நடுத்தர வர்க்கத்தோட வாழ்க்கை போராட்டம் அவ்வளவு சீக்கிரமா முடிவுக்கு வர்றது இல்லைங்க .மிகப்பெரிய உழைப்பையும்,இழப்புகளையும் பலி கொடுத்து தான் முன்னேறி வர முடியுது .எனக்கும் அப்படி தான் நடந்தது .
என் பேரு இளவரசன் .அம்மா,அப்பா,அக்கா,தங்கச்சின்னு அழகான குடும்பம் .நாங்க குடியிருந்தது லைன் வீடு .வரிசையா அடுக்கி வச்ச மாதிரி வீடுகள் இருக்கும் .நிறைய பேர் வெளியூரில் இருந்து குடும்பத்தோட வந்து இங்கே உள்ள மில்லுகளுக்கு போற ஆட்கள் தான்.நிறைய குழந்தைகள் இருப்போம்.எந்நேரமும் விளையாட்டு கொஞ்சம் படிப்புன்னு சந்தோசமாய் போயிட்டு இருந்தது.
என் வீட்டுக்கு எதிர் வீட்ல இருந்த எழில் என்கிற எழிலரசி .ஒன்பதாவது படிக்கும் போதே அவ மேல எனக்கு காதல் .எழில்கிட்ட மட்டும் சகஜமா பேச மாட்டேன் .எங்க வீட்டுக்கு வந்தா எந்திரிச்சு ரூம்குள்ள போயிருவேன் .ஆனா மனசு கிடந்து ஏங்கும்.தூரத்தில் இருந்து கேட்கும் அவளோட குரல் உயிர் வரையில் இறங்கும் .தீபாவளி வந்தா போதும் கால் இரண்டும் பூமியில நிக்காது.அப்பா வாங்கிட்டு வர்ற பட்டாசுக்கு வாசல்ல தவம் இருப்போம் .என் மனசுல இருந்த காதல் யாருக்கும் தெரியாமல் ஏன் ?அது எழிலுக்கு கூட தெரியாமல் மறச்சேன்.
ஒரு நாள் காலேஜ் போன என் அக்கா வீடு திரும்பல.லவ் மேரேஜ் பண்ணிக்கிட்டாங்க.அக்கம்பக்கத்துல எல்லாம் அசிங்கமா பேச ஆரம்பிச்சாங்க .எங்க அம்மா,அப்பா வீட்டுக்குள்ளயே முடங்கிட்டாங்க.அளவான வருமானத்தில் வாழும் எங்களை போன்ற குடும்பங்களுக்கு காதல் திருமணங்கள் சிலுவையை போன்றது .நாட்கள் கடந்தும் மனங்கள் மாறல.ஊரை காலி பண்ணிட்டு போக முடிவு செஞ்சோம் .எனக்கு ரோம்ப புடிச்சு போன இடம் இது .வீட்ட காலி பண்ணிட்டு போறதுக்குள்ள ஒரு தடவையாவது எழில்ல பாக்கணும்னு அவுங்க வீட்டையே சுத்தி சுத்தி வந்தேன் .ஆனா பாக்க முடியல .
நிறைய வேதனையோட வேற ஊர் போனோம் .நல்லா படிச்சேன்.நல்ல வேலைக்கு சேர்ந்தேன்.என் தங்கச்சியும் படிச்சுட்டு வேலைக்கு சேந்தாள்.நான்கு ஆண்டுகளுக்குள் நாங்க அடுத்த நிலைக்கு நகர்ந்தோம்.சொந்த வீடு,கார் வரையில் வாங்கினோம்.தங்கச்சிக்கு நல்ல இடத்தில் கல்யாணம் முடிச்சோம்.கல்யாணத்திற்கு என் அக்கா குடும்பத்த அழைச்சுட்டு வந்தேன் .
அடுத்த ஒரு வருஷத்தில் எனக்கு பொண்ணு பாக்க ஆரம்பிச்சாங்க .குடும்பத்தோட பொண்ணு பாக்க போனோம் .வண்டி அந்த வீட்டு வாசல்ல நின்றது .குடும்பத்தோட போய் உக்காந்தோம் .என் எதிர வந்தது என்னோட எழிலரசி.அப்படியே திகைச்சு போயிட்டேன் .சிரிப்பும்,கண்ணீரும் கலந்து வருவதை உணர்ந்தேன் .
என் தங்கச்சி என்கிட்ட “உனக்கு எழில்ல புடிக்கும்னு எனக்கு தெரியும் அண்ணா .நான் தான் அப்பாகிட்ட சொல்லி எழில் வீட்ல பேசி உனக்காக இரண்டு வருஷம் காத்திருக்க சொன்னோம்”என்றதும் கண்கள் கலங்கி தான் போனது .
எனக்கும் எழிலுக்கும் திருமணம் சிறப்பாய் முடிந்தது .எல்லா பெற்றோரும் காதலுக்கு எதிரி இல்லைன்னு நம்மளும் புரிஞ்சுக்கணும்.
[முற்றும் ]
நான்
உங்கள்
கதிரவன் .