே இல்லை…உடம்பு எல்லாம் ஜில்லுனு…ஆகி…மரகட்டை மாதிரி இருந்துச்சு…நைட் எல்லாம் என்னோட அவ்வளவு பேசி சிரிச்சவ…காலையில இல்லை…எனக்கு என்ன செய்றதுன்னு ஒண்ணுமே புரியலை…பித்து பிடிச்சு போய் அப்படியே உட்கார்ந்துட்டேன்…
அப்பாவும்,அம்மாவும் வந்து பார்த்து,கதறி அழுதாங்க..எல்லாருக்கும் தகவல் சொன்னாங்க…அவளோட அப்பா,அம்மா,சொந்தக்காரங்க எல்லாரும் வந்தாங்க…எங்க யாருக்குமே அவளோட மரணத்துல சின்ன சந்தேகம் கூட வரலை…ஏன்னா…நானும் அவளும் வாழ்ந்த வாழ்க்கை அப்படி…
அஞ்சு வருஷம்…அஞ்சு வருஷம் உயிருக்கு உயிரா காதலிச்சோம் இரண்டு பேரும்…குருவிக்கூடு மாதிரி அழகா இருந்துச்சு எங்க குடும்பம்…அதுல புதுசா ஒரு ஜீவன் வரப் போகுதுன்னு எவ்வளவு சந்தோசப் பட்டோம் தெரியுமா?
அவ இறந்து ஒரு சில மாசம் வரைக்கும் அவளை என்கிட்டே இருந்து பிரிச்சது விதி தான்னு நினைச்சுக்கிட்டு கடவுளை கும்பிடறதையே நிறுத்திட்டேன்.என்னோட வீட்டுக்கு கூட போகப் பிடிக்காம தெருவுலேயே சுத்திக்கிட்டு இருந்தேன்.என்னோட நிலைமையை பார்த்த அப்பாவும்,அம்மாவும் அந்த வீட்டை காலி பண்ணிட்டு வேற வீட்டுக்கு என்னை கூட்டிட்டு போனாங்க.அப்போ தான் அவளோட டைரி எனக்கு கிடைச்சது.
நித்யாவுக்கு எப்பவும் டைரி எழுதுற பழக்கம் இருந்தது கிடையாது.டைரில முக்கியமானவங்க போன் நம்பர் மட்டும் தான் எழுதி இருப்பா…அவளோட கையெழுத்து இருந்ததாலேயே அதை பத்திரபடுத்தி வச்சு இருந்தேன்.அப்ப தான் அவ இயற்கையா சாகலை…அந்த பாவிங்களுக்கு பயந்து தூக்க மாத்திரை சாப்பிட்டு தற்கொலை பண்ணிகிட்ட விஷயமே எனக்கு தெரிய வந்துச்சு…
அவ டைரியை படிச்சு முடிச்ச அடுத்த நிமிஷம் எனக்குள்ளே அப்படி ஒரு வெறி வந்துச்சு.இதுக்கு காரணமானவங்களை பழி வாங்கியே தீரணும்ன்னு முடிவு பண்ணினேன்.
ஆனா என்கிட்டே அவளோட அந்த டைரியை தவிர வேற எந்த ஆதாரமும் இல்லை.அவளோட பேஸ்புக் பாஸ்வேர்டு எனக்கு ஏற்கனவே தெரியும்.வெறியோட அவளோட பேஸ்புக் பக்கத்தில போய் ஆராய்ஞ்சு பார்த்தேன்.அவ இறந்து போனது கூட தெரியாம நிறைய பேர் அவளை தங்களோட போஸ்டில் டேக் பண்ணி இருந்தாங்க.அதுல எனக்கு எந்த தகவலும் கிடைக்கலை.
அவளோட இன்பாக்சில தான் எனக்கு அவங்களைப் பத்தின விவரமும் அவனுங்க செஞ்ச அயோக்கியத்தனமும் தெரிய வந்துச்சு. அதுல இருந்த அவங்க பேரை தவிர மத்த விவரம் எதுவுமே உண்மை இல்லைன்னு விசாரிச்சு தெரிஞ்சுகிட்டேன்.என்கிட்டே இருந்த ஒரே ஆதாரம்..அதுல அவன் அனுப்பி இருந்த அவனோட போட்டோ தான்.
அந்த போட்டோவை எடுத்து வச்சுக்கிட்டு தேடிக்கிட்டே இருந்தேன்.அவனுங்க நல்ல நேரம் என்கையில் சிக்கலை…ஆனா எதிர்பாராத விதமா சத்யா சிஸ்டர் வாழ்க்கையில அவங்க குறுக்கே வர…அதுக்கு அவங்க என்கிட்டயே உதவி கேட்டு வந்தாங்க…இவனுங்களை விட்டு வச்சா…இது மாதிரி எத்தனை பெண்களோட வாழ்க்கையை கேள்வி குறி ஆக்குவானுங்கன்னு சொல்ல முடியாது.
அதனால அவங்களை கொல்லணும்னு முடிவு செஞ்சேன்.அதே நேரம் அவங்க மரணத்துல யாருக்கும் எந்த சந்தேகமும் வரக் கூடாதுன்னு நினைச்சேன்.அதுக்கு ஒரே ஒரு காரணம்…என்னோட பழி வாங்கும் நடவடிக்கைல சுரேஷும்,அவங்க மனைவியும் பாதிக்கப் படக்கூடாதுன்னு முடிவு பண்ணினேன்.ஸோ…இயற்கையான முறையில் அவங்களுக்கு மரணம் வரணும்னு நான் தேடி அலைஞ்சப்போ தான் இந்த செடியைப் பத்தி எனக்கு தெரிய வந்துச்சு.அவங்களை பேசி கன்வின்ஸ் செஞ்சு அந்த செடியை முறைப்படி தயார் செஞ்சு அவனுங்களுக்கு கொடுக்க வச்சேன்.எல்லாமே நான் நினைச்ச மாதிரி தான் நடந்துச்சு…
ஆனா இதுல சங்கமித்ரா உள்ளே வரவும் தான் குழப்பம் ஆரம்பம் ஆச்சு.ஏற்கனவே அன்னிக்கு காலையில் சத்யா வந்து அந்த மருந்தை கொடுத்து இருந்ததால் அவங்க இறந்து போய் இருக்க,அது தெரியாமல் அங்கே வந்த சங்கமித்ரா இறந்தவங்களை கத்தியில் குத்துறதை நான் பார்த்தேன்.அவங்களுக்கு எதுவும் பிரச்சினை ஆகக் கூடாதுன்னு நினைச்சு தான் அந்த இரண்டு பேரோட பாடியை எரிக்க முடிவு பண்ணினேன்.என்னோட கெட்ட நேரம்…பாதி எரிஞ்சுக்கிட்டு இருக்கும் பொழுது மழை வந்து கெடுத்துடுச்சு…
நானும் உடனே வீட்டுக்கு திரும்பியாக வேண்டிய சூழ்நிலை…அதனால அவங்க பாடியை அப்படியே விட்டுட்டு வந்துட்டேன்.இதுல யாரும் மாட்டவே வழியில்லைன்னு ரொம்ப நம்பிக்கையோட இருந்தேன்.ஆனா சங்கமித்ரோவோட செயின் காட்டி கொடுத்துடுச்சு…அந்த செயின் வேற யார் கையில கிடைச்சு இருந்தா கூட கண்டு பிடிச்சு இருக்க முடியாது.ஆனா அவங்க அப்பா கைக்கு போகவும் இவ்வளவு சீக்கிரம் எல்லா உண்மையும் வெளியாகிடுச்சு”
“உங்க முகமெல்லாம் காயமா இருக்கே…எப்படி வந்தது?பிரபஞ்சன் உங்களை அடிச்சு உதைச்சு நீங்க தான் அந்த கொலையை செய்ததா சொல்லி உங்களை ஒத்துக் கொள்ள சொன்னாரா?”விடாமல் கேள்வி கணைகளை தொடுத்தார் எதிர்க்கட்சி வக்கீல்.
“அவர் என்னை கோயம்பேடு பஸ் ஸ்டாண்டில் பார்த்துட்டு என்னை தேடி ஒடி வரவும் அந்த கொலைகளை நான் தான் செஞ்சேன்னு அவர் கண்டுபிடிச்சுட்டார்ன்னு எனக்கு புரிஞ்சு போச்சு.அவர் கையில் சிக்க நான் விரும்பலை…அவர்கிட்டே இருந்து தப்பிக்க நினைச்சு ஓடும் பொழுது இப்படி ஆகிடுச்சு…”
“உங்க மனைவி இறந்த பிறகு வாழவே விருப்பம் இல்லாம இருந்த நீங்க போலீஸ் வந்ததும் சரண் அடைந்து இருக்கலாமே…ஏன் ஓட முயற்சி செஞ்சீங்க?”

Facebook Comments Box
What’s your Reaction?
+1
2
+1
0
+1
3
+1
0
+1
0
+1
0
+1
0

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here