Vanavil Sirpame Tamil Novels episode 32

2
1387
அத்தியாயம் 32

கண்கள் வறண்ட பாலை நிலம் போல மாறி விட்டது சங்கமித்ராவுக்கு.கதறி அழ வேண்டும் என்ற எண்ணம் அவளது மூளையை தீண்டவே இல்லை போலும்.

‘இதற்காகவா இத்தனை பாடு…நாம் இருவரும் சேர்ந்து வாழ வாய்ப்பே இல்லை என்பதை தெரிந்து கொண்ட பிறகும் உங்களை விட்டுத் தர முடியாமல் தானே உங்களையே மணந்து கொண்டேன்.என்னை திருமணம் செய்து கொண்டதால் இந்தப் பாவியின் துரதிர்ஷ்டம் உங்களை காவு வாங்கி விட்டதோ…

இதற்கு எல்லாம் காரணம் நான் தானே…ஒருவேளை அன்று நான் உங்களுக்கு இணங்கி இருந்தால் கண்டிப்பாக நீங்கள் என்னை மட்டுமாக தனித்து ஊருக்கு அனுப்பி இருக்க மாட்டீர்களே…இங்கே வந்த பிறகும் கூட என்னை தனித்து விட்டு நீங்கள் கிளம்பி இருக்க மாட்டீர்களே…

காதல் என்ற பெயரில் உங்கள் உயிரை வாங்கி விட்டேனே…ஏற்கனவே நான் செய்து இருக்கும் பாவங்கள் என்னை உங்களிடம் இருந்து கண்டிப்பாக பிரித்து விடும் என்று தெரிந்தும் உங்களை திருமணம் செய்து கொண்டேனே அதற்காக இந்த தண்டனையை கடவுள் எனக்கு கொடுத்தாரா’ என்றெல்லாம் அவள் போக்கில் அவள் புலம்பியபடி இருக்க வீட்டுத் தொலைபேசி அடிக்கவும்,அதை எடுக்கக் கூட மனமின்றி எங்கோ பார்த்து வெறித்துக் கொண்டிருந்தாள்.

வெகுநேரமாக போன் அடிக்கும் ஒலி கேட்டு ஹாலுக்கு வந்த காவேரி இவளின் நிலையை எண்ணி பதட்டமானார்.முதலில் போனை எடுத்து பேசுவோம் என்று எண்ணியவர் அவளை ஓரக்கண்ணால் பார்த்துக் கொண்டே போனை எடுத்து பேசினார்.

போனில் பேசியவர் தர்மராஜ்…விஷயம் கேள்விப்பட்டு அவரும் கொஞ்சம் கலவரத்துடன் தான் பேசினார்.தான் வரும் வரை மகளை பத்திரமாக பார்த்துக் கொள்ளும்படி சொல்லிவிட்டு போனை வைத்து விட காவேரி வெறித்த பார்வையுடன் தரையில் அமர்ந்து இருந்த சங்கமித்ராவை இரக்கத்துடன் பார்த்தார்.

‘பாவம்…புதுசா கல்யாணம் ஆன பொண்ணு…கல்யாணம் முடிஞ்சு இன்னும் ஒரு வாரம் கூட ஆகலை…அதுக்குள்ளே இந்தப் பொண்ணுக்கு இப்படி ஒரு நிலைமையா?’ என்று எண்ணியவர் அவளைத் தேற்ற முயன்றார்.

“கொஞ்சம் காபி கொண்டு வரட்டுமாம்மா..உடம்புக்கு தெம்பா இருக்கும்”

“…”

“அம்மா ஏதாவது பேசுங்கம்மா…இப்படி சுவரையே வெறிச்சு பார்த்துக்கிட்டு இருக்கீங்களே…எனக்கு பயமா இருக்கு…அழுகை வந்தா அழுதுடுங்கம்மா”அவளின் நிலையை காண சகிக்காமல் அவளின் தோள்களை பற்றி அவர் உலுக்க அப்பொழுதும் அவள் பார்வையில் மாற்றமில்லை.

‘ஐயோ…இந்தப் பொண்ணு என்ன இப்படி இருக்கு’என்று எண்ணியவர் உள்ளம் பதைபதைக்க பேசினார்.

“அய்யாவுக்கு ஒண்ணும் ஆகி இருக்காதும்மா…நீங்க வேணும்னா பாருங்க…நம்ம அய்யா..ஜம்முன்னு… ”என்று பேசிக் கொண்டே போனவர் சங்கமித்ரா செய்கையில் மிரண்டு போய் பேச்சை நிறுத்தி விட்டு அவளை பயத்தோடு பார்த்தார்.

அதுவரை அவரது பேச்சை வெறுமனே கேட்டுக் கொண்டு இருந்தவள் அடக்கமாட்டாமல் சிரிக்க ஆரம்பித்தாள்.சிரிப்பு என்றால் சாதாரணமான சிரிப்பு இல்லை.

பேய் சிரிப்பு…அரக்கத்தனமான சிரிப்பு…

கண்கள் ஒரு இடத்தில நிலை கொள்ளாமல் பார்வை வீடு முழுக்க யாரையோ தேடித் துளாவியது.கைகளால் தலைமுடியை இரு கரங்களாலும் கோர்த்து இழுத்தவள் தலையில் சூடி இருந்த மல்லிகையை ஆவேசம் வந்ததைப் போல பிய்த்து எறிந்தாள்.

‘அவர் இன்று வந்து விடுவார் என்று எண்ணித்தான் காலையில் அவள் ஆசையுடன் அந்தப் பூவை சூடிக் கொண்டது காவிரியின் மனத்திரையில் வந்து போனது.

‘யார் பார்த்து ரசிக்க இந்த அலங்காரம்…’

காலையில் கணவன் இன்று வருவதை எண்ணி பார்த்து பார்த்து புடவை கட்டியதும் ,அவனுக்காக ஆசை ஆசையாக பூச்சூடிக் கொண்ட தருணங்களும் கண் முன்னே வந்து போக வெறி பிடித்தவளைப் போல ஆனாள் சங்கமித்ரா.

‘இல்லை நான் நம்ப மாட்டேன்…அவர் எனக்கு இல்லை அப்படிகிறதை நான் ஏத்துக்க மாட்டேன்.இது எதுவும் நிஜம் இல்லை…பொய்…அவர் என்கிட்டே விளையாடப் பார்க்கிறாரோ…இல்லை வேற யாராவது அவரை என்கிட்டே இருந்து பிரிக்க இப்படி எல்லாம் செய்யறாங்களோ…’

அவள் போக்கில் அவள் பைத்தியம் பிடித்தது போல வீட்டின் உள்ளே குறுக்கும் நெடுக்குமாக அலைந்தவளைப் பார்த்து காவேரியின் பயம் கூடிக் கொண்டே போனது.

‘என்ன இந்த பொண்ணு இப்படி நடந்துக்கிது’என்று எண்ணியவர் பக்குவமாக பேசி அவளை சமாதானப் படுத்த வேண்டும் என்று எண்ணியவாறே மெல்ல அவளை நெருங்கினார்.காவேரி தன்னை நெருங்குவதை பார்த்ததும் அவள் இருந்த மனநிலையில் அவரை வேகமாக தள்ளி விட்டு வாசலை நோக்கி ஓடினாள்.

சட்டென்று தன்னை தள்ளி விட்டு இப்படி ஓடுவாள் என்று எதிர்பாராத காவேரியோ கீழே விழுந்ததும் தன்னை சமாளித்து எழும் முன் சங்கமித்ரா வாசலை அடைந்து விட்டாள்.

வெறி பிடித்தவள் போல வாசல் கதவை திறந்து கொண்டு வெளியே ஓடியவளின் எதிரில் ரோட்டில் வந்து கொண்டிருந்த கார் தென்படவும்,அதில் மோதி உயிரை விட்டு விட எண்ணி வேகமாக காரின் முன்னே பாய,அவளின் நல்ல நேரம் அவளை மோதுவதற்கு முன்னரே கார் சட்டென்று ப்ரேக் போட்டு நின்று விட்டது.

அந்த நேரம் அவளுக்கு தோன்றியது ஒன்றே ஒன்று தான்…

பிரபஞ்சன் இல்லாத உலகத்தில் தான் வாழக் கூடாது என்பது மட்டும் தான்.ஆரம்பத்தில் இருந்தே பிரபஞ்சனை அவள் அடைவதற்குள் அவளுக்கு ஏற்பட்ட தடைகள், அவளை நேர்மறையாகவே சிந்திக்க விடவில்லை.தனக்கு பிரபஞ்சன் கிடைக்கவே மாட்டான் என்று எண்ணி இருந்த விஷயம் கடைசி நொடியில் மாறிப் போனதை இன்னும் அவளது ஆழ்மனம் நம்ப மறுத்தது.அதன் விளைவு தான் இப்பொழுது இவள் நடந்து கொள்ளும் விதம்.அவளைப் பொறுத்தவரை பிரபஞ்சன் அவளோடு வாழ்வான் என்பதே ஒரு கனவு.

அந்தக் கனவு எந்த நிமிடம் கலையுமோ என்ற பயத்திலேயே உழன்று கொண்டு இருந்தவளால் இப்பொழுது நேர்மறையாகவே சிந்திக்க முடியாமல் போனது.

காரிலிருந்து இறங்கியது சாட்சாத் பிரபஞ்சனே தான்…

அவளது நிலையைப் பார்த்து அதிர்ந்து அப்படியே நின்று விட்டான் பிரபஞ்சன்.சங்கமித்ரா கார் தன் மீது வந்து நிச்சயம் மோதி விடும் என்று நினைத்தவள் சரியாக காரின் டயருக்கு அடியில் விழுந்து வைக்க பதறிக் கொண்டு அவளை நோக்கி ஓடினான்.

“மித்ராஆஆஆஆ…”

அதுவரை அவனை கவனிக்காதவள் அவனுடைய ஒற்றை வார்த்தையில் உயிர்த்து எழுந்தாள்.

“ரஞ்சன்ன்ன்ன்”கதறிக் கொண்டு எழுந்தவள் வில்லிலிருந்து புறப்பட்ட அம்பு போல பாய்ந்து அவனை இறுகக் கட்டிக் கொண்டாள்.

‘இனி உன்னை எங்கும் விட மாட்டேன்’ என்று சொல்வதைப் போல அவளின் அணைப்பு இறுகிக் கொண்டே போனது.அவள் இருந்த கோலமும்,அவளின் இறுகிய அணைப்பும் அவளின் பயத்தை சொல்லாமல் சொல்ல சற்று நேரம் அவளை முதுகில் தட்டிக் கொடுத்து ஆறுதல் படுத்தியவன் மெல்ல அவளை கைத்தாங்கலாக அழைத்துக் கொண்டு வீட்டினுள் சென்றான்.

எதிர்ப்பட்ட காவேரி பிரபஞ்சனைப் பார்த்ததும் ஒரே ஒரு நிமிடம் அவர் பார்வை மாறி பின் இயல்பானதை குறித்துக் கொண்டவன் மெல்ல அவளை படுக்கை அறைக்கு அழைத்து சென்று படுக்க வைத்தான்.நகர முயன்றவனை நகர விடாமல் கைகளை இறுகப் பற்றிக் கொண்டு விட மறுத்தாள் சங்கமித்ரா.

‘என்ன ஆச்சு…ஏன் இப்படி நடந்துக்கிறா’ என்ற யோசனையோடு அவளையே பார்த்துக் கொண்டிருந்தவன் காவேரியிடம் கேட்டான்.

“என்ன ஆச்சும்மா…”

“உங்க மாமனார் கொஞ்ச நேரம் முன்னே போன் பண்ணினார் அய்யா…உங்களை காணோம்னு…நான் அதை அம்மாகிட்டே சொல்லலை…ஆனா அதுக்கு முன்னாடியே டிவியில செய்தி பார்த்துக்கிட்டு இருந்தவங்க நான் வந்து பார்க்கும் பொழுது பிரம்மை புடிச்ச மாதிரி அப்படியே உட்கார்ந்து இருந்தாங்க…நான் கிட்டே வர்றதுக்குள்ளே என்னை தள்ளி விட்டுட்டு வெளியே ஓடி வந்துட்டாங்க”ஓரளவிற்கு தனக்கு தெரிந்த விவரங்களை சொன்னார் காவேரி.

அவர் சொன்ன விஷயங்களை அப்படியே உள்வாங்கிக் கொண்டவன் பொறுமையாக அவரிடம் பேசினான்.

“துப்பாக்கி சூடு முடிஞ்சதும் என்னோட சீனியர் ஆபீசர் ஒருத்தர் கிட்டே சொல்லிட்டு தான் நான் கிளம்பி வந்தேன்.மித்ராவை இங்கே தனியா விட்டுட்டு வந்ததால அங்கே எல்லார்கிட்டேயும் சொல்லிக்கிட்டு கிளம்பினா லேட்டாகிடும்னு…அப்படியே காட்டுக்குள்ளே குறுக்கு வழியில் கிளம்பி வந்துட்டேன்.காட்டுக்குள்ளே டவர் எடுக்கலை.சரி இங்கே தானே வரப் போறேன்னு உங்களுக்கு தகவல் சொல்லாம விட்டுட்டேன்.

ஆனா என்னோட சீனியர் ஆபீசர் ஏன் தகவல் சொல்லாம விட்டார்ன்னு தெரியலையே…இருங்க நான் முதல்ல மாமாகிட்டே பேசிடறேன்”என்று பேசியபடியே எழுந்தவன்,மனைவி இருக்கும் மனநிலையை கருத்தில் கொண்டு அங்கேயே அமர்ந்த நிலையில் போன் பேச ஆரம்பித்தான் பிரபஞ்சன்.

“ஹலோ…மாமா…நான் பிரபஞ்சன் பேசறேன்”

“…”

“எனக்கு ஒண்ணுமில்லை மாமா..பதட்டப்படாதீங்க…நான் அங்கேயிருந்து கிளம்பி நேரா இங்கே வந்துட்டேன்”

“…”

“நான் கிளம்பும் பொழுது அங்கே சரவணன் சார் இருந்தார்.அவர்கிட்டே சொல்லிட்டு தான் வந்தேன் மாமா…”

“…”

“ஓ…மை காட்…அவருக்கு எப்படி காயமாச்சு…என் கூட பேசிட்டு இருந்தப்போ நல்லா தானே இருந்தார்”

“…”

ஓ…சரி மாமா..அவருக்கு நினைவு திரும்பினதும் எனக்கு தகவல் சொல்லுங்க…மாமா அப்புறம் இன்னொரு உதவி…இந்த மீடியாக்காரங்களுக்கு நீங்களே போன் பண்ணி தகவலை சொல்லிடறீங்களா…இங்கே மித்ரா ரொம்ப பயந்து போய் இருக்கா…என்னால உடனே வெளியே கிளம்ப முடியாது…”

“…”

“தேங்கஸ் மாமா” என்று கூறி போனை வைத்து விட அப்பொழுது தான் திரும்பி மித்ராவை பார்த்தான்.அவள் கண்கள் ஒரு இன்ச் கூட அவனை விட்டு விலகாமல் அவனது ஒவ்வொரு அசைவையையும் உள்வாங்கிக் கொண்டு இருந்தது.அதை விட அவள் கண்களில் வழிந்த நேசம் அவனை திக்குமுக்காட செய்தது.அவளை அள்ளி அணைக்கத் துடித்த கரங்களை அரும்பாடுபட்டு கட்டுபடுத்திக் கொண்டான்.

“மித்ரா…எனக்கு ஒண்ணும் இல்லை…நான் நல்லா தான் இருக்கேன்.அது தப்பான நியூஸ்…நீ கொஞ்ச நேரம் படுத்து தூங்கு”கனிவுடன் பேசினான் பிரபஞ்சன்

‘மாட்டேன்’ என்று தலையசைத்து மறுத்தவளின் கண்களில் அப்பட்டமான பயம் வெளிப்பட என்ன செய்வது என்று யோசித்தவன் காவேரி அம்மாவை அங்கிருந்தபடியே அழைத்தான்.

“நீங்க வீட்டுக்கு கிளம்புங்க அம்மா…மறுபடி நான் போன் பண்ணினதுக்கு அப்புறம் நீங்க வந்தா போதும்.”

“சரி அய்யா…பாவம் அம்மா ரொம்ப பயந்துட்டாங்க போல…கொஞ்சம் கவனமா பார்த்துக்கோங்க…சமையல் எல்லாம் தயாரா இருக்கு…ராத்திரிக்கு வேணும்னா சொல்லி அனுப்புங்க…வந்து சமைச்சு கொடுத்திடறேன்”என்று கூறிவிட்டு அவர் வெளியேறி விட அவரின் பின்னோடு சென்று வாசல் கதவை பூட்டுவதற்காக எழுந்தவனை அவள் எழ விடவே இல்லை.

வேறு வழியின்றி அவளையும் கையோடு அழைத்துக் கொண்டு போனவன் எல்லா கதவுகளையும் பூட்டி விட்டு சங்கமித்ராவுக்கு சூடான பாலை அருந்தக் கொடுத்தான் பிரபஞ்சன்.

சின்னப் பிள்ளை போல மறுப்பு சொல்லாமல் அதை வாங்கியவள் கடகடவென்று ஒரே மூச்சில் அதை குடித்து விட்டு வேகமாக அவனிடம் டம்ளரை நீட்டினாள்.

இடையில் எந்த சந்தர்ப்பத்திலும் அவனது கைகளை அவள் விடவேயில்லை.எங்கே கண் இமைக்கும் நேரத்தில் அவன் காணாமல் போய் விடுவானோ என்ற பரிதவிப்போடு அவன் முகத்தையே பார்த்துக் கொண்டு இருந்த மனைவியை கண்டு உருகித் தான் போனான் பிரபஞ்சன்.அதே சமயம் இந்த நிலை தற்காலிகமானது தான் என்பதையும் அவன் உணர்ந்தே இருந்தான்.அவள் தன்னுடைய பயத்தில் இருந்து மீண்ட பிறகு மீண்டும் பழையபடி தான் நடந்து கொள்வாள் என்ற எண்ணமும் அவனுக்குள் இருந்தது.

படுக்கையில் அவளை படுக்க வைத்தவன் அவளின் கரங்களை பற்றியபடியே அவளது முகத்தில் வந்து போகும் உணர்வுகளையே ஆழ்ந்து பார்வையிட்டுக் கொண்டிருந்தான்.அவனுடைய பார்வையால் முகம் சிவந்தவள் தானாகவே இரு கைகளையும் அவன் புறம் உயர்த்தி அவனை ‘வா’என்று கண்களால் அழைத்தாள்.

பிரபஞ்சனுக்கு அவள் என்ன நினைக்கிறாள் என்பது புரிந்தாலும் அமர்ந்து இருந்த நிலையில் இருந்து கொஞ்சமும் மாறாமல் அப்படியே இறுகிப் போய் அமர்ந்து இருந்தான்.ஆனால் அதைப் பற்றி எல்லாம் எந்தக் கவலையும் சங்கமித்ராவுக்கு இல்லை…அவனை நெருங்கியவள் அவனுடைய கழுத்தில் தன் கைகளை மாலையாக்கி கோர்த்துக் கொண்டு,அப்படியே அவனுடைய நெஞ்சில் தலை சாய்த்துக் கொண்டாள்.

பிரபஞ்சனின் உடல் இளகுவதற்கு பதிலாக மேலும் இறுகியது.அவளை மெதுவாக தள்ளி நிறுத்தியவன் தீர்க்கமாக அவளை பார்த்தபடியே பேச ஆரம்பித்தான்.

“நம்ம இரண்டு பேருக்கும் இடையில் இருக்கும் வழக்கு இன்னும் தீர்க்கப்படலை மித்ரா…அதுவரை கொஞ்சம் பொறுமையா இரு…எனக்குத் தெரியும்.இந்த நிமிஷம் நான் உன்னை எனக்கு சொந்தமாக்கிக்கிட்டா அதை நீ தடுக்க மாட்ட.ஆனா…எனக்கு அந்த அவசியம் இல்லை…சில கேள்விகளுக்கு பதில் தெரியாம நம்ம வாழ்க்கை ஆரம்பிக்க நான் விரும்பலை…”

‘தன்னையும்,தன்னுடைய உணர்வுகளையும் கணவன் புரிந்து கொள்ளவில்லையே ‘ என்ற கவலையுடன் அவனையே ஏக்கத்துடன் பார்த்துக் கொண்டு இருந்தாள் சங்கமித்ரா.

“இந்த வீட்டுத் தோட்டத்தை நான் வேணும்னு தான் சுத்தம் செய்யாம விட்டு வச்சேன்…அது உனக்கும் தெரியும்…இருந்தும் அதை நீயே சுத்தம் செய்து இருக்கிறாயே…ஏன்?”

“நீங்க வந்து பார்க்கும் பொழுது சந்தோசப் படுவீங்க இல்லையா? அதுதான்…”மெல்லிய குரலில் தெளிவாக பேசினாள் சங்கமித்ரா.

“அதுதான்…ஏன்னு கேட்கிறேன்…ஒருவேளை நீ இருக்கும் இடம் சுத்தமா இருக்கணும்னு நினைச்சு நீ அதை செஞ்சதா எடுத்துக்கிறதுனா கூட அதை ஒரு வேலையாள் மூலம் செய்து இருக்கலாமே…உன்னுடைய கையை புண்ணாக்கிக் கொண்டு செய்தாக வேண்டிய அவசியம் என்ன?”

“உங்களுக்காகத் தான் ரஞ்சன்…”

“அதுதான் ஏன்னு கேட்கிறேன்…எனக்காக எதையாவது செய்தே ஆக வேணும்னு உனக்கு ஏன் தோணுச்சு…கொஞ்சம் கூட காதலே இல்லாமல் கட்டாயப்படுத்தி உன்னை மணந்து கொண்ட நீ வெறுக்கிற ஒருத்தனுக்காகவா?…

 நீ தொடக் கூட விரும்பாத ஒருத்தனுக்காகவா?…

யார் உன்னை தொடுவதை விட கத்தியில் கை நரம்பை அறுத்துக் கொள்வது மேல்ன்னு நினைச்சியோ அந்த ஒருத்தனுக்காகவா?…”

பிரபஞ்சனின் கேள்விகள் ஒவ்வொன்றுக்கும் அவளது முகத்தில் வந்து போன தடுமாற்றத்தை நன்றாக உள்வாங்கிக் கொண்டான் அவன்.

“இந்த கேள்விகள் எல்லாத்துக்கும் முதல்ல நீ பதிலை கண்டுபிடி…அதுக்கு அப்புறம் நாம நம்மோட வாழ்க்கையை தொடங்கலாம்”என்று உறுதியுடன் கூறிவிட்டு அவன் வெளியேற முற்பட சங்கமித்ராவின் கரங்கள் நீண்டு அவனைத் தடுத்தது.

“இப்போ நான் முழு மனசோட தான்…”

“இல்லை மித்ரா…இப்போ உனக்கு வந்து இருக்கிற உணர்வுக்கு பெயர் காதலும் இல்லை…காமமும் இல்லை…உனக்கு இப்போ இருக்கிறது பயம்…

பயம் எந்த காலத்திலும் ஒரு நல்ல குடும்ப வாழ்க்கைக்கு அடிப்படையா இருக்க முடியாது…இருக்கவும் கூடாது…”உறுதியுடன் கூறினான் பிரபஞ்சன்.

“…”

“ஒரு ஆண் காதலே இல்லாம வெறும் உடல் தேவைக்கு மட்டும் ஒரு பெண்ணை நாடினா…அதுக்கு பேர் என்ன தெரியுமா?”என்று கேட்டவன் சில வினாடிகள் மௌனம் காத்து அவளின் உள்ளத்து அதிர்வுகளை உணர்ச்சிகளாக அவள் முகத்தில் பிரதிபலித்த  பின் மீண்டும் தொடர்ந்தான்.

“என் மனைவியையும்,அவள் என் மேல் வைத்திருக்கும் காதலையும் எந்த ஒரு நிலையிலும் நான் அசிங்கப்படுத்த மாட்டேன்”என்று கூறியவன் அவளின் பிரமித்த பார்வையை கண்டும் காணாதவன் போல தொடர்ந்து பேசினான்.

“கொஞ்ச நேரம் தூங்கி எழுந்திரு…மனசு தெளிவாகும்” என்று கூறி விட்டு அவன் வெளியேற சங்கமித்ராவின் முகத்தில் இருந்த குழப்ப ரேகைகள் ஒவ்வொன்றாக குறையத் தொடங்கியது.அடுத்து என்ன செய்ய வேண்டும் என்ற தெளிவான முடிவை எடுத்தவள் கணவனின் வருகைக்காக காத்திருக்கத் தொடங்கினாள்.

சிற்பம் செதுக்கப்படும்…

Facebook Comments Box
What’s your Reaction?
+1
4
+1
0
+1
2
+1
0
+1
0
+1
0
+1
0

2 COMMENTS

  1. Madhu nice ud da oru vazhiya mithra mudivu ku vandhuta unmaiyave athu thelivana mudivu thana waiting eagerly for next ud pa

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here