என் கோடையில் மழையானவள்-7

0
278

“அந்தாளு இப்போ ஏன் இங்க வரணும்? நான் இருக்கேனா இல்லை செத்துட்டேனானு பார்க்க வர்றாராமா? ச்சே..” என்று தலையணையொன்றை விசிறியடிக்க, அதை எடுத்து மீண்டும் கட்டிலில் வைத்த சுகீ ,

“குரு.. ஏன்டா இப்படி பேசுற? அவர் உன்னை பார்க்க தானே வர்றாரு..” என்றவன் அவனருகில் வந்து தோளைத் தொட்டு, “ப்ளீஸ் குரு.. அவர் முன்னாடி இப்படி கோவப்படாதே.. அவர் என்ன சொன்னாலும் பொறுமையா இருடா..” என்று அவனிடம் கெஞ்சுவது போல் கூறினான் அவன்.

அந்நேரம் அவ்வறையின் கதவு திறக்கப்பட வெள்ளை நிற உடையில் பக்கா அரசியல்வாதி தோற்றத்துடன் உள்நுழைந்தார் குருப்பிரகாஷின் தந்தை வேதநாயகம். அவர் வந்ததும் அவரை வரவேற்று நாற்காலியில் அமர வைத்தான் சுகீர்த்தன். அவரை வரவேற்க வேண்டியவனோ வேண்டுமென்ற ஃபோனில் புதைந்திருந்தான் இல்லை அப்படி பாவ்லா செய்து கொண்டிருந்தான்.

இத்தனைக்கும் அவனை பார்க்க வந்திருப்பது அவனை பெற்ற தந்தை. ஓர் சிரிப்புக்குக் கூட பஞ்சமா? இவன் ஏன் இப்படி நடந்து கொள்ள வேண்டும்? அவரை பிடிக்காமல் இருக்கலாம் ஆனால் வந்தவரை மரியாதை நிமித்தமாக கூட வரவேற்காமல் இருப்பது முறையல்லவே. குருவின் செய்கை அவள் மனதை ஏனோ முரண்டியது.

அந்த அறையை சுற்றி நோட்டம் விட்டவர் ஓர் ஓரமாக நின்று கொண்டிருந்த வெண்பாவை அப்போது தான் கவனித்தார். அதை கண்டு கொண்ட சுகீர்த்தன் அவர் கேட்கும் முன்னரே முந்திக் கொண்டு, கல்லூரியல் தங்களோடு கற்கும் ஜூனியர் மாணவி என அறிமுகப்படுத்த, புருவ முடிச்சுடன் அவளை பார்த்து விட்டு சுகீர்த்தனின் பக்கம் திரும்பினார். அதை அறியாதவளோ தன் தலையை தட்டியபடி ஏதோவொன்றை நினைவில் கொண்டு வர முயற்சித்துக் கொண்டிருந்தாள்.

“என்னப்பா சுகீ எப்படி இருக்க? படிப்பெல்லாம் எப்படி போகுது?” என்று அவனுடன் சகஜமாக தொடர அவனும் அதற்கேற்றாற் போல பதிலளிக்க, குரு அவரிடம் பேசவில்லை.

தொடர்ந்து சுகீர்த்தனே பேச ‘என்ன நினைத்துக் கொண்டிருக்கிறான் இவன்? பெற்ற தந்தை வந்திருக்கிறேன் என்னை அவமானப்படுத்துவதே இவன் வேலையாகி விட்டது.’ என்யெண்ணியவர் குருவை நோக்கி,

“குரு..” என்று அழைக்க ,
“ம்.. சொல்லுங்க..”

“ உனக்கு இப்போ எப்படி இருக்கு?” என அவன் நலம் குறித்து விசாரிக்க,

“நான் இன்னும் சாகலை. நல்லா தான் இருக்கேன். ஏன் என்னையும் கொல்ல முயற்சி செய்துகிட்டு இருக்கீங்களா? உங்க வழக்கம் அது தானே” என்று வெடுக்கென பதிலளித்தான் குரு.

அவனது பதிலில் சிறிது கோபமடைந்தவர், “குரு.. உன்னோட அப்பா நான். நீ இப்படி பேசுறதால உன் அப்பா இல்லைனு ஆகாது. என்னோட பல வேலைகளை புறம் தள்ளிட்டு தான் உன்னை பார்க்க வந்திருக்கேன்.” என்று கூற,

“நீங்க என்னை வந்து பார்க்கனும்னு எந்த அவசியமும் இல்லை. என்னை வந்து பாருங்கனு உங்க கிட்ட நான் கெஞ்சவுமில்லை. உங்களுக்கு தாரளமாக இங்கிருந்து போகலாம்” என்றான் அலட்சியமாக.

“குரு” என்று அவனை பேச வேண்டாமென்று தடுக்க வந்த நண்பனை பார்வையாலேயே நிறுத்தியவன், வெண்பாவை பார்க்க அவளோ மலங்க மலங்க விழித்த வண்ணம் இருவரையும் மாறி மாறி பார்த்துக் கொண்டு நின்றாள்.

அவனது பார்வை சென்ற திசையை கண்ட வேதநாயகம் குருவிடம்,
“குரு உங்கூட நான் தனியா பேசனும்” என்றார் அமைதியாக.

“உங்க கூட தனியா பேசுற அளவுக்கு ஒரு ரகசியமும் இல்லை.” என்றவன் சுகீர்த்தனையும் வெண்பாவையும் பார்த்து விட்டு, “இவங்க இரண்டு பேருமே எனக்கு என் வாழ்க்கையில் ரொம்ப முக்கியமானவங்க.. உங்களை விட..” என்று கூறியவனது பார்வை விரும்பினால் சொல்லலாம் இல்லையென்றால் செல்லுங்கள் என்ற செய்தியை தாங்கியிருந்தது.

“சரி..சரி சுகீ இருக்கட்டும் ஆனால் இந்தப் பொண்ணு..” என்று இழுத்தவரின் பார்வை அவள் மேல் இருக்க,

“அவளும் தான் எனக்கு முக்கியவமானவள்னு சொன்னேன் தானே..” என்று குரலுயர்த்திக் கூற,

அவருள் பொங்கியெழுந்த கோபத்தை வெகு பிரயத்தனம் செய்து கட்டுக்குள் கொண்டு வர வேண்டியதாய் போயிற்று வேதநாயகத்திற்கு. இருந்தாலும் குருவின் குணமறிந்து முகத்தில் எதையும் காட்டிக் கொள்ளாமல் அவனிடம் தான் கூற வந்த விடயத்தை கூறத் துவங்கினார்.

“இன்னும் ஒரு மாதத்தில் உன்னோட படிப்பு முடிஞ்சிடும் அதுக்கப்புறம் நீ கலம்போ (Colombo) வந்து நம்ம பிசினஸ் எல்லாம் நீ வந்து நிர்வாகம் பண்ணனும்.. எனக்குப் பிறகு நீ தானே இந்த சொத்து..” என்று அவர் கூறி முடிப்பதற்குள் இடையிட்டவன்,

“உங்க சொத்துக்களை பாதுகாக்க வேண்டிய பொறுப்பு எனக்கில்லை. என்ன உரிமையில நான் அதெல்லாம் கட்டிக் காக்கனும்னு சொல்றீங்க? அந்த பாவப்பட்ட சொத்துக்கள் எனக்கு தேவையுமில்லை. உங்களோட இந்த உறவும் எனக்கு வேணாம்.

உங்களோட இந்த பதவி, சொத்து இதெல்லாம் தான் உங்களுக்கு உயிர் மூச்சு அதை நீங்களே கட்டிக் காக்க வேண்டியது தானே? இதை சொல்லத் தான் இவ்வளவு தூரம் வந்தீங்கனா இப்பவே கிளம்புங்க..” என்று கோபம் கொண்டு கத்தியவன் வாசலை கைகாட்ட, அவரை அவமதிக்கும் விதமாக பேசும் குருவின் மேல் கோபம் உச்சமடைய நாற்காலியை விட்டும் எழுந்து நின்றார் வேதநாயகம்.

அவர் நின்ற தோரணை சுகீர்த்தனையே கிலி கொள்ளச் செய்தது. சிவா வெண்பாவிடம் வம்பு செய்த அன்று இதே மாதிரியான தோற்றத்தில் நின்ற குரு அவன் கண்முன் தோன்றி மறைந்தான்.

வெண்பாவோ என்ன நடந்து கொண்டிருக்கிறது என்றே புரியாமல் வெளவெளத்துப் போய் நின்றிருந்தாள். வேதநாயகத்தை பலமுறை தொலைக்காட்சி செய்திகளிலும், பத்திரிகைகளும் பார்த்திருக்கிறாள் . அமைச்சர் வேதநாயகம் குருவின் தந்தையா? இலங்கையின் முக்கிய புள்ளிகளில் ஒருவரின் மகன் இங்கே சாதாரண அறையில் சாதாரணமாக வாழ்ந்து வருகிறானே..இது வரை அவன் காட்டிக் கொண்டதேயில்லையே ஏன்? இப்படி பல கேள்விகள் அவள் மண்டையை குழப்பானாலும் , அவர்கள் இருவருக்கிடையில் ஏதோ சரியில்லை என்று மட்டும் அவர்களது உரையாடல் மூலம் தெரிந்து கொண்டாள்.

“குரு நீ உன் லிமிட்டை தாண்டி பேசிக்கிட்டு இருக்க.. பணம்,பதவி எதுவும் வேணாம்னு சொல்றீயே என்னோட இந்த பதவியும் பணமும் தான் இன்னைக்கு இந்த இடத்தில இருந்து இருக்க மாட்ட..” என்று அந்த அறையை சுட்டிக்காட்ட குரு அவரை புரியாத பார்வை பார்த்தான்.

“என்ன அப்படி பார்க்குற? கவர்ண்மென்ட் ஹாஸ்பிடல்ல உன்னைப் போல சாதாரண ஒருத்தனுக்கு இந்த மாதிரி தனியறை அதுவும் ஏசி ரூம் கொடுப்பாங்களா?” என்று நக்கலாக மொழிந்தவர்,

“நீ என்னோட பையன் அந்த ஒரே காரணத்துக்காக உனக்கு இத்தனை வசதிகளும் கொடுத்திருக்காங்க. பணமும் பதவியும் இருந்தா நமக்கு மதிப்பையும் மரியாதையும் தானாக தேடி வரும்..பணம் இருந்தா என்ன வேணும்னாலும் செய்ய முடியும். அதோடு பதவியும் இருந்தா இந்த நாட்டை மட்டும் என்ன உலகத்தையே ஆளலாம். அந்த பட்டிக்காடு, உன் அம்மா மாதிரியே நீயும் முட்டாளா தான் இருப்ப..” என்று இளக்காரமாக கூற, “அம்மா” என்ற வார்த்தையை கேட்டதும் வெள்ளந்தியாக சிரித்து வைக்கும் அன்பே உருவாய் கொண்ட அவனது ஆசை அன்னையின் முகம் மனக்கண் முன் வந்து போனது.

இறுகிப் போயிருந்த அவன் முகம் ஒரு நொடி ஒரே ஒரு நொடி இளகினாலும் மறு நொடியே கண்கள் இரத்த நிறம் கொள்ள, எழுத்து நரம்புகள் புடைக்க, உஷ்ன மூச்சுக்கள் வெளியேற, ருத்ர மூர்த்தியாய் மாறியிருந்தான் அவன்.

“ஸ்டாப் இட்” என்று சீற ,

அவர் பேசிய வார்த்தைகளில் ஏற்கனவே பெரும் சினங்கொண்டு இருந்தவன் அவரது தற்போதைய இளக்காரமான பேச்சில் உட்சபட்ச கொதிநிலையை அடைந்திருந்தான். இத்தனை நேரம் இழுத்து வைத்த பொறுமை காற்றில் பறக்க, வெறி கொண்ட வேங்கையாய் மாறிப் போனான்.

அவனது இத் தோற்றம் கண்டு அரண்டு போனாள் வெண்பா. இதுவரை இப்படி ஒரு கோலத்தில் அவனை கண்டதேயில்லை. சுகீர்த்தன் ஒரு நொடி திகைத்தாலும் நண்பனின் மனநிலையறிந்து அமைதியாக நின்றான். அவன் பார்த்த பார்வை வேதநாயகத்தையே மிரள வைத்தது.

“பத்தி பேச உங்களுக்கு எந்த உரிமையும் கிடையாது. கேவலம் இந்த அரசியல் வாழ்க்கைகாக என் அம்மாவையே கொலை செய்தவருக்கு என் அம்மாவை பத்தி என்ன தெரியும்? உங்க பணம்,பதவி, அந்தஸ்த்து எதுவுமே வேணாம்னு தானே இந்த பத்து வருஷமா உங்க முகத்தை கூட பார்க்க கூடாதுன்னு இருக்கேன்.

உங்களை மாதிரி கேவலமான ஒருத்தரோட மகன்னு சொல்லிக்க தான் வெட்கப்படுறேன்..” என்று அவன் கத்த,

“குரூஊஊஊ…” என பதிலுக்கு சீறினார் வேதநாயகம்.

அதற்கு சிறிதும் அசராதவனாய், அவரை நோக்கி, “உங்களை மாதிரி அரசியல் வாதிங்குற போர்வைக்குள்ள ஒழிஞ்சுக்கிட்டு தப்புக்கு மேல தப்பு பண்றது மட்டுமில்லாமல் பதவிக்காக என் அம்மாவையே கொலை செய்தவரு தானே நீங்க..“ ஏகத்துக்கும் பல்ஸ் எகிற கத்தியவனை கண்டு வெண்பாவும் சுகீர்த்தனும் திகைத்து, அவன் சொன்ன விடயத்தை கேட்டு அதிர்ந்து போய் நின்றார்கள் இருவரும்.

அவனது தந்தை அதிர்ந்தாலும் கூட இது ஒன்றும் அவருக்கு புதிதல்ல. இந்த பத்து வருடங்களில் குருவின் வாயால் பல முறை இதையே கேட்டுப் பழகியவர் தானே. உள்ளுக்குள் சிறிது வலித்தாலும் அவரால் நடந்து முடிந்தவற்றை மாற்ற இயலாதே. தன் இயலாமையை எண்ணி வருந்தினாலும் முகத்தில் கடுமையை பூசி நின்றவர் அவனை நோக்கி,

“உன் முடிவு இது தானா?” என்று நிதானமாகவே கேட்டார்.

“இந்த முடிவுல இருந்து நான் பத்து வருஷமா மாறவும் இல்லை. இனி மாறவும் மாட்டேன்.” என்றான் உறுதியுடன்.

“வெல்.. நீயும் உன் அம்மா மாதிரி பிழைக்க தெரியாத முட்டாள் தான்..” என்று கடுமையாக கூற, அம்மா என்ற வார்த்தை மீண்டும் அவனுள் கடுங் கோபத்தை கிளப்ப படுக்கையை விட்டும் சடாரென எழப்போனவன் நிலை தடுமாறவே , அதை கண்டு கொண்டவள் மற்றவர்களுக்கு முன்பாக ஓடிச் சென்று குருவை தாங்கிப் பிடித்தாள் வெண்பா.

அந் நொடி இருவரது பார்வைகளும் ஒரே நேர் கோட்டில் சந்தித்துக் கொள்ள, அவள் அருகாமையில் ஒரு கணம் பேச்சிழந்து போனான் அவன். அவர்கள் இருவரையும் கலைத்தது வேதநாயகத்தின் குரல்.

“அப்போ நீ நிஷாவை கல்யாணம் பண்ணிக்க போறதில்லையா?” என்று கேட்டவரது பார்வை வெண்பாவில் நிலைத்திருக்க, அவர் கேட்ட கேள்வியில் அதிர்ந்தாள் வெண்பா.

“அந்த நிஷாவை நான் கல்யாணம் செஞ்சுக்கனுமா? நோ வே..” என்றவனது உதடுகள் இகழ்ச்சியாக வளைந்தன.

தன்னை தாங்கியிருக்கும் வெண்பாவை திரும்பிப் பார்த்து, “கல்யாணம்னு ஒன்னு நடந்தா அது இவ கூட மட்டும் தான்.. நான் வெண்பாவை காதலிக்கிறேன்.இப்போ புரிஞ்சதா? தயவு செய்து இந்த இடத்தை விட்டு கிளம்புங்க..” என்றான் அடக்கப்ட்ட கோபத்துடன்.

அவன் சொன்னதை கேட்டு திகைத்தவர் அறையை விட்டும் கோபமாக வெளியேற, வெண்பா மயங்கியே விழுந்து விட்டாள். குருவோ பதறி கீழே விழுந்தவளை எழுப்ப, சுகீர்த்தனோ நடப்பவற்றை சிரித்துக் கொண்டே பார்க்க கடுப்பானான் குரு.

“என்னடா சிரிச்சிக்கிட்டு இருக்க? அந்த தண்ணி கிளாஸை எடு..” என்று கத்த, சிரித்துக் கொண்டே எடுத்து வர அதை வாங்கி அவள் முகத்தில் தெளித்து விட்டு எழுப்பினான்.

“என்னாச்சு..?” என்று கொண்டே பதறி எழுந்தமர குபீரென்று சிரித்தவன்,
“வீர மங்கையே… உனக்கு என்னாச்சு? குரு உன்னை காதலிக்கிறேன்னு சொன்னதும் இப்படி மயங்கி விழுந்துட்டியே..” என்று மீண்டும் சிரிக்கலானான்.

அப்போது தான் சற்று முன் நடந்தவை யாவும் அவள் நினைவில் வர, நம்ப முடியாதவளாய் சட்டென குருவின் பக்கம் திரும்பிப் பார்க்க அவனோ அவனது அரிதான ட்ரேட் மார்க் புன்னையுடன் அவளையே நோக்கிக் கொண்டிருந்தான்.

அவளை பார்த்து புன்னகைக்கும் இந்த குரு அவளுக்கு புதிது. அவளது இதயம் தாறுமாறாக துடிக்க மீண்டும் மயங்கி விழுந்தாள்.

தொடரும்..

Facebook Comments Box
What’s your Reaction?
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here