தமிழகத்தில் 1970 ஆம் ஆண்டுக்குப் பிறகு பிறந்தவர்களுக்கு இசை மற்றும் பாடல்களுக்கான ரசனை சார்ந்த விஷயங்களை பூர்த்தி செய்தது திரை இசையே. அனைவருக்கும் என்று சொல்ல முடியாவிட்டாலும் பெரும்பாலானவர்களுக்கு திரைப்படப் பாடல்களே இசை சார்ந்த ரசனைக்கான தீர்வாக இருந்தது. எழுபதுகளின் இறுதியில் பிறந்த நானும் அதற்கு விதிவிலக்கல்ல!
“நதியிசைந்த நாட்களில்…” என்னும் தலைப்பில் என்னை ஈர்த்த இசை, பாடல்கள் போன்றவற்றை குறிப்பிடலாம் என்று நினைக்கிறேன். ஒரு தொடர் போல் இது வாரா வாரம் அத்தியாய வரிசையில் எழுதப்படும். தலைப்பிற்கு காரணம் எளிதானது. காவிரித் தாயுடன் என்னுடைய பால்யம் கழிந்தது. அந்த காலகட்டத்தில் கேட்ட, சுகித்த பாடல்களே அனைத்தும்.
எனக்கொரு பழக்கம் உண்டு. வெயில் இல்லாது சீந்தக் காத்து வீசும் போதும், பனி விழும் மார்கழியின் போதும், ஐப்பசி மற்றும் கார்த்திகை மாத அடை மழை தருணங்களிலும் எனக்குப் பிடித்தமான இசையைக் கேட்க வேண்டும் என்று நினைப்பேன். அதே போல் காவிரியைப் பார்த்தபடி கரையிலோ அல்லது பாலத்தின் மீதோ இருந்து கொண்டு பிடித்தமான பாடல்களைக் கேட்பதில் எனக்கு கொள்ளை இஷ்டம். பூலோகத்தில் சொர்க்கம் உண்டு என்பதை ஈசன் அது போன்ற சமயங்களில் அழுத்தமாக பதியமிடுகிறார்.
திரைப்பட இசை தவிர்த்து மற்றொரு இசைக் களம் குறித்தும், அதில் எனக்குள்ள லயிப்பு, பாடல்கள், இசை, அதை உருவாக்கியவர்கள் யார்?, எனக்கு ஏன் அது பிடித்துப் போனது, அந்த பாடல்களை கேட்ட தருணங்களில் கிட்டிய அனுபவம் போன்றவற்றை எழுதும் ஒரு ரசிகனின் ஆசை இது. நம் நாட்டின் பல்வேறு பிராந்தியங்களில் உள்ள நாட்டுப்புற இசை, ஹிந்துஸ்தானி, கர்னாடிக் போன்றவற்றை இங்கு நான் எழுதப்போவதில்லை. அது மிகப் பெரியதொரு சமுத்திரம் அதில் முத்தெடுப்பது அசாதாரணம். இது வெறும் ரசனை, விவரம் அறியாத ஒரு பிரஜையின் இசை சூழ்ந்த கலவையான உணர்வுகளின் தொகுப்பு. முன்னுரை போல் சில பத்திகளை ஆக்ரமித்துவிட்டேன் இனி பதியமிட்ட நாட்களுக்குள் செல்வோம்.
எண்பதுகளின் (80’s) மத்திம காலத்தில் ரேடியோவில் விவித் பாரதி கேட்டுக் கொண்டிருந்த போது ஒரு நன்னாளில் விசேஷமான பொருள் ஒன்று என் வீட்டிற்குள் நுழைந்தது. அந்தப் பொருளை மூட ரெக்ஸின் பை வேறு. ஒரு புறம் பை மூடாது ரெக்ஸின் இல்லாத திறந்த வெளி. பொருளின் மேலே சில ஸ்விட்சுகளுக்கு இடைவெளி அதை சுற்றி பாத்தி கட்டியது போல் ரெக்ஸின். அந்தப் பொருளை எதிரே வைத்து நாம் பார்க்கும் போது இடதுபுறத்தில் ரெக்ஸின் பையைத் துளைத்து சில துளிகள்… என்ன பீடிகை என்று பார்க்கிறீர்களா? டேப் ரெக்கார்டர் வந்த தருணம் அது. துளைகள் ஸ்பீக்கருக்கு, அருகே திறந்த வெளி கேஸட் பொருத்துவதற்கு, மேலே ஸ்விட்ச்கள் என்பது ஸ்டாப், இஜக்ட், ப்ளே, ரீவைண்ட், ஃபாஸ்ட் ஃபார்வர்ட் போன்றவற்றிற்கு!
முதல் முறை கண்ட போது பிரமிப்பு. வானொலி வாயிலாகவும், எங்கிருந்தோ காற்றில் கேட்கும் பாடல்கள் மூலமாகவும் இசையுடன் பயணித்ததை எல்லாம் தாண்டி தனிப்பட்ட முறையில் இசை என்னுள் புக துவக்கப் புள்ளியாக இருந்தது அந்த டேப் ரெக்கார்டர்.
டேப் வாங்கிய கடையில் ஒரு கேஸட்டை விலை இல்லாமல் உடன் தந்திருக்கிறார்கள். அது கம்பெனி ஒரிஜினல் கேஸட் அல்ல. பாடல்கள் பதிவேற்றம் செய்யப்பட்டு மேலே உள்ள உரையில் ஆங்கிலத்தால் இரு பாடலின் துவக்க வரிகள் எழுதப்பட்டிருந்தன.
சைட் ஏ பக்கம் எழுதியிருந்த வாசகம் : Night Flight to Venus.
பி சைட் எழுதியிருந்த வாசகம் : Brown girl in the ring.
அப்போது டிடிகே, மெல்ட்ரக், சோனி, டீ- சீரீஸ், ஹிட்டாச்சி போன்ற கம்பெனி காலி கேஸட்டுகள் பற்றி ஆனா ஆவன்னா என்னும் அட்சர அப்பியாசம் நிகழவில்லை.
திரை இசைப் பாடல்கள் தவிர்த்து டேப் ரெக்கார்டரில் முதன் முதலாக நான் கேட்ட ஆங்கிலப் பாடல்கள் இவை:
ஸ்பேஸ், விண்கலம், விமானம், வேற்று கிரக வாசிகள் பேசுகிறார்கள் எனில் தமிழ் திரைப்படங்களில் ஒரு மாதிரியாக குரல் ஒலிக்குமே அந்தக் குரலில் நம்பர் கவுண்ட் டவுன் சொல்வது… போன்ற சங்கதிகளுடன் முதல் பாடல் ஆரம்பிக்கும். அந்த வயதில் பாடலைக் கேட்கும் போதே கையும் கால்களும் தானாக துள்ளாட்டம் போடும் (இப்போதும் துள்ளாட்டம் இருக்கத்தான் செய்கிறது) வயதாகிவிட்டதால் வேகம் இல்லை.
சொல்ல முடியாத பரவசம், உற்சாகம், துள்ளல்… அப்போது எனக்குக் கிட்டிய அனுபவத்தை எது மாதிரியான வார்த்தைகள் கொண்டு எழுதுவது என்று தெரியவில்லை ஆனால் இந்த வாசகங்களைப் படிக்கும் போது உங்களால் அதை “உணர முடிந்தால்” மேற்கொண்டு வாக்கியங்கள் தேவை இருக்காது.
இன்னொரு பாடல் கைதட்டல் ஒலியை முக்கிய ரிதமாகக் கொண்டு வடிவமைக்கப்பட்டிருக்கும். கேட்கவும் வடிவாக இருக்கும். அறியாத வயதில், முதன் முதலாக கேட்ட ஆங்கிலப் பாடல்கள் என்பதாலா? காரணம் தெரியவில்லை ஆனால் சுமார் முப்பது ஆண்டுகளுக்கும் மேலாக இப்போதும் அந்தப் பாடல்கள் மனதுக்கு நெருக்கமாக இருக்கின்றன.
சில துப்பறியும் நாடகங்கள், சஸ்பென்ஸ் திரைப்படங்கள் போன்றவற்றைக் காணும் போது பின்னணி இசையாக சில ஒலிப் படிமானங்கள் நம் புத்திக்கு பழகி இருக்கும். அந்த ஒலி வடிவத்தை முதன் முதலாக கேட்டது இந்தப் பாடலில்… பாடலில் வழக்கமான உற்சாகத்திற்கும், ரெஃப்ரெஷ் ஃபீலுக்கும் குறைவிருக்காது.
சர்வ சாதாரணமாக, அஸால்டாக, இயல்பாக… இது போன்ற கருத்துகளை அடிப்படையாகக் கொண்டு வரும் கதாபாத்திர பிம்பத்தை திரை மூலம் காணும் போது நமக்கொரு இசை நினைவுக்கு வரும் அந்த இசை முதலில் என் புத்திக்கு எட்டியது இந்தப் பாடலில்…
அழாதே என்று சொன்னால் சந்தோஷப்படாத பால்ய வாண்டுகள் உண்டா? அப்படிப்பட்ட பாடல் வரிகளை முதல் முறையாக ஆங்கிலப் பாடலில் கேட்டால் மனம் பறக்காதா? துள்ளாதா? பறந்தது… துள்ளியது… பறக்கிறது… துள்ளுகிறது… பறக்கும்… துள்ளும்… (மனதை வாண்டு மோடுக்கு மாற்றுவது அவ்வளவு கடினமல்ல, எளிமையானதே!)
அந்த சின்ன வயதில் இந்தப் பாடலை கேட்ட போதும் சரி, இப்போதும் சரி ஒரு மங்களகரமான இனிய துவக்கத்திற்கான அச்சாரம் போல் என்னை சூழ்ந்து ஆக்ரமிக்கிறது… ஆக்கிரமிப்பை உதறித் தள்ளி ஜீவிக்க ஆசைப்படுவது மனித இயல்பு ஆனால் இந்த பாடலின் ஆக்கிரமிப்பில் எப்போது கட்டுண்டு கிடக்க சொன்னாலும் புத்தி, மனம் இரண்டும் வேறுபடாமல் உடன்படுகிறது.
பாடல்களின் விவரங்களைப் பார்ப்போமா?
அனைத்தும் BoneyM ஆங்கிலப் பாப் பாடல்கள் குழுவினருடையது
ஸ்பேஸ் பாடல் – Night Flight to Venus
கைதட்டல் பாடல் – Rasputin
சஸ்பென்ஸ் – Painter Man
அஸால்ட் – Daddy Cool
அழாதே – No Woman cry
மங்களகரம் – Brown Girl in the ring
இந்த அனுபவத்திற்குப் பிறகு பல விதமான டேப் ரெக்கார்டர்கள் எங்கள் வீட்டுக்குள் நுழைந்தன. பழையன கழிதலும், புதியன புகுதலும் என்பது போல் பழைய டேப்கள் குறைவான விலைக்கு விற்கப்பட்டு புது டேப் ரெக்கார்டர்கள் உருமாறி வீட்டுக்குள் அமரத் துவங்குவது ஒரு சடங்கானது.
தமிழ், ஹிந்தி என இரு மொழிகளில் திரை இசைப் பாடல்கள், சிற்சில ஆங்கிலப் பாடல்கள் என கேட்டுக் கொண்டிருக்க மீண்டும் மறக்க முடியாத அளவிற்கு திரை இசைக்கு சம்பந்தமே இல்லாத இரண்டு இசை வடிவிலான கேஸட்டுகள் என்னை ஆக்கிரமித்து திக்குமுக்காட வைத்தன.
அதை எப்படிப் பெயரிட்டு சொல்ல – How to Name it?
எதுவுமில்லை தான் ஆனால் வளி – Nothing, but Wind…
(தொடரும்)