நதியிசைந்த நாட்களில் 6

0
141

பகுதி – 6

சிறு வயதில் ஊரிலிருந்து தாத்தா பாட்டி வருகிறார்கள் என்றாலே குஷி தான். அவர்கள் ரயிலில் தான் வருவார்கள். அது காரணமா எனத் தெரியவில்லை. ரயில் என்றாலே உற்சாகம் மேலிடும்.

ரயில்வே ஸ்டேஷனில் புழங்கும் பலதரப்பட்ட மக்கள், பிளாட்ஃபார்ம், ஸ்பீக்கரில் வழிந்தோடும் அடுத்து புறப்படவுள்ள ரயில் பற்றிய அறிவிப்பு, தின்பண்டங்கள் மற்றும் தேநீர் விற்பனை செய்யும் கடைகள், விடிகாலையில் நியூஸ் பேப்பர் எடுத்து வந்து விற்பவர்கள், சீசனுக்குத் தகுந்தார் போல் பழங்கள் விற்பனை செய்பவர்கள்… எதைப் பார்த்தாலும் பிரமிப்பு தான். ஏராளமான பெட்டிகளில் மக்களை சுமந்தபடி வரும் ரயில் என்னைப் பொறுத்தவரை ஒரு இயந்திரத் தாய்.

• திருச்சி ரயில் நிலையம்
• திருச்சி உடையான்பட்டி ரயில் நிலையம் (இந்த சிறிய ரயில் நிலையம் தற்போது மூடப்பட்டுவிட்டது)
• குவாலியர் ரயில் நிலையம்
• இடார்ஸி ரயில் நிலையம்
• பாமோர் ரயில் நிலையம் (மத்தியப்பிரதேசத்தில் இருந்த இந்த சிறிய ரயில் நிலையம் தற்போது மூடப்பட்டுவிட்டது)
• புது தில்லி ரயில் நிலையம்
• பூனே ரயில் நிலையம்
• மெட்ராஸ் சென்ட்ரல்
• மெட்ராஸ் எக்மோர்
• வைஸாக் ரயில் நிலையம்
• மாம்பலம் ரயில் நிலையம்
…. பட்டியலிட்டுக் கொண்டே போகலாம்.

இசை, பாடல்கள் பற்றிய தொடருக்கும் ரயில் நிலையத்திற்கும் என்ன சம்பந்தம்? என்று படிப்பவர்கள் கேட்கக் கூடும். முழுதும் படியுங்கள்.

ஹிந்தி பாப் இசையில் கட்டுண்டு கிடந்த காலத்தில் பல குழுக்கள், பாடகர்கள் பிடித்தமானவர்களாக இருந்தார்கள். அவர்களில் இந்தக் குழு சற்று வித்தியாசமானது. குழு மட்டுமா குழுவின் தலைவரும் ஆச்சர்ய கர்த்தா தான்!

இவர்களின் குழுவை இந்திய ராக் பேண்ட் என்று பெயரிட்டு அழைப்பார்கள் என்னால் அதை ஏற்க முடியாது. ஹிந்தி பாப் இசை என்னும் களத்தில் இயங்குபவர்களில் பெரும்பாலானோரின் இசையானது மேற்கத்திய இசைப் பாணியைக் கொண்டதாகவே இருக்கும் ஆனால் இவர்களின் குழு மண் மணத்துடன் கூடிய இசையின் துணையுடன் சாகாவரம் பெற்ற பாடல்களைக் கொடுப்பார்கள்.

குழுவின் வித்தியாசத்தை எடுத்து சொல்லிவிட்டேன் குழுவின் தலைவரிடம் என்ன வித்தியாசம்?

அவர் ஒரு மருத்துவர் ஆம் MBBS படித்த டாக்டர்.

குழுவின் பெயர் : Euphoria
குழுவைத் துவக்கியவர், பாடுபவர், விடியோ ஆல்பங்களில் நடிப்பவர் (சகலமும்) : Dr. பலாஷ் சென்

பூர்வீகம் வங்காளமாக இருந்தாலும் பிறந்து வளர்ந்தது புனித வாரணாசியில். பள்ளி படிக்கும் காலத்திலேயே முறையாக சாஸ்திரிய சங்கீதம் பயின்று வாய்ப்பாட்டில் ஜொலித்து வந்தவர். மருத்துவக் கல்லூரியில் படிக்கும் போது Euphoria என்னும் குழுவைத் துவக்கினார்.

முதல் ஆல்பம் 1998 ஆம் ஆண்டு வெளியாகி ஹிட் அடித்தது. ஆல்பத்தின் பெயர் “தூம்” (Dhoom) அதன் பிறகு தொடர்ந்து ஹிந்தி பாப் உலகில் தனக்கென தனி இடம் ஒன்றை நிறுவி ஜொலித்து வருகிறார்.

தற்போது புது தில்லியில் மனைவி மற்றும் வாரிசுகளுடன் வசித்து வரும் இவர் வீட்டிலேயே நோயாளிகளைப் பார்க்கும் கிளினிக்கை நடத்தி வருகிறார். பாடல்கள் பாடுவது, இசைக் கோர்ப்பு வேலை செய்வது, பாடல்களைப் பதிவு செய்வது, கம்போசிங் என சகலத்தையும் வீட்டின் ஒரு பகுதியிலேயே தனி ஸ்டுடியோ அமைத்து செய்கிறார். ஸ்டுடியோவின் பெயர் “the clinic”

இவர் குழுவில் உள்ளவர்களைப் பற்றிய விவரம்

பலாஷ் சென் – நிறுவனர், பின்னணிப் பாடகர்
வைஷாலி பரூவா, கிருத்திகா முரளிதரன் & காமாக்ஷி கன்னா – இணைந்து பாடுபவர்கள் (கோரஸ் போன்றவற்றில் இவர்கள் குரல் பங்களிப்பு கண்டிப்பாக இடம் பெறும்)
தேபஜோதி படூரி – பேஸ் கிடார்
ராகேஷ் பரத்வாஜ் – டோலக் வாசிப்பவர்
பரத் ராஜ் பஹதூர், அம்போரிஷ் சைக்கியா, &ஆதித்ய ஷங்கர் பனியா – கிடாரிஸ்ட்கள்
விநாயக் குப்தா – கீ போர்ட்
அஷ்வானி வர்மா – ட்ரம்ஸ் வாத்தியக் கலைஞர்
பிரஷாந்த் திரிவேதி – தபேலா வாசிப்பவர்

மறக்க முடியாத சொக்க வைக்கும் பல பாடல்களைத் தந்திருந்தாலும் இரண்டு பாடல்களை மட்டும் இங்கு குறிப்பிட விரும்புகிறேன் (ஒரு பானை சாதத்திற்கு இரு பருக்கை)

  1. Kabhi Aana tu meri… (Album : Gully)
    மேற்கத்திய வாசனை எதுவும் இல்லாமல் இயல்பாக நம் இந்திய இசையில் பாடல் உருவாக்கப்பட்டிருக்கும் அடுத்து காட்சியமைப்பு. மிக எளிமையான முறையில் படாடோபம் தவிர்த்து கல்யாண வீடு, கல்யாணத்திற்கு தயாராகும் இரு குடும்பத்தினர், கல்யாண சடங்குகள் என சகலமும் காட்சியாக பதிவு செய்யப்பட்டிருக்கும். அடுத்து பலாஷ் சென் அவர்களின் குரல். லாவகமாக பாடும் பாடகர்களில் யாவரும் ஒருவர். உச்சஸ்தாயில் பாடும் போது குரல் மாறாது. ஸ்தாயியை குரல் விகாரப்படாது எப்படி மாற்றிப் பட வேண்டும் என்பதை அறிந்தவர். முறையாகப் பயின்ற நம் பாரம்பரிய சாஸ்திரிய சங்கீதமான ஹிந்துஸ்தானி கை கொடுக்கிறது போல!

துவக்கத்தில் நாயகனுக்கு சோகமான நிகழ்வு என்பது போல் சித்தரித்து (ஆனால் காட்சிகளில் அவ்வாறு இருக்காது) சுபமான முடிவுடன் பாடல் நிறைவடையும்.

இன்னொரு முக்கியமான விஷயம் : இந்த ஆல்பம் 2003 ஆம் ஆண்டு வெளியானது. ஹிந்தித் திரைப்படங்களில் அறிமுகமாவதற்கு முன்பாக ஆல்பத்தில் தோன்றி ஒரு பிரபல நடிகை அறிமுகமானார். இந்த ஆல்பம் வெளிவரும் போது அவர் ஒரு பெங்காலி திரைப்படத்திலும் நடித்திருந்தார். அதன் பின் ஹிந்தித் திரைப்படங்களில் நடித்து கலக்கினார். அவர் : வித்யா பாலன்

இந்தப் பாடலைப் பார்த்து கேட்டு ரசிக்க இக்கொழுவியை சொடுக்குங்கள் : https://www.youtube.com/watch?v=DH2sQ_je5v8

  1. Maaeri… (Phir Dhoom)
    Euphoria பற்றிப் பேசும்போது இந்தப் பாடலைக் குறிப்பிடாமல் என்னால் இருக்கவே முடியாது.

என் மனதுக்கு மிக மிக மிக நெருக்கமான பாடல்களில் ஒன்று. 2000 ஆவது ஆண்டில் வெளியான ஆல்பம் இது. எம் டிவி மூலமே பரிச்சயம். வழக்கம் போல் ரெக்கார்டிங் சென்டர், டிடிகே 90 கேஸட், ரீவைண்ட் செய்து செய்து கேட்கும் கிறுக்குத்தனம் என அனைத்தையும் இப்பாடல் உருவாக்கியது.

பாடலை ரயில் பிரயாணத்தின் போது கேட்க வேண்டும், ரயில் செல்லும் பிராந்தியம் தமிழ் மொழி பேசும் இடமாக அல்லாது வேற்று மாநிலமாக இருக்க வேண்டும். பெரியதொரு ஆற்றைப் பாலம் வழியாக ரயில் கடக்கும் போது நதியைப் பார்த்தபடி இப்பாடலைக் கேட்க வேண்டும், இப்படி ஏராளமான பேராசைகளை இப்பாடல் எனக்குள் விதைத்தது.

2004 ஆம் ஆண்டு மருத்துவ உபகரணங்கள் தயாரித்து விற்பனை செய்யும் ஒரு நிறுவனத்தில் டெரிட்டரி மேனேஜர் உத்தியோகத்திற்கு தேர்வானேன். ட்ரெயினிங்குக்கு தில்லி செல்ல வேண்டியிருந்தது. அப்பயணத்தின் போது வாக் மேன் துணையுடன் என் பேராசைகள் அனைத்தையும் நிறைவேற்றிக் கொண்டேன்.
இப்பாடலின் காட்சியமைப்பை கூர்ந்து கவனியுங்கள், சோகம் ஒன்று இழையோடும் ஆனால் நாயகனின் முகபாவம், உடல்மொழி போன்றவை அந்த சோகத்தைக் கொண்டாடி அழுகை சூழலை உருவாக்காது ஆனால் உணர்வுகளை…

நண்பர்கள் இந்தப் பாடலை அலைபேசியில் சேமித்துக் கொள்ளுங்கள். ரயில் பயணத்தின் போது ஆற்றுப் பாலத்தின் மேலே வண்டி செல்கையில் பாடலைக் கேட்டபடி நீர் பிரம்மாண்டத்தைப் பாருங்கள்.

மொழி அறியாத, பரிச்சயமே இல்லாத ஏதோ ஒரு ரயில்வே ஸ்டேஷனில் இரவு வண்டி நிற்கையில் இப்பாடலைக் கேட்டபடி சூடாக ஒரு தேநீரை அருந்துங்கள்.
ஸ்படிகம் போல் மனம் மாறி, பாடல் காதில் ஒலிக்கும் அந்த தருணத்தில் மனம் மிகப் புனிதமான நிலையை நிச்சயம் எட்டும்.

பாடலைக் கேட்க இக்கொழுவியை சொடுக்குங்கள் : https://www.youtube.com/watch?v=7E1xbX-QSGY

துவக்கத்தில் ரயில், ரயில் நிலையம் பற்றியெல்லாம் ஏன் குறிப்பிட்டேன் எனப் புரிந்துகொண்டிருப்பீர்கள் என நம்புகிறேன்.

(தொடரும்)

Facebook Comments Box
What’s your Reaction?
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here