உயிரோடு உறவாடினாள்—சிறுகதை

0
123

இது ஒரு தேவதையின் கால சுவடுகள் .

1925–ஆம் ஆண்டு அந்தியூர் என்ற கிராமத்தில் நள்ளிரவில் ஒரு பெண் பிரசவ வேதனையில் துடித்து கொண்டு இருந்தாள் .அவளுடைய கணவன் ஆர்வத்துடன் குடிசைக்கு வெளியே காத்திருந்தான் .கொஞ்ச நேரத்துல குழந்தை அழும் சத்தம் கேட்க உள்ளிருந்து வந்த மருத்துவச்சி”பொன்னா பொம்பளை புள்ள பொறந்திருக்கு.அதுமட்டுமல்ல உன் பொண்ஜாதிக்கு இந்த பிரசவமே மறு பொழப்பா போச்சு .அடுத்த தடவ கரு தங்காம பாத்துகங்க .அப்புறம் நான் ஒண்ணும் பண்ண முடியாது”என்று நகர்ந்தாள்.பொன்னான் உள்ள போகையில் அசந்து படுத்திருத்த அவனோட மனைவி நஞ்சாத்தாள் ஆதரவாய் அவள் கைகளை பிடித்தான் .அவள் தனது முந்தானையை விலக்கி பால் குடித்து கொண்டு இருந்த குழந்தையை காட்டா நெகிழ்ந்து போனான் .

ஒரு மாத காலத்திற்கு பிறகு தனது குழந்தையுடன் ஊருக்கு போதுவான கோயிலுக்கு வந்தான் .அவனுக்கு முன்பே ஊர் பெரியவர்கள் கூடி இருந்தார்கள் .ஒரு பானை நிறைய பாலை நிரப்பி அது சாமிக்கு பூஜை செஞ்ச பிறகு பொன்னான் முன்னாடி நீட்டி அந்த பூசாரி “டேய் பொன்னா உன்னை போலவே உன் வாரிசும் ஊர் ஈமை கார்யம் செய்யும்னு.உன் புள்ள கைய வச்சு சத்யம் செஞ்சு கொடு”என்றதும் அவனும் அவர் சொன்ன மாதிரியே செஞ்சான்.

அன்று வயல்களில் எல்லாம் அறுவடை முடிந்து வியாபாரிகள் கொள்முதல் செய்து முடித்த பிறகு வயல்களில் வேலை செய்தவருக்கு நெல் அளந்து முடித்த பிறகு ஊர் தர்ம கணக்கு ஆளுக வாங்க என்றதும் பொன்னான் மற்றும் நாலைந்து பேர் போய் வரிசையில் நின்றார்கள் .நாவிதர்,இறுதி காரியங்கள் செய்வோர் ,செருப்பு தயாரிப்பவர்,துணிகள் துவைப்பவர் என அனைவருக்கும் அளந்து போடப்பட்டது.பொன்னான் சிரித்த முகத்துடன் மாட்டு வண்டியில் நெல் மூட்டையோடு வீடு திரும்பினான் .

அன்று இரவு பொன்னான் வீட்டுக்கு வந்த பண்ணையாள்”டேய் பொன்னா அய்யா வூட்ல கூப்டுறாக.உன் பொண்ஜாதியோட வர சொன்னாக.”என்றதும் தூங்கி கொண்டு இருந்த குழந்தையை பக்கத்து வீட்ல கொடுத்துட்டு கிளம்பினார்கள் .சாம்பமூர்த்தி வீட்டு வாசலில் நின்றிருந்தார்.பொன்னானை பார்த்ததும் “பொன்னா நாள் பட்டு கிடக்கு .பாத்து நல்ல முறையா அனுப்பி வை”என்றார் .பின் வாசல் வழியாக வீட்டுக்குள்ள போனதும் அங்கே படுக்கையில் இருந்த கிழவியை தூக்கிட்டு வந்து அவனும் அவன் மனைவியும் எண்ணெய் தேய்ச்சு குளிக்க வச்சு .கொஞ்ச நேரத்துல இளநீர் வெட்டி வாயில் ஊற்றி படுக்க வைத்து இருவரும் பக்கத்துலயே உக்காந்து கொண்டார்கள் .கொஞ்ச நேரம் கழித்து கிழவியின் உடல் சிலிர்த்து துடிக்க ஆரம்பித்ததும் பொன்னான் கால்களையும் ,அவன் மனைவி கைகளையும் அழுத்தி பிடித்து கொள்ள சிறிது நேரத்துல உயிர் பிரிந்தது.வெளியில் சென்று தகவல் சொல்லி விட்டு கிளம்பி தெருமுனை தாண்டுவதற்குள் ஒப்பாரி சத்தம் காதை பிளந்தது.பொன்னான் வம்ச வழியினர் கருணை கொலை செய்து வருகிறார்கள் .வயது தகுந்தவாறு செயல் முறைகள் மாறும் .பத்து கிராமத்துக்கும் இவன் குடும்பம் மட்டுமே இந்த செயலை செய்து வருகிறது .

பொன்னான் மகள் வடிவுக்கு அப்போது எட்டு வயசு இருக்கும் .காலை எழுந்தவுடன் உடல் காய்ச்சலால் நெருப்பாய் கொதிக்க நஞ்சாத்தாள் வடிவை தூக்கி கொண்டு மருத்துவச்சிய பாக்க கிளம்பி வரும்போது எதிரே கல்யாண ஊர் வலம் தயங்கி ஓரமாய் நின்று கொண்டாள் .அப்போது அந்த கூட்டத்தில் இருந்து ஒருவன் வந்து நஞ்சாத்தாளை ஓங்கி அறைந்தான் .அவளும் நிலை தடுமாறி கீழே குழந்தையுடன் விழுந்ததும் அவன் “நல்லது நடந்து வர்றாங்கன்னு இல்லாம எதித்து வர்ற .அவ்ளோ திமிரா.அறிவு வேணாம் .உசிர் எடுக்குற முண்டை.ஒதுங்கி போடி”என்றதும் கூனி குறுகி ஒதுங்கி போனாள் .அவள் வடித்த கண்ணீர் வடிவை நிறைய கேள்வி கேட்க வைத்தது .வீடு வந்து சேர்ந்த நஞ்சாத்தாள் பொன்னான் மடியில் படுத்து அழுதாள் .

சாம்பமூர்த்தி பண்ணையாள் ஒருவனை வரச்சொல்லி “டேய் இவனே வெள்ளக்காரதுரை சேதி அனுப்பி இருக்கான் .அறுவடை பங்கு கேட்டு.அவன் வண்டில ஏத்தி விட்று.அப்புறம் உன் சொந்தத்துல புதுசா சமஞ்சது இரண்டையும் கூட அனுப்பி வச்சுரு.பெத்தவனுக்கு அறுவடையில சேத்தி அளந்திரு”என்றதும் கிளம்பி போய் அவர் சொன்னதை செய்தான் .பத்து நாள் கழித்து இரண்டு பெண் குழந்தைகளுடன் பாதி பிணமாய் திரும்பி வந்தார்கள் .

வடிவு பருவமடைந்து புதிதாக மலர்ந்த பூவாக இருந்தாள் .அவளோட முத்து சிதறும் சிரிப்பு பார்ப்போரை வசியப்படுத்தும்.சிறு குழந்தையாகவே இருந்தாள் .சாம்பமூர்த்தியின் அக்கா மகன் டவுனில் படித்தவன்.காந்தியடிகளின் கொள்கைகளால் ஈர்க்கப்பட்டவன்.அவர் சொன்ன படி அனைவருக்கும் கல்வி அறிவு வேண்டும் என்பதற்காக கிராமத்தில் அனைத்து குழந்தைகளுக்கும் மாலைவேளைகளில் பாடம் கற்று தந்தான் .ஒரு நாள் அந்த பக்கம் நடந்து போன வடிவு அவன் பாடம் நடத்துவதை கவனித்தாள்.அது அவளை நின்று கவனிக்க ஆரம்பித்தாள் .படிப்பு பிடித்து போனது .தினமும் அதே நேரத்துக்கு வந்து யாரும் கவனிக்காத மாதிரி மறைந்து நின்று பாடம் கற்றாள்.இதை ஒரு நாள் ஆசிரியன் அறிவழகன் கவனித்து விட அவளை மற்ற குழந்தைகளோடு உக்கார சொல்ல அவள் ஓடிவிட்டாள்.மறு நாள் அவள் வரவில்லை .

ஒரு நாள் குளித்து விட்டு வடிவு திரும்புகையில் வழி மறித்து “என்புள்ள படிக்க வரமாட்டேங்குற?”என்றதும் அவள் சுற்றும் பார்த்து விட்டு”டவுன்ல படிச்சா ஊர் கட்டுபாடு தெரியாதா ?கொன்னுபுடுவாங்க.நான் எல்லாம் படிக்க கூடாது .”என்றதும் “யாரு புள்ள சொன்னது ?நான் சொல்லி தர்றேன்.தினமும் இதே நேரம் இங்க வந்திரு .யாரும் பாக்க மாட்டாங்க.நாளைக்கு வந்திரு”என்றவன் மறுநாள் காத்திருந்தான் .காத்திருந்து கிளம்பும் போது வந்து நின்றாள் .சின்ன குழந்தைக்கு போல பாடம் சொல்லி தந்தான் .

நாட்கள் போக போக இரண்டு இதயங்கள் இடையே காதல் மலர்கள் அரும்ப தொடங்கியது .காதல் தன்னை சுற்றியுள்ள வட்டத்தை உணராமலே இயங்கும் சக்தி வாய்ந்தது .அவள் மூச்சு காற்றையும் சிறைபிடித்தான் .அவளை தனக்குள் புதைத்தான் இதயத்தின் ஆழத்தில் .அவன் தீண்டலில் அவள் தன் பெண்மை உணர்ந்தாள் .அவள் விழிகளில் விருந்து படைத்தாள்.அவளோடு கழியும் சில நொடிக்காக வினாடிகளை வேகமாய் கடத்தினான்.

காதல் எளிதில் தன்னையே அறியாமல் காட்டி கொடுக்கும் தன்மை வாய்ந்தது .இவர்கள் காதலும் அம்பலம் ஆனது .அறிவழகனை அவனது மாமா நடுதெருவில் வைத்து செருப்பால் அடித்தார்.ஊரைவிட்டு விரட்டி அடித்தார் .பொன்னானுக்கும் மிரட்டல் வந்தது .வடிவு உடைந்து போனாள் .காதல் மிகப்பெரிய பாவச்செயல் ஆனது .ஊர் முழுதும் தூற்ற ஆரம்பித்தனர் .நிம்மதி இல்லாத வாழ்வில் மேலும் ஒரு அசம்பாவிதம் நடந்தது .பொன்னான் நெஞ்சு வலியால் துடித்து இறந்து போனான் .வடிவும்,நஞ்சாத்தாளும் செய்வதறியாது திகைத்து நின்ற சமயம் அது.வாழ்க்கையில் இருள் சூழ்ந்து கொண்டது .

அந்த சமயம் ஊருக்குள் இருந்து சேதி வர நஞ்சாத்தாள் வடிவை அழைத்து கொண்டு புறப்பட்டாள்.அங்கே ஒரு வடிவு வயதுடைய பெண் துடித்து கொண்டு இருக்க.அந்த பெண்ணின் நாடித்துடிப்பை பாத்த நஞ்சாத்தாள் வெளியே ஓடி போய்”அய்யா புள்ள பொழச்சிக்கும் நாடி துடிப்பு நல்லா இருக்கு .மருத்துவச்சிய வரச்சொல்லுங்க”என்றதும் அவர்”புள்ளைக்கு நாங்க தான் விஷம் கொடுத்தோம் .இந்த புள்ள எனக்கு வேணாம் .ஊருக்குள் தல நிமிர முடியாது.போய் அனுப்பி வை “என்றதும் நஞ்சாத்தாள் உள்ளே வந்தாள் .வடிவை அந்த பொண்னோட கால அழுத்தி புடிக்க சொல்லிட்டு மூச்ச நிறுத்த போகும்போது வடிவோட கைகள் நடுங்க ஆரம்பித்தது .துடிக்கும் அந்த பொண்ணோட கண்ணு எதையோ சொல்றது போல உணர்ந்தாள்.என்னை விட்றுங்கன்னு கெஞ்சுற மாதிரி உணர்ந்தாள் .அடுத்த நிமிஷம் அங்கிருந்து ஓடி போயிட்டா .நஞ்சாத்தாள் வந்த வேலையை முடித்துவிட்டு வீடு திரும்பினாள்.வடிவுக்கு அவளோட அம்மாவ பாக்கவே பயமா இருந்தது.ஒரு உயிரை எடுப்பதற்கு நமக்கு என்ன உரிமை உள்ளது ?என்ற கேள்வி அவளுக்குள் எழுந்தது .அடுத்த வாரம் மீண்டும் ஊருக்குள் இருந்து சேதி வர வடிவு கதவ சாத்திட்டு அவ அம்மாவ போகவிடாமல் தடுத்து நிறுத்திட்டா .

இந்த பிரச்சனை ஊர் பஞ்சாயத்து முன்னாடி வந்தது .அப்போது வடிவு “எங்களுக்கு இந்த தொழில் வேணாம் .இது பாவம்.இனி நாங்க வர மாட்டோம் .நாங்க இந்த ஊர விட்டு போக போறோம்”என்றதும் சாம்பமூர்த்தி ஆவேசமாய்”வாய மூடுடி பொட்ட நாயே .எங்க வந்து தல நிமிந்து நின்னு பேசுற.உடம்புற இருக்குற உடுப்புல இருந்து கடைசி சொட்டு இரத்தம் வரைக்கும் நாங்க கொடுத்தது .சாகுறவரைக்கும் எங்க காலுக்கு செருப்பா கிடக்கணும்.அதையும் மீறி ஊரவிட்டு போய்த்தான் ஆகணும்னா செஞ்ச சத்தியத்த திரும்ப வாங்கணும்.இந்த ஊர்ல பத்து வீட்ல இருந்து ஒவ்வோரு பிடி சோறு வாங்கியாந்து கோயில்ல படைச்சு தின்னுட்டு கிளம்புங்க.அப்படி இல்லைன்னா இதே மண்ணுல செத்து போயிருங்க.”என்றவர் கூட்டத்திடம் திரும்பி “அசலூர்ல இருந்து வேற ஆள கூட்டியாந்து இதுங்க வீட்ல தங்க வையுங்க”என்று கிளம்பினார் .

வடிவும்,அவளுடைய அம்மாவும் வீடு வீடாக சென்று சாப்பாடு கேட்டார்கள் .எல்லோரும் விரட்டியடித்தார்கள்.எவ்வளவு கெஞ்சியும் யாருக்கும் இரக்கம் வரவில்லை .இரண்டு நாட்களாக மேல ஆனது .கோயில் வாசலில் பசியில் மயங்கிய நஞ்சாத்தாள் திரும்ப எழவேயில்லை .உயிர் பிரிந்தது .அழ கூட தெம்பில்லாத வடிவு நடுத்தெருவில் பிணத்தோட படுத்துகிடந்தாள்.கொஞ்சம் கொஞ்சமாக அவளின் கண்களும் இருள தொடங்கியது .மரணம் இப்போது சுகமாக தோன்றியது .கடைசி சில நொடிகளில் அறிவழகன் முகம் தோன்றி மறைந்தது .அப்போது அவள் நினைவுகளை யாரோ கலைப்பது போன்ற உணர்வு .தன்நிலை உணரும் போது அறிவழகன் மடியில் கிடந்தாள்.கண் விழித்தவளை வாரியணைத்து வாங்கி வந்த உணவை ஊட்டினான் .பிறகு அவளை அழைத்து கொண்டு அவள் இருந்த பகுதிக்குள் சென்று அனைவரின் முன்னிலையிலும் “நல்லா பாருங்க .உங்க கூட இருந்த ஒரு குடும்பத்தோட நிலைமையை .நாளைக்கு உங்களுக்கும் இதே நிலைமை தான்.உங்க அடிமைதனம் தான் அவுங்க பலம்.தூக்கி போடுங்க இந்த பரம்பரை தொழில்ல.எதை செஞ்சாலும் நீ உழைப்பாளி தான்.உனக்கு கூலி கேளுங்க.நிமிந்து நடங்க.முதல்ல இவுங்க அம்மாவ புதைக்க உதவி பண்ணுங்க “என்றதும் மொத்த கூட்டமும் அவன் பின்னால் போனது .

சில நாட்களில் அறிவழகன் வடிவை கலப்புதிருமணம் செய்து கொண்டு அதே ஊரில் வாழ்ந்து காட்டினான் .சாம்பமூர்த்தி வீட்டிற்குள்ளேயே முடங்கி போனார் .

ஒவ்வோரு போராளியும் நம்மகிட்ட இருந்து தான் உருவாகுறான்.இத்தனை ஆண்டுகள் கழிந்தும் இன்னும் மாறாத சில சாதிய கோட்பாடுகள் நமது கலாச்சாரத்தின் உண்மையான தீங்கு என்பதை உணர்வோம்.மாறாட்டும் மனித குலம் மனிதம் இழக்காமல் !

[முற்றும் ]

நான்
உங்கள்
கதிரவன் !

Facebook Comments Box
What’s your Reaction?
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here