என் கோடையில் மழையானவள்-12

0
310

அன்றைய சம்பவத்திற்கு பிறகு அவன் தான் நிம்மதியின்றி தவிக்கலானான். கலங்கிய விழி வழியே அவள் பார்த்த பார்வையில் என்ன இருந்ததென அவனால் கணிக்க முடியவில்லை ஆனால் அந்த கண்களில் பொய்யில்லை என்பது தெளிவாய் தெரிந்தது.

பின்னே எப்படி அவள் என் மனைவி என்பாள்? எவ்வாறாயினும் அவளை கீழ்த்தரமான பெண்ணாக மாத்திரம் எண்ண முடியவில்லை. அந்தப் பார்வை அவனை பலவாறு சிந்திக்கத் தூண்டியது.

அதன் பின் இரு வெவ்வேறு சந்தர்ப்பங்களில் அவளை காண நேர்ந்தது. ஒரு முறை கோவில் தூணில் கண்கள் மூடி சோகமாய் சாய்ந்தமர்ந்திருந்தவளை கண்டான். அன்று அவளை அப்படிப் பேசயிருக்கக் கூடாதோ? என அவளுக்காக அவன் மனம் அவனையே குற்றம் சாட்ட உடனே அங்கிருந்து விரைந்து சென்றான்.

மீண்டும் ஒரு நாள்..

அன்று வீதியில் தனியாக நடந்து சென்று கொண்டிருந்தாள் வெண்பா. அவள் மனம் ரணமாய் வலித்தது. அவன் சொன்னதும் சரிதானே.. அவன் பலமுறை வேண்டாமென்று துரத்தியும், வலியச் சென்று காதல் செய்தது நான் தானே.

தேடித் தேடிச் போய் கொட்டிய அன்பு குப்பையை விட கேவலமானதாகி விடுகிறது.அன்று நிஷா உரிமையாய் அவன் கை கோர்த்து நின்ற போது அவள் மனம் பட்டபாடு அவளுக்குத் தானே தெரியும். உரிமை உண்டு எனினும் நமக்கு மதிப்பு இல்லையே என ஒதுங்கி இருக்க வேண்டியுள்ளது.

அழுதழுது கண்களில் கண்ணீரும் வற்றி விட்டது. மறத்துப் போனது அவள் இதயம். என்ன தான் முயன்றும் அவளால் அவன் நினைவுகளை மறக்க முடியவில்லை. அவன் இல்லாத ஒவ்வொரு நொடியும் யுகமாய் தோன்றியது.எதிர்காலம் அவள் கண்முன் தோன்றி கோரமாய் சிரித்தது.

என் ஒருத்தியின் சுயநலத்திற்காக என் மேல் நம்பிக்கை வைத்திருக்கும் குடும்பத்தையே ஏமாற்றி விட்டேனே.. இது மட்டும் அவர்களுக்குத் தெரிந்தால்..? இல்லை இது தெரியவே கூடாது.. இது என்னுடனே போகட்டும் என்று தனக்குத் தானே எண்ணிக் கொண்டவள் வழிந்திருந்த கண்ணீரை புறங்கையால் துடைத்து விட்டாள்.

அடுத்து அவள் செய்ய வேண்டியதை முடிவு செய்தாள். ஆம் இந்த பிரச்சினைகளுக்கெல்லாம் ஒரே தீர்வு தான் உயிரை விட்டு விடுவது தான்.

மறுகணமே அதை செயலாற்ற எண்ணியவள் சுற்றும் முற்றும் நோட்டம் விட்டாள். தூரத்தில் அசுர வேகத்தில் வரும் பெரிய லாரியை கண்டவள் சிறிதும் யோசிக்காமல் அதை நோக்கி ஓடலானாள்.

இதோ நெருங்குகிறது. உன்னை உயிராய் உருகி காதலித்த பாவத்திற்காக என் உயிரையே விட்டு விடப் போகிறேன். இன்னும் கொஞ்சம் தான் நெருங்கி விட்டது. அந்த வேகத்தில் மோதினால் நிச்சயம் உடலில் உயிர் எஞ்சாது.

இன்னும் சில நொடிகளில் பேரிரைச்சலோடு வரும் லாரி அவளை மோதி தூக்கி வீசப் போகிறது. கண்களை இறுக மூடிக் கொண்டாள்.

கண்ணிமைக்கும் நேரத்தில் அவள் இடையை பற்றி யாரோ இழுக்க, இழுத்த வேகத்தில் கண்கள் மங்கி நிலை தடுமாறி அவன் மீதே மயங்கி சரிந்தாள். தரையில் அவன் இருக்க அவன் நெஞ்சின் மீது பூமாலையாய் வீழ்ந்திருந்தாள் வெண்பா.

கடையொன்றினுள் இருந்து வெளியே வந்தவன் கண்ட காட்சியில் அதிர்ந்தவன் யாரென கூட பார்க்கத் தோன்றாது மின்னல் வேகத்தில் அவள் அருகே ஓடிச் சென்று சாலையை விட்டும் இழுக்க அவன் மீதே சரிந்தாள்.

அப்போது தான் அவளை முதல் முறையாக மிக நெருக்கத்தில் பார்க்கிறான். அதற்குள் கூட்டம் கூடி விட அவளை அப்படியே விட்டுச் செல்லவும் மனமின்றி தன்னிரு கைகளிலும் ஏந்திச் சென்று காரில் கிடத்தினான்.

அதிர்ச்சியில் ஏற்பட்ட சாதாரண மயக்கம் தான் எனவே தண்ணீரை முகத்தில் தெளிக்க சிறிது சிறிதாக மயக்கமும் தெளியவாரம்பித்தது. தனக்கு மிக அருகில் இருந்த குருவை கண்டு உதடுகள் மலர்ந்தவளுக்கு நிதர்சனம் உரைக்க மலர்ந்த வேகத்தில் முகம் வாடியும் போனது.

அவளது முகம் வாடியதும் அவன் உள்ளமும் வாட அது ஏனென்று அவனுக்கே புரியவில்லை.

“ரோட்ல நடக்கும் போது பார்த்து நடக்கமாட்டியா? அப்படி எந்த கோட்டையை பிடிக்க இந்த ஓட்டம்?” கடிந்து கொண்டான் அவன்.

தலையை உயர்த்தி அவனை பார்த்தாள் அவள். அந்தப் பார்வையில் ஜீவனில்லை.

“செத்துப் போகலாம்னு தான்..” என்றாள் சுர்த்தையற்ற குரலில்.

“வாட்..?” அவன் முகத்தில் அப்பட்டமான அதிர்ச்சி தெரிந்தது. “செத்துப் போற அளவுக்கு உனக்கு என்ன பிரச்சினை?”

“நீ தான்..”

“நானா? என்ன சொல்ற?”

“ஏன் குரு இப்படி செஞ்ச? உன்னை எப்படி எல்லாம் காதலிச்சேன்.. நீ தானே கல்யாணம் பண்ணிக்கலாம்னு சொல்லி கல்யாணமும் பண்ணிக்கிட்ட. நான் என்ன தப்பு செஞ்சேன்.. இப்போ ஏன் என்னை விட்டு விலகி போற..? நீ இல்லாத வாழ்க்கையை என்னால வாழ முடியாது குரு.. வாழவே முடியாது.. நீ சொன்ன மாதிரி நான் அலையுற பொண்ணு இல்லை குரு..” என்று கூறி முடிக்கும் போதே அவள் குரல் உடைந்து அழ, அன்று போல் அவனால் அவள் மேல் கோபம் கொள்ள முடியவில்லை.

அவளது கண்ணீர் அவனை வாயடைக்கச் செய்தது. அன்று அவளை பார்த்து அவன் பேசிய வார்த்தைகளை அவள் வாயால் கேட்கும் போது ஓர் இனம் புரியாத வேதனை அவனை ஆட்கொண்டது.

“குரு இது நீ கட்டின தாலி தான்..” என்று அழுகையினூடே அவள் தாலியை காட்ட ஏகத்துக்கும் அதிர்ந்து போனான். இந்த பெண் என்ன மனநிலை சரியில்லாதவளா? முன் பின் அறியாத பெண்னொருந்தி அவள் கழுத்தில் இருக்கும் தாலியை காட்டி இப்படி கூறினால் அவளை வேறு எப்படி நினைக்கத் தோன்றும்? இத்தனை நேரம் அவளுக்காக இரங்கிய மனம் இந்த தாலி விஷயத்தில் சிறிது ஆட்டம் கண்டது.

“வெண்பா.. உனக்கு என்ன பிரச்சினைனு எனக்கு தெரியாது. ஆனால் தற்கொலை முட்டாள் தனமானது..இதுக்கு முன்னாடி உன்னை நான் பார்த்ததே இல்லை அப்படியிருக்க எப்படி இது சாத்தியம்? இதற்கு மேலும் இந்த மாதிரி சொல்லிக்கிட்டு இருக்காதே. அப்புறம் மனுஷனா இருக்க மாட்டேன்..” என்று அடக்கப்பட்ட கோபத்துடன் கூறியவன், வீடு செல்லும் வழியை மாத்திரம் கேட்டு விட்டு அவள் புறம் திரும்பமாலே காரை செலுத்தினான்.

கார் அவளது வீட்டை அடையும் வரை இருவரும் பேசிக் கொள்ளவில்லை. அவளது பேச்சில் அவள் மீது கொலை வெறி வந்தாலும் எப்படியோ போ என அவனால் விட்டு வர முடியவில்லை.

அவளது வீடு வந்ததும் அவளை இறக்கி விட, இறங்கியவளது நடையில் சிறு தள்ளாட்டம் தென்பட அவள் தோளோடு கையிட்டு தாங்கிய வண்ணம் அவளை வீட்டினுள் அழைத்துச் செல்லும் வரை மௌனமாகவே இருந்தாள்.

வீட்டின் வரவேற்பரையில் சோபாவில் அவளை அமர வைக்க, அவனது கையை இறுக பற்றியவள் அவனை நோக்கி,

“குரு நிஜமாகவே என்னை யார்னு தெரியலையா?” அடிபட்ட குரலில் கேட்டவள், அவன் மார்பில் முகம் புதைத்து அழ, அவனால் அவளை விலக்கித் தள்ள முடியவில்லை. பெண்ணவளின் கண்ணீர் அவனுள்ளத்தை வலிக்கச் செய்ய ஆறுதலாய் அவள் தலையை கோத,

அவள் விசும்பல் சத்தத்தில் தன்னுணர்வு பெற்றவன், தான் என்ன செய்து கொண்டிருக்கிறோம் ? என்று தன் மீதே கோபம் கொண்டவன் அவளை தள்ளி விட்டு எழ, புரியாமல் தலையுயர்த்தி அவனை பார்த்தாள்.

“என்னை விட்டு போயிடாதே குரு..செத்து போய் விடுவேன்..” என்று குரல் தழுதழுக்க கூறியவள், அவன் விழிகளை நோக்க,

அப் பார்வையில் அவன் இதயம் சில்லு சில்லாய் உடைய, அவள் பார்வையை தாங்கிக் கொள்ளும் திராணியற்றவனாய், ஒரு நொடி கூட தாமதிக்காமல் அவ்விடம் விட்டு நகர்ந்தான். இல்லை ஓடினான்.

கடைசியாக அவள் சொன்ன வார்த்தை, அவன் உயிர் வரை சென்று தாக்க, அன்றே நிஷாவை அழைத்துக் கொண்டு கொழும்பு வந்து விட்டான். அதற்கு முன் வெண்பாவின் தந்தையை சந்தித்துப் பேச மறக்கவில்லை.

அவளை பார்க்க முடியாமல் ஓடி வந்து விட்டான் தான் ஆனால் அன்று முதல் அவன் தூக்கம் தொலைந்தது. நிம்மதி வெகு தூரமானது போன்ற உணர்வு.

யாரென்றே தெரியாத ஒருத்திக்காக அவன் இப்படி இருக்கத் தேவையே இல்லை. பின்னர் ஏன் தான் இப்படி நடந்து கொள்கிறோம்? தன்னை கணவன் என்றதற்காக ஆரம்பத்தில் கோபப்பட்ட அவனால் அதன் பிறகு ஏன் கோபப்பட முடியாமல் போயிற்று?

ஒரு பெண்ணால் ஒருவனை இப்படியும் காதலிக்க முடியுமா..? எப்பேற்பட்ட காதல் அது.

அவள் இந்நேரம் அழுது கொண்டு இருக்கிறாளோ. .? அல்லது மீண்டும் தற்கொலைக்கு ஏதும் முயற்சி செய்திருக்கக் கூடுமோ..? அவளை எண்ணி மனம் கலங்க, முப்பொழுதும் அவள் கற்பனையில் .

ஒருத்தியை மனதில் வைத்துக் கொண்டு வேறொருத்தியின் பிரிவில் மனம் வாடும் விந்தையை குரு அப்போது அனுபவித்தான்.

நிஷாவை காதலித்த மனதில் ஏன் இந்தத் துயரம் வருகின்றது?

ஆயிரம் வாசல் இதயம்..
அதில் ஆயிரம் எண்ணங்கள் உதயம்..
யாரோ வருவார்… யாரு போவார்..
வருவதும் போவதும் தெரியாது..
ஒருவர் மட்டும் குடியிருந்தால்..
துயரம் ஏதுமில்லை..
ஒன்றிருக்க.. ஒன்று வந்தால்..
என்றும் அமைதியில்லை…

அவன் மனதை படித்தது போல..பின்னனியில் கண்ணதாசனின் பாடல் ஒலிப்பது போன்ற பிரம்மை ஏற்பட தலையை தாங்கிய வண்ணம் அப்படியே அமர்ந்து விட்டான்.

அவன் இப்படி தன்னை எண்ணி குழம்பிக் கொண்டிருந்த நேரம், அவன் முதுகோடு கட்டிக் கொண்டாள் நிஷா. அவளது இந்த திடீர் அணைப்பில் கடுப்படைந்தவன் திரும்பி அவளை தள்ளி விட்டு எழ,

“என்னாச்சு குரு? ஏன் தள்ளி விட்ட?” என்ற அவளது கேள்விக்கு பதில் கூறாமல் திரும்பி நடக்க முனைந்தவனை தடுத்து நிறுத்தியவள்,

“ஊருக்கு போய் வந்ததிலிருந்து நீ இப்படி தான் இருக்க.. இதுக்கெல்லாம் காரணம் அந்த ப்ளடி * தான்..” என்று கோபத்தில் நா கூசாமல் ஓர் கேட்ட வார்த்தையை கூறி முடிக்கும் போதே அவள் கண்களில் பூச்சி பறந்தது. குரு அறைந்திருந்தான்.

“நீயும் ஒரு பொண்ணா? இன்னொரு பெண்ணை இப்படியும் பேச முடியுமா? ச்சே இதுக்கு மேல அவளை பத்தி ஒரு பேசுன.. உன்னை என்ன பண்ணுவேனு எனக்கே தெரியாது.. கெட் லாஸ்ட்..” என்று கழுத்து நரம்புகளை புடைக்க கத்த, சீறும் சிறுத்தையை ஒத்த அவனை கண்டு மிரண்டு விழித்தவள் நடை தள்ளாட அறையை விட்டும் வெளியேறினாள்.

‘ நிஷாவிடம் நான் ஏன் அப்படி நடந்து கொண்டேன்? ஐயோ அம்மா எனக்கு ஏன் இந்த சோதனை?’ தலையணையை விசிறி அடித்தவன், நீண்ட பெருமூச்செறிந்தவாறு நிஷாவை சமாதானம் செய்யும் நோக்குடன் அறையை விட்டு வெளியே வந்தவனது கைப்பேசி சிணுங்க அதை எடுத்துப் பார்த்தவனுக்கு என்னமோ ஏதோ மனம் பதற அழைப்பை ஏற்றான்.

“ஹலோ சார்.. என்னாச்சு..? அவரது பதற்றம் அவனை தொற்றிக் கொண்டது.

“வாட் …??? வெண்பாவை காணவில்லையா?” சுவாசம் தடைபட, எத நிஷாவின் நினைவு சிறிதும் காரை நோக்கி ஓடினான். மறு கணம் அவன் கைகளில் கார் காற்றை விட வேகமாய், பொலன்னறுவை நோக்கி புறப்பட்டது.

தொடரும்..

Facebook Comments Box
What’s your Reaction?
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here