மின்னல் விழியே குட்டித் திமிரே – 11

0
602
1551018907221|679x452

மின்னல் விழியே – 11

வினுவையும் விக்கியையும் திட்டி அனுப்பியவன் ஹரி கூறிய உண்மையில், தன் தலையில் அடித்துக் கொண்டு அமர்ந்தான்.

“சாரி டா ஹரி.. எனக்கு எதுவுமே நியாபகம் இல்லை… ரொம்ப தலை வலிச்சுது… அதுவும் என் பக்கத்துல அவளை பார்த்ததும் கோபம் வந்திடுச்சு.. வயசு பொண்ணு.. என்ன தான் காரணம் இருந்தாலும் என் கூட இருக்கிறது தப்பா பட்டுச்சு டா அதான் கோபத்துல என்னலாமோ பேசி அடிச்சிட்டேன்… அவ ரொம்ப நல்ல பொண்ணு டா.. என்னால அவ வாழ்க்கையில எதுவும் கலங்கம் வந்திடக்கூடாதுன்னு தான் அடிச்சிட்டேன் … ஆனா சுமியோட டிரெஸ்சை அவ போட்டிருக்கிறத பார்த்ததும் என்னையும் மீறி…..” பேச்சை பாதியில் நிறுத்தியவன்.. என்ன காரியம் செய்ய துணிந்தோம் என்று தன்னை நினைத்தே அவமானமாக உணர்ந்தான்.

வினுவை அடித்ததின் காரணத்தை கேட்ட ஹரிக்கு எந்த சுவற்றில் முட்டிக் கொள்ளலாம் என்று இருந்தது. “டேய் நல்லவனே… உன்னை வச்சிட்டு முடியலை டா… வினுவுக்காக நீ திட்டினாலும்… நீ சொன்ன ஒவ்வொரு வார்த்தையும் தப்பு டா…” ஹரி அவனுக்கு எடுத்து சொல்ல. திருவிற்கு தன்னை பாவமாக பார்த்த வினுவின் ஞாபகம் வந்தது. எப்படி வினுவின் முகத்தில் விழிக்க போகிறோம் என்று மனம் அடித்துக் கொள்ள, உடம்பில் உள்ள சக்தியெல்லாம் வடிந்தாற் போல் சோபாவில் அமர்ந்தான்.

மனதிற்குள் ஏதேதோ யோசித்தவன் அவசரமாக தன் அறைக்கு சென்று ஆபிஸிற்கு செல்வதற்கு கிளம்பி வந்தான்.

“டேய் எங்கடா போற???” இந்த நிலமையில் எங்கே செல்கிறான் என்ற பதட்டம் ஹரியிடத்தில்.

“ஆபிஸ்க்கு தான் டா…” ஷூவை போட்டவாறே திரு பதிலளித்தான். அவன் அருகில் சென்று அமர்ந்த ஹரி,

“எதுக்கு டா??? கண்ணெல்லாம் சிவந்து இருக்கு. இன்னைக்கு ரெஸ்ட் எடு. நாளைக்கு ஆபிஸ் போகலாம்.” சிவப்பேறியிருந்த கண்களும் கோபத்தில் புடைத்திருந்த நரம்புகளும் திரு ஏதோ செய்ய போகிறான் என்ற கிலியை எற்படுத்தியது ஹரிக்கு.

“இல்லை டா. எனக்கு ஒரு முக்கியமான வேலை இருக்கு.. நான் போய்ட்டு வந்துடுறேன்.. நீ ஹனிய பார்த்துக்கோ..” ஹரிக்கு பதிலளித்தாலும் மனம் முழுவதும் தனக்கு போதை மருந்து கொடுத்தவர்களை ஒரு வழியாக்க வேண்டும் என துடித்தது.

ஹரி எவ்வளவு தடுத்தும் கேளாமல் ஆபிஸிற்கு சென்றான். அவனது கேபினுக்கு செல்லும் போது கண்கள் தன்னையும் அறியாமல் வினு மற்றும் விக்கியின் இடத்தை பார்க்க, அது காலியாக இருந்தது. பெருமூச்சு ஒன்றை விட்டவன் தன் கேபினுக்குள் செல்ல, அடுத்த ஐந்தாவது நிமிடத்தில் அவன் முன்பு நின்றிருந்தனர் திருவிற்கு போதை மருந்து கலந்து கொடுத்த பிரகாஷும் அவனது நண்பனான விஜயும்.

இருவரும் கைகளிலும் தலையிலும் பேண்டேஜோடு நின்றிருக்க, திருவிற்கு இது விக்கியின் கைங்காரியம் என்று புரிந்தது. இருவரையும் எரிப்பது போல் பார்த்தவன் தன் நாற்காலியில் இருந்து, எழுந்து அவர்களின் அருகே சென்றான். புலி ஒன்று வேட்டையாட வருவது போல் அவன் நிதானமாக அவர்கள் அருகில் வர., இருவரும் அவன் தங்களை அடிக்கும் முன் அவன் காலில் விழுந்தனர்.

“சாரி சார்.. எங்களை மன்னிச்சிடுங்க… சாரி சார்… இனி இப்படி பண்ணமாட்டோம் சார்…. இந்த ஒரு தடவை மட்டும் எங்களை தயவு செய்து மன்னிச்சிடுங்க சார்.”

ஏற்கனவே விக்கி அவர்களை நன்றாக அடித்து மிரட்டியிருந்ததால் இருவருக்குள்ளுமே கோபத்தில் செய்தது எத்தைகைய பின்விளைவுகளை ஏற்படுத்த போகிறது என்று பயம் வந்திருந்தது.

தன் கால்களில் விழுந்து கெஞ்சுபவர்களை புழுவை பார்ப்பது போல் பார்த்தவன், “ரெண்டு பேரும் பெரிய தப்பு பண்ணிட்டிங்க… ஆனா தண்டனை நான் தர்றதுக்கு முன்னாடி விக்கி நிறைய தந்துட்டான் போல இருக்கு.” நக்கலாக கூறியவன் தன் முகத்தை கடுமையாக வைத்துக் கொண்டு,

தன் அலைபேசியை எடுத்து கம்பெனியின் சீ.இ.ஓ விற்கு அழைத்து இருவரின் மீதும் புகார் செய்தான். அவன் பேசுவதை கேட்டவாறு இருந்தவர்களுக்கு தங்களின் எதிர்காலம் பற்றி பயம் பிறந்தது.

திரு எப்போதும் கண்டிப்பானவன் என்றாலும் எந்தப் பிரச்சனையையும் இதுவரை மேலிடத்திற்கு எடுத்து சென்றதில்லை. முதல் முறையாக தன்னிடம் புகார் அளித்திருக்கிறான் என்றால் அது சரியாகத்தான் இருக்கும் என்று திரு மேல் வைத்திருக்கும் நம்பிக்கையில் அவன் கேட்டதை உடனே செய்தார் அந்த கம்பெனியின் சீ.இ,ஓ.

திருவின் புகார்படி அடுத்த பத்தாவது நிமிடம் அவர்கள் இருவரையும் ப்ளாக் மார்க் செய்து கம்பெனியைவிட்டு வெளியேற்றும்படி உத்தரவு பிறப்பித்திருந்தார்.

திருவே கூட அவர்களை வெளியே அனுப்பியிருந்தாலும் அவர் ஏனென்று கேட்கப் போவதில்லை தான் ஆனால் தன் எல்லைக்குள் தான் இருப்பேன் என்ற கொள்கையோடு இருந்தவனுக்கு அவ்வாறு செய்ய மனம் வரவில்லை.

ப்ளாக் மார்க் செய்து அனுப்பினால் அதன் பிறகு எந்த கம்பெனியிலும் எளிதாக வேலையில் சேர முடியாது. ஆரம்பத்தில் இருந்தே தொடங்க வேண்டிய நிலை என்று பிரகாஷும் விஜயும் திருவிடத்தில் கெஞ்ச, திரு அவர்களை கண்டுக் கொள்ளவே இல்லை. கெஞ்சியும் பயன் இல்லை என்றதும் இருவரும் இடத்தை காலி செய்தனர்.

அவர்கள் செய்ததற்கு இந்த தண்டனை சிறியது தான் ஆனால் புத்தியற்று அவர்களை விட மிகப் பெரிய தவறு செய்திருந்தவனுக்கு அவர்களை இதற்கு மேல் தண்டிக்க விருப்பமில்லை.

அவர்கள் சென்ற பின்னர் தன் சீட்டில் சென்று நன்றாக சாய்ந்து அமர்ந்தவனின் மனம் முழுவதும் குற்றவுணர்வில் தவித்தது.

அடுத்த ஒரு மணி நேரமும் வினுவின் முகமே திருவின் முன்பு நிழலாடியது. விக்கி இழுத்து செல்லும் போது கலங்கிய கண்களோடு தன்னை பார்த்தவளை நினைத்து இதயத்தில் கத்தி கொண்டு குத்தியது போல் வலித்தது.

தனக்கு போதை மருந்து கொடுத்தவர்களை கட்டு போடும் அளவிற்கு அடித்தவன்., தான் அவனது அக்காவை பற்றி கேவலமாக திட்டிய போதும்., வினு கூறிய ஒரு வார்த்தைக்காக அவனை ஒன்றும் கூறாமல் சென்றிருக்கிறான் என்றால்., எத்தகைய பாசம் அவன் அக்கா மீது என்று விக்கியை நினைத்து பொறாமை கூட வந்தது திருவிற்கு.

அடுத்த ஒரு மணி நேரத்தை வினுவை எதிர்ப்பார்த்து நெட்டித் தள்ளியவன் அவர்கள் வராது இருக்கவும் அதற்கு மேல் அங்கு இருக்க முடியாமல் வீட்டிற்கு கிளம்பினான்.

திரு வீட்டிற்கு வரவும் ஹரி என்னவென்று கேட்க, ஆபிஸில் நடந்த அனைத்தையும் கூறியவன், அதற்கு மேல் எதுவும் கூறவில்லை. ஹரிக்கும் தன் மனைவியை திரும்ப அவளது தாய் வீட்டில் விடும் வேலை இருந்ததால் திரு யோசிக்கட்டும் என்று அவனுக்கு தனிமை அளித்து சென்றுவிட்டான்.

ஹனியை ஹரியே தயார் செய்து அவளது க்ரஷில் விட்டிருந்தான். வீட்டில் தனியாக சுவற்றை வெறித்தவாறு அமர்ந்தவனின் கண்களுக்கு எந்தப் பக்கம் திரும்பினாலும் வினுவின் கலங்கிய முகம் ஞாபகம் வர, மானசீகமாக அவளிடம் மனதில் மன்னிப்பை வேண்டினான்.

வினுவை நினைத்தவாறு குற்றவுணர்வில் இருந்தவன்., மறுநாள் எப்படியாவது இருவரிடமும் மன்னிப்பு கேட்டுவிட வேண்டும் என்று முடிவு எடுத்தான். அதன் பின்னர் தான் அவனால் நிம்மதியாக மூச்சு விட முடிந்தது. அந்த முடிவோடு மறுநாள் திரு ஆபிஸிற்கு செல்ல அன்றும் விக்கியும் வினுவும் வரவில்லை…. மாறாக ஒரு வாரம் விடுப்பு வேண்டி அவனுக்கு மின்னஞ்சல் மட்டுமே வந்திருந்தது. அதை பார்த்தவனுக்கு தன் மீதே கோபமாக வந்தது..

“சே… எல்லாம் என்னால தான். என்னோட அவசர புத்தினால தான்.” தன்னையே கடிந்தவன் அந்த வாரம் முழுவதையும் எப்படி கடக்கப் போகிறோம் என்ற மலைப்பு தோன்ற, வினுவை பார்த்து மன்னிப்பு கேட்கும் நாளுக்காக காத்திருக்க தொடங்கினான்.

மேலும் மூன்று நாட்கள் கடந்திருக்க திரு மிகவும் சோர்ந்தே இருந்தான். எப்போதும் இறுக்கமாக இருப்பதால் மற்றவர்களுக்கு அது தெரியவில்லை என்றாலும் ஹரி அவனிடத்தில் வித்தியாசத்தை உணர்ந்தான். ஆனால் திரு புரிந்துக் கொள்ள வேண்டும் என அவனும் அமைதியாக இருந்துவிட., திருவிற்குள் நாளுக்கு நாள் குற்றவுணர்வு வளர்ந்துக் கொண்டே சென்றது.

வினுவையும் விக்கியையும் பற்றி ஹரிக்கு எதாவது தெரிந்திருக்குமோ என அவனிடமும் கேட்டுப் பார்த்தான் ஆனால் ஹரியோ ஒரு வார்த்தை கூறவில்லை.. முடிந்தவரை திருவின் அழைப்புகளை காரணம் கூறி தட்டிக் கழித்தான். அவனால் அவனிடம் பொய் சொல்ல முடியாது அதனால் தான் அவன் கேட்க வருவது புரிந்து வேண்டுமென்றே தட்டிக் கழித்தான்.

ஹரியிடம் இருந்தும் எந்த உதவியும் கிடைக்காததால் திருவின் மனம் பலவற்றையும் எண்ணி கலங்கியது. இப்படியே நாட்கள் செல்ல.,

நான்காவது நாள் மாலையில் எப்போதும் போல் ஹனியை அவளது ப்ளே ஸ்கூலில் இருந்து வீட்டிற்கு அழைத்து வந்தவன்., தன் காரை பார்க் செய்துவிட்டு இறங்கினான். ஹனியை கைகளில் ஏந்திக் கொண்டவன் வீட்டிற்குள் நுழைய சரியாக ஹனி.,

“டேடி அங்க பாருங்க… பேட் பாய் நிற்கிறான்.” கைகளை நீட்டி ஹனி ஒரு திசையை காண்பிக்க, யார் என்பது போல் திரு திரும்பி பார்த்தான்.

பக்கத்துவீட்டு பால்கனியில் புன்னகைத்தவாறு நின்றிருந்தாள் வினு. அவள் அருகில் விக்கி. அவனை தான் ஹனி பேட் பாய் என்றது. அவளை மூன்று நாட்கள் கழித்து பார்த்த சந்தோஷத்தில் திருவின் கண்கள் ஒரு நிமிடம் பளபளக்க, அவன் கையிலிருந்த ஹனி அவன் கன்னத்தை அவள் பக்கம் திருப்பி.,

“பேட் கேர்ள் டூ” என்று வினுவை பற்றி கூற அடுத்த நிமிடம் அவன் கண்களில் வெறுமை சூழ்ந்துக் கொண்டது.

“ஹாய் டா அரசு…” அவனை நோக்கி வினு கையசைக்க, அவள் இங்கே எப்படி வந்தாள் என அவன் புரியாமல் பார்த்தான். அவனது சுருங்கிய புருவம் அவன் என்ன யோசிக்கிறான் என்பதை வினுவிற்கு விளக்க,

“இங்க என்னப் பண்றேன்னு பார்க்கிறியா டா??? நாங்க இங்க குடி வந்துட்டோம்.. இனி நீ ஓடவும் முடியாது ஒழியவும் முடியாது. எப்பவும் நாலு கண்கள் உன்னை பார்த்துட்டே இருக்கும்.” அவன் தன்னை திட்டினான், கேவலப்படுத்தினான் என்ற எந்தவொரு மனச்சுணக்கமும் இல்லாமல் வெள்ளந்தியாக பேசியவளை கண்டு திருவின் குற்றவுணர்வு மேலும் அதிகரித்தது.

‘ஆமா இவ பெரிய பிக் பாஸ் ஷோ நடத்துறா… ஓடவும் முடியாது ஒழியவும் முடியாதுன்னு பன்ஞ்ச் பேசுது… தலையெழுத்து இது கூட எல்லாம் பொறந்து தொலைச்சிட்டேன்.’ வினுவை நினைத்து மனதில் கவுண்டர் அடித்துக்கொண்டு நின்றிருந்த விக்கி இங்கு நடப்பதற்கும் தனக்கும் சம்பந்தம் இல்லை என்பது போல் அவள் அருகில் வேடிக்கை பார்த்துக் கொண்டு நின்றிருந்தான்.

வினு கூறியதில் சிரிப்பு வந்தாலும் அதைக் காட்டிக் கொள்ளாதவன் வீட்டினுள் செல்ல, ஹனி அவர்கள் இருவரையும் முறைத்தாள். அதைப் பார்த்து வினு சிரிக்க விக்கியோ,

“அவரை மாதிரியே அவரோட பொண்ணையும் வளர்த்து வச்சிருக்கார்.” என அலுத்துக் கொண்டான்.

வினுவிடம் எதுவும் பேசாமல் உள்ளே வந்தவனுக்கு அவள் எப்போதும் போல் பேசியதில் மனதுக்கு இதமாக இருந்தாலும், எப்படி மன்னிப்பு வேண்ட போகிறோம் என்று தெரியவில்லை. தவறு செய்துவிட்டு மன்னிப்பு கேட்க அவன் தயாராக இருந்தாலும் இதுவரை யாரிடமும் மன்னிப்பு கேட்காதவன் என்பதால் தயக்கமாக இருந்தது அதுவும் எதுவும் நடவாதது போல் பேசுபவளிடம் எப்படி கேட்பது என விளங்கவில்லை… இவை அனைத்தும் அவன் மனதை அரித்தாலும் அவளை பார்த்ததே சந்தோஷமாக தோன்ற.. மனம் நிம்மதிக் கொண்டது.

சூரிய பகவான் மெதுவாக விழித்துக் கொண்டிருக்க, ஸ்போர்ட்ஸ் ஷூவும், ட்ராக் சூட்டும் அணிந்து அந்த பார்க்கில் ஜாகிங் செய்துக் கொண்டிருந்தான் திரு. சிறிது நாட்களாக மனதின் அலைப்புறுதலால் ஜாகிங் செய்யாமல் இருந்தவன் இன்று மனம் இலேசாக இருப்பது போல் தோன்றவும் அதிகாலையிலே வந்துவிட்டான்… ஒரு ரவுண்ட் அந்த பார்க்கை சுற்றி ஓடியவன் விக்கியும் அவனை போலவே ட்ராக் சூட்டில் பார்க்கிற்குள் நுழையவும் அவனை நெருங்கினான்.

“ஹாய் விக்கி…” வினுவிடம் மன்னிப்பு கேட்பதற்கு முன்னால் விக்கியிடம் கேட்பதே சரியாக இருக்கும் என எண்ணிக் கொண்டவன், தானாகவே சென்று பேச, அதில் விக்கி தான் அதிர்ந்தான்.

“ஹ..ஹாய் சார்..” எதிர்ப்பாரா அழைப்பு அதுவும் எதிர்ப்பாராத நபரிடம் இருந்து வரவும் விக்கி திணற, திருவிற்கு அடுத்து என்ன பேசுவது என்று தெரியவில்லை.

அவன் தனக்குள் எப்படி ஆரம்பிப்பது என்று யோசித்துக் கொண்டிருக்க., விக்கிக்கு அவன் எதற்க்காக தன்னை அழைத்திருப்பான் என்று புரிந்தது..

“வாங்க சார்.. நடந்துக்கிட்டே பேசுவோம்…” மௌனத்தை உடைத்து” விக்கியே பேச, திருவும் அதை ஆமோதித்து உடன் நடந்தான்.

“சாரி விக்கி.. அன்னைக்கு என்ன நடந்துச்சுன்னு சுத்தமா ஞாபகம் இல்லை.. அதுக்காக நான் செஞ்சது சரின்னு சொல்ல மாட்டேன். நான் பண்ணிணது ரொம்ப தப்பு தான். என்ன நடந்துச்சுன்னு விசாரிச்சிருக்கணும். ஐ யம் சாரி.. சடன்னா உங்களை என்னோட வீட்டுல பார்த்ததும் அப்படி பிஹேவ் பண்ணிட்டேன்..” புரிந்துக் கொள் என்பது போல் திரு விக்கியை பார்க்க.., அவனுக்குள் கோபம் இருந்தாலும் ஏனோ அவனால் திருவின் மன்னிப்பை நிராகரிக்க முடியவில்லை..

“பரவாயில்லை சார்.. எனக்கு புரியுது.. யாரா இருந்தாலும் இப்படி தான் ரியாக்ட் பண்ணியிருப்பாங்க.. பட் நீங்க சொன்ன மாதியான ஆட்கள் நாங்க இல்லை சார். என் அக்காக்கு எதனால உங்களை பிடிச்சிதுன்னு தெரியலை ஆனா அவ உங்ககிட்ட நாய்குட்டி மாதிரி சுத்தி சுத்தி வந்து பேசுற அளவுக்கு யார்க்கிட்டயும் பேசினதே இல்லை…” தன் சகோதரியை விட்டுக் கொடுக்காமல் அவளை பற்றி விளக்க முயன்றவனை திரு கனிவோடு பார்த்தான்.

தானும் இது போல் தானே தன் தங்கையின் மேல் உயிராக இருந்தோம் என்று பழைய நினைவுகள் திருவை சுற்றி வலம் வர, தலையை உலுக்கிக் கொண்டவன், “ஐ யம் சாரி… இனி எப்பவும் உன் அக்காவை ஹர்ட் பண்ற மாதிரி பேச மாட்டேன் ஓ,கே????”., வினுவை பிடித்ததா என்று தெரியவில்லை ஆனால் விக்கியை பிடித்துவிட, தன் வலது கையை அவன் புறம் நீட்டினான்.. என்ன என்பது போல் விக்கி பார்க்க,

“ப்ரெண்ட்ஸ்???,” கன்னம் குழிய சிரிப்போடு திரு கேட்க, விக்கி அவனது ப்ரெண்ட்ஸ் என்ற வார்த்தையில் திகைப்புற்று அவனது கைகளை பற்றிக் கொண்டான்.

“நீங்க சிரிக்கும் போது ரொம்ப அழகா இருக்கிங்க மச்சான்.” தன்னையும் அறியாமல் சார் என்ற அழைப்பு மச்சானாக மாற, அவனை திரு கேலியாக பார்த்தான்.

கோபப்பட்டுவிட்டானோ என்று விக்கி கலவரமாக பார்க்க, திருவோ வாய்விட்டு சிரித்தான்.

“எப்படி டா??? ரெண்டு பேருமே இதே டையலாக்க சொல்றிங்க???, இன்ட்ரஸ்டிங்… சரி ஏன் மூணு நாளா ஆபிஸ் வரலை???” மூன்று நாட்களாக வராததின் காரணம் அறிய வேண்டி, திரு கேட்க.,

“அதுவா மச்சான், நாங்க வீடு ஷிப்ட்டாகுறதுக்காக லீவ் போட்டுருந்தோம்.”

“உனக்கு என் மேல கோபமாவே இல்லையா டா??? இப்போ நான் வந்து பேசினதும் எல்லாத்தையும் மறந்து பேசிட்டியே” அன்று தன் மீது அப்படி கோபப்பட்டவன் இன்று சரளாமாக பேசவும் திருவிற்க வியப்பாக இருந்தது.

“கோபம் இருந்துச்சு மச்சான்.. அன்னைக்கு வினுவை நீங்க அடிச்சதும் அவ்வளவு கோபம் ஆனா வினுவுக்கு உங்களை ரொம்ப பிடிச்சிருக்கு. நான் கூட வீடு ஷிப்ட்டாக வேண்டாம்னு தடுத்தேன் பட் வினு ரொம்ப ஸ்ட்ராங்கா இருந்தா. அவளுக்கு அவ பொண்ணு கூட ப்ரெண்ட்டாகணுமாம். நீங்க உண்மை தெரிஞ்சதும் கண்டிப்பா வருத்தப்படுவீங்கன்னு சொல்லிட்டு இருந்தா அதனால தான் நாளைக்கு வர்றதா இருந்த வீட்டுக்கு நேத்தே குடி வந்துட்டோம்.” அனைத்தையும் விக்கி கூறவிட திருவிற்கு வினுவின் காதலை நினைத்து பிரம்மிப்பாக இருந்தது.

தான் ஓட ஓட துரத்தி வந்து நேசம் காண்பிப்பவளின் அன்பும் காதலும் அவனை அவள் பக்கம் சாய்க்க முயல, அவனோ பிடிவாதமாக அவன் மனதை அடக்கினான். இது சரியில்லை…இனி தன் வாழ்வு ஹனிக்காக மட்டுமே என தனக்கு தானே அறிவுறுத்திக் கொண்டவன் தன்னை பார்த்தவாறே நின்றிருந்த விக்கியிடம்.,

“இன்னைக்காச்சும் ஆபிஸ் வர்ற ஐடியா இருக்கா???” அவர்களின் டீம் லீடராக மாறி திரு வினவ.,

“ஆமா மச்சான். இன்னைக்கு வந்துடுவோம்.” என்றவன் சிறிது நேரம் பொதுவாக பேச, திருவும் விக்கியோடு இணைந்து ஜாகிங் செய்தவாறே பேசினான். இருவருக்குள்ளும் மெலிதான நட்பு வந்திருந்தது.

இருவரும் சேர்ந்தே அவர்கள் வீடு இருக்கும் தெருவை அடைந்தவர்கள் புன்னகைத்தவாறு தங்களின் வீடுகளுக்கு சென்றனர். உள்ளே நுழைந்ததும் வினுவை தேடிச் சென்று விக்கி அனைத்தையும் கூற, வினுவிற்கு கடுகடுவன்று ஆனது.

“என்கிட்ட பேசாம உன்கிட்ட ஏன் பேசுறான்??? எனக்கு அப்போவே தெரியும் நீ என்னையும் அரசுவையும் சேர்த்து வைக்காம உன்கூட கெமிஸ்ட்ரி வொர்க் அவுட் பண்ண பார்க்கிற…” வினு பொறாமையுடன் அவனை முறைத்தாள்.

“ஹி .. ஹி நான் என்னடி பன்றது.. கடவுள் என்கூட தான் மச்சானை ரொம்ப கோர்த்துவிடுறார். நான் என்ன பண்ணட்டும்…” சிரித்தவாறு கூறியவன் மேலும் திரு அவனிடம் ப்ரெண்ட்ஸ் என்று கூறியதை எல்லாம் கூறி அவளை வெறுப்பேற்ற வினுவிற்கு திருவின் மேல் ஷேர் மார்க்கெட்டின் நிலவரத்தை விட வேகமாக கோபம் ஏறியது.

அதே கோபத்தோடு ஆபிஸிற்கு ரெடியாகி வெளியே வந்தாள். சரியாக திருவும் ஹனியை அழைத்துக் கொண்டு வர., திருவை பார்த்ததும் முகத்தை திருப்பிக் கொண்டவள் ஆசையாக ஹனியை பார்த்தாள்.

‘நேற்றுக் கூட நல்லாத்தானே என்கிட்ட வம்பிழுத்தாள் இன்னைக்கு என்னாச்சு?’ திரு புரியாமல் விழிக்க, வினு அவளது கைப்பையில் இருந்து சாக்லெட் ஒன்றை எடுத்து ஹனியிடம் காண்பித்து வா என்பது போல் அழைத்தாள்.

சாக்லெட்டை பார்த்த ஹனி அவள் முதுகில் போட்டிருந்த தன் பேக்கை கழட்டி அதனுள் இருந்து வினுவின் கையில் இருந்தைவிட பெரிய சாக்லெட் பாராக எடுத்து காண்பித்து “வெவெவெ” என்க, விக்கி விழுந்து விழுந்து சிரித்தான். திருவிற்கு மெலிதாக சிரிப்பு எட்டிப் பார்க்க ஹனியை அழைத்துக் கொண்டு சென்றுவிட்டான்.

“சின்ன பிள்ளை… உன்னை டேமேஜ் பண்ணிட்டா டி வினு.,” அவர்கள் சென்ற பின்னும் விக்கி சிரிக்க அவனை முறைத்தவள் அவனை அடிக்க கட்டையை தேட. அதில் அவன் பயந்து,

“சாரி வினு… நோ வெப்பன்ஸ்..”. என சரண்டர்ராகிவிட்டான்.

“இனி பேசின கொண்ணுடுவேன். வாடா லேட்டாச்சு… “தன் ஸ்கூட்டியை எடுத்தவள் கிளம்ப, விக்கியும் அவள் பின்னால் அமர்ந்துக் கொண்டான்.

இருவரும் ஆபிஸிற்கு செல்ல, மூன்று நாட்கள் விடுப்பு எடுத்திருந்ததால் அவர்களுக்கான வேலை நிறைய காத்திருந்தது. மதிய இடைவெளிக்குப்பின் விக்கி வினுவின் ஸ்கூட்டியை எடுத்துக் கொண்டு அவர்களது கம்பெனியின் மற்றொரு கிளை அலுவலத்திற்கு சென்றுவிட, மாலை வினு தனியாக ஆட்டோவிற்க்காக காத்திருந்தாள். விக்கிக்கு வேலை முடிய தாமதம் ஆகும் என்பதால் அவளுக்கு அழைத்து ஆட்டோ பிடித்து சென்றுவிடும்படி கூறியிருந்தான்.

வேலை முடிந்ததும் தன் காரில் வீட்டிற்கு கிளம்பிய திரு வினுவை பஸ் ஸ்டாப்பில் பார்த்து காரை ஸ்லோ செய்ய, வினு காலையில் விக்கியிடம் மட்டும் நன்றாக பேசியிருக்கிறான் என்ற கோபத்தில் அவனை கண்டுக் கொள்ளாமல் நின்றாள்.

காரை நிறுத்திவிட்டு அவளுக்காக அவன் காத்திருக்க, வினுவோ நீ நிறுத்தினா நான் ஏறிடனுமா என்ற ரீதியில் நின்றிருந்தாள். அவனை கண்டுக் கொள்ளாமல் அவள் வேறு திசையை பார்த்தவாறு நிற்க, திருவிற்கு அவளை எப்படி அழைப்பது என்று தெரியவில்லை.

ஐந்து நிமிடங்கள் கழிந்திருக்க இருவருமே பேசுவதற்கு எந்த முயற்சியும் எடுக்கவில்லை. நேரம் செல்ல செல்ல வினுவின் மனம் வேறு ‘விட்டுட்டு போய்டுவானா??? பேசாம நிறுத்தினதும் ஏறியிருக்கலாம்.. கோபமா இருக்கேன்னு காண்பிக்கிறதுக்காக ரொம்ப சீன் போட்டுட்டோமே… இனி நாமாள போய் ஏறினாலும் கேவலம்..’.என்று அவளையே சாடியது.

வருவாள் என்று எதிர்ப்பார்த்தவன் அவள் வராததும் திரும்பி அவளது முகம் பார்த்தான். ஓரக் கண்ணால் அவனை பார்த்துக் கொண்டிருந்தவள் அவன் பார்த்ததும் கண்டுக்கொள்ளாதது போல் நின்றாள்.

“வினு… நான் வீட்டுக்கு தான் போறேன்… நீயும் வா… நான் ட்ராப் பண்றேன்.” ஒருவழியாக தயக்கத்தை உடைத்து அவன் அழைத்து விட… எப்போதடா அழைப்பான் என்று காத்திருந்தவள் பிகு செய்யாமல் வந்து ஏறிக் கொண்டாள்.

அவள் ஏறியதும் திரு காரை ஸ்டார்ட் செய்தான், காரினுள் ஓடிக் கொண்டிருந்த எப்.எம் யை தவிர, இருவருக்குள்ளும் அப்படி ஒரு அமைதி… அவனாக பேசாமல் தான் பேசக் கூடாது என்று வினு தன் வாயை சிப் போட்டு பூட்டிக் கொண்டு அமர்ந்திருக்க, எப்போதும் தன்னருகே சலசலத்துக் கொண்டிருப்பவளின் அமைதி ஏனோ அவனுக்கு பிடிக்கவில்லை…

“தேங்க்ஸ்….” சாலையில் கவனம் பதித்தவாறு அவன் கூற..

“ஹேய் நான் கார்ல ஏறினதுக்காக எல்லாம் நீ தேங்க் பண்ண வேண்டாம்…” அவனது தேங்க்ஸ் எதற்க்காக என்று புரிந்தாலும்., அவளை பொறுத்தவரை அது தேவையில்லாதது….. என்று அவனை காதலிப்பதாக கூறிவிட்டாளோ அன்றே அவன் அவளின் உயிராகி போனான்… அவனுக்கு செய்வது தனது கடமை என்றே எண்ணினாள். தேங்க்ஸ் சொல்வது அவளை விட்டு அவனை பிரிப்பது போல் இருக்கவும் தான் அவ்வாறு கூறினாள்.

என்ன சொல்கிறாள் இவள் என்று அவன் பார்க்க, அவள் கண்கள் இரண்டும் சிரித்தது….. அவளது குறும்பு புரிந்துவிட,

“உனக்கு கொழுப்பு கொஞ்சம் இல்லை நிறையவே கூடிடுச்சு….” என்றான் சிரிப்போடு

எப்போதும் தன்னை திட்டுபவன் முதல் முறையாக தன்னிடம் கேலி பேசவும் வினு மயங்கித்தான் போனாள். அதுவும் அந்த கன்னக்குழி அழகில் பெண்ணவள் தடுமாறித்தான் போனாள்.

அவளது பார்வையில் கட்டுண்டு அவன் பார்த்திருக்க, அந்த அமைதியை கிழித்துக் கொண்டு கேட்டது எப்.எம் இல் ஒலித்த பாடல்.

கண் பார்த்து கதைக்க…
முடியாமல் நானும்…
தவிக்கின்ற ஒரு பெண்ணும் நீ தான்…
கண் கொட்ட முடியாமல்
முடியாமல் பார்க்கும்..
சலிக்காத ஒரு பெண்ணும் நீ தான்….
சலிக்காத ஒரு பெண்ணும் நீ தான்……..

வெளியே லேசாக மழை தூரல் போட ஆரம்பித்திருக்க, காரின் உள்ளே கேட்ட பாடலில் திருவின் மனம் ஒரு நிலையில் இல்லை… அவனுக்காகவே எழுதப்பட்டது போல் வரிகள் அனைத்தும் பொருந்திப்போக., வினுவின் கண்களில் தெரியும் காதலில் மனம் மூழ்கிப் போக சொல்லியது.

அவனின் எண்ணவோட்டங்களுக்காக காத்திராமல் பாடலின் அடுத்து வரி இசைக்க ஆரம்பித்திருந்தது….

பார்த்த முதல் நாளே
உன்னை பார்த்த முதல் நாளே…
காட்சி பிழை போலே
உணர்ந்தேன் காட்சி பிழை போலே…
ஓர் அலையாய் வந்து என்னை அடித்தாய்…
கடலாய் மாறி பின் என்னை இழுத்தாய்..
என் பதாகை தாங்கிய உன் முகம் உன் முகம்
என்றும் மறையாதே……

பாடல் முடிந்து அடுத்த பாடல் ஒலிக்க ஆரம்பித்துவிட… இருவராலும் அதன் வரிகளில் இருந்து மீள முடியவில்லை…இருவரும் ஒருவொரில் ஒருவொருவர் மூழ்க ஆரம்பித்திருக்க.. திருவின் கைகள் தாமாக காரை ஓரம்கட்டி நிறுத்தியதையோ…. தன்னை பார்த்தவாறு அமர்ந்திருந்தவளை அணைத்துக் கொண்டதையோ., அவன் அணைப்பில் அவள் பாந்தமாக அடங்கிக் கொண்டதையோ இருவருமே அறியர்.

அனைத்தையும் மறந்து இருவரும் தங்கள் துணையின் அணைப்பில் கட்டுண்டிருக்க., தங்களின் காரை கடந்து சென்ற மற்றொரு கார் ஹார்ன் ஒலியில் இருவரும் கலைந்தனர்…

தன் அணைப்பில் சுகமாய் அடங்கியிருந்தவளை பார்த்தவன் தீ சுட்டாற் போல் அவளை தன் அணைப்பில் இருந்து விலக்க., வினுவோ நாணத்தில் சிவந்தாள்….

என்ன செய்துவிட்டோம் என தன்னை நொந்தவாறு திரு அவளது முகம் பாராமல் சாலையை வெறித்தான்… உதடோ “ஷி இஸ் மெஸ்மரைசிங் மீ” என்று முணுமுணுத்தது. தலையை அழுத்தமாக கோதியவன் ஸ்டியரிங்கில் ஓங்கி குத்தினான்.

அதில் நாணத்தில் சிவந்துக் கொண்டிருந்தவள் அவனை பார்க்க.., அவனோ அவளையும் திரும்பியும் பாராமல் காரை எடுத்தான்… தன் மேலேயே கோபம் கொண்டவன் அதை காரிடம் காண்பிக்க.. அவன் கைகளில் கார் பறந்தது. அரை மணி நேரத்தில் அவர்கள் அடைய வேண்டிய இடத்திற்கு அவன் பத்து நிமிடத்தில் சென்றடைய., வினு அவனிடம் என்னப் பேசுவது என்று புரியாமல் உதடு கடித்தாள்…

“அரசு…” அவனிடம் பேச அவள் முயல…

“கெட் அவுட்….” குரல் எழுப்பாமல் கடுமையாக அவன் கூற.,

அவன் தன்னை பார்க்காமல் இருப்பதில் இருந்தே மனதுக்குள் எதையோ நினைத்து மருகுகிறான் என்று உணர்ந்தவள் எதுவும் பேசாமல் இறங்கினாள். அவள் இறங்கிய அடுத்த நொடி தன் காரோடு திரு அவன் வீட்டிற்குள் நுழைய, வினு அந்த மழை சாரலில் நனைந்தவாறு அவன் வீட்டை பார்த்திருந்தாள்..

விழிகள் தொடரும்……

Facebook Comments Box
What’s your Reaction?
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here