கண்ட நாள் முதலாய் காதல் பெருகுதடி
கையினில் வேல் பிடித்த கருணை சிவ பாலனை
கண்ட நாள் முதலாய் காதல் பெருகுதடி
வண்டிசை பாடும் எழில் வசந்த பூங்காவில்
வந்து சுகம் தந்த காந்தனே என் காந்தனே
பூஜை அறையில் அமர்ந்து தேனினும் இனிய தன்னுடைய குரலில் மனமுருகி பாடிக் கொண்டு இருந்தாள் ஸ்ருதி.
கண்களை மூடி இசையில் லயித்து அவள் பாடிக் கொண்டு இருந்த காட்சி கண்களுக்கு அத்தனை அழகாய், பாந்தமாய் இருந்தது. தங்களுடைய அருமை மகள் பாடிக் கொண்டு இருந்த காட்சியை மெய் மறந்து பார்த்துக் கொண்டு இருந்தார் அவளின் அருமைத் தந்தை சுந்தரம்.
“பொண்ணை ரசிச்சது போதும்… முதலில் கையில் இருக்கும் காபியை குடிங்க” என்று சொன்னவாறே அருகில் வந்து அமர்ந்தார் அவரின் அன்பு மனைவி காயத்ரி.
“காபியை அப்புறம் குடிச்சுக்கலாம்… அங்கே பாருடி… என் பொண்ணு எவ்வளவு அருமையா பாடுறா பாரு…” கண்கள் பூரிப்பில் பளபளக்க மகளை ஆதுரத்துடன் பார்த்துக் கொண்டு இருந்தார்.
“ம்… உங்க பொண்ணைப் பத்தி பெருமையா பேசுறதுன்னா நேரம் போறதே தெரியாதே உங்களுக்கு…”நொடித்துக் கொண்டார் காயத்ரி
“பின்னே சும்மாவா? என் பொண்ணு சாட்சாத் அந்த சரஸ்வதியோட அம்சம்டி…”
“போதும்… போதும்… உங்க கண்ணே பட்டுடும் போல… சீக்கிரம் கிளம்புங்க… அவளுக்கு இன்னைக்கு கச்சேரி இருக்கு… நியாபகம் இருக்கா”
“மறப்பேனா?… ஸ்ருதி வந்ததும் சாப்பிட்டு கிளம்ப வேண்டியது தான்… டிபன் ரெடி தானே”
“அதெல்லாம் எப்பவோ ரெடி… சாப்பிட வாங்க”
“அம்மா” என்று அழைத்தபடியே பூஜை அறையை விட்டு வெளியே வந்த மகள் கையில் இருந்த ஆரத்தி தட்டை பெற்றவர்கள் இருவருக்கும் நீட்ட, கற்பூர ஜோதியை தொட்டு கொண்டனர்.
“இன்னைக்கு எங்கே கச்சேரி ஸ்ருதி?”
“இன்னைக்கு ரசிக ரஞ்சன சபால கச்சேரி இருக்குப்பா… “
“சரிடா… கச்சேரி இருக்கும் பொழுது கூட பூஜை வேலை எல்லாம் நீயே பார்க்கணுமா? அம்மா செய்வா இல்லையா?”
“என் கையாலே நானே பூஜை செஞ்சா மனசுக்கு திருப்தியா இருக்குப்பா… மற்ற நாளை விட கச்சேரி நாளில் கண்டிப்பா நான் தான் செய்வேன்… ப்ளீஸ்ப்பா” என்று அவள் தாடையை தடவி கொஞ்ச நெகிழ்ந்து போனார் சுந்தரம்.
“சரிடா…. சாப்பிடலாம் வா” என்றவர் உணவு மேஜையில் அமர்ந்து உண்ணத் தொடங்கினார்.
“ஆயிரம் தான் இருந்தாலும் உன்னோட கைப்பக்குவத்திற்கு தனி ருசி தான் காயத்ரி… எத்தனை ஹோட்டலில் சாப்பிட்டாலும் நீ செய்யும் அந்த ருசி வரவே வராது தெரியுமா?” என்று சொன்னவர் மனைவியின் கை சமையலை ரசித்து சாப்பிடத் தொடங்கினார்.
“போதும் … போதும்… வயசுப் பெண்ணைக் கூட்டிக்கிட்டு கச்சேரி செய்ய ஒவ்வொரு ஊரா அலையுறீங்களே … இதெல்லாம் நல்லாவா இருக்கு…”
“அட… நம்ம என்ன பணத்துக்காகவா கச்சேரிக்கு போறோம். நம்ம பொண்ணுக்கு நிறைய திறமை இருக்குடி…. அது வீணாகக் கூடாது இல்லையா?” என்றவர் பெண்ணை எண்ணி பூரித்துப் போனார்.
“பொண்ணைப் பார்த்து ரசிச்சது போதும்…அண்ணன் வீட்டுல இருந்து கேட்டுக்கிட்டே இருக்காங்க… நானும் எத்தனை தடவை தான் தட்டிக் கழிக்கிறது… நம்ம ரகு இந்த முறை டெல்லியில் இருந்து வந்ததும் நிச்சயம் பண்ணிக்கலாம்ன்னு அண்ணன் பிரியப்படுறார்”
“இப்போ என்னடி அவசரம்… குழந்தை இன்னும் கொஞ்ச நாள் நம்ம கூடவே இருக்கட்டுமே…”
“ஆமா… குழந்தை… இருபத்தி மூணு வயசாகுது… இன்னும் என்ன செல்லம் கொஞ்சிக்கிட்டு இருக்கீங்க… சில விஷயங்கள் காலா காலத்தில் முடிச்சிடணும்ங்க… தள்ளிப் போடக்கூடாது.”என்று எப்பொழுதும் போல அவர் வழக்கமான பல்லவியை பாட உள்ளுக்குள் லேசான கோபம் வந்தாலும் மனைவி சொல்வதில் உள்ள உண்மையை அவர் உணராமல் இல்லை.
மகளுக்கு திருமணம் செய்து வைப்பது குறித்து யோசிக்க ஆரம்பித்ததும் ரகுராமை பற்றிய எண்ணங்கள் அவரை சுற்றி வரத் தொடங்கியது.
நல்ல பையன் தான்…கம்பீரமான தோற்றம்.இருவரும் சேர்ந்து நடந்தால் ஊர் கண்ணே படும்.அந்த அளவிற்கு அம்சமான ஜோடிப்பொருத்தம். எந்த கெட்ட பழக்கமும் கிடையாது. ஆனால் பிடிவாத குணம் ஜாஸ்தி… அதை நினைத்துத் தான் அவருக்கு கொஞ்சம் கலக்கமாக இருந்தது.
அதே நேரத்தில் ரகுராமின் முடிவுகள் எப்பொழுதும் தெளிவாக இருக்கும். தனக்கு எது வேண்டும்… எது வேண்டாம் என்பதில் ரொம்பவே தெளிவாக இருப்பான். அவன் எடுத்த முடிவுகள் இதுவரை எதுவும் தவறாக போனதே இல்லை.
பள்ளிப்படிப்பை முடித்ததும் பிடிவாதமாக ஜர்னலிசம் எடுத்துப் படித்தான். படித்ததும் கையோடு வேலை கிடைத்து விட வேலைக்கும் சென்று நன்றாக சம்பாதிக்கத் தொடங்கினான். அத்தோடு நிறுத்தி இருந்தால் பரவாயில்லை… அங்கிருந்து பெங்களூர் போனான்.. அதன் பிறகு ஹைதராபாத்… என்று ஓவ்வொரு ஊராக போனவன் இப்பொழுது இருப்பது டெல்லியில்…
எந்த இடத்திலும் நிலைத்து நிற்காமல் ஓடிக் கொண்டே இருக்கும் அவனது செய்கையில் சுந்தரத்திற்கு கொஞ்சமும் உடன்பாடு இல்லை. எதிலும் நிலையாக நிலைத்து நிற்பதில்லை என்ற எண்ணம் அவருக்கு. ஏற்கனவே இருந்த வேலைகளில் கை நிறைய சம்பளம் வந்தும் அவன் வேறு இடத்திற்கு தாவியது அவருக்கு பிடிக்கவில்லை என்றே சொல்லலாம்.
இப்பொழுது தன்னுடைய அருமை மகளை அவனுக்கு திருமணம் செய்து வைத்தால் நிச்சயம் நன்றாகப் பார்த்துக் கொள்வான் தான். ஆனால் மகளை இழுத்துக் கொண்டு மாதம் ஒரு ஊருக்கு போய்க் கொண்டு இருப்பான். இதை எடுத்து சொன்னால் அவ்வளவு கஷ்டமா இருந்தா உங்க பொண்ணு இங்கேயே இருக்கட்டும் என்று போய் விடுவான்.
தனித்தனியாக இருவரும் இருப்பதற்காகவா திருமணம் செய்து வைப்பது? அதிக வருமானம் இல்லாவிட்டாலும் மகளை அருகிலேயே வைத்துக் கொண்டால் போதும் சுந்தரத்துக்கு. நொடியும் யோசிக்காமல் இந்த திருமணத்தை நடத்திக் காட்டி விடுவார். ஏனோ அவரால் முழுமனதாக ரகுவை தன்னுடைய மாப்பிள்ளையாக ஏற்றுக்கொள்ள முடியவில்லை.
அவரைப் பொறுத்தவரையில் அவரது மகள் தெய்வத்தின் குழந்தை.. அவளது வாழ்க்கையில் எந்த குறையும் இதுவரை அவர் வைத்தது இல்லை. அதே போல அவளது திருமண வாழ்க்கையும் நிறைவுடன் இருக்க வேண்டும் என்பது அவர் எண்ணமாக இருக்க, ஓரக்கண்ணால் திரும்பி மகளைப் பார்த்தாள்.
தட்டில் இருந்த உணவை சாப்பிட்டுக் கொண்டு இருந்தாலும் அன்றைய நாள் பாட வேண்டிய பாடல்களை ஹம் செய்து கொண்டு இருந்தாள் ஸ்ருதி.
அவளது கவனம் சங்கீதத்தின் மீதே தான் இருந்தது. இத்தனை நேரமாக தாய் பேசிய பேச்சுக்கள் எதுவும் அவள் காதில் ஏறியதாகவே தெரியவில்லை.
இன்று மகளிடம் இது குறித்து பேசி விட வேண்டும் என்று முடிவு செய்து கொண்டவர் சாப்பிட்டு முடித்ததும் மகளை அழைத்துக் கொண்டு காரில் ஏறி சபாவை நோக்கி செல்லத் தொடங்கினார். காரில் ஏறி வீட்டை தாண்டியதும் மெல்ல மகளிடம் பேச்சுக் கொடுத்தார்.
“அம்மாடி இன்னைக்கு பாட வேண்டிய பாட்டு எல்லாத்தையும் நல்லா ரிகர்சல் பண்ணிக்கிட்டியா?”
“ஓ…காலையில் நாலு மணிக்கே எழுந்து சாதகம் பண்ணிட்டேன்ப்பா”
“சரிடா… வந்து… உங்க அம்மா உனக்கும் ரகுவுக்கும் கல்யாணம் செஞ்சு பார்த்துடணும்ன்னு ரொம்ப ஆசையா இருக்கா… ரகுவும் இப்போ லீவுக்கு ஊருக்கு வர்றான் போல.. இந்த முறை உங்க நிச்சயத்தை வச்சிக்கலாமா?” என்றார் தயங்கியபடியே…
“உங்க இஷ்டம்ப்பா” என்றாள் கொஞ்சமும் யோசிக்காமல்…
“உனக்கு வேற எதுவும் அபிப்ராயம் இருந்தா தயங்காம சொல்லுடா…” பெண்ணின் மனதில் வேறு யார் மீதும் விருப்பம் இருந்தால் அவளது எண்ணப்படியே முடித்து விடலாம் என்று எண்ணினார்.
“அதெல்லாம் எதுவும் இல்லைப்பா… நீங்க என்ன செஞ்சாலும் எனக்கு ஓகே தான்” என்று மலர் போல சிரித்தவள் மீண்டும் சங்கீதத்தில் மூழ்க, சுந்தரத்திற்கு அத்தனை பெருமையாக இருந்தது மகளை நினைத்து.
அதே நேரம் டெல்லியில் தன்னுடைய அறையில் இருந்த ரகுராம் தன்னுடைய தாய் அம்பிகையிடம் போனில் கோபமாக கத்திக் கொண்டு இருந்தான்.
“என்னம்மா எவ்வளவு சொன்னாலும் புரிஞ்சுக்க மாட்டேங்கறீங்க? எனக்கு ஸ்ருதியை கல்யாணம் செஞ்சுக்க முழு சம்மதம் தான். ஆனா அதுக்காக என்னால அவளோட கச்சேரிக்கு கூஜா தூக்கிட்டு பின்னாலேயே அலைய முடியாது. அவ வேலை அவளுக்கு… என்னோட வேலை எனக்கு… எப்போ கல்யாணம்னு சொன்னாலும் சரி.. தாலி கட்ட நான் ரெடி… அவ என்னோட டெல்லிக்கு வந்திடணும்… கல்யாணம் முடிஞ்ச பின்னாடி அவ எங்கேயோ, நான் எங்கேயோ இருக்கிறது எல்லாம் சரியா இருக்காது. இப்பவே அவங்க வீட்டில் தெளிவா சொல்லிடுங்க… கல்யாணத்துக்கு பின்னாடி நான் அண்டார்டிக்காவிற்கு கூப்பிட்டாலும் அவ வந்து தான் ஆகணும்.” என்று தெளிவாக பேசி முடித்தவன் போனை வைத்ததும் அப்படியே கட்டிலில் படுத்து விட்டான்.
நேற்று இரவு முழுக்க வேலை பார்த்ததால் இன்று அவனுக்கு விடுமுறை அளிக்கப்பட்டு இருந்தது. கண்களை மூடி ஓய்வெடுக்க சொல்லி மனம் கெஞ்சினாலும் தூங்க விடாமல் அவனை இம்சித்தது ஸ்ருதியின் நினைவுகள்.
அடக்க ஒடுக்கமான பெண்… துடைத்து வைத்த குத்து விளக்கு போல அமைதியான அழகு… விவரம் தெரிந்து ஒருநாள் கூட அவள் சோம்பிக் கிடந்து அவன் பார்த்தது இல்லை. பட்டாம்பூச்சி போல பறந்து திரியும் விதம் கிடையாது அவள். எறும்பு போல சுறுசுறுப்பானவள். எப்பொழுதும் அவளது செய்கையில் நிதானம் இருக்கும். ஆர்ப்பாட்டம் இல்லாத அழகு அவளுடையது.
சின்ன வயதில் கூட அவள் மீது அவனுக்கு இத்தனை ஆசை இருந்தது கிடையாது. ஆனால் வளர வளர ஒவ்வொரு நாளும் ஒவ்வொரு விதத்தில் ஸ்ருதி அவனை ஈர்த்தாள். அவளை திருமணம் செய்து கொண்டு ராணி மாதிரி அவளை வைத்துக் கொள்ள வேண்டும் என்று விரும்பினான். அவளுக்காகவே ஊர் ஊராக சென்று வேலைகளை கற்றுக் கொண்டான்.
இப்பொழுது அவனது சம்பளம் ஐந்து இலக்கத்தில்… நிச்சயம் அவளை நன்றாக வைத்துக் கொள்ள முடியும் என்று நம்பினான். பெற்றவர்களின் மூலம் பேசி முறைப்படி திருமணம் நடக்கப்போகிறது. கல்யாணத்திற்கு பிறகு அவளிடம் தன்னுடைய காதலை எப்படியெப்படி விதவிதமாக தெரிவிப்பது என்று சிந்திக்கத் தொடங்கி விட்டான் ரகுராம். காதல் கொண்ட அவனது மனது அழகிய கற்பனைகளில் முழுகத் தொடங்கியது.
பிரபல தொலைக்காட்சி சேனலின் ஹெட் ஆபிஸ் காலையிலே மிகுந்த பரபரப்புடன் இயங்கிக் கொண்டிருந்தது. அதன் உரிமையாளன் இளம் தொழிலதிபன் முகுந்தன். தன்னுடைய பி ஏ சுதாவிடம் கத்திக் கொண்டு இருந்தான்.
“உருப்படியா ஒரு வேலை செய்யத் தெரியாதா உங்களுக்கு?”
“அதில்லை சார்…”
“I don’t want any explanations . நம்ம டிவியில் நடக்கப் போற சிங்கிங் (singing) காம்பெடிஷனுக்கு (competition) ஸ்ருதியையும் ஒரு நடுவரா போட்டே ஆகணும்… அதுக்கு அவங்க எவ்வளவு சம்பளம் கேட்டாலும் சரி.”
“சார்… பிரச்சினை சம்பளம் பத்தி இல்லை”
“பின்னே…” என்றான் கூர்மையாக…
“சார் இதுக்கு முன்னாடி நாம கேட்டப்போ யோசிச்சு சொல்றதா சொல்லி இருந்தாங்க… பட் நேத்து நான் பேசினப்போ முடியவே முடியாதுன்னு சொல்லிட்டாங்க”
“என்ன காரணம் சொன்னாங்க”
“நம்ம அக்ரிமெண்ட்ல ப்ரோக்ராம்க்காக டைரக்டர் என்ன மாதிரி பேச சொன்னாலும் பேச வேண்டி இருக்கும்னு ஒரு லைன் இருக்கு இல்லையா.. அதுதான்…” என்றாள் சுதா தயங்கியபடியே…
“அதனால…”
“வந்து சார்… போன பார்ட் ஜட்ஜஸ் கிட்டே அவங்க பேசி இருப்பாங்க போல… சென்சேஷன்காக நாம செஞ்ச சில விஷயங்கள் அவங்களுக்கு தெரிஞ்சு இருக்கு.. அதெல்லாம் அவங்களுக்கு பிடிக்கலை… அதனால அவங்களுக்கு இதுல விருப்பம் இல்லைன்னு சொல்லிட்டாங்க சார்” என்றாள் பயத்தில் மிடறு விழுங்கியபடி…
“இதெல்லாம் ஒரு மேட்டரா? அவங்களுக்கு நாம பேசி இருக்கிற சம்பளத்தை விட கூடுதலா கொடுக்கிறோம்ன்னு சொல்லி டீலை முடிக்க வேண்டியது தானே… இதைக் கூடவா உங்களுக்கு நான் சொல்லணும்” என்றான் எரிச்சலாக…
“சார் அதெல்லாம் எவ்வளவோ சொல்லிப் பார்த்துட்டோம் சார்… பட் அவங்க ஒத்துக்கவே இல்லை…”
“ஓ…” என்றான் ஒற்றை சொல்லாக…
“அவங்களை இன்னைக்கே என்னை வந்து நேரில் பார்க்க சொல்லுங்க…”
“சொல்லிட்டேன் சார்… ஆனா இன்னும் இரண்டு நாளைக்கு அவங்களுக்கு நேரம் இல்லையாம் சார்… கச்சேரி ஒத்துக்கிட்டு இருக்காங்களாம். அதுக்குப் பிறகு உங்களை வந்து பார்க்கிறதா சொன்னாங்க” பயத்தில் சுதாவின் நாக்கு மேலண்ணத்தில் ஒட்டிக் கொண்டது.
சுதா பேசப்பேச முகுந்தனின் புருவங்கள் யோசனையாக இடுங்கியது. தன்னுடைய லேப்டாப்பில் youtube போய் ஸ்ருதியின் கச்சேரிகளை ப்ளே செய்யத் தொடங்கினான். முதன்முறையாக இன்று தான் அவளைப் பார்க்கிறான்.
பட்டுப்புடவையில் மகாலெட்சுமி போல இருந்தவளைக் கண்டு ஒரு நொடி அவன் மனம் துடிக்க மறந்தது. இமைக்காமல் அவள் பாடும் அழகையே கண்களால் பருகினான்.
தொடையில் தாளம் தட்டி, விழி மூடி, கைகளை நீட்டி அவள் பாடும் அழகை பார்த்தவன் வீடியோ முடிந்ததும் லேப்டாப்பை வேகமாக மூடி வைத்தான்.
‘கொஞ்சம் அழகும், திறமையும் இருக்கிற கர்வம்… இதுவரை இந்த முகுந்தனை அவள் சந்திக்கலை இல்லையா? அவளை மண்டி போட வைக்கிறேன். தானா வலிய வந்து என்னோட டிவியில் அவள் சான்ஸ் கேட்கிற மாதிரி செய்யறேன்’ என்று சூளுரைத்தவனின் கண்கள் சொல்லிய சேதிக்கு அர்த்தம் புரியாமல் சுதா விழிக்கத் தொடங்கினாள்.