எண்ணத்தின் ஓசைகள்….

0
153

ஒழுக்கத்திற்கும் கல்விக்கும் பேர்போன கோயம்புத்தூரில் புகழ்பெற்ற கல்லூரி வளாகம் பரபரப்பாக இயங்கிக்கொண்டிருந்தது ஆம் அன்று சென்னை போன்ற பெருநகரங்களில் உள்ள புகழ் பெற்ற நிறுவனங்களில் இருந்து கேம்பஸ் இன்டெர்வியூ செலெக்சன் நடந்துகொண்டிருந்தது.

இறுதியாண்டு படிக்கும் ஒவ்வொருவரும் தங்களது எதிர்காலத்தை நோக்கி பயணப்பட்டுக் கொண்டிருக்கின்றனர் முதல் சுற்று முடிந்து தேர்வாகியவர்கள் அனைவரும் நேர்முகத்தேர்வுக்காக காத்திருக்க நம் கதையின் நாயகி வான்முகிலும்அவளது நெருங்கிய தோழிகளான ஷாமிலி,சுதாவுடன் காத்திருந்தாள்..

முகில் அவள் போக்கில் அமர்ந்திருக்க சுதா,”ஏண்டி உனக்கு கொஞ்சமாச்சும் பயம் இருக்கா நீ பாட்டுக்கு அமைதியா இருக்க”

முகில்,”நீ வேற ஏண்டி அதெல்லாம் டன் கணக்குல இருக்கு மூஞ்சில காட்டல அவ்ளோ தான்.. உள்ளுக்குள்ள பக்கு பக்குன்னு இருக்கறது எனக்கு தானே தெரியும்”

சுதா,”நம்ம 3 பேரும் ஒரே கம்பெனிக்கு செலக்ட் ஆகி போனா நல்லா இருக்கும்ல”

ஷாமிலி,”ஆமாண்டா.. செம்ம ஜாலியா இருக்கும்”

முகில்,”முதல்ல செலக்ட் ஆவோம் அப்பறம் பாப்போம்”

சுதா,”அதுவும் சரிதான்.. போய் பைனல் இன்டெர்வியூவை முடிப்போம்”

வாழ்க்கையில் முதல் முதல் அடியை எடுத்து வைக்கும் அனைவருக்கும் உண்டான பரபரப்பு மூவருக்குள்ளும்.. இன்டெர்வியூக்கான அழைப்பு வர ஒருவர் பின் ஒருவராக இன்டெர்வியூ முடித்து வந்து ஆரத்தழுவி விடைபெற்று கொண்டனர் ஆமாம் இன்டெர்வியூ அவர்களின் இறுதித்தேர்வுக்கு அடுத்த நாளன்று தான்..

நடுத்தர குடும்பத்தைச் சேர்ந்த ராகவன் உமா தம்பதியினரின் மகள் தான் வான்முகில்.. அவளுக்கு வேலை என்பது மிக முக்கியமான ஒன்று அது கிடைப்பதற்காக பிரயத்தனப்பட்டே நேர்முகத்தேர்வை முடித்திருந்தாள் எப்படியும் வேலை கிடைத்துவிடும் என்ற நம்பிக்கை அவளுக்கு..

அடுத்தடுத்த சில வாரங்களில் இன்டெர்வியூ செய்த நிறுவனத்தில் இருந்து கால் மற்றும் மெயில்கள் அவள் தேர்வான செய்திகளை தாங்கிகொண்டு வர அவளுக்கும் அவளது குடும்பத்திற்கும் மிக்க மகிழ்ச்சி மேலும் அவளுக்கோ இது சிறகை விரிப்பதற்கு அழகான வாய்ப்பு..

முகிலுடன் சுதாவும் தேர்வாகியிருக்க ஷாமிலி அவளது பெற்றோரின் ஆசைப்படி மேற்படிப்பை கையில் எடுத்திருந்தாள்..

குறிப்பிட்ட தேதியில் அவளுடன் அவளது குடும்பமும் பயணப்படுகிறது அவள் தேர்வான நிறுவனத்திலிருந்து கொஞ்சம் தொலைவில் அவளது அண்ணன் யோகன் இருக்கிறான் என்பதாலேயே பெற்றவர்களுக்கோ பாதுகாப்புக்கு மகன் இருக்கிறான் என்ற நம்பிக்கை.

இதோ அந்த நாளும் வந்துவிட்டது குடும்பமாக அந்த நிறுவனத்தில் அவளை சேர்த்துவிட்டு அந்த நிறுவனமே மகளிர்க்கான விடுதியை அமைத்திருக்க விடுதியின் பாதுகாப்பையும் உறுதிசெய்துவிட்டு அவளுக்கும் சுதாவுக்கும் ஆயிரம் பத்திரம் சொல்லிவிட்டு புறப்பட்டனர் இருவரது குடும்பத்தினர்…

முதல் நாள் ஆர்வத்தோடு கம்பெனியில் நுழைந்த சுதாவும் முகிலும் அவர்களுக்கென்று காட்டப்பட்ட அறையில் அமர்ந்திருக்க உடன் வெவ்வேறு கல்லூரிகளில் தேர்வாகியவர்களும் அமர்ந்திருந்தனர்..

ஒருவார கால அவகாசத்தில் அவர்களுக்கு முறையான பயிற்சிகள் கொடுக்கப்பட்டு தனித்தனி பிரிவுகளுக்கு தேர்வாயிருந்தனர்.

இதிலும் சுதாவுக்கும் முகிலுக்கும் ஒரே பிரிவே கிடைத்து இருந்தது ஆனால் வெவ்வேறு ஷிப்ட்கள் என்று அவர்களுக்கு ஒதுக்கப்பட்டு இருந்தது..

பயிற்சி வகுப்பு முடிந்து முதல் நாள் காலை ஷிப்ட்டில் வந்திருக்க அவளுக்கான டீமை நோக்கி அவள் செக் அவளை வரவேற்றது டீம் லீட் கேபின்..

மரியாதை நிமித்தமாக அவள் கதவை தட்ட,”எஸ் கம் இன்” என்ற கம்பீரமான குரல் ஒலித்தது..

அவளோ மனதிற்குள்,”அய்யோ டெரர் பீஸ் கிட்ட மாட்டிக்கிட்டோம் போலயே” என்ற எண்ணத்துடன் உள்ளே நுழைந்தாள்..

உள்ளே அவளை வரவேற்றது நம் கதையின் நாயகன்,இனியன் ராஜா மற்றும் மகேஷ்வரி தம்பதியரின் மகன் அவனுக்கு ஒரு அக்கா பிரியா அவர்களுக்கு திருமணம் முடிந்து இருந்தது.. அவர்களும் நடுத்தர வர்க்கத்தை சேர்ந்தவர்களே..

இனியன்,”வெல்கம் மிஸ் வான்முகில்.. ஐயம் இனியன் டீம் லீட் ஆப் யுவர் ப்ரொஜெக்ட்..” என்று அவளை அமருமாறு சைகை செய்தான்…

முகிலோ குரலை வைத்து வயதானவர் என்று தீர்மானித்திருக்க உள்ளே ஓர் இளம் காளையை கிஞ்சித்தும் யோசித்து பார்க்கவில்லை…

இனியன் மாநிறம் ஆளுமையான தோற்றம் கொண்ட 6 அடி ஆண்மகன் அவனது பேச்சிலும் ஆளுமையுளும் தலைமை பண்பிற்கு மிகவும் பொருத்தமானவன் என்றே தோன்றும்..

அவளை வரவேற்று அவளுக்கு ஒதுக்கப்பட்ட வேலைகள் அதை எவ்வாறு செய்ய வேண்டும் என்பதையும் சொல்லிக் கொடுத்தான்..

அவள் விரும்பி ஏற்றுக் கொண்ட வேலை ஆதலால் அவன் சொல்லிக் கொடுத்த அனைத்தையும் விரைவிலேயே கற்றுக்கொண்டாள்,இதற்கிடையில் அவனின் ஆளுமையையும் அவனையும் ரசிக்க மறக்கவில்லை.. அவளை பொறுத்தவரை சைட் அடிப்பது தவறில்லை ஆனால் அவளே அவனுடன் காதல் வயப்படுவாள் என்பதே அவளே அறியாத ஒன்று..

முகிலின் குடும்பம் அவ்வளவு பழமைவாதிகள் இல்லையெனினும் இன்னும் சில குடும்பங்கள் பெண் பிள்ளைகளுக்கு என்னதான் சுதந்திரம் கொடுத்தாலும் அவர்களே மணவாழ்வை தேர்ந்தெடுக்கும் உரிமையை கொடுக்கமாட்டார்கள் அந்த ரகத்தை சேர்ந்தவர்கள் தான் அவர்கள்..

ஒரு நாள் ரூமில் முகில் சுதாவிடம்,”ஹே என் டீம் லீட் செமையா இருக்காங்கள்ள டீ”

சுதா,”என்னடி ஆளு ஒரு மார்க்கமா இருக்க.. உங்க வீட்டுக்கு தெரிஞ்சுது அவ்ளோ தான் டீ”

முகில்,”அழகை ஆராதிக்கலாம் தப்பில்லை”

சுதா,”ம்க்கும் இந்த டயலாக்குக்கெல்லாம் ஒன்னும் குறைச்சல் இல்லடி உன்கிட்ட”

முகில்,”உனக்கு என்னடி சொந்தத்துலயே ஆளு இருக்காங்க அப்படி தான் பேசுவ நீ.. என்ன மாதிரி சிங்கிள்ஸ் நிலைமை உனக்கெங்க புரிய போகுது”

சுதா,” நீ பேசரத பாத்தா சிங்கில்ஸ்ல இருந்து மிங்கில்ஸ் ஆக ரெடியா இருக்க மாதிரி இல்ல தெரியுது”

முகில்,”அட நீ வேற ஏண்டி.. இப்போதைக்கு சைட் அடிப்போம் சந்தோஷமா இருப்போம் அவ்வளவு தான் நம்ம கொள்கை”

சுதா,’ மிக உயர்ந்த கொள்கை டி’ என்க முகிலோ அவளை அணைத்து,’ நண்பி டி என்றாள்..’

இருவரும் சற்றே கலகலப்பானவர்கள் தான் நாட்களும் அதன் போக்கில் நகர தோழிகள் இருவரும் ஒரே ஷிப்ட்டில் வர தொடங்கினர்..

இனியனிடமும் சற்றே நெருக்கமாக பழக தொடங்கியிருந்தனர்..வேலையை தாண்டி சற்றே நட்பு ரீதியான தொடர்பு..
சுதா இனியனை அண்ணா என்றே அழைப்பாள்.. முகில் தற்போதெல்லாம் இனி என்று அழைக்க ஆரம்பித்திருந்தாள்..

நாட்கள் அதன் போக்கில் நகர இதோ அவர்கள் பணியில் சேர்ந்து எட்டு மாதம் முடிந்திருந்த நிலையில் வேலையை திறம்படவே கற்றிருந்தார்கள்..

வார இறுதி நாட்களிலெல்லாம் சுதா அவள் மாமாவுடன் வெளியே செல்ல முதலில் தனித்து இருந்த முகில் தற்போது இனியனுடன் சென்னையை சுற்றி பார்க்க தொடங்கியிருந்தாள்..

நட்புக்கும் மேலான ஒரு உணர்வு எழும்போதெல்லாம் குடும்ப சூழலை எண்ணி அமைதியாகி விடுவாள்..

இனியன் பல்வேறு பிரிவுகளில் வேலை செய்தவன் அதில் சில பெண்கள் இவனின் ஆளுமையில் மயங்கி காதலை சொல்லியதும் உண்டு அவர்களிடம் விருப்பமில்லை என்பதை நாசூக்காக கூறி விலகி விடுவான்..

அதற்கு மேல் நெருங்கும் சிலரிடம்,’ எனக்கு லைப் பார்ட்னரா வரவங்க கிட்ட எனக்கு மட்டும் உரிமையான காதல் இருக்கணும் அவளோட காதல் அவ கண்ணுல தெரியணும் எவ்வளவு சண்டை போட்டாலும் அதோட முடிவுல காதல் தான் ஜெயிக்கணும் எங்களோட ஈகோ இல்ல.. இந்த மாதிரி ஒரு துணை தான் எனக்கு வேணும்.. ‘ என்று இனியன் தன் மனதை திறக்க அவர்களோ இது என்ன பைத்தியகாரத்தனம் என நினைத்து விலகியவர்களும் உண்டு..

இனியனின் எதிர்பார்ப்பு காதலிக்க ஒரு பெண் அல்ல.. காலம் முழுதும் தொடரும் ஒரு பந்தம் காதலையும் அன்பையும் ஒரு சேர அணுவணுவாக உணர செய்யும் ஒரு துணை அதன் பொருட்டே அவன் காத்திருக்கிறான்..

நாட்கள் செல்ல செல்ல இனியனுக்கும் முகிலுக்குள்ளான உறவில் நட்பை தாண்டிய ஒரு உணர்வு ஆனால் அது காதல் தான் என்று இன்னும் வரையறுக்க படவில்லை.. அதிகப்படியான புரிதல்கள், செல்ல சண்டைகள், ஒருவர் தேவையை கூறாமலேயே மற்றவர் புரிந்து நடக்கும் பாங்கு இந்த அளவுக்கு முன்னேறியிருந்தனர்..

இப்போதெல்லாம் இனியன் வேலையை தவிர மற்ற பெண்களுடன் பேசும் போது முகிலுக்குள் பத்தி கொண்டு வரும்.. சில சமயங்களில் இனியனுடன் சண்டைகள் சண்டையை தொடர்ந்து சில நாட்கள் மௌன விரதம் அதை அவன் சமாதான படுத்தும் போது தாயிடம் கெஞ்சும் சேயாகி போவான் இனியன்..

அவனுடைய செயலில் அவளை அறியாமலேயே அவள் மனம் காதலில் விழ, காதல் என்று தெரிந்தும் நட்பு என்ற போர்வைக்குள் அடக்க துடிக்கிறாள் அவள்….

இது அனைத்தும் அறிந்த அவளது தோழி சுதா முகிலிடம்,”என்னாச்சு முகில்.. நீ இனியன் அண்ணாவை லவ் பண்றியா” என கேட்டாள்..

முகில்,” சச்ச..அப்படி எல்லாம் ஒன்னும் இல்ல.. நாங்க கொஞ்சம் க்ளோஸ் அவ்ளோ தான்”

சுதா,”எப்படி அண்ணா மத்த பொண்ணுங்க கிட்ட பேசுனாவே கோவபடற அளவுக்கு க்ளோஸ் ஓ” என்றாள் நக்கல் தொனியுடன்
முகில் அமைதியை கையிலெடுக்கே சுதா மேலும் பொறிய ஆரம்பித்து நட்புக்கே உண்டான சில அறிவுரைகளில் முடித்தாள் அவள்..

சுதாவின் கூற்றை மெய்யாக்கும் வண்ணம் அடுத்த நாளே வழக்கம் போல் கால் செய்ய அதை அட்டன்ட் செய்த முகில்,”சொல்லு இனி”

இனியன்,”பேபி… உன் கிட்ட கொஞ்சம் பேசணும்… பேசலாமா??”

முகில்,”என்னடா பீடிகை எல்லாம் பலமா இருக்கு.. அப்படி என்ன கேக்க போற”

இனியன்,” என்ன உனக்கு புடிக்குமா பேபி.. ஏன் நான் மத்தவங்க கூட பேசுனா உனக்கு கோவம் வருது”

முகில்,” இந்த கேள்வியை நீ எதுக்காக கேக்கற.. என்னால தான் மத்தவங்க கூட பேசமுடியாம இருக்கயோ.. போ போயி மத்தவங்க கூட பேசு ஆனா என் கிட்ட பேசாத”என்று கால் கட் செய்தாள்..

இனியன் மீண்டும் அழைக்க அவள் எடுக்கவில்லை.. அவன் பலமுறை அழைத்த பிறகே அவள் எடுக்க அவள் எடுத்தவுடன்,” ஹே லூசு என்ன பேசறேன்னு கேக்கவே மாட்டியா.. அதுக்குள்ள அவக்கூட பேசு இவ கூட பேசுனு நீ பாட்டுக்கு கட் பண்ற…உன்னையெல்லாம் வச்சுட்டு காலம் பூரா எப்படி சமாளிக்க போறனோ” என்று அவளின் நிலை அறிந்து அவன் கேட்டான் இவ்ளோ பொஸிஸிவ்ல உண்மையை சொல்லி விடுவாள் என்ற நம்பிக்கை..

அவனின் நம்பிக்கை பொய்க்கவில்லை அவளோ,”உன் தலைல காலம் பூரா இது தான்னு எழுதி இருந்தா நான் என்ன செய்ய” என்றாள் முகில்..

அதற்கு பின் இருமுனையிலும் மௌனம் காதலை சுமந்து கொண்டு…காதல் என்ற ஒற்றை வார்த்தை உதிர்க்காமலேயே இருமனங்கள் காதலை பரிமாறிக்கொண்ட உன்னத தருணம்…

அதை கேட்ட இனியனுக்கு மகிழ்ச்சி சில நிமிடங்கள் கூட நிலைக்கவில்லை அதற்குள் முகில்,”உனக்கு கல்யாணமே ஆனாலும் நான் இதே மாதிரி தான் டார்ச்சர் பண்ணுவேன்” என்க இப்போது கால் கட் செய்வது அவனின் முறையானது..

மீண்டும் சில நாட்கள் செல்ல இனியன் அவளிடம் பெரிதாக பேசிக்கொள்ளாவிட்டாலும் அவளுக்கு தேவையான ஒவ்வொன்றையும் பார்த்து பார்த்து செய்து வந்தான்..

ஒருநாள் அனைவரும் காலை பிரேக்பாஸ்ட்க்கு செல்ல அவள் அவளது சீட்டிலியே அமர்ந்துவிட்டாள் மாதவிடாய் பிரச்சனை காரணமாக கடும் வயிற்றுவலியில் துடித்துகொண்டிருந்தாள்..

அதுவரை அவளை கவனிக்காத இனியன் கேன்டீனுக்குள் நுழையும் போது அவளை தேட அவள் இல்லாமல் போகவே மற்றவரிடம் கேக்க அவள் டீமில் உள்ள ஒருவன்,”முகில் சீட்ல தான் இருக்கா ப்ரோ போயி பாருங்க ” என்றான்..

அவளை தேடிச்சென்ற இனியன் அவள் சீட்டில் கவிழ்ந்து படுத்திருக்க அவளிடம் சென்று ,”முகில் என்னாச்சு டி எழுந்திரு” என்றான்..

முகில் வலியினூடே நிமிர்ந்து பார்க்க அவள் முகத்தில் வலியின் சாயல் கண்ணில் அப்பட்டமாக தெரிய, அமர்ந்திரந்த அவளை தன்னோடு சாய்த்து பிடித்தவன் அவளுக்கு தண்ணீர் குடுத்து பருகச்செய்தான் அந்த நொடி அவளுக்கு தாயுமாகி போனான் அவன்….

காதல் ஒருவனை இந்த அளவிற்கு பித்தாக வைத்திருக்கும் என்பதற்கு இனியனே ஆக சிறந்த உதாரணம்..

முகில் அவனை விலக்க விலக்க இனியனோ அவனின் செயல்களாலேயே அவளுள் நெருங்கினான் ஒரு தந்தையை போல் அரணாகவும் தாயை போல் அன்பாகவும் பார்த்துக்கொள்வான்..

காதல் சொல்களால் அல்ல செயல்களால் என்று மெய்பித்த பித்தன் அவன்…

பெண்களுக்கு கணவனை பற்றிய அதிகபட்ச எதிர்பார்ப்பே கணவன் தன் தந்தையைப்போல் பார்த்துக்கொள்ளவேண்டும் என்பதே அந்த விஷயத்தில் முகில் அதிர்ஷ்டசாலி தான்..

முகில் குழப்பநிலையில் இருக்க அந்த சமயம் வேலை நிமித்தமாக புனே செல்ல ஆயத்தமானன் இனியன்.. அவனுக்கோ இந்த பிரிவு ஏதோ ஒரு முடிவை எடுக்க உதவும் என்று நம்பினான்..

அவனின் நம்பிக்கை பொய்க்கவில்லை இனியனும் புனே சென்றவன் மெசேஜில் பேசிக்கொண்டானே தவிர கால் செய்யவிவில்லை பணி நிமித்தமாக சற்றே பிஸியாகி போனான் அவன் புனே சென்று 4 நாட்கள் ஆயிருக்க அப்போது தான் அவனுக்கு கால் செய்திருந்தாள் முகில்..

முகில் கால் செய்தவள் விடாமல் விசும்பி கொண்டிருக்க இனியனோ,”ஹே செல்லம் எதுக்குடி அழுகர சொன்னா தானே தெரியும்”

முகில்,”போடா என் கூட பேசாத.. நீ அங்க போன உடனே என்ன மறந்துட்டல்ல”

இனியன்,”இல்லடா கொஞ்சம் ஒர்க்ல பிஸியாகிட்டேன்… அதுவுமில்லாம நீ பேசலையா அதான் நானும் நீ கோவமா இருக்கையோனு நினைச்சுட்டேன்”

முகில்,”அப்போ நான் கோவமா இருந்தா நீ பேசமாட்டியா??”

இனியன்,”இது என்னடி கேள்வி நீ எப்படி இருந்தாலும் நான் உன்ன விட்டு போகமாட்டேன் நீதான்டி என் உயிர்.. ஐ லவ் யூ செல்லம்”

முகில்,”ஏண்டா நீ என்ன இவ்ளோ லவ் பண்ற.. அதுக்கெல்லாம் நான் ஒர்த் இல்லடா.. எங்க வீட்ல அதுக்கெல்லாம் ஒத்துக்கமாட்டாங்க டா”

இனியன்,”உன் மனசுக்கு என்ன தோணுதுனு மட்டும் சொல்லுடி.. காதலிக்கற எல்லாரும் ஈஸியா சேர்றது இல்ல போராடி தான் ஜெயிக்கணும்”

முகில்,”என் மேல இவ்ளோ பைத்தியமா இருக்க அளவுக்கு நான் என்னடா உனக்கு பண்ணேன்”

இனியன்,” நான் மத்த பொண்ணுங்க கூட பேசறதுக்கே, நீ என்ன யாருக்கும் விட்டுக்குடுக்க முடியாம என் கூட சண்டை போட்ற அந்த அளவுக்கு என் மேல அன்பு வச்சுருக்கையே அது போதாதா டி”

முகில்,”அப்போ இதெல்லாம் உனக்கு டார்ச்சரா இல்லையா.. உன் இடத்துல மத்தவங்க இருந்தா எப்படா இவ தொலையுவானு நினைச்சுறுப்பாங்க”

இனியன்,”மத்தவங்கள பத்தி எனக்கு தெரியாது.. எனக்கு அந்த இடத்துல உன்னோட அன்பு மட்டும் தாண்டி தெரிஞ்சிது.. நீ என்ன நல்லா பாத்துப்பணும் தெரியும்…”

முகில்,”ஐ லவ் யூ டா” என்று முதல்முறை அவனிடம் உரைத்தாள்..

அவள் குடும்பத்தை பற்றி தெரிந்தும் நடக்க போகும் விபரீதம் அறியாமல் காதலை மொழிந்துவிட்டாள் முகில்…

இனியன்,” சோ ஸ்வீட் டார்லிங்…உன்கிட்ட இருந்து இந்த வார்த்தை வரதுக்குள்ள நான் ஒரு வழியாகிட்டேன்டி..”

அவனே தொடர்ந்து முகிலிடம்,”உனக்கொரு உண்மை சொல்லட்டா பேபி, எல்லாரும் பையன் கிட்டதான் பொண்ண நல்லா பாத்துக்கோன்னு சொல்லுவாங்க.. ஆனா உண்மையில் பசங்களைவிட பொண்ணுங்க தான் புருஷனை நல்லா பாத்துக்குவாங்க ஆனா இந்த உண்மையை புரிஞ்சவங்க இங்க கொஞ்சம் பேர் தான்.. அந்த விதத்துல நான் ரொம்ப லக்கி டி நீ கிடைக்க”என்றான் பெருமை பொங்க..

முகில் போடா உன்ன நான் பாத்துக்க மாட்டேன்னு சிணுங்க.. இனியனோ நீ மட்டும் தான் பேபி என்ன கண் கலங்காம பாத்துக்குவ என்றவன் மேலும்அவளை சீண்டி சில விஷயங்களை பேசி விட்டே வைத்தான்..

பதினைந்து நாட்கள் புனேயில் நெட்டி முறித்தவன் அவளை மீண்டும் சந்திக்கும் நாளுக்காக காத்திருந்தான்..

இதோ அந்த நாளும் வந்துவிட்டது காதல்பறவைகள் ஒன்றுக்கொன்று சந்தித்துக்கொள்ளும் தருணம் நொடியும் வந்துவிட்டது..

இருவரும் காபி ஷாப்பில் எதிரெதிரில் அமர்ந்திருக்க,முகிலின் காதலை அவள் கண் உரைக்க இனியனை இமைக்காமல் பார்த்து கொண்டிருந்தாள்..

சிறு புன்னகையினூடே இனியனே தொடங்கினான்,”அப்பறம் பேபி என்ன இப்படி வெறிக்க வெறிக்க பாத்துட்டு இருக்க”

முகில்,”சும்மா தான் பாத்து ரொம்ப நாள் ஆயிடுச்சுல்ல அதான்..”

தற்போது தான் காதலர்கள் ஆயிற்றே ஆதலால் பல விஷயங்களை பேசிவிட்டே அவ்விடமிருந்து சென்றனர்..

நாட்கள் அதன் போக்கில் செல்ல இருவரும் ஒருவருக்கொருவர் காதலை வேரூன்றி வளர்த்தனர்..

இடையிடையில் சில செல்ல சண்டைகள் இருக்கும், அத்தனை சண்டைகளும் ஒருவரை மற்றொருவர் பாத்துக்கொள்ளும் வரை தான்..

துளியும் ஈகோ இல்லாத புரிதல் இருவருக்குள்ளும்.. அவர்கள் கொண்ட காதலின் மேல் அத்தனை பைத்தியம் அவர்களுக்கு அதனாலேயே என்னவோ ஒருவரை ஒருவர் எப்போதும் விட்டுக்கொடுத்ததில்லை..

கால சக்கரம் அதன் போக்கில் சுழல இதோ இன்றோடு அவர்கள் காதலிக்க தொடங்கி 4 ஆண்டுகள் முடிந்திருந்து…

முகிலின் வீட்டில் அவளது திருமணபேச்சை எடுக்க தொடங்கியிருந்தனர்.. வீட்டில் இந்த பேச்சு ஆரம்பிக்கும் போதே இனியனுடனான அவள் காதலை பற்றி சொல்ல அங்கே ஆரம்பமானது பூகம்பம்..

அதே சமயத்தில் இனியனும் காதலை அவனது வீட்டில் கோரியிருந்தான்.. பெரும்பாலும் ஆண் பிள்ளைகளின் வீட்டில் காதல் திருமணத்திற்கு எந்த எதிர்ப்பும் பெரிதாக இருக்காது அதே போல் தான் இனியன் வீட்டிலும் அவனது காதலில் அவர்களுக்கு சிறிது வருத்தம் இருந்தாலும் மகனின் ஆசைக்கிணங்க ஏற்றுக்கொண்டனர்..

அடுத்தடுத்து வந்த தினங்களில் முகிலின் வீட்டில் அவளுக்கு மூளை சலவை செய்ய ஆரம்பித்திருந்தனர்..

அவர்களை பொறுத்தவரை சாதி,அந்தஸ்து இது போன்ற மூகமூடிகளை அணிந்து இரு மனங்களையும் கணிக்க தவறினர்..

முகில் பிடிவாதமாக இருக்க அவளின் பெற்றோர் உணர்வுபூர்வமாக அவளை மனமாற்றம் செய்ய தொடங்கினர்…
ஒரு கட்டத்தில் நீ காதல் திருமணம் செய்ய நேர்ந்தால் நாங்கள் இறந்துவிடுவோம் எண்ணுமளவிற்கு சென்றிருந்தனர்..

முகிலின் போறாத காலம் அவளது அண்ணன் கூட அவளுக்கு துணை நிற்கவில்லை.. பாவம் பேதையவள் அறியவில்லை காதலுக்காக இத்தனை போராடவேண்டி இருக்கும் என்று..

அவள் அழுது கரைந்து போராட ஒரு கட்டத்தில் அவர்களது பெற்றோர் தற்கொலை என்னும் ஆயுதத்தை கையில் எடுக்க அவள் நிராயுதபாணியாய் நின்ற தருணம்..

அதை உபயோக படுத்திக்கொண்ட அவளின் பெற்றோர் அவளின் தொலைபேசியிலிருந்தே அவனை அழைத்து அவனை வேண்டாம் என்று சொல்ல சொல்லி வற்புறுத்தி அதை செய்திருந்தனர்…

இதற்கிடையில் பணிமாற்றம் காரணமாக இனியன் வேறு இடம் சென்றிருந்தான் அவன் எவ்வளவு முயன்றும் அவள் மனதை மாற்ற முடியவில்லை காதல் எத்தனை பெரிய பைத்தியகாரத்தனம் என்று அப்போதே உணர்ந்திருந்தான்..

முகிலோ தன் குடும்பத்தை மீறி தன்னால் எதுவும் செய்ய இயலாது என்பதை திட்டவட்டமாக கூறியிருந்தாள்..

இறுதி முறையாக இனியன் முகிலின் வீட்டை அணுக அவர்களோ என் பொண்ணுக்கு பெரிய இடத்து மாப்பிள்ளைக்கு தான் கட்டிகுடுப்போம் நீங்க உங்க ஆளுங்களா பாத்து போய்க்கோங்க என்று மூஞ்சிலடித்தார் போல் பேசி அனுப்பிவிட்டனர்..

அந்த சம்பவத்திற்கு பிறகு முகில் அவர்கள் குடும்பத்தினரிடமிருந்து விலக ஆரம்பித்து விட்டாள்..

அவர்களும் எங்கே வேலைக்கு அனுப்பினால் ஓடிபோய்விடுவாளோ என்றெண்ணி வேலையையும் விடவைத்தனர்..

அவள் வாழ்க்கை மற்றும் கேரியர் கனவு இரண்டையும் தூள் தூளாக தகர்த்தெறிந்தனர் முகிலின் வீட்டினர்..

முகிலுக்கு அவளது தந்தை என்றால் உயிர் அவருக்கும் அவளின் மீது எண்ணற்ற பாசமே முதலில் அவர் சம்மதிக்க நினைத்தபோதும் அவளது தாய்வழி சொந்தங்களால் அவரும் அவளை புரிந்துகொள்ளவில்லை அதுவே அவளுக்கு பேரிடியாய் ஆனது…

ஒரு பக்கம் காதலை விட முடியாது ஒரு பக்கம் குடும்பத்தினரையும் விடமுடியாது கையறு நிலையில் அவள்..

அவள் காதலை பைத்தியாக்காரத்தனம் என தூற்றும் ஒவ்வொருவருக்கும் பதில் சொல்லாமல் புறக்கணிக்கிறாள்..

தற்போது அவளது குடும்பத்தினரிடமும் என்ன ஏது என்ற அளவிற்கு மட்டுமே அவளது பேச்சு இருக்கும் அவர்களாலும் அவளை நெருங்க முடியாத அளவிற்கு ஒரு வட்டம் போட்டுக்கொண்டாள்..

எந்த காதலை பைத்தியகாரத்தனம் என்றார்களோ அந்த காதலை வைத்தே வாழ்வில் முன்னேற நினைத்து கவர்ன்மெண்ட் எக்ஸாம் க்ரூப் 1 க்கு ப்ரிப்பேர் ஆகிறாள்..

அங்கோ இனியன் அந்தஸ்தை முகில் குடும்பத்தினர் ஒரு காரணமாக காட்டியதால் இன்னும் வெறிகொண்டு உழைக்க ஆரம்பித்திருந்தான்.. அதற்க்கு முன்னும் அவர்கள் அவ்வளவு பின் தங்கியவர்கள் அல்ல இருந்தும் முகில் குடும்பத்தின் எதிர்பார்ப்பு சற்றே அதிகம்..

ஒரு கட்டத்தில் இனியன் வேலையை விட்டு தொழில் துவங்க முனைப்பாய் இருக்க இனியன் குடும்பத்தினர் கூட அவனிடம்,”அந்த பெண்ணை மறந்துட்டு வேலையை பாரு அவளுக்காக நீ வேலையை விடறது அவ்ளோ முக்கியம் இல்ல.. இதுல நீ தொழில் கூட கடன் வாங்கி தான் ஆரம்பிக்கிற இது சரியா வராது பா இது சுத்த பைத்தியக்காரத்தனம்”என்றனர்..

இனியன்,”இல்ல நான் கண்டிப்பா தொழில் தான் பண்ண போறேன் என்ன ஒரு 5 வருஷத்துக்கு தொந்தரவு பண்ணாதீங்க..” என்றவன் மறுபேச்சு பேசாமல் வேலையில் மூழ்கினான்..

அவனின் நட்பு வட்டம் கூட இது முட்டாள் தனமான முடிவு என்றே சொல்லியிருந்தனர்..

அனைவரும் உரைத்த காதல் என்னும் பைத்தியகாரத்தனத்தை பற்றுகோலாய் கொண்டு வாழ்வில் அவரவர் பாதையில் தங்களது லட்சியத்தை நோக்கி செல்ல தொடங்கியிருந்தனர் முகில் மற்றும் இனியன்..

இருவரும் ஒருவருக்கொருவர் சந்தித்து கொள்ளவில்லை தொலைபேசி உரையாடல்களும் இல்லை…

இதோ ஆண்டுகளும் உருண்டோவிட்டது என்ன முயற்சி செய்தும் வன்முகிலின் மனதை அவர்களது பெற்றோரால் மாத்த முடியவில்லை அவர்களுக்குள்ளான உறவு இன்றும் தாமரை இலை மேல் தண்ணீராய்….

தற்போது வான்முகில் க்ரூப் 1 தேர்வாகி ஊட்டியில் டெபுட்டி கலெக்டராக பணிபுரிந்து கொண்டிருக்கிறாள்..

அன்று கோவையில் பெரிய துணிக்கடை
“முகிலினி சில்க்ஸ்” திறப்பு விழாவிற்காக
மினிஸ்டர் வர அவரின் பாதுகாப்பு கருதி ஊட்டியில் இருந்து முகிலை அழைத்து இருந்தனர்…

அவளுக்கு திறப்பு விழா என்பது மட்டுமே தெரியும் கடையின் பெயரில் நெருடல் ஏற்பட்டாலும் அதை அவள் பெரிதாக கண்டுகொள்ளவில்லை,அதிலும் இவளுக்கு அந்த கடையின் ஓனர் யார் என்பதன் விவரங்கள் அறியவில்லை
தெரிந்திருந்தால் வந்திருக்க மாட்டாளோ….

மினிஸ்டர்க்காக அவள் காத்திருக்க அதற்கு முன் ப்ளாக் ஆடி காரில் ஆறடி ஆண்மகன் கூலர் அணிந்து கோட் சூட்டுடன் இறங்க அவனை பார்த்தவள் சற்றே ஸ்தம்பித்து விட்டாள்..

ஆம் முழுதாக 5 ஆண்டுகள் கழித்து இனியனை சந்திக்கிறாள் வான்முகில் முன்பைவிட வசீகரமும் ஆளுமையும் அவனிடத்தில் நிரம்பியிருந்தது…

இனியனுக்கோ துளியளவும் பதற்றமில்லை அவளை வரவைத்தது அவன் தானே இந்த 5 ஆண்டுகளில் முகில் இனியனை பற்றி அறிந்திருக்கவில்லையே தவிர இனியன் முகிலின் ஒவ்வொரு அசைவையும் தெரிந்தே வைத்திருந்தான்..

இன்னும் சொல்லப்போனால் காதல் மேல் அவள் கொண்ட பிடிவாதமே அவனை இந்த அளவிற்கு உயர்த்தி இருந்தது..

அவளருகில் வந்தவன்,”என்ன பேபி இன்னும் ஷாக் குறையலையோ??”

முகிலுக்கு கண்ணில் நீர் துளிக்க அவனை தொடர்ந்து பின்னே பார்க்கிறாள் ஒரு வேளை அவன் திருமணம் செய்து விட்டானோ என்றெண்ணி அவனோ,”அவங்க யாரும் வரலை”என்றான் பொதுவாக… அதில் உடைந்தே போனாள் முகில்…

இனியனோ மனதிற்குள்,”இப்போதைக்கு கொஞ்சம் அழு… அப்பறம் ஆயுசுக்கும் உன்னை சந்தோஷமா வச்சிக்கிறேன்.. இது ஒரு ஷாக்கிங் சர்ப்ரைஸ் பேபி” என்று அவளுடன் பேசிகொண்டிருந்தான்….

திறப்பு விழா தொடங்க மினிஸ்டரை காரணம் காட்டி அவளை தன் அருகிலேயே நிறுத்தி கொண்டான் இனியன்.. முகில் சாதாரண மனநிலையில் இருந்தால் இதை எளிதாக கண்டுபிடித்திருப்பாள்.. ஆனால் இப்போது அவன் ஆட்டுவிக்கும் கைபொம்மை ஆகிப்போனாள்..

ரிப்பன் கட் பண்ணி விழா இனிதே தொடங்கியது அவளுக்கோ முள் மேல் நிற்பது போல் ஓர் உணர்வு… இதிலும் இடையிடையே இனியனின் பார்வைகள் வேறு அவளை துளைத்து கொண்டிருந்தது..

அவன் மினிஸ்டருடன் பேச்சில் மும்மரமாக அவளோ அவன் எப்படி திருமணம் செய்து கொண்டான்.. நான் இன்னும் அவனை நினைத்திருக்க அவன் தன்னை மறந்துவிட்டானோ என்று ஒரு புறமும் மறுபுறம் நான் தானே அவன் வாழ்க்கையை பார்த்துக்க சொன்னேன் என்று மனசாட்சியுடன் வாக்குவாதம் நடத்திக்கொண்டிருந்தாள்..

திறப்புவிழா இனிதே முடிய சில பத்திரிக்கையாளர்கள் அவனை கேள்விகேட்க ஆயத்தமாயினர்..

நிருபர்,”எப்படி சார் இவ்ளோ ஷார்ட் பீரியட்ல இவ்ளோ பெரிய வெற்றி அடைஞ்சிருக்கீங்க”

இனியன்,”நான் ஒரு விசயத்துமேல ரொம்ப பைத்தியமா இருந்தேன் அதான் அதுக்காக வெறித்தனமா உழைக்க ஆரம்பிச்சேன் அதால கிடைச்ச வெற்றி தான் இது”

நிருபர் 2,” தொழில் மேல உங்களுக்கு அவ்ளோ பைத்தியமா சார்”

இனியன்,”கண்டிப்பா இல்ல என் காதல் மேல எனக்கு அவ்ளோ பைத்தியம்.. என் காதலுக்காக தான் இந்த உழைப்பு” என்றான்..

அதைக்கேட்ட முகிலுக்கோ அவள் கண்ணில் கண்ணீர் அவள் அடக்க அடக்க அதையும் மீறி வந்து கொண்டிருந்தது..ஒருவன் தன்னை இந்த அளவுக்கு நேசிக்க முடியுமா அவனின் காதலுக்கு தான் தகுதியானவளா என்று எண்ணிக்கொண்டிருந்தாள்..

நிருபர்கள்,”அப்போ உங்க காதலி இங்க இருக்காங்களா?? அவங்களை பத்தி சொல்லுவீங்களா??”

இனியன்,”கண்டிப்பா அவங்களை நேர்லயே காட்டறேன்”என்றவன் வந்து முகிலை அழைத்து தன் கைவளைவில் நிறுத்தியவன்,”இவங்க தான் மிஸ்.வான்முகில் டெபுட்டி கலெக்டர் நான் கல்யாணம் பண்ணிக்க போறவங்க இவங்க தான்..சூன் வில் அனௌன்ஸ் தி மேரேஜ் டேட்.. பை தேங்க்யூ” என்று விடை பெற்று அவளை உள்ளே அழைத்து சென்றான்…

அவளை அழைத்து கொண்டு அவள் கேபினுக்குள் சென்றவன் அவளை அவன் இருக்கையில் அமர்த்தி அதன் மேஜையில் அமர்ந்திருக்க அவளோ அவனை வெறித்து பார்த்து கொண்டிருந்தாள்..

இனியன்,”பேபி.. என்னடா இவ்ளோ வருஷம் கழிச்சு என்னை பாத்ததுல உனக்கு சந்தோசம் இல்லையா.. ஏன் ஒண்ணுமே பேசமாட்டேங்கிற”

முகில் விசும்பிக்கொண்டே,”இனி ஏண்டா இவ்ளோ நாள் எனக்காக காத்திருக்க.. உன் லவ்க்கு நான் உண்மையா இல்லையேடா”

இனியன் சற்றே அதட்டலுடன்,” ஓ நீ எதவச்சு சொல்ற.. சரி நீ சொல்றது சரினே வச்சுக்கோ அப்பறம் ஏன் நீ இன்னும்கல்யாணம் பண்ணிக்காம இருக்க”

முகில்,”ஒரு வேளை எனக்கு கல்யாணம் ஆயிருந்தா என்னடா பண்ணுவ”

இனியன்,”எனக்காக என் காதலுக்காக உனக்கு உன் குடும்பம் எவ்ளோ முக்கியம்னு தெரிஞ்சும் அவங்க கூட பேசாம இருக்கியே இது யாருக்காக”..

உனக்கு இன்னொரு சர்ப்ரைஸ் உங்க வீட்ல இருந்து என் கிட்ட பேசுனாங்க நம்ம கல்யாணத்துக்காக என்றான்..

முகில்,”எப்படி டா அவங்க அவ்ளோ பேசுனதுக்கு அப்பறமும் கூட அவங்க கிட்ட பேசிருக்க.. இப்போ நீ நல்ல நிலைமைல இருக்கறதுனால அவங்க உனக்கு ஓகே தான் சொல்லுவாங்க”

இனியன்,” பேபி அவங்க இப்போ என் ஸ்டேட்டஸ்காக என் கிட்ட வரல அவங்க மகளுக்காக என்கிட்ட வந்திருக்காங்க”.

முகில்,”மாமா என் மேல உனக்கு கொஞ்சம் கூட கோவம் இல்லையா”

இனியன்,”ஆரம்பத்துல கொஞ்சம் வருத்தம் இருந்துச்சு.. அப்பறம் எனக்காக நீ கஷ்டப்படரத பாத்து உனக்காக மட்டுமே வெறித்தனமா உழைக்க ஆரம்பிச்சேன் இன்னிக்கு இந்த இடத்துல நிக்கறேன்”

முகில்,”ஆமா மாமா நானும் நம்ம காதலை யாரெல்லாம் பைத்தியகாரத்தனம்னு சொன்னவங்களுக்காகவே உழைக்க ஆரம்பிச்சேன்”

அவன் நெருங்கி அவள் அருகில் வந்து அவளது தோளை பற்ற அவன் மீது சாய்ந்து அழ தொடங்கினாள்.. அவளை அணைத்து சமாதானபடுத்த, அவளோ அவனை விலக்கி எவ்ளோ நாள் உனக்கு கல்யாணம் ஆயிருக்குமோன்னு பயந்து இருக்கேன் தெரியுமா ஏண்டா இப்படி பண்ண என்று அடிக்க தொடங்கியிருந்தாள்..

அந்த அறையில் அவள் கையில் சிக்காமல் போக்கு கட்டியவன் அவளை நெருங்கி அவளின் இடையில் கைவைத்து அவளை தன்னோடு அணைத்து பிடித்தவன் கண்களில் காதலை பரிமாற தொடங்கினான்..

காதல் என்னும் பைத்தியகாரத்தனமே இவர்களின் வெற்றியின் மூலதனம்… அவர்களின் எண்ணத்தின் ஓசைகள் இன்று நிஜமாக…

இனி இவர்கள் வாழ்வில் இன்று போல் என்றும் காதல் மேல் பித்தாக இருக்க வேண்டி நாமும் விடை பெறுவோம்

சுபம்….

Facebook Comments Box
What’s your Reaction?
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here