அது மட்டும் இரகசியம் – 15

0
192

சூரியன் ஆரஞ்சு வண்ண பந்து போல தன் உருவத்தை மாற்றிக்கொண்டு அஸ்தமனமாகப்போகும் அந்த மாலை வேளையில் ராமின் கார் அந்த சாலையில் வழுக்கிக்கொண்டு சென்றுகொண்டிருந்தது .

காரை ராம் செலுத்திக்கொண்டிருக்க அவன் அருகில் உள்ள இருக்கையில் ராஜீவ் அமர்ந்திருக்க விஷ்ணுவும் வேதாவும் பின் இருக்கையை ஆக்ரமித்திருந்தனர் . நாள் முழுவதும் அந்த சுற்றுலாத்தலத்தினை நன்றாக சுற்றிப்பார்த்ததில் சிறிது களைத்திருந்தனர் . ஆனாலும் அந்த இடத்தின் அழகானது மனத்தில் ஒருவித கிளர்ச்சியை இவர்களுக்குள் பதித்துவிட்டுத்தான் அனுப்பியிருந்தது .

அடுத்த இரண்டுமணி நேரத்தில் அவர்கள் வீட்டை அடைந்தனர் . அங்கே ஹாலில் ராமின் தந்தை ஈஸ்வரபாண்டியன் அவ்வூர் பெரிய மனிதர்களோடு ஏதோ பேசிக்கொண்டிருந்தார் . ராமினைக் கண்டதும் அவனை அருகே அழைத்தார் .

அருகே சென்றவனிடம் “ தம்பி ….. நம்ம கோவில்ல திருவிழா நடத்தறதை பத்திதான் இங்க பேசிட்டு இருக்கோம் . எனக்கு அப்புறம் இதை எல்லாம் நீதான் எடுத்து நடத்தனும் . இப்பவே அதே எப்படி எல்லாம் செய்யனும்னு கூட இருந்து கத்துக்கனும் . இன்னும் ஒரு வாரம் பத்து நாள்ள திருவிழாக்கான எல்லா ஏற்பாடும் முடிக்கனும் … நாளும் ரொம்ப குறைவா இருக்கு … அதனால என்னால மட்டும் தனியா செய்யமுடியாது … நீயும் என் கூட ஒத்தாசையா இருக்கனும் … புரியுதா ? என ஒரு வித மிடுக்குடன் கூறியவரின் சொல்லுக்கு “ சரிப்பா … நீங்க சொல்ற மாதிரியே செய்றேன் “ என சம்மதம் கூறி அங்கிருந்து நகன்றான் .

நடப்பதை எல்லாம் பார்த்துக்கொண்டிருந்த விஷ்ணுவிடம் வந்த ராம் “ என்னடா விஷ்ணு இப்படி ஆகிடுச்சு …. நான் உங்க கூட இன்னும் நல்லா என்ஜாய் பண்ண ஆசையா இருந்தேன் … ஆனா அப்பா இப்படி இவ்வளவு பெரிய வேலையை என் தலையில கட்டிட்டாரேடா ! “ என சற்று வருத்தம் மேவிய குரலில் கூறினான் .

“ ஏய் இதுக்கெல்லாம் போய் ஃபீல் பண்ணிக்கிட்டு … கிராமத்து திருவிழாலாம் நான் பார்த்ததே இல்ல . எனக்கே ரொம்ப எக்ஸைட்மென்ட்டா இருக்கு … அப்பா ஹெல்ப் தானே கேக்குறார் … நீயும் இதையெல்லாம் கத்துக்கிடனும் இல்லையா … சோ ஃபீல் பண்ணாம போய் இருக்குற வேலையைப்பாரு என சொல்லிவிட்டு தனதறைக்கு சென்றான் விஷ்ணு .

என்னதான் வெளியில் தான் இயல்பாக இருப்பதைப்போல் காட்டிக்கொண்டாலும் மனத்தினில் ஒரு பிரளயமே நடந்துகொண்டிருந்தது அவனுக்கு . காலையில் தன் மீது மோதிய அந்த வளவனைப்போன்ற தோற்றம் கொண்டவனைப்பார்த்த பொழுதிலிருந்தே இதே நிலைதான் நீடித்துக்கொண்டிருந்தது .

“ அவன் யார் ? நான் ஏன் அவனைப் பார்க்கனும் ? அவன் ஏன் வளவனைப் போல இருக்கனும் ? அவனுக்கும் வளவனுக்கும் ஏதாவது கனெக்ஷன் இருக்குமா ? அப்படி அவன் வளவனா இருந்தா பழைய ஞாபகம் எனக்கு வந்த மாதிரி அவனுக்கும் வந்திருக்குமா ? “ கேள்விக் கனைகளால் தன்னைத் தானே துளைத்துக் கொண்டிருந்தான் விஷ்ணு .

“ எது எப்படி இருந்தாலும் இனி கொஞ்ச நேரம் கூட தாமதிக்காம அந்த லிங்கத்தைக் கண்டுபிடிக்கிற வேலையை மட்டும் உடனே பார்த்துடனும் “ என எண்ணியவன் தன்னைத்தானே ஆசுவாசப்படுத்திக்கொண்டான் .

மறுநாள் பொழுது விடிந்து வெகுநேரம் கழிந்தே உறக்கத்திலிருந்து எழுந்தான் . எழுந்தவன் தன் முகத்தை அலம்பிக்கொண்டு ஹாலிற்க்கு வந்தான் . அங்கே ராமின் தாய் கௌரி சோஃபாவில் அமர்ந்துகொண்டு செய்தித்தாள்களைப் புரட்டிக்கொண்டிருந்தார் . அவனைப்பார்த்தவுடன் “ மனோ …. ஒரு கப் காஃபி சூடா எடுத்துட்டு வா ….” என்று வேலையாள் மனோன்மணியிடம் கட்டளையிட்டுவிட்டு “ என்ன விஷ்ணு….. இவ்வளவு லேட்டா எழுந்துக்கிட்ட ? நைட் சரியா தூங்கலையா ? “ என வினவினார் .

அதற்க்குள் மனோன்மணி காஃபி ட்ரேயுடன் அங்கே விஜயமானாள் . “ காஃபி எடுத்துக்கோ விஷ்ணு … ராம் அவங்க அப்பா கூட காலையிலேயே திருவிழா விஷயமா வெளியே கிளம்பிட்டான். நீ எழுந்த உடனே உன்கிட்ட சொல்ல சொன்னான் “ என்றார் கௌரி .

அந்த நேரம் பார்த்து சமையலறையில் ஏதோ பாத்திரங்கள் தொடர்ச்சியாக கீழே விழுந்து உருளும் சப்தம் கேட்கவும் “ மனோ….அங்கே என்னத்தை போட்டு உடைச்சிட்டு இருக்க ….என்றபடியே சமயலறையை நோக்கி சென்றுவிட்டார் .

ஹாலில் தனித்து விடப்பட்ட விஷ்ணு “ இதான் லிங்கத்தை தேட சரியான நேரம் . ராம் இருக்கும்போது வெளிய போனா எங்க போற ? ஏன் போறனு நச்சரிச்சிட்டு இருப்பான் . சோ இப்போ கிளம்பறதுதான் பெட்டர் “ என்று நினைத்தான் .

அதன்படியே அடுத்த அரைமணி நேரத்தில் கிளம்பி வீட்டின் வாயிலை அடைந்தவனை இடைமறித்தது வேதாவின் குரல் .

“ விஷ்ணு …. எங்க கிளம்பறீங்க …” என்றபடி விஷ்ணுவின் அருகில் வந்து நின்றாள் வேதா .

திடீரென்று வேதா கேட்கவும் என்ன சொல்வதென்று முழித்தவன் “ அது… அது சும்மா லாங் ட்ரைவ் போலாம்னு கிளம்பினேன் “ என்றான் .

“ என்னது லாங் ட்ரைவா ! சூப்பர் …. நானும் வரேன் … லாங் ட்ரைவ்னா எனக்கும் ரொம்ப இஷ்டம் …” என்று குதூகலத்துடன் கூறினாள் .

உடனே விஷ்ணு “ இல்லைடா நீ வீட்லயே இரு …இப்போ என் கூட வந்தா அம்மா ஏதாச்சும் நினைச்சிடுவாங்க …சோ வேண்டாம்டா “ என்றான் .

“ என்ன விஷ்ணு நீங்க … எல்லாரும் லவ் பண்ற பொண்ண எப்படா வெளிய கூட்டிட்டு போகமுடியும்னு ஆசையா வெய்ட் பண்ணிட்டு இருப்பாங்க … நீங்க என்னடான்னா நானே வந்து கேட்டாக்கூட இப்படி பயப்பட்றீங்களே .. .. டூ பேட் “ என சலித்துக்கொண்டாள் .

“ ஹே சொல்லறத கேளுடா … இது சிட்டி இல்ல …கிராமம் … இடத்துக்கு தகுந்த மாதிரிதான் நாம இருக்கனும் . மனம் போன போக்குல நடந்தா அது சங்கடத்துலதான் முடியும் . ப்ளீஸ்டா கண்ணா… என்றவனின் வார்த்தைகளில் சமாதானமடைந்த வேதா “ சரி ஓகே போய்ட்டு வாங்க “ என்று ஒற்றை வரியில் பதிலளித்தாள் .

“ ஹ்ம்ம் குட் கேர்ள் …” என்ற விஷ்ணுவிற்க்கு தன் மொபைலை அறையிலேயே மறந்து வைத்துவிட்டது நினைவிற்க்கு வர அதை மேலே சென்று எடுத்துக்கொண்டு வந்தான் .

போர்டிகோவில் நிறுத்தியிருந்த தன் காரிற்க்கு வந்தவன் இக்னீஷியனை உயிர்ப்பித்தக்கொண்டு புறப்பட்டான் . அவனின் எண்ண ஓட்டத்திற்க்கு இசைந்தாற்ப்போல் அவனின் காரும் வேகமாகவே சென்றது . எண்ணங்களோ “ வளவன் லிங்கத்தை மறைச்சு வச்ச இடம் இத்தனை வருஷம் கழிச்சும அப்படியே இருக்குமா ? இல்லைன்னா ஏதாச்சும் மாறியிருக்குமா ? “ என்ற ரீதியிலேயே இருந்தது .

அந்த ஊரைத்தாண்டி சற்று ஒதுக்குப்புறமாக இருந்த காட்டுப்பிரதேசத்தில் வண்டியை நிறுத்தியவன் சுற்றும் முற்றும் பார்த்தான் . ஆள்அரவமே இல்லாமல் இருந்த அப்பகுதி ஒருவித நிசப்தத்துடனே காட்சியளித்துக்கொண்டிருந்தது . வண்டியில் இருந்து இறங்கியவன் நேரே வலது புறமாக நடக்க ஆரம்பித்தான் . சற்று தூரத்தில் சிதிலமடைந்தபடி தெரிந்த அக்கால கட்டமைப்புடன் கூடிய ஒரு சிறு கோவில் தெரிந்தது . ஓ மை காட்… மிராக்கிள் …. இந்த இடம் துளி கூட மாறவேயில்லை ….தேங்க் காட் “ என்றவன் அக்கோவிலை நோக்கி தன் நடையின் வேகத்தைக்கூட்டினான் .

அருகே செல்ல செல்ல இருதயத்தின் படபடப்பானது நொடிக்கு நொடி கூடிக்கொண்டே சென்றது அவனுக்கு . விஷ்ணுவின் மனதில் ஓரத்தில் தன்னை யாரோ பின்தொடர்வது போன்ற பிரமை ஏற்படவும் திரும்பிப் பார்த்தான் . ஆனால் அங்கே அதுபோல் யாரும் இல்லாமல் போகவே மீண்டும் தன் நடையினை அக்கோவிலை நோக்கி துரிதப்படுத்தினான் அவன் .

“ இதோ …இதோ வந்துட்டோம் … இந்த இடத்திலதான் லிங்கம் இருக்கிறதா வளவன் சொல்லிருந்தான் . பல வருஷ சபதம் நிறைவேற இன்னும் கொஞ்ச நேரம்தான் இருக்கு … ஐ ஆம் சோ எக்ஸைட்டட் … “ என நினைத்தவன் பரவசமானான் .

அந்த கோவிலை அடைந்தவுடன் வளவன் கூறியவாறே மூலஸ்தானத்தில் இருந்த இருந்த சுவாமி சிலையை நகர்த்தினான் . அப்போது திடீரென்று விஷ்ணுவின் தோளின் மீது ஒரு கை விழவே பதறியடித்தபடி எழுந்தவனின் கண்கள் ஆச்சரியத்தில் விரிந்தது .

“ வேதா…. நீயா ? … “ அங்கு கண்களில் மிதமிஞ்சிய சந்தேகத்துடன் நின்றிருந்த வேதாவைப்பார்த்துக் கேட்டான் விஷ்ணு .

“ ஹ்ம்ம் நான்தான் …. நானேதான் …. வேதாவேதான் ….இந்த அத்துவானக் காட்டுல என்ன பண்ணிட்டு இருக்கீங்க ? இதான் உங்க லாங் ட்ரைவ்வா ? எதுக்கு இங்க வந்து இந்த சிலையை தள்ளிட்டு இருக்கீங்க…. என்ன நடக்குது இங்க “ என காட்டமாக கேட்டாள் வேதா .

வேதாவிற்க்கு என்ன பதில் சொல்வது எனத்தெரியாமல் திருதிருவென முழித்தான் விஷ்ணு . பின் ஒரு நிமிடம் சுதாரித்தவன் “ ஹ்ம்ம் … இதுக்கு மேலே நான் உன் கிட்ட எதுவும் மறைக்க விரும்பல …. எல்லாத்தையும் சொல்லிட்றேன் . அதுக்கு முன்னால நீ எப்படி இங்க வந்த ? அதை முதல்ல சொல்லு “ என்றான் .

“ உங்க கூட வரக்கூடாதுன்னு நீங்க என்னை எவ்வளவு சமாதானப்படுத்தினாலும் என் மனசு கேகக்கவேயில்லை …. உங்க கூட டைம் ஸ்பென்ட் பண்ணணும்னு ரொம்ப ஆசையா இருந்துச்சு … நீங்க உங்க மொபைலை மறந்துட்டீங்கன்னு அதை எடுத்துட்டு வர உங்க ரூம்க்கு போனீங்க இல்லையா …. அப்போ உங்களுக்குத் தெரியாம காரோட பின் சீட்ல போய் ஒளிஞ்சிகிட்டேன் . நீங்களும் புறப்பட்ற அவசரத்துல என்னை பார்க்கல .

ஆனா ஃப்யூ மினிட்ஸ்ல என்னை கண்டுபிடிச்சிடுவீங்கன்னு நினைச்சேன் . பட் நீங்க ஏதோ திங்க் பண்ணிட்டே இருந்தீங்க. நானும் சரி இப்படியே அமைதியா இருந்து நீங்க என்ன பண்றீங்கன்னு பார்க்கலாம்னு இருந்தேன் .திடீர்னு இந்த இடத்துல காரை நிறுத்திட்டு நீங்க பாட்டுக்கு இந்த பக்கம் நடந்துட்டே போனீங்க …அப்போதான் நீங்க இங்க ஏதோ ப்ளான் பண்ணி வந்திருக்கீங்கன்னு கெஸ் பண்ணேன் . சோ உங்களை ஃபாலோவ் பண்ணிட்டு வந்தேன். போதுமா ? உங்க கேள்விக்கு பதில் கிடைச்சுதா ? இப்போ நீங்க சொல்லுங்க விஷ்ணு இங்க என்ன நடக்குது ? “ என்று கேட்டாள் வேதா .

“ வேதா …. நான் இதுவரையும் இந்த விஷயத்தைப்பத்தி யார்கிட்டயும் எதுவும் சொல்லலை … ஏன் என்னோட க்ளோஸ் ஃப்ரண்ட்ஸ் கிட்ட கூட ஷேர் பண்ணிக்கலை . உன்கிட்டதான் முதல்ல சொல்றேன் . “ என்ற பீடிகையுடன் ஆரம்பித்தவன் தான் அடிக்கடி கண்ட கனவு , குகையில் சந்தித்த சந்நியாசி , தன் முன் ஜென்மத்தில் நடந்தது என அத்தனை விஷயங்களையும் அவளிடம் கூறிக்கொண்டே வந்தான் .

அவையனைத்தையும் கடைசிவரை கேட்டவள் முகத்தை தீவிரமாக வைத்துக்கொண்டு எதையோ சிந்திக்கலானாள் .
“ ஏய் …. என்ன யோசிச்சிட்ருக்க …. அதான் நான் எல்லாத்தையும் சொல்லிட்டேனே ! “ என்றவனை மேலும் பேச விடாமல் தடுத்தது அவளின் சிரிப்புச் சத்தம் .

“ ஏய் … நிறுத்து … எதுக்கு இப்படி சிரிக்கிற இப்போ ? “ விஷ்ணு கோபமாக கேட்டான் .

“ பின்ன என்ன செய்வாங்க ? இதெல்லாம் நம்பற மாதிரியா இருக்கு ? ஏதோ அம்புலி மாமா கதையையும் ஒரு ஃபாண்டசி கதையையும் சேர்த்து கேட்கிற மாதிரி இருக்கு . நிறைய கற்பனைக் கதை படிப்பீங்களா விஷ்ணு ? “ எனக் கேட்டவளின் வார்த்தையில் வருத்தமடைந்தான் விஷ்ணு .

“ நீ என்னை நம்பலை இல்ல … இந்த ஊருக்கு நான் இப்போதான் முதல் முறை வந்திருக்கேன் . இதுக்கு முன்னாடி நான் இந்த பக்கம் வந்ததில்லை அவ்வளவு ஏன் ராம் கூட இந்த இடத்தைப் பத்தி சொன்னதில்லை … அப்புறம் எப்படி இந்த இடம் எனக்கு தெரிஞ்சிருக்கும் ? “ என்றான் .

அவன் இவ்வாறு கேட்டவுடன் சற்று சிந்திக்கத் துவங்கிய வேதாவைப் பார்த்தவன் “ இன்னும் நான் சொல்றது எல்லாம் வெறும் கற்பனைக்கதைனு நினைக்கிறியா ? எனக்கேட்டவனிடம் எதுவும் பதில் பேசாமல் அமைதியாகவே இருந்தாள் அவள் .

“ இரு இன்னும் கொஞ்ச நேரத்தில உனக்கு ஆதாரத்தோட நிரூபிக்கிறேன் என்றவன் கருவறையை நோக்கினான் . பாதி நகர்ந்த நிலையில் இருந்த மூலவரை இன்னும் நகர்த்த ஆரம்பித்தான் . அந்த மூர்த்தியும் இவனின் அசைப்பிற்க்கு செவி சாய்த்து நன்றாக நகர்ந்தது .

அந்த சிலை நகர்ந்த இடத்தில் ஒரு சுரங்கம் போன்ற அமைப்பு தென்பட்டது . அதனுள் கீழே இறங்குவதற்க்கு உள்ள படிகட்டில் இறங்கினான் வேதாவோ நடப்பதை எல்லாம் கண்கொட்டாமல் பார்த்துக்கொண்டிருந்தாள் . அந்த சுரங்கத்தினுள் இறங்கிய விஷ்ணு வேதாவையும் உடன் வருமாறு அழைத்தான் .

முதலில் தயங்கிய அவள் பிறகு தைரியத்தை வரவழைத்துக்கொண்டு அவனோடு பின் சென்றாள் . இருவரும் கீழே இறங்கி சமதளத்தை அடைந்தவுடன் கும்மிருட்டு கண்ணைப் பிடுங்கியது போன்ற பிரமையை ஏற்படுத்தியது . நல்ல வேளையாக விஷ்ணு முன்னெச்சரிக்கையாக கையோடு கொண்டுவந்த டார்ச்சின் உதவியினால் வந்த ஒளிக்கீற்றினால் அந்த இடத்தில் ஓரளவு வெளிச்சம் பரவியது .

வித்தியாசமான ஏதோ ஒருவித வாடை மூக்கை நிரடியபடி இருந்தது . வேதாவிற்க்கு அந்த இடத்தின் தன்மையே ஒருவித அச்சத்தை மனதிற்க்குள் விதைத்தது .

விஷ்ணுவோ அந்த இடத்தை தன் கண்களின் பார்வையினால் துழாவிய வண்ணம் அந்த லிங்கத்தை தேடியபடியே இருந்தான் .

வெகுநேரம் தேடியும் கண்ணுக்கு ஏதும் புலப்படாமல் போகவே “ விஷ்ணு …. இன்னும் எவ்வளவு நேரம் இங்கயே நாம இருக்கபோறோம் . என்னால முடியலை . இரிடேட்டிங்கா இருக்கு . வாங்க போகலாம் “ என்றாள் வேதா .

அவள் கூறுவது எதையும் காதில் வாங்காமல் அந்த இடத்தை நோட்டம்விட்டவன் ஒரு இடத்தைப் பார்த்தவுடன் மலைத்துப்போய் நின்றான் .

Facebook Comments Box
What’s your Reaction?
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here