அந்த பயங்கரமான இரவு

0
69

அதிகாலை 2 மணி அப்போது தான் மெல்ல கண்ணசந்தாள் ஸ்னேகா. அதற்குள் யாரோ அவள் தோள்களை பிடித்து உலுக்க

“மா ப்ளீஸ் மா, இன்னும் கொஞ்ச நேரம்”
என்று வழக்கம் போல முனகி கொண்டே போர்வையை இழுத்து போர்த்திக்கொள்ள பார்த்தவளை கலீரென்ற சுற்றி நின்றவர்களின் சிரிப்பலை சுயம் உணரவைத்தது.

“நல்லாருக்கு டி நீ சொல்றது, இதென்ன உன் வீடுனு நெனப்போ. இன்னிக்கு என்ன நாள் னு கூடவா ஞாபகம் இல்லை”

“யசோ, உன் பாடு திண்டாட்டம் தான் போ ” என்று சினேகாவின் அன்னை யசோதாவை பார்த்து கிண்டல் செய்து சிரித்து கொண்டே உறவு கும்பல் வெளியேற.

திரு திருவென விழித்த ஸ்னேகா அருகில் வந்து “உன் அம்மா பாடு இல்ல டி உன்ன கட்டிக்க போறவர் பாடு தான் ரொம்ப ரொம்ப கஷ்டம்.
தயவு செய்து எழுந்திருங்கள் மகாராணி, இன்று உங்கள் விவாக திருநாள்” என்று அவள் கன்னத்தில் தட்டி அவளை கிண்டலடித்தாள் அவள் சிறுவயது தோழி லக்ஷணா.

அம்மாவின் பார்வையில் விறு விறுவென ஸ்னேகா எழுந்து காலைவேலைகளை முடிக்கவும் பியூட்டி பார்லரிலிருந்து ஆள் வரவும் சரியாக இருக்க அடுத்த 2 மணிநேரத்தில் ஸ்னேகா அழகே உருவாய் ஜொலித்தாள்.

வழக்கம் போல ” நாழியாகர்து, பொண்ண அழஷிண்டு வாங்கோ” என்ற ப்ரோகிதரின் குரலுக்காகவே காத்திருந்தாற்போல் மணமேடையில் ப்ரசன்னமானவளை பல கண்கள் பிரமிப்பாய் பார்க்க, மணப்பந்தலில் அமர்ந்திருந்தவன் கண்களோ மையலாய் பார்த்தது.

அடுத்தடுத்து சடங்குகள் நிறைவேற திருமாங்கல்யம் பூட்டி சினேகாவை தன் மறுபாதியாய் உற்றார் உறவினர் முன்னிலையில் உறுதி செய்தான் சரோ என்கிற ஸ்ரீதர்.

திருமண விருந்து முடிந்து அப்பாடா என்று அமர்ந்தவளை சுற்றிக்கொண்டவர்கள் அனுபவஸ்தர்களென்ற ஒரே காரணத்தில் அவளுக்கு பலவகை அறிவுரையும், ஆலோசனையும் வழங்கி அவளை பாடாய் படுத்த மறுபக்கம் சிறுசுகள் பட்டாளம் கேலி கிண்டல் மட்டுமல்லாது அவரவர்களின் உறவுகள், அக்காவுக்கு, அத்தை பெண்ணுக்கு , சித்தி பெண்ணுக்கு இப்டி நடந்துச்சாம், அப்டி நடந்துச்சாம் என்று அவளை மிரள வைத்தனர்.

முன்னிரவு நேரம் யசோதா சில மூத்த உறவு பெண்களோடு வந்து சினேகாவை அலங்காரம் செய்ய ஆரம்பிக்க, சினேகாவுக்கு இந்த பயங்கரமான இரவை எப்படி கடக்க போகிறோமென்ற பயம் தொற்றிக்கொள்ள உள்ளங்கை வேர்த்து ஜுரம் வந்தார் போலானது.

இதற்கிடையில் சினேகாவை தனிமையில் சந்திக்க பலவகையில் அவள் கணவன் ஸ்ரீதர் போராட இன்னும் பயம் கொண்டாள். அதனால் முடிந்தவரை தனித்திருப்பதை தவிர்க்க உறவு, நட்பு வட்டத்திற்குள் ஒளிந்து கொள்ள வாகாய் சிக்கிகொண்டாலென இன்னும் இன்னும் பேசி பேசியே அவளை கொன்றார்கள் தலைவலி வருமளவுக்கு.

எவ்வளவு ஓடி ஒளிந்தாலும் அந்த தருணம் வந்து தானே தீரும்.

அவ்வாறே அவளை பெரியவர்கள் ஆசிர்வதித்து அனுப்ப, அறையின் உள்ளே வந்தவளுக்கு அடுத்த அடி எடுத்துவைக்கவே முடியாமல் கால்கள் பின்ன, கையில் உள்ள வெள்ளி டம்பளர் நசுங்கும் அளவுக்கு அழுத்தி பிடித்து திருகிக்கொண்டு தலை தாழ்த்தி நின்றவளை பார்க்கவே பாவமாகவும், சிரிப்பாகவும் இருந்தது ஸ்ரீதருக்கு.

அவள் அங்கிருந்து நகரப்போவதில்லை என்று உணர்ந்து எழுந்து வந்தவன் முதலில் அவள் கையிலிருந்த வெள்ளி டம்பளருக்கு விடுதலையளித்து, அழைத்து செல்ல அவள் கைப்பற்ற கை பனிக்கட்டியாய் சில்லிட்டிருக்க, அவள் முகமோ அந்த ac அறையிலும் வேர்த்து வழிந்தது.

அவன் கைப்பற்றிய அந்த நொடி அவள் விதிர்த்து போய் ஓரடி பின்னகர, அவளை நகரவிடாது இழுத்து பிடித்தவன் அவள் முகத்தை நிமிர்த்தி நேருக்கு நேர் பார்த்து ஸ்நேகமாய் புன்னகைக்க சட்டென அவள் கண்கள் கலங்கி போனது.

அவள் கண்களை நேரிட்டு பார்த்தவாறே அவளை அழைத்துபோனவன் அவளை படுக்கையில் அமரவைத்து அருகில் அமர்ந்தான். அதுவரையிலும் அவன் பிடித்திருந்த கையை எடுத்து தன் இரண்டு கைகளுக்குள் பொதித்து கொண்டவன்.

“ஹாய் டா, ஆர் யூ ஓகே” என்றான் குனிந்து அவள் முகம்பார்த்து. சட்டென சிநேகாவிற்கு “ஆர் யூ ஓகே பேபி” என்ற வசனம் நினைவுக்கு வர லேசாய் புன்னகை வரப்பார்க்க “ஓகே” என தலையசைத்தாள்.

பேசமாட்டியா, இன்னிக்கு பூரா நாம பேசவே இல்ல தெரிமா? என்று அவன் கேட்க, இதுவரையிலும் கூட பேசியதில்லையே இருந்தும் இதென்ன கேள்வி? இதற்கு என்ன பதில் சொல்வதென தெரியாமல் அவள் விழிக்க பால் டம்பளரை எடுத்து அவள் முன்னீட்டி 50:50 என்று சொல்லி கண்ணடிக்க அவனின் ஸ்னேக பாவத்தில் குறைந்திருந்த பயம் மீண்டும் துளிர்க்க தொடங்கியது.

கண்டும் காணாதது போல அவளை பால் அருந்த வைத்தான்.
பின் அவளை மெதுவே அந்த அறையின் உள் கதவு திறந்து பால்கனிக்கு அழைத்து சென்றான். குழப்பமும் பயமும் சரிசமாக போட்டு தாக்க ஸ்னேகா நடப்பவை புரியாமல் அவன் ஆட்டுவிக்கும் பொம்மையாய் அவன் வழி நடந்தாள்.

சில்லென்ற காற்று முகத்தில் மோத புத்துணர்வாய் உணர்ந்தாள் ஸ்னேகா. அங்கேயே போடப்பட்டிருந்த நாற்காலியில் அமர்ந்து அடுத்த 1 மணி நேரத்திற்கும் மேலாக இருவரும் என்ன பேசினார்களென்று கேட்டால் இருவருக்குமே சொல்ல தெரியாதபடி படிப்பு, பிடிப்பு, பொழுதுபோக்கு தொடங்கி சமூகம், சுற்றுசூழல், அரசியல் அட்வென்ச்சர் என ஏதேதோ பேசி தீர்த்தனர். சிரிக்க சிரிக்க அதே நேரம் ரம்பமாக அறுப்பது போல் இல்லாமல் சுவாரஸ்யமாக பேசும் ஸ்ரீயை இன்னும் இன்னும் பிடித்தது சிநேகாவிற்கு.

சில்லென்ற பனிக்காற்று வாடைக்காற்றாய் குளிரெடுக்க தொடங்க “ரொம்ப குளுருதுல, உள்ள போலாமா?” என மறுபடியும் அவள் கைகளை உரிமையாய் பிடித்துக்கொண்டு அவன் கேட்க சம்மதமாய் தலையசைத்து கூட நடந்து அறைக்கு வந்தவள் அலங்கரிக்க பட்ட கட்டிலை கண்டதும் இதுவரை இருந்த இலகு நிலை மாற தயங்கி தயங்கி வந்தவளின் ரத்த அழுத்தத்தை
“ஸ்ஸ்ஸ்சோ?????” என்று அவன் கேள்வியாய் ஒரு எதிர்பார்ப்பும் ஏக்கமும் சேர்ந்த குரலில் இழுத்து மேலும் எகிறவைத்தான்.

அடுத்து என்ன சொல்லப்போகிறானோ என்று இதயம் இடியாய் இடிக்க காத்திருந்தவளை ஓரக்கண்ணால் பார்த்துக்கொண்டே

“உனக்கு தூக்கத்துல உதைக்கிற பழக்கமெல்லாம் இல்லையே??” கேட்க தான் கேட்டது தான் சொல்லப்பட்டதா என்ற சந்தேகத்தில் விலுக்கென நிமிர்ந்து அவனை ஸ்னேகா பார்க்க சத்தமாக வாய் விட்டு சிரித்தேவிட்டான் ஸ்ரீ.

மதியம் முதல் அனைவரும் வெவ்வேறு விதமாய் சொல்லி சொல்லி மிரட்டி வைத்ததெல்லாம் ஒன்றுமே இல்லையா என்று அவள் அவன் முகத்தை பார்க்க அவள் கண்களில் தான் ஆச்சர்யம், குழப்பம், நிம்மதி, நிராசை, சந்தேகம், ஆறுதல் என ஆயிரம் பாவங்கள் காட்ட அப்படியே அந்த கண்களில் விழுந்தான் ஸ்ரீ.

அவள் கன்னங்களை தன் இரு கைகளில் தாங்கி மின்னலாய் ஜொலிக்கும் அந்த கண்களில் அழுந்த முத்தமிட புயலாய் எழுந்த பேராவலை கஷ்டப்பட்டு கட்டுப்படுத்தி கொண்டான்
மீண்டும் அந்த கண்களில் பயத்தை காண விருப்பமில்லாமல்.

“என்ன அப்டி முழிக்கிற, அப்போ அந்த பழக்கம் இருக்கா? என்று அவன் கேட்க “ம்ம், அதுலாமில்ல.. என அவசரமாய் அவள் மறுக்க,

” அப்ப சரி, டிரஸ் மாத்திட்டு தூங்கு ஓகே. குட் நைட்” என்றுவிட்டு அவன் படுத்துக்கொண்டுவிட்டான்….

அவள் ஆச்சர்யமாக அவனையே பார்த்துக்கொண்டு அசையாமல் அங்கேயே நிற்க என்னாச்சு என்றவனிடம் ” இல்ல… அது…. அது… வந்து…… இன்னிக்கி….. நமக்கு… என்று சொல்லமுடியாமல் இவள் தவிக்க….

ஒரு நீண்ட பெருமூச்சு விட்டு அவளை அருகில் அழைத்து அமர்த்திக்கொண்டவன் மீதும் அவள் கையை தன் கைகளுக்குள் பொத்தி கொண்டபோது முன்பிருந்த பழைய நடுக்கம் இல்லாதது அவனுக்கு நிறைவை தர.

” இப்போ நா உன் கைய புடிச்சிருக்கேன். ஆனா முன்ன இருந்த நடுக்கம் உன் கைல இப்போ இல்ல. அத ஃபீல் பண்றயா? ” என்று கேட்க அப்போது தான் ஸ்னேகாவும் அதை உணர்ந்தாள்.

ஆமா, இல்ல ல? என்று குழந்தை போல் உற்சாகமாய் அவள் கூவ . ஆம் என்று கண்மூடி ஆமோதித்தவன்.
“இந்த ஒரு ராத்திரி தான் நாம வாழப்போறமா என்ன. வாழ்க்க ரொம்ப பெருசா டா. நமக்கு நெறய நாள் இருக்கு. இப்போ தான் நாம ஒன்னு சேந்துருக்கோம். மொத நம்மள நல்லா புரிஞ்சிக்குவோம். அதோட காலைலேந்து அலங்காரம், கல்யாண சடங்கு, ஹோம புகை, அப்புறம் அப்புறம் அலைச்சல் ஸ்ட்ரெஸ் னு நீயும் ரொம்ப டயர்டா இருப்ப. இதுல இதுவும் இப்போவே இன்னிக்கே நடக்கணும்னு எந்த அவசரமும் இல்ல டா. பீ கூல்” என்று ஒற்றை விரலால் அவள் கன்னம் தட்டினான்.

ஸ்னேகா உண்மையாகவே நல்ல களைப்பில் தான் இருந்தாள். விட்டால் நின்றபடியே தூங்குவேன் எனுமளவுக்கு. இதில் விட்டுத்தருதல் போல இல்லாமல் ஸ்ரீயின் அனுசரணையான நடத்தை அவளை வெகுவாய் கவர மலர்ந்த முகத்தோடு ” தேங்க்ஸ்” என்றால் ஆத்மார்த்தமாக. சிறு புன்னகையில் அதை ஏற்றுக்கொண்டவன் ஆசைக்கு அவள் கன்னத்தை ஆதூரமாக வருடிவிட்டு படுத்துகொண்டான்.

படுத்த சில நிமிடங்களிலேயே இருவரும் ஆழ்ந்து உறங்கி போயினர்.

காலையில் ஸ்னேகாவுக்கு தூக்கம் கலைந்து கண்விழிக்கையில் கண்ணில் பட்டது, பால்கனியில் அமர்ந்து மொபைல் பார்த்து கொண்டிருந்த ஸ்ரீ தான்.

இவளின் அசைவு தெரிந்து திரும்பியவன், “ஹாய் குட் மார்னிங்” என்றான் மலர்ந்த புன்னகையுடன். “வெரி குட் மார்னிங்” என்றபடி அவள் எழுந்து கொள்ள.

“உனக்காக தான் வெயிட் பண்றேன். மொதல்ல நான் வெளில போன தப்பா நெனைப்பாங்கள்ல” என்று அவன் சிரிக்க. “ஐயோ ஆமா ல, என்ன எழுப்பிற்கலாம் ல” என்றால் குற்றஉணர்வோடு.

” நொ ப்ரோப்லம், என்று ஸ்ரீ சொல்லும்போதே, கதவு தட்டப்பட, அவசரமாக உடையை சரிபார்த்துக்கொண்டவள் கதவை திறக்க காபியோடு வேலைக்காரி கற்பகம் நின்றிருந்தார். “உங்கள கீழ வரசொன்னாங்கம்மா” என்று விட்டு போக.

சரியென்று வெளியில் போக காலெடுத்தவள், திரும்பி வந்து ஸ்ரீயின் கன்னத்தில் அழுத்தமாய் ஒரு முத்தம் வைத்துவிட்டு நிற்காமல் ஓடி மறைந்தாள்.
அனைவராலும் பலவாறு உருவக படுத்தப்பட்ட அந்த பயங்கர இரவு பலகாலமானாலும் மறக்க முடியா இனிய இரவான உற்சாகத்தில்….

Facebook Comments Box
What’s your Reaction?
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here