Vanavil Sirpame – Tamil Novels Episode 18

0
1248

அத்தியாயம் 18 


முழுதாக ஒரு மாதம் கடந்து இருந்த நிலையில் பிரபஞ்சன் இப்பொழுது தானாகவே முயன்று தனியே எழுந்து நிற்கப் பழகிக் கொண்டான்.தனியே நடக்கும் அளவிற்கு இன்னும் முன்னேறவில்லை என்றாலும் தன்னால் முடிந்த அளவுக்கு மருத்துவர்களுடன் ஒத்துழைப்புக் கொடுத்துக் கொண்டு இருந்தான். தனக்கென்று யாரும் இல்லாத நிலையில் தனியே இருப்பது சில நேரங்களில் வருத்தத்தை கொடுத்தாலும் மனதை தேற்றிக் கொண்டு அந்த நிலையைப் பழகிக் கொண்டான்.


யாரும் தனக்காக இல்லையே என்று ஒருநாளும் பிரபஞ்சன் வருந்தியது இல்லை.அன்பு காட்டுவதற்கு என்று யாருமே இல்லாத நிலையில் வளர்ந்ததாலோ என்னவோ சங்கமித்ராவின் காதலில் துளி அளவு கூட குறையாமல் தனக்கு வேண்டும் என்று நினைத்தான். இதுவரை தனக்கு வேண்டிய அன்பு ,பாசம் எதுவுமே கிடைக்காமல் வளர்ந்து விட்டான் பிரபஞ்சன்.இனி மிச்சம் இருக்கும் வாழ்நாள் முழுமைக்கும் அப்படி நடந்து விடக்கூடாது.

நினைவு தெரிந்த நாள் முதல் யாருடைய அன்பும் இல்லாமல் தனியே வளர்ந்தது வேண்டுமானால் இறைவனின் விருப்பமாக இருக்கலாம்.ஆனால் திருமணம் என்பது அப்படி இல்லையே!அவனுக்கு யாரை பிடித்து இருக்கிறதோ , அவனை யார் உயிர்க்கும் மேலாக நேசிக்கிறார்களோ அவர்களை அவன் தேர்ந்தெடுத்து திருமணம் செய்து கொண்டால் இதுநாள் வரை அனுபவித்து வந்த வேதனை அனைத்தும் நிச்சயம் மறைந்து போய் விடும் என்று உறுதியாக நம்பினான்.


திருமணம் செய்து கொள்ளலாம் முடிவெடுத்த பின் ஏனோ போட்டோவில் பார்த்தவுடன் சங்கமித்ராவை அவனுக்கு ரொம்பவும் பிடித்துப் போனது.இன்னதென்று விளக்க முடியாத ஏதோ ஒரு ஈர்ப்பு அவளிடத்தில் அவனுக்கு ஏற்பட்டது.என்னதான் அவளை பிடித்து இருந்தாலும் தரகரிடம் அவளைப் பற்றி விசாரித்து தெரிந்து கொண்டு அவள் படிக்கும் கல்லூரிக்கே சென்று அவளுக்கே தெரியாமல் அவளைப் பின் தொடர்ந்தான்.

 அவளின் குழந்தைத்தனமும்,துறுதுறுப்பும் அவனுக்கு மிகவும் பிடித்துப் போனது.அவளுக்கு தெரியாமலேயே அவளைப் பின் தொடர்ந்தான்.அவனுக்கு தான் ஒரு அசிஸ்டெண்ட் கமிஷனர் என்பதெல்லாம் அப்பொழுது நினைவில் இல்லை.தன்னுடைய வாழ்வை பரிபூரணமாக்கும் தேவதை இப்பொழுது பார்த்துக் கொண்டு இருக்கிறோம் என்பது மட்டுமே தோன்ற மெல்ல அவளை ரசிக்க ஆரம்பித்தான்.

 அவளின் பேச்சு,செய்கை,சுட்டித்தனம் என்று எல்லாமும் பிடித்துப் போய் விட அதற்குப் பின் தான் தரகரிடம் சொல்லி அவளுடைய அப்பாவை நேரில் சென்று பார்த்து தன்னைப் பற்றிய விவரங்களை சொல்லி திருமணத்திற்கு சம்மதம் வாங்கினான். அவரிடம் எல்லா விஷயமும் பேசி அவர் சங்கமித்ராவிடம் திருமண விஷயத்தை சொல்லிவிட்டார் என்று தெரிந்த பொழுது அவனுக்கு கொஞ்சம் உதறலாகத் தான் இருந்தது.

அவனுடைய போட்டோ பார்த்த பிறகு அவளுக்கு பிடித்து இருக்குமோ இருக்காதோ என்றெல்லாம் குழம்பியவன் தர்மராஜ் தங்களுக்கு இந்த திருமணத்தில் முழு சம்மதம் என்று கூறிய பிறகு தான் சுவாசமே சீரானது. ஞாயிற்றுக் கிழமை பெண் பார்க்க வருமாறு அவர் சொன்ன பொழுது வானத்தில் மிதப்பதைப் போல உணர்ந்தான்.அவளின் வீட்டிற்கு சென்று அவளைப் பார்க்கும் முன் தனியே வெளியிடத்தில் வைத்து அவளைப் பார்த்து ஒரு இரண்டு வார்த்தையாவது பேசி விட வேண்டும் என்ற எண்ணத்துடன் தான் முதன்முதலில் அவளை கடற்கரையில் வழி மறித்து பேச முயன்றான். 

ஆனால் தன்னை கொஞ்சம் கூட அடையாளம் தெரியாமல் அவள் நடந்து கொண்டது அவனுடைய மனதை வெகுவாக பாதித்தது என்னவோ நிஜம்.தன்னைப் போலவே அவளும் தன்னுடைய போட்டோவை பார்த்த பிறகு தன் மீது காதலில் உருகி கரைந்து இருக்க வேண்டும் என்றெல்லாம் அவன் எதிர்பார்த்து இருக்கவில்லை தான். ஆனால் அவளுக்கு தன்னை அடையாளம் கூட தெரியாமல் இருப்பதை அவனால் தாங்கிக் கொள்ள முடியவில்லை.

அவளுடைய போட்டோ பார்த்ததில் இருந்து அவள் தான் இனி தன்னுடைய வாழ்க்கை முழுமைக்கும் என்று அவன் நினைத்துக் கொண்டு இன்பக் கனவுகளில் மிதந்து கொண்டு இருக்க,அவளோ ‘யார் நீ’ என்று பார்வையாலேயே தள்ளி நிறுத்தினாள். அன்றைய இரவு முழுவதும் அவன் தூங்கவே இல்லை.அவன் ஒன்றும் அளவுக்கு அதிகமாக எதிர்பார்த்து விடவில்லையே…தன்னை மணந்து கொள்ளப் போகும் பெண்ணின் மனதில் தான் நிறைந்து இருக்க வேண்டும் என்று நினைத்தான்.

அது என்ன அவ்வளவு பெரிய தவறா என்ன?எத்தனையோ பேருக்கு இயல்பாக அமைந்து விடும் விஷயம் தனக்கு மட்டும் ஏன் நடக்க மாட்டேன் என்கிறது…உள்ளுக்குள் குமைந்து போனான் பிரபஞ்சன்.


ஆனால் அதற்காக இதை இப்படியே விட்டு விட்டால் அவன் எப்படி பிரபஞ்சன் ஆவான்?அவனைப் பொறுத்தவரையில் இனி அவனுடைய வாழ்வில் சங்கமித்ரா ஒருத்திக்கு மட்டும் தான் இடம்.வேறு ஒரு பெண்ணுக்கு இடமில்லை.அப்படி இருக்கும் பொழுது அவளின் மனதை தன்பால் திருப்புவது எப்படி என்று சிந்தித்தவன் இரவு முழுக்க யோசித்து தான் அந்த முடிவை எடுத்தான். எடுத்த முடிவை இதுவரை கச்சிதமாக நடத்தியும் காட்டினான்.ஆனால் கடைசி நாள் வரை மட்டுமே அவனது திட்டம் பலித்தது.

அன்று கடற்கரையில் மித்ராவை சந்திக்க வேண்டும் என்ற எண்ணத்துடன் தான் அவளுக்கு முன்பாகவே சென்று காத்திருக்க தொடங்கினான்.அப்பொழுது தான் அந்த சம்பவம் நடந்தது.அவனின் கண்ணெதிரில் ஒரு கும்பல் இரண்டு பெண்களை வழிமறித்து வம்பு செய்து கொண்டு இருந்தது. முதலில் அதை அவன் பெரிதாக எடுத்துக் கொள்ளவில்லை.அதற்குக் காரணம் அந்த பையன்கள் யாரும் வரம்பு மீறவில்லை.

அந்த பெண்களும் இயல்பாகவே இருந்தார்கள். ‘சரி எல்லாரும் நண்பர்கள் போலும்’ என்று எண்ணிக் கொண்டவன் சங்கமித்ராவுக்காக காத்திருக்கத் தொடங்கினான். அந்தப் பெண்கள் இருவரும் பிரபஞ்சனுக்கு முதுகு காட்டியபடி நின்று கொண்டு இருந்ததால் அவர்களின் முகத்தில் தெரிந்த மிரட்சியை அவனால் பார்க்க முடியாமல் போனது. அவன் பார்த்துக் கொண்டு இருக்கும் பொழுதே அந்த வம்பர் கூட்டத்தில் ஒருவன் அந்தப் பெண்களில் ஒருத்தியின் மேல் கை வைத்து விட,அந்தப் பெண் மிரண்டு போய் அங்கிருந்து ஓடத் தயாரானாள். அவள் ஓடப் போகிறாள் என்பதை அவர்களும் கணித்து விட்டார்களோ என்னவோ அவள் ஓடத் தொடங்கும் முன்னே அவளின் சுடிதார் துப்பட்டாவை கைகளில் பற்றி இருந்தான் ஒருவன்.

சுடிதார் பின் (pin) செய்யப்பட்டு இருந்ததால் அந்தப் பெண் அதற்கு மேல் ஓட முடியாமல் அங்கேயே ஸ்தம்பித்து நின்று விட அது அந்த கும்பலுக்கு மேலும் வசதியானது. நான்கு பேர் ஒன்றாக சேர்ந்து அந்தப் பெண்ணை கைகளில் ஏந்திக் சென்று கடலில் தொப்பென போட்டு விளையாடி மகிழ்ந்தனர்.ஈரமான உடையில் தெரிந்த அந்தப் பெண்ணின் உடலை கண்டு தங்களின் வக்கிரமான எண்ணங்களுக்கு தீனிப் போட்டுக் கொண்டனர்.அவளை காப்பாற்ற வந்த இன்னொரு பெண்ணையும் அதே போல கடலுக்குள் தள்ளி விட முனைய அந்தப் பெண் இவர்களை தள்ளி விட்டு ஓடி விட்டாள். 

இப்பொழுது அந்த கும்பலின் கவனம் முழுக்க தப்பித்து ஓடும் பெண் மீது திரும்ப கடலில் தள்ளி விட்ட பெண்ணை மறந்து எல்லாரும் ஒன்று சேர்ந்து அந்தப் பெண்ணைத் துரத்தத் தொடங்கினர்.ஆரம்பத்தில் விளையாட்டாக ஆரம்பித்த அந்த கும்பலின் ஓட்டம் அவள் தப்பி விடப் போகிறாள் என்ற எண்ணம் தோன்றவும் வெறியாக மாறி இருந்தது.எல்லாரும் ஒன்று சேர்ந்து கொண்டு தன்னை துரத்தவும் மேலும் பயம் அதிகரிக்க முன்னைக் காட்டிலும் அதிக வேகத்துடன் ஓடினாள் அந்தப் பெண். கடற்கரை மணலில் எவ்வளவு வேகமாக ஓடி விட முடியும்?ஒரு இடத்தில் கால் தடுக்கி விழுந்தவள் அவர்களின் கைகளில் சிக்கிக் கொண்டாள்.அவர்களிடமிருந்து விடுபட அவள் போராட அதில் எரிச்சல் அடைந்த ஒருவன் அவளுடைய கன்னத்தில் ஓங்கி அறைந்தான்.

 இது அத்தனை நிகழ்வுகளும் ஊரார் முன்னிலையில் தான் நடந்து கொண்டு இருந்தது.ஆனால் அவர்களில் யாரும் வந்து அவர்களை தடுக்கவோ தண்டிக்கவோ முயலவில்லை.வேடிக்கை மட்டும் தான் பார்த்தார்களே ஒழிய அந்தப் பெண்களுக்கு உதவ யாரும் முன் வரவில்லை.தங்களுக்கு ஏன் வம்பு என்று ஒதுங்கிக் கொண்டார்களோ என்னவோ…


பிரபஞ்சனால் அப்படி அமைதியாக இருக்க முடியவில்லை.முதலில் அவர்கள் ஏதோ நண்பர்கள் போலும்.எல்லாரும் சேர்ந்து விளையாடுகிறார்கள் என்று எண்ணிக் கொண்டவன் இரண்டாவது பெண் பயத்துடன் ஓடவும் தான் ஏதோ பிரச்சினை என்று புரிந்து கொண்டு வேகமாக அந்த இடத்தை நோக்கி ஓடினான்.ஆனால் அப்படி அவன் ஓடுவதற்கு முன் காலம் கடந்து விட்டு இருந்தது.

 கன்னத்தில் அடி வாங்கிய அந்தப் பெண் நிலை தடுமாறி அருகில் இருந்த படகின் மீது போய் விழ நெற்றியில் அடிபட்டு அங்கேயே மயங்கி விழுந்தாள்.தூரத்தில் இருந்து ஓடி வந்த பிரபஞ்சன் முதலில் மயங்கி விழுந்த பெண்ணின் நாடியில் கை வைத்துப் பார்த்து அவளின் உடல் நிலையை ஆராய்ந்தான்.அதற்குள் கடலில் அவர்கள் தள்ளி விட்ட அந்தப் பெண்ணும் வந்து இருக்கவே அந்தப் பெண்ணிடம் அரசு மருத்துவமனைக்கு கொண்டு போய் சேர்க்கும்படி பணித்து விட்டு ஆட்டோவில் அவர்களை ஏற்றி அனுப்பி வைத்தான். ஆட்டோவில் அவர்களை ஏற்றிவிட்டு ஆத்திரத்துடன் திரும்பிய பிரபஞ்சனை அலட்சியத்தோடு எதிர்கொண்டது அந்த கும்பல்.

பார்ப்பதற்கு எல்லாரும் பெரிய இடத்து பிள்ளைகள் போலிருந்தனர்.அவர்கள் செய்த தவறை விட,தவறு செய்த பிறகும் கூட கொஞ்சம் கூட எந்தவிதமான பயமும் இல்லாமல் அவர்கள் நின்றவிதம் பிரபஞ்சனுக்கு மேலும் ஆத்திரத்தை கிளப்ப,நொடியும் தாமதிக்காமல் அவர்களை விரட்டி விரட்டி வேட்டையாடினான்.

அப்படி ஒரு சந்தர்ப்பத்தில் சங்கமித்ரா அவனைப் பார்த்தது. அவளைப் பார்த்ததும் அவள் கண்களில் தெரிந்த பயத்தையும்,மிரட்சியையும் பார்த்தவனுக்கு புரிந்து விட்டது அவள் அவனைப் பார்த்துப் பயப்படுகிறாள் என்பது.ஆனால் பிரபஞ்சனால் உடனே அவர்களை அப்படியே விட்டு விட்டு அவளிடம் செல்ல முடியவில்லை.அவன் ஓரடி நகர்ந்து விட்டாலும் கூட அவர்கள் தப்பி ஓடி விடுவார்கள் என்று தோன்றவே நின்ற இடத்தை விட்டு அசையாமல் சங்கமித்ராவை பார்வையால் அளந்து கொண்டு இருந்தான். 

கடைசியாக அவள் பஸ்ஸில் ஏறி செல்லும் போது அவள் கண்களில் பயத்தையும் தாண்டி ஒரு உணர்வு.இனி இவனைப் பார்க்கவே கூடாது என்று வெறுப்போடு எண்ணியது போல இருந்தது அவள் பார்வை.அதை உண்மை என்று நிரூபிப்பது போல வீட்டுக்கு சென்ற பிறகும் கூட அவள் போனை எடுக்காமல் அவனை தவிர்த்தது அவனை ஆழமாக பாதித்தது. அது எப்படி அவள் தன்னை தவிர்க்கலாம் என்ற கோபம் தலைக்கேற அதே ஆத்திரத்துடன் வண்டியை ஓட்டித் தான் இந்த விபத்தில் சிக்கிக் கொண்டான்.

விபத்தில் இருந்து மீண்ட பிறகு அவனுக்கு தோன்றிய எண்ணம் ஒன்றே ஒன்று மட்டும் தான்.இனி ஒருமுறை அவளுக்கு தன்னை தவிர்க்கும் எண்ணம் வரக் கூடாது என்பது மட்டும் தான்.அதற்குத் தான் அவன் இந்த முடிவை எடுத்தான்.


இடைப்பட்ட இந்த காலத்தில் அவளே தன்னைத் தானே உணர வேண்டும்.அப்படி உணரும் பட்சத்தில் தான் தன்னை அவள் எந்தவொரு சூழ்நிலையிலும் வெறுக்க மாட்டாள் என்று நினைத்தான்.ஏனெனில் இப்பொழுது இருக்கும் சூழ்நிலையில் பிரபஞ்சனால் தாங்கவே முடியாத ஒரு விஷயம் உண்டு எனில் அது சங்கமித்ராவை பிரிவது மட்டுமே.அதனால் தான் மனதை கல்லாக்கிக் கொண்டு இப்படி ஒரு முடிவை எடுத்தான்.

அந்த முடிவால் இப்பொழுது அவனும் சேர்ந்து தானே தவித்துக் கொண்டு இருக்கிறான். வெளியே சிரித்து உள்ளுக்குள் சங்கமித்ராவை நினைத்து தவித்துக் கொண்டு இருக்கும் வேளையில்,சங்கமித்ராவை ஒரே ஒரு முறை பார்க்க வேண்டும் என்ற எண்ணம் தோன்றி அவனை இம்சித்துக் கொண்டே இருந்தது.ஆனால் அதற்கு அவனது உடல்நிலை ஒத்துழைப்பு கொடுக்க மறுத்தது. எழுந்து நடமாடினாலாவது அவளுக்கு தெரியாமல் எங்கேயும் ஒளிந்து மறைந்தாவது அவளை பார்த்து விடலாம்.

அதற்குத்தான் வழியில்லாமல் போய் விட்டதே!என்று அவன் வருந்திக் கொண்டு இருக்கும் வேளையில் அவனது பிரச்சினையை கடவுளே தீர்த்து வைக்க எண்ணினார் போலும். அன்று அவனைப் பார்ப்பதற்காக வந்து இருந்த தர்மராஜ் மிகுந்த கவலையுடன் காணப்பட்டார்.எதையோ அவனிடம் சொல்ல வருவதும்,பின் தயங்குவதுமாக நின்றவர் ஒரு கட்டத்திற்கு மேல் பொறுக்க முடியாமல் பேச ஆரம்பித்தார். 

“இதோ பாருங்க மாப்பிள்ளை… எனக்கு இந்த சம்பந்தம் ரொம்பவே பிடிச்சு போனதால தான் இதுவரை சங்கமித்ரா விஷயத்தில் நீங்க செய்த எதுக்கும் நான் மறுப்பு சொல்லலை.ஆனா இப்போ எனக்கு ரொம்ப பயமா இருக்கு மாப்பிள்ளை…”

 “என்ன விஷயம் மாமா…எதுவா இருந்தாலும் நேரடியாவே சொல்லுங்க…”அவருடைய கண்களை ஊன்றிப் பார்த்தவாறே கேட்டான் பிரபஞ்சன் 

“என் மகளின் கோலம் என்னால கண்கொண்டு பார்க்க முடியலை மாப்பிள்ளை.இந்த ஒரு வாரமா அந்த கூடுவாஞ்சேரி இரட்டைக் கொலை கேசில் ரொம்ப பிசியா இருந்ததால வீட்டுக்குக் கூட போகாமல் சுத்திக்கிட்டு இருந்தேன்.நேத்து ராத்திரி தான் வீட்டுக்குப் போனேன்.அப்போ என் பொண்ணு எப்படி இருந்தா தெரியுமா?”கேள்வியாக நிறுத்திவிட்டு பிரபஞ்சனின் முகம் பார்த்தார்.

அதில் அவனது இதயம் பந்தயக் குதிரையாக மாறி ஓடத் தொடங்கி இருந்தது.

 “சங்கமித்ராவுக்கு என்ன மாமா?”பதட்டத்துடன் கேட்டவனை வேதனையுடன் பார்த்தவர் அவருடைய செல்லில் எடுக்கப்பட்டு இருந்த புகைப்படத்தை காட்டினார்.

 “அவளுக்கே தெரியாமல் இப்போ இங்கே கிளம்பி வரும் பொழுது எடுத்தது மாப்பிள்ளை” என்று சொல்லியபடியே போனை நீட்ட நடுங்கும் கரங்களுடன் வாங்கிப் பார்த்தவன் அதிர்ந்தே போனான். 

கண்களை சுற்றி கருவளையம் தோன்றி இருக்க,ஒரே மாதத்தில் இளைத்துப் போய் கண்களில் ஜீவன் இல்லாமல் எங்கோ தொலைதூரத்தை வெறித்தபடி மொட்டைமாடியில் அமர்ந்து இருந்தாள் சங்கமித்ரா. அவளை அளவுக்கு அதிகமாய் வருத்தி விட்டோம் என்பது புரிய வேதனையில் முகம் கசங்கியவாறே அவரை நிமிர்ந்து பார்த்தான். 

“என் பொண்ணை இந்த அளவுக்கு கஷ்டபடுத்தும் ஒரு கல்யாணம் அவளுக்கு வேணுமான்னு யோசிக்கறேன் மாப்பிள்ளை”அவனது தலையில் இடியை இறக்கினார் அவர்.


இத்தனை வருத்தத்திலும் தன்னை மாப்பிள்ளை என்று அழைப்பதை மனதில் குறித்துக் கொண்டவன் ஆழ்ந்த பெருமூச்சை வெளியேற்றிவிட்டு பேசத் தொடங்கினான்.

 “என்னைத் தவிர இந்த உலகத்தில் நீங்க எந்த கொம்பனை கொண்டு வந்து நிறுத்தினாலும் அவ கல்யாணம் பண்ணிக்க மாட்டா மாமா…அவ மனசு முழுக்க நான் மட்டும்தான் இருக்கேன்.”

 “அது தெரிஞ்சும் நீங்க அவளை இவ்வளவு தூரம் கஷ்டபடுத்தி இருக்கும் பொழுது நான் எப்படி?…”

 “இனி இப்படி நடக்காது மாமா…”தீர்க்கமாக சொன்னான்.

 “அதுவரை என் பொண்ணோட நிலைமை?” 

“அடுத்த வாரம் நான் உங்க வீட்டுக்கு பொண்ணு பார்க்க வர்றேன் மாமா…எல்லா ஏற்பாடுகளையும் செய்ங்க…” 

“அதெப்படி மாப்பிள்ளை இன்னும் ஒரு மாசம் நீங்க ஓய்வெடுத்தே ஆகணுமே…”கேள்வியாக இழுத்தார். 

“அதெல்லாம் நான் பார்த்துக்கிறேன் மாமா…மித்ரா இப்படி இருக்கும் பொழுது…” என்று சொன்னவனின் பார்வை கையில் இருந்த அவளது வாடிய முகத்தை வருத்தத்துடன் நோக்கியது. 

 சிற்பம் செதுக்கப்படும்…

Facebook Comments Box
What’s your Reaction?
+1
4
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here