தீரா மயக்கம் தாராயோ 22

0
724

சென்னையில் மிகவும் பரபரப்பாக இயங்கிக்கொன்டிருந்த அந்த பிரபல தனியார் மருத்துவமனையின் பின்புறம் உள்ள பூங்காவில் தனது மகனுடன் விளையாடிக் கொண்டிருந்தான் ரகு.

“பப்பா நான் இங்க இருக்கேன்.. இங்க இருக்கேன்..” என அவனது கால்களையே சுற்றிக்கொண்டிருந்தான் மூன்று வயதான “ரிஷி “.

கண்களில் கட்டிய துணியின் இடைவெளியில் மகன் எங்கே நிற்கிறான் என்று தெரிந்தும் தேடுவது போல் பாவனை செய்து கொண்டிருந்தான் தந்தையவன்.

“ரிஷி விளையாடிது போதும் சாப்பிடவா டைம் ஆச்சு” என அழைத்தபடியே வந்தாள் சஞ்சனா ரிஷியின் தாய்.

“ம்மா நா மாட்டேன், இன்னும் பப்பா என்ன கண்டுபிடிக்கலை.. பப்பா கண்டுபிடிச்ச பிறகு தான் சாப்பிட வருவேன்” என அடம்பிடித்தான் சிறுவன்.

“ரிஷி கண்ணா.. பாட்டி ஊட்டி விடுறேன், வந்து சாப்பிட்டு பப்பா கூட விளையாடுடா என் தங்கமே..” என அம்பிகை வந்து அழைத்ததும் ஓடி வந்து பாட்டியின் கால்களை கட்டிக்கொன்டான் ரிஷி.

ரிஷியை தூங்கிக்கொண்டு அம்பிகை உள்ளே சென்ற பின்னும் அவனை தேடிக்கொண்டிருந்த ரகுவை பார்க்க பாவமாய் இருந்தது சஞ்சனாவிற்கு.

தீவிரமாய் தேடிக்கொண்டிருந்தவன் அருகே சாய்ந்து கிடந்த பூந்தொட்டியில் தெரியாமல் கால்களை இடித்து அவன் தடுமாறி விழ, அவசரமாய் அவனது கைகளை பிடித்து நிறுத்திய சஞ்சனாவும் அவனுடனே சேர்ந்து சரிந்தாள்.

அவசரமாய் தனது கண்களில் கட்டியிருந்த துணியை அவிழ்த்தபடி எழுந்தவன் உடனடியாக சஞ்சனாவையும் கை கொடுத்து தூக்கிவிட்டவன் அமைதியாக அங்கே இருந்த சிமென்ட் பெஞ்சில் அமர்ந்தான்.

இவ்வளவு நேரம் குழந்தையுடன் இருக்கும் வரை இருந்த மனநிலை தற்போது சஞ்சனாவை பார்த்ததும் முற்றிலும் மாறிவிட்டது..

இன்று இந்த சஞ்சனா ரகுவின் மனைவி ஆனால் அந்த நினைப்பே அவனுக்கு கசந்தது..

அவனை பொறுத்தவரை சஞ்சனா தனது பெற்றோரின் விருப்பத்திற்க்காக தான் திருமணம் செய்த ஒரு பெண் அவ்வளவே..

அவன் இன்றும் தன்னை ஸ்ருதியின் காதலனாகவே தான் எண்ணிக்கொண்டிருந்தான்..

அவன் அருகில் அமர்ந்த சஞ்சனா அவன் முகத்தை பார்க்காமலே “சாரி” என ஒற்றை வார்த்தையை மட்டும் கூறினாள்.

அந்த சாரி எதற்கு என அவனுக்கும் தெரியும் அவளுக்கும் தெரியும். ஆனால் அந்த சாரியை ரகுவின் மனம் ஏற்கவில்லை.

“இங்க பார் சஞ்சனா சரியோ தவறோ எனக்கு இது பிடிச்சிருக்கு உனக்காக நான் இதை கஷ்டப்பட்டு ஏத்துக்கிட்டேன்னு மட்டும் நினைக்காத, இப்ப மட்டும் இல்லை எப்பவுமே எனக்கு பிடிக்காத விசயத்தை யாராலும் செய்ய வைக்க முடியாது.

இது என் வாழ்க்கை புத்தகத்தின் புது அத்தியாயம் சஞ்சனா இவ்வளவு நாளா இப்படி ஒரு வாழ்க்கை இருக்குனு தெரியாமலே இருந்துட்டேன்.

என்னோட சுயநலத்தால இதுவரை எவ்வளவோ கஷ்டத்தை அனுபவிச்சிட்டேன். என்னை சுத்தி உள்ளவங்களுக்கும் கஷ்டத்த கொடுத்துட்டேன். இனிமேல் என்னை சுத்தி உள்ளவங்களுக்காக வாழப்போறேன் சஞ்சனா. அதனால என்னை பற்றி எதுவும் நினைக்காம நீ எப்பவும் போல இரு.
சரி, சரி ரொம்ப நேரம் ஆகிருச்சி நீ போய் ரிஷி சாப்ட்டானானு பார்த்துட்டு வா” என ரகு கூற

“ஆமா.. ஆமா.. அம்மா பாவம் ரொம்ப படுத்திருவான் அவங்கள… நான் போறேன் நீங்களும் சீக்கிரமா வந்து சாப்பிடுங்க” என சஞ்சனா உள்ளே சென்றுவிட ரகுவின் மனமோ ஒரு வாரம் பின்னால் சென்றது.

கடைசியாக கோவாவில் முகுந்தனிடம் விசாரித்துவிட்டு கார்த்திக் சொன்ன தகவல் உண்மையாக தான் இருக்கும் என்ற நம்பிக்கையில் தான் உடனடியாக விமானம் மூலம் சென்னை கிளம்பினான்.

அவனது அந்த விமான பயணம் அவன் வாழ்க்கையை புரட்டிப்போடுமென்று அவன் நினைக்கவில்லை.

மனம் முழுவதும் ‘ஸ்ருதி.. ஸ்ருதி..’ என புலம்ப அவன் காதலி தற்போது வேறு ஒருவனின் மனைவி என தெரியாமலே அவளை காணும் ஆவலுடன் சென்னை விமான நிலையத்தில் வந்து இறங்கினான்.

அதே நேரத்தில் வேறு ஏதோ ஒரு வெளிநாட்டில் இருந்து தனியாக வந்த இளைஞன் ஒருவன் அது விமான நிலையம் என்றும் பாராமல் “அய்யோ அப்பா என்னை விட்டு போயிட்டீங்களே” என தரையில் மண்டியிட்டு அழுதுகொண்டிருந்தான்.

அவன் அழுததை பார்த்த காவலர்கள் சிலர் அவனிடம் விசாரித்துக் கொண்டிருந்தனர். அப்பொழுது அவனை அடையாளம் கண்டுகொண்ட அவனது நண்பர்கள் காவலர்களிடம் விபரம் கூறி அவனை அழைத்துச்சென்றனர்.

விசயம் இது தான் அந்த பையன் வெளிநாட்டில் இருக்கும்போது அவனது தந்தைக்கு உடல் நிலை சரியில்லாமல் மருத்துவமனையில் சேர்த்துள்ளனர். ஆனால் அவன் அங்கே லீவு கிடைத்து இங்கே வந்து சேரும் முன் அவன் தந்தை இந்த உலகை விட்டே சென்றுவிட்டார்.

இதை பார்த்த ஒரு காவலர் “இந்த காலத்து பசங்க ஏன்தான் இப்டி இருக்காங்கனு தெரியலை, பெத்தவங்கள தனியா தவிக்க விட்டுட்டு எந்த நாட்டுல போய் என்ன சம்பாதிச்சு என்ன பிரயோஜனம்.”

“ஒண்ணு பணத்தை தேடி ஓடுறாங்க, இல்லை காதல்ங்குற பேர்ல பொண்ண தேடி ஓடுறாங்க. இந்த நேரத்துல அவங்களோட பெத்தவங்க பாவம் தனிமைல கிடந்து தவிக்கிறாங்க இதெல்லாம் எப்போ தான் மாறுமோ..” என அவர் கூற

அவர் சொன்ன அத்தனையும் தனக்கே சொன்னது போல் துடித்துப்போனான் ரகு. உண்மை தானே ‘படிப்பு முடிந்ததும் ஊர் ஊராய் சுற்ற ஆரம்பித்தவன் இன்று வரை பெற்றோரை மறந்து தானே சுற்றிக்கொண்டிருக்கிறாய்..’ என அவன் மனமே அவனுக்கு எதிராய் திரும்பியது.

‘ஆம் அவர்களின் சந்தோஷம் நான் மட்டும் தானே, ஆனால் எனது சுயநலத்தால் இன்று வரை அவர்கள் நிம்மதி இன்றி தவிக்கிறார்கள் தான்’ என அவன் மனம் சொன்ன கருத்தை ஏற்றுக்கொண்டவன், இனிமேலாவது அவர்கள் சந்தோஷத்திற்காக வாழ்வது என முடிவெடுத்த உடனே ஸ்ருதியை தேடும் பணியை தற்காலிகமாக ஒத்தி வைத்து உடனே தனது வீட்டுக்கு சென்றான்.

தனது பெற்றோர்களுக்கு இன்ப அதிர்ச்சியாய் இருக்கட்டும் என சொல்லாமல் சென்றவனுக்கு தெரியாது தனக்கே அங்கே ஓர் அதிர்ச்சி காத்திருப்பது.

தனது வீட்டிற்கு சென்றதும் தான் தெரிந்தது வீட்டில் யாரும் இல்லை என்பது அப்பொழுது தான் தன் தந்தைக்கு கால் செய்த போது பேசியதோ “டாக்டர் சஞ்சனா “.

சஞ்சனா சொன்ன விசயங்கள் நம்ப முடியாததாக இருந்தாலும் நம்பிதானே ஆகவேண்டும்.

உடனடியாக அந்த மருத்துவமனையில் போய் விசாரித்து தன் பெற்றோர்களை பார்க்கும் வரை அவன் உயிர் அவனிடம் இல்லை.

செயற்கை சுவாசத்தின் மூலம் கட்டிலில் கண்மூடி படுத்திருந்த தந்தையை பார்த்ததும் தன் இதயம் ஒரு முறை நின்று துடித்ததை உணர்ந்தான் ரகு.

அதன் பிறகு தான் தந்தைக்கு நடந்த கொடூரம் தெரிய வந்தது ரகுவிற்கு இரண்டு வருடம் முன்பு நடந்த அந்த சம்பவத்திற்கு பிறகு ரகு பெற்றவர்களின் நிலையை கவனத்தில் கொள்ளாமல் ஸ்ருதியை தேடுவதிலயே தனது நேரத்தை செலவிட்டாலும் மேலும் தங்களின் பெற்றோர்கள் வருத்தத்தை காணமுடியாமல் அவர்களின் சந்தோசத்திற்காவது எப்படியும் ஸ்ருதியை சமாதான படுத்தும் வரை பெற்றோரை சந்திப்பதைத் தவிர்த்து வந்தான்.

ஆனால் அவன் பெற்றோர்களுக்கோ தன் மகன் வாழ்க்கை இப்படி ஆகிவிட்டதே என்ற கவலை ரகுவின் அம்மா அம்பிகை கூட ஓரளவு நடந்த சம்பவத்தை ஜீரணிக்க பழகியிருந்தாள். ஆனால் அவன் தந்தை ஜீவானந்தமோ மிகவும் உடைந்து போனார்.

என்ன இருந்தாலும் இறந்தது அவரின் சொந்த தங்கையும் தங்கை கணவரும் அல்லவா மேலும் தனது மகனின் பிடிவாத குணமும் தெரிந்தவர். ஸ்ருதி கிடைக்கும் வரை போராடுவான் என தெரியும். ஸ்ருதியும் தனது தன்மானத்தை விட்டுக்கொடுத்து தனது மகனுடன் இணைவாள் என அவருக்கு நம்பிக்கை இல்லை. இப்படி எந்நேரமும் பல சிந்தனையிலே அவருக்கு பல உடல் வியாதிகள் அழையா விருந்தாளியாக வந்து விட்டது.

அந்த நேரத்தில் தான் அவர் வழக்கமாக செல்லும் மருத்துவமனைக்கு தனது ஒரு வயது குழந்தையுடன் புதிதாக வேலைக்கு சேர்ந்திருந்தாள் டாக்டர் சஞ்சனா. எல்லா நோயாளிகளையும் அன்புடன் கவனித்து கொண்ட அவள் மீது ஒரு இனம்புரியாத பாசம் ஏற்பட்டது அந்த தம்பதியினருக்கு.

மேலும் அவளை தங்களது வீட்டுமாடியிலே தங்கவைத்து அவள் மருத்துவமனை சென்ற நேரங்களில் அவளது குழந்தை ரிஷியையும் தாங்களே கவனித்துக் கொண்டனர்.

தந்தை இல்லாத அந்த குழந்தை ஜீவானந்தம் அம்பிகை தம்பதிகளை தாத்தா பாட்டியாக ஏற்றுக்கொண்டதுடன் அந்த வீட்டில் உள்ள ரகுவின் புகைப்படத்தை பார்த்து அவன் யார் என்று கேட்க அந்த வீட்டில் உள்ள வேலைக்கார பெண் விளையாட்டாக “உனக்கு அப்பாடா குட்டி பையா” என கூற அன்றில் இருந்து ரகுவை தனது அப்பாவாக எண்ணி பழகி விட்டான்.

இந்த நேரத்தில் தான் ஜீவானந்தத்திற்கு ஒரு சின்ன ஆப்ரேசன் நடந்து அவர் மருத்துவமனையில் இருக்கும் போது தான் ரகு கோவாவில் இருந்து அந்த மருத்துவமனைக்கு தேடி வந்தது.

அதன் பின்புதான் சஞ்சனாவை பற்றி ரகு தெரிந்து கொண்டது. மேலும் இவ்வளவு நாள் தன்னை போட்டோவில் பார்த்து விட்டு நேரில் பார்த்ததும் அப்பா என தனது காலை கட்டிக்கொண்ட அந்த அழகு குழந்தையை பார்த்ததும் கவலை எல்லாம் மறந்து போனான் ரகு.

தான் இல்லாத நேரத்தில் தன் பெற்றோரை நன்றாக கவனித்த சஞ்சனா அவன் கண்களுக்கு தேவதையாக காட்சியளித்தாள். (ஆனால் இந்த என்னம் வரும்போது அவளை திருமணம் செய்யும் நோக்கம் சிறிது கூட இல்லை அவனுக்கு)
மேலும் அவளது கடந்த காலத்தை கேள்விபட்டதும் அவளது கணவனின் மரணத்தை பற்றி விசாரிக்கும் போது ரகு உண்மையிலேயே அதிர்ந்து போனான். அதற்கு காரணம் “புவியரசு”.

சஞ்சனாவின் கணவர் “டாக்டர் தருண்” ன் மரணத்திற்கு காரணமானவன் புவியரசு ஐ.பி.எஸ் தான் ஸ்ருதியின் கல்லூரி தோழன் என தன்னிடம் வந்து பிரச்சினை செய்த அதே புவியரசு.

புவியரசு நினைப்பு வந்ததும் தற்போதைய அவன் நிலை என்ன என நினைக்கும் போது தான் ஸ்ருதியின் நியாபகம் வந்தது. தனக்கு தெரிந்த விமானநிலைய அதிகாரி ஒருவரிடம் விசாரித்ததில் புவியரசுவின் தற்போதைய பாரீஸ் பயணம் தெரிய வந்தது. அது தெரிய வந்தாலும் அவன் மனம் அப்படி இருக்காது என சொன்னாலும் அவன் மூளை அப்படி தான் இருக்கும் என அடித்து சொன்னது. கடைசியில் அவன் மூளை சொன்னது போலவே புவிக்கும் ஸ்ருதிக்கும் திருமணம் முடிந்திருந்தது. ரகுவிற்கு அதிர்ச்சிக்கு பதிலாக ஒரு வித விரக்தியே தோன்றியது. ஆனாலும் நேசம் கொன்ட மனது உள்ளுக்குள் ஊமையாய் அழுதது..

‘அதிகமான அன்பு வைத்ததை தவிர நான் உனக்கு என்னடி பாவம் செய்தேன்? நீ என்னிடம் ஒரு வார்த்தை கூட சொல்லாமல் வேறு ஒருவனை திருமணம் செய்யும் அளவுக்கு நீ சென்றுவிட்டாய் என்றால் என் நேசத்தில் குறையா… இல்லை உன் நேசத்தில் குறையா ஸ்ருதி..

இப்பொழுதும் அவளுக்கு திருமணம் நடந்தது கனவாக இருக்கக் கூடாதா என அவன் மனம் ஏங்கியது..

திருமணம் ஆனால் என்ன என்றும் அவள் என் ஸ்ருதி தான் இப்பொழுது கூட ஒன்றும் ஆகவில்லை அவளை எங்காவது ஆள் இல்லா தேசத்துக்கு தூக்கி சென்றுவிடலாமா என்றும் கூட யோசித்துவிட்டான்..

ஆனாலும் ஒன்றும் செய்ய முடியவில்லையே..அவளுக்காக தான் உயிர் பிரியும் வரை காத்திருக்க தயார் தான் ஆனால் தன் தந்தையின் நிலைமை..?

அவர் நாட்களை எண்ணிக் கொன்டிருக்கிறாராமே ..தன் உயிர் எப்போது வேண்டுமானாலும் போகும் என்ற நிலைமையில் கூட என் வாழ்வை பற்றி யோசிக்கும் அவருக்காக ஸ்ருதி மீதான தன் காதல் உனர்வுகளை எல்லாம் தன் மனதின் ஒரு ஓரத்தில் பாதுகாப்பாய் ஒதுக்கி வைத்தான்..

தன் தந்தையின் விருப்பத்தை நிறைவேற்ற முடிவெடுத்தான்..ஆம் அவன் தந்தையின் விருப்பம் அவனுக்கும் சஞ்சனாவுக்கும் திருமணம் செய்து வைப்பது..

நிச்சயம் தற்போது தன்னால் ஸ்ருதியை மறந்து சஞ்சனா உடன் வாழ்க்கையை ஆரம்பிக்க முடியாது என தெரியும் இருந்தும் தன் தந்தைக்காக தனது நிலையை சஞ்சனாவிடம் எடுத்து சொல்லி அவள் சம்மதித்தால் மட்டுமே.. இந்த திருமணம் நடக்கட்டும் என முடிவெடுத்து தனது புது வாழ்க்கையை வாழ ஆயத்தமாகி விட்டான்.
இந்த முடிவு எடுத்ததும் அவனது பெற்றோர்கள், சஞ்சனா, ரிஷி நான்கு பேரும் இருந்த ஒரு நேரத்தில் சஞ்சனாவின் கண்களை பார்த்து நேரடியாகவே கேட்டான்.

“கடைசி வரை ரிஷிக்கு உண்மையான அப்பாவாகும் வாய்ப்பை எனக்கு கொடு சஞ்சனா” என்று அவன் அவ்வாறு கூறியது அவன் திருமனத்திற்க்கு சம்மதம் தெரிவித்துவிட்டான் என எல்லாருக்கும் புரிந்தது..

ஆனாலும் அவன் ரிஷிக்கு அப்பா வாகும் வாய்ப்பை குடு என ரகு கேட்டது அவன் இன்னும் ஸ்ருதியை மறக்கவில்லை என்ற செய்தியை சஞ்சனாவிற்க்கு அப்பட்டமாக கூறியது..

மேலும் ரகு அவன் பெற்றோரின் முன்பு தான் இவ்வாறு கூறினான் அதன் பிறகு அவன் சஞ்சனாவிடம் கூறியவிதமோ வேறாக இருந்தது..

“இங்க பாரு சஞ்சனா எனக்கு இந்த விசயத்தை எப்படி சொல்றதுனு தெரியலை.. ஆனால் ஒண்ணு மட்டும் எனக்கு புரியுது நீ மட்டும் இல்லை வேற எந்த பொண்ணு வந்தாலும் சரி எனக்கு மனைவி ஆகுற தகுதினா அது ஸ்ருதிக்கு மட்டும் தான்..இப்பவும் நான் என்னோட அப்பா ஆசைக்காக தான் உன்னை கல்யாணம் பண்ணிக்குறதுக்கு சம்மதம் சொன்னேன் ..

ஆனால் நிச்சியமா உனக்கு நல்ல கணவனா என்னால இருக்க முடியாது சஞ்சனா நீ இப்போ எப்டி இருக்கியோ அதே மாதிரி எங்க அப்பா அம்மாவுக்கு மருமகளா இருந்துக்கோ ஆனால் எனக்கு பொண்டாட்டியா மட்டும் இருக்க முடியாது ..இதுக்கு மேல உன்னோட விருப்பம்” என ஒரு பெரிய குண்டை தூக்கி சஞ்சனாவின் தலையில் போட்டுவிட்டு சென்றுவிட்டான் ..

சஞ்சனாவும் அவன் பெற்றோருக்காக அவன் மனதை புரிந்துகொன்டே இந்த திருமணத்திற்கு சம்மதித்தாள்..

ஸ்ருதியின் மீது கொண்ட தீராத காதலே அவனை இந்த அளவுக்கு பேசவைக்கிறது என புரிந்து கொண்டாள்.

யாருக்கும் அழைப்பு இல்லாமல் அமைதியாக பதிவு திருமணமே செய்துகொண்டனர் இருவரும்..

பழைய நினைவுகளில் மூழ்கி இருந்த ரகு மீண்டும் உள்ளே வரும்பொழுது எதையோ பார்த்து பயந்தவள் போல வெளியே வந்தாள் சஞ்சனா. அவளின் கண்களை பார்த்தே அவளின் கலக்கத்தை அறிந்த ரகு அவளை மீண்டும் உள்ளேயே அழைத்துச் சென்றான். உள்ளே சென்ற ரகுவிற்கு பெரும் அதிர்ச்சி தரும் விதமாக ஸ்ருதி தனது கணவன் புவியரசுனுடன் இருந்தாள். அவர்கள் இருவரும் ஜீவானந்தம் மற்றும் அம்பிகையுடன் சம்பிரதாயமாக சில வார்த்தைகள் பேசிக் கொண்டிருக்க ரகு அவர்களிடம் ஒரு வார்த்தை கூட பேசினானில்லை. அவனது கவனம் எல்லாம் சஞ்சனாவின் கலங்கிய விழிகளிலேயே இருந்தது.

அவள் கலக்கம் புவியை பார்த்தவுடன் வந்தது என்று புரிந்துகொன்டான் ரகு.. புவியை பார்த்து முறைத்தான் ரகு..

அதன் பிறகு அங்கே இருந்த யாரும் ரகுவின் கண்களுக்கு தெரியவில்லை உடனே சஞ்சனாவின் அருகே சென்று தனது தோளோடு அணைத்து பிடித்து கொன்டான். அவன் அவ்வாறு அணைத்ததுமே சஞ்சனாவின் கண்களில் கண்ணீர் வடிய ஆரம்பித்தது. அதுவரை அமைதியாக விளையாடிக் கொண்டிருந்த ரிஷி அம்மா அழுகிறாள் என தெரிந்ததும் தானும் அழ ஆரம்பித்து விட்டான். அதன்பின்பு அழும் ரிஷியை ஒரு கையில் தூக்கி கொண்டும் மற்றொரு கையால் சஞ்சனாவை அணைத்துக் கொண்டும் அங்கிருந்து வெளியேறினான் ரகு.

கடைசி வரை ரகு ஸ்ருதியுடன் பேசவேயில்லை. ஸ்ருதிக்கும் அதற்கு மேல் அங்கே இருக்க மனம் இல்லை. உடனடியாக தனது மாமியுடனும், மாமாவிடமும் சொல்லி விட்டு அங்கே இருந்து தன் கணவனுடன் கிளம்பி விட்டாள். அவர்கள் இருவரும் கீழிறங்கி வரும் வழியில் மருத்துவமனையின் பின்புறம் உள்ள பூங்கா தெரிந்தது. அங்கே ரிஷி அருகே விளையாடிக்கொண்டிருக்க சஞ்சனா இன்னும் அழுதுகொண்டிருந்தாள்..

ரகு கோவமாக சஞ்சனாவிடம் பேசிக்கொண்டிருப்பது தெரிந்தது ஆனால் அவன் கோவம் தன் மீது தான் என புவியும் ஸ்ருதியும் தாங்கள் மனதில் நினைத்துக்கொண்டனர்..

ஸ்ருதியும், புவியும் வீட்டுக்கு சென்றதும் புவி, விக்கியுடன் வெளியே சென்று விட்டான். புவிக்கு முதலி்ல் அங்கே செல்ல விருப்பம் இல்லை தான் என்னதான் உடல் நிலை சரியில்லாதவர் என்றாலும் ஸ்ருதியின் நிலைக்கு ரகுவும் அவனது பெற்றோரும் தானே காரணம் ஆனாலும் ஸ்ருதியின் மனதிருப்திக்காக தான் அங்கே அவளை கூட்டி சென்றான். அங்கே ரகுவின் பெற்றோர்கள் ஸ்ருதியுடன் நல்ல முறையில் பேசினாலும் ரகுவின் ஒதுக்கமும் அவன் கண் முன்னே டாக்டர் சஞ்சனாவுடனான நெருக்கமும் அவனுக்கு எரிச்சலை கிளப்பியது. மேலும் கடைசியாக ரகு பார்த்த பார்வை ஏதோ சேதி சொல்வது போல் இருக்க புவியின் மூளையில் அடுத்து நடக்கபோவது புரிந்தது. எனவே ரகு கண்களில் ஸ்ருதி படவே கூடாது என்ற முடிவை எடுத்தவன் தற்போது தான் ஸ்ருதியுடன் இருந்தால் நார்மலாக இருக்க முடியாது என தெரிந்ததால் விக்கியுடன் வெளியே சென்று விட்டான். அவன் எதிர்பார்த்தது போல் ஸ்ருதியும் ஒரு குழப்பான மனநிலையிலேயே இருந்தாள்.

அவளுக்கு மருத்துவமனையில் சஞ்சனாவை அணைத்து அவளது கண்ணீரை துடைத்த ரகு மனக்கண் முன்னால் வந்து போனான்..

ஆனால் பாவம் ஸ்ருதிக்கு தெரியாது ரகு சஞ்சனா மேல் காட்டும் பாசம் அக்கறை எல்லாம் நடிப்பு என்று..

ரகு தனது பெற்றோர்களின் திருப்திக்காக மட்டுமே சஞ்சனாவை கல்யானம் செய்துகொன்டான் என்பது ரகுவிற்கும் சஞ்சனாவிற்கும் மட்டுமே தெரிந்த ரகசியம் ..

ரகு ஸ்ருதியின் கண் முன்னே சஞ்சனாவை அணைத்து ஆறுதல் சொன்னதில் கூட இரண்டு உள் நோக்கத்துடன் தான்..

ஒன்று சஞ்சனாவும் ரகுவும் சந்தோஷமாகத்தான் இருக்கிறார்கள் என்று அவனது பெற்றோர்கள் நம்ப வேன்டும்..

மற்றொன்று தன்னுடைய போலீஸ் பவரை வைத்து தன்னை அடித்து காயப்படுத்தியது மட்டும் இல்லாமல் தன்னுடைய உயிர் காதலியை தனக்கே தெரியாயமல் திருமணம் செய்த புவியை மிரட்டுவதற்க்காகவும் தான்..

ஆம் நீ செய்த தவறுகள் அனைத்தும் எனக்கு தெரியும் அது அத்தனைக்கும் சாட்சியானவள் உன்னால் பாதிக்கப்பட்டவள் இப்பொழுது எனக்கு சொந்தமானவள்..

நான் நினைத்தால் இப்பொழுது உன்னை என்ன வேண்டுமானாலும் செய்ய முடியும் என்பதாகத்தான் இருந்தது ..

சஞ்சனா மீதான அன்போ பாசமோ அவனது அந்த அணைப்பில் கொஞ்சம் கூட இல்லை..

ஆனால் பாவம் ஸ்ருதிக்கோ இது எதுவுமே தெரியவில்லை அவள் மனம் மேலும் மேலும் எதையாவது நினைத்து குழம்பியது..

ஆனால் ரகு சஞ்சனாவை அணைத்த நினைப்பு வரவும் முதலில் நன்றாக இருந்த சஞ்சனா ஏன் புவியை பார்த்ததும் பதட்டமடைந்தாள்..

அவள் பதட்டமடைந்ததை கவனித்த அத்தான் கூட புவியை முறைத்தபடி தானே அவளை வெளியே கூட்டி சென்றார்..

அப்படியானால் புவிக்கும் அந்த சஞ்சனாவிற்கும் என்ன தொடர்பு? அங்கே ஒரு குழந்தை வேறு இருந்ததே அது யார் குழந்தை என ஸ்ருதியின் மனம் பலவாறு குழம்பி தவித்தது..

ரகுவிடம் இருந்த சந்தேகம் என்ற நோய் தற்போது இவளுக்கும் வந்துவிட்டதோ?

இதை அவள் நேரடியாக புவியிடம் கேட்டிருந்தால் கூட இனி வரப்போகும் பெரிய பிரச்சனையை தவிர்த்திருக்கலாம்..

ஆனால் எதுவாக இருந்தாலும் புவியே நேரடியாக சொல்லட்டும் என அவள் மனம் வீம்பாக இருந்தது..

ஆனால் புவியோ நடந்த சம்பவம் தன் மனைவிக்கு தெரியாமல் எப்படி தடுப்பது என்ற மனநிலையில் இருந்தான்..

அடுத்து வந்த இரன்டு நாட்களும் புவிக்கும் ஸ்ருதிக்கும் ஒரு விசித்திரமான மனநிலையிலேயே கழிந்தது. இருவரும் ஏதோ யோசனையிலயே இருந்தனர்..

நந்தினி இப்போதெல்லாம் வேந்தனுடன் சகஜமாக பேச ஆரம்பித்திருந்தாள். அதனால் தான் என்னவோ ஸ்ருதியின் கலக்கத்தை அவள் அறியவில்லை. ஆனால் புவியின் மனநிலையை நன்கு அறிந்த விக்கி நேரடியாகவே புவியிடம் கேட்டுவிட்டான்.

இதற்கு மேலும் விக்கியிடம் மறைக்க முடியாமல் “டாக்டர் தருண்” என ஒற்றை வார்த்தையில் பதில் கூறினான் புவி.

இதை கேட்டதும் உண்மையிலேயே அதிர்ந்துவிட்டான் விக்கி காரணம் இது தான்.

விக்கியின் நினைவுகள் சில வருடங்கள் பின்னோக்கி சென்றது விக்கி ஐ.பி.எஸ். அதிகாரியாக பதவியேற்ற புதிதில் ஊட்டியில் பதுங்கியிருந்த மூன்று தீவிரவாதிகளை கைது செய்ய செல்லும்போது நடந்த துப்பாக்கி சண்டையில் இரண்டு பேர் சரண்டர் ஆகிவிட ஒருவன் மட்டும் கையில் ஏற்பட்ட லேசான குண்டடியுடன் தப்பித்தான்.

தனது கை காயத்துடன் தப்பித்து சென்றவன் தஞ்சமடைந்த இடம் டாக்டர் தருண் வீடு.

கையில் குண்டடி பட்டிருந்தாலும் அவன் தோற்றம் தீவிரவாதி போல் இருந்தாலும் அதெல்லாம் தருண் கண்களுக்கு தெரியவில்லை.

இந்த நிமிடம் அவர் ஓர் நோயாளி தான் ஒரு டாக்டர் அது மட்டுமே அவன் கண்களுக்கு தெரிந்தது.

அவன் உடனடியாக சிகிச்சையை தொடங்கிய நேரம் சரியாக அங்கே வந்துவிட்டான் புவி.

உடனடியாக அந்த தீவிரவாதியை கைது செய்ய புவி முயல சிகிச்சை முடிந்தவுடன் கைது செய்யுமாறு தருண் வேண்டிக்கொண்டான்.
ஆனால் புவியோ அதற்கு சம்மதிக்காமல் நான் கைது செய்தே தீருவேன் என தீர்மானமாக நின்றான்.

இதற்கிடையே அந்த தீவிரவாதி வலி தாங்க முடியாமல் இங்கே இதற்கு மேல் இருந்தால் தான் உயிர் பிழைப்பது கஷ்டம் என உணர்ந்து அங்கிருந்து தப்பிக்க நினைக்க அந்த நேரம் தன் துப்பாக்கியை நீட்டியிருந்தான் புவி.

ஆனால் புவி நீட்டிய துப்பாக்கிக்கும் அந்த தீவிரவாதிக்கும் இடையே நின்றிருந்தான் தருண்.

அவனை பொறுத்தவரை தீவிரவாதியாக இருந்தாலும் சரி அவனது வீடு ஒரு உயிரை காக்கும் இடமாக இருக்க வேண்டுமே தவிர அழிக்கும் இடமாக மாற அவன் விரும்பவில்லை.

தருண் எதிர்பாராத தருணத்தில் புவியின் துப்பாக்கி தோட்டா ஒன்று அவன் மார்பில் பாய்ந்திருந்தது..

தருண் பேசிக்கொன்டு இருக்கும்போதே அவன் அசந்த நேரம் சுடத்தான் நினைத்தான் புவி ஆனால் அவன் குறி தவறியதோ இல்லை இது தான் விதியின் சதியோ தெரியவில்லை.

பல உயிர்களை காத்த அந்த இளம் மருத்துவனின் உயிர் காற்றோடு காற்றாய் கலந்துவிட்டது.

மறுநாள் காலையில் தலைப்பு செய்தியில் தீவிரவாதிகளுக்கு அடைக்கலம் கொடுத்த டாக்டர் தருண் காவல்துறைக்கும் தீவிரவாதிகளுக்கும் நடந்த துப்பாக்கி சூட்டில் மரணம் என்ற ஒற்றை வரியில் அடங்கிவிட்டது.

புவியை பொறுத்தவரை அவன் அவனது கடமையை செய்தான் அவ்வளவே. ஆனால் அவன் அந்த மருத்துவரின் கடமையை செய்யவிட்டு தனது கடமையை செய்திருந்தால் இந்த மரணம் நிகழ்ந்து இரண்டு உயிர்கள் அனாதையாக மாறியிருக்க மாட்டார்கள் என்பதே நிதர்சனம்.

ஆனால் இன்றுவரை புவிக்கு தான் செய்த தவறு என்ன என்று புரியவே இல்லை.

பழைய நினைவுகளில் இருந்து முதலில் தெளிந்தது விக்கி தான் அவனுக்கு தற்போதைய புவியின் நிலை என்ன என்பது தெளிவாக புரிந்தது.

இந்த விசயம் மட்டும் ஸ்ருதிக்கு தெரிந்தால் அவள் நிச்சயம் எதாவது விபரீதமான முடிவு எடுப்பாள் என தெரியும் எனவே எதற்கும் தயாராக இருப்பதை தவிற வேறு வழி இல்லை என முடிவெடுத்தான் விக்கி.

ஆனால் புவியோ எப்படியும் இந்த விசயத்தை ரகு ஸ்ருதியிடம் சொல்லுவான் என்றே நம்பினான்.

ஆனால் பாவம் புவிக்கு தெரியாது எதுவாக இருந்தாலும் ரகு முகத்திற்கு நேராக செய்வான் ..முதுகுக்கு பின்னால் செய்யும் குணம் உள்ளவன் இல்லை ரகு..

ஆனால் இப்படி வேலைகளை செய்யும் ஒருவன் முகுந்தன் இருக்கிறான் என புவியும் விக்கியும் மறந்து போனார்கள்..

ஆம் இவ்வளவு நேரம் இவர்கள் இருவரும் பேசியதை இவர்கள் காரில் பொருத்தப்பட்டிருந்த ரகசிய கேமரா மூலம் பார்த்துக்கொன்டிருந்தான் முகுந்தன் ..

ஸ்ருதிக்கு திருமணம் ஆகிவிட்டது என தெரிந்ததும் சினம் கொன்ட வேங்கையாய் மாறிய முகுந்தனால் நேரடியாக புவியை நெருங்க முடியவில்லை ..காரணம் அவனது பதவி..

எனவே அவனை வேறு எதுவும் குறுக்கு வழியில் சிக்கவைத்து அவனையும் ஸ்ருதியவும் பிரிக்க சரியான சந்தர்ப்பம் எதிர்பார்த்த முகுந்தன்க்கு போதுமானதாக இருந்தது டாக்டர் தருணின் கொலை..

‘உன் இந்த ஒரு வாக்குமூலம் போதும்டா உன்னை ஓட ஓட விரட்டி என் ஸ்ருதியை என்கிட்ட கொண்டு வர்றதுக்கு’ என தன் முன்னால் இல்லாத புவியை நினைத்து சவால் விட்டான் முகுந்தன் ..

தன் கணவன் செய்த தவறு ஸ்ருதிக்கு தெரியும்போது அவனை மன்னிப்பாளா? இல்லை தன்டிப்பாளா?

காலம் தான் பதில் சொல்லும்..

(காலம் எங்க சொல்லும் அடுத்து எழுதுறவங்க தான் சொல்லனும்..)

Facebook Comments Box
What’s your Reaction?
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here