ஹாய் மக்களே!!! வந்துட்டேன் காதலை தேடி… அடுத்த அத்தியாயத்தோட…. போன எபிக்கு லைக்ஸ், கமெண்ட்ஸ் போட்ட அனைத்து தோழிகளுக்கும் நன்றி!! நன்றி!! அதே மாதிரி இந்த ஏபி படிச்சுட்டு எப்படி இருக்குனு கமெண்ட்ஸ் சொல்லுங்க…. மீ வெய்டிங்….
காதலை தேடி….. – 22
“அம்மா என்னாச்சு? ஏன் இப்படி அழறீங்க?”
“என்னனு தெரியல கா… ஏதோ ஒரு போன் வந்தது… பேசிட்டே இருந்தவங்க திடிர்னு அழ ஆரம்பிச்சுட்டாங்க… என்னனு கேட்ட சொல்லமாற்றங்க…”
கீழே சென்ற வினோத், சரோஜாவிடம் கூற அவரும் காவ்யாவின் வீட்டிற்கு வந்துவிட அங்கே அனைவரும் வசந்தவிடம் என்னவென்று கேட்க யாருக்கும் பதில் சொல்லாமல் அவரின் அழுகை அதிகரித்தது.
“மா… முதல்ல அழுகறத நிறுத்திட்டு என்னனு சொல்லுங்க” என பாலா அதட்ட, “உங்க அப்பா வேலை பார்க்கும் போது மயக்கம் போட்டு விழுந்துட்டாராம். அவரை மருத்துவமனையில் சேர்த்து இருக்காங்களாம்” என அவர் கூறியதை கேட்டு காவ்யாவும் பதற, சந்திரன் சூழ்நிலையை கையில் எடுத்தார்.
உடனே ஒரு டாக்ஸியை அழைத்தவர் வசந்தா, காவ்யா, பாலாவுடன் அவரும் மருத்துவமனைக்கு சென்றார்.
அங்கே காவ்யாவின் தந்தை பெருமாள் தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிக்க பட்டிருந்தார். அவரை அந்த நிலையில் பார்த்த வசந்தா, மயக்கம் போட்டு விழ யாரை பார்ப்பது என தெரியாமல் அனைவரும் திகைத்து நின்றனர்.
காவ்யாவை வசந்தாவுடன் இருக்க வைத்துவிட்டு சந்திரன், பாலாவுடன் இருந்தார். அதிர்ச்சியில் மயக்கம் போட்டு விழுந்த வசந்தா மீண்டும் கண் முழிக்க ஒரு நாள் ஆகியது. அதுவரை காவ்யா பெருமாளையும், வசந்தாவையும் மாறி மாறி பார்த்து கொண்டாள். கூடவே சரோஜாவும் தங்கிவிட காவ்யாவிற்கும் பாலாவிற்கு சற்று தெம்பாய் இருந்தது.
முழுதாக இரண்டு நாள் சிகிச்சைக்கு பிறகு மருத்துவர்கள் பெருமாளின் குடும்பத்தை அழைத்தார். அனைவரும் உள்ளே பதற்றத்துடன் செல்ல, சந்திரன் “டாக்டர், பெருமாளுக்கு ஒன்னும் இல்லையே? அவரு நல்லாயிருக்காரு தானே?”
“பெருமாளுக்கு வந்திருக்கறது பக்கவாதம். அதாவது அவருடைய இடது பக்க மூளைக்கு போக வேண்டிய இரத்தம் போறதுல அடைப்பு ஏற்பட்டு இருக்கு. அதை ஆஞ்சியோபிளாஸ்ட்டி (Angioplasty) மூலமா சரி பண்ணியாச்சு. ஆனாலும் அவருடைய உடலோட வலது பக்கம் பாதிக்கப்பட்டிருக்கு. அதனால அவருடைய வலது கை, கால் இப்போதைக்கு செயல் இழந்து போயிருக்கு” என மருத்துவர் கூற, வசந்தா சத்தம் போட்டு அழத் தொடங்கிவிட்டார். அவரை அறையில் இருந்து வெளியே கூடி வந்த சரோஜா அவருக்கு ஆறுதல் கூற சந்திரன், காவ்யா, பாலா மூவரும் கவலையுடன் மருத்துவர் சொல்வதை கேட்டுக்கொண்டிருந்தனர்.
காவ்யா கண்களில் வழிந்த நீரை துடைத்துக் கொண்டு “அப்பாவ குணமாக்கிடலாமா டாக்டர்?”
“அவரை சரியான நேரத்துல மருத்துவமனைக்கு கூட்டிட்டு வந்ததால அவருக்கு செய்ய வேண்டிய சிகிச்சை எல்லாம் செய்தாச்சு. அதனால இன்னும் ஒரு வாரம் அவர் மருத்துவமனையிலேயே இருக்கட்டும். அதுக்கப்புறம் நீங்க அவரை வீட்டுக்கு கூட்டிட்டு போகலாம்”.
“அப்போ அவருடைய கை, கால் சரியாகிடுமா டாக்டர்” – சந்திரன்
“அதுக்கு பிசியோதெரபி கொடுக்கணும். அது மூலமா அவருக்கு கொஞ்சம் கொஞ்சமா பழைய நிலைக்கு திரும்ப வாய்ப்பிருக்கு”.
பின் மருத்துவர் கூறிய ஆலோசனைகள் அனைத்தும் கேட்டுக்கொண்டு வெளிய வந்த காவ்யா, தன் தாயிடம் சென்று “அம்மா, அப்பாக்கு ஒன்னும் இல்ல. சீக்கிரம் சரியாகிடும்னு டாக்டர் சொல்லிட்டார். நீங்க கவலை படாம இருங்க” என அவருக்கு ஆறுதல் கூறியவள் மனதுக்குள் அழுது கொண்டிருந்தாள்.
அவளும் அழுதால் வசந்தாவை தேற்றுவது கடினம் என தன் கண்ணீரை கட்டுப்படுத்தி கொண்டிருந்தாள். காவ்யாவின் தந்தை உடல் நிலை பற்றி கேள்விப்பட்டவுடன் கிருஷ்ணா, மதுரா வந்து பார்த்துவிட்டு காவ்யாவுக்கு ஆறுதல் சொல்லிவிட்டு சென்றனர்.
பெருமாளுக்கு இரண்டு வாரம் கழித்து பிசியோதெரபி ஆரம்பிக்கலாம் என மருத்துவர் கூறிவிட, முழுதாக ஒருவாரம் மருத்துவமனையில் இருந்தவர், பல அறிவுரைகளுடன் வீட்டிற்கு அனுப்பப்பட்டார்.
அதுவரை அலுவலகத்துக்கு விடுமுறை சொல்லியிருந்த காவ்யா மீண்டும் அலுவலகம் செல்ல ஆரம்பித்தாள். பெருமாளுக்கு தாம்பரத்தில் ஆறு வீடுகளும், இரண்டு கடையும் வாடகைக்கு விட்டு இருந்ததால் வருமானத்திற்கு எந்த பிரச்சனையும் இல்லை.
#
இரவு ஒரு மணிக்கு அருளின் கைபேசியில் வைத்திருந்த அலாரம் அலறியது. அதை அணைத்தவன் எழுந்து குளிக்க சென்றான். அதிகாலை மூன்று மணிக்கு விமானம். குளித்து முடித்து தன் பொருட்களை எடுத்து கொண்டு விமான நிலையத்துக்கு புறப்பட்டான். விமானம் புறப்பட இன்னும் அரை மணிநேரம் இருந்தது. அனைத்து சோதனைகள் முடித்தபின் தன் கைபேசியை பார்த்தவன் மதுராவிடமிருந்து பல குறுஞ்செய்திகள் வந்திருந்தன. அதுவே அவள் இன்னும் உறங்காமல் அவனின் பதிலிற்காக விழித்துக் கொண்டிருக்கிறாள் என்பதை காட்ட அவளிற்கு பதில் செய்தி அனுப்பிவிட்டு விமானத்தில் ஏறினான்.
அடுத்த ஒன்பது நாட்களும் அருளிடமிருந்து எந்த தகவலும் இல்லை. ஐரோப்பா சென்றடைந்தவன் தான் பத்திரமாக வந்துவிட்டதாக குறுஞ்செய்தி அனுப்பியதோடு சரி.. அதன்பின் எந்த தகவலும் இல்லை. மதுராவும் அவனின் குறுஞ்செய்திக்காக தினமும் இரவு உறங்காமல் விழித்துக் கொண்டிருக்க ஆனால் எந்த வித பலனும் இல்லை.
அருள் மாநாட்டை நல்ல படியாக முடித்துக் கொண்டு மாலை நான்கு மணிபோல் சென்னை வந்தடைய, தன் பொருட்களை எல்லாம் சேகரித்து கொண்டு வெளியே வர, அவனின் வருகைக்காக மதுரா வெளியே காத்துக் கொண்டிருந்தாள்.
அவளை அங்கு சற்றும் எதிர்பார்க்கதவன், “ஏய் மதுரா!!! என்ன சொல்லாம கொள்ளாம வந்திருக்க?”
“ஆமா… நான் வரேன்னு சொல்லியிருந்தா வா.. வா.. உன்ன பார்த்து ரொம்ப நாள் ஆயிடுச்சு.. உன்ன பார்க்காம எனக்கு சாப்பிட பிடிக்கல.. தூங்க பிடிக்கலைனு அப்படியே உருகியிருப்பிங்க… அதான் சொல்லாம வந்தேன்…” என அவள் கூற, “சரி… சரி… உன்மேல இருந்த கோபத்துல பேசாம இருந்துட்டேன்..விடு .. நீ அப்படியே வீட்டுக்கு கிளம்புறியா?”
“என்னது வீட்டுக்கு கிளம்பணுமா??? உங்களை பார்க்கலாம்னு வந்தா வீட்டுக்கு கிளம்பு சொல்றிங்க?”
“எனக்கு ரொம்ப சோர்வா இருக்கு… இன்னைக்கு இராத்திரி ஊருக்கு கிளம்புறேன்…”
“இன்னைக்கு கொஞ்சம் ஒய்வு எடுத்துட்டு நாளைக்கு கிளம்பலாம்ல?”
“அம்மா ஏற்கனவே ஊருக்கு வர சொல்லியிருந்தாங்க… அக்காவும் வீட்டுக்கு வந்திருக்காங்களாம்… அதனால நானும் வரேன்னு சொல்லிட்டேன்..”
“அருளை பார்த்து ஒருமாதத்திற்கும் மேல் ஆகிவிட்டது. இன்றைக்காவது அவனுடன் பேசலாம் என்றால் அவன் இன்றே ஊருக்கு கிளம்புவதாக சொல்ல, காதல் கொண்ட மனதிற்கு ஏமாற்றமாய் இருந்தது. இருப்பினும் தன் ஏமாற்றத்தை மறைத்துக் கொண்டு “எத்தனை மணிக்கு கிளம்புறீங்க?”
“இரவு ஒன்பது மணிக்கு…”
“சரி அப்போ நான் ஒரு ஏழு மணிவரை உங்க கூட இருந்துட்டு போறேன் என தன் ஆசையை வெளிப்படுத்தியவளை காதல் பொங்க பார்த்தான் அவளின் காதலன். இருவரும் வீடு வந்து சேர்ந்தனர். அருள் வீடு முழுக்க சுத்தம் செய்யாமல் இருக்க, அவன் குளித்து முடித்து வருவதற்குள் வீட்டை ஒழுங்குபடுத்தினாள்.
குளித்து முடித்து உடை மாற்றி கொண்டு வெளியே வந்தவன் மதுராவை தேட, வெளியே தூறிக் கொண்டிருந்த மழையை ரசித்தபடி நின்று கொண்டிருந்தாள். அவளை பின்னல் இருந்து அணைத்தவன் அவளின் தோளில் முகம் புதைக்க மதுரா சிலையாகிப் போனாள். சிறிது நேரம் அசையாமல் நின்றிருந்தவன் அவளது கன்னத்தில் தன் விரலால் கோலம் போட அவனின் தீண்டலில் மெய் மறந்து நின்றாள். அவன் மேலும் முன்னேற தன்னவனுக்காக, தன் உயிரினும் மேலானவனுக்காக மங்கையவள் தன்னை கொடுக்க முன்வந்தாள்.
திடிரென்று கேட்ட இடி சத்தத்தில் தன் நிலையை உணர்ந்தவன் சட்டென்று அவளிடமிருந்து விலகினான். மதுரா புரியாமல் பார்க்க அவளின் முகத்தை பார்க்காமல் “மணி ஏழாகிடுச்சு… நீ கிளம்பு..” என கூற அவளும் எவ்வித மறுப்பும் கூறாமல் தன் வீட்டிற்கு கிளம்பினாள்.
தன் போக்கை எண்ணி தன்னையே நொந்து கொண்டவன் இரவு ஒன்பது மணிபோல் அபிராமிபுரத்துக்கு கிளம்பினான்.
அடுத்த இரண்டு நாட்கள் அபிராமிபுரத்தில் இருந்தவன் தன் தாயிடம் மெதுவாக தன் காதல் விவகாரத்தை கூறினான். அவன் கூறியது அனைத்தையும் அமைதியாக கேட்டுக் கொண்டவர் ஒன்றும் கூறாமல் சமையல் வேலையை தொடர்ந்தார்.
இரவு சாப்பிட்டு முடித்து தன் அறைக்கு செல்ல போனவனை அழைத்த அவனின் தந்தை கந்தசாமி, “என்னடா அருள்.. அம்மா என்னனோவோ சொல்றா?? ஏதோ மெட்ராஸ்ல ஒரு பொண்ணை காதலிக்குறியாம்?”
“ஆமாம் பா…”
“சரிப்பா.. அப்போ இதுவே நீ வீட்டுக்கு வரது கடைசியா இருக்கட்டும்… இனிமே உனக்கு அப்பா, அம்மா, அக்கானு யாரும் இல்லை…”
“என்னப்பா இப்படி பேசுறீங்க?”
“பின்ன எப்படி டா பேச சொல்ற? இந்த காதல்லாம் எதுக்குடா? உங்கப்பனை ஊருக்குள்ள அசிங்கப்படுத்தணும்னு முடிவு பண்ணிட்டியா? அப்படி அந்த பொண்ணு தான் உனக்கு வேணும்னா எங்களை மறந்துடு…”
“உனக்கு, நான் எங்கெல்லாம் பொண்ணு பார்த்துட்டு இருக்கேன் தெரியுமா?? நீ படிச்ச படிப்புக்கு ஏத்த மாதிரி டாக்டர் படிச்சா பொண்ணா, நல்ல வசதியான பொண்ணா, நகை நட்டு, காரு, நிலம், நம்ம இனத்துல நான் ஊரெல்லாம் தேடிட்டு இருந்தா நீ எவளோ ஒருத்திய காதலிக்குறேனு சொல்ற…” என அவன் தாய் சுமதி அழ ஆரம்பிக்க என்ன சொல்வேதென்று தெரியாமல் அமைதியாக நின்று கொண்டிருந்தான்.
“இங்க பாருடா… என்னோட முடிவு இதுதான்… வேற ஜாதி பொண்ண உனக்கு கல்யாணம் பண்ணிவச்சு இந்த ஊரு, நம்ம சொந்தக்காரங்க முன்னாடி என்னால அசிங்கப்பட்டு நிக்க முடியாது…. உனக்கு அந்த பொண்ணு தான் வேணும்னா… எங்களை மறந்திடு… நாங்க தான் வேணும்னா ஒழுங்கா படிச்சிட்டு நல்ல வேலைல சேருற வழியை பாரு..” என கூறி கந்தசாமி சென்றுவிட சுமதி ஒரு மூலையில் உட்கார்ந்து அழ ஆரம்பித்துவிட்டார்.
என்ன செய்வதென்று தெரியாமல் அந்த இரவை கழித்தவன் அடுத்த நாள் மாலை சென்னைக்கு கிளம்பினான். அவன் கிளம்பும் வரை கந்தசாமி, சுமதி இருவரும் அவனிடம் ஒருவார்த்தை கூட பேசவில்லை.
அடுத்த நாள் அருளிடமிருந்து மதுராவிற்கு மாலை ஐந்து மணிக்கு கடற்கரை வருமாறு குறுஞ்செய்தி வந்திருந்தது. எப்போதும் மதுரா தான் அருளை பார்க்க வேண்டும் என அவனை வரச் சொல்லுவாள். ஆனால் இன்று அவனே அவளை பார்க்க வேண்டும் என கூறியதும் அவள் மனம் வானத்தில் பறக்க தொடங்கியது. எப்போதும் போல் இன்றும் சரியாக சொன்ன நேரத்திற்கு கடற்கரை சென்று காத்துக்கொண்டிருந்தாள் மதுரா.
அவளிடம் எப்படி சொல்வேதென எண்ணியவாறே வந்து சேர்ந்தான் அருள்.
வழக்கத்தை விட உற்சாகமாக பேசிக்கொண்டிருந்தவளிடம் எப்படி ஆரம்பிப்பது என யோசித்துக் கொண்டிருந்தவனிடம், “அருள், நேத்து ஒரு வரன் வந்துருக்குனு அப்பா ஒரு மாப்பிளை போட்டோ காமிச்சாங்க… ஜாதகம் எல்லாம் நல்லாயிருக்கு… நேர்ல பார்க்க வர சொல்லட்டுமான்னு கேட்டாங்க… நான் தான் எனக்கு மாப்பிளை பிடிக்கலைனு சொல்லி வேண்டாம்னு சொல்லிட்டேன்… இன்னும் எத்தனை நாளைக்கு இது மாதிரி அவங்களை ஏமாத்துறாதுன்னு தெரியல…”
“நேத்து எங்க வீட்ல நம்ம காதலை பத்தி சொன்னேன்…”
“என்ன சொன்னாங்க உங்க அப்பா, அம்மா?”
“இரண்டு பேரும் ஒத்துக்கல… உன்னை கல்யாணம் பண்ணிக்கிட்டா வீட்டு பக்கமே வரக்கூடாதுன்னு அப்பா சொல்லிட்டாரு… அம்மா ஒரே அழுகை… என்கூட ரெண்டு பேரும் பேசவே இல்லை…”
“சரி அருள்… இது எதிர்பார்த்தது தானே? நீங்களும் உங்களோட முடிவுல உறுதியா இருந்தா அவங்களே நம்ம கல்யாணத்துக்கு ஒத்துப்பாங்க…. பெத்தவங்கள கஷ்டப்படுத்திட்டு அவங்களோட ஆசிர்வாதம் இல்லாம வாழுற வாழ்க்கை வேண்டாம்… எவ்வளவு நாள் ஆனாலும் நாம காத்திருப்போம். என்னை வேண்டாம்னு சொல்லறத்துக்கு காரணம் நாம ரெண்டு பேரும் வேற ஜாதிங்கறது தானே?”
“ம்ம்ம்… அதுமட்டுமில்லாம எங்க அம்மா வரப்போற பொண்ணு நல்ல வசதியா இருக்கணும்னு எதிர்பார்க்குறாங்க..”
“வசதியானா?”
“எங்க அக்காவுக்கு கல்யாணம் பண்ணும் போது எழுபது பவுன் நகை போட்டோம்… இப்போ எனக்கு வரப்போற பொண்ணு ஒரு நூறு பவுனாது போடணும்… அப்புறம் கார், வீடுன்னு எதிர்பார்க்குறாங்க… சரி ஒருவேளை எங்க வீட்டுல கல்யாணத்துக்கு ஒத்துக்கிட்டா உங்க வீட்ல எவ்ளோ நகை போடுவாங்க?”
அவனின் கேள்வியில் பேச்சு வராமல் அதிர்ச்சியாகியிருந்தவளை தோளை தொட்டு உலுக்கினான். சடாரென்று அவனை விட்டு விலகி உட்கார்ந்தவள், “என்ன கேட்டீங்க?”
“உங்க வீட்ல எவ்ளோ போடுவாங்கனு கேட்டேன்?”
“ஏன்? நகை போடுவாங்க… கார், வீடு கொடுப்பாங்கனு தான் என்னை காதலிச்சிங்களா?”
“அப்படி இல்லை… ஒரு பேச்சுக்கு தான் கேட்டேன்..”
“சரி நீங்க எதிர்பார்க்கறது போடலைனா என்னை கல்யாணம் பண்ணிக்க மாட்டிங்களா?”
“நான் அந்த அர்த்தத்துல சொல்லல மதுரா…”
“அருள்… நீங்க இப்படி இருப்பிங்கனு நான் நினைச்சு கூட பார்க்கல..”
“இங்க பாரு மதுரா… கொஞ்சம் நடைமுறையை யோசிச்சு பாரு… நாம ரெண்டு பேரும் வேற வேற ஜாதி… நான் இந்த கல்யாணத்துக்கு எங்க வீட்ல சம்மதம் வாங்கணும்னா இந்த மாதிரி ஏதாவது இருந்தா தான் கொஞ்சம் சீக்கிரம் சம்மதிப்பாங்க…”
“அப்போ காதலிச்சு கல்யாணம் பண்ணிக்கிறவங்களாம் இந்த மாதிரி வரதட்சணை வாங்கியோ இல்ல வசதியான விட்டு பொண்ணுங்களா இருந்தா தான் கல்யாணம் பண்ணிக்குறாங்களா?”
“இங்கபாரு.. கொஞ்சம் ப்ராக்டிகலா யோசிச்சு பாரு… என்னோட படிப்புக்கும், தகுதிக்கும், அந்தஸ்துக்கும் ஏத்த பொண்ணாதான எங்க வீட்ல பார்ப்பாங்க…”
“அப்போ உங்க தகுதிக்கும், படிப்புக்கும் ஏத்தவளா நான் இல்லைனு சொல்றிங்களா? காதல்ல தகுதி, அந்தஸ்து, படிப்புலா எங்க வந்துச்சு? எதையுமே எதிர்பார்க்கமா வரது தானே காதல்?”
“நீ சொல்றது சரி தான்… எதையுமே எதிர்பார்க்கமா வரது தான் காதல்…. ஆனா கல்யாணத்துக்கு இதெல்லாம் பார்க்கத்தானே செய்வாங்க?”
“பெத்தவங்க முதல்ல காதலுக்கு ஒத்துக்கலைனாலும் தங்களோட பிள்ளைகளின் சந்தோஷத்திற்காக மனசு மாறிடுவாங்க…நாம காதலிக்குறோம்னு சொன்னவுடனே எந்த பெத்தவங்களும் சம்மதிக்க மாட்டாங்க…. நாம கஷ்டப்பட்டு போராடித்தான் நம்ம காதலை அவங்களுக்கு நிரூபிக்கணும்…”
“இந்த மாதிரி பிரச்சனை வரும்னு தெரிஞ்சு தான் நான் முதல்லயே மறுத்திட்டேன்… நீ தான் காதலிக்குறேனு வந்து நின்ன…”
“ஆமா அருள்… நான் தான் காதலிக்குறேனு முதல்ல சொன்னேன்… முதல்ல மறுத்தவர் அப்புறம் ஏன் ஒத்துக்கணும்?”
“சரி தான்.. தப்பு என் மேல தான்… இப்படி தான் முடிவு இருக்கும்னு தெரிஞ்சும் நான் தான் தப்பு பண்ணிட்டேன்….”
“அருள்…. நான் சொல்றத கொஞ்சம் கேளுங்க…. கொஞ்ச நாள் போகட்டும்… அப்புறம் உங்க அப்பா, அம்மா கிட்ட பேசுங்க… நாம உறுதியா இருந்தா அவங்களே நம்ம கல்யாணத்துக்கு ஒத்துப்பாங்க…”
“அதெல்லாம் ஒத்துக்க மாட்டாங்க மதுரா… நல்ல வேலை… அன்னைக்கு ஒன்னும் நம்மள மீறி நடக்கலை… ஒருவேளை நடந்திருந்தா என்ன மாதிரி விளைவுகளை ஏற்படுத்திருக்கும்…. எல்லாம் என்னை சொல்லணும்… நீ தான் வந்தனா எனக்கு எங்க போச்சு அறிவு?”
“என்ன சொன்னிங்க? இப்போ என்ன சொன்னிங்க? நான் வந்தேனா?”
“ஆமா… அன்னைக்கு நான் கொஞ்சம் சுதாரிச்சு விலகலனா இந்நேரம் என்னன்னமோ நடந்திருக்கும்…. தெரியமா உன்கிட்ட மாட்டிகிட்டு இப்போ நான் அவஸ்தைபட்டுட்டு இருக்கேன்… நீ தான் முதல்ல வந்து காதலிக்குறேன்னு சொன்ன… அன்னைக்கு உன்ன தொட்டப்போ கூட விலகாமல் இருந்தியே…”
அவன் கூறியதை கேட்டவளின் கண்களில் கண்ணீர் அருவியாய் கொட்ட, இந்த நிமிடமே தன் உயிர் பிரிந்துவிட கூடாதா என எண்ணினாள். இந்த வார்த்தை கேட்கவா உருகி உருகி அவனை காதலித்தாள்? இவனுக்காகவா தன் பெற்றவர்களை ஏமாற்றி கொண்டிருக்கிறாள்? இவனுக்காகவா தன்னையும் முழுதாக கொடுக்க துணிந்தாள்?
அவன் பேசிய வார்த்தைகளை ஜீரணிக்க முடியாதவள் அமைதியாக கடலை வெறித்து கொண்டிருக்க, தான் பதில் பேசவில்லை என்றால் அவன் கூறியது அனைத்தும் உண்மையென்றாகிவிடும்… அவள் பேச வேண்டிய கட்டாயத்தை உணர்ந்து பேச ஆரம்பித்தாள்..
“மிஸ்டர். அருள்… நீங்க சொன்னது எல்லாமே உண்மை தான்… நான் தான் உங்ககிட்ட வந்து என்னோட காதலை முதல்ல சொன்னேன்… ஆனா நீங்க முடியாதுனு மறுத்தவுடனே நான் உங்கள எந்த விதத்துலேயும் தொந்தரவு பண்ணல… ஒரு பொண்ணு அவளா வந்து காதலை சொன்ன அவ உங்களுக்கு தப்பான பொண்ணா? எக்காரணத்தை கொண்டும் என்னோட காதல் உங்களுக்கு தெரியாமல் எனக்குள்ளே மரிக்க நான் விரும்பலை.. அதனால தான் ஒரு பொண்ணு என்பதையும் மீறி நானே உங்ககிட்ட என்னோட காதலை சொன்னேன்.. அதை என்னைக்கும் நான் தப்புனு நினைச்சதில்லை… அப்புறம் என்ன சொன்னிங்க… நீங்க தொட்டப்போ நான் விலகாம சம்மதிச்சேன்… அதுக்கு காரணம் உங்களை நான் நம்பியது தான்…. என்னையே உங்களுக்கு நான் தர நினைச்சதுக்கு காரணம் உங்கள விட எனக்கு எதுவும் பெருசு இல்லைனு நினைச்சு தான்…. ஆனா உங்க மனசுல இப்படி ஒரு “உயர்வான” எண்ணம் என்னை பத்தி இருக்கும்னு தெரிஞ்சிருந்தா உங்களை விட்டு என்னைக்கோ ஒதுங்கி இருப்பேன்….
“அப்புறம்… நகை, வீடு, கார்…. முக்கியமா தகுதி…. இதெல்லாம் எனக்கு இல்லமா இருக்கலாம்… ஆனா உங்க மேல காதல்… அது நிறைய இருந்துச்சு… என்னோட உயிரைவிட பெருசா உங்க காதலை நினைச்சேன்… அதனால தான் என்னையே உங்ககிட்ட கொடுக்க நினைச்சேன்…. எனக்கு ஒரு சில கேள்விகள் உங்க கிட்ட கேட்கணும்…. நீங்க ஆம்பள தான?”
“ஏய்… என்ன வார்த்தை வேற மாதிரி வருது?”
“இல்ல… ஒருவேளை மீசை வச்சிருக்கதால உங்கள ஆம்பளைன்னு நினைச்சிட்டிங்களோ? மீசை வச்சிருக்கவன்லா ஆம்பளை இல்ல… தன்னை நம்பி வர பொண்ணை கடைசி வரை காப்பாத்துருவன் தான் ஆம்பள…. உங்க தகுதிக்கும், அந்தஸ்துக்கும் ஏத்த பொண்ணு நான் கிடையாது… அதே மாதிரி நான் எதிர்பார்க்கிற ஆம்பளை நீங்க கிடையாது” என கூறியவள் தன் கைப்பையை எடுத்து கொண்டு வேகமாக அங்கிருந்து நடந்தாள்.
தேடல் தொடரும்….