வணக்கம் நட்புகளே, இது என் முதல் குறு நாவல். படித்து விட்டு கருத்துக்களை பகிரவும்.. தவறேதும் இருந்தால் கூறுங்கள் திருத்தி கொள்கிறேன்.
ஒர் அழகான காலை நேரம் குயில்கள் தன் அழகு குரலால் பாட அதற்கேற்றார் போல் மரங்கள் இசையமைக்க கேட்பதற்கே ஆனந்தமாக இருந்தது. தன் துயிலை அழகாக கலைத்தற்கு குயிலை பார்த்து நன்றி தெரிவித்து விட்டு அம்மா வீட்டிற்கு அருகில் ஊர் மத்தியில் இருக்கும் கிணற்றுக்கு பக்கத்தில் நின்று வேடிக்கை பார்த்துக் கொண்டு இருந்தாள் நிரஞ்சனா.
நிரஞ்சனா நாகரீக மங்கை தான் ஆனாலும் சுயநலமில்லாதவள். தனக்கேன்று ஏதும் கேட்டு பழக்கமில்லாதவள். ஒரே பெண் ஊரில் உள்ள பணக்காரர்களில் ஒருவர் கர்ணன் , பெயருக்கேற்றப்போல் தேடி வருவோர்க்கு வாரி வழங்கும் குணமுடையவர். அவருக்கு ஏற்றாற்ப்போல் குணத்திலும் பழக்க வழக்கத்திலும் எதிலும் கணவருக்கு உற்ற துணையாக இருந்தார் அவரின் ஆருயிர் மனைவி சியாமளா.
நிரஞ்சனா திருமண வயதை எட்டியதும் பக்கத்து டவுனில் ரைஸ் மில், டிராவல்ஸ் வைத்து வெற்றிகரமாக நடத்தி கொண்டு இருக்கும் நிதினுக்கு ஊரே வியக்கும்படி திருமணம் நடத்தி வைத்தார். அவள் அவ்வுருரை விட்டு சென்ற பின்னர் தான் நீரின் அருமையை உணர்ந்தாள் நிரஞ்சனா. தன் தாய் வீட்டில் தண்ணீரிலே மிதந்து கொண்டிருந்தவள் ஒரு குடம் தண்ணீருக்கு தவியாய் தவித்தாள். தற்போது தன் தாய் வீட்டிற்கு திருவிழாக்காக வந்திருக்கிறாள். அப்பொழுது தான் கிணற்றை பார்த்தாள். எப்பொழுதும் நீர் நிறைந்து காணப்படும் கிணறு தற்போது பாதி அளவு கூட இல்லை.
கடவுளே இந்த வருசமாவது நல்ல மழை வந்தா தான் குடிக்க தண்ணி, விவசாயம் செய்யறதுக்கு இப்படி அத்தியாவசிய தேவைகளை பூர்த்தி செய்ய இந்த வருடமாவது வருண பகவான் கருணை காட்ட வேண்டும்.
இந்த ஊர் பெரியவர்கள், நடுத்தர வயதினர்களுக்கு அவ்வுரை தவிர வேறு ஊருக்கு சென்று பழக்கமில்லை. இளைஞர்கள் மட்டுமே பிழைப்பை தேடி வெளி ஊருக்கு சென்று வந்தார்கள். சுற்றியும் பார்த்தாள் எவ்வளவு அழகாக பச்சை பசேல் என நிறைந்து இருந்தது இந்த இடம்,அதுவும் இந்த ஒற்றை கிணறு, இந்த ஒரு கிணறு தன் குடும்பத்திற்கு மட்டுமல்லாது ஊரில் உள்ள அனைவரின் தேவையை பூர்த்தி செய்து கொண்டிருந்தது. இப்பொழுது பாதி அளவு தான் இருந்தது. அவள் கணவனோடு வசிக்கும் டவுனில் கிணறு என்ற ஒன்றை பார்ப்பதற்கே அரிதாக இருந்தது. தண்ணீர் சேமிப்பை பற்றி எவ்வளவு சொல்லி இருப்பாள், ஒருமுறையேனும் யாராவது கேட்டு இருக்கிறார்களா? ஏன் தன் வீட்லேயே ஏதும் நடக்கவில்லையே. வீட்டிற்கு ஒரு கிணறு என்று முன்னோர்கள் ஏற்படுத்தியது இன்று பெரும் உதவியாக இருந்தது.
இவ்வாறு யோசித்து கொண்டு இருந்தவளை சுரீரென்று முதுகில் விழுந்த அடி சுய நினைவிற்கு கொண்டு வந்தது.
திரும்பி யார் என்று பார்க்கையில் அழகாய் சிரித்தபடி வளர்ந்த பொம்மையாய் நின்றிருந்தாள் நிர்பயா, நிரஞ்சனாவின் சித்தப்பா மகள், கல்லூரி இறுதி ஆண்டு படித்து கொண்டிருக்கிறாள்.
நிர்பயா, ” ஏய் அக்கா எப்ப வந்த? நீ வர போறத சொல்லவே இல்ல பாத்தியா. போக்கா நான் உன் மேல கோபமா இருக்கேன் என்று முகத்தை திருப்பி கொண்டாள்.
நிரஞ்சனா,” ஏன்டீ, அதுக்கு தான் வந்ததும், வராததுமாய் என்ன அடிச்சிட்டியே.. அப்புறம் என்ன?
நிர்பயா, “சிரித்து கொண்டு சாரிக்கா நான் வேணும்னு அடிக்கல உன்ன பார்த்த சந்தோஷத்துல கை அதுவா அடிச்சிருச்சு.. இதுக்கு நான் என்ன பண்றது? என்று சோகமாக முகத்தை வைத்துக் கொண்டு கேட்கவும் அவளை அடிக்க துரத்தினால் நிரஞ்சனா.
அக்காவும், தங்கையும் ஓடி கொண்டிருக்கும் போது வண்டியில் அந்த ஊருக்கு குளிர்பான பாக்டரி வரப்போவதாய் அறிவித்து கொண்டு வந்தார்கள். இதை கேட்ட இருவருக்குமே கோபம் தலைக்கேற தன் தந்தையை காண சென்றார்கள்.
அப்பா நம்ம ஊர்ல என்ன நடக்குது? ஊர்ல நீங்கலாம் பெரிய ஆளா இருந்து என்ன பிரயோஜனம்? என்று பொறிய தொடங்கினார்கள் இருவரும்.
கர்ணன், “என்ன என் இரண்டு தங்கமும் ஒண்ணா சேர்ந்து வந்து இருக்கீங்க? வந்ததும் வராததுமாய் அப்பாவ ஏன் வறுத்தெடுக்கிறீங்க? நான் என்ன தப்பு பண்ணேன்? சொல்லிட்டு திட்டுங்க என்றார் புன்சிரிப்புடன்.
சியாமளா,” என்னங்கடீ என் புருஷனை போட்டு தாளிக்கிறீங்க?
நிர்பயா, “சியாமிம்மா, இந்த ஊர்ல கூல்டிரிங்ஸ் கம்பெனி வர போறது உங்க இரண்டு பேருக்கும் தெரியுமா?
நிரஞ்சனா, “இல்ல தெரிஞ்சே சும்மா இருக்கீங்களா?
கர்ணன்,” ஏன்டா இப்படி கேக்குறீங்க?
நிரஞ்சனா, “அப்பா பின்ன என்ன பண்ண சொல்றீங்க? ஏற்கனவே நம்ம ஊர்ல முன்ன மாதிரி தண்ணி இல்ல. இப்ப அவங்க வந்தா என்ன நடக்கும்னு உங்களுக்கு தெரியுமா? தெரியாதா?
சியாமளா,” என்னடீ? சும்மா கத்திக்கிட்டு இருக்க. ஊருக்குள்ள ஒரு கம்பெனி வந்தா நல்லது தானே. ஊர்ல நிறைய பேருக்கு வேலை கிடைக்கும். பக்கத்திலேயே வேலை இல்லாம நம்ம ஊர் இளவட்ட பசங்க எவ்வளவு பேர் பெத்தவங்கள பிரிஞ்சி இருக்காங்க தெரியுமா? அந்த கம்பெனி இங்க வந்தா எவ்வளவு நன்மை இருக்கு பாரு. சும்மா சாமியாடிக்கிட்டு என்று அவர் உள்ளே சென்று விட்டார்.
கர்ணன், “அம்மா சொல்றது சரிதான் தங்கம். நீங்க மனச போட்டு குழப்பிக்காதீங்க என்று அவரும் தனக்கு வயலில் வேலை இருப்பதாக சென்று விட்டார்.
நிரஞ்சனா,” என்ன நிர்பி அப்பா இப்படி சொல்லிட்டு போறாங்க? இதுல நம்ம ஊருக்கு எவ்வளவு பிரச்சனை இருக்குன்னு தெரியாம பேசிட்டு இருக்காங்களே. எப்படி இவங்களுக்கும் நம்ம ஊர்ல இருக்கவங்களுக்கும் இத புரிய வைக்குறது?
நிர்பயா,” அக்கா அத தான் நானும் யோசிச்சிட்டு இருக்கேன். இவங்களுக்கு புரிய வைச்சி இத தடுக்க முடியுமா? நம்ம இரண்டு பேரால இது சாத்தியமா? என்று இருவரும் குழம்பி தவித்தனர்.
இரவு முழுவதும் யோசித்து காலையில் ஒரு முடிவோடு ஊர் தலைவர்களை சந்தித்து, ஊர் கூட்டத்தை நடத்த அனுமதி கோரினர். ஊர் பெரிய மனிதர்களின் மகள்கள் என்பதாலும், அவர்களின் நல்ல குணத்தை பற்றி அறிந்தவர்கள் என்பதாலும் இருவரின் தந்தைகளிடம் கூட கேட்காமல் ஊர் கூட்டத்திற்கு சம்மதம் தெரிவித்தனர்.
மறுநாள் வழக்கமாக கூட்டம் நடக்கும் இடத்திற்கு ஊர் தலைவர்களும், ஊர் மக்களும் வந்து சேர்ந்தனர்.
கூட்டத்தில் ஒருவர் தலைவர்களை பார்த்து எதுக்காக இந்த கூட்டம் என்றார். (எல்லா இடத்துலயும் இந்த மாதிரி ஒரு ஆள் இருப்பாங்க போல)
ஊர் தலைவர், “எங்களுக்கும் விசயம் தெரியாது. இதோ நம்ம கர்ணன் வீட்டு பசங்க தான் பேசனும்னு சொன்னாங்க. நாங்க எதுக்குன்னு கேட்டதுக்கு எல்லா நம்ம ஊர் நல்லதுக்கு தான்னு சொல்லிச்சுங்க.. சரி நம்ம பசங்க தானேனு கேட்டுகளாம்னு தான் உங்கள் இங்க வர சொன்னேன் என்றார் ஊர் தலைவர்.
சொல்லுங்க எதுக்காக எங்கள கூட்டத்தை ஏற்பாடு பண்ண சொன்னீங்க என்றார் தலைவர்.
நிரஞ்சனா, “ஐயா உங்க எல்லாருக்கும் நம்ம ஊர்ல கூல்டிரிங்ஸ் கம்பெனி வர போறது தெரியும்னு நினைக்கிறேன்”.
நிர்பயா, “அக்கா இவங்க தானே அதுக்கு சரின்னு தலையாட்டினவங்க, அவங்க கிட்ட போய் நினைக்கிறேன், காய வைக்குறேன்னு கேட்டுட்டு இருக்கீங்க.
ஏற்கனவே அவர்கள் தங்களை கலந்து ஆலோசிக்காமல் கூட்டத்தை ஏற்பாடு செய்ததற்கு கோபமாக இருந்தவர், நிர்பயா அவ்வாறு மரியாதை இல்லாமல் பேசவும் அவளை அடுக்கினார்.
கர்ணன்,”நிர்பயா என்னது இது? இப்படி தான் மரியாதை இல்லாம பேசுவாங்களா? முதல்ல மன்னிப்பு கேளு என்று அதட்டவும் ஊராரிடம் மன்னிப்பு கேட்டாள்.
நீ மேல சொல்லு நிரஞ்சனா என்றார் பெரியவர் ஒருவர்.
நிரஞ்சனா,” ஐயா நான் நேராக விசியத்துக்கு வரேன். இந்த கூல்டிரிங்ஸ் கம்பெனி நம்ம ஊருக்கு வேண்டாம். ஏன் நம்மள சுத்தி இருக்க ஊருக்கும் வேண்டாம். அவங்க இங்க வந்தா நம்மளோட வாழ்வாதாரம் பாதிக்கப்படும். குடிக்க தண்ணி இல்லாம கஷ்டப்படுற நிலைமை கூட வரலாம். அதனால தயவு செய்து இந்த கம்பெனிய இங்க வராத மாதிரி செஞ்சிடுங்க என்று இருகரம் கூப்பி அனைவரிடமும் கேட்டு கொண்டாள்”.
கூட்டத்தில் சலசலப்பு ஏற்பட்டது. நிரஞ்சனா நீ சொல்றா மாதிரி ஏதுவும் நடக்காதும்மா. நீ வீணா மனச போட்டு குழப்பிக்காத என்றார் ஊர் தலைவர்.
அவங்க இங்க வர போறாதுனால எவ்வளவு நல்லது இருக்கு தெரியுமா?இது கூட்டத்தில் ஒரு பெண்மணி.
நம்ம புள்ளைங்களுக்கு நல்ல வேலை நல்ல சம்பளம், இது போதாதா என்றார் ஒருவர்.
அவங்களாம் வெளிய போய் கஷ்டப்பட வேணாம். படிச்ச புள்ள உனக்கு இது தெரியாம இருக்குமா? என்றார் ஒருவர்
நீ சின்ன புள்ள நிரஞ்சனா, பெரியவங்க எடுத்த முடிவை தப்பு சொல்லாத எனறார் மற்றுமொரு பெண்மணி.
நிரஞ்சனா, “ஐய்யோ, நீங்களாம் அவங்க சொன்ன நன்மைன்ற ஒரு பக்கத்தையே பாக்குறீங்க. ஆனா அதுல தீமைன்னு ஒரு பக்கம் இருக்குல? அதப்பத்தி ஏன் யாரும் யோசிக்கல? எல்லா நேரத்துலையும் பெரியவங்க எடுக்குற முடிவு சரியா இருந்தது இல்ல. இந்த ஒரு தடவை நான் என்ன சொல்ல வரேன்னு கேளுங்களேன் என்று அவள் போராடி கொண்டு இருந்த சமயம் நிர்பயா வெளியே சென்றிருந்தாள்.
கூட்டத்தில் சலசலப்பு ஏற்பட்ட அடுத்த நிமிடம் இது வேலைக்கு ஆகாது என்று தனக்குதானே சொல்லி கொண்டு யாரிடமோ பேசி, ஒரு நம்பரை வாங்கி குறித்து கொண்டு வாங்கிய நம்பருக்கு அழைத்தாள்..
யாருக்கு அழைத்தாள்? எதற்காக அழைத்தாள்? என்ன செய்ய போகிறாள்? பார்ப்போம் அடுத்த பகுதியில்…
தொடரும்….