இசையிடம் பேசிவிட்டு வந்த மலர் அமுதன் தன் வீட்டுத் திண்ணையில் அமர்ந்து விட்டத்தை வெறித்துக் கொண்டிருந்தான்.
மலரிசை.. அது அவன் அவளுக்கு வைத்த பெயர். அவன் மடியில் வைத்து தான் அவளுக்கு காது குத்தியது. இசைக்கு அதெல்லாம் ஞாபகம் இல்லாவிட்டாலும் அவனுக்கு அனைத்தும் பசுமையாக ஞாபகம் இருக்கிறது.. அவனது தாயும் தந்தையும் அவன் பிறந்த ஒருவருடத்திலே விபத்தில் தங்கள் உயிரை விட்டுவிட, அவன் பொறுப்பை அவனது பெரியம்மா விசாலாட்சி ஏற்றுக் கொண்டார். அவரும் மூன்றாண்டுகளுக்கு முன்பு தான் காசநோய்க்கு தன் கணவனை காவு கொடுத்திருந்தார்.. சொத்து சுகம் என்று பெரிதாக இல்லாவிட்டாலும் சொந்தமாக வீடு இருந்தது. விசாலாட்சி கூலி வேலைக்கு சென்றுவிடுவதால் அவரது பெண் வசுமதியே அமுதனுக்கு இன்னொரு தாயாகி போனாள்..
அக்காவென்றால் அமுதனுக்கும் கொள்ளை பிரியம்.. சரியாக வசுமதியின் இருபதாம் வயதில் மாசி அவளை பெண் கேட்டு வர, பெரிய இடத்து சம்பந்தம் என்பதால் விசாலாட்சியும் மகிழ்வுடனே வசுமதியை கட்டி வைத்தார். தம்பியை பிரிந்து செல்ல போகும் துயரத்தில் வசுமதி அவனை கட்டிக் கொண்டு அழ, குழந்தையான அவனும் அவள் மடியைவிட்டு இறங்காமல் அடம்பிடித்தான். மாசி தான் அவர்களின் பாசத்தை பார்த்து அவனை தங்களோடு அழைத்து சென்றார்.
அவரது அந்த பரந்த மனப்பான்மை பார்த்து வசுமதியின் உள்ளம் மொத்தமாக அவரிடம் வீழ்ந்தது. அடுத்த ஒரு வருடத்தில் இசை பிறந்துவிட, அவள் பெயரிலும் தன்னை போல் மலர் இருக்க வேண்டும் என்பதற்காக அமுதன் வைத்த பெயர் தான் மலரிசை. இசையும் மாமா மாமா என்று அவனோடு ஒட்டிக் கொள்ள, சரியாக இசையின் இரண்டாம் வயதில் தொடங்கியது பிரச்சனை.
மாசிக்கும் அவரது நண்பனின் தங்கை பூரணிக்கும் தொடர்பு என ஊரார் அரசல் புரசலாக பேச, வசுமதி அதை நம்பவும் இல்லை கணவனிடம் கேட்கவும் இல்லை..
ஒரு நாள் இசைக்காக உடையெடுக்க சென்ற போது விசாலாட்சியே மாசியையும் பூரணியையும் பக்கத்து ஊர் தியேட்டர் அருகில் ஒன்றாக பார்த்துவிட, வீட்டிற்கு வந்ததும் மாசியிடம் தன் மகளின் வாழ்வுக்காக சண்டையிட்டார். முதலில் மறுத்தவர் பின் ஒத்துக் கொண்டார்.
“எனக்கு அவளை பிடிச்சிருக்கு. ஆம்பிள்ளைன்னா அப்படி இப்படி இருக்கிறது சகஜம் தான்.. அதுக்காக இவளை கைவிட்டுட மாட்டேன்.. இவளும் இருக்கட்டும்..”
அவர் பேச்சில் வசுமதி உள்ளுக்குள் குறுகி போனார். விசாலாட்சி தன் மகளின் வாழ்வு இப்படியாகிவிட்டதே என்று கதற, கையில் இரண்டு வயது இசையை வைத்துக் கொண்டு கண் கலங்க நின்றிருந்தான் பத்து வயது அமுதன்.
மறுநாளே வசுமதி துக்கம் தாளாமல் விஷம் சாப்பிட்டு இறந்துவிட, விசாலாட்சி இடிந்து போனார். மாசிக்கும் வருத்தம் தான் என்றாலும் இனி பூரணிக்கும் தனக்கும் இடையில் யாருமில்லை என்று மகிழவே செய்தார். அவரிடமிருந்த பணத்தை வைத்து கேஸ் எதுவும் வராமல் பார்த்துக் கொண்டவர், விசாலாட்சியை வீட்டைவிட்டு அடித்து விரட்டினார்.
தாய் போல் தன்னை வளர்த்த பெரியண்ணையை அடித்த கோபத்தில் அமுதன் அவரை அருகில் கிடந்த உலக்கையால் அடித்தான்.. பத்து வயது தான் என்றாலும் அவனது வளர்த்தியும் தோற்றமும் அவனை பெரியவனாக காண்பிக்க, அந்த சிறுவனின் ஆக்ரோஷத்தை எதிர்பாராத மாசி திடுக்கிட்டு போனார்…
தன் அக்காவின் சாவுக்கு அவர் தான் காரணம் என்பதே அவனுக்குள் அத்தனை வெறியை கூட்டியது.. அவனது ஒரு அடியை கூட தடுக்க முடியாமல் தலையில் வழியும் ரத்தத்தோடு தெருவில் இறங்கி மாசி ஓட, அக்கம் பக்கத்தினர் வந்து அமுதனை பிடித்துக் கொண்டனர். அப்போதே பஞ்சாயத்து கூட்டப்பட்டு அவனை ஊரை விட்டு ஒதுக்கி வைத்தார்கள்..
அனைவரையும் இகழ்ச்சியாக பார்த்தவன், தன் அக்காவின் இறப்புக்கு நியாயம் செய்யாதவர்களிடம் பேசுவது கூட பாவம் என்பது போல் விசாட்சியின் கையில் இருந்த இசையை வாங்கிக் கொண்டு கிளம்பினான்.
“என் பொண்ணை தூக்கிட்டு எங்கடா போறா???” என்றவர் அவன் அருகே வந்து அவன் கையில் இருந்த இசையை பறிக்க, இசை அமுதனை விட்டு வரமாட்டேன் என்பது போல் அவன் சட்டையை பற்றிக் கொண்டு அழ துவங்கினாள்.
மகளுக்கு இரண்டடி போட்டு அவன் கையில் இருந்து அவளை பறித்தவர் அமுதனை வன்மத்தோடு பார்த்தார்.
தன்னை ஊரை விட்டு ஒதுக்கி தண்டனை தந்த போதுகூட கலங்காதவன், இசையை தன்னிடமிருந்து பிரிக்கவும் கலங்கிய கண்களோடு அவளை பார்த்தான்..
“அழக்கூடாது இசை.. மாமா ஒரு நாள் வந்து உன்னை கூட்டிட்டு போவேன் சரியா??” குழந்தையிடம் கூறியவன் அங்கிருந்த அனைவரையும் சீற்றமாக பார்த்துவிட்டு விசாலாட்சியை அழைத்துக் கொண்டு சென்றான்…
ஊருக்குள் இருக்கும் விசாலாட்சியின் வீட்டில் தங்க விருப்பமில்லாமல் ஊர் எல்லையில் இருந்த அவனது வீட்டிற்கு அழைத்து சென்றான் அமுதன்.
பத்து வயதில் அவனின் முதிர்ச்சி அதிகம் தான் என்றாலும் அவனின் சீற்றம் கண்டு ஊர்க்காரர்கள் பயந்தது என்னமோ உண்மை..
அதன்பிறகு மாசி இசையை காரணம் காட்டி இரண்டாம் திருமணம் செய்துக் கொண்டார்.. விஷயமறிந்த விசாலாட்சியால் அழ மட்டுமே முடிந்தது. அமுதனோ மனதில் வெறியை அடக்கி கொண்டு நன்றாக படிக்க ஆரம்பித்தான்.. அவனுக்கென்று பெற்றோர் விட்டுச் சென்ற நிலத்தில், சிறிதளவில் காய்கறிகளை பயிரிட்டு அதை விற்று வரும் பணத்தில் தங்கள் வாழ்க்கை பாட்டை நகர்த்தினார்கள்..
அவனது பள்ளிப் படிப்பின் இறுதியில் விசாலாட்சி காலாமாகிவிட, தனக்கென இருந்த ஒற்றை சொந்தமும் இறந்து போனதில் துவண்டு போனான். சாவுக்கு ஊர்க்காரர்கள் வர மாட்டார்கள் என்பதால் மற்ற ஊர்களில் இருந்த அவனது நண்பர்கள் மூலம் அவன் வீட்டின் அருகிலே அவரது உடலை அடக்கம் செய்தான்.
பள்ளிப் படிப்போடு நிறுத்திவிடாமல், கல்லூரியில் சேர்ந்து முதுகலை பட்டமும் பெற்றவன், தன் நிலத்தில் விவசாயம் பார்க்க துவங்கினான். அவனது திறமைக்கு அவனுக்கு நல்ல வேலைவாய்ப்புகள் வந்த போதும், அவன் இந்த ஊரை விட்டு செல்ல விரும்பவில்லை.. அங்கேயே இருந்தான். குழந்தையான இசையிடம் உரைத்த வார்த்தையை காப்பாற்ற வேண்டி காத்திருந்தானா என்பது அவனுக்கே வெளிச்சம்…
இசையின் மலராவான்….