ஐஸ்கிரீம் சுவையையும், அதன் குளிர்ச்சியையும் தொடர்ந்து அனுபவிக்க விடாமல் இடையூறாக முகுந்தனும் கார்த்திக்கும் வந்துவிட்டார்களே என்று நந்து ஒரு கணம் நினைக்காமல் இல்லை. வேறு வழி இல்லாமல் கார்த்திக்குடன் வெளியே வந்தாள். ஆனாலும் கார்த்திக்குடன் இருக்கும் தனிமையான நேரத்தில் அவனை பற்றி அறிந்துக்கொள்ள வாய்ப்பாக அமையுமே என்ற எண்ணமும் அவளுக்கு வந்தது.
வெளியே வந்து காஃபி ஷாப்பை சுற்றி அமைக்கப்பட்டிருந்த சிறிய தோட்டத்திற்கு சென்று அங்கு இருந்த சிமெண்ட் பெஞ்சில் அமர்ந்தனர். சுற்றியும் இருந்த அகபேந்தஸ் மலர்களின் நீலமும், கேன்னா மலர்களின் சிவப்பும் கண்ணுக்கு இனிமையாக இருந்தன. காஃபி ஷாப் உள்ளிருந்து வந்த மெல்லிய இசையும் சேர்த்துக்கொண்டு அந்த இடத்தை மேலும் ரம்மியமாகியது.
நந்து ஐஸ்கிரீம் கிண்ணத்தை கையில் ஏந்திக்கொண்டு கார்த்திக்கிடம், “நான் சாப்பிட்டுக்கிட்டே பேசுறதுல உங்களுக்கு ஒண்ணும் பிரச்சனை இல்லைல” என்றாள். அவன் சிரித்துக்கொண்டே இல்லை என்பதாக தலையை மட்டும் அசைத்தான்.
முகுந்தன் தன்னை பொண்டாட்டி என்று அழைத்ததில் ஸ்ருதிக்கு முதலில் சந்தோசம் இருந்தாலும் கொஞ்சம் யோசித்து பார்க்கும் பொழுது அவளுக்கு கோபம் தலைக்கு ஏறி இருந்தது.
“வில் யூ ப்ளீஸ் ஸ்டாப் திஸ் நான்சென்ஸ். என்னை பொறுத்தவரையில் நான் அப்பா அம்மாவை இழந்து அனாதையா இருக்குறதுக்கு நீங்களும் ஒரு காரணம் தான். அதை நீங்க வேணும்னா மறந்து இருக்கலாம். நான் இன்னும் அந்த நினைவுகளில் இருந்து வெளிய வரல.” என்று கோபத்தில் கத்தினாள். சில நொடிகள் நிதானித்து அவளே தொடர்ந்தாள்.
“ப்ளீஸ் புரிஞ்சுக்கோங்க முகுந்தன். நான் இப்போ கல்யாணம் பண்ணிக்குற மனநிலையிலேயே இல்ல. அது நீங்களா இருந்தாலும் சரி இல்ல ரகு அத்தானா இருந்தாலும் சரி. என்னோட மனநிலை சரி ஆகுற வரைக்கும் நான் எதையும் யோசிக்குறதா கூட இல்ல”. அவள் கத்தியதால் எரிச்சல் அடைந்த போதும் அவள் ரகுவையும் திருமணம் செய்துக்கொள்ளும் எண்ணத்தில் இப்போது இல்லை என்பது அவனுக்கு ஒரு ஆசுவாசத்தை அளித்தது. ஒற்றை வார்த்தையில் “ஸாரி” என்றான். இருவரும் சிறிது நேரம் அமைதியாக இருந்தனர். அவளுக்கு ஏனோ அந்த சூழல் ஒரு அழுத்தத்தை கொடுத்தது.
அவன் அந்த அமைதியை உடைத்து அவளிடம் “ஸ்ருதி, உன்னை முதல் முறை பார்க்கும் போதே உன்னை நான் என் காதலியா கூட யோசிக்கல, மனைவியாவே ஏத்துக்கிட்டேன். இந்த ஜென்மத்துல எனக்கு கல்யாணம்ன்னு ஒண்ணு நடந்தா அது உன் கூட தான்னு முடிவே பண்ணிட்டேன். அதனால தான் உன் விஷயத்துல நான் கொஞ்சம் ஓவர் ரியாக்ட் பண்ணிடுறேன். நீயும் என்னை கொஞ்சம் புரிஞ்சுக்க முயற்சி பண்ணு. ப்ளீஸ்” என்றான்.
அந்த சூழல் கொடுத்த அழுத்தம் அவளுக்குள் அதிகரித்துக் கொண்டே இருந்தது. தன் எதிரில் இருந்த ஐஸ்கிரீம் கண்ணாடி குவளையில் இருந்து வழிந்து கீழிருந்த கண்ணாடி தட்டை நிறைத்துக் கொண்டிருந்ததைக் கூட அவள் கவனிக்கவில்லை. அதை ருசிக்கும் எண்ணத்தை கூட அவள் எப்போதோ இழந்திருந்தாள். உணர்ச்சியற்று அமர்ந்திருந்த அவளிடம் எதோ சொல்ல மீண்டும் “ஸ்ருதி” என்றழைத்தான் அவன்.
அதே நேரம் அவள் மொபைல் மெல்லிய புல்லாங்குழல் இசையை இசைத்து. தன்னை அந்த அழுத்தத்தில் இருந்து விடுவிக்கும் ஆபத்பாண்டவனாய் அந்த அழைப்பை எண்ணிக்கொண்டு மொபைலை எடுத்து யார் என்று பார்த்தாள். அது நந்து என்று காட்டியது. மனதில் அவளை வாழ்த்திக்கொண்டு, “சொல்லு நந்து” என்றாள்.
“ஸ்ருதி என்னோட ஐஸ்கிரீம் வேஸ்ட் ஆகிடுச்சு பா. இன்னொன்னு ஆர்டர் பண்ணிக்கட்டும்மா. நீ பேசி முடிக்குறதுக்குள்ள நான் சாப்பிட்டு முடிச்சுடுவேன். ப்ளீஸ்” என்று கெஞ்சினாள்.
‘ஐயோ நந்து என் நிலைமை புரியாமல் நீ ஏன் இப்படி பண்ணுற’ என்று மனதில் எண்ணியபடியே, “எனக்கு டயர்டா இருக்கு நான் கிளம்பப்போறேன். நீ வேணும்ன்னா இருந்து சாப்டுட்டு வா” என்றாள். ஆனாலும் நந்து விடாமல் கெஞ்சலாக “ப்ளீஸ், ப்ளீஸ், ப்ளீஸ்” என்றாள். அவளிடம் வாதாடும் மனநிலையில் இல்லாததால், ஒன்றும் சொல்லாமல் அழைப்பை துண்டித்தாள்.
முகுந்தன் அவளிடம், “என்ன ஸ்ருதி அதுக்குள்ள கிளம்ப போறியா? இன்னும் கொஞ்ச நேரம் பேசிட்டு இருக்கலாமே. நான் இப்போ தானே வந்தேன்.” என்றான்.
“இல்ல முகுந்தன் எனக்கு டயர்டா இருக்கு. கொஞ்சம் ரிலாக்ஸ் பண்ணனும். நான் கிளம்புறேன்” என்றாள்.
“என் கூட பேச உனக்கு விருப்பம் இல்லையா ஸ்ருதி. இன்றைக்காவது உன் கூட கொஞ்ச நேரம் மனம் விட்டு பேசலாம்ன்னு எவ்ளோ ஆசையா வந்தேன் தெரியுமா? நான் எதாவது தப்பா நடந்திருந்தா என்னை மன்னிச்சுடு” என்றான்.
“அதெல்லாம் தேவையில்லை. ஒவ்வொரு முறையும் தப்பு பண்ணிட்டு ஸாரி சொல்லுறதுல எந்த அர்த்தமும் இல்லை” என்ற அவளது வார்த்தைகளை தொடர்ந்து அவளது மொபைல் மீண்டும் புல்லாங்குழலை இசைத்து. நேரம் புரியாமல் நந்து சிறு குழந்தையாக நடந்து கொள்கிறாளே என்று மொபைலை மீண்டும் காதுக்கு கொடுத்தவள், “புரிஞ்சுக்கோ நந்து, நான் கிளம்புறேன். ஐம் ஃபீலிங் டயர்ட்” என்றாள்.
மறுமுனையில், வழக்கமான நந்துவின் ஆர்பாட்டமான குரலாக இல்லாமல், அமைதியாக “ஹலோ” என்றது ஒரு பெண்ணின் அழகிய குரல். இது நந்து இல்லையே என்று உணர்ந்தவள், மொபைலை முகத்திற்கு நேரே கொண்டுவந்து யார் என்று பார்த்தாள். அவளது மொபைல் பெயர் இல்லாமல் வெறும் எண்களை மட்டும் காட்டியது. தன் தவறை உணர்ந்து சின்னதாக நாக்கை கடித்துக்கொண்டாள். “ஸாரி, என் ஃப்ரெண்ட்னு நெனச்சு பேசிட்டேன். நீங்க யாரு? என்றாள்.
“நானும் உங்க ஃபிரெண்ட் மாதிரி தான் மிஸ் ஸ்ருதி” என்றது மறுமுனை. “ஸாரி, தப்பா எடுத்துக்காதீங்க நீங்க யாருனு…” அவள் முடிக்கும் முன்பே, “அதை சொல்ல தானே போறேன். அதுக்கு முன்னாடி, நீங்க ஃப்ரீயா இருக்கீங்களா? எங்கயோ கிளம்ப போறேன்னு சொன்னிங்களே? என்றாள் அந்த பெண்.
தன்னை யார் என்று சொல்லிக் கொள்ளாமலே கேள்வி கேட்டுக் கொண்டிருந்ததால் சற்று பொறுமையிழந்து “யாருங்க நீங்க?” என்றாள் அழுத்தமாக.
முகுந்தன் “யாரு ஸ்ருதி” என்றவாறே அவள் மொபைலை பறித்தான். அவள் “முகுந்தன் என்ன பண்ணுறீங்க. திஸ் இஸ் நாட் ஃபேர்” என்று சொல்லுவதை கூட பொருட்படுத்தாமல் “ஹலோ” என்றான். மறுமுனை அமைதியாக இருக்கவே மொபைலை பார்த்தான்.
இணைப்பு துண்டிக்கப் பட்டிருந்தது. அவளுக்கு அதற்குமேல் அங்கு இருக்கப் பிடிக்காமல் மொபைலை அவனிடமிருந்து பிடுங்கிக் கொண்டு காஃபி ஷாப்பை விட்டு வெளியேறினாள். நந்துவை பற்றி கூட யோசிக்காமல் விறுவிறுவென நடந்தாள்.
தற்செயலாக பார்த்த நந்து, அவள் பின்னால் “ஸ்ருதி, ஸ்ருதி என்று அழைத்துக்கொண்டு ஓடி வந்து அவளுடன் இணைந்துக் கொண்டாள். தோழியின் குணமறிந்து எதுவும் கேட்காமல் கூடவே நடந்தாள். வேகமாக நடந்துக்கொண்டிருந்த ஸ்ருதி திடீரென பிரேக் அடித்தது போல் நின்று மொபைலை எடுத்து தனக்கு அழைப்பு வந்த எண்ணிற்கு அழைத்தாள். அந்த எண் அணைத்து வைக்கப்பட்டிருந்தது. பெரிய குழப்பத்துடன் மீண்டும் நடக்க ஆரம்பித்தாள்.
முகுந்தனின் முகமோ இரும்பென இறுகிப் போய் இருந்தது.எப்படியாவது இன்று அவளிடம் பேசி தன்னுடைய திட்டத்திற்கு ஒப்புக்கொள்ள வைக்க வேண்டும் என்ற எண்ணத்துடன் வந்தவன் இப்பொழுது சுருதி பாதியில் எழுந்து செல்லவும் கோபம் அடைந்தான்.
‘ஹ…எங்கே போய்டுவா? மறுபடி ஒருநாள் கண்டிப்பா மாட்டுவா’ என்று நினைத்தவன் தன்னை உதாசீனம் செய்து விட்டு போகும் சுருதியையே வெறித்துப் பார்த்துக் கொண்டு இருந்தான்.
வீட்டிற்குள் வந்த உடன் பால்கனிக்கு சென்று பொத்தென்று அமர்ந்தாள். ஒவ்வொன்றாக எண்ணங்கள் மோதிக் கொண்டு வந்தன. முகுந்தன் ஏன் இப்படி நடந்துகொள்கிறான். அவனுக்கு என் மீது எந்த உரிமையும் இல்லாத போதே இப்படி நடந்துக் கொள்கிறவன், உரிமை இருந்தால் என்னென்ன செய்வான்.அவனை ஒரு எல்லையில் நிறுத்தி வைப்பது தான் தனக்கு நல்லது என்று எண்ணினாள். எனக்கு யாரு பேசினால் அவனுக்கு என்ன? என்ற எண்ணம் வந்த போது தான், அந்த பெண் யாராக இருக்கும், தான் அழைக்கும் போது அந்த எண் ஏன் அணைத்து வைக்கப்பட்டிருந்தது என்ற எண்ணமும் மேலோங்கியது. அந்த குரலை எங்கோ அருகில் கேட்ட உணர்வும் ஸ்ருதிக்கு ஏற்பட அது யார் என்று யோசித்து யோசித்து தலை வலி தான் மிச்சமானது. அவளின் நிலை அறிந்தவளாக நந்து க்ரீன் டீயை கொண்டுவந்து அவளிடம் நீட்டினாள்.
“தேங்க்ஸ் நந்து” என்றவாறே டீயை வாங்கிக்கொண்டாள். நந்து எதுவும் கேட்காமலே அவளிடம் நடந்ததை எல்லாம் கூறினாள். முகுந்தன் செய்தது நந்துவுக்கும் தவறாகவேப்பட்டது. அவளும், பெண்கள் எப்போதும் சுயமரியாதையுடன் இருக்க வேண்டும் என்ற எண்ணம் கொண்டவளாயிற்றே. இருவரும் சிறிது நேரம் பேசிவிட்டு தூங்க சென்றனர். ஸ்ருதி அப்போது அறியவில்லை, அடுத்த நாள் அவளுக்கு வைத்திருக்கும் பெரும் அதிர்ச்சிகளையும் ஆச்சரியங்களையும்.
மறுநாள் இனிமையாக விடிந்தது. முதல் நாள் அழுத்தம் எதுவும் ஸ்ருதியிடம் இல்லை. இன்றைய பொழுது இப்படியே இனிமையாக அமைய வேண்டினாள். ஆனால் காலம் தர வேண்டியவற்றை சரியான நேரத்தில் தந்தே தீரும்.
இன்பமோ துன்பமோ எதுவாகினும் காலத்தின் நியதியை மாற்றும் வல்லமை மனிதனுக்கு இல்லை. பால்கனியிலிருந்து அந்த நகரின் செயற்கையும் இயற்கையும் கலந்த காலை நேர அழகை ரசித்துக் கொண்டிருந்தவளின் மொபைல் புல்லாங்குழலை இசைத்து. இந்த காலை நேரத்தில் யாராக இருக்கும் என்ற எண்ணத்துடன் மொபைலை பார்த்தாள். அது எண்களை மட்டும் காட்டியது.
நேற்று அழைத்த பெண்ணாக இருக்குமோ என்ற எண்ணத்துடன், “ஹலோ” என்றாள்.
ஆம், அவள் நினைத்தது போலவே அதே பெண் தான். “குட் மார்னிங் மிஸ் ஸ்ருதி” என்றாள்.
“மொதல்ல நீங்க யாருனு சொல்லிட்டு மத்த விஷயங்களை பேசுங்க” என்றால் சற்று எச்சரிக்கை உணர்வுடன்.
“சொல்லுறேன், நான் யாருன்னு மட்டுமில்லை, உங்கள சுத்தி இருக்குறவங்க, உங்கள சுத்தி சுத்தி வரவங்க எல்லாரையும் பத்தி சொல்லுறேன். ஆனா அதை மொபைலில் சொல்ல முடியாது. நான் சொல்லுற இடத்துக்கு வர முடியுமா? அதுவும் நீங்க தனியா வரணும். ப்ளீஸ்” என்றாள்.
“நீங்க யாருன்னே தெரியாதப்போ உங்கள நம்பி நான் எப்படி வர முடியும். எனக்கு என்ன பாதுகாப்பு” என்று கேள்வி கேட்டாள்.
“நானும் ஒரு பெண் தான். நீங்க என்ன நினைப்பீங்களோ அதே மாதிரி தான் நானும் நினைப்பேன். அதனால தான் உங்களை பிரைவேட் பிளேஸ்க்கு எங்கேயும் வர சொல்லல. உங்க வீட்டு பக்கத்துல இருக்குற ட்ராம் ஸ்டாப்ல ஏறி மூணாவது ஸ்டாப்ல இறங்கி நில்லுங்க. நானே அங்க வரேன். அது பப்ளிக் இடம் தானே, உங்களுக்கு ஒன்னும் பிரச்சனை இல்லைல. நேர்ல என்னை பார்த்ததும் நான் யாருன்னு நீங்களே தெரிஞ்சுப்பீங்க” என்றாள். அந்த பெண் யாராக இருக்கும் அவள் என்ன சொல்ல வருகிறாள் என்று அறியும் ஆவலில் ஸ்ருதி “சரி” என்றாள்.
ஸ்ருதி வேகவேகமாக கிளம்பினாள். இன்னமும் தூங்கிக் கொண்டிருந்த நந்துவிடம் அவள் அதிகம் விரும்பாத இடமான கோவிலை சொல்லி, “வரியா நந்து வெயிட் பண்ணவா?” என்றாள். அவள் அரைத்தூக்கத்தில் “நீ கட்டாயம் வர சொன்னா வரேன்” என்றாள். ஸ்ருதியும் அதை தானே எதிர்பார்த்தாள்.
“இல்ல இல்ல நீ ரெஸ்ட் எடு. கோவிலுக்கு தானே நானே போயிட்டு வந்துடுறேன்” என்றவாறே மொபைலை எடுத்துக்கொண்டு வெளியேறினாள். அந்த பெண் சொல்லியபடியே அருகில் இருந்த ட்ராம் ஸ்டாப்பில் முதலில் வந்த ட்ராமில் ஏறி மூன்றாவது ஸ்டாப்பில் இறங்கி நின்றாள். உடனே அழைப்பு வந்தது.
“ஸ்ருதி உங்களுக்கு ரைட் சைடுல கொஞ்சம் தள்ளி இருக்குற புக் ஷாப்க்கு வாங்க” என்றாள் அந்த பெண்.
அந்த கடையினுள் இவள் நுழையவும், “வாங்க ஸ்ருதி. எப்படி இருக்கீங்க” என்றபடியே அருகில் வந்து நின்றவளை பார்த்ததும் “ஹே நீங்க எப்படி இங்க” என்றாள் ஆச்சரியத்தில்.
“நான் யாருன்னு தெரியுதா?” என்ற கேள்விக்கு “உங்கள தெரியாத. ரெண்டு வருஷத்துல மறந்து போய்டுவேனா என்ன? நீங்க மிஸ்டர் முகுந்தனோட பி.ஏ, மிஸ் சுதா தானே. நீங்க யாருன்னு சொல்லி இருந்தா கொஞ்சம் ரிலாக்ஸ்டாவே வந்திருப்பேனே” என்றாள்.
“இல்ல ஸ்ருதி சூழ்நிலை அப்படி. அதனால தான் சொல்லல. உங்ககிட்ட நிறைய பேச வேண்டி இருக்கு. வாங்க உட்காரலாம்” என்று அருகிலிருந்த பெஞ்சுக்கு அழைத்து சென்றாள்.
“உங்ககிட்ட நல்ல பேரு வாங்குறதாலோ, இல்ல உங்கள ஏமாத்துறத்தலோ எனக்கு எந்த பலனும் இல்ல. அது உங்களுக்கே தெரியும். அதனால நான் சொல்லப் போற விஷயங்களை டென்ஷன் ஆகாம கொஞ்சம் பொறுமையா கேளுங்க” என்ற சுதாவின் வார்த்தைகளே அவளுக்குள் ஒருவித பயத்தை உண்டு பண்ணியது.
“நான் நேரடையாவே விஷயத்துக்கு வரேன், முகுந்தனும், கார்த்திக்கும் இங்க வந்துருக்குறது ஒரு பெரிய ப்ளானோட தான். நீங்க வீட்டை விட்டு வெளிய இருக்குற ஒவ்வொரு நிமிஷமும் கண்காணிக்கப்படுறீங்க. நீங்க என்ன பண்ணினாலும் அடுத்த நிமிஷம் அவங்களுக்கு தெரிஞ்சுரும். அதனால தான் அவங்க கொஞ்சமும் எதிர்பார்க்காத பப்ளிக் ட்ரான்ஸ்போர்ட்ல உங்கள வர சொன்னேன்.” சுதா சொல்லவும், சொல்லிவைத்து போல ஒவ்வொரு முறையும் அவள் இருக்கும் இடமறிந்து முகுந்தன் வந்தது நின்றது அவள் நினைவுக்கு வந்தது. ஸ்ருதி அவ்வாறு எண்ணிக்கொண்டிருக்கும் போதே அவள் மொபைலுக்கு அழைப்பு வந்தது. நந்து தான் அழைத்திருந்தாள்.
“என்ன ஸ்ருதி, கோவிலுக்குன்னு சொல்லிட்டு ட்ராம்ல ஏறி போயிருக்க, என்றாள். ஒரு நொடி ஸ்ருதி அதிர்ந்தே போனாள். சுதா சொல்லியது போல் தான் கண்காணிக்கப்படுவது உண்மை தான் என்று எண்ணியப்படியே, “உனக்கு எப்படி தெரியும் நந்து” என்றாள்.
“கார்த்திக் தான் கால் பண்ணினார். நீ ட்ராம்ல போனதை பார்த்தாராம். அதனால தான் நீ எங்க போயிருக்க, கூட நான் போகலியான்னு கேட்டாரு. சரி, இப்போ நீ எங்க இருக்க?” என்றாள்.
“நான் ட்ராம்ல ஏறினத பார்த்தவர், நீ கூட வறியான்னு பார்க்கலியாமா?” என்றாள் கடுப்புடன்.
“அதானே. எனக்கு தோணல பாரேன். அதுக்குத்தான் நீ வேணும்” என்றாள் நந்து. “எப்பவும் கேப்ல தானே போறோம், அதனால தான் ஒரு சேஞ்சுக்கு ட்ராம்ல வந்தேன். சீக்கிரம் வந்துடுறேன்” என்றவாறே அழைப்பை துண்டித்தாள் ஸ்ருதி. சுதா தொடர்ந்தாள்.
“நேத்து ஃபோன்ல சொல்ல நெனச்சு தான் கால் பண்ணினேன். ஆனா நீங்க முகுந்தனோட பேர் சொன்னதும் கட் பண்ணிட்டேன். உங்க பக்கத்துல யாரு இருக்காங்கன்னு தெரியாம ஃபோன்ல பேசுறது பாதுகாப்பு இல்லனு தான் நேர்ல வர சொன்னேன்”. அவளே தொடர்ந்தாள்.
“ஸ்ருதி, முகுந்தனோட குணமே இது தான். தனக்கு வேணும்ன்னு நெனச்சுட்டா எந்த அளவுக்கும் இறங்குவான். வேண்டாம்னு நெனச்சா இல்லாமலே பண்ணிடுவான். இப்போ அவனோட பிளான் உங்கள அடையுறது தான். அந்த வெறிக்கு பெயர் காதல்னு அவனே சொல்லிக்கிறான். உங்கள அடைய ரெண்டு வருஷமா பிளான் பண்ணுறான். முடியலைன்னா அழிக்கவும் தயங்கமாட்டான்” சுதா சொல்லும் போதே ஸ்ருதி நடுங்கினாள்.
நான் சும்மா சொல்லுறேன்னு நினைக்க வேண்டாம் இந்த வீடியோவை பாருங்க” சுதா காட்டிய வீடியோவை பார்த்தவள் அதிர்ந்தாள்.
முகுந்தன் வேண்டுமென்றே அவளது புடவை முந்னையை பூட்ஸ் காலால் அழுத்தி பிடித்து அவள் விழும் வரை காத்திருந்து அணைத்தது போல தாங்கி பிடித்துக்கொள்கிறான்.
“இந்த வீடியோவை பாருங்க” என்று இன்னொன்றை காட்டினாள். முகுந்தன் நிறுவனத்திற்கு எதிரான அந்த நாளிதழின் ஐடி கார்டை அணிந்திருக்கும் ஒருவனுடன் கார்த்திக் பேசிக்கொண்டிருக்கும் வீடியோ அது. அதில் கார்த்திக் கையில் அன்று பேப்பரில் வந்த அதே ஃபோட்டோ இருக்கிறது. அதையும் ஒரு கட்டு பணத்தையும் அவனிடம் கொடுத்து, “ஒரு வேலையும் பார்க்காமல் ரெண்டு இடத்துல வருமானம் பார்க்குற ஒரே ஆள் நீ தான். இந்த கண்டென்ட்க்கு உங்க ஆஃபிஸ்ல இருந்தும் உனக்கு ஸ்பெஷல் அளொவென்ஸஸ் கிடைக்கும்ல” என்று சொல்லி சிரிக்கிறான்.
சுதா இன்னும் ஒரு வீடியோவை காட்டுகிறாள். அதில் முகுந்தன் முழு போதையில் உளறுகிறான். “ரகு உன்ன ஸ்ருதி பக்கத்துல நெருங்க கூட விட மாட்டேன். அவ எனக்கு தான். அவள யாருக்கும் விட்டுக்கொடுக்க மாட்டேன்” என்று என்னவெல்லாமோ கண்களில் வெறியுடன் சொல்லிக் கொண்டிருந்தான். அனைத்தையும் பார்த்தவள் சப்தநாடிகளும் அடங்க உறைந்தே போனாள். அவளுக்கு தண்ணீர் எடுத்து தந்து குடிக்க சொன்னாள் சுதா. “ஐயோ இந்த அளவுக்கு மோசமானவனா” என்றாள ஸ்ருதி். பதிலுக்கு சுதா “அவன் இதைவிடவும் மோசமானவன்” என்றாள்.
“இன்னொரு முக்கியமான விஷயம்” சுதா சொல்லவும், அவள் மனது இன்னுமா என்று எண்ணியது. “உங்கள பத்தின பல விஷயங்கள் முகுந்தன் கிட்ட போறதுக்கு நந்துவும் ஒரு காரணம். உங்களுக்கு தெரியாமல் அவங்க எல்லாத்தையும் கார்த்திக்கிட்ட சொல்லிடுறாங்க” என்று அவள் சொல்லியதும் ஸ்ருதிக்கு அப்பாடா புதிதாக எதுவும் இல்லை என்று இருந்தது. அது தனக்கு தெரியும் என்றும், அதை நந்துவே சொல்லியதையும் ஸ்ருதி, சுதாவிடம் தெரியப்படுத்தினாள். சுதாவுக்கும் நந்து மீது ஒரு நம்பிக்கை வந்தது.
இன்னொரு விஷயம், என்று சுதா ஆரம்பித்தாள். ” நான் இப்போ உங்க விஷயத்துல தலையிட்டதுக்கு உங்க அத்தான் ரகு தான் முக்கிய காரணம்”. இதை அவள் சொல்லியதும் ஒருவேளை இது ரகுவின் நாடகமா என்று ஸ்ருதிக்கு தோன்றியது.
“இப்போ கூட நான் பேசுறது ரகுவோட பிளான்னு நீங்க நினைக்கலாம். ஆனா, இப்போ நான் உங்ககிட்ட பேச வந்தது ரகுவுக்கு தெரியாது’. என்றவள் , “நானும் அவரும் ஒண்ணா ஜெர்னலிசம் படிச்சோம். அவரை நான் ஒருதலையா காதலிச்சேன். அவர்கிட்ட அதை சொன்னபோது தன்னோட மாமா பெண்ணை விரும்புறதா சொல்லிட்டாரு. அதனால நான் அவரை விட்டு விலகிட்டேன். அதுக்கு பிறகு இப்போ ஒரு பத்து நாளைக்கு முன்னாடி தான் பார்த்தேன். அவருக்கு கல்யாணம் ஆகியிருக்கும்னு நெனச்சேன். அப்புறம் தான் அவரோட மொத்த கதையும் தெரிஞ்சது…. அப்போகூட அவர் மாமா பொண்ணு ஸ்ருதியும் முகுந்தன் அடைய பிளான் பண்ணிட்டு இருக்குற பாடகி ஸ்ருதியும் ஒண்ணுனு எனக்கு தெரியாது. ரெண்டு நாளைக்கு முன்ன ரகுகிட்ட இவ்ளோ நாளா வெயிட் பண்ணுற அளவுக்கு அப்படி என்ன இருக்கு உங்க மாமா பொண்ணுகிட்ட அவளை பார்க்கணும் போட்டோ அனுப்புனு கேட்குற வரை அந்த ரெண்டு பேரும் ஒருத்தர் தான்னு நினைக்கல”. அவள் சொல்லச் சொல்ல ஸ்ருதி எதை நம்புவது எதை நம்ப கூடாது என்று புரியாமல் குழம்பினாள்.
ஸ்ருதி இனி என்ன செய்ய போகிறாள். சுதாவும், நந்துவும் அவளுக்கு பலமா, பாதகமா??? அதே நேரம் கார்த்தி நந்துவுடன் பழகுவது அவள் மீதிருக்கும் அன்பினாலா அல்லது வெறுமனே என்னைப் பற்றிய தகவல்களை சேகரிப்பதற்காகவா? குழம்பித் தவித்தது பெண் மனம்.
தொடரும்…