நம்பாதே

0
117

தினமும் ஒரு குட்டி கதை

அந்தக் காட்டிலிருந்த ஒரு மானும், காகமும், ஒன்றுக்கொன்று மிகவும் நட்பாயிருந்தன. அந்த மான், அங்கிருந்த புற்களையெல்லாம் நிறைய சாப்பிட்டு நன்கு கொழுத்தது. அதே காட்டில் திரிந்து கொண்டிருந்த நரி ஒன்று, அந்த மானைப் பார்த்துவிட்டது. “ஆகா! என்ன மேனி அழகு! என்ன கம்பீரம்! இதன் மாமிசம் மிகவும் சுவையாக இருக்குமே! எப்படியும் வஞ்சனையால் இதைக் கொல்ல வேண்டும்!’ என்று தீர்மானித்தது.
உடனே அந்த மானிடம் சென்று, “”நண்பா! சுகமா?” என்று கேட்டது நரி. அதுகேட்ட மான் நிமிர்ந்து பார்த்தது. இது ஒன்றும் நமக்கு அறிமுகமானதாகத் தெரியவில்லையே! “”யார் நீ? எங்கிருந்து வருகிறாய்?” என்று கேட்டது மான்.

“”நான் இந்தக் காட்டில், யாருமற்ற அனாதையாய் திரிந்து கொண்டிருக்கிறேன். இன்றைக்கு உன்னைப் பார்த்ததும், எனக்கு மிக்க மகிழ்ச்சியாக இருக்கிறது. நீ இடும் வேலையைச் செய்து கொண்டே, உன்னிடம் நட்பாக இருக்க விரும்புகிறேன்,” என்றது நரி.
அவ்வார்த்தைகள், மானின் மனதை வெகுவாகக் குளிரச் செய்தன. “”அப்படியா! சரி!” என்று உடனே சம்மதித்துவிட்டது மான்.
மாலையில் சூரியன் அஸ்தமித்ததும், அவை இரண்டும் ஒன்று சேர்ந்து, அங்கிருந்த சம்பக மரத்தின் கீழே வந்து நின்றன. அம்மரத்தில்தான், மானின் நண்பன் காகம் கூடுகட்டி வசித்து வந்தது.
இவ்விருவரையும் பார்த்த அக்காகம், கூட்டைவிட்டு வெளியே வந்து, “”நண்பா! உன் பக்கத்தில் இருக்கிறவன் யார்? யாரோ புது ஆசாமியாகத் தெரிகிறதே!” என்று கேட்டது.
“”ஆமாம். நீ சொல்வது சரிதான். இவன் என்னிடம் நட்புகொள்ள வந்திருக்கிறான்!” என்றது.
“”நான் நினைத்தது சரிதான். முன்பின் தெரியாதவனை நம்பிவிடாதே! நீயோ, என்னைப் போன்று வெள்ளை மனம் படைத்தவன். வெளுத்ததையெல்லாம் பால் என்று நம்பிவிடுவாய்!” என்றது காகம்.
அது கேட்ட நரிக்கு, “சுருக்’கென்றது!
“”ஒருவனைக் கண்டதுமே, அவனது சுபாவம் தெரிந்துவிடுமா? ஆனால், நல்லோர்களைக் கண்ட மாத்திரத்திலேயே நட்பு கொள்ளலாம்! நீ எப்படி எனக்கு நண்பனோ, அதுபோல் இவனும் இருந்துவிட்டுப் போகட்டுமே! நீ ஏன் தடை செய்கிறாய்?” என்று கூறி, அந்த நரியைத் தன் சிநேகிதனாகவே வைத்துக் கொண்டது மான்.
அதன்பிறகு, மூன்றும் சேர்ந்து இருந்தன. ஆங்காங்கு சென்று இரைதேடி, நன்கு வயிறுமுட்ட தின்றுவிட்டு, இருட்டுகிற வேளையில் அந்த இடத்திற்குச் சேர்ந்தாற்போல் திரும்பிக் கொண்டிருந்தன.
மானுடைய மேனி, நன்கு கொழுந்து பளபளவென்று ஆக ஆக, நரியின் வாயில் நீரூறிற்று! உடனே தன் கைவரிசையைக் காட்டத் தொடங்கிவிட்டது.
“”இந்தக் காட்டில் ஓரிடத்தில் பயிர் மிகவும் நேர்த்தியாக விளைந்திருக்கிறது. வேண்டுமென்றால் உனக்குக் காட்டுகிறேன்,” என்று மானைப் பார்த்து தணிந்த குரலில் சொல்லியது நரி.
“”அப்படியா! நானும் தான் எங்கெங்கேயோ சுற்றித் திரிகிறேன்; என் கண்ணில் படவில்லையே!”
“”வா! இப்போதே காட்டுகிறேன்,” என்று கையோடு மானை அழைத்து போயிற்று. அப்படியும் இப்படியுமாக வளைந்து வளைந்து சென்று அந்த இடத்தைக் காட்டியது.
அன்று முதல் மான், அங்கேயே சென்று அப்பயிரைச் சுவையாக மேய்ந்து கொண்டிருந்தது.
அந்தக் கொல்லைக்குச் சொந்தக்காரன், ஒருநாள் அதைப் பார்த்துவிட்டான். “”ஒ! இந்த மானுடைய வேலை தானா இது! நான், யாரோ, என்னவோ என்று எண்ணினேன்! இதை ஒரு கை பார்த்து விடுகிறேன்!” என்று கருவினான்.
அடுத்த நாளே, அந்த மானைப் பிடிக்க வலை விரித்துவிட்டான். அந்த மான், வழக்கம்படி அன்றும் வந்தது; பயிரை மேய்ந்தது. வகையாய் அங்கு விரித்திருந்த வலையில் மாட்டிக் கொண்டது.
“”ஐயையோ! இப்படி நேர்ந்துவிட்டதே இன்று!” உள்ளுக்குள் அலறியது. “உம். நம் நண்பனுக்குத் தெரிந்தால், எப்படியும் நம்மை விடுவித்துவிட மாட்டானா!’ என்று நம்பிக்கையோடு இருந்தது.
எதிர்பார்த்தது போல், நரியும் அப்போது அங்கே வந்து, மான் வலையில் மாட்டிக்கொண்டு திண்டாடுவதைக் கண்டதும், “சரிதான்! இன்றுதான் நம் ஆசை நிறைவேறியது. இப்போது இதன் எலும்பையும், மாமிசத்தையும் சுவைத்துத் தின்னலாம்!” என்று அது எண்ணியபோதே, அதன் வாயில் எச்சில் ஊறியது.
ஆனால், நரியைக் கண்ட மானோ, மிகுந்த சந்தோஷப்பட்டது. “”ஆ! நல்ல வேளையில் வந்தாய்! வலையைக் கடித்து அறுத்து உடனே என்னை விடுதலை செய்! நீ வரமாட்டாயா என்று இதுவரை எட்டி எட்டிப் பார்த்துக் கொண்டிருந்தேன்! சங்கடத்தில் நண்பர்கள், உடையிழந்தவன் கை போல் உதவுவர் என்பதற்கிணங்க வந்திருக்கிறாய்!” என்று பரபரத்தது மான்.
“”ஐயோ! நான் இன்று விரதமாயிற்றே! இந்தத் தோல் வலையை நான் தீண்டக் கூடாதே! நாளைக்கென்றால், நீ என்ன சொன்னாலும் கேட்பேன்,” என்று பதைபதைத்தாற்போல சொல்லிற்று.
“”என்ன, அப்படியா!” என்று மான் பரிதாபமாகப் பார்த்தது நரியை.
“”என்ன! வெகு நேரமாகியும் இந்த மானைக் காணோமே!” என்று தேடிக்கொண்டு அங்கு வந்த காக்கை, அங்கிருந்த மானின் பரிதாப நிலையைக் கண்டு திடுக்கிட்டது.
“”நண்பா! எப்படி நேர்ந்தது இது? அநியாயமாய் இந்த வலையில் சிக்கிக்கொண்டு விட்டாயே!” என்று பச்சாதாபத்துடன் கேட்டது காகம்.
“”அதையேன் கேட்கிறாய் போ! அன்று உன் வார்த்தையைக் கேளாமல் இருந்ததால் ஏற்பட்ட வினை இது!” என்று கண்களில் நீர் வழிய ஆழ்ந்த பெருமூச்சு விட்டது மான்.
“”உன் நண்பன் எங்கே போனான்? அவனுக்குத் தெரிந்தால் உன்னை ஒரு நொடியில் விடுதலை செய்துவிடுவானே!”
“”நன்றாய் சொன்னாய்! அவனாவது, என்னை விடுதலை செய்வதாவது! என் மாமிசத்தை ருசி பார்க்க இங்குதான் எங்கேயாகிலும் ஒளிந்து கொண்டிருப்பான்.”
“”உம்! உண்மை நண்பனுடைய பேச்சைக் கேளாதவனுக்கு விபத்து சீக்கிரம் வரும் என்பர். அது இப்போது உண்மையாகிவிட்டதே!” என்று, துக்கம் தொண்டையை அடைக்கச் சொல்லியது காக்கை.
அதற்குள் அந்தக் கொல்லைக்குச் சொந்தக்காரன், கையில் ஒரு குண்டாந்தடியை எடுத்துக்கொண்டு வந்துவிட்டான்.
அதைக்கண்ட காகம், “”நண்பா… நீ இப்போது மூச்சையடக்கிக் கொண்டு சவம்போல் கிட… உன் கண்களை நான் கொத்துவது போல் நடிக்கிறேன். நீ இறந்துவிட்டதாக எண்ணி, வலையை அவிழ்த்துச் சுருட்டி வேறு எங்கேயாகிலும் வைக்கப் போவான். அந்தச் சமயம் பார்த்து நான் குரல் கொடுக்கிறேன். நீ உடனே துள்ளிக் குதித்து ஓடிப்போய் விடு,” என்றது.
“”சரி!” என்று மான் மூச்சையடக்கிக் கொண்டு சவம் போல் கிடந்தது.
காக்காயை விரட்டிக்கொண்டே வந்து வேடனும் மான் இறந்துவிட்டதாக நினைத்தான்.
“”பாவம்! அகப்பட்டுக்கொண்ட அதிர்ச்சியிலேயே இறந்துவிட்டது போலும்!” என்று பரிதாபப்பட்டுக் கொண்டு, வலையை அவிழ்த்துச் சுருட்டிக்கொண்டு சற்று எட்டி வைக்கச் சென்றான்.
உடனே காகம் குரல் கொடுக்க, மான் துள்ளிக் குதித்து ஓடத் தொடங்கிவிட்டது.
அதுகண்ட கொல்லைக்காரன், “”ஐயோ! ஏமாந்துவிட்டேனே!” என்று அவசர அவசரமாகத் தன் கையிலிருந்த குண்டாந்தடியை எடுத்து அந்த மானைப் பார்த்து வீசியெறிந்தான்.
அக்குண்டாந்தடி, சற்று தூரத்திலிருந்த புதரில் விழுந்து, அங்கு பதுங்கியிருந்த நரியைத் தாக்கவே, மண்டை பிளந்து அப்போதே அது உயிர் துறந்தது.”
நம்பிக்கை துரோகிகளுக்கு இப்படிப்பட்ட சாவு தான் ஏற்படும்.

Facebook Comments Box

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here