அது மட்டும் இரகசியம் – 5

0
175

மூர்த்தி விஷ்ணுவிடம் அக்குன்றைப்பற்றி கூறிமுடித்தவுடன் விஷ்ணுவின் அறையிலிருந்து சென்றார். அவர் சென்றவுடன் “இவர் சொன்னது உண்மைதானா? ஆனால் அது உண்மை இல்லைன்னு என் மனசு சொல்லுதே! எனக்கு மட்டும் ஏன் இவ்வளவு ஆர்வம் அந்த இடத்தைப்பற்றி தெரிஞ்ச்சிக்கிறதுல.அப்புறம் அந்த பாழாய்ப்போன கனவு வேற” என நினைத்துக்கொண்டிருந்தான்.

“சரி கொஞ்ச நேரம் மொட்டை மாடில உலாத்திட்டு வரலாம் அப்போதான் கொஞ்சமாவது ரிலாக்ஸ்டா இருக்கும் “ என நினைத்தவன் மாடிக்கு சென்றான் .அப்பொழுதுதான் இருட்ட ஆரம்பித்தது என்பதனால் சந்திரனும் நட்சத்திரங்களும் பல்லை இளித்து சிரித்துக்கொண்டிருந்தன. சற்று நேரம் விண்ணைப்பார்த்துக்கொண்டிருந்தவன் எதேச்சையாக தெருவினைக் குனிந்துபார்த்தான் . அங்கே கிழிந்த கந்தலான ஆடையுடன் அதே பைத்தியக்காரன் நின்று இவனையே வெறித்துக்கொண்டிருந்தான். சற்று திடுக்கிட்டுப்போன விஷ்ணு சட்டென திரும்பி நின்றுகொண்டான். மீண்டும் சாலையில் கண்பதித்தவனுக்கு அங்கிருந்த வெற்றுத்தெரு மட்டுமே காட்சியளித்தது … “ அடச்சை…. எல்லாம் என்னோட ஹாலுசினேஷன்” தனக்குள்ளே கூறிக்கொண்டவன் சுற்றுப்புறத்தை மீண்டும் ரசிக்க ஆரம்பித்தான் .

வாடைக்காற்று அவன் மேனியில் மென்மையாகத்தழுவ அவன் மனம் சிறிது சஞ்சலம் குறைந்து இருந்தது. இந்த ஊருக்கு வந்து முழுசா இரண்டு நாள் கூட முடியல அதுக்குள்ள எவ்வளவு இன்ஸிடென்ட் நடந்துடுச்சி “ என நினைத்துக்கொண்டிருந்தவனின் சிந்தையை அவனின் கைப்பேசி ராஜேஷ் சேர்தலாவின் புல்லாங்குழல் இசையினை மீட்டி அவனுக்கு அழைப்பு வந்திருப்பதை தெரிவித்தது .

திரையில் தெரிந்த தன் அம்மாவின் புகைப்படத்தைப்பார்த்ததும் புன்னைகைப்பூ அதரத்தில் பூக்க அழைப்பை ஏற்று காதில் பொருத்தினான் விஷ்ணு . “ அம்மா…. எப்படி இருக்கீங்க … சாப்டீங்களா? “

” நான் நல்லாதான் இருக்கேன் விசு… நீ எப்படி இருக்க… அங்க எல்லாரும் எப்படி இருக்காங்க … ஹாலிடேஸ நல்லா என்ஜாய் பன்னிட்ருக்கன்னு நினைக்கிறேன் … அதான் வந்ததுல இருந்து ஒரு போன் கூட பண்ணாம இருக்க இல்ல… இப்ப கூட நான் கால் பண்ண பிறகுதான் பேசுற…”

” மா…. ஏம்மா … அதெல்லாம் ஒன்னும் இல்ல … சும்மா என்னைப்போட்டு ஓட்டிட்டு இருக்காதீங்க … அப்பா என்ன பண்றாரு ? எப்படி இருக்காரு …. “

” ஹ்ம்ம்…. அவருக்கென்ன ஜம்முன்னு இருக்காரு … ஹாஸ்பிட்டல்ல நைட் ட்யூட்டி இப்போதான் கிளம்பி போனாரு… சரி நீ எப்போ நம்ம வீட்டுக்கு வர போற … உன்ன பார்த்து ரொம்ப நாள் ஆகுது கண்ணா … என் மனசெல்லாம் உன்ன சுத்தியே இருக்கு … கண்ணுக்குள்ளயே இருக்குறடா…” தாய்மையின் இலக்கணம் பிசகாமல் இருந்தது அவரின் அன்பான பேச்சில் .

” என்னம்மா … எனக்கு மட்டும் உங்க ஞாபகம் இல்லாமல் இருக்குமா சொல்லுங்க … இன்னும் கொஞ்ச நாள்ல வந்துருவேன்மா…. “

” ஹ்ம்ம்…. சரி விசு…. உடம்பை பத்ரமா பாரத்துக்கோ… எல்லாரையும் விசாரிச்சேன்னு சொல்லு … அப்புறம் ஒரு முக்கியமான விஷயம்டா”

” என்னம்மா “

” அடிக்கடி கால் பண்ணித்தொலைடா…. புரியுதா…. லவ் யூ டா மகனே…. “

” ஹாஹா…. லவ் யூ டூ மை டியர்… ” என்றவாறு அலைப்பேசியை மெல்லிய சிரிப்பினூடே அனைத்தான் விஷ்ணு .

தன் அன்னையுடன் பேசியதில் மனது சிறிது லேசானது போல் இருக்கவே தன் நண்பர்களைக் காண சென்றான் விஷ்ணு. ராமின் அறையில் அவனின் நண்பர்கள் இருந்தனர். அறைக்குள் நுழைந்தவன் என்னடா என்னை மட்டும் தனியா விட்டுட்டு நீங்க ஏதோ பேசிட்டு இருக்கீங்க என கேட்டான். “ டேய் இது உனக்கே அநியாயமாக தெரியல? இங்க வந்ததுல இருந்து நீதான் ஏதோ மாதிரி இருக்க. எங்க கூட சரியா கூட பேசல. எதையோ யோசிச்சிகிட்டே இருக்க. என்னதான் ஆச்சு உனக்கு”. என கேள்வியுடன் .உரையாடலைத் தொடங்கினான் ஜீவா .

“ ச்ச ச்ச அதெல்லாம் ஒன்னும் இல்லைடா. அது உன் மன பிராந்தி” என விஷ்ணு சூழலின் இருக்கத்தை தவிர்க்க ஒரு திரைப்படத்தில் வரும் நகைச்சுவை வசனத்தைக் கூறினான்.

அவனுக்கு அவன் நண்பர்களிடம் அவனின் கனவினைப்பற்றியும் அந்த குன்றினைப் பற்றியும் கூற விருப்பமில்லை. ஏனெனில் பாலாவைப் பற்றியும் ஜீவாவைப்பற்றியும் விஷ்ணுவிற்க்கு நன்றாக தெரியும் அவர்களுக்கு இம்மாதிரி விஷயங்களிலெல்லாம் துளியளவும் ஆர்வம் இருந்ததில்லை . மேலும் விஷ்ணு” அந்த குன்றைப் பற்றி இனி எதுவும் நினைக்க வேண்டாம். அதைப்பற்றி நினைச்சாலே தலைவலி தான் மிச்சமாகுது. இதை அப்படியே விட்டுவிடுவோம்” எனவும் எண்ணினான். ஆனால் ஆண்டவன் சித்தம் வேறாக இருக்கப்போகிறது என அவன் எப்படி அறிவான்.

நண்பர்களிடம் சிறிது நேரம் உரையாடிவிட்டு தனது அறைக்கு செல்ல நடந்து வந்துகொண்டிருந்தான் விஷ்ணு. வேதாவின் அறையும் மாடியிலேயே இருந்தது. அவள் அறையில் தண்ணீர் காலியாகி விட்டதால் தண்ணீர் கொண்டுவரலாம் என எண்ணி வந்து கொண்டிருந்தாள். வரும்போது மொபைலில் அவள் தன் தோழியிடம் பேசிக்கொண்டே வந்ததால் எதிரில் வந்த விஷ்ணுவைக் கவனியாது அவன் மேல் மோதிவிட்டாள்.

மோதிய அதிர்வில் கீழே விழப்போனவளின் இடையை தன் நீண்ட கரங்களினால் சுற்றி வளைத்து அவளை கீழே விழாமல் தடுத்தான் விஷ்ணு. அவள் அந்த வீட்டிற்க்கு வந்து ஒரு நாள் முழுக்க ஓடிவிட்டது. ஆனால் இப்பொழுதுதான் நம் நாயகன் நம் நாயகியின் முகத்தை ஆராய்ந்தான்.

அவளின் குறும்பு கொப்பளிக்கும் கண்கள் , தேன் பிளிற்றும் இதழ்கள், தேர்ந்த சிற்பி செய்தது போன்ற நாசி, நம் நாயகி மாநிறத்து அழகி , அவளது அந்த மாநிறம் கூட அவளின் அழகிற்க்கு அழகு சேர்ப்பதாக அவனுக்கு தோன்றியது. அவள் முகத்தையே ரசனையுடன் பார்த்துக்கொண்டிருந்தான் விஷ்ணு

முதலில் சுதாரித்த வேதா “ச…சா.. சாரி ….. ஐ ஆம் எக்ஸ்டிரீம்லி சாரி “என தட்டுத்தடுமாறி கூறினாள். அதற்க்குள் விஷ்ணுவும் சுய உணர்வுக்கு வந்ததால் “பரவால்லை வேதா நோ ப்ராப்ளம்” கூறி என அவனின் அக்மார்க் புன்னகையை உதிர்த்தான். அவனின் கண்கள் அவள் முகத்திலேயே லயித்திருந்தது. “அவன் அருகில் இருந்தாலே நம் சுயநினைவை இழந்து விடுகிறோமே” என நினைத்த வேதா ஒரு சிரிப்பை அவனுக்கு பதிலாக தந்து விட்டு, விட்டால் போதுமடா சாமி என அந்த இடத்திலிருந்து ஓடி மறைந்தாள்.

அவள் செல்வதையே பார்த்து ரசித்தவன் தனக்குள்ளேயே சிரித்தக்கொண்டான். தன் அறைக்கு வந்தவனின் நினைவுகள் வேதாவைப்பற்றியே சில நிமிடங்கள் யோசித்துக்கொண்டிருந்தன. அவளைப்பற்றியே நினைத்துக்கொண்டிருக்கும் சமயத்தில் அவன் நித்திராதேவி என்னும் வேறொரு பெண்ணின் வசியத்தில் அகப்பட்டான்.

மறுநாளைய பொழுது தூக்கத்தில் இருந்து எழுந்த பின்னரும் போர்வையை இழுத்து போர்த்திக்கொண்டு பாவனை செய்யும் குழந்தையைப் போல சூரியனும் கீழை வானம் வெளுத்த பின்னரும் வெளியே வராமல் அடம்பிடித்துக்கொண்டிருந்தான்.

அனைவரும் குளித்து முடித்து தயாராகி ஹாலிற்க்கு வந்தனர். அப்போது ஜீவாவிற்க்கு அவன் வீட்டிலிருந்து அலைபேசியில் அழைப்பு வந்தது. அந்த அழைப்பை ஏற்றவனின் முகம் எதிர்முனையிலிருந்தவர் பேச பேச மாறிக்கொண்டே வந்தது. கடைசியில் மொபைலை அனைத்துவிட்டு பாவமாக நண்பர்களை நோக்கினான்.

“என்னடா ஆச்சு ? யார் ஃபோன்ல” என விஷ்ணு கேட்டான். “அம்மா பேசினாங்கடா என சிறிது கலங்கிய குரலில் ஜீவா கூறினான்.

“ சரி என்ன சொன்னாங்க அம்மா ? ஏன் முகத்த இப்படி வச்சிருக்க சொல்லுடா? “ என பாலா ஜீவாவை வினவினான்.

எங்க பாட்டிக்கு உடம்பு முடியலையாம்டா . ஹாஸ்பிட்டல்ல அட்மிட் பண்ணியிருக்காங்கலாம். பாட்டி என் பேரைத்தான் அடிக்கடி சொல்லி முனகிட்ருக்காங்கலாம். என்னை அப்பா உடனே வரச்சொன்னாராம் அதைத்தான் அம்மா ஃபோன்ல சொன்னாங்க என அதே கலங்கலான குரலில் கூறினான்.

“அடக்கடவுளே அப்படியா? இப்போ என்னடா செய்யரது ?” என பாலாவும் கேட்டான் . அதற்க்கு விஷ்ணு “வேற என்ன பண்றது நாம கிளம்பிதானே ஆகனும்” என கூறினான்.

“என்னது நாமளா!? டேய் எங்க பாட்டிக்கு தானடா உடம்பு முடியல. நீ அங்க வந்து ஒன்னும் பண்ண போறது இல்லை. அதனால நான் கிளம்பறேன. நீங்க இங்க இருந்துட்டு வாங்க” என சொன்னான் ஜீவா.

டேய் உன்னை மட்டும் தனியா எப்படிடா அனுப்பறது? தேவி படத்துல இப்படித்தான் பாட்டிக்கு உடம்பு சரியில்லைன்னு சொல்லி பிரபுதேவாவுக்கு கல்யானம் பண்ணிடுவாங்க. அப்படி ஏதாவது நடந்திடுச்சுன்னா நாங்க என்ன பண்றதுடா? என கூறி கண்சிமிட்டினான் பாலா.

ஜீவா அவனை முறைத்துக்கொண்டே “டேய் என்னடா இப்படி பண்ரீங்க நான் தனியா போவேன்டா எனக்கூறியும் பாலா அவனை விடவில்லை கட்டாயப்படுத்தி அவனும் ஊருக்கு செல்ல தயாரானான். விஷ்ணு வருவதாகக் கூறியபோது டேய் பாலா ஒருத்தனே போதும் நீயும் இங்கயே இரு பாட்டிக்கு குணமான நாங்க மறுபடியும் வரோம்”. என ஜீவா சொன்னான். விஷ்ணு அப்படி சொல்லிவிட்டானே தவிர விஷ்ணுவிற்க்கும் அவ்வூரை விட்டு போக மனமில்லை…..முக்கியமாக வேதாவை விட்டு செல்ல ஏனோ தோன்றவில்லை.

பிறகு பாலாவும் ஜீவாவும் ஊருக்கு கிளம்பினர். விஷ்ணுவும் ராமும் அவர்களை வழியனுப்பிவிட்டு வீட்டிற்க்கு வந்தனர். அவர்கள் இருவரும் இல்லாதது ஏதோ வீடே அமைதியானது போல இருந்தது விஷ்ணுவிற்க்கு.

பின்பு ராம், விஷ்ணுவிடம் “விஷ்ணு நாம இன்னைக்கு எங்க ஊருக்கு பக்கத்தில இருக்க வாட்டர் ஃபால்ஸ்க்கு போகலாமா?”. என கேட்டான். “ஹ்ம்ம் போகலாம்டா நானே எங்கயாவது வெளிய போகலாம்னு நானே கேட்கனும்னு நினைச்சேன் “ என கூறினான்.

“ சரி அப்போ நீ போய் ரெடி ஆகு நான் வேதா நம்ம கூட வராளானு கேட்டு பார்க்கிறேன்” என கூறி அவள் அறைக்கு சென்றான். விஷ்ணுவும் புத்துணர்ச்சியுடன் அவன் அறைக்கு சென்றான்.

அவன் அவனறைக்கு சென்று தயாராகிக் கொண்டிருக்கும்போது அவனையுமறியாமல் முதல் நாள் கண்ட கனவு மனதில் தோன்றியது. கூடுதலக சில சப்தங்களும் அந்த காட்சிகளில் எழுந்தது.

தலையைப்பிடித்துக்கொண்டவன் அப்படியே கட்டிலில் சரிந்தான். தலையில் ஏதோ பாரமாக உணர்ந்தவனின் கண்கள் மெல்ல மெல்ல செருகியது.

மயக்கத்தில் ஆட்பட்டவனின் கண்முன்னே அந்த கனவில் வந்த காட்சிகள் இப்போது தெளிவாக தெரிந்தன.

இதே விடையூர் அவன் காட்சிகளிலும் அதே பசுமையோடு சொல்லப்போனால் கூடுதல் பசுமையோடு மிளிர்ந்தது. ஆனால் வீடுகளும் வீதிகளும் இப்பொழுது இருப்பது போல் அல்லாமல் ஏதோ ராஜா காலத்தில் உள்ளது போன்ற பாணியில் கட்டப்பட்டிருந்தன.

அந்த ஊரின் மத்தியில் காண்போரைக்கவரும் அழகுடன் விஸ்தாரமாக அரண்மனை கட்டப்பட்டிருந்தது. அதைப்பார்க்கும்போதே அதன் பிரம்மாண்டமான கட்டமைப்பு பிரம்மிப்பை ஏற்படுத்தியது. அந்த அரண்மனையினுள் அரியாசனத்தில் ராஜமிடுக்குடன் அமர்ந்திருந்தார் ஒருவர். ஆனால் அவரின் முகம் மட்டும் மங்களாகவே தெரிந்தது.

அவருக்கு அருகில் நெற்றியில் பிறைநிலா திலகம் தரித்து முறுக்கிய மீசையுடனும் தோள்வரை வளர்ந்த கருமையான் கார்குழலுடனும் பட்டாடை உடுத்தி இடுப்புக்கச்சையில் வாளுடன் கம்பீரமாகவும் மிடுக்குடனும் நின்றிருந்தான் விஷ்ணு.

Facebook Comments Box
What’s your Reaction?
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here