நினைவு 2
பெங்களூரு… இரவு 9 மணிக்கெல்லாம் அந்த பிரபல ஹோட்டலுடன் கூடிய பப்பில் கூட்டம் களைக்கட்டத் துவங்கியது. மந்தமான வெளிச்சத்தில் ஆங்காங்கே மட்டும் பச்சை, சிவப்பு என்று வெவ்வேறு வண்ண ஒளிக்கற்றைகளைத் தூவியபடி இருக்க, காதை பிளக்கும் இசையை ஒலிக்கவிட்டிருக்க, அங்கிருப்பவர்களோ வெளியுலகக் கவலைகள் இல்லாமல், தங்களை மறந்து ஆடிக் கொண்டிருந்தனர்.
அப்போது அங்கே நுழைந்தான் அவன். ஆறடிக்கு மிஞ்சிய தன் உயரத்தால் மற்றவற்களையெல்லாம் குள்ளமாக்கியவாறு, தன் சிக்ஸ்-பேக் உடல் தெரியுமாறு டைட் ஃபிட் டி-ஷர்ட்டும் அங்கங்கே கிழித்துவிட்ட முரட்டு ஜீன்ஸும் அணிந்திருந்தான். அவனின் கூர்பார்வையை மறைத்தபடி கண்களில் இருந்த ரேபான் கிளாஸும், கைகளில் அணிந்திருந்த பிரெமோண்ட் வாட்சும் அவனின் செழுமையை உணர்த்த, அழகும் பணமும் ஒரே இடத்தில் இருப்பதைக் கண்ட சில பெண்களின் பார்வை இவனை நோக்கித் திரும்பியது.
அதை உணர்ந்தவனின் முகத்தில் எப்போதும் போல அலட்சிய பாவம் வந்து ஒட்டிக்கொண்டது. ‘பணம் தான் வாழ்க்கை’ என்ற கொள்கையில் ஊறிப் போனவனிற்கு இப்பார்வைகள் எல்லாம் தன் செல்வத்திற்காக தான் என்ற எண்ணம் வேரூன்றியிருந்தது. அதில் அவனிற்கு பெருமையே!!!
தன் செல்வத்தின் மேல் எவ்வளவு கர்வமோ, அதே அளவு கர்வம் தன் உடலழகிலும் அவனிற்கு உண்டு. மற்றவர்களின் கவனத்தை ஈர்க்கும் தன் சிக்ஸ்-பேக் உடம்பை பேணிக் காப்பதில் அலாதி ஆர்வம் அவனிற்கு.
ஒரு முறை வாசலில் நின்று அனைத்தையும் உற்று கவனித்தவன், தன் நண்பர்கள் குழுமியிருக்கும் பகுதிக்கு செல்ல முயன்றான்.
அப்போது அவன் அருகில் வந்த ஒரு நவநாகரீக மங்கை, “ஹாய் ஹாண்ட்சம்… ஷால் வி டான்ஸ்…” என்று குழறினால். உள்ளே சென்ற மதுவினாலோ, இல்லை அவனைக் கண்டு மயங்கினாளோ… இது தான் சாக்கென அவனின் மேல் ஒட்டிக் கொண்டிருந்தவளை, துச்சமாக பார்த்தவன், சட்டென்று விலகினான்.
அவளின் முழு பாரத்தையும் அவனின் மேல் போட்டிருந்ததால், அவன் விலகியதும் கீழே விழுந்தாள். அவனோ கண்ணடியைக் கழட்டி, அவளை நோக்கி ஒரு கேலிப் பார்வையை வீசியவன், தன் வழியில் செல்லலானான்.
அவளிற்கோ, அவன் அவளை மதிக்காதது ஒரு புறம், அனைவர் முன்பும் கீழே விழுந்தது ஒரு புறம் என்று இரு மடங்கு கோபத்தை தந்தது அவனின் செய்கை. ஆனால் அவளால் என்ன செய்து விட முடியும்.
இந்தியா முழுவதும் கொடி கட்டிப் பறக்கும் ‘வர்மா குரூப் ஆஃப் கம்பெனிஸ்’ஸின் இளைய வாரிசான அவனை, வைபவ் வர்மாவை, இப்போது தான் பிசினஸ் உலகில் காலடி எடுத்து வைத்திருக்கும் கத்துக்குட்டியான அவளால் ஒன்றும் செய்ய முடியாது என்ற நிதர்சனம் உணர்ந்தவள், மேலும் அங்கிருக்க பிடிக்காமல் வெளியேறி விட்டாள்.
இப்படி செல்லும் இடமெல்லாம், தன் அலட்சியத்தால் எதிரிகளை சம்பாத்தித்துக் கொண்டிருப்பதை அறியாமல், தன் நண்பர்களுடன் சென்று கலந்து கொண்டான் வைபவ்.
அதே நேரம், அதே ஹோட்டலின் நுழைவு வாயிலில், கைப்பேசியில் தீவிரமாக உரையாடியபடியே உள்நுழைந்தான் அவன்.
ஆறடிக்கு ஒரு இன்ச் கம்மியாக, வெண்ணையில் தோய்த்ததைப் போன்ற நிறத்தில், கூர்மையான கண்களுடன், பெண்களே பொறாமைப்படும் அளவிற்கு அடர்த்தியான புருவங்களுடனும், எனக்கு சிரிக்க மட்டுமே தெரியும் என்பதைப் போன்று எப்போதுமே விரிந்த இதழ்களுடனும், பெண்கள் கண்டவுடனே மயங்கக் கூடிய அத்தனை அம்சங்களும் பக்காவாக பொருந்தியிருந்தது அவனிற்கு…
அவன் அதர்வா… ‘வர்மா குரூப் ஆஃப் கம்பெனி’ஸிற்கு சொந்தமான ‘எல் கேர் ஹாஸ்பிடல்’லின் சென்னை கிளையில் தான் இதய நிபுணனாக பணியாற்றி வருகிறான். பணிக்கு சேர்ந்த சில நாட்களிலேயே தன் கலகல பேச்சால் அனைவரின் இதயங்களையும் திருடி விட்டான் அந்த இதய மருத்துவன்.
பேச்சு மட்டுமல்ல, அவனின் அசாத்திய அறிவாற்றலாலும், நோயாளிகளிடம் அவன் காட்டும் அக்கறையும் பொறுமையும், அவனை பணிக்கு சேர்ந்த சில காலத்திலேயே அங்கு பிரபலமடையச் செய்தது. அதன் காரணமாகவே பெங்களூருவில் நடைபெறும் கலந்தாய்விற்கு அவனின் ஹாஸ்பிடல் சார்பாக அவன் கலந்து கொள்ள வந்திருந்தான்.
கலந்தாய்வின் கடைசி நாளான இன்று, தன் நண்பர்களிடம் (அங்கிருந்த நாலு நாட்களில் வெவ்வேறு இடத்திலிருந்து வந்தவர்களை பேசியே தன் நட்புப் பட்டியலில் இணைத்திருந்தான்…) பேசி விடைபெற்று வர தாமதமாகியதால் அவனின் தந்தையின் கோபத்திற்கு ஆளாகி, இப்போது அவரை சமாதானப்படுத்தும் முயற்சியில் இறங்கியிருக்கிறான்.
“ப்பா… ப்ளீஸ் ப்பா… நான் தான் சொல்றேன்ல… நாளைக்கு ஏர்லி மார்னிங் பஸ் பிடிச்சு வந்துவேன்… என் செல்ல வெங்கில… நோ கோபம்…” என்று பேசிப் பேசியே கரைத்துக் கொண்டிருந்தான்.
அந்த பக்கம் என்ன சொன்னர்களோ… “இதோ இப்போ போய் சாப்பிடுடுவேன்… நீங்க சாப்பிட்டீங்களா..? மாத்திரை எல்லாம் கரெக்டா போட்டீங்களா..?” என்றான் சீரியஸ் மோடிற்கு தாவியபடி…
மீண்டும் மறுப்புறம் பேசியதைக் கேட்டவன், “சரி ப்பா… ரூம் போனவொடனே வீடியோ கால் பண்றேன்…” என்றவன் அவரை வம்பிழுக்க நினைத்து, “ஹ்ம்ம் அவனவன் இந்நேரத்துக்கு கேர்ள்-பிரென்ட் கூட வீடியோ கால் பண்ணி பேசிட்டு இருப்பான்… எல்லாம் என் நேரம்…உங்க கிட்ட பேச வேண்டியதாயிருக்கு…” என்றதும் அவனின் தந்தை சொல்லியதைக் கேட்டவன்…
“நீங்க சொல்லிட்டீங்கள… இதுக்காகவே இன்னும் ஒரே மாசத்துல ஒரு பொண்ண லவ் பண்ணிக் காட்டுறேன்…” என்று சபதம் போட்டபடி அழைப்பைத் துண்டித்தான்.
அவன் போட்ட சபதத்தை எண்ணி அவனிற்கே சிரிப்பு வர, புன்னகையோடு நடக்க ஆரம்பித்தவன், எதிரில் வந்தவனை கவனிக்காமல் இடிக்க, அதே புன்னகையுடன் “சாரி பாஸ்…” என்றான்.
எதிரில் இருந்த வைபவோ, அவனைக் கவனிக்க கூட நேரமில்லாதவனாய் பரபரப்புடன் அங்கிருந்து சென்றான்.
அவன் சென்றது, பெங்களூருவில் இருக்கும் எல் கேர் ஹாஸ்பிடலுக்கு தான். அங்கு ஏற்கனவே இருந்த நண்பர்களின் அருகில் சென்றவன், “எங்க டா அவ..?” என்று கேட்டான். அவன் குரலிலேயே அவனின் அடக்கப்பட்ட கோபத்தை உணர்ந்த நண்பர்கள், அவளிருந்த அறையைக் காட்டினர்.
புயலென உள்ளே நுழைந்தவன், “ஹே லூசா நீ… சாகுறதுனா சும்மா சாக வேண்டியது தான… எதுக்கு என்ன இழுத்து விடுற… என்னமோ உருகி உருகி உன்ன லவ் பண்ணி ஏமாத்துன மாதிரி லெட்டர் எழுதி வச்சுருக்க… சொல்லு டி நான் உன்ன லவ் பண்றேன்னு எப்பயாச்சும் சொல்லிருக்கேனா…” என்று அவளின் கழுத்தைப் பிடித்து நெறிக்க, அவளின் நல்ல நேரமோ அவனின் நண்பர்கள் உள்ளே வந்து அவனைத் தடுத்திருந்தனர்.
நடந்தது இது தான். அவள் கனிஷ்கா, ஆந்திர அமைச்சரின் ஒரே மகள். வைபவ் வெளிநாடு சென்றிருந்தபோது, இங்கிருந்த அவனின் நண்பர்களின் நட்பு வட்டம் விரிந்திருக்க, அதில் ஒருவள் தான் இந்த கனிஷ்கா.
வைபவ் இந்தியா திரும்பியதும் பத்து நாட்கள், தன் நண்பர்களுடன் கழிக்க சுற்றுலா செல்ல ஏற்பாடுகள் செய்ய, அதில் கலந்து கொண்ட கனிஷ்கா வைபவை பார்த்தவுடன் காதல் கடலில் விழுந்துவிட்டாள்.
வைபவோ அவளிடம் பேசக் கூட இல்லை. அவனின் ஒதுக்கம் அவளை வாட்ட, ஒரு முறை மனதில் தைரியத்தை வரவழைத்து தன் காதலை அவனிடம் சொல்ல, அவனோ பரிகாசமாய் சிரித்து அவளின் காதலை நிராகரித்தான்.
அவனைப் பொறுத்தவரை, வாழ்க்கை என்பது பணம் சம்பாதிக்க… அதற்கிடையில் காதல், கல்யாணம் எல்லாம் அவனின் இலட்சியத்திற்கு ஏற்படும் தடையாகக் கருதினான்.
தன் நிராகரிப்பைக் கூட பரிகாசமாய் தான் வெளிப்படுத்தினான். ஏனெனில், அவன் தன் வாழ்நாளில் இதுவரை, தன் தாயைத் தவிர பிற பெண்களை மதித்ததே இல்லை.
இப்படிப்பட்டவனிற்காக தன் வாழ்க்கையையே முடித்துக் கொள்ள துணிந்த, அந்த பேதையின் காதலை என்னவென்று சொல்வது…
மற்ற பெண்களை மனிதர்களாக கூட மதிக்காதவன், தன் கர்வம் அனைத்தும் அழிந்து அவளிற்காக அவளிடம் கெஞ்சும் சூழ்நிலை ஏற்பட்டால் என்ன செய்வான்…
தன் நண்பர்களின் கெஞ்சலால் அவ்வறையை விட்டு எரிச்சலுடன் வெளியேறியவனின் அலைப்பேசி ஒலிக்க, எடுத்தவனின் முகம் பாறையென இறுகியது.
“என்ன நடக்குது மருமகனே…?” என்ற குரலில் எப்போதும் இருக்கும் கனிவு இல்லாமல் இருப்பதை உணர்ந்தவன், அதே எரிச்சலுடன் அங்கு நடந்ததை கூறினான்.
“ப்ச்… படிச்சு முடிச்சு வந்த உன்ன பட்ட தீட்டி வைரமா ஜொலிக்க வைக்க நான் பிளான் பண்ணா, இந்த நேரத்துல பொண்ணு விஷயம்…. ஹ்ம்ம் எனக்கு இதெல்லாம் சரியா படல மருமகனே… இந்த சமுகத்துல நல்ல பதவி, புகழ்னு சம்பாதிச்சுட்டா, மத்ததெல்லாம் தானா வரும் மருமகனே… ஆனா இப்போ நீ பொண்ணு பின்னாடி சுத்துன, அப்புறம் அந்த பதவி, புகழ் சம்பாதிக்கிறதெல்லாம் நீ நெனச்சாலும் நடக்காது…” என்று தன் உயரிய அறிவுரையை வைபவிற்கு தந்தார் அவனின் தாய்மாமா கைலாஷ்.
தனக்கும் இதற்கும் சம்பந்தம் இல்லையென்று சொன்ன பின்பும், தனக்கு அறிவுரை கூறிக் கொண்டிருக்கும் தன் தாய்மாமனை எண்ணி சிறிது கோபம் கொண்டவனாக, பல்லைக் கடித்துக் கொண்டு, “மாமா, என் வாழ்க்கைல எதுக்கு ப்ரையாரிட்டி குடுக்கணும்னு எனக்கு நல்லாவே தெரியும்… நான் உங்க வளர்ப்பு மாமா…” என்றான் அவரைக் குளிர்விக்கும் விதமாய்…
அவன் எய்த அம்பு சரியாக வேலை செய்ய, “சந்தோஷம் மருமகனே… எப்போ இங்க வர…?” என்றார்.
“நாளைக்கு ஏர்லி மார்னிங் கிளம்பிடுவேன், மாமா…”
மேலும் சிறிது நேரம், தங்கள் வருங்கால திட்டங்களைத் தீட்டியப் பின்னர் ஓய்வெடுக்கச் சென்றனர் அந்த இருவர் குழு… இவர்களின் (சதித்)திட்டங்களால் பாதிக்கப் படுவது யாரோ…
“இங்க பாரு கண்ணா… அந்த பக்கம் போக கூடாது…”
“ராஜா நீ தான் தம்பிய பாத்துக்கணும்…”
“இல்லங்க… எனக்கு ஏதோ தப்பா தோணுது…”
தெளிவற்ற குரல்கள் ஒலித்தது. சற்று நேரத்தில், ஒரு பள்ளத்தில் கால் தடுக்கி விழும் சிறுவனின் “அம்மா…ஆ…” என்ற சத்தமும் ஒலிக்க, திடுக்கிட்டு விழித்தனர் அம்மூவரும்…
உடல் முழுவதும் வியர்வையில் குளித்திருக்க, மூச்சுக்கு தவிக்கும் அவள், வாயைத் திறந்து மூச்சுக்காற்றை சுவாசித்து தன்னை ஆசுவாசப்படுத்திக் கொண்டாள்.
அவள் எழுந்த அதிர்வில் அவளருகே சயனித்திருந்த அவளின் அன்னை, “என்ன டி ஆச்சு…? திரும்ப அதே கனவா…?” என்று எழுந்தமார்ந்தார்.
அவரின் வெண்கலக் குரலின் சத்தத்தில் முழித்த அவளின் தந்தையும் அறைக்குள் வந்தார்.
“எல்லாம் உங்கள சொல்லணும்… டூர் போன எடத்துல சும்மா இருக்காம, அப்பாவும் பொண்ணும் ட்ரெக்கிங் போறேன்னு போய்ட்டு, அங்க ஒரு சின்ன பையன் மலை மேலயிருந்து கீழ விழுந்தத பார்த்தன்னைல இருந்து இன்னைக்கு வரைக்கும், அதுவே கனவுல வந்து பயந்து எழுந்துக்குறா… கல்யாணம் பண்ற வயசுல, இவளுக்கு இப்படி ஒரு பிரெச்சனை இருக்குன்னு வெளிய தெரிஞ்சா எப்படி இவளுக்கு நல்ல இடமா பார்த்து கல்யாணம் பண்றது…” என்று வழக்கம் போல புலம்ப ஆரம்பித்து விட்டார்.
அங்கு தந்தையும் மகளும் ஒருவரை ஒருவர் பாவமாக பார்த்துக் கொண்டனர்.
மகளை மனைவியின் புலம்பலிலிருந்து காக்க எண்ணிய தந்தையாய், “அம்மாடி பாவ்னா, நீ அப்பா ரூம்ல போய் படும்மா…” என்க…
இது தான் தப்பிக்க ஒரே வழி என்று நினைத்தவள், “சரி ப்பா…” என்று நல்ல பிள்ளையாக தலையாட்டியபடி தாயைப் பார்க்காமல் எழுந்து சென்றாள்.
அவள் பாவ்னா… பெயருக்கேற்றார் போல அனைத்து பாவனைகளையும் தன் கண்களில் காட்டிவிடும் திறமை கொண்டவள். எப்போதும் சிரித்த முகம், துறுதுறு பேச்சு என்று அவளை சுற்றியிருப்போரை மகிழ்ச்சியாக வைத்துக் கொள்வதில் அவளுக்கு நிகர் அவளே. அதே போல் யாராவது உதவி என்று வந்தால், சிறிதும் தயங்காமல், அதனால் தனக்கு என்ன பிரச்சனைகள் வரும் என்று கூட யோசியாமல் உதவிடுவாள். இவளின் இந்த உதவும் மனப்பான்மையால், எதிர்காலத்தில் இவளவன் என்ன பாடுபட போகிறானோ…
மொத்தத்தில் கோதுமை நிறத்தில் இருக்கும் ஐந்தரை அடி அழகுப் புயல் இவள். ஒருவன் வாழ்வில் புயலாகவும், மற்றொருவன் வாழ்வில் தென்றலாகவும் வீசக் காத்திருக்கிறாள்!!!
********
பெங்களூரு ஹோட்டலில்…
நேரம் நள்ளிரவு 12 மணி… கனிஷ்காவுடனான பிரச்சனையில் சோர்ந்தவன், தன் நண்பர்களிடம் கூறிக் கொண்டு, 10 மணியளவிலேயே தன்னறைக்கு வந்துவிட்டான், வைபவ். படுத்தாலும் தூக்கம் வரமாட்டேன் என்று சண்டித்தனம் செய்ய, அவனிற்காகவே காத்திருந்த ஒயின் பாட்டிலைத் திறந்தவன், மெல்ல அதை தொண்டையில் சரித்துக் கொண்டான்.
அதைக் குடித்ததும் சிறிது நேரத்திலேயே தன்னை மறந்த உறக்கத்திற்கு சென்றவன், கனவில் கண்ட அந்த சிறுவனின் “அம்மா…ஆ…” என்ற சத்தத்தில் தூக்கிவாரிப்போட எழுந்தமார்ந்தான்.
குடித்த போதை தெளிய, அந்த ஆறடி ஆண்மகனும் கனவின் உபயத்தால் வேர்த்து போய் அமர்ந்திருந்தான். 21 ஆண்டுகளாக தன்னை ஆட்டுவிக்கும் அந்த கனவினால் அவனிற்கு பயமே…
ஆனால் தன் பயத்தை அவன் யாரிடமும் பகிரவில்லை… ஏன் அவன் தன் குருவாக கருதும் மாமனிடமே இதுவரை அந்த கனவைப் பற்றிக் கூறியதில்லை…
இனிமேல் தூங்க முடியாது என்று தெளிவாக தெரிந்ததினால், வீட்டிற்கு செல்ல ஆயத்தமானான் வைபவ்.
இங்கு வைபவின் நிலை இதுவென்றால், எதிர்த்த அறையில் இருந்த அதர்வாவோ, தான் கண்ட கனவிலிருந்து விழித்தவன், தன் தந்தையின் போட்டோவை எடுத்து பார்த்துக் கொண்டிருந்தான்.
தூக்கத்தின் நடுவே எழுந்ததால், தலைவலியும் மண்டையை பிளக்க, சூடான நீரை அருந்தி தன்னை நிலைப்படுத்திக் கொண்டான்.
இந்த கனவு எதற்காக வருகிறது என்று அவன் நினைக்காத நாளில்லை. ஒரு முறை தன் தந்தையிடம் நடந்ததைக் கூறிய போது அவரின் எதிர்வினையைக் கண்டு, இனிமேல் அவரிடம் அதைப் பற்றிக் கூறக் கூடாது என்ற முடிவிற்கு வந்தான். இதோ இப்போது வரை அதைக் காத்தும் வருகிறான்.
ஒரு பெருமூச்சுடன், தன் பயணப் பொதியை எடுத்து வைத்துக் கிளம்ப ஆயத்தமானான்.
இவர்கள் மூவரும் ஒருவருக்கொருவர் தொடர்பில்லாதவர்கள்… இதுவரை ஒருவரையொருவர் அறிந்திடாதவர்கள்… ஆனால் அவர்களுக்கு வரும் கனவு மட்டும் ஒற்றுமை உடையது… இது முன்ஜென்மத்து தொடர்ச்சியா… இறந்த காலத்தின் மிச்சமா… எதிர்காலத்தின் துவக்கமா…
நினைவுகள் தொடரும்…