“மாமா.. ப்ளீஸ் மாமா… நாம வச்சிக்கலாம் மாமா..” எங்கே நாய்க்குட்டியை தன்னோடு வைத்துக் கொள்ள விடமாட்டானோ என்று பயத்தில் அவள் கெஞ்சிக் கொண்டிருக்க,
“நான் தான் சொல்றேனே இசை.. போ இங்க இருந்து.. எதுக்கு என் உயிரை வாங்கிட்டு இருக்க??? உன் அப்பன் தான் என் உயிரை வாங்குறான்னு பார்த்தா நீயும் என்னை சித்திரவதை பண்ணாத…” அமர்ந்திருந்தவன் எழுந்து நின்று அவளை திட்ட, அவள் நடுங்கிப் போனாள்.. பயத்தில் இரண்டடி பின்னால் நகர்ந்தவள் அவனை பார்த்து மருண்டு விழிக்க, அவனுக்கு அப்போது தான் என்ன செய்கிறோம் என்பதே புரிந்தது.
“சே..” என்றவன் அங்கிருந்து சென்றுவிட இசை அப்படியே சிலையாக அமர்ந்திருந்தாள்..அவன் பேசியதில் இருந்து, தான் அவனுக்கு தொந்தரவாக இருக்கிறோம் என்பதை மட்டும் புரிந்துக் கொண்டவள் தன்னை நினைத்தே அழ தொடங்கினாள்…
அழுதவாறே அவள் வீட்டிற்குள் சென்று ஒரு ஓரமாய் முடங்கிக் கொள்ள, வெளியே மழை பெய்ய ஆரம்பித்தது.
சட்டென்று கேட்ட இடியோசையில் தூங்கிக் கொண்டிருந்தவள் எழும்பி மணியை பார்த்தாள்.. மணி நடு சாமம் இரண்டு என்று காண்பிக்க,
‘அழுதுட்டே தூங்கிட்டோமா???’ தனக்கு தானே கேட்டவள் அமுதனை தேட அவனை காணவில்லை.. அவனை காணாததும் அவள் பதட்டம் அதிகமானது..
“எங்கே சென்றான்??? தன்னிடம் கோபித்துக் கொண்டு சென்றுவிட்டானா???” இதுவரை தனியாக இருந்தது இல்லை என்பதால் அவளுக்கு அந்த தனிமை அச்சமாக இருக்க, தான் அமர்ந்திருக்கும் இடத்தில் இருந்தே “மாமா மாமா” என்று அரற்ற ஆரம்பித்தாள்..
வெளியே அழகனின் சத்தம் கேட்க, அமுதன் வந்துவிட்டானோ என்று சற்று தைரியம் பெற்றவள் அவன் கதவை திறந்து உள்ளே வரவும் ஓடிச் சென்று அவனை அணைத்திருந்தாள்..
“இனி நாய்க்குட்டியை தூக்கிட்டு வரமாட்டேன் மாமா.. திட்டாதிங்க மாமா.. எனக்கு உங்களை விட்ட யாருமே இல்லை.. நான் தப்பு பண்ணிட்டா மன்னிச்சிடுங்க…” இவ்வளவு நேரம் தனியாக இருந்த பயம் அவனை விட்டு நகரவிடாமல் செய்ய, அவனுக்கு அவளை நினைத்து பரிதாபமாக இருந்தது..
யார் மீதோ இருந்த கோபத்தை அவளிடம் காட்டிவிட்டோமே என்று தான் அவன் இவ்வளவு நேரம் வீட்டிற்கு வராமல் வயலில் இருந்தது..
அவளை மெலிதாக அணைத்துக் கொண்டவன், “நான் மொத்தமா நனைஞ்சு வந்திருக்கேன் இசை..” சோர்வாக அவன் கூற, அப்போது தான் அவளும் ஈரத்தை உணர்ந்தாள்.. வேகமாக அவனை விட்டு நகர்ந்தவள் ஓடிச் சென்று ஒரு துண்டை எடுத்து வர, அதை வாங்கி அவன் துவட்ட தொடங்கினான்… தன் சட்டையை கழற்றியவன் அலமாறியில் சென்று உடை தேட, அவனை இதுவரை அப்படி பார்த்திராதவள் சட்டென்று திரும்பி நின்றுக் கொண்டாள்.. எப்போதும் அவன் குளியலறையில் தான் துணி மாற்றிக் கொள்வான்.. இன்று அவனை இப்படி காணவும் அவள் தான் தடுமாறி போனாள்..
தனக்குள் மூழ்கிக் கொண்டிருந்தவள் அவனது இருமல் சத்தத்தில் அவனை திரும்பி பார்க்க, அவன் தலையை தேய்த்தவாறு அலமாறியில் இருந்து ஒரு காய்ச்சல் மாத்திரையை எடுத்துக் கொண்டிருந்தான்..
“என்னாச்சு மாமா?? எதுக்கு மாத்திரை சாப்பிடுறிங்க???” அவசரமாக கேட்டவள் அவன் அருகே நெருங்கி அவன் நெற்றியில் கை வைத்து பார்த்தாள்.. தீயாய் கொதித்தது..
“மாமா… காய்ச்சல் அடிக்குது..” தனக்கே காய்ச்சல் அடிப்பது போல் அவள் பதற,
“ம்ம் தண்ணீ எடுத்துட்டு வா” என்றவன் அயர்வாக கட்டிலில் அமர்ந்தான்.
அவன் கேட்டதும் அடுக்களைக்குள் சென்றவள் சுக்கு காப்பி வைத்து எடுத்து வந்தாள்.. அதை அமைதியாக பெற்றுக் கொண்டவன் முதலில் காப்பியை குடித்துவிட்டு அதன் பின் மாத்திரையை விழுங்கினான்..
பெட்ஷீட்டை எடுத்தவன் தரையில் விரித்து படுத்துவிட அவளுக்கு தூக்கம் வரவில்லை… கட்டிலில் படுத்து ஜன்னல் வழியாக வரும் நிலவொளியில் அவன் முகத்தை பார்த்திருந்தாள்..
காய்ச்சலில் அவன் புரண்டு புரண்டு படுக்க, அவள் பயந்து போனாள்.. வேகமாக வந்து அவன் அருகே அமர்ந்தவள் அவன் கையை பற்றிக் கொள்ள, அவன் மெதுவாக ஆழந்த நித்திரைக்கு சென்றான்… அவளும் அவன் கையை பற்றிக் கொண்டு சற்று இடைவெளியில் படுத்துக் கொண்டாள்…
காலையில் எழுந்த இசை தன் கையை விலக்க முடியாமல் பார்க்க, அவள் கைகளை அழுத்தமாக பற்றிக் கொண்டு தூங்கிக் கொண்டிருந்தான் அமுதன்.. மெதுவாக அவள் கையை விடுவித்தவள் காய்ச்சல் சரியாகிவிட்டதா என்று பார்க்க, அவன் அருகே செல்ல, அதிர்ந்தாள்…
அவன் முகமெங்கும் சிறு சிறு கொப்பளங்களாக இருக்க, அவளுக்கு ஒன்றும் விளங்கவில்லை.. ஒரு வேளை அம்மை போட்டிருக்குமோ என்று அவன் சட்டை பட்டன்களை கழட்டியவள் அவன் உடம்பிலும் அது போல் இருக்கவே என்ன செய்வதென்று தெரியாமல் அவனை எழுப்பினாள்,
“மாமா எழும்பு மாமா எனக்கு பயமா இருக்கு…” அவன் கையை பற்றிக் கொண்டு அவள் உலுக்க, அவன் சோர்வாக கண்விழித்து பார்த்தான்..
“இசை…” முனகலாக அவன் அழைக்க,
“மாமா.. எனக்கு பயமா இருக்கு மாமா.. உனக்கு அம்மை போட்டிருக்கு…” குழந்தை போல் அவள் தேம்ப, அவன் தன்னை தானே தொட்டுப் பார்த்துக் கொண்டான்…
“ம்ச்.. அழாதே இசை..” அவள் அழுவது தாங்க முடியாமல் அவன் கூற, அவள் அழுகை நின்றபாடில்லை…
“இசை அழாதே… இப்படியே அழுதுட்டு இருந்தா எனக்கு எப்படி குறையும்???” அவனுக்கு அவன் நிலையை விட தன்னை மட்டுமே நம்பியிருக்கும் அவளை நினைத்து தான் கவலையாக இருந்தது..
“நான் அழமாட்டேன்..” வழிந்துக் கொண்டிருக்கும் கண்ணீரை துடைத்துக் கொண்டவள் அவன் முகம் பார்க்க,
“ம்ம்ம்.. இது தான் நல்ல பிள்ளைக்கு அழகு.. வெளியே வேப்ப மரம் நிக்கும்.. அதுல இருந்து இலை பறிச்சிட்டு வந்து வீட்டு முன்னாடி தொங்க போடு.. அப்புறம் என் தலை பக்கத்துலையும் வை.. இது குறைய பத்து நாளாச்சும் ஆகும்.. பத்தியம் வேற இருக்கணும்…” அம்மை போட்டிருக்கும் போது என்னவெல்லாம் செய்ய வேண்டும் என்பதை அவன் விளக்க அவளுக்கு ஏற்கனவே இதுவெல்லாம் கொஞ்சம் தெரிந்தாலும் கர்ம சிரத்தையாக கேட்டுக் கொண்டு அவன் கூறியது போலவே செய்தாள்…
அவன் அருகேயே அமர்ந்து வேப்பிலையால் அவன் முகத்தையும் உடம்பையும் வருடிக் கொண்டிருந்தாள் இசை.. மனமோ அவனுக்கு சீக்கிரம் சரியாகிட வேண்டும் என கடவுளிடம் மன்றாடிக் கொண்டிருந்தது..
அவளுக்கு தெரிந்தது போல் பத்திய சாப்பாடு செய்து கொடுத்தாள்.. அமுதனுக்கு காய்ச்சலும் அதிகமாக இருக்கவே அவனால் கண்களை திறக்க கூட முடியவில்லை..அந்த ஒரு நாளை ஓட்டுவதற்குள்ளே இசை பெரிதும் பயந்து போனாள்..
அதற்குள் அடுத்த கட்ட சோதனையாக அன்றிரவு அவனுக்கு காய்ச்சலோடு உடம்பு வலியும் சேர்ந்துக் கொள்ள, இரவு முழுவதும் அனத்த ஆரம்பித்துவிட்டான்.. சுயநினைவு இல்லாதவன் போல் அவள் கையை பற்றிக் கொண்டு வலியில் அவன் உடம்பை முறுக்க, இசைக்கு பயத்தில் மேனி நடுங்கியது.. இரவு முழுவதும் பொட்டு தூக்கமில்லாமல் அவன் அனத்தும் நேரமெல்லாம் அவன் கையை கெட்டியாக பிடித்துக் கொண்டு அமர்ந்திருந்தாள்..
மறுநாள் காலை அவன் அனத்தல் குறைந்திருந்தாலும் அம்மை நிறைய போட்டிருந்தது.. இந்த சமயத்தில் பழங்கள், நொங்கு, இளநீர் போன்ற குளுமையான ஆகரங்கள் கொடுக்க வேண்டும் என நினைவு கூர்ந்தவள் அவன் தூங்கும் சமயத்தில் பக்கத்து ஊர் சந்தைக்கு கிளம்பினாள்.
அமுதன் அவளுக்கென கொடுத்திருந்த பணத்தில் அவள் சந்தைக்கு செல்ல, அங்கிருந்த அவளது ஊர்க்காரர்கள் அவளை பார்த்தும் முகத்தை சுழித்தனர். அதையெல்லாம் கடந்து அவள் பொருட்களை கேட்டாலும் அவளது ஊர்க்காரர்கள் தர மறுக்க, வேறு ஊரார் கடையின் முன்பு சென்று நின்றாள்.
அமுதனின் நிலையை எடுத்துக்கூறி அவள் பொருட்களை கேட்க, அவளை பாரத்து அவர்கள் பரிதாபப்பட்டாலும் யாரும் மாசியை மீறி அவளுக்கு உதவ முன் வரவில்லை. அந்த சந்தையில் அவரிடம் வட்டிக்கு பணம் வாங்கியிருப்பவர்களே அதிகம் என்பதால் அவரின் ஆணைப்படி யாரும் அவளுக்கு பொருட்களை கொடுக்கவில்லை..
மாசியை பற்றி அறிந்ததால் அமுதன் எப்போதும் இந்த சந்தை பக்கம் வர மாட்டான்..ஆனால் அது தெரியாத இசையோ ஒவ்வொரு கடையாக ஏறி இறங்க, எல்லாரும் ஒன்று போல் தரமுடியாது என மறுத்தனர். எல்லாம் தன் தந்தையின் வேலை என்று புரிந்துக் கொண்டவள் கோபத்தோடு தன் தந்தையை காண சென்றாள்..
“அப்பா அப்பா!!..” வீட்டின் முன் கேட்ட இசையின் சத்ததில் வெளியே வந்தனர் மாசியும் பூரணியும். அவரிடம் சந்தையில் நடந்ததை அவரது ஆள் அவள் வருவதற்கு முன்பு தான் கூறியிருந்தான். .
“எதுக்கு இப்படி பண்றிங்க?? அதான் எங்களை ஊரைவிட்டு ஒதுக்கி வச்சாசே… அப்புறம் ஏன்??” காலையில் இருந்து அலைந்த அலைச்சல், ஏமாற்றம் எல்லாம் கோபமாக வெளிப்பட்டது அவளிடம்..
அவளின் சத்ததில் அக்கம் பக்கத்தினர் கூடிவிட, அவள் யார் முகத்தையும் நிமிர்ந்து பார்க்கவில்லை.. தந்தையை மட்டுமே சீற்றத்தோடு பார்த்திருந்தாள்.
எப்போதும் அவர்கள் முன்பு அடங்கி செல்பவள் இன்று தைரியமாக வந்து நிற்கவும் பூரணிக்கு உள்ளுக்குள் எரிந்தது.. “எதுக்காக இப்போ என் வீட்டு முன்னாடி வந்து குதிக்கிற??? என்ன திமிரா???”
“நானா வரலை.. என்னை வர வச்சிருக்கிங்க.. எதுக்காக எனக்கு யாரும் எதுவும் தரக்கூடாதுன்னு சொல்லி வச்சிருக்கிங்க??? என் மாமாவுக்கு உடம்பு சரியில்லை..” கோபமாக ஆரம்பித்தவளுக்கு அமுதனின் நிலையை நினைத்து தொண்டையடைத்தது…
“இன்னும் உயிரோட இருக்கானா??? முந்தாநேத்து தான் என்கிட்ட மூக்கறுபட்டு போனான் அந்த பயத்திலே காய்ச்சல் வந்துடுச்சா???” அவனை அன்று தலைகுனிய வைக்க முடியாத வெறியை இன்று இசையிடம் காண்பித்தார் அவர்..
அவர் பேசியதில் அவரால் தான் அமுதன் அன்று தன்னிடம் கோபித்துக் கொண்டுள்ளான் என்பதை குறித்துக் கொண்டவள் அவரை திகைப்பாக பார்க்க, அவரோ,
“நீயும் அவனும் சேர்ந்து என்னை கோவில்ல வச்சி அவமானப்படுத்தினதை மறந்துட்டேன்னு நினைச்சியா??? எதுவும் மறக்கலை.. உன்னையும் அவனையும் சும்மா விட மாட்டேன்.. உங்க வாழ்க்கையை அழிச்சி காட்டுறேன்.. இப்போ மரியாதையா இங்க இருந்து போ.. அவன் செத்தா கூட ஊருக்குள்ள இருந்து யாரும் வர மாட்டோம்.. மாமனாம் மாமா…” கண்களில் வெறியோடு கூறியவரை காணும் போது இசைக்கு நிஜமாகவே இவர் தன் தந்தை தானா என்று சந்தேகம் வந்தது..
அவர் கூறியதில் கோபம் வந்தாலும் நேற்று முழுவதும் அமுதன் அனத்தியது ஞாபகம் வந்து அவளை தணிந்து போக வைத்தது..
“என்மேல இருக்க கோவத்தை மாமா மேல காமிக்காதிங்க.. அவர் பாவம்.. அவரை விட்டுடுங்க” .என்றவளுக்கு இரண்டு நாட்களுக்கு முன்பு என்ன நடந்தது என்று தெரியாது, ஆனால் தன்னால் தான் அமுதனை தொல்லை செய்கிறார் என்று புரிந்துக் கொண்டாள்..
“விடணுமா?? எப்படி விட முடியும்?? அவன் என் கால்ல வந்து விழணும்.. அப்போ தான் நான் அவனை விடுவேன்..” என்றவரின் கைகள் தன் நெற்றியின் இடது புருவத்தின் அருகே இருந்த தழும்பை தடவியது.. அது அவன் உண்டாக்கியது அல்லவா..!!
“வேண்டாம்.. மாமாவை விட்டுடுங்க.. என் மேல தானே கோவம்.. நான் உங்க கால்ல விழுந்து மன்னிப்பு கேட்கிறேன்..” என்றவள் எதையும் யோசிக்காது அவர் காலில் விழப் போக,
“இசை.!!!!!” என்று ஓங்கி ஒலித்த குரலில், அனைவருமே திரும்பி பார்த்தனர்.. அங்கு பல நாட்கள் காய்ச்சலில் விழுந்தவன் போல் ஓய்ந்து போய் அமுதன் நின்றிருந்தாலும் அவன் முகத்தில் அத்தனை கம்பீரம்… அவனை கண்டதும் இசை அழுதவாறே அவனருகே செல்ல. அவன் அவளை தன்னோடு அணைத்துக் கொண்டான்..
இசையின் மலராவான்……