என் கோடையில் மழையானவள்-1

0
575

அதிகாலை பனிக்காற்று மேனியை தழுவிச் செல்ல, நிதானமாய் மூச்சை உள்ளிழுத்தபடி கண்களை மூடித் திறந்தாள் வெண்பா. அந்தக் குளிர் காற்று உடலின் எல்லா உறுப்புக்களையும் உஷ்னமாக்கிக் கொண்டு திரும்பியது. போர்வையை மீண்டும் இழுத்துப் போர்த்திய வண்ணம் உறங்கப் போனவளை உறங்க விடாமல் அழைத்தது சித்தி இளமதியின் குரல்.

“குட்டிம்மா..எழுந்திரு ஆறு மணியாகிருச்சு..” என சித்தி கூற சட்டென மஞ்சத்தில் எழுந்து அமர்ந்து கொண்டாள்.

சுற்றும் முற்றும் தனது கைப்பேசியை தேடியவளுக்கு நேற்று இரவு பாட்டு கேட்டு விட்டு சார்ஜில் போட்டு விட்டுத் தூங்கியது அப்போது ஞாபகத்தில் வந்தது. சித்திக்குத் தெரிந்தால் அவ்வளவு தான் என்று தோன்றிய மறுகணம் மஞ்சத்தை விட்டும் தாவி எழுந்தவள் சுவிட்சை ஆஃப் செய்து கைப்பேசியை சார்ஜரை விட்டும் கழற்றி வைத்து விட்டு குளியலறைக்குள் புகுந்தாள்.

யாரோ ஒருவன் தன் கைப்பேசியை இரவில் சார்ஜ் போட்டுவிட்டு உறங்கியதில் அந்த செல்போன் வெடித்து அவனும் செத்துப் போய் விட்டானாம் என்ற செய்தியை எப்போது கேள்வியுற்றாரோ அன்றிலிருந்து வீட்டில் இரவு ஒன்பது மணிக்கு மேல் யாரும் செல்போனை சார்ஜ் செய்யக் கூடாது என்பது சித்தியின் எழுதப்படாத சட்டம். சித்தப்பா ரத்தினவேலுக்கும் கூட.

காலைக் கடன்களை முடித்து விட்டு கல்லூரி செல்வதற்காக தயாராகி வந்தவளை வரவேற்றது சித்தியின் மணக்கும் ஏலக்காய் தேநீர். அதை வாங்கி மூச்சை உள்ளிழுத்து மோப்பம் பிடித்தவள் ரசித்துப் பருகினாள். கண்டியின் குளிர் கால நிலைக்கு சித்தியின் தேநீர் இதமாக தொண்டைக்குள் இறங்கியது.

“குட்டிம்மா..” என்றவர் அவளருகில் அமர்ந்து கொள்ள, தேநீரை பருகிக் கொண்டே என்ன என்பதை போல் பராத்தாள்.

“இன்னைக்கு பிப்ரவரி 14 மறந்துட்டியா?” என்று அவர் கேட்கையில் தான் இன்று அவளது தாயார் இலக்கியாவின் பிறந்த நாள் என்று.

“அச்சோ.. சித்தி அம்மா பர்த்டே இன்னைக்கு.. அம்மா வேற நான் பேசலைனு பார்த்துட்டு இருப்பாங்க..”என்றவள் அந் நிமிடமே ஊரில் இருக்கும் தன் தாய்க்கு அழைப்பெடுத்து வாழ்த்து கூறியவள் அடுத்த விடுமுறைக்கு வருவதாக கூறி சித்தியிடம் செல்போனை கொடுக்க சித்தி, கவின் இருவரும் அவர்களது வாழ்த்தை தெரிவித்தனர்.

கல்லூரி செல்ல நேரமாவதை உணர்ந்தவள் தன்னைறைக்குள் சென்று சைட் பேக்கை எடுத்து மாட்டிக் கொண்டு பள்ளி செல்ல தயாராகி இருந்த சித்தி மகன் கவினையும் அழைத்துக் கொண்டு பேரூந்து நிலையம் நோக்கி நடந்தாள்.

வெண்பா பிறந்து வளர்ந்தது எல்லாமே ஹட்டன் பிரதேசத்தில் ஓர் ஊரில் தான். தாய் இலக்கியா உயர்தர தமிழ் பாட ஆசிரியையாக பணியாற்றுகிறார். தந்தை குமாரகுரு இலங்கை மின் வாரியத்தில் பணி புரிந்து வருகிறார். வெண்பாவின் தாயும் தந்தையும் அவளது சிறு வயதிலேயே விவாகரத்து செய்து பிரிந்து வாழ்ந்து வருகின்றனர.

உயர் தரத்தில் வணிகத்துறையை தேர்வு செய்து சிறந்த முறையில் சித்தயடைந்தவள் பேராதனை பல்கலைக்கழகத்திற்கு தெரிவாகவே கண்டியில் இருக்கும் தனது தாயின் உடன் பிறப்பான இளமதியின் வீட்டில் தங்கியிருந்து மேற்படிப்பை தொடர்ந்தாள். தனது தாயின் குடும்பத்திற்கு அவள் தான் ஒரே பெண் வாரிசு என்பதால் அவளது இரு சித்தி மார்களுக்கும் வெண்பா மீது பாசம் அதிகம்.

அன்றும் பல்கலைக்கழக வளாகத்தினுள் நுழைந்தவளது விழிகள் வழமை போல தன் மனங்கவர்ந்தவனையே தேடிக் கொண்டிருந்தன. அந்நேரம் தூரத்தில் கையிலிருந்த புத்தகத்தை ஒரு கையால் சுழற்றிய வண்ணம் ஸ்டைலாக நடந்து சென்று கொண்டிருந்தவனை கண்ட மறு நொடி அவள் கால்கள் தானாக அவன் இருக்கும் திசை நோக்கி நகர்ந்தது.

“குரூஊஊஊஊ.. டேய் குரூ… கொஞ்சம் நில்லுடா..” என்று கத்தியவள் அவளது சுருள் அளகக் கூந்தல் காற்றில் அங்குமிங்கும் அசைந்தாட தனது சைட் பேக்கின் வார்ப்பட்டியை பிடித்த வண்ணம் அவனை நோக்கி ஓடி வந்து கொண்டிருந்தாள் அவள்.

அவள் தன்னை கத்தி அழைப்பது கேட்டாலும் அதை சட்டை செய்யாதவன் முன்னேறி நடந்தான்.

அவனது வேக நடைக்கு ஈடு கொடுக்க முடியாமல் வேகமாக மூச்சிறைக்க ஓடி வந்து அவனை வழி மறைத்தவள் தன் இரு கைகளாலும் முழங்காலை குனிந்து பிடித்த வண்ணம்,

“குரூஊஊஊ.. நான் கத்துறதுஹ் உனக்கு கேட்கலையாடாஹ் ..ஃபூல்? உன் காது என்ன செவிடாஹ்..?” என ஆழ மூச்சுக்களை இழுத்து விட்ட வண்ணம் கேட்க, அதில் எரிச்சலடைந்தன் அவளை நோக்கி,

“நீ கூப்பிட்டா நான் நிற்கனுமா? நான் இந்த காலேஜ் சீனியர்ங்குற மரியாதை கொஞ்சம் கூட இல்லாம எப்போ பாரு டேய், வாடா, போடான்னு பேசுற.. உன்னை ராக்கிங் பண்ண விடாம விட்டது தப்பாப் போச்சு.. சரி என்ன விஷயம்? சீக்கிரம் சொல்லிட்டு இடத்தை காலி பண்ணு..” என்று அதே எரிச்சல் மீதூறும் குரலில் கேட்டான்.

நீண்ட பெரு மூச்செறிந்த வண்ணம் நிமிரந்தவள், தன் பையில் இருந்து டீ சர்ட் ஒன்றை எடுத்து அவன் முகத்துக்கு நேர நீட்டிய வண்ணம்,

“ஓகே.. சீனியர் சார்.. இன்னைக்கு வாலண்டைன் டேய்ல்ல அதான் ப்ரபோஸ் பண்ணிட்டு.. அப்படியே இந்த டீ சர்ட்டையும் உனக்கு கிஃப்ட்டா கொடுக்கலாம்னு எடுத்துட்டு வந்தேன்.. ஐ லவ் யூ குரு..” என்று கூற அவளது செய்கையில் கடுப்படைந்தவன், புருவங்களை சுருக்கி அவனை நோக்க அவளோ எதையும் கண்டு கொள்ளாமல் டீ சர்ட்டை முகத்துக்கு நேரே ஆட்டிக் கொண்டிருந்தாள்.

“ஏய் லூசாடி நீ? எப்போ பாரு லவ் பண்ணு பண்ணுனு என்னை இப்படி டார்ச்சர் பண்ணிக்கிட்டு என் பின்னாடியே சுத்திக்கிட்டு இருக்க? உன்க்கு வ்வேற வ்வேலையே இல்லையா?” என ஏகத்துக்கும் பல்ஸ் எகிறக் கத்த அவளோ தன் முத்து மூறல்கள் தெரிய புன்னகைத்த வண்ணம் அதே போஸில் நின்று கொண்டிருந்தாள் அவள்.

அவளை பார்க்க பார்க்க கோபமடைந்தவன் புத்த தன்னை ஆசுவாசப்படுத்திக் கொள்ளும் பொருட்டு புத்தகம் இருந்த கையை இடுப்பில் வைத்த வண்ணம் மறுகையால் தலையை அழுந்தக் கோதினான்.

“சகலக பேபி.. சகலபேபி லுக்கு விட தோணலையா ..” என்ற பாட்டை பாடிய வண்ணம் தலையை ஆட்டி ஆட்டி நடனமாடிக் கொண்டே அந்த வாகை மரத்தை நோக்கி வந்து கொண்டிருந்தான் குருவின் நண்பன் சுகீர்த்தன் என்னும் சுகீ.

தூரத்திலே அவர்கள் இருவரையும் கண்டு கொண்டவன், அவள் ஏதோ அவன் முகத்துக்கு நேரே நீட்டிய வண்ணம் இருக்க குரு அவளை கோபமாக திட்டுவதும் தெரிந்தது. இப்படி அவள் ஏதாவது கிறுக்குத்தனமாக செய்து வாங்கிக் கட்டிக் கொள்வது வழக்கமான ஒன்று தான்.

“ஓஓ..வாலண்டைன் டேய்ல்ல? அதான் அந்த மேகி மண்டை அவனை தேடிக்கிட்டு இருந்து இருக்காப்புல.. சிக்கிட்டான்யா சித்தப்பு..”என்று தனக்குள்ளேயே கூறி சிரித்துக் கொண்டவன், “சுகீ இந்த நல்ல சான்ஸை விட்டுறாதே அவனை போய் கலாய்ச்சிடு” என்று தன் மனசாட்சி கூறு அதை செயல்படுத்த எண்ணி அவ்விடத்தில் ஆஜரனான்.

“மச்சி என்னாச்சுடா? ஏன் இவளை திட்டுக்கிட்டு இருக்க?” என்று அவனருகில் வந்து நின்று வினவ, குருவை முந்திக் கொண்டு அவளே பதில் சொன்னாள்.

“அதை நான் சொல்றேன் சுக்குண்ணா..” என்று ஏதோ பெரிய அதிசயத்தை சொல்வதை போல விழியகல அவனை நோக்க,

“அதுக்கு யேன்மா என் பேரை கொல்லுற? சுகீன்னு கூப்பிடு இல்லைன்னா சுகீர்த்தன்னு என் முழு பெயரை சொல்லி கூப்பிடு அதை விட்டுட்டு எப்போ பாரு சுக்கு சுக்குன்னு ஏதோ வீட்டு வேலைக்காரனை கூப்பிட்ற மாதிரி கூப்பிட்றியே மா. இது உனக்கே நல்லா இருக்கா?” என தன் முகத்தை பாவமாய் வைத்துக் கொண்டு கேட்க,

“உங்க மூஞ்சியே அப்படி தானே சுக்குண்ணா இருக்கு..”என்று கூலாக கூற இவளுடன் வாதாடி பிரயோஜனமில்லை எனத் தோன்ற மார்புக்கு குறுக்கே கையை கட்டிய வண்ணம் அவளை மேலே பேசுமாறு சைகை செய்தான்.

“உங்களுக்கு தான் தெரியுமே சுக்குண்ணா இந்த குருவை லவ் பண்றேன்னு.. ஆனா இந்த லூசு அக்செப்ட் பண்ணிக்கவே மாட்டேங்குறான்.” என அவள் இவனுக்கு காதலை சொன்னதையும் பரிசாக வழங்க டீ சர்ட் வாங்கிய கதையையும் அடுக்கிக் கொண்டே போனாள்.

அவன் முகத்துக்கு நேரே கையை நீட்டிக் கூற அவனை லூசு என்று கூறியதில் மேலும் கடுப்பான குரு தன் கையிலிருந்த புத்தகத்தால் அவளது தலையில் நங்கு நங்கென்று அடித்த வண்ணம், “நான் லூசாடி உனக்கு? செய்யுற லூசுத்தனத்தை எல்லாம் நீ செஞ்சிட்டு என்னை லூசுன்னு சொல்றியா?. டீ சர்ட்டை சுருட்டி கசக்கி அழுக்குத்துணி மாதிரி பேக்ல போட்டுக்கிட்டு வந்து இப்படியே எடுத்து நீட்டுற? இது தான் நீ ஒருத்தருக்கு கிஃப்ட் கொடுக்குற லட்சணமா? ஒருத்தருக்கு கிஃப்ட்டை எப்படி கொடுக்கனும்னு கூட தெரியாது இதுல என்னை லூசுன்னு சொல்ற. நீ தான்டி லூசுஊஊ..” என்று கூற அவள் தலையை பிடித்த வண்ணம் குனிந்து கொண்டே போனாள் அவள்.

இதை கேட்டுக் கொண்டிருந்த சுகீர்த்தனுக்கு அவனை கலாய்க்க ஒரு வாய்ப்பு கிடைக்க, குருவின் ஒரு புற தோளைத் தொட அவனை திரும்பி கேள்வியாய் நோக்க,

“உனக்கு அவ கிஃப்ட் கொடுத்ததுக்கு தான் கோவப்படுறியா? இல்லை அவ ஒழுங்கா கொடுக்கலைன்னு கோவப்படுறியா?” என புரியாமல் கேட்க, அவன் கேட்ட கேள்வியை தன் காதுகளுக்குள் உள் வாங்கிக் கொண்டவள், சட்டென நிமிரந்து குருவை நோக்கி,

“அப்போ உனக்கு இந்த கிஃப்ட் பிடிச்சிருக்கு. அதை அழகா பேக் பண்ணி கொடுக்கலைன்னு தான் கோவமா இருக்க கரெக்ட்?..” என தன் கரு விழிகளை உருட்டிய வண்ணம் கூற, அவள் கூறிய விதத்தில் சுகீர்த்தனுக்கு குபீர் சிரிப்பொன்று எட்டிப் பார்த்தது.

தன் நண்பன் தன்னைப் பார்த்து கேலியாக சிரிப்பதை உணர்ந்தவன் அவனை ஏகத்துக்கும் முறைத்து வைக்க கப்பென்று வாயை மூடிக் கொண்டான் சுகீ.

“ஓ அதுவா குரு.. அதை யேன் கேக்குற.. அன்னைக்கு சித்தி கூட ஷாப்பிங் போனேனா.. சோ சித்திக்கு தெரியாம இதை வாங்கிட்டு வந்துட்டேன். அப்புறம் தான் யோசிச்சேன் இதை எப்படி பேக் பண்றதுன்னு.. அதான் இப்படியே பேக்ல போட்டுகிட்டு வந்துட்டேன். சித்தி பார்த்தால்அவ்வளவு தான் அம்மா கிட்ட போட்டு கொடுத்துடுவாங்க.. அப்புறம் நம்ம லவ் மேட்டர் வெளியே தெரிஞ்சிடும்..” என சோகமே உருவான குரலில் சொன்னவளை முறைத்தவன்,

“நம்ம லவ் மேட்டர்? நான் எப்போ உன்னை காதலிச்சேன்.. நீயா கற்பனை பண்ணிக்கிட்டு உளறாதே.. இந்த காலேஜ் பூரா இதையே தான் சொல்லி வச்சிருக்க.. உன்னை..” என்று மீண்டும் அடிப்பதற்காக சுற்றிலும் தேட,

“டேய் குரு இவ தான் உளறிக்கிட்டு இருக்கான்னு நீ வேற..” என வெண்பாவின் பக்கம் திரும்பி, “யேன்மா தாயே.. பேசாம கிளாஸூக்குப் போமா..” என்று கூற அவளோ அதையெல்லாம் கண்டு கொள்ளாமல் தன் மார்புக்கு குறுக்கே கைகளை கட்டிய வண்ணம் நின்ற விதம் குருவின் கோபத்தை மேலும் தூண்டியது.

கண்கள் சிவக்க கோபமாக அவளை நோக்கி,
“ஏய்..உன்னையும் பிடிக்கலை. உன் கிஃப்ட்டையும் பிடிக்கலை. மூடிட்டு படிக்கிற வேலையை மட்டும் பாரு.. இன்னொரு தடவை லவ் பண்றேன் கிஃப்ட்டு கொடுக்குறேன்னு என் பின்னாடி வந்த உன் மொகறையை பேத்துடுவேன்.. மைன்ட் இட்..சரியான இம்சைடி நீ” என்றவன் தன் சுட்டு விரலை நீட்டி எச்சரித்து அவ்விடத்தை விட்டும் நகர்ந்தான்.

“கோவத்துல கூட ரொம்ப அழகாக இருக்கான்ல சுக்குண்ணா..” என அவன் சென்ற திசையை பார்த்த வண்ணம் புன்னகையுடன் கூறியவளைப் பார்த்த சுகீர்த்தனுக்கு தலையில் அடித்துக் கொள்ளலாம் போல இருந்தது.

“என்னடா இவ அவன் எவ்வளவு திட்டினாலும் அவன் பின்னாடியே சுத்திக்கிட்டு இருக்கா?” என்று தனக்குள்ளேயே அவளை நோக்கி,
“ஏன்மா அவன் தான் லவ் பண்ண மாட்டேன்னு சொல்றான்ல. பின்னே ஏன் இப்படி தினம் தினம் திட்டு வாங்குற?” எனக் கேட்க,

“காதல்ல இதெல்லாம் சகஜமப்பா…” என்று கண்ணடித்து சிரித்தவள், “இதை என் டோரோகொய்க்கு அழகாக பேக் பண்ணி நீங்களே கொடுத்துடுங்கண்ணா..” என தன் கையிலிருந்த டீ சர்ட்டை அவனது கைகளில் திணித்துவிட்டு அவனது பதிலையும் எதிர்பாராது தன் அலை அலையான கூந்தல் காற்றில் அசைந்தாட துள்ளி ஓடினாள்.

“அடிப்பாவி அவன் கிட்ட இதைக் கொடுக்க சொல்லி என்னை கோர்த்து விட்றாளே… ம்ம்.. அதென்ன புதுசா டோரோகோய்..?” என அதற்கு அர்த்தம் என்னவாக இருக்கும் என யோசித்த வண்ணமே விரிவுரை அறையை நோக்கி நடந்தான்.

தொடரும்
அன்புடன் அபிநேத்ரா.❤

Facebook Comments Box
What’s your Reaction?
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here