Vanavil Sirpame – Tamil Novels Episode 19

6
1192

அத்தியாயம் 19 
 இன்னும் ஒரு மாதம் முழுமையாக ஓய்வு எடுத்தே ஆக வேண்டிய நிலையில் இருக்கும் பிரபஞ்சனை டிஸ்சார்ஜ் செய்ய மறுத்து விட்டார் அந்த ஹாஸ்பிடலின் தலைமை மருத்துவர்.தர்மராஜ் எவ்வளவோ எடுத்துக் கூறியும் அவர் ஒத்துக் கொள்ளாததால் பிரபஞ்சனே அவர் தன்னை பரிசோதிக்க வரும் பொழுது அவரிடம் பேசினான். 
“டாக்டர் இன்னும் ஒரு வாரத்தில் நான் இங்கே இருந்து கிளம்பியே ஆகணும்”

 “அது எப்படி முடியும் பிரபஞ்சன்? இன்னும் நீங்க முழுசா குணம் அடையலை.உங்களால இப்போதைக்கு இந்த அறையை விட்டுக் கூட தனியா வெளியே போகவே முடியாது.அப்படி இருக்கும் பொழுது என்னால் எப்படி இதை அனுமதிக்க முடியும்?”

 “நீங்க அனுமதிச்சுத் தான் ஆகணும் டாக்டர்…ப்ளீஸ்”

 “முடியாது பிரபஞ்சன் சார்.ஒரு சாதாரணமான ஆள் இப்படி கேட்டாலே என்னால செய்ய முடியாது.அதிலும் நீங்க அசிஸ்டெண்ட் கமிஷனர் வேற.உங்க உடம்பை குணமாக்காம இங்கே இருந்து வெளியே அனுப்பி வைத்தால் அது எனக்குத் தான் ஆபத்து.எங்க ஹாஸ்பிடல் பேரே கெட்டுப் போய்டும்”கண்டிப்புடன் மறுத்து பேசினார். 

“டாக்டர் ப்ளீஸ்!”

“முடியவே முடியாது ஏசிபி சார்…தனியா நடந்து இந்த ரூமை விட்டுக் கூட உங்களால் வெளியே போக முடியாது.அப்படி இருக்கும் போது உங்களை நான் எப்படி அனுப்பி வைப்பேன்” 

“அதுவரை இங்கே இருக்க எனக்கு பிரியம் இல்லை.நானே தனியா கிளம்பி போய்டறேன்”சின்னக் குழந்தை போல பிடிவாதம் பிடித்தான் பிரபஞ்சன்.

 “பிரபஞ்சன்…ப்ளீஸ்! ரிலாக்ஸ்…மனுஷனோட உடம்பு ஒண்ணும் களிமண்ணால செஞ்சது இல்லை.ரத்தமும்,சதையும் சேர்ந்து செஞ்சது.உங்களோட அவசரத்துக்காக முழுசா குணமாகாம நீங்க எழுந்து நடமாட ஆரம்பிச்சா…அது இன்னும் உங்க உடம்பை பாதிக்கும்” 

“டாக்டர்…உங்களுக்கு ஏன் புரியவே மாட்டேங்குது…இப்போ நான் உடனேயே வெளியே போய் ஆகணும்.இல்லைன்னா என்னையே நினைச்சுக்கிட்டு ஒருத்தி உயிரை விட்டுடுவா…சொன்னா கேளுங்க”

 “நீங்க ஆயிரம் காரணம் சொல்லுங்க கண்டிப்பா உங்க உடல்நிலையில் முன்னேற்றம் இல்லாத பட்சத்தில் என்னால உங்களை டிஸ்சார்ஜ் பண்ண முடியாது” உறுதியுடன் மறுத்து விட்டு மருத்துவர் வெளியேற தொப்பென கட்டிலில் விழுந்தவன் உணர்ச்சிப் பிழம்பானான். 

அதன்பிறகு அவன் அந்த டாக்டரை எப்படி சமாதானம் செய்தானோ தெரியாது.அவரிடம் பேசிப் பேசியே அவரை ஒத்துக் கொள்ள வைத்து விட்டான்.அவனுக்கு பேச சொல்லியா தர வேண்டும்.ஆனால் மருத்துவர் ஒரே ஒரு கண்டிஷனோடு அவனுடைய வேண்டுதலுக்கு ஒப்புக் கொண்டார்.

இந்த ஒரு வாரத்தில் பிரபஞ்சனின் உடல் நிலையில் குறிப்பிட்ட அளவு முன்னேற்றம் இருந்தால் மட்டுமே என்று அவர் கிடுக்குப் பிடி போட பிரபஞ்சனும் வேறு வழியின்றி அதற்கு ஒத்துக் கொண்டான். கடுமையாக முயற்சி செய்து தானாகவே தனியே நடக்கப் பழகினான்.கீழே விழுந்த பொழுதும் யார் உதவியும் இன்றி மீண்டும் எழுந்து நடந்தான்.இன்னும் ஒரு வாரத்திற்குள் சங்கமித்ராவின் முன்னே போய் நிற்க வேண்டும்.

அவள் முன்னே பழைய பிரபஞ்சனாக நிற்க வேண்டும் என்ற எண்ணம் மட்டுமே அவனுக்கு உள்ளே இருந்ததால் இடைவிடாது பயிற்சி செய்து கொண்டு இருந்தான். இதற்கிடையில் தர்மராஜ் சொன்ன செய்தி தான் அவனை மிகவும் குழப்பியது.மறுநாள் காலையில் வழக்கம் போல பிரபஞ்சனை பார்க்க வந்து இருந்த தர்மராஜ் முகம் தெளிவாக இருந்தது.முதல் நாள் சங்கமித்ராவை பற்றிய கவலையில் இருந்தவர் இன்றோ முகமெங்கும் மகிழ்ச்சியில் பூரிக்க பிரபஞ்சனை வரவேற்றார்.

“என்ன விஷயம் மாமா…ரொம்ப சந்தோசமா இருக்கிற மாதிரி இருக்கு”தன்னுடைய குழப்பத்தை வெளிகாட்டிக் கொள்ளாமல் அவரிடம் கேட்டான்.

 “வேற என்ன மாப்பிள்ளை…எல்லாம் நல்ல விஷயம் தான்.நேத்து போய் நீங்க அடுத்த வாரம் பொண்ணு பார்க்க வரப் போறீங்கன்னு சொன்னேன்.முதல்ல ஒண்ணுமே பேசாம ரூமுக்குள்ளே போய்ட்டா.ஆனா இப்ப காலையில் கிளம்பி வரும் போது அவளே வந்து எல்லா ஏற்பாடுகளையும் பண்ணுங்கப்பான்னு சொல்றா…நான் கூட ரொம்ப பயந்து போயிட்டேன்.நல்லவேளை கடவுள் அருளால எல்லாம் நல்ல படியா நடக்குது” அவர் சந்தோசமாக பேசப் பேச எதுவோ சரியில்லை என்று பிரபஞ்சனின் மூளை அவனுக்கு அறிவுறுத்திக் கொண்டே இருந்தது. 

‘பெண் பார்க்க வரப் போவது நான் தான் என்று தெரியாமல் இருக்கும் பட்சத்தில் அவள் எப்படி சந்தோசமாக இருக்க முடியும்?எதுவோ சரியில்லை’ என்று மூளை அபாய அறிவிப்பு விடுத்தது. பேச்சு வாக்கில் அவருடைய கவனத்தை கவராத வண்ணம் இயல்பாக கேட்பது போல கேட்டான் பிரபஞ்சன்.

 “நான் தான் மாப்பிள்ளைன்னு அவகிட்டே ஏற்கனவே சொல்லிட்டீங்களா மாமா…” 

“அது எப்படி மாப்பிள்ளை சொல்லுவேன்? நீங்க தான் சொல்ல வேணாம்னு சொல்லி வச்சு இருந்தீங்களே…அது தான் எனக்கு பதிலா நீங்களே சொல்லிட்டீங்க போலவே.அதனால தான் அவளும் சந்தோசமா இந்த ஏற்பாட்டுக்கு ஒத்துகிட்டா”

 “ஆ…ஆமா மாமா…” என்றவன் மனதில் உள்ள குழப்பத்தை வெளிக்காட்டிக் கொள்ளாமல் சமாளித்து அவரை அனுப்பி வைத்தான். ‘அவளுக்கு நிச்சயம் தன்னைப் பற்றிய எந்த விபரங்களும் தெரிந்து இருக்க வாய்ப்பு இல்லை.அப்படி இருக்கும் பொழுது இந்த பெண் பார்க்கும் படலத்திற்கு எப்படி அவள் மகிழ்ச்சியுடன் சம்மதித்து இருக்க முடியும்?’

 அவனுடைய போலீஸ் மூளை தூங்கி விட அவனுக்குள் இருக்கும் காதலன் விடை தெரியாமல் பித்து பிடித்தது போல ஆனான். எப்பேற்பட்ட கேசையும் பார்த்த மாத்திரத்தில் அலசி ஆராய்ந்து குற்றவாளிகளை நொடியில் கண்டுபிடித்து விடும் சாமார்த்தியசாலி தான் அவன்.ஆனால் பெண்ணின் மனதில் என்ன எண்ணம் ஓடுகிறது என்பதை சட்டப் புத்தகத்தில் எந்த செக்ஷனிலும் அவனுக்கு சொல்லித் தரப்படவில்லையே.

‘ஒருவேளை தவறான முடிவு எதுவும் எடுத்து விடுவாளோ?நிச்சயம் என்னைத் தவிர இன்னொருவனை அவள் மணக்க சம்மதிக்க மாட்டாள்.அப்படி இருக்கும் பொழுது இது எப்படி சாத்தியம்?’எப்படி எல்லாமோ சிந்தித்தவன் குழம்பியது தான் மிச்சம்.முன்தினம் வரை தன்னைப் பற்றி மட்டுமே யோசித்துக் கொண்டு இருந்தவன் இப்பொழுது தன்னவளைத் தவிர வேறு எதையும் சிந்திக்கவில்லை.

 எந்த அளவிற்கு தான் பிரபஞ்சனை நேசிக்கிறோம் என்பதை அவளாகவே உணர வேண்டும் என்று நினைத்து, தான் செய்த ஒரு காரியம் இந்த அளவிற்கு அவளை வருத்தமடைய செய்யும் என்று அவன் கனவிலும் நினைக்கவில்லையே… இப்படி ஒரு சூழ்நிலையில் கூட பிரபஞ்சனால் சங்கமித்ராவின் காதலை சந்தேகப்பட முடியவில்லை.அவளைப் பற்றி அவனுக்கு தெரியாதா என்ன? நிச்சயம் தன்னை மறந்து விட்டு வேறு ஒருவனை கணவனாய் ஏற்றுக் கொள்ள அவள் சம்மதித்து இருப்பாள் என்பதை அவனால் ஒத்துக் கொள்ள முடியவில்லை.

 வேறு ஏதோ காரணம் இருக்கிறது அவளின் இந்த திடீர் மகிழ்ச்சிக்கு.எது எப்படியோ அந்தக் காரணம் நிச்சயம் நல்ல விஷயமாக இருக்காது என்று அவனுடைய அடி மனது அவனை எச்சரித்துக் கொண்டே இருந்தது.அதன் விளைவு ஏழாவது நாள் டிஸ்சார்ஜ் ஆக வேண்டியவன் ஒரு நாள் முன்னதாகவே டிஸ்சார்ஜ் ஆனான். மருத்துவரே வியந்து போற்றும்படி இருந்தது அவனது உடல் முன்னேற்றம்.போன வாரம் வரை தனியே நடக்கக் கூட முடியாமல் இருந்தவன் இவன் தான் என்று சொன்னால் சின்னப்பிள்ளை கூட நம்பாது.

அந்த அளவிற்கு இருந்தது அவனது உடல்நலம்.எப்பொழுதும் காலை பத்து மணிக்கு மருத்துவர் அறைக்கு வந்து அவனை பார்க்கும் நேரத்திற்கு முன்னரே தனக்கே உரித்தான வேகமாக நடையுடன் அவரின் எதிரில் நின்று அவருக்கு ஆச்சரியத்தை கொடுத்தான் பிரபஞ்சன். 

“இப்போ நான் கிளம்பலாமா டாக்டர்?”நிமிர்வுடன் அவரைப் பார்த்துக் கேட்டான். 

“ம் தாராளமாய் போகலாம்” 

“மெடிக்கல் ரிப்போர்ட் எதுவும் பார்க்க வேண்டாமா?”

 “அவசியமில்லை…உங்களோட அழுத்தமான நடையே உங்க உடல்நிலையை எனக்கு தெளிவா சொல்லிடுச்சு” 

“அப்போ நான் கிளம்பறேன் டாக்டர்”

 “ஒரே ஒரு கேள்விக்கு மட்டும் பதில் சொல்லிட்டு போங்க”

 “கேளுங்க டாக்டர்” 

“வெளியே உங்களுக்காக காத்துக்கிட்டு இருக்கிறது யார்?”

“என்னோட உயிர்” அழுத்தமான குரலில் பதில் கொடுத்து விட்டு மெல்லிய தலை அசைப்புடன் அங்கிருந்து வெளியேறினான்.

இன்று தர்மராஜுக்கு கூட அவன் டிஸ்சார்ஜ் ஆகும் விஷயம் தெரியாது.அவரைப் பொறுத்தவரை நாளை தான் அவன் டிஸ்சார்ஜ் ஆகப் போவதாக நினைத்துக் கொண்டு இருக்கிறார்.பிரபஞ்சன் வேண்டுமென்றே தான் அவரிடம் அதை மறைத்தான். மருத்துவமனையில் இருந்து கிளம்பி நேராக தன்னுடைய வீட்டிற்கு சென்றான்.

அங்கேயே குளித்து முடித்து விட்டு வீட்டு லேண்ட்லைனில் இருந்து தன்னுடைய உயர் அதிகாரியை தொடர்பு கொண்டவன் அன்றே பணியில் சேர்ந்து கொள்வதாக சொல்லி விட்டு போனை வைத்தான்.கையோடு தர்மராஜுக்கும் போனில் அழைத்தவன் இன்னும் சற்று நேரத்தில் அங்கே வருவதாகவும் ஏற்பாடுகளை செய்யுமாறும் கூறிவிட்டு அவர் மறுத்து பேச வழியின்றி பேச்சை முடித்துக் கொண்டான். 

வெகுநாட்கள் கழித்து கையில் காக்கி உடையை எடுத்தவன் அதை பாசத்தோடு ஒருமுறை தடவிக் கொடுத்தான். ‘எத்தனை நாட்கள் ஆயிற்று?’ என்று எண்ணியவன் உடனே தலையை குலுக்கி தன்னை நிலைபடுத்திக் கொண்டு உடையை அணிந்து கொண்டான். கண்ணாடியின் முன் நின்று தன்னை ஒருமுறை பார்த்து விட்டு தலையை சீவிக் கொண்டு இருந்தவனின் மனதில் ஆயிரம் கேள்விகள். 

‘என்னை பார்த்ததும் எப்படி ரியாக்ட் பண்ணுவாள்?’ ‘ஓவென்று கதறி அழுவாளா?’ ‘பார்த்ததும் ஓடி வந்து என்னைக் கட்டிப்பிடித்து அழுவாளா?’ ‘இல்லை…என் மூஞ்சிலேயே முழிக்காதே வெளியே போ என்று திட்டுவாளா’ ‘எதுவாக இருந்தாலும் சமாளிக்க வேண்டியது தான்’ என்று எண்ணிக் கொண்டவன் காக்கி உடையில் கிளம்பி தயாரானான்.

காக்கி உடையை அணிந்ததும் அவனையும் அறியாமல் அவன் உடலில் ஒரு விறைப்பும்,பார்வையில் ஒரு தீர்க்கமும் வந்து சேர்ந்தது.அவளைப் பார்த்து விட்டு பிறகு அப்படியே டுயுட்டியில் சேர வேண்டும் என்று எண்ணிக் கொண்டவன் வேகமாக கிளம்பி தயாரானான். அலுவலக ஜீப் வந்ததும் மிடுக்காக அதில் ஏறி அமர்ந்து சங்கமித்ராவின் வீட்டிற்கு பயணமானான்.அவனுடைய வீட்டிற்கும் அவள் வீட்டிற்கும் இடையில் உள்ள தூரம் மிஞ்சிப் போனால் ஒரு அரை மணி நேரம் தான் இருக்கும்.

ஆனால் அதற்குள் அவன் உள்ளம் பட்டபாடு அவனுக்கு மட்டுமே தெரியும். அவளுடைய வீட்டு வாசலில் ஜீப் நின்றதுமே சில நொடிகள் கண்களை மூடி தன்னை திடப்படுத்திக் கொண்டான். “மாப்பிள்ளை வந்தாச்சு” என்ற குரல் அவனுடைய காதுகளை எட்டிய பிறகும்கூட மெல்லிய தயக்கத்துடன் தான் கண்களை திறந்து பார்த்தான். 

கல்யாணத்திற்கு முன் மித்ராவை தன்னை காதலிக்க வைத்து விட வேண்டும் என்ற எண்ணத்துடன் தான் செய்த வேலைகள் எதுவும் அவனுக்கு தவறாக தெரியவில்லை.ஆனால் கடந்த ஒரு மாதம் தான் மருத்துவமனையில் இருந்ததை அவளிடம் சொல்லாமல் மறைத்து அவளை மிகுந்த வேதனையில் ஆழ்த்தி இருக்கிறோம் என்பது அவனுக்கு புரியவே செய்தது.அதன் விளைவாக எழுந்த குற்றவுணர்ச்சியே அவனுக்கு லேசான தயக்கத்தை கொடுத்தது.


ஆனால் இப்பொழுது அதற்கெல்லாம் நேரம் இல்லை என்பதை உணர்ந்தவன் காக்கி உடையில் கம்பீரத்தோடு மீசையை லேசாக முறுக்கி விட்டவாறே முகத்தில் துளி கூட விளையாட்டுத்தனம் இல்லாமல் அழுத்தமான காலடிகளுடன் வீட்டுக்குள் நுழைந்தான். வீட்டிற்குள் நுழைந்ததும் தர்மராஜ் ,சாவித்திரி,சத்யா என்று ஒவ்வொருவராக வந்து வரவேற்க ஒற்றை தலை அசைப்பில் அவர்களின் வரவேற்பை ஏற்றுக் கொண்டு அங்கிருந்த ஒற்றை சோபாவில் கால்மேல் கால் போட்டு ஸ்டைலாக அமர்ந்து கொண்டான். 

கண்களில் மாட்டி இருந்த கூலிங்க்ளாசை எடுத்து சட்டையின் முதல் பட்டனுக்கு இடையில் சொருகி விட்டு மித்ராவிற்காக காத்திருக்க தொடங்கினான்.

 “நீங்க நாளைக்கு தானே மாப்பிள்ளை வருவதா இருந்தது.சட்டுன்னு இன்னைக்கு வர்றேன்னு சொல்லவும் எல்லா ஏற்பாடும் அவசர அவசரமா செய்ய வேண்டியதா போச்சு.சங்கமித்ரா இப்போ புடவை மாத்திக்கிட்டு இருக்கா…கொஞ்சம் வெயிட் பண்ணுங்க வந்துடுவா”தர்மராஜ் பதில் சொல்ல சாவித்திரியும்,சத்யாவும் கிச்சனுக்குள் எதையோ சமைத்துக் கொண்டு இருப்பது புரிந்தது. சங்கமித்ரா வரும்வரை வீட்டை சுற்றிலும் பார்வையை ஓட்டி நேரத்தை தள்ளிக் கொண்டு இருந்தான்.

சில பல நிமிடங்களில் அவனுடைய முதுகுப்பக்கத்தில் இருந்த அறைக்கதவு திறக்கப்பட,அதுவரை இருந்த இலகுவான மனநிலை மாறி பிரபஞ்சனின் உடல் லேசாக விறைப்பானது. மெல்லிய கொலுசொலி அவன் காதுகளுக்கு கேட்கத் தொடங்கியதும்,அவனது இதயம் முரசு போல தொம் தொம் என அதிர்ந்தது.இதற்கு முன்பானால் அவன் இந்த நேரத்தை நிச்சயம் மகிழ்வோடு எதிர்கொண்டு இருப்பான்.ஆனால் இடையில் தான் செய்து வைத்த முட்டாள்த்தனமான காரியத்தால் இப்பொழுது அவனை பதட்டம் சூழ்ந்து கொண்டது.

Facebook Comments Box
What’s your Reaction?
+1
5
+1
0
+1
1
+1
0
+1
0
+1
0
+1
0

6 COMMENTS

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here