அன்பே சிவம்

0
89

அந்த பகுதியே சோகத்தில் மூழ்கி இருந்தது. எங்கு காணினும் ஓலம் ஒப்பாரி தான். காரணம் ஒரு மரணம்.

ஒருவரின் மரணத்திற்கு ஊரே ஒப்பாரி வைக்கிறதா என்றால், ஆம், அவர் அந்த பகுதியில் அவ்வளவு பிரசித்தமானவர், அத்தனை பேராலும் நேசிக்கப்பட்டவர்.

சின்ன குழந்தை கூட செல்லக்கண்ணு ஐயா வீட்டிற்கு வழி கேட்டால் சொல்லிவிடும். அதற்கு காரணம் அவர் அந்த பகுதியில் யாருக்கு எந்த சந்தர்ப்பமென்றாலும் முன் நின்று உதவுவார்.

அதிகாலையோ, அர்த்தராத்திரியோ எந்த நேரமும் தயங்காமல் அவர் வீட்டு கதவை தட்டுபவர்கள் உண்டு. எந்த சமயமானாலும் முகம் சுளிக்காமல் உதவுவார். அது மட்டுமல்லாமல் அந்த சுற்றுவட்டாரத்தில் வாகன விபத்து, தீவிபத்து, இயற்கை பேரிடர் என்று எதற்கும் முன் நிற்பவர், அந்த பகுதி இளைஞர்களையும் அதற்கு துணை சேர்த்து கொள்வார். இதனாலேயே அந்த பகுதி மக்களிடையே பிரபலமாக இருந்தார்.

இத்தனைக்கும், முன்போரு காலத்தில் அந்த ஊருக்கு முதல் எதிரியென்றால் அவர் தான். வசதியில் வலியவர் அதனால் வந்த செருக்கில் அவர் ஆடிய ஆட்டம் அவருக்கு பலருடைய வெறுப்பை வஞ்சனையின்றி சம்பாதித்து தந்தது. பணம் பத்தும் செய்யும் என்ற எண்ணம் அவரை யாருக்கும் மரியாதை தர அனுமதிக்கவில்லை.

இப்படி தான் என்ற அகந்தையோடும், ஆணவத்தோடும் வளைய வந்தவர், அத்தனை பேரின் வெறுப்பையும், சாபத்தையும் சம்பாதித்தவர் இன்று மக்களின் மனிதனாக மாறியதற்கு காரணமும் ஒரு மரணம் தான்.

அவர் மனைவியின் மரணம்.

செல்லக்கண்ணு அய்யாவுக்கு தன் மனைவி மீனாட்சி என்றால் உயிர். ஆனால் மீனாட்சியின் உயிருக்கு ஒரு சிறிய விபத்து உலை வைத்தது.

அந்த பகுதி மக்களிடையே மீனாட்சிக்கு நற்பெயர் இருந்தது. அவர் எல்லோரோடும் பாகுபாடின்றி பழகி வந்தார். அப்படி ஒரு சமயம் தெருவில் விளையாடிக்கொண்டிருந்த குழந்தையை காப்பாற்ற போய் மீனாட்சி விபத்துக்குள்ளானார்.

தன் மனைவியின் நிலையை கண்டு தன் உயிர்நாடியே அறுந்தது போல தளர்ந்து போனார் செல்லக்கண்ணு.

பெரும் பணம் செலவு செய்தும், போராடியும் சிகிச்சைபலன்றி மீனாட்சி இயற்கை எய்தினார்.

மீனாட்சி மரணபடுக்கையில் போராடிய போது தான் செல்லகண்ணுக்கு நிதர்சனம் உறைத்தது. தன்னை கிஞ்சித்தும் சீண்டாத மக்கள் தன் மனைவிக்காக மெனக்கெடுவதையும், ப்ராத்திப்பதும், அவர் பொருட்டு தனக்கும் உதவுவதையும் கண்டு அவரது செருக்குற்ற மனம் சிந்திக்கலானது.

மீனாட்சி தன் இறுதி நிமிடங்களில் தனக்கு உதவியாக அருகில் இருந்த அந்த பகுதியை சேர்ந்த பொண்ணம்மாவிடம் தனக்கு பின் தன் கணவரின் நிலையை எண்ணி வருந்துவதாகவும், அவரை கவனித்துக்கொள்ளும் படியும் வேண்டினார்.

இறந்த மீனாட்சியின் உடலை வெறித்து பார்த்த படியே செல்லக்கண்ணு அமர்ந்திருக்க அவரை தொந்தரவு செய்யாமல் அந்த பகுதி மக்களே எல்லா பொருப்பையும் ஏற்று மீனாட்சியை நல்லடக்கம் செய்தனர்.

நாட்கள் நகர்ந்து செல்லக்கண்ணு மீளத்துவங்கியதும் தான் சேர்த்த பெரும் பணம் தனக்கு எந்த வகையிலும் உதவாததை உணர்ந்தார். அதேபோல, தான் வெறுத்து ஒதுக்கிய அந்த பகுதி மக்கள் தன் மனைவியின் ஒற்றை வேண்டலுக்கு மதித்து தனக்கு உறுதுணையாக நின்றதையும் உணர்ந்தார்.

அன்று முதல் அகத்தின் அழுக்குகள் களைந்து, செருக்கு, ஆணவம், அகந்தை எல்லாம் ஒழித்து தன்னை பரோபகாரியாக மாற்றிக் கொண்டார்.

அதன் காரணம் அந்த பகுதி மக்களின் மனதின் பெரும் இடம் பெற்றார். அத்தனை பேரும் அன்போடு அப்பா என்று அழைக்கும் அளவுக்கு அவர்களோடு ஒன்றிப்போனார்…

பணம், பதவி, அதிகாரம் எது நிறைய இருந்தபோதும் அன்போன்றே அனைவரையும் ஈட்டு தருமென்ற உண்மை உறைக்கப்பெற்றார். பணத்தை வாரி வாரி இரைத்த போது கிடைக்காத அமைதியும் நிறைவும் பரோபகாரத்தில் கிடைக்கபெற மகிழ்ந்தார்.

அதனால் தன் அசையும் அசையா சொத்துக்களை ஒரு அறக்கட்டளை தொடங்கி அதற்கு அந்த பகுதி மக்களையே நிர்வாகிகளாகவும் உறுப்பினராகவும் இணைத்து மக்கள் சேவை செய்ய தொடங்கினார்

நிறைவான வாழ்வு வாழ்ந்தவரின் ஆன்மா தூக்கத்திலேயே விடைபெற, இன்று அவருக்காக கண்ணீர் சிந்தும் மக்கள் கூட்டத்திற்கிடையில் அவர் பணத்தை அனுபவித்த ஒருவரும் இல்லை…..

Facebook Comments Box
What’s your Reaction?
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here