தீரா மயக்கம் தாராயோ!-10
திரும்பியும் பாராது தன்னை அழைப்பவன் ‘ரகு’வாகத்தான் இருக்கும் என எண்ணிய ஸ்ருதிக்கு, அங்கே முகுந்தனை கண்டதும் ஸ்தம்பித்து போன நிலை! அவனை அவள் கொஞ்சமும் எதிர்ப்பார்க்கவில்லை என்பதை அவளது விரிந்த கண்களே காட்டிக்கொடுக்க, அவனிடம் பதில் பேசவும் தோன்றாது நின்றுவிட்டாள்.
அவள் நிலையை யூகித்த முகுந்தன், “எப்படி இருக்க ஸ்ருதி?” தானே பேச்சை தொடங்க, அவன் கேள்விக்கு பதில் சொல்ல தன் தொண்டையை சிரமம் கொடுத்து சரிசெய்து, “இருக்கேன்” என்று ஒற்றை வார்த்தையில் நிறுத்தினாள். அவள் பார்வை எங்கோ இருந்தது.
ஸ்ருதியிடம் வழிமறித்து பேசும் புதியவனையும், அவனிடம் பேச தயங்கி நிற்கும் ஸ்ருதியையும் கையில் கரைந்துக் கொண்டிருக்கும் ஐஸ்க்ரீமை சுவைத்தபடி வேடிக்கை பார்த்துக்கொண்டு நின்றாள் நந்தினி. ‘முக்கியமான ஆளா இருந்தா இவளே இன்ட்ரோடியூஸ் பண்ணிவைப்பா!’ என்ற நம்பிக்கை அளவுக்கு! அதனால் நிற்பவன் யாரென ஸ்ருதியிடம் கேட்காமல் வேடிக்கை மட்டுமே பார்த்தாள்.
‘இருக்கேன்’ என்ற வார்த்தைக்கு மேல அவள் பேசவுமில்லை, அங்கிருந்து நகரவுமில்லை. ‘இப்போது எதற்கு வந்தீர்கள்?’ என்றாவது அவள் கேட்பாள் என்று எண்ணியவனுக்கு தரை பார்த்த அவள் உணர்வில்லா முகம், ஏமாற்றத்தை கொடுக்க, அதை தன் பெருமூச்சோடு வெளித் தள்ளியவன், “நான் எப்படி இருக்கேன்னு கேக்க மாட்டியா?” என்றான் ‘கேளேன்!’ எனும் பாவத்தில்.
மெல்ல அவனை நிமிர்ந்து பார்த்த ஸ்ருதியின் கண்கள் மூன்று வருடங்கள் முன்பு தான் பார்த்த முகுந்தனுக்கும், தன் கண் முன்னே இப்போது நிற்கும் முகுந்தனுக்கும் ஆறு வித்தியாசங்களை சிறு குழந்தையென கணக்கிட்டது. முகத்தில் செல்வந்தனுக்கான தேஜஸுடன், ‘என்னால் எதுவும் முடியும்!’ என பிடிவாதமாய் இருக்கும் அவனது திமிரான தோற்றம் மங்கியிருந்தது.
நிமிர்ந்த பேச்சும், சுறுசுறுப்புமே அவனை எப்போதும் அதீத வசீகரமாய் வெளிகாட்டும். இப்போதோ, எதையோ இழந்தவன் போன்ற தொய்ந்து போன அவன் தோற்றம் அவளுக்குள் ‘என்னாச்சு இவருக்கு?’ என்ற கேள்வியாய் உண்டு பண்ணியது.
அதற்குமேல் மௌனம் நீடிக்க இயலாமல், “எப்டி இருக்கீங்க சார்?” என்றாள் ஸ்ருதி. அவள் கேட்ட மாத்திரத்தில், “நான் நல்லா இல்ல ஸ்ருதி!” என்றான் முகுந்தன், மனம் வெளிப்படுத்திய வேதனையின் சாயலில் முகம் கசங்க!!
அவன் கண்கள் கூட மெலிதாக கலங்கியதோ!? மறுபுறம் திரும்பி கண்நோரத்தை தேய்த்துக்கொண்டான். ஸ்ருதிக்கு மனதை எதுவோ பிசைந்தது. ரகு வருந்தியும் மன்னிப்பு கேட்டும், கண் கலங்கியும் இளகாத அவள் மனது, முகுந்தனை கண்டதும் இளக தொடங்கிய விந்தையின் ரகசியம் அவள் மனமே அறியாதது!
அவளது மொழிக்கு காத்திராமல், “உன்னை பார்த்ததும் என் மனசுக்கு பிடிச்சது என் தப்பா? உன்னை என் மனைவியாக்கி, காலம் முழுக்க உன்னை காதலிச்சே சாகனும்ன்னு நான் ஒரு நொடில முடிவெடுத்தது என் தப்பா? என்னால நீ உன் பெத்தவங்களை இழந்தது, இப்படி யாரும் இல்லாத மாறி ஏதோ ஒரு ஊருல வந்து இருக்கிறது, இது எல்லாமே என் தப்பா? நான் தப்பு பண்ணிட்டேனா? சொல்லு ஸ்ருதி?” வேதனை மறையாத முகத்துடன் முகுந்தன் அவள் அருகே நெருங்கி வந்து கேட்க, ‘ஆம்’ ‘இல்லை’ என எதுவுமே சொல்லாது அவன் முகத்தையே அவஸ்தையாய் பார்த்திருந்தாள் ஸ்ருதி.
வேடிக்கை பார்த்துக்கொண்டிருந்த நந்தினிக்கோ, தலையும் புரியாமல் வாலும் புரியாமல் இருந்தாலும், ‘இவன் தப்பு பண்ணிட்டேன்னு சொல்றான்னா, பண்ணலன்னு சொல்றானா?’ என்று சந்தேகமாய் போனது.
“ஏன் சார் இப்படியெல்லாம் பேசுறீங்க? என் வாழ்க்கைல இதெல்லாம் நடக்கணும்ன்னு இருக்கு, நடக்குது! எல்லாம் நன்மைக்கேன்னு எடுத்துகிட்டு கடந்து போய்டணும்” அவனுக்கு ஆறுதலாய் பேசிய ஸ்ருதி, “ஏதாது ப்ரோக்ராம்க்கு வந்தீங்களா சார்?” என்றாள், அவனது திடீர் வரவை சுட்டிக்காட்டி!
அவள் சாமர்த்தியமாய் பேச்சை மாற்றுவதை உணர்ந்து மெலிதாய் நகைத்த முகுந்தன், “த கிரேட் சிங்கர் ஸ்ருதி எங்க சேனல் விட்டு ஆப்போசிட் சானல்க்கு போன பின்னாடி, வெளிநாடுல ஷூட்டிங் நடத்துற அளவுக்கு எங்ககிட்ட துட்டு இல்லமா!” மிக விளையாட்டாய் சொன்னான் முகுந்தன். அப்போதைய சூழலில் கோவமாய் எடுத்த முடிவு இது! முகுந்தனின் போட்டி நிறுவனத்தில் தன்னை இணைத்துக்கொண்ட ஸ்ருதி, இப்போது நேரில் முகுந்தனை கண்டதும், முதல்முறையாய் சங்கடத்துடன், “அப்போ இருந்த நிலைமைல உங்ககிட்ட முறையா தெரிவிக்காம, நான் விலகிகிட்டேன்!!” காரணம் சொன்னாளே ஒழிய மன்னிப்பு வேண்டவில்லை! முகுந்தன் மனம் அதையும் குறித்துகொண்டது.
“பரவாயில்லை!!!” என்ற முகுந்தனை கண்டு சிநேகமாய் சிரித்தாள் ஸ்ருதி. சிறிது நேரத்திற்கு முன் அவனை கண்டபோது இருந்த தயக்கமும், பதட்டமும் இப்போது அவளிடம் சொற்பமாய் குறைந்திருந்தது. மனம் தெளிந்ததும் தான் சுற்றுப்புறம் கண்களில் தெரிந்தது அவளுக்கு. முகுந்தனின் பின்னால், காரின் அருகில் நின்றிருந்த ஒருவனை பார்த்த ஸ்ருதிக்கு, அவன் முகம் பரிட்சயமாய் இருந்தது. அவனும் ஸ்ருதி பார்ப்பது தெரிந்தது சிறு புன்னகையை விடுக்க, முகுந்தன், “இது கார்த்திக்! என்னோட ரைட் ஹென்ட்!” அவனை அருகே அழைத்து தோள் மீது கை வைத்தபடி சொன்னான்.
“பார்த்துருக்கேன் உங்ககூட!”
அதுவரையிலும் வேடிக்கை பார்த்துக்கொண்டிருந்த நந்துவின் பொறுமை கரைய, ஐஸ்க்ரீமும் தீர்ந்து போனதில் ஸ்ருதியின் முதுகை தன் ஒற்றை விரலால் சுரண்டினாள். அவ்வளவு நேரம் ஸ்ருதி மறந்திருந்த உருவம், தன்னை நினைவுபடுத்தியதும், ‘ஸ்ஸ்ஸ்’ என தன் முன்நெற்றியில் தட்டிக்கொண்டாள் ஸ்ருதி.
“சார், இது நந்தினி! இங்க எனக்கு கிடைச்ச ரொம்ப நல்ல பிரன்ட்!” என்று அறிமுகப்படுத்தியவள் நந்தினியிடம் முகுந்தனை அவனது சேனலின் பெயரோடு அறிமுகப்படுத்தி, “இவர் சேனல்ல தான் நான் முன்னாடி இருந்தேன்” என்று மட்டும் சொன்னாள். நந்தினியும் மரியாதைக்காய் சில வார்த்தைகள் பேச, இருவரும் விடைபெறும் நேரம், “உன் கான்டேக்ட் நம்பர் கிடைக்குமா?” என்றான் முகுந்தன்.
அவள் தயங்குவதை கண்ட முகுந்தன், “நான் எந்த தப்பான நோக்கத்துலையும் கேக்கல! ஒரு நண்பனா உன் வாழ்க்கைல, ஒரு ஓரத்துல இருந்துட்டு போலாம்ன்னு நினைச்சேன்! அவ்ளோதான்!” என்றிட, இதற்குமேலும் தயங்கினால், அது அவனை வருத்தும் என நினைத்த ஸ்ருதி, அவன் வேண்டிய இன்னும் இதர தகவல்களையும் தெரிவித்தாள்.
“இப்போ எப்படி ப்ளாட்க்கு போவீங்க?” அக்கறையான அவனது அடுத்த கேள்வியில் நந்தினி முந்திக்கொண்டு, “கேப்ல தான் போனும் சார்!” என்றாள். ஸ்ருதி அவளை முறைக்க, “அப்போ எங்ககூட வாங்களேன்! நானே டிராப் பண்ணிடுறேன்!!” என்றிட, நந்தினி ‘ம்ம்’ சொல்லும்முன், “இல்ல சார்! நாங்க கேப்ல போய்க்குறோம், பை” என்று நந்தினியை இழுத்துக்கொண்டு கிளம்பியிருந்தாள் ஸ்ருதி.
சற்று தொலைவு கடந்திருந்தாலும், நந்தினி ஸ்ருதியிடம் ‘காரிலேயே போலாம்’ என முரண்டு பிடிப்பதும், ‘அவர் மரியாதைக்காக கேக்குறார், உடனே ம்ம் சொல்லிடுவியா?’ என ஸ்ருதி அதட்டுவதும் முகுந்தனுக்கு நன்றாய் புரிந்தது.
செல்லும் அவர்களையே பார்த்துக்கொண்டு நின்ற முகுந்தனை நெருங்கிய கார்த்திக், “நீங்க என்ன ப்ளான் போடுறீங்கன்னே புரியல சார்! மூணு வருஷமா இங்க வரல! இப்போ வந்து அவங்ககிட்ட என்னென்னவோ பேசுறீங்க?” அடக்கமாட்டாமல் கேட்டுவிட்டான் கார்த்திக். தினம் தினம் அவனை கவனித்தவனாயிற்றே!
தூரத்தில் புள்ளியாய் தெரிந்த ஸ்ருதியை கருவிழிக்குள் நிறைத்த முகுந்தனின் முகம் கடுமை பூச, “புலி பதுங்குனது பாயுறதுக்கு!” என்றான் பூடகமாய்!
மறுநாள் மாலை செய்வதற்கு வேலைகள் எதுவும் இல்லாமல், சூடான தேநீரோடு பால்கனி ஊஞ்சலில் உட்கார்ந்து இயற்கை வனப்பை ரசித்துக்கொண்டிருந்தாள் ஸ்ருதி. மதிய உறக்கம் முடித்து சோம்பல் முறித்தபடி அவளை தேடி வந்த நந்தினி, தேநீரின் வாசனையில் மூக்கை உறிஞ்சி வாசம் பிடித்தபடி, “வாவ்வ்வ்!!! உன் டீயின் நறுமணம் என்னை சுரண்டி இழுக்குது!!!” என்று சொல்லிக்கொண்டே அவள் கப்பை வாங்கி மீதி இருந்த டீயை பருக தொடங்கினாள்.
அவள் சொன்னதில் மலர்ந்து சிரித்த ஸ்ருதி, அவள் தலையை லேசாய் தட்டிவிட்டு, “அது சுரண்டி இழுக்குது இல்ல! சுண்டி இழுக்குது!! நீயும் உன் தமிழும்” என்று இன்பமாய் அலுத்துக்கொண்டாள்.
“வாட் எவர்” அலட்டாமல் சொல்லிவிட்டு மீதி டீயை காலி செய்தாள் நந்தினி.
ஸ்ருதி இயற்கையை பருக, சிறிது நேரம் அவளை கவனித்த நந்தினி பின், “நீயே சொல்லுவன்னு நினச்சேன்!! என்னால கேக்காம இருக்க முடியல! நேத்து பார்த்தோமே? மிஸ்டர் முகுந்தன், அவர் யாரு?” என்றாள் சிறிது தயக்கத்துடனே!
இயல்பான ஸ்ருதியின் முகத்தில் சில மாறுதல்! “யாருன்னா? அதான் நேத்தே சொன்னேனே!!” என்றாள் விட்டேத்தியாய்!
“அவர் யாருன்னு சொன்ன! ஆனா, உனக்கு அவர் யாருன்னு சொல்லலையே?” என்று மீண்டும் தன் கேள்வியாய் திருத்தி கேட்டாள் நந்தினி.
“எனக்குன்னு தனியா என்ன இருக்கு? எல்லாருக்கும் அவர் எப்டியோ அதேபோல தான் எனக்கும்!!” இதை சொல்லும்போது அவள் குரல் சற்று தேங்கியதோ என நந்தினிக்கு ஐயம் உண்டானது. இதற்க்கு மேல் பேசினால், ஸ்ருதியின் இலகுத்தன்மை இறுகிவிடும் என உணர்ந்தவள், பேச்சை மாற்றும் விதமாய், “எங்கயாது வெளில போலாமா? வீட்லயே இருக்க செம்ம போர்” என்றாள். அவள் முயற்சி வெற்றி கண்டது.
சிறு ஆச்சர்யத்தோடு சிரித்துக்கொண்டே திரும்பிய ஸ்ருதி, “இன்னைக்கு ஒரு நாள் தான் நீ வீட்லயே இருக்க, அதுக்கே உனக்கு போர் அடிக்குதா?” என்றாள்.
“நான் ஒரு கட்டுக்கடங்காத காட்டேரி! என்னை அடைச்சு வைக்கவே முடியாது!” என சொல்ல, ‘காட்டாறு, காட்டேரி’ ஆனதில் குலுங்கி சிரித்தாள் ஸ்ருதி.
பின்னே, “நீ ஷாப்பிங், பப்-ன்னு கூப்புடுவ, எனக்கு அங்கெல்லாம் இஷ்டம் இல்ல!” என்றவளிடம், “நோ! இன்னைக்கு உன் ஸ்டைல் அவுட்டிங்! கோவில் போக போறோம்” என்றாள் நந்தினி.
கோவில் என்றதும் ஸ்ருதி உடனே கிளம்பினாள்.
அவர்கள் தங்கியிருக்கும் இடத்தில் இருந்து சற்று தொலைவில் இருந்தது அந்த கிருஷ்ணர் கோவில். ஸ்ருதி எப்போதும் போல புடவையில் வந்திருக்க, நந்தினி தானும் இன்று புடவை கட்டுவதாய் சொல்லி ஆறு மீட்டர் துணியை உடலில் போர்த்திக்கொண்டு வந்திருந்தாள். காலை முன்னால் வைத்தால், உடல் முன்னே கவிழ்கிறது. ஒவ்வோர் அடிக்கும் முன் கொசுவத்தில் கால் பட, தடுக்கி தடுக்கி அவள் நடந்த அழகில் ஸ்ருதிக்கு நிறுத்தமாட்டாமல் சிரிப்பு கொட்டியது.
‘உனக்கு இது தேவையா?’ என்ற பாவத்தில் ஸ்ருதி இருக்க, நந்தினி சிறிது நேரத்திலேயே தளர்ந்து போனாள். அங்கே இருந்த பெஞ்சில் போய் ‘உம’மென்ற முகத்துடன் அமர்ந்துக்கொண்டவள், “நீயே போய் சாமி பாரு! நான் வரல” என்றாள். அவளால் இதற்குமேல் முடியாது என புரிந்துக்கொண்ட ஸ்ருதியும் தனியே கோவிலுக்குள் சென்றாள்.
ஸ்ருதி நகர்ந்ததும் நந்தினியின் அலைபேசி அலறியது.
‘ஹலோ’ என்ற நந்தினியை ‘ஹாய் நந்து’ என்ற வேந்தனின் குரல் அதிர செய்தது.
‘எது, நந்து வா?’ என்று ஆடிப்போனாள் நந்தினி.
முதலில் பிரகாரத்தை சுற்றிய ஸ்ருதி, பின் சந்நிதானத்திற்கு சென்று கண் மூடி கடவுளை வணங்க, ‘தன் வாழ்வில் அடுத்து என்ன?’ என்ற கேள்வியாய் இறைவன் பாதத்தில் வைத்தாள்.
‘கற்பனையும் செய்திராத பல நிகழ்வுகளை என் வாழ்க்கைல குறுகிய காலத்துல சந்திச்சுட்டேன்! இப்போ அடுத்து என்ன? என்கிற கேள்வி என்னை பதில் கேட்டு இம்சிக்குது! நான் எந்த பாதைல இனி போகணும்ன்னு நீயே காட்டு!!’ என்று அவள் உளமாற சொல்ல, “எல்லாம் நன்மைக்கே!!” என்ற குரலில் பட்டென விழி திறந்தாள் ஸ்ருதி.
அவள் கேட்டதற்கு கடவுள் தந்த விடையாய் அவள் முன் தன் மெல்லிய கன்னக்குழி தெரிய, வசீகர புன்னகையுடன் டீஷர்ட் ஜீன்ஸில் பிரகாசமாய் நின்றிருந்தான் முகுந்தன். அவனை அங்கே கண்டதும் முதலில் அதிர்ந்து, பின் சுதாரித்து புன்னகைத்தாள் ஸ்ருதி.
“வேண்டுதல் முடிஞ்சுதா?” என்றான் புன்னகை மாறாது!
‘ம்ம்’ என தலையாட்டிய ஸ்ருதி, “நீங்க எப்படி இங்க?” என்றாள் சந்தேகமாய்.
“நீ என்னை தானே பார்க்க வந்த? அப்புறம் நான் இங்க இல்லனா எப்டி?” என்றான் புருவம் உயர்த்தி குறும்பாய்!
“என்ன?” அவன் சொன்னதன் அர்த்தம் புரியாமல் ஸ்ருதி அதிர்வாய் கேட்க, “ஹாஹா” சத்தமாய் சிரித்தான் முகுந்தன்.
“கிருஷ்ணன் கோவிலுக்கு வந்துட்டு முகுந்தனை பார்க்குறதுல என்ன ஆச்சர்யம் இருக்குன்னு சொல்ல வந்தேன்” என்று தெளிவாய் சொன்னதும், நட்பாய் புன்னகைத்தாள் ஸ்ருதி.
“பிராத்தனை முடிஞ்சாச்சுன்னா, அப்படி உட்காந்து பேசலாமா? இப் யூ டோன்ட் மைன்ட்” என்றான் முகுந்தன்.
சற்றே அவள் தயங்க, “இஷ்டம் இல்லன்னா வேணாம்” என்றான் முகம் வாட.
உடனே “இல்ல இல்ல! என் பிரன்ட் வெளில வெயிட் பண்றா அதான்!” என்று தான் தயங்குவதன் காரணம் சொல்ல, “மிஸ் நந்தினி தானே? அவங்க போன்ல பேசிகிட்டு இருக்காங்க, வரும்போது ஹாய் சொல்லிட்டு தான் வந்தேன்” என்றதும், பிரகாரத்தின் ஓரமாய் இருவரும் அமர்ந்தனர்.
ஸ்ருதி சுற்றிலும் கண்களை சுழலவிட்டாள் என்றால், முகுந்தன் அவளை தாண்டி வேறு எங்கும் கண்களை திருப்பவில்லை! அவனால் திருப்பவும் முடியவில்லை! அவனது விழி வீச்சை அவள் உணர்ந்தாலும், நேர்க்கொண்டு அவனை பார்க்க முடியாத தவிப்புடன் சிரம் தாழ்த்தியிருந்தாள்.
கோவில் சிலைகளா அழகு?
கொண்டவனின் கண்முன்னே,
கன்னியவள் கன்னம் சிவக்கையில்!!!
முகுந்தனுக்கு சிறகின்றி பறப்பதை போல இருந்தது. இருவரும் அருகருகே அமர்ந்து ஒருவர் அருகாமையை பிறர் மனம் ஏற்க, அவன் நடக்காதோ? என ஏங்கியது நடந்தேருகையில் சொர்க்கத்தில் திளைத்தான் என்றே சொல்லலாம்.
ஸ்ருதியை கரம்பிடிக்க அவன் சென்ற வழி வேண்டுமானால், தவறாய் இருக்கலாம். ஆனால் அவள் மீது கொண்ட நேசம் கறந்த பாலின் தன்மையை போன்றது. தான் ஆரம்பித்த ஒரு காரியத்தால், ஸ்ருதியின் வாழ்வில் பெரும் இழப்பை சந்தித்தால் என்றதும், மனமுடைந்து போனவன் அவள் எதிரிலும் வர துணிவின்றி இருந்தான்.
அவனே எதிர்பாரா ஒன்று, அவன் நிறுவனத்தோடான ஒப்பந்தத்தை முறித்துக்கொண்டு ஸ்ருதி வெளிநாடு சென்றது. அவள் காயம் ஆறும்வரை பொறுத்திருக்கலாம் என்று முடிவெடுதிருந்தவனை நேரில் கிளம்பி வர செய்தது ஸ்ருதியுடனான ரகுவின் சந்திப்பு!
அவள் வாழ்வில் தீரா காயத்தை கொடுத்தவன், மீண்டும் தேடி சென்றிருப்பது தெரிந்ததும் உடனே கிளம்பிவிட்டான்.
முகுந்தன் பேசாமலே இருப்பது உணர்ந்த ஸ்ருதி, “கோவிலுக்கெல்லாம் வர பழக்கம் இருக்கா?” என்றாள் கேள்வியாய்.
“இதுவரைக்கும் இல்ல, இனிமே பழக்கமாக்கிக்கலாம்ன்னு நினைக்குறேன்” என்று சொல்ல, பதில் சொல்ல தெரியாமல் தலைகுனிந்தாள் ஸ்ருதி. முகுந்தன் மௌனமாய் அந்த நொடியை ரசித்தான்.
தன் அர்ச்சனை கூடையில் இருந்த தேங்காயை எடுத்தவள், “உடைச்சு தரேன் சாப்பிடுறீங்களா?” என்றதும், உவகையுடன், “கண்டிப்பா” என்றான்.
தேங்காய் மூடியை எடுத்தவள் தரையில் வைத்து அடிக்க போக, “ஏய் ஏய், இதென்ன நம்ம ஊரு கோவிலா? தரைல அடிச்சு உடைக்குற?” என்று சிரித்தான் முகுந்தான். தான் செய்த அசட்டு தனம் உணர்ந்த ஸ்ருதியும் சிரிக்க, “அப்போ எப்படி சாப்பிடுறது?” என்றாள் தெரியாமல்!
ஆண்களுக்கும் வெட்கம் வருமோ? என எண்ணும்படியான பாவனையில், “நீ பல்லுல கடிச்சு குடுத்தா, நான் அப்டியே சாப்பிடுவேன்” என்றான் அவள் கண்களை பார்த்து.
“ஆங்!!!” என்று விழி விரிந்து பார்த்தாள் ஸ்ருதி.
“நான்?? எப்படி??” அவள் வெகுவாய் தயங்கினாலே ஒழிய, ‘மாட்டேன்’ என்று சொல்லவில்லை!
“இதுல என்ன இருக்கு? நீ கடிச்சுட்டு குடு, நான் சாப்பிடுறேன்” மீண்டும் அவனுக்கு வேண்டியதை சற்றே அழுத்தமாய் அவன் கேட்க, மிகுந்த தயக்கத்துடனே தன் பற்களால் தேங்காயை கடித்து சிறு துண்டு எடுத்து அவனிடம் நீட்டினாள் ஸ்ருதி.
கடவுள் பிரசாதம் போல கரம் மேல் கரம் வைத்து முதுகு குனிந்து அவன் வாங்க, தயக்கம் நீங்கி வாய் விட்டு சிரித்தாள் ஸ்ருதி.
‘காதல் ஒன்னும் குத்தம் கித்தம் பார்ப்பதில்லையே, எச்சில் கூட புனிதமாகுமே!’ மெல்லிய முணுமுணுப்பாய் தேங்காயை கடித்தபடி அவன் பாட, அதை கேட்ட ஸ்ருதி “என்னது?” என்றாள் கோவமாய்!
“பாட்டுமா! பாட்டு!!” அவசரமாய் அவன் சொன்ன விதத்தில் கோவம் கூட நிற்காமல் இறங்கி ஓடிவிட, விசித்திரமான தன் செயல்களை மனதில் அலசியபடியே அடுத்த துண்டு தேங்காயை கடித்து எடுத்து அவனிடம் நீட்டினாள் ஸ்ருதி.
அதை அவன் கை நீட்டி வாங்கிய நேரம், “ஸ்ருதீதீதீ” என்ற அனல் பறக்கும் குரலில் அவளை அதட்டி அழைத்துக்கொண்டு எதிரே நின்றிருந்தான் ரகு.
ஸ்ருதி அவனை கண்டு திடுக்கிட்டாலும் பயம் கொள்ளாமல் முகுந்தன் அருகிலேயே அமர்ந்திருந்தாள். முகுந்தனோ, அவள் கொடுத்த தேங்காய்துண்டை மென்றுக்கொண்டே, “வாடி மாப்ள” என்று மனதோடு வரவேற்றான்.
“என்ன காரியம் பண்ணிண்டு இருக்க கோவில்ல?” ரகு மேலும் கத்த, “எதுக்கு அத்தான் இப்படி பொது இடத்துல கத்துறீங்க?” என்றாள் சுற்றிலும் பார்த்தபடி.
“ஹோ! இது பொது இடம்ன்னு நோக்கு இப்போதான் தெரியற்தா??” அக்னியாய் வெளிவந்த அவன் வார்த்தைகள் ஸ்ருதியை வந்தடையும் முன், அவன் தீ விழிகள் முகுந்தனை எரித்ததில், அவன் கேட்கும் அர்த்தம் உணர்ந்த ஸ்ருதி எழுந்துவிட்டாள்.
“ஏன்? நான் என்ன செஞ்சுட்டு இருந்தேன்னு இப்போ கேள்வி கேக்குறீங்க?” ரௌத்திரம் கலந்த அவள் வார்த்தைகளில் தன் பார்வையை திருப்பிய ரகு, “இதோ? இவனோட உட்காந்து கொஞ்சிட்டு இருந்தியே? அதை பார்த்து தான் கேள்வி கேக்குறேன்!!” என்றான் அவனும் சினமாய்.
அதற்க்கு பதில் சொல்லாத ஸ்ருதி, “நான் இங்க இருக்கேன்னு உங்களுக்கு எப்படி தெரியும்?” என்றாள்.
அவனிடம் சிறு தடுமாற்றம். அவன் பதில் சொல்லும்முன், “எதேச்சையா வந்தேன்னு மட்டும் சொல்லிடாதீங்கோ” என்றாள் அறிவிப்பாய்!
வேறு வழியின்றி, “வேந்தன் சார் சொன்னாரு” என்றான். ‘அவருக்கு எப்படி தெரியும்?’ என்ற கேள்வி அவளை சூழ, “நந்தினி போன்ல பேசுறப்போ சொல்லிருக்காங்க! நான் உன்னை பார்க்கலாம்ன்னு வந்தேன்” என்றான் ரகு வார்த்தைகளை மென்று முழுங்கியபடி.
முகுந்தன் வந்தபோது நந்தினி யாரிடமோ போனில் பேசிக்கொண்டிருப்பதாய் சொன்னது நினைவில் வந்தது அவளுக்கு. ‘கேள்விப்பட்ட அரைமணியில் தேடி வந்திருக்கிறான்’ என்பதை மனதில் குறித்துக்கொண்டாள்.
“எதுக்காக என்னை தேடி வந்தீங்க?” என்ற அவளது அடுத்த கேள்வியில், “நீ பேச்சை மாத்தாத ஸ்ருதி, இவனோடு உனக்கென்ன பேச்சு? உன்னை தேடி இவ்ளோ தூரம் வந்துருக்கான்னா, நீ இன்னும் இவனாண்ட பேசிண்டு தான் இருக்கியா?” என்றான் கேள்விக்கணைகளை தொடுத்து!
ஸ்ருதி ஓர் அற்ப்பனை பார்ப்பதை போல ரகுவை பார்த்தாள். ‘இன்னுமா நீ திருந்தவில்லை?’ என்ற கேள்வி அவள் கண்களில் தேங்கி நின்றது.
“இந்த சந்தேகம்! இந்த சந்தேகத்தால தான் என்னை பெத்தவங்களை இழந்து இங்க அனாதையா நிக்குறேன். உங்களை பார்க்கும்போதெல்லாம் என் அம்மாவோட கடைசி நிமிஷ கதறல் தான் எனக்கு நினைவு வருது! என் அப்பா எப்பேர்ப்பட்ட மனவருத்ததுல புழுங்கி போய் உயிரை விட்டுருப்பாரு?! உங்ககிட்ட எவ்ளோ கெஞ்சுனேன், என்னை நம்புங்கோன்னு? கேட்டேளா? உங்க சந்தேகத்தால என் வாழ்க்கையே தொலைச்சுருக்கேன், ஆனா இன்னமும் நீங்க திருந்தலை! இன்னும் எத்தனை பேரை கொல்லலாம்ன்னு காத்துண்டுருக்கேள்?” ஆவேசமாய் அவள் பேச பேச, ரகு ‘இல்லை இல்லை’ என மறுப்பை பேச முயன்றுக்கொண்டே இருந்தான்.
இறுதியில் அவள் லேசாய் ரத்த அழுத்தம் ஏறிபோனதில் தடுமாற மின்னல் வேகத்தில் வந்து அவளை தாங்கிக்கொண்டான் முகுந்தன்.
“ஸ்ருதி, டென்ஷன் ஆகாத! நீ வீட்டுக்கு கிளம்பு” என்று அக்கறையாய் முகுந்தன் சொன்னதும், “அவ என் மாமன் மக! நான் அவளை பார்த்துப்பேன், நீ கையை எடு” என்று முகுந்தன் கையை தட்டிவிட்டான் ரகு.
ரகுவை ஆத்திரமாய் உறுத்து விழித்த ஸ்ருதி பார்வையை விளக்காமல், “முகுந்தன்? நீங்க என்னை வீட்ல டிராப் பண்ணுங்க!” என்றாள். முன்தினம் முகுந்தன் இதையே கேட்டபோது மறுத்துவிட்டு சென்றவள், இன்று அவளே வந்து ‘என்னை அழைத்து செல்லுங்கள்’ என்கிறாள்.
ரகுவுக்கு ஆத்திரம் தலைக்கேறியது என்றால், முகுந்தனுக்கு உற்சாகம் கொப்பளித்தது.
“வித் ப்ளஷர்” என்ற முகுந்தன் ஸ்ருதியோடு ரகுவை கடந்து செல்ல, ஒன்றும் செய்ய முடியாத ஆக்ரோஷத்தில் சமைந்து நின்றான் ரகு.
முன்னே சென்ற முகுந்தன், வேகமாய் ரகுவிடம் ஓடி வந்தான்.
“என்ன ரகு? இப்படி ஆகி போச்சு? ஹீரோவா மாறலாம்ன்னு இருந்த உன் ப்ளான்ல யாரோ இப்படி கிருஷ்னாயிலை ஊத்திட்டாங்களே?! உச் உச் உச்…” வருத்தமான குரலில் நக்கலாய் அவன் சொன்னதில் முகுந்தனை அடிக்க கை ஓங்கினான் ரகு.
ஓங்கிய கை கீழிறங்க முடியாமல் அந்தரத்தில் நின்றது முகுந்தனின் பிடியால்!
அவன் முகமும் கடுமை கொள்ள, “ஸ்ருதியை இனி என்னைக்கும் உன்னால நெருங்க முடியாது! நெருங்கவும் விட மாட்டேன்! அவ என்கிட்ட தான் வந்து சேருவா! அதுக்காக நான் எதுவுமே செய்ய வேண்டிய அவசியம் இல்ல! நீ இதேமாறி ஏதாது செஞ்சுட்டே இரு, ஒருநாள் அவளே என்னை தேடி வந்து அவ காதலை சொல்லிடுவா” என்றவன் கடுமை மறைந்து முகத்தில் புன்னகையை பூசி, “நேத்து நான் கூப்பிட்டப்போ வரமாட்டேன்னு சொன்னவ, இன்னைக்கு அவளே வந்து என்னை கூட்டிட்டு போங்கன்னு சொல்றா! எல்லா புகழும் ரகுவுக்கே!! வரட்டா” என்றான் பிடித்திருந்த ரகுவின் கையை விலக்கிவிட்டு!!
முகுந்தன் பிடி விலகியதும், அவசரமாய் ரத்தம் கட்டியிருந்த தன் கையை தேய்த்துவிட்டுக்கொண்டான் ரகு. அவன் முகம் சினத்திலும் வலியிலும் சிவந்திருந்தது.
முகுந்தனோ, தன் கூலர்சை எடுத்து ஸ்டைலாய் கண்களில் அணிந்துக்கொண்டு “போட்டு வைத்த காதல் திட்டம் ஓகே கண்மணி” ரகுவின் காதில் விழும்படி சத்தமாய் பாடிக்கொண்டு, துள்ளலான நடையுடன் தன்னவளை வீடு சேர்க்க, காரை நோக்கி விரைந்தான்.