Dear Readers,
new novel writer Madhumathi Bharath’s ongoing romantic Tamil new novels updated frequently in this writer’s Website.This is a page for Tamil Novel quenchers.Feedback’s from my story readers are Welcome.both positive , negative or any other suggestions. please share your esteemed comments below.This helps me to do much better.Enjoy it and leave your comments.
அத்தியாயம் 31
கடல் போல பரந்து விரிந்து கிடந்தது அந்த வீடு.ஆனால் வீட்டின் முன் பகுதி முறையாக பராமரிக்கப் படாமல் இருந்தது.வீட்டின் கதவுகள் திறந்தே இருந்தது கேட்பாரின்றி.’இந்த வீடு தானா’ என்ற சந்தேகத்துடன் அவள் நிற்கும் பொழுதே வீட்டின் உள்ளிருந்து ஒரு பெண்மணி அவளை நோக்கி ஒடி வந்தார்.
வீட்டின் முன் வாசலில் நிறைய இடம் காலியாக இருக்க,அந்த இடத்தில் எல்லாம் செடிகள் புதர் போல மண்டிக் கிடந்தது.முறையாக பராமரித்தால் நிச்சயம் அழகாக இருக்கும் என்று அவளுக்கு தோன்றியது.மனதில் தோன்றிய எண்ணத்தை உடனே அந்த பெண்மணியிடம் கேட்கவும் செய்தாள்.
“வீட்டுக்கு முன்னாடி இடம் ஏன் இப்படி இருக்கு…இதை எல்லாம் சரியா பராமரிக்கலையா?”
“எனக்கு அதெல்லாம் சரியா தெரியாதும்மா…நான் நேத்துல இருந்து தான் வேலைக்கு வர்றேன்”
“ஓ…இதுக்கு முன்னே இங்கே யாரும் வேலை பார்க்கலையா”
“இல்லம்மா…இதுக்கு முன்னாடி இந்த வீட்டுக்கு யாரும் வந்து போனது கிடையாது.உங்க வீட்டுக்காரர் தான் எப்பவாச்சும் ஊருக்கு வந்தா இந்த வீட்டை இப்படி வாசலிலேயே நின்னு பார்த்துட்டு போவார்.வீட்டுக்குள்ளே கூட போக மாட்டார்”
“என்னைக் கேட்டா எனக்கென்ன தாயி தெரியும்.சின்ன பிள்ளையாய் இருக்கும் பொழுது உங்க வீட்டுக்காரரை நான் பார்த்து இருக்கேன்.ரொம்ப அழகான குடும்பம் தாயி இது.ஹ்ம்ம்… அவரை பெத்தவங்க போனதுக்கு அப்புறம் ஏனோ அவர் இந்த வீட்டுக்குள்ளே வந்ததே இல்லை”பெருமூச்சோடு சொல்லி முடித்தார்.
“…”
“நேத்து எங்க தெருவு சுப்பையா தான் வந்து எனக்கு இங்கே வேலைக்கு ஆள் வேணும்னு சொன்னார்.அய்யாகிட்டே கூட காலையிலேயே போன்ல பேசிட்டு அப்புறம் தான் வேலைக்கு சேர்ந்தேன்.நான் கூட முதல்ல வீட்டு வாசல்ல இப்படி புதர் மாதிரி மண்டிகிடக்குதுன்னு அய்யாகிட்டே சொன்னப்போ அவரே அதை எல்லாம் ஆள் வச்சு சுத்தம் செய்ய சொன்னாரு.அப்புறம் என்ன நினைச்சாரோ தெரியலை.நேத்து ராத்திரி போன் பண்ணி எதுவும் பண்ண வேண்டாம்னு சொல்லிட்டார்.அவருக்கு என்ன நினைப்போ…”
‘என்ன நினைத்து இருப்பார்…சும்மா வெறுமனே வந்து போகும் இவளுக்காக வீட்டை அழகுபடுத்த வேண்டுமா என்று நினைத்து இருப்பார்’என்று கசப்புடன் எண்ணியவள் மேற்கொண்டு எதுவும் பேசாமல் மௌனமாக வீட்டுக்குள் நடந்தாள்.
“வீட்டுல எல்லா அறையும் சுத்தம் பண்ணி முடிச்சுட்டேன் அம்மா…இன்னும் சமைக்கிறதுக்கு காய்கறி மட்டும் வாங்கிட்டு வரணும்.பூஜை அறை கூட துடைச்சு வச்சுட்டேன்”என்று அவர் பேசிக் கொண்டே போக இடையில் குறுக்கிட்டு பேசினாள் சங்கமித்ரா.
“உங்க பேர் என்னம்மா?”
“காவேரிம்மா”
“அவரோட அப்பா,அம்மா போட்டோ எங்கே இருக்கு…”
“நான் வீடு சுத்தம் செஞ்சப்போ எந்த போட்டோவும் கண்ல படலைம்மா…ஒருவேளை அய்யா எங்கேயாவது எடுத்து பத்திரமா வச்சு இருப்பாங்க…நீங்க கொஞ்ச நேரம் ஓய்வு எடுத்துக்கங்கம்மா…நான் போய் காய்கறி எல்லாம் வாங்கிட்டு வந்திடறேன்.காலையிலேயே பால் வாங்கி வச்சுட்டேன்…காபி போடட்டுமாம்மா”
“வேண்டாம்…நீங்க உங்க வேலையை பாருங்க” என்றவள் காவேரி அங்கிருந்து கிளம்பியதும் வீட்டை ஒருமுறை சுற்றிப் பார்த்தாள்.இந்த காலத்தில் அப்படி ஒரு வீட்டை நிச்சயமாக பார்க்கக் கூட முடியாது.கண்டிப்பாக அந்த வீடு பல தலைமுறைகளைப் பார்த்து இருக்கும்.
பிரபஞ்சன் இந்த வீட்டில் தான் சிறு குழந்தையாக இருந்த பொழுது தவழ்ந்து இருப்பான் என்ற நினைவே அவளை சிலிர்க்கச் செய்தது.
‘அவரைப் போலவே அவர் குழந்தையும் இந்த வீட்டில் தவழ்ந்தால் எப்படி இருக்கும்’கண்கள் அசாத்திய பளபளப்பில் மின்னியது அவளுக்கு.சட்டென தலையை உலுக்கி அந்த எண்ணத்தில் இருந்து மீண்டு வந்தாள்.
மதியம் உணவு நேரம் வரை வீட்டை அங்குலம் அங்குலமாக ரசித்துப் பார்த்தாள்.சாப்பிட்ட பின் சற்று நேரம் ஓய்வெடுக்க எண்ணியவள் கீழே இருந்த படுக்கை அறைக்குள் நுழைந்து கண்களை மூடிய நேரம் வீட்டில் தொலைபேசி மணி அடிக்க நிச்சயம் பிரபஞ்சனாகத் தான் இருக்கும் என்று எண்ணியவள் வேகமாக செல்வதற்கு முன் அவளுக்கு முன்னரே காவேரி போனை எடுத்து பேசத் தொடங்கி இருந்தார்.
“அய்யா…நான் தான் காவேரி பேசறேங்க…”
“…”
“ஓ…மதியம் அம்மா சாப்பிட்டுட்டு இப்ப தான் ரூம்க்கு உறங்க போனாங்க அய்யா…கூப்பிடட்டுமா”
“…”
“ஓ…அப்படியா…சரி அய்யா நான் அம்மா எழுந்ததும் அவங்க கிட்டே சொல்லிடறேன்”என்று கூறி விட்டு போனை வைத்தவர் அறை வாயிலில் நின்று கொண்டு இருந்த சங்கமித்ராவை பார்த்ததும் தொடர்ந்து பேசினார்.
“அய்யா தான் பேசினார்ம்மா…அங்கே அய்யாவுக்கு ஏதோ முக்கியமான வேலை இருக்குதாம்..வர இரண்டு நாள் ஆகுமாம்… ராத்திரி உங்க துணைக்கு என்னை இங்கேயே தங்கிக்க சொன்னார்.”என்று ஒப்பித்துவிட்டு தன்னுடைய வேலைகளை பார்க்க ஆரம்பித்து விட்டார்.
சங்கமித்ராவுக்கு கோபம் கோபமாக வந்தது. ‘போன் செய்தவருக்கு என்னிடம் பேச வேண்டும் என்று தெரியாதா?அவருக்காக நான் காத்திருப்பேன் அப்படிங்கிற யோசனை கூட இல்லாமல் முன்னே பின்னே தெரியாத ஊரில் என்னை தனியே இரண்டு நாள் தங்க சொன்னா என்ன அர்த்தம்’
தன்னிடம் பேச வேண்டும் என்று நினைத்து இருந்தால் தன்னுடைய மொபைலுக்கு அழைத்து இருப்பாரே என்று எண்ணியவள் வேகமாக சென்று தன்னுடைய கைப்பையை துழாவ அப்பொழுது தான் நினைவு வந்தது.கிளம்பும் பொழுது தன்னுடைய மொபைலை வீட்டிலேயே மறந்து வைத்து விட்டோம் என்பது.
அப்பொழுதும் அவளது மனச்சாட்சி சமாதானம் ஆக மறுத்தது.அதுதான் இங்கே போன் இருக்கே…அதுல ஒரு வார்த்தை பேசினா குறைஞ்சா போய்டுவார்.அப்படினா என்ன அர்த்தம்…வேணும்னே என்னிடம் பேசாமல் என்னை ஒதுக்கி வைக்கிறார்ன்னு தானே அர்த்தம்’ என்றெல்லாம் எண்ணியவள் சோர்ந்து போய் மீண்டும் அறைக்குள் முடங்கிக் கொண்டாள்.
படுக்கையில் படுத்தவளுக்கோ தூக்கமும் வராமல் முரண்டு பிடிக்க மீண்டும் எழுந்து நடை பழக ஆரம்பித்தவளின் பார்வை அனிச்சை செயலாக தோட்டத்தின் பக்கம் பாய்ந்தது.
‘இந்த இடம் அழகா இருந்தா அவர் வந்து பார்க்கும் பொழுது ரொம்ப சந்தோசப் படுவார் இல்லையா?நேத்து என்மேல இருந்த கோபத்தால தான் இதை சுத்தம் பண்ண வேண்டாம்னு சொல்லி இருப்பார்.இப்ப இதை நானே சரி செய்றேன்’என்று எண்ணியவள் காவிரியை துணைக்கு வைத்துக்கொண்டு மண்வெட்டியால் தோட்டத்தை சுத்தம் செய்யத் தொடங்கினாள்.
நகரத்தில் பிறந்து வளர்ந்தவளுக்கு மண்வெட்டியை எப்படி பயன்படுத்துவது என்றே தெரியவில்லை.காவேரி செய்வதை பார்த்து கொஞ்சம் கொஞ்சமாக கற்றுக் கொண்டவள் மாலை வரை தோட்டத்தில் இருந்த வேண்டாத செடிகளை எல்லாம் அகற்றிவிட்டுத் தான் ஓய்ந்தாள்.
கை கால்கள் எல்லாம் வலி அதிகமாகவே இன்றைக்கு இது போதும் என்று எண்ணியவள் முகம் கழுவி விட்டு தளர்வாக சோபாவில் அமர்ந்து கொண்டாள்.முன்பின் செய்து பழக்கம் இல்லாத வேலை என்பதால் உடலும் வலியெடுக்க அப்படியே உறங்கியவளை காவேரி தான் இரவு உணவை உண்ணுமாறு வறுபுறுத்தி உட்கொள்ளச் செய்தார்.
காலையில் எழுந்திருக்க முடியாமல் உடல் துவண்டாலும் பிரபஞ்சனுக்காக இதை செய்தே தீர வேண்டும் என்று மனதை தேற்றியவள் குளித்து முடித்து காலை உணவை உண்டு விட்டு மீண்டும் தோட்டத்தை சுத்தம் செய்து முடித்து விட்டு தான் ஓய்ந்தாள்.முன்தினமே காவேரியிடம் சில பூச்செடிகள் தேவைப்படும் என்று சொல்லி இருந்ததால் அனைத்தும் தயாராய் இருக்க மதிய உணவுக்கு முன்னரே அனைத்து வேலைகளையும் முடித்து விட்டாள் சங்கமித்ரா.
இடையில் காவேரி மதிய உணவை சமைப்பதற்காக கிளம்பி சென்று விட தனி ஆளாக நின்று முழு தோட்டத்தையும் சீராக்கினாள்.பழக்கம் இல்லாத வேலைகளால் கைகள் காப்பு காய்ச்சு போயிருக்க அதைப் பற்றி எல்லாம் கொஞ்சமும் கவலைப்படாமல் ,வலியை பொறுத்துக் கொண்டு செய்து முடித்தாள்.
மதிய உணவை ஸ்பூனில் வைத்து உண்டவள் அசதியில் உறங்கிப் போக மீண்டும் மறுநாள் காலை தான் எழுந்தாள்.முதல்நாள் சோர்வு இன்னும் மிச்சமிருக்க தோட்டத்திற்கு தண்ணீர் விட வேண்டும் என்று வேகமாக குளித்து விட்டு காலை உணவைக் கூட உண்ணாமல் எல்லா செடிகளுக்கும் தண்ணீர் பாய்ச்சி விட்டு மீண்டும் வீட்டுக்குள் நுழைந்த பொழுது போன் மணி அடிக்கவே நிச்சயம் பிரபஞ்சனாகத் தான் இருக்கும் என்று எண்ணியவள் உடலின் சோர்வை தள்ளி வைத்து விட்டு துள்ளலுடன் வேகமாக வந்து போனை எடுத்தாள்.
“ஹலோ…பிரபஞ்சன்”
“…”
சில நொடிகள் எதிர்முனை மௌனமாகவே இருக்கவே போன் கட்டாகி விட்டதோ என்று எண்ணியவள் மீண்டும் பலமுறை “ஹலோ” என்று கத்திய பிறகு தான் எதிர்முனையில் கனத்த குரலில் பேசத் தொடங்கினான் பிரபஞ்சன்.
“கட்டின புருஷன் பேரை இப்படித்தான் மரியாதை இல்லாம சொல்வியா?”
அவனுடைய கோபத்தில் வாயடைத்துப் போனவள் திக்கித்திணறி பேச ஆரம்பித்தாள்.
“இ…இல்லை…அது…வந்து…சாரி”
“நீ எதுக்கு சாரி கேட்கிற…தப்பு என் பேர்ல தான்… உனக்குத் தான் நான் உன்னோட புருஷன்கிற நினைப்பே இல்லையே”குத்தீட்டியாய் வந்த வார்த்தைகள் குறி தவறாமல் அவளது நெஞ்சை பிளந்தது.
“ஏன் இப்படி எல்லாம் பேசறீங்க…”அழத் தயாரானது அவள் கண்கள்.
“ம்ச்…போனை காவேரி அம்மாகிட்டே கொடுக்கறியா…நான் அவங்ககிட்டே பேசத் தான் போன் பண்ணினேன்”என்று அலுப்புடன் கூற அவன் பேசிய விதத்தில் கோபத்தோடு போனை வைத்து விட்டு அறைக்குள் சென்று முடங்கிக் கொண்டாள்.
மீண்டும் போன் ஒலிப்பதும் காவேரி சென்று போனை எடுத்து பேசுவது தெரிந்தாலும் அறையை விட்டு வெளியே செல்லவே இல்லை சங்கமித்ரா.போன் பேசி முடித்ததும் அவர் மீண்டும் கிச்சனுக்குள் நுழைந்து விட , ‘அப்படி என்ன எனக்கு தெரியாம ரகசியம் இரண்டு பேருக்கும்’என்று கோபமாக எண்ணியவள் , ‘இதை இப்படியே விடக்கூடாது’ என்ற எண்ணத்தோடு வேகமாக கிச்சனுக்குள் நுழைந்து அவரை நேருக்கு நேராக பார்த்தாள்.
அதுவரை சரியாகத் தான் செய்தாள்.அதற்குப் பிறகு பேச்சை எப்படி தொடங்குவது என்று தான் அவளுக்கு புரியவில்லை.
‘என் புருஷன் போனில் உன்னிடம் தனியாக என்ன பேசினார்’என்று அவரிடம் கேட்க முடியாமல் தவித்தாள் சங்கமித்ரா.ஆனால் அவருக்கு அந்த தயக்கமெல்லாம் இல்லை.சங்கமித்ராவை பார்த்ததுமே இயல்பான புன்னகையுடன் அவளை எதிர்கொண்டார்.
“அய்யா தான்ம்மா பேசினார்…ஏதோ ரௌடிகளை பிடிக்க அய்யா கொல்லிமலை காட்டுக்கு போய் இருக்காங்களாம்.வேலை முடிஞ்ச பிறகு தான் வர முடியுமாம்.அதுவரை உங்களுக்கு துணையா இருக்க சொன்னார்”
‘இதை என்கிட்டே போன்ல சொல்ல மாட்டாரா’என்று உள்ளுக்குள் கறுவிக் கொண்டவள் அதே கோபத்துடன் காவேரியிடம் பேச ஆரம்பித்தாள்.
“அவர் சொல்றார்ன்னு பொழுதுக்கும் என்னோடவே இருந்தா எப்படி? உங்க வீட்டுக்கு போகவே மாட்டீங்களா”
“எனக்குனு யாரும் இல்லமா…கட்டுனவன் போய் சேர்ந்து பல வருஷமாச்சு…வீட்டுல எனக்காகனு காத்திருக்க புள்ளையும் இல்ல..குட்டியும் இல்ல”என்று சிரித்த முகமாகவே சொன்னாலும் அதில் இருந்த சோகத்தை அவளால் உணர முடிந்தது.
‘சே!அவர் மேலே இருந்த கோபத்தில் இவங்களை வருத்தி விட்டோமோ’என்று நினைத்தவள் அதன்பிறகு அனாவசிய கேள்விகள் கேட்டு அவரை துளைக்காமல் முடிந்த அளவு அவருடன் தோழமையுடன் நடந்து கொள்ள முயற்சித்தாள்.
அன்றைய பொழுதை அவள் எப்படியோ நெட்டித்தள்ள பொழுது போக சற்று நேரம் டிவி பார்க்கலாம் என்று எண்ணியவள் டிவியை ஆன் செய்து ஒவ்வொரு சேனலாக மாற்றி மாற்றி பார்த்துக் கொண்டிருந்தவள்,சட்டென்று நியூஸ் சேனலில் கணவனின் முகத்தை பார்க்கவும் தன்னை மறந்து அப்படியே பார்த்துக் கொண்டிருந்தாள்.டிவியில் நிருபர்களுக்கு பேட்டிக் கொடுத்துக் கொண்டிருந்தான் பிரபஞ்சன்.
“சார் ஏற்கனவே அந்த ரௌடியை பிடிக்க உங்க டிபார்ட்மெண்ட் பலமுறை முயற்சி செஞ்சு கோட்டை விட்டுட்டாங்க..இப்போ நீங்க கிளம்பி வந்துருக்கீங்க…உங்களால முடியுமா?
“இதுக்கு முன்னே எப்படியோ எனக்கு தெரியாது.இந்த முறை நான் எல்லாத்தையும் தெளிவா தெரிஞ்சு வச்சுக்கிட்டு தான் இறங்கி இருக்கேன்.கண்டிப்பா பிடிச்சுடுவேன்.”
“சிட்டியிலேயே உங்களுக்கு எல்லாம் அந்த ரௌடி தண்ணி காட்டுவார்…இப்போ இருக்கிறதோ கொல்லிமலை காட்டுக்குள்ளே…ரொம்ப அடர்ந்த காடு…இதுல அவரை பிடிக்க முடியும்னு எப்படி நினைக்கறீங்க?”
“நாட்டுக்குள்ளே அவனை பிடிக்கிறது தான் எங்களுக்கு கஷ்டம்…அவனை மாதிரி மிருங்கங்களை பிடிக்கும் போது மனுஷங்களுக்கு எதுவும் நடந்து விடக்கூடாதுன்னு ரொம்பவே கவனம் தேவைப்படும்.காட்டுக்குள்ளே அந்த பயம் எங்களுக்கு இருக்காது.அதுதான் எங்களோட பிளஸ்”
“சார் ஊர்ல இருக்கிற எல்லாருக்கும் நல்லா தெரியும்…நீங்க ஒரு என்கவுண்டர் ஸ்பெசலிஸ்ட்ன்னு.இது வரை எட்டு ரௌடிகளை கொன்னு இருக்கீங்க…அப்பேர்பட்ட நீங்க இந்த விஷயத்தில் இறங்கி இருக்கீங்கன்னா…அது கண்டிப்பா அந்த ரௌடியை என்கவுண்டர் பண்றதுக்குத் தான் இல்லையா?”
“என் கூட டீம்ல இருக்கிற மத்த போலீஸ்காரர்களுக்கு நான் தான் பொறுப்பு.அவங்க உயிருக்கு ஆபத்து வந்தா நிச்சயம் எத்தனை ரௌடிகளை கொல்லவும் நான் தயங்க மாட்டேன்.அதுக்கு நீங்க வைக்கிற பேர் என்கவுண்டர்.நான் வைக்கிற பேர் தற்காப்பு”என்று கம்பீரத்தோடு சொன்னவன் ஒற்றை தலை அசைப்பில் அவர்களிடம் இருந்து விடை பெற்று ஒற்றை கையால் தன்னுடைய கூலிங்கிளாசை ஸ்டைலாக அணிந்தவன் வேக நடையுடன் அங்கிருந்து சென்று விட்டான்.
பிரபஞ்சன் திரையில் தோன்றியது முதல் அவனது ஒவ்வொரு அசைவையும் இமைக்க மறந்து பார்த்துக் கொண்டு இருந்தாள் சங்கமித்ரா.காக்கிச்சட்டையில் கணவனின் கம்பீரம் முன் எப்பொழுதும் இல்லாததை விட அதிகமாக அவளைத் தாக்கியது.வீட்டில் காக்கி உடையில் இருந்தாலும் இயல்பாக இருக்கும் பிரபஞ்சன், வெளியில் இருக்கும் அந்த உடைக்கேற்ப மிடுக்குடன் இருப்பதை இப்பொழுது தான் முதன்முறையாகப் பார்க்கிறாள்.
முறுக்கு மீசையும்,கண்களில் தெரிந்த ஒரு வித விறைப்புத் தன்மையும்,பேசும் பொழுது வார்த்தைகளில் இருந்த தெளிவும்,உடல் அசைவுகளில் இருந்த கம்பீரமும் அவளை அப்படியே கட்டிப் போட்டது.மீண்டும் மீண்டும் அவனது பேட்டியையே பார்த்துக் கொண்டிருந்தவளுக்கு கணவனை இப்பொழுதே பார்க்க வேண்டும் போல இருக்க,உடலும் மனமும் பரபரக்க நேரத்தை ஓட்டித் தள்ளினாள்.
அடுத்த நாள் காலை கொஞ்ச நேரம் தோட்டத்திற்காக செலவளித்தவள் மீண்டும் கணவனின் முகத்தை பார்க்க வேண்டும் என்ற ஆவலில் நியூஸ் சேனல் வைத்தவள் அப்படியே உறைந்து போய் நின்றாள்.
“நேற்று இரவு காவலர்களுக்கும்,ரௌடிகளுக்கும் இடையில் நடந்த துப்பாக்கி சூட்டில் போலீசாருக்கு பலத்த காயம்… காவலர்கள் பலத்த காயங்களுடன் மருத்துவமனையில் அனுமதிக்கப் பட்டுள்ளனர்..ஏசிபி பிரபஞ்சனைத் தவிர”
சிற்பம் செதுக்கப்படும்…