இசையின் மலரானவன் (இறுதி அத்தியாயம்)

0
1670

ஒரு வருடம் கழித்து மலரிசைக்காக இரயில்வே ஸ்டேஷனில் காத்துக் கொண்டிருந்தான் மலர் அமுதன். இன்று அவள் டிரைனிங் முடிந்து அவளது லட்சியத்தை வென்று வரும் பொன்னான நாள்.. அவர்களின் காத்திருப்பிற்கு பலன் கிடைக்க போகும் நாள்..அவளுக்காக ஒரு மணிநேரத்திற்கு முன்பாகவே வந்து காத்திருந்தான் அமுதன்.

இசை அவளது லட்சியத்தை அடைய எடுத்துக் கொண்ட நேரத்தில் அமுதனும் முன்னேறியிருந்தான்.. இப்போது அவன் வளர்ந்து வரும் தொழிலதிபன்.. சொந்தமாக மூன்று ரைஸ் மில்லும், இரண்டு கார்மென்ட்சும் வைத்திருக்கிறான்.. மேலும் பால் பண்ணை, விவசாயம் என முன்னேறிக் கொண்டிருக்கிறான்…

இரயில் வரும் ஓசையில் தன் எண்ணங்களில் இருந்தவன் அதைவிடுத்து இசையை தேட, ஓரிடத்தில் அவன் பார்வை நிலைக்குத்தி நின்றது. எப்போதும் அவனிடம் குழந்தை போல் நடந்துக்கொள்பவள், தனது நிமிர்ந்த நடையுடனும் மிடுக்கான தோற்றத்தடனும் அவனை நோக்கி வந்துக் கொண்டிருந்தாள். அவள் முகத்தில் அத்தனை கம்பீரம்.. அன்று அவனின் கம்பீரத்தை கண்டு அசந்தவள் இன்று பாரதி கண்ட புதுமைபெண்ணாக இருந்தாள்.

அவனை தூரத்தில் இருந்தே கண்டுவிட்டவளின் கண்களில் மின்னல் தெறிக்க… வேகமாக அவனை நெருங்கியவள் விறைப்பாக சல்யூட் வைக்க, அவன் கண்கள் அவளது காக்கி உடையில் இருந்த பேட்ஜில் இருந்தது..

‘மலரிசை ஐ.பி.எஸ்…’ மனதுக்குள் அதை வாசித்தவனுக்குள் அத்தனை பெருமை.. அவள் லட்சியத்தை அடைந்ததைவிட அவன் தான் மிகவும் பெருமையாக உணர்ந்தான்.

தன் முன் கம்பீரமாக நிற்பவளை எல்லையில்லா காதலுடன் பார்த்தவன் தலையசைக்க, அவள் கைகளை இறக்கிவிட்டு அவனை பார்த்தாள்.. இரண்டு பேருமே உணர்ச்சி குவியலாக இருந்தனர்.. அவளை அணைத்துக் கொள்ள சொல்லி கைகள் பரபரபத்தாலும் அவள் அணிந்திருக்கும் காக்கி சட்டைக்கு மரியாதை கொடுத்து அவன் அமைதியாக நின்றான்..

“மாமா!!! தன்னையே அசையாமல் பார்திருக்கும் அவனை அழைத்தவள் “போகாலாமா” என்க,

சரி என்பது போல் புன்னகைத்தவன் அவளை நேராக அழைத்து சென்றது அவர்களின் பழைய வீட்டிற்கு.. அவள் கல்லூரி சென்ற பின் ஒருமுறை கூட இங்கே வரவில்லை என்பதால் ஆர்வமாக காரை விட்டு இறங்கியவள் அங்கு கண்ட காட்சியில் விழி விரித்தாள்..

அவனது ஓட்டு வீட்டின் அருகே காலியாக இருந்த இடத்தில் பெரிதாக எழும்பி நின்றது அவர்களது மலர் இல்லம்…

இதற்காக தான் இத்தனை நாள் இங்கே அழைத்து வராமல் இருந்தானா?, அவள் தன் அருகில் நின்றிருக்கும் அமுதனை பார்க்க,

“வீட்டு வேலை ரெண்டு மாசம் முன்னாடி தான் முடிஞ்சிது மலர்.. உனக்கு சர்பிரைஸ்சா இருக்கட்டும்னு தான் சொல்லல..” அவளிடம் உரைத்தவன் உள்ளே அழைத்து செல்ல… இருவருமாக வலது காலை எடுத்து வைத்து தங்கள் வீட்டிற்குள் நுழைந்தனர்..

பெரிய வரவேற்பறை, கிட்சன், இரண்டு பெட்ரூம் என தாங்கள் இருந்த வீட்டை விட பெரிதாகவே இருந்தது.. மேலே அழைத்து சென்று காண்பித்தவன் அங்கேயும் இது போல நான்கு அறைகள் இருப்பதை காண்பித்தான்.. வேலை மொத்தமும் முடிந்து வீட்டிற்கு தேவையான பொருட்கள் அனைத்தையும் வாங்கி போட்டிருந்தான்… அனைத்தையும் பிரம்பிப்பாக பார்த்தவளை பூஜையறைக்கு அழைத்து வந்தவன் விளக்கேற்ற சொல்ல, அவளும் மறுபேச்சில்லாமல் செய்தாள்…

மனமுருக சாமியை வேண்டியவர்கள் பின் ஹால் சோபாவில் வந்து அமர்ந்தனர்.

“மாமா நான் போய் டிரெஸ் சேன்ஞ்ச் பண்ணிட்டு வரேன்” என்றவள் அவன் காண்பித்த தங்களது அறைக்கு செல்ல முயல, அவனோ

“வேண்டாம் மலர்.. கொஞ்ச நேரம் இப்படியே இரு.. எனக்கு உன்னை இப்படி பார்க்கும் போது அவ்வளவு பெருமையா இருக்கு..” என்றான்…

மேலும் சில நிமிடங்கள் அப்படியே இருந்தவள் அதற்கு மேல் முடியாது என்பது போல் தங்களது அறைக்கு ஓடிவிட்டாள். அவள் செய்கையை புரியாமல் பார்த்திருந்தான் அவன்…

அதற்கு பதிலளிப்பது போல் அரைகுறையாக புடவையை உடுத்திக் கொண்டு அவன் மடியில் வந்து தஞ்சமடைந்திருந்தாள் அவள்..

“இசை என்னடி இது???” அவளை தன் கைக்குள் அடக்கியவாறு அவன் கேட்க,

“போ மாமா.. அந்த டிரெஸ்ல இருந்தா இப்படி உன் மடில ஏறி இருக்க முடியுமா?, அதுக்காக தான் அதை கழட்டிட்டு புடவை கட்டிட்டு வந்தேன்..” என்றவள் அவன் கழுத்தில் தன் கைகளை மாலையாக போட்டாள்…

“அடிப்பாவி அதுக்கு தான் இந்த ஓட்டமா?? சரி இதென்ன புடவையை சரியா கட்டாம வந்திருக்க???” அவளிடமிருந்து எப்போது வேண்டுமானாலும் விடை பெறுவேன் என்பது போல் இருந்த முந்தானையை பார்த்தவாறு அவன் கேட்க, அவள் அவன் பார்வை செல்லும் திசையறிந்து அவன் தலையில் கொட்டினாள்..

“அவசரமா ஓடி வந்தேன் மாமா” என்றவள் சேலையை சரி செய்ய துவங்க, அவள் கையை தடுத்தவன்,

“இதுக்கு நீ இதை கட்டாமலே வந்திருக்கலாம்” என்றான் கணவனாக..

“போ மாமா” இசை சிணுங்க, அதில் அவன் சிதறிதான் போனான்…எத்தனை வருட காத்திருப்பு… அவளை கையில் ஏந்திக் கொண்டவன் தங்களது ஓட்டு வீட்டை நோக்கி செல்ல, அவள் அவன் நெஞ்சில் வாகாக சாய்ந்துக் கொண்டாள். வீட்டை திறந்தவன் எப்போதும் அவள் தூங்கும் நார் கட்டிலில் அவளை விட்டுட்டு அவளில் கவிதை எழுத துவங்க… அவன் மனைவியும் சிரத்தையாக அவனுக்கு ஒத்துழைத்தாள்.. இவ்வளவு நாள் அவளை விலகி இருந்ததற்கும் சேர்த்து மொத்தமாக அவளை கொள்ளையடித்தான் அவன்..

தன் மனைவியென்ற உரிமையை வழங்கிய அயர்வில் அவன் தூங்க, இசை அவனை கண்சிமிட்டாமல் பார்த்துக் கொண்டிருந்தாள்..

தனக்காக எவ்வளவு செய்கிறான்… அன்று இவன் மட்டும் வராது போனால் இன்று அவள் இறந்த இடத்தில் பெரிய மரமே வளர்ந்திருக்கும்… அவனை மனதில் கொஞ்சிக் கொண்டிருந்தவளின் குரல் அவனுக்கும் கேட்டதோ என்னவோ அவளை தன்னோடு மேலும் இறுக்கியவன் மீண்டும் அவளுள் புதைய துவங்க, அவளும் அவனை சந்தோஷமாகவே ஏற்றாள்..

மலரிசை அசிஸ்டன்ட் கமிஷ்னராக பொறுப்பேற்று ஆறு மாதங்கள் கடந்திருந்தது. இந்த ஆறு மாதத்தில் அவளின் கடமையை சரியாக செய்து வருகிறாள். எந்த செய்தித்தாள் அவளது வாழ்க்கையை மாற்றியதோ இன்று அதே செய்திதாளில் முதல் பக்கத்தில் அவள் செய்யும் சாதனைகளை புகழ்ந்து தள்ளிக் கொண்டிருந்தனர். அவளோடு கல்லூரியில் ஒன்றாக படித்தவர்கள் கூட இப்போது அவளிடம் நட்பு பாராட்ட முயல, அவளோ அனைவரையும் ஒரு எல்லை கோட்டுக்கு வெளியே வைத்திருக்கிறாள்.

ஸ்டேஷனில் பரபரப்பாக வேலை செய்துக் கொண்டிருந்தவளை யாரோ பார்க்க வந்திருப்பதாக கான்ஸ்டபிள் கூற, அவர்களை உள்ளே வர சொல்லிவிட்டு தன் கையிலிருந்த கோப்புகளை பார்த்துக் கொண்டிருந்தாள் இசை. காலடி சத்தத்தில் நிமிர்ந்து பார்த்தவள் அங்கு அவளது தந்தை மாசியையும் குழலியையும் கண்டதும் திகைத்தாள்.

மறுநொடி தன் முகத்தை இறுக்கமாக வைத்துக் கொண்டவள் அவர்களை அமருமாறு சைகை செய்ய, இருவரும் தயங்கியவாறு அமர்ந்தனர்.

இருவரையும் கண்களாலே அளவிட்டாள் இசை.. அழுதழுது வீங்கிய கண்களோடு குழலி அமர்ந்திருக்க மாசியிடமும் ஓய்ந்த தோற்றம்.. அவர்களே ஆரம்பிக்கட்டும் என்பது போல் அவள் அமைதியாக இருக்க, மாசியும் குழலியும் ஒருவர் முகத்தை ஒருவர் பார்த்துக் கொண்டனர்.

அவரே பின் விரக்தியான குரலில், “ஒரு கம்ளைன்ட் கொடுக்கணும்” என்றுவிட்டு மகளை பார்த்தார்.

“சொல்லுங்க என்ன கம்ளைண்ட் கொடுக்கணும்???” என்றவளின் குரலில் அத்தனை கம்பீரம்.

“என் பொண்ணை ஒருத்தன் ஏமாத்திட்டான்.. இப்போ அவ மூணு மாசம் கர்ப்பமா இருக்கா.. நீ..” நீ தான் என்று சொல்ல வந்தவர் அவளது தீர்க்கமான பார்வையில்.. “நீங்க தான் அவனை கண்டுபிடிச்சி என் மக வாழ்க்கையை காப்பத்தணும்” என்றவர் கையெடுத்து கும்பிட, அவள் அவரை வெறுமையாக பார்த்தாள்..

வழியும் கண்ணீரை துடைத்தவாறு அமர்ந்திருந்த குழலியை காணும் போது அவளுக்கு பரிதாபமாக இருந்தாலும் அன்று தானும் இப்படி தானே அழுதோம் என்று தன் மனதை கல்லாக்கி கொண்டாள்.

“நீங்க சொல்லுங்க.. யாரு அவன்??” என்றவள் குழலியை பார்க்க, அவளால் நிமிர்ந்து இசையின் முகத்தை பார்க்க முடியவில்லை.. ஒரு காலத்தில் எத்தனை கேவலமாக அவளை பேசியிருப்பாள்.. ஆனால் இன்று தன் நிலைமை???

“என் கூட படிக்கிறவன்.. லவ் பண்றோம் ஆனா இப்போ கல்யாணம் பண்ணிக்க முடியாதுன்னு சொல்றான்.. அவன் வீட்ல போய் கேட்ட அவன் காணாம போய்ட்டான்னு சொல்றாங்க…” என்றவள் முகத்தை மூடிக் கொண்டு அழ,

“கம்ளைண்ட் எழுதி கொடுத்துட்டு போங்க.. நான் விசாரிக்கிறேன்” என்ற இசை தன் கையில் இருந்த கோப்பில் மூழ்கிவிட, அதற்கு மேல் அங்கிருக்க முடியாமல் மாசியும் குழலியும் எழும்பினர்,

“நீங்க தான் எங்க குடும்ப மானத்தை காப்பாத்தணும்.. உங்களை நம்பி தான் வந்திருக்கோம்” மாசி மகளின் வாழ்க்கையை எண்ணி மீண்டும் கையெடுத்து கும்பிட, அது எதுவும் இசையின் மனதை அசைக்கவில்லை..

“குடும்ப மானம்??” கேலியாக கேட்டவள்.. அவரின் முகத்தை நேராக பார்த்து, “அன்னைக்கு விசாரனைக்காக போலிஸ் ஸ்டேஷன் வந்தா கூட உங்க மானம் போய்டும்னு உங்க வீட்டம்மா சொன்னாங்க.. இன்னைக்கு உங்க வீட்டு மானம் போகலையா???” என குத்தலாக கேட்க, அவர் முகம் அவமானத்தில் சிறுத்துவிட்டது.

எதுவும் பேசக்கூடாது என்று தான் நினைத்தாள் ஆனால் அவர் கூறிய குடும்ப மானத்தை கேட்டதும் அவளால் சும்மா இருக்க முடியவில்லை.. தவறு செய்தவளுக்காக நியாயம் கேட்டு வந்திருப்பவர் அன்று தனக்கு நியாயம் செய்யவில்லை என்ற கோபம் அவளை பேச வைத்தது..

அதற்கு மேல் நிற்க முடியாமல் அவர் சென்றுவிட, அவள் அதை பெரிதாக எடுத்துக் கொள்ளவில்லை ஆனால் மனதுக்கு ஏனோ கஷ்டமாக இருக்க, உடனே அமுதனை காண வேண்டும் போல் இருந்தது. வேலையை சீக்கிரம் முடித்தவள் வீட்டிற்கு கிளம்பினாள்.

அவள் வருவதற்கு முன்பே வீட்டிற்கு வந்து அவளுக்காக சமைத்துக் கொண்டிருந்தான் அவளது கணவன்.. அவன் கிட்சனில் இருப்பதை பார்த்தவள் அவனை தொந்தரவு செய்யாமல் சென்று துணி மாற்றி வந்தாள்..

கிட்சனில் சப்பாத்திக்கு மாவு பிசைந்துக் கொண்டிருந்தவனை பின்னாலிருந்து அணைத்துக் கொண்டவள் அவன் முதுகில் முகம் புதைக்க, அவள் ஸ்பரிசத்தில் அவளை உணர்ந்தவன் தன் வேலையை தொடர்ந்தான்…

“என்னாச்சு என் மலருக்கு??” இறுகிக் கொண்டே போகும் அவளது அணைப்பில் அவன் புருவத்தை மேலேற்ற, அவளோ “ம்ஹும்” என்று அவள் முகத்தை அவன் முதுகிலே வைத்து தேய்த்தாள்.

ஏதோ சரியில்லாதது போல் தோன்றவும் திரும்பியவன் அவளை தன் நெஞ்சோடு அணைத்துக்கொள்ள, சிறிது நேரம் அவள் அப்படியே நின்றாள்..

பின் அவளாகவே ஸ்டேஷனில் நடந்ததை கூற, குழலியை நினைத்து பாவமாக இருந்தது அமுதனுக்கு..

“இப்போ என்ன பண்ணட்டும்???” அவளை கண்டு கைதிகளும் மிரள, அவளோ சிறு குழந்தை போல் அமுதனிடம் கேட்டாள்.. அவளின் தோளில் தன் கைகளை போட்டவன் அவளை நிமிர்த்தி தன் முகம் பார்க்க வைத்தான்..

“உங்க மனசு என்ன சொல்லுது??” என்றான் அவள் கண்களுக்குள் ஊடுருவி,

“எனக்கே தெரியலை.. குழப்பமா இருக்கு.. ஒரு பக்கம் அவங்க என் அம்மாவை கொன்னவங்கன்னு தோணுது இன்னொரு பக்கம் உன் கடமையை செய்யினு தோணுது.. ஒரு வேளை கடமையை சரியா செஞ்சா.. நான் என் அம்மாவுக்கு துரோகம் பண்றேனோன்னு தோணுது” என்றவள் அவனை பரிதாபமாக பார்த்தாள்..

“நீ இசை இடத்துல இருந்து யோசிச்சா நீ அவங்களை என்னும் உன் குடும்பமா நினைச்சிருக்கன்னு அர்த்தம்.. அதே மலரிசை ஐ.பி.எஸ் இடத்துல இருந்து யோசிச்சா இதுவும் ஒரு கேஸ் அப்படிங்கறது மட்டும் தான் உன் மனசுல இருக்குன்னு அர்த்தம்.. நீ யாரா இருக்க இப்போ??” அவளின் கேள்விக்கு அவன் எளிதாக விடையளிக்க, அவள் முகத்திலும் தெளிவு பிறந்தது..

“நான் எப்பவும் இந்த மலருக்கு மட்டும் தான் இசையாய் இருப்பேன் மத்தவங்களுக்கு நான் மலரிசை தான்” என்றாள் அவனை மட்டுமே தன் குடும்பமாக நினைத்து..

அவள் தெளிந்து விட்டதை உணர்ந்தவன், அவளது நெற்றியில் தன் நெற்றியால் முட்டினான்.. பின் கணவனாக மாறி அவன் சேட்டையை ஆரம்பிக்க, அவளின் மனதில் அதன் பின் அவனை தவிர வேறு எதுவுமே இல்லை..

அடுத்து வந்த தினங்களில் குழலியை ஏமாற்றியவனை கண்டுபிடித்து, அவனையும் அவனது குடும்பத்தினரையும் மிரட்டி குழலி கழுத்தில் தாலி கட்ட வைத்தாள்.. அதோடு தன் கடமை முடிந்தது என்று அவள் ஒதுங்கியும் கொண்டாள்… அவளிடம் மன்னிப்பு கேட்க வந்த பூரணியையும் மாசியையும் அவள் கண்டுக்கொள்ளவே இல்லை…

ஐந்து வருடங்கள் கழித்து..

மலரிசை ஐ.பி.எஸ் என்று அந்த அரங்கம் முழுவதும் இசையின் பெயர் ஓலிக்க, தன் கம்பீரமான நடையுடன் சென்று சென்னை மேயரின் கையால் அந்த விருதை வாங்கினாள் மலரிசை..

அவளது மாவட்டத்தில் சிறிது நாட்களாக மாணவிகளை கடத்தி, அவர்களை விற்கும் கும்பலை போன மாதம் தன் திறமையால் கூண்டோடு அவள் கண்டுபிடித்து தண்டனை வாங்கி கொடுத்ததை பாராட்டி அவளுக்கு சென்னையில் வைத்து மேயரின் கையால் விருது வழங்கப்பட்டது.

கடத்தப்பட்ட மாணவிகளில் அவளது ஊர் மாணவிகளும் அடக்கமே.. அவர்களை காப்பாற்றி பத்திரமாக அவர்களது குடும்பத்தாரிடம் அவள் ஒப்படைக்க, அவளை ஊருக்குள் வரக்கூடாது என்று கூறிய மொத்த ஊரும் அவள் வீட்டு வாசலில் வந்த நின்று மன்னிப்பு கேட்டது… தன் கடமையை செய்ததாக கூறி அவர்களை அனுப்பிவிட்டாள் அவள். ஏனோ தங்களை ஒதுக்கிய அந்த ஊருடன் மீண்டும் ஒட்ட அவர்கள் இருவருக்குமே மனம் ஒப்பவில்லை.

மனைவி விருது வாங்கும் அழகை முதல் வரிசையில் தன் மகனோடு அமர்ந்து பார்த்துக் கொண்டிருந்தான் மலர் அமுதன்..

“ப்பா.. அம்மா” மேடையில் விருது வாங்கிக் கொண்டிருந்த தன் தாயை சுட்டிக் காண்பித்தான் இரண்டு வயதான மலர் நிலவன்..

“அம்மா தான்டா அம்மு..” மகனுக்கு பதிலளித்தவனின் விழிகள் மொத்தமும் மனைவியிடமே இருந்தது..

மேடையில் அவளிடம் பேச சொல்லி மைக் கொடுக்கப்பட, அதை வாங்கியவள் சின்ன சிரிப்போடு,

“இந்த விருதை நான் என் மலர் மாமாவிற்கு சமர்ப்பிக்கிறேன்” என்றவள், இறங்கி நேரே வந்து அமுதனின் கையில் விருதை கொடுத்து விறைப்பாக சல்யூட் வைத்தாள்..

அவளின் செய்கையை தொலைக்காட்சி ஊடகங்களின் வழியாக மொத்த தமிழ்நாடுமே நேரலையாக பார்த்துக் கொண்டிருந்தது

அவளின் செய்கையில் அதிர்ந்தவன் விருதை கையில் வாங்கிக் கொண்டு அவளை காதலோடு பார்த்தான். அதற்கு மேல் ஒன்றும் செய்ய இயலாமல் அவள் அணிந்திருக்கும் காக்கிச் சட்டை அவனை தடுத்துவிட்டது.. ஆனால் மனதில் அவனுக்கு அத்தனை பெருமை..

விழா முடிந்ததும் சென்னையில் இருந்து கிளம்பியவர்கள் அன்று இரவு எட்டு மணியளவில் வீடு வந்து சேர்ந்தனர். அவர்களது செல்ல மகன் ஆழ்ந்த நித்திரையில் இருக்க, அவனையும் தூக்கிக் கொண்டு அவர்களது ஓட்டு வீட்டிற்கு சென்றனர்..

எப்போது மனம் மகிழ்ச்சியாக இருந்தாலும் இருவரும் இங்கு வந்துவிடுவர்.. மகனை அவனுக்காக போடப்பட்டிருந்த கட்டிலில் கிடத்தியவள் அமுதன் அருகில் சென்று அமர்ந்தாள்..

அவள் மனம் சந்தோஷத்தில் நிறைந்திருந்தது.. அமுதனும் அப்படி ஒரு நிலையில் தான் இருந்தான்.. அவளது விரல்களை பற்றியவன் அமைதியாக இருக்க இசை அவள் நெஞ்சில் சாய்ந்துக் கொண்டாள்..

“மலர் மாமா!! நான் ரொம்ப சந்தோஷமா இருக்கேன்..” என்றவள் அவன் நெஞ்சில் இதழ் பதிக்க, அவன் அவனது சந்தோஷத்தை அவளின் இதழில் தன் முத்தத்தை பதித்து காட்ட துவங்கினான்..

மூச்சுக்காக அவளை விடுவித்தவன், “சந்தோஷத்தை இப்படி சொல்லணும்” என்றான் கள்ளச்சிரிப்போடு..

அவன் கூற்றில் அவனை முறைக்க முயன்று தோற்றவள் கலகலவென சிரிக்க ஆரம்பிக்க, அவன் அவளை ஆசை தீர பருகினான்..

“எனக்கு உன்னை மாதிரி ஒரு பொண்ணு வேணும்..” என்றவன் அவளை அணைத்துக் கொள்ள, அவளோ அவன் பிடியில் இருந்து திமிறிக் கொண்டு, “ம்ம்ஹும் எனக்கு இந்த மலரை போல இன்னும் இரண்டு பசங்க வேணும்” என்றாள் காதலோடு..

“முடியாது முடியாது பொண்ணு தான்” என்றவன் முறுக்கிக் கொள்ள, அவள் அவனை கண்சிமிட்டாமல் பார்த்தாள்… தன் வாழ்வில் எத்தனை மாற்றம் புரிந்துவிட்டான் இவன் என்று பிரம்பிப்பாக நினைத்தாள்…

“நீங்க மட்டும் அன்னைக்கு வராம போயிருந்தா என்னோட நிலைமை” என்றவள் சட்டென்று கண் கலங்க.. அவன் கோபத்தை விடுத்து அவளை தன்னோடு அணைத்துக் கொண்டான்.

“எப்படி வராம போவேன் இசை.. உனக்கு இரண்டு வயசா இருக்கும் போதே வாக்கு கொடுத்திருக்கேன்.. எப்படி உன்னை விட்டுடுவேன்?? நீ என் சொத்து டி” என்றவனின் அன்பில் தன்னை தொலைத்தாள் இசை..

“ஆமா மாமா நான் எப்பவுமே இந்த மலரோட இசை தான்” என்றவள் மேலும் அவன் நெஞ்சுக்கூட்டுக்குள் புதைய…

“ம்ஹூம் தப்பா சொல்ற நான் தான் எப்பவும் இந்த இசையோட மலர்” என்றவன் கணவனாய் தன் வேலையை துவங்க, அவளும் விரும்பியே அவனுள் அடங்கினாள்.. அவர்களின் சந்தோஷத்தை கண்டு அந்த வானமும் மழையை பொழிந்து அவர்களை வாழ்த்தியது…

இசையின் வாழ்வையே மாற்றி அவளுள் நீக்கமற நிறைந்து போனான் இசையின் மலரானவன்…

Facebook Comments Box
What’s your Reaction?
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here