மின்னல் விழியே குட்டித் திமிரே – 14

0
639
1551018907221|679x452

மின்னல் விழியே – 14

திருவும் வினுவும் காதலிக்க துவங்கி ஒரு மாதம் தான் ஆகிறது என்று சொன்னால் யாரும் நம்ப மாட்டார்கள். அந்த அளவிற்கு இருவரும் ஒருவர் மேல் ஒருவர் உயிராக இருந்தனர்.. ஹனி வினுவை தனது அன்னையாகவே நினைக்க தொடங்கியிருந்தாள். அந்த அளவிற்கு ஹனியின் மனதில் இடம் பிடித்திருந்தாள் வினு.

விக்கியும் ஹனியும் இப்போது சிறந்த நண்பர்களாம். அப்படி தான் சொல்லிக் கொண்டு திருவை ஒரு வழியாக்குகிறார்கள் இருவரும்.

“ஆபிஸில் உன்னை அதிகமா வேலை வாங்குறதுக்காக தான் என் பொண்ணை வச்சே என்னை பழி வாங்குறியா டா” என்று விக்கியிடம் திரு அலுத்துக் கொள்வான்.. அதை எதையும் கண்டுக் கொள்ளாமல் தங்கள் சேட்டையை செவ்வன செய்தார்கள் விக்கியும் ஹனியும். சில நேரம் வினுவும் அவர்களோடு இணைந்துக் கொள்வாள். எவ்வளவு அடித்தாலும் தாங்குவேன் என்பது போல் திருவும் அவர்களின் சேட்டையை தாங்கிக் கொள்வான்..

இந்த ஒரு மாதமாக அவர்கள் பார்க்கும் இந்த திரு அவர்களுக்கு மிகவும் புதியவன். எப்போதும் சிடுசிடுவென்று இருப்பவன் இப்போதெல்லாம் வாய்விட்டு சிரிக்கிறான்… ஆபிஸில் கூட அனைவரும் ஆச்சரியமாக பார்க்கிறார்கள். ஓரளவிற்கு அனைவருக்கும் அவர்களின் காதல் விவரம் தெரியும் என்பதால் அவர்களுக்கும் இந்த மாற்றம் எதனால் என புரிந்தது.

வினு மட்டும் எப்படியாவது, தான் அகிலின் தங்கை என கூறிவிட வேண்டும் என ஒவ்வொரு முறையும் திருவிடம் சொல்ல முயல்வாள். ஆனால் அவன் அன்பை அனுபவிப்பவளுக்கு அவன் கண்களை பார்த்து சொல்ல வராது. தொண்டை வரை வரும் வார்த்தைகள் அதற்கு மேல் வரமாட்டேன் என சதி செய்யும். திருவும் தன் குடும்பத்தை பற்றி எதுவும் கூறியதில்லை… வினுவும் அதை கேட்காமல் இருப்பதில் அவனுக்கு பெரும் ஆச்சரியமே… அதை அவளிடம் கேட்கவும் செய்தான்.. ஆனால் வினுவோ,

“உனக்கு தோணும் போது சொல்லு அரசு…உன்னை கஷ்டபடுத்தி நீ எதுவும் சொல்ல வேண்டாம்” என சிரித்தவாறு கூறிவிட்டாள்… திரு கூட அவளை கண்டு நெகிழ்ந்து போனான்…….. மொத்ததில் திருவின் வாழ்க்கை தெளிந்த நீரோடையாக சென்றுக் கொண்டிருந்தது.

மும்முரமாக வேலை செய்து கொண்டிருந்தாள் வினு முடிக்கப்பட வேண்டிய ப்ராஜக்ட் ஒன்று இருக்க அதில் கவனம் வைத்திருந்தவளை தொல்லை செய்தது அவளது அலைபேசி.. தனது அலைபேசியை எடுத்து யார் அழைக்கிறார்கள் என்று பார்த்தவள் திருவின் எண் என்றதும் முகத்தில் தோன்றிய புன்சிரிப்புடன் அதை ஆன் செய்தாள்.

“அரசு..” வேலை செய்யும் நேரத்தில் எப்போதும் அழைக்க மாட்டானே என்று யோசித்தவாறே வினு கேட்க.,.

“புஜ்ஜி மா உடனே என்னோட கேபினுக்கு வா…” வேகமாக கூறியவன் அழைப்பை துண்டித்துவிட்டான். என்னவாக இருக்கும் என்று யோசித்தவாறே வினு அவனது கேபினுக்கு சென்றாள்.

மெலிதாக ஒருமுறை அறைக் கதவை தட்டியவள், அறையினுள் நுழைய., அடுத்த நிமிடம் அவளை பின்னாலிருந்து அணைத்துக் கொண்டான் திரு. எப்போதும் ஆபிஸில் இவ்வாறு நடந்துக் கொள்ள மாட்டான் என்பதால் அவனது திடிர் அணைப்பில் தடுமாறினாள். அதிலும் அவனது மேனி நடுங்குவதை உணர்ந்தவள்… அதிர்ந்தாள்…

“அரசு.. என்னாச்சு மா…” தன் இடையில் கை கொடுத்திருந்தவனின் கை மேல் தன் கையை வைத்தவள் என்னவென்று கேட்க… அவனிடம் பதில் இல்லை… மாறாக அவனது அணைப்பு இறுகியது. .

அவனிடம் எந்த பதிலும் இல்லாது போக., நடுங்கிக் கொண்டிருக்கும் அவனை அவனது முதுகில் தட்டிக் கொடுத்தவாறு சற்று நேரம் அப்படியே நின்றாள்..

நேரம் செல்ல செல்ல அணைப்பை இறுக்கினானே தவிர எதையும் கூறவில்லை… ஒரு கட்டத்திற்கு மேல் வினுவின் பொறுமை பறக்க… அவனை தன்னிடமிருந்து பிரித்தாள்.. ஆனால் அவனோ மேலும் அவளோடு ஒன்ற முயல… வினுவிற்கு பதட்டம் அதிகரித்தது..

“என்னாச்சு மா???” அவனது கன்னத்தில் தனது வலது கையை வைத்து அவள் கேட்க… அவள் கண்களை ஆழப் பார்த்தவன் மேசை மேல் இருந்த லெட்டரை எடுத்து வந்து அவளிடம் நீட்டினான்.

என்னவென்று புரியாமல் அதை வாங்கியவள், அனுப்புநர் உறையில் இருந்த சுமியின் பெயரை காண., அவளுக்கு இதயம் படபடத்தது. திருவை நிமிர்ந்து பார்த்தவள், அவன் முகத்தில் இருந்து எதையும் கணிக்க முடியாமல், அந்த லெட்டரை பிரித்தாள்.

ஏற்கனவே திருவிடம் உன்மையை மறைக்கிறோம் என்று குற்றவுணர்வில் தவிப்பவள், கைகள் நடுங்க அந்த லெட்டரை வாசிக்க ஆரம்பித்தாள்.

அன்புள்ள அண்ணாவுக்கு,
தங்களது அன்புத் தங்கை சுமி எழுதுவது… எப்படியிருக்க அண்ணா??? என் பொண்ணு எப்படி இருக்கிறாள்??? கண்டிப்பா நல்லா தான் இருப்பா… ஏன்னா அவ உன்கிட்ட வளருரா நிச்சயமா நீ என்னை விட என் பொண்ணை ரொம்ப நல்லா பார்த்துக்குவன்னு எனக்கு தெரியும்.

யாரோ ஒருத்தன் ஏமாத்திட்டான் அப்படிங்கிறதுக்காக கோழை மாதிரி ஓடி ஒளிஞ்சிட்டேன் அண்ணா.. அது எவ்வளவு தப்புன்னு இப்போ தான் புரியுது. என் மகளோட இருக்க முடியாத பாவியாகிட்டேன்.. என்னோட வாழ்கையும் தொலைச்சிட்டு உன்னையும் கஷ்டப்படுத்திட்டேன் அண்ணா… இதுக்கு மேல என்னால உங்களை எல்லாம் பிரிஞ்சி இருக்க முடியாது. நான் உன்கிட்டயே திரும்பி வந்துடுறேன்… இருக்கிற மிச்ச வாழ்கையையும் என் பொண்ணு கூட இருக்கணும்னு ஆசையா இருக்கு…. வரும் புதன்கிழமை நான் பெங்களூர் வரேன்… இந்த தங்கச்சியை மன்னிச்சி வந்து கூட்டிட்டு போ அண்ணா.. உனக்காக நான் ரெயில்வே ஸ்டேஷன்ல காத்திருப்பேன்… உன்னையும் ஹனியையும் பார்க்க ரொம்ப ஆசையா இருக்கு.

                         இப்படிக்கு
                          சுமித்ரா

அதில் இருந்ததை வாசித்து முடித்தவள் திருவை பார்க்க, அவன் முகத்தை இறுக்கமாக வைத்துக் கொண்டு நின்றிருந்தான். வெளிப் பார்வைக்கு அமைதியாக நிற்பது போல் தோன்றினாலும், அவனுக்குள் ஒரு பிரளயமே வெடித்துக் கொண்டிருந்தது. தங்கை வருகிறாள் என்ற செய்தி மகிழ்ச்சியை அளித்தாலும் பழையது அனைத்தும் ஞாபகம் வந்து அவனை கொன்றது.

அவன் மனதுக்குள் போராடிக்கொண்டிருக்கிறான் என்பதை அவனது அமைதியான தோற்றத்தில் இருந்தே கண்டு கொண்ட வினு, அவனை மெலிதாக அணைத்துக் கொண்டாள்..

“அரசு…. வெளியே எங்கேயாச்சும் போகலாமா???” இதற்கு மேல் தான் யார் என்று சொல்வதை தாமதபடுத்த அவள் விரும்பவில்லை… முடிந்தவரை இன்றே சொல்லிவிட வேண்டும் என முடிவெடுத்தவள், அவனது பதிலுக்காக அவன் முகத்தை பார்க்க..

அவனுக்கும் இப்போது இருக்கும் மனநிலையில் வேலை செய்ய முடியும் என்று தோன்றாததால் சரி என்று ஒப்புக் கொண்டான்.

இருவரும் விக்கியிடம், ஹனியை அலுவலகம் முடிந்து பார்த்துக் கொள்ளுமாறு கூறிவிட்டு அலுவலகத்தில் இருந்து திருவின் காரில் கிளம்பினர்..

திருவிடம் எப்படி உன்மையை கூறுவது என மனதுக்குள் ஒத்திகை பார்த்தவாறே வந்தவள் கார் நின்ற சத்ததில், சுற்றுப் புறத்தை பார்க்க.,

கார் ஒரு வீட்டின் முன்பு நின்றிருந்தது. யாருடைய வீடு இது என்று அவள் அந்த வீட்டை பார்க்க., திரு காரிலிருந்து இறங்கி வந்து அவள் பக்க கார் கதவை திறந்துவிட்டான். அவனை பார்த்து முறுவலித்தவாறே இறங்கினாள் அவள்.

அவளது கைகளை பற்றியவன் கேட்டை திறந்துக் கொண்டு அந்த நீண்ட நடைபாதையில் நடக்க., எங்கே அழைத்து செல்கிறான் என்று யோசித்தவாறே அவனுடன் வந்தவள், அந்த வீட்டை பார்த்தாள்..

திரு தற்போது இருக்கும் வீட்டை விட பெரியதாக இருந்தது அந்த இரண்டு அடுக்குமாடி வீடு.

வீட்டின் கதவை திறந்தவன் அவளோடு உள்ளே நுழைய…. அவர்களை வரவேற்றது வரவேற்பறையில் பெரிதாக ப்ரேம் போட்டு மாட்டப்பட்டிருந்த திருவினது குடும்ப படம்… அதை பார்த்தவாறு திரு நின்றுவிட, வினுவிற்கு புரிந்தது இது யாருடைய வீடு என்று.

கண் மூடி நின்றவன், வினுவின் கையை அழுத்தமாக பற்றி தன் உணர்வுகளை அடக்க முயன்றான்.

தன் கையை பிடித்திருந்த அவனது கையின் மேல் அவளது மற்றொரு கையை வைத்தவள், “அரசு” என்க., அதில் சுயவுணர்வு அடைந்தவன், அவளை பார்த்து மெலிதாக புன்னகைக்க.. வினு அவனது தோளில் சாய்ந்துக் கொண்டாள்.

இருவரும் அப்படியே நிற்க., திருவே பேச்சை தொடங்கினான்.

“என்னோட வீடு புஜ்ஜி மா…. நானும் சுமியும் இந்த வீட்ல தான் வளர்ந்தோம்…சுமி எங்களை விட்டுட்டு போனதுக்கு அப்புறம் இங்க இருக்க பிடிக்கலை.. அதனால மூனு வருஷம் ஆபிஸ்ல ஆன்சைட் ப்ராஜக்ட் வாங்கிட்டு ஹனியை கூட்டிட்டு யு.எஸ் போய்ட்டேன்.” என்றவன் அந்த நாட்களுக்கே சென்றுவிட அவன் கண்களில் வெறுமை படர்ந்தது.

அவன் கைகளை வினு அழுத்த., தன்னை நிதானப்படுத்திக் கொண்டவன் மேலும் தொடர்ந்தான். “திரும்பவும் பெங்களுர் வந்ததும் இங்க இருக்க பிடிக்காமல் அந்த வீட்டை வாங்கினேன். இந்த வீட்டை ஆள் வைச்சு அடிக்கடி சுத்தம் செய்வேன்… இன்னைக்கு சுத்தம் பண்ண வந்தவங்க சுமிகிட்ட இருந்து வந்திருந்த லெட்டரை பார்த்துட்டு என்னை கூப்பிட்டாங்க…” என்றவன் நிறுத்த., புரிந்தது என்பது போல் அவன் கரங்களை தட்டிக் கொடுத்தாள்.

அவளை அழைத்துக் கொண்டு பூஜையறையை நோக்கி சென்றவன் அங்கிருந்த அவனது அன்னையின் போட்டோவின் முன் மண்டியிட்டான். அவர்களின் முகச்சாயலிலே அது அவனது அன்னையாக இருக்கும் என அனுமானித்துக் கொண்டவள், அவனை போல் மண்டியிட்டாள். போட்டோவின் முன் இருந்த விளக்கை பார்த்தவள் அதை ஏற்றினாள்..

கைகளை கூப்பி மனமுருக வேண்டியவள் கண்களை திறக்க., திரு அப்போதும் அவனது அன்னையின் போட்டோவை பார்த்து கண்கலங்கியவாறு அமர்ந்திருந்தான். அவன் தோள்களில் கை வைத்தவள் கண்களால் அவனுக்கு ஆறுதலளித்தாள்.

“எனக்கு ஆறு வயசு இருக்கும்… என் கண்ணு முன்னாடியே ஒரு விபத்துல அம்மா துடிதுடிச்சி இறந்தாங்க… அப்போ சுமிக்கு மூனு வயசு. அம்மாவுக்காக அழுதுகிட்டே இருப்பா… அவ அழுறது தாங்க முடியாம அப்பாவும் கண்கலங்கி அவளை சமாதனம் பண்ண முயற்சி பண்ணுவாங்க… என்னால கண்ணை மூடக் கூட முடியாது.. கண்ண மூடினாலே என் அம்மா துடிதுடிச்சி இறந்தது தான் ஞாபகம் வரும். நைட்டெல்லாம் தூங்காம முழிச்சி சுவத்தை வெறிச்சி பார்த்துட்டு இருப்பேன்… ஒரு நாள் அப்பா அதை கவனிச்சிட்டு என்கிட்ட என்னன்னு கேட்டாங்க… நானும் சொன்னேன்…. என்னால தூங்க முடியலைன்னு… என்னை கட்டி பிடிச்சிட்டு அழ ஆரம்பிச்சிட்டாங்க… “

“அதுக்க அப்புறம் ஹாஸ்பிட்டல்ல காண்பிச்சு மனநல டாக்டரை பார்த்து, கொஞ்சம் கொஞ்சமாத்தான் என்னை சரி பண்ண முடிஞ்சிது… அதுக்கு முக்கிய காரணம், என்னோட அப்பா தான்… எங்களுக்காக அம்மாவ மாறிட்டாங்க… சென்னைல இருந்தா திரும்ப திரும்ப அம்மா இறந்த இடத்தை பார்க்கும் போது கஷ்டமா இருக்கும்னு தான் அங்க இருந்த வீட்டை வித்துட்டு இங்க வந்தோம்.. புதுசா வாழ ஆரம்பிச்சோம்…”

“நீ என்னை முதல்முதல சென்னைல பார்க்கும் போது ஒரு பொண்ணை அடிச்சதை பார்த்தேன்னு சொன்னியே…. அந்த இடத்தில தான் என் அம்மாவை நான் இழந்தேன்… சரியா அந்த இடத்துல வச்சி, நான் வந்துட்டு இருந்த கார் முன்னால அந்த பொண்ணுங்க விழவும் கோபம் வந்திடுச்சு.. அதனால தான் கொஞ்சம் கூட யோசிக்காம அடிச்சேன்…”

அவன் கூறியதை கேட்டவள் எப்படி உணர்ந்தாள் என்று அவளுக்கே தெரியவில்லை… அவனுக்குள் இப்படி ஒரு சோகம் இருக்கும் என்று கனவிலும் அவள் நினைத்தது இல்லை.. அவன் பின்னால் இப்படி ஒரு கதை இருக்க, தான் எவ்வளவு முட்டாள் தனமாக பஸ் ஸ்டான்டில் வைத்து, அவனை அடித்துள்ளோம் என தன்னை நினைத்தே அவமானமாக இருந்தது..

அதைவிட சிறுவயதில் தாயை இழந்து எப்படி துன்பப்பட்டிருப்பான் என நினைக்கும் போதே இதயத்தை கசக்கி பிழிந்தது போல் வலியெடுத்தது.. தன் தந்தை வேலை வேலை என்று ஓடினாலும் தானும் விக்கியும் அன்னையின் அன்பிலும் அண்ணன்களின் பாசத்திலும் எப்படி வளர்ந்தோம் என்ற நினைவே அவளை மேலும் வேதனையடைய செய்தது…

வினுவின் கண்களுக்கு, அவள் முன்னால் ஆறு வயது திரு அன்னைக்காக ஏங்கி அமர்ந்திருப்பது போல் தோன்றி அவளை வதைக்க… அடுத்த நிமிடம் எழுந்தவள், மண்டியிட்டு அமர்ந்திருந்தவனை தன் வயிற்றோடு அனைத்திருந்தாள்.. அவனும் அவளது இடையை கட்டிக் கொண்டு, கலங்கிய தன் கண்களை அவள் வயிற்றில் புதைத்து மறைத்துக் கொண்டான்… அவன் தன்னை சமன்படுத்திக் கொள்ளும் வரை அவன் தலையை ஆதரவாக கோதினாள்….

இன்று அனைத்தையும் அவளிடம் கூறிவிட வேண்டும் என்று நினைத்தவன், சற்று நேரத்தில் தன்னை நிலைபடுத்திக் கொண்டான். அவளை அழைத்துக் கொண்டு அங்கிருந்த மற்றொரு அறைக்கு வந்தவன் மெதுவாக அங்கிருந்த பொருட்களை தொட்டுப் பார்த்தான்…

அந்த அறை சற்று விசாலமாகவே இருந்தது.. அது திருவினது தந்தையின் அறை என்பது அங்கு இருந்த அவரின் பொருட்கள் மூலமாக வினு புரிந்துக்கொண்டாள்.

நடுவில் ஒரு பெரிய பெட் போட்டிருக்க… அந்த அறை முழுதும் திரு மற்றும் சுமியின் சிறு வயது புகைப்படங்கள் இருந்தது. அதை ஒவ்வொன்றாக பார்த்தவளின் கண்கள் அதில் இருந்த ஒரு போட்டோவின் முன்பு நிலைகுத்தி நின்றது… சுமி மனக்கோலத்தில் நின்றிருக்க, அவளது தோளில் கையை போட்டு அணைத்தவாறு, மனக்கோலத்தில் நின்றிருந்தான் அவளது அண்ணன் அகில் குமார்.

அதை பார்த்ததும் வினுவின் கைகளும் கால்களும் நடுங்க ஆரம்பிக்க, நடுக்கத்தில் ஒரு அடி பின் நகர்ந்தாள்.. அவள் பின் நின்றிருந்த திருவும் அந்த புகைப்படத்தை தான் பார்த்தவாறு நின்றிருந்தான்.. கண்களில் அத்தனை கோபம்… தன் முன்னால் அகில் வந்தால் அவனை வெட்டி கொன்றுவிடும் அளவிற்கு வெறி. கை முஷ்டியை இறுக்கி தன் கோபத்தை கட்டுப்படுத்த முயன்று கொண்டிருந்தவனின் மேல் பின்னால் நகர்ந்த வினு இடித்துக் கொள்ள… அவனை திரும்பி பார்த்தாள்…

அவன் கவனம் அவளிடம் இல்லை… அந்த போட்டோவை வெறித்தவாறு நின்றிருந்தான்… தன் பார்வையை அவனிடம் இருந்து விலக்கி, மீண்டும் போட்டோவின் பக்கம் திருப்பியவளின் கண்களில் விழுந்தது மற்ற போட்டோக்கள்… திருவும் அகிலும் சிரித்தவாறு நின்ற புகைப்படங்கள்… அதுமட்டுமல்லாமல் திருவின் தந்தையோடும் நின்றிருந்தான்… அதை பார்க்க பார்க்க தன் அண்ணன் இந்த குடும்பத்தில் ஒருவனாக வாழ்ந்திருக்கிறான் என்று புரிந்தது…

வினு அந்த புகைப்படங்களை பார்த்தவாறு நிற்க.,

“இந்த உலகத்துல என்னை அரசுன்னு கூப்பிடுறது மூனு பேர் தான்…” அமைதியை கிழித்தவாறு திரு கூற, வினு அவனை திரும்பி பார்த்தாள்..

“என்னோட அம்மா… ரெண்டாவது இதோ இவன்… மூணாவது நீ…..” அகிலை சுட்டிக் காண்பித்தவன் மீண்டும் தன் நினைவுகளுக்குள் சென்றுவிட., வினுவிற்கு அவன் ஏன் தன்னை அரசு என்று கூப்பிடாதே என்று திட்டினான் என்று புரிந்தது.. தான் அகிலை ஞாபகப்படுத்துவதால் தான் தன்னை திட்டி விலக்க முயன்றிருக்கிறான் என்பது தெளிவானது.

மீண்டும் அங்கு அசாத்திய அமைதி நிலவ., தன் வலிகளோடு போராடிக் கொண்டிருந்தவன் இனி பாரத்தை சுமக்க முடியாது என்று நினைத்தானோ என்னவோ வினுவிடம் இத்தனை நாட்களாக தன் குடும்பத்தை பற்றி கூறாத அனைத்தையும் கூறத் துவங்கினான்.

அவன் கூற கூற வினுவிற்குள் பூகம்பம் , சுனாமி, நிலநடுக்கம் என அனைத்தும் சேர்ந்து தாக்கியது… தன் அண்ணனை பற்றியே திரு கூற அகிலை யாரென்று தெரியாதது போல் நடிப்பதற்குள் வினுவிற்கு போதும் போதும் என்றாகிவிட்டது… அதிலும் திரு கூறியதில் இருந்து தன்னவன் தவறே செய்யாமல் தன் குடும்பத்தை இழந்திருக்கிறான் என்று புரிய, அவன் கைகளை தன் கைக்குள் அடக்கி கொண்டாள்…

கதறி அழாவிட்டாலும் அவன் சொல்ல சொல்ல அவன் கண்களில் இருந்து நிற்காமல் வழிந்துக் கொண்டிருந்த கண்ணீர் சொன்னது அவன் வலியையும் வேதனையையும்… அவன் வேதனையை தனதாக உணர்ந்தவள் இதற்கு மேல் சொல்ல வேண்டாம் என அவன் வாயை தன் கரங்களால் மூடினாள்…

ஆனால் இன்று அனைத்தையும் கொட்டிவிட நினைத்தவன் அவள் கரங்களை விலக்கிவிட்டு அனைத்தையும் கூறினான். அனைத்தையும் சொல்லி முடித்தவன் அவளை கட்டிக் கொண்டு அழுகையில் குழுங்க….

கம்பீரமானவனாக…. அழுத்தமானவனாக… பார்த்தவனை இப்படி பார்க்க வினுவால் முடியவில்லை… தன்னையும் அறியாமல் அவள் கண்களும் கண்ணீரை பொழிந்தது.

“நான் என்ன பாவம் செஞ்சேன்… எதுவா இருந்தாலும் என்கிட்ட சொல்லியிருக்கலாமே… இந்த அண்ணா அவளை அப்படியே விட்டுடுவேனா???? அவன் வாழ்கையை சரி பண்ணி கொடுத்திருக்க மாட்டேனா??? என்னை விடு,,, அவளோட பொண்னை பத்தி யோசிச்சாளா??? நான் என்ன தப்பு பண்ணினேன்…. ஒருத்தனை ப்ரெண்ட்னு ஏத்துக்கிட்டது தப்பா??? அஞ்சு வருஷ நட்பு… எப்படி அவனால என் தங்கச்சிக்கு துரோகம் பண்ண முடிஞ்சிது???? இதே அவனோட தங்கச்சிக்கு நான் பண்ணியிருந்தா என்னப் பண்ணிருப்பான்???” என்றவனது புலம்பலை தன் இதழ் கொண்டு மூடினாள் வினு…

அதற்கு மேல் அவளால் அவனது புலம்பலை கேட்க முடியவில்லை.. அவன் கேட்கும் ஒவ்வொரு கேள்வியும் தன் இதயத்தை கத்தி கொண்டு யாரோ குத்திக் கிழிப்பது போல் இருந்தது. அதிலும் கடைசியாக அவன் கேட்ட.. அவனது தங்கைக்கு இதே நிலை வந்திருந்தால் என்ன செய்வான் என்ற கேள்வி அவளை அசைத்து பார்தது என்னவோ உண்மை… எப்படி தன் அண்ணனால் இப்படி செய்ய முடிந்தது என்று பரிதவித்தவள் அவன் துன்பத்திற்கு மருந்தாக மாற தொடங்கினாள்.

முதலில் அவளை விலக்க நினைத்தவன் பின் தன் வேதனையின் வடிகாலாக நினைத்து அவளுள் மூழ்கினான்… ஆறுதலுக்காக தொடங்கிய முத்தம் நேரம் செல்ல செல்ல வன்மையாக மாற… இருவருக்குமே பிரியும் எண்ணம் இல்லை.. அவளை அணைத்திருந்தவனின் கைகள் தன்னவளை உணர துவங்க… அவளது மென்மையில் கரைய துவங்கினான்…

காலையில் இருந்து, தன்னை பின் தொடர்ந்து கொண்டிக்கும் கடந்த கால நிகழ்வுகளின் தாக்கத்தில் இருந்தவன் என்ன செய்கிறோம் என்பதை உணராமல் தன் மன அழுத்தத்தை அவள் மூலமாக குறைக்க முயல., பெண்ணவளோ தன்னவனின் துன்பங்கள் அனைத்தையும் தன்னை கொடுத்து சமன் செய்ய முயன்றாள்..

அவள் அவனை விலக்கியிருந்தால் நிச்சயம் அவன் விலகியிருப்பான் தான்… ஆனால் அவள் எந்த நிலையிலும் அவனை விட்டுக் கொடுக்க முடியாமல் அவனோடு கலந்துவிடவே துடித்தாள்..

மொத்ததில் தனது துன்பங்களின் வடிகாலாக அவனும்., தான் யாரென்று தெரிந்து, அவன் தன்னை விலகி விடுவானோ என்ற பயத்தில் அவளும், இணைந்து தங்கள் வாழ்வின் முதல் அத்தியாயத்தை எழுத தொடங்கியிருந்தார்கள்.

சென்னையில் தனது அறையில் அமர்ந்து சுமியின் புகைப்படத்தை பார்த்துக் கொண்டிருந்தான் அகில். எண்ணங்கள் யாவும் அவளே நிறைந்திருக்க… தன்னை ஏன் புரிந்துக் கொள்ளாமல் போனாய் என்று அவளிடம் கேட்டுக் கொண்டிருந்தான்.

வாழ்வில் ஒருமுறையாவது அவளை பார்த்துவிட வேண்டும் என ஒரு மனம் துடித்தாலும்… தன் மேல் நம்பிக்கை இல்லாமல் சென்றுவிட்டாளே என்று அவள் கோபமும் ஒருங்கே எழுந்தது..

எத்தனை சந்தோஷமாக இருந்தோம்… விதி ஏன் தங்களின் வாழ்வோடு விளையாடியது என்று நினைத்தவனின் எண்ணங்களை கலைத்தது அவனின் அலைபேசி சத்தம்…

தன் அலைபேசியை எடுத்து பார்த்தவன் ஏதோ ஒரு தெரியாத நம்பரில் இருந்து வந்திருந்த போட்டோவை பார்த்து அதிர்ந்தான்… வினு யாரோ ஒரு ஆணின் தோளில் சாய்ந்திருப்பது போல் இருக்க… அந்த ஆடவனின் முகம் தெரியவில்லை… அதை பார்த்ததும் அகிலால் நம்ப முடியவில்லை… நிச்சயம் தன் தங்கையாக இருக்க முடியாது… யாரோ அவளது போட்டோவை வைத்து மார்ஃபிங் செய்திருக்க வேண்டும் என மனம் அடித்து சொல்லியது…

வேகமாக அந்த நம்பருக்கு அழைத்தவன் கோபத்தோடு காத்திருக்க., அவனது அழைப்பை ஏற்றான் மறுபுறம் இருந்த ராம்….

“என்னடா மச்சான்.. உன் தங்கச்சியோட போட்டோஸ் பார்த்தியா???” கேலியாக கேட்டவனின் மனம், இந்த ஒரு மாதமாக வினுவை பற்றி கூற ஒவ்வொரு முறை தான் அழைத்த போதும் அகில் அதை கண்டுக்கொள்ளாததை நினைத்து கட்டுங்கடங்காமல் கோபம் கொண்டது.

அன்று வினுவை யாரோ ஒருவனுடன் பார்த்த பின்னர், வினுவை எப்படியெல்லாம் பழி வாங்கலாம் என யோசித்த ராம், முதல் படியாக அவள் அண்ணன் அகில்க்கு அழைத்து வினுவை பற்றி கூற., அகில் நம்பவில்லை… வினு கிடைக்கவில்லை என்று அவள் மீது பொய்யாக பழி போடுகிறான் என்று நினைத்தவன் ராமை நம்பாமல் போனை கட் செய்துவிட, ராமிற்கு அத்தனை ஆத்திரமாக வந்தது…

அதன் பின் ராம் தொடர்ந்து அகிலிடம் பேச முயல., அகில் அவனிடம் பேச மறுத்தான்… ராமிற்கும் அமைதியான நிகிலை விட கோபக்கார அகிலிடம் இதை கூறினால் தான் சரியாக இருக்கும் என்று தோன்றியதால் மீண்டும் மீண்டும் அவனிடமே பேச முயன்றான். இதற்கிடையில் பிஸினசை பார்த்துக் கொள்ளும் பொறுப்பும் இருந்ததால் வினுவின் பிரச்சனையை சிறிது ஒதுக்கி வைத்தான்…

அப்படியிருக்கும் போது தான், மீண்டும் ராமின் கண்களில் மாட்டினாள் வினு.. பிஸினஸ் டீலிங் இழுத்துக் கொண்டே சென்றதால் ஒரு மாதமாக ராம் பெங்களூரில் தான் இருந்தான்… ஹோட்டல் ஒன்றிற்கு தனது பிஸினஸ் விஷயமாக, முக்கியமான ஒருவரை சந்திக்க வந்தவன் அங்கு திருவையும் வினுவையும் கண்டு மீண்டும் ஆத்திரமானான்…

வேண்டுமென்றே திருவின் முகம் தெரியாதவாறு அவர்களை படம் பிடித்தவன் இனி இவர்களை பற்றி அகிலிடம் கூறுவதை விட வேறு திட்டம் தீட்டினான்…ஒருவேளை வினுவும் திருவும் காதலிப்பது தெரிந்தால் அவர்களது வீட்டில் பேசி இருவரின் கல்யாணத்தையும் அகிலே நடத்தி வைத்தாலும் வைப்பான் என்று ராமிற்கு தோன்ற., திருவை பற்றி அகிலின் மனதில் விஷத்தை விதைக்க முயன்றான்… ஆனால் ராம் செய்த ஒரே தவறு திருவை பற்றி முழுதாக விசாரிக்காமல் போனது தான்.. அவன் விசாரித்தது வரை திரு வினுவோடு வேலை செய்பவன் அவ்வளவே…

இதையெல்லாம் நினைத்தவன் போனில் தன்னை யாரென்று தெரியாமல் திட்டிக் கொண்டிருந்த அகிலின் கத்தலில் நனவுலகம் வந்தான்…

“சொல்லுடா.. யாருடா நீ??? எதுக்காக என் தங்கச்சி கூட விளையாடுற???”

“ரொம்ப கோபப்படுற மச்சான்… உன் தங்கச்சி இப்போ என்னோட கையில்… அவ உனக்கு முழுசா வேண்டாமா???” என்றவன் முழுசா என்ற வார்த்தையில் அழுத்தம் கொடுக்க… அகில் கொதித்துவிட்டான்.

“டேய்ய்ய்ய்ய்ய்….!!! நீ யார்கிட்ட பேசுற தெரியுமா???? என் தங்கச்சிக்கு எதாச்சும் ஆச்சுது…நீ யாரா இருந்தாலும் சும்மா விட மாட்டேன்…. என் தங்கச்சியை விட்டு தள்ளியே இரு….”

“ஹாஹாஹா சிரிப்பு காட்டாதே மச்சான்… நீ என்னை யாருன்னு கண்டுபிடிக்கிறதுக்குள்ள… நான் உன் தங்கச்சியோட வாழ்கையை அழிச்சிடுவேன்… முடிஞ்சா காப்பாத்திக்கோ…” என்றவன் கோரமாக சிரித்தவாறே போனை அணைத்துவிட்டான்…

அகிலுக்கு ஒன்றும் புரியவில்லை… ‘யாரவன்??? தன் தங்கைக்கும் அவனுக்கும் என்ன சம்பந்தம்??? தன் தங்கையை வைத்து தன்னிடம் விளையாடுவது யாராக இருக்கும்’ என்று அகில் தீவிரமாக யோசித்தான்.

யோசித்தவனது நினைவுகளில் திரு வந்தான். ஐந்து வருடங்களுக்கு முன்பு கடைசியாக அவனை சந்தித்த போது, ‘நான் அனுபவிக்கிற வலியை நீயும் ஒரு நாள் அனுபவிப்ப’ என்று அவன் கூறிய வார்த்தைகள் நினைவு வந்து அகிலை அச்சுறுத்தியது.

“இருக்காது என் அரசு அப்படிபட்டவன் இல்லை” என்று வாய்விட்டே கூறியவன் தன் தலையை உலுக்கிக் கொண்டான்….

ஒரு வேளை தன் தங்கை தவறான ஒருவனை காதலிக்கிறாளா??? அவள் கோடிஸ்வரர் குமாரின் மகள் என்று தெரிந்துக் கொண்டு காதல் என்ற பெயரில் யாராவது அவளை ஏமாற்றுகிறார்களா என்று பல வித யோசனைகள் மூளையில் தாக்க… அகிலால் நிம்மதியாக இருக்க முடியவில்லை…

குமார் விலாஸின் செல்ல இளவரசி அவள்… நிகில் அவ்வளவாக பேசுவது இல்லை என்றாலும் வினு அவனுக்கு தன் மகள் போன்றவள்…விக்கியை பற்றி கேட்கவே வேண்டாம்… அவனது அம்மா அவள்… என்னத்தான் தந்தை கோபக்காரராக தன் விஷயத்தில் தனக்கு அநியாயம் இழைத்திருந்தாலும் வினுவென்றால் அவருக்கு உயிர்… சில சமயங்களில் அவர் வீட்டில் இருப்பது தெரியாமல் விக்கியோடு சண்டையிட்டுக் கொண்டும் நிகிலை கேலி செய்துக் கொண்டும் இருப்பவளை தன்னையும் மீறி கனிவோடு பார்த்திருக்கும் தந்தையை கண்டிருக்கிறான்…

மொத்த குடும்பத்தின் பொக்கிஷம் அவள்… அவளை யார் காயப்படுத்தினாலும் அவர்களின் சாவு தன் கையால் தான் என்று நினைத்தவன் பெங்களூருக்கு கிளம்பினான்… தவறியும் ராமின் மேல் அவனுக்கு சந்தேகம் தோன்றவில்லை… காரணம், அவனும் சரி , வினுவும் சரி, ராமை ஒரு பொருட்டாகவே நினைத்தது கிடையாது.

எந்த ஊருக்கு போக விருப்பம் இல்லாமல் இருந்தானோ அங்கே செல்ல கிளம்பினான் தன் ஆருயிர் தங்கைக்காக…

ஆழந்த உறக்கத்தில் இருந்த வினுவின் அலைபேசி அவளின் தூக்கத்தை கெடுக்க, மெதுவாக கண்களை பிரித்து பார்த்தாள்…அலைபேசி கத்திக் கொண்டே இருக்க, அதில் சலித்தவள் பாதிக் கண்களை திறந்துக் கொண்டு போனை தேடி நகர முயல… அவளால் ஒரு இன்ச் கூட அசைய முடியவில்லை… அப்போது தான் தன் மேல் எதோ பாராமாக இருப்பது போல் தோன்றவே என்னவென்று பார்த்தாள்….

அவள் நெஞ்சில் தலைசாய்த்து அவளை வளைத்து பிடித்தவாறு தூங்கிக் கொண்டிருந்தான் திரு….. அவனை பார்த்ததும் நடந்த அனைத்தும் நினைவில் வர… முகம் சிவந்தது.. தன் முகம் அருகே தெரியும் அவனது முடியை கலைத்துவிட்டவள் அவனை தன்னிடமிருந்து நகர்த்த முயன்றாள்… அவனோ விடமுடியாது என்பது போல் அவளை இறுக்கமாக கட்டிக் கொண்டு தன் தூக்கத்தை தொடர்ந்தான்… சிறிது நேரம் அசையாமல் இருந்தவள் மீண்டும் மீண்டும் அடித்த அலைபேசியில் விக்கி மற்றும் ஹனியின் ஞாபகம் வர, திருவை தள்ளி படுக்க வைத்துவிட்டு வேகமாக வந்து அலைபேசியை எடுத்தாள்…

வினு நினைத்தது போல் விக்கி தான் அழைத்திருந்தான்… மணியை பார்த்தவள் நேரம் ஒன்பதை நெருங்குவதை கண்டு தன்னை ஹனி தேடியிருப்பாள் என்று எண்ணியவாறே விக்கிக்கு அழைப்பு விடுத்தாள்…

போனை எடுத்த விக்கியும் அவளை திட்டி தீர்த்துவிட்டான்…. ஹனி அவளை தேடி அழுவதாக கூறியவன் உடனடியாக வருமாறு கத்திவிட்டு போனை வைத்தான்…

தனது போனை பார்த்தவள் அதில் ஸ்கீரின் சேவராக அவள் வைத்திருந்த படத்தை பார்த்தாள்… அவள், விக்கி, திரு மற்றும் ஹனி சேர்ந்து எடுத்துக் கொண்ட செல்ஃபியை பார்த்தவளுக்கு ஹனியை நினைத்து இதழில் மென்னகை பூத்தது… இப்போதெல்லாம் திருவை விட ஹனி வினுவை தான் அதிகமாக தேடுகிறாள்.. மம்மி மம்மி என்று அவள் வினுவை சுற்றி வரும் போது வினுவுக்குள் தாய்மை பொங்கும்… தினமும் இரவு கதை சொல்லி ஹனியை தூங்க வைத்த பின்னர் தான் விக்கியோடு தன் வீட்டிற்கு செல்வாள் அவள்… அதற்காக தான் இப்போதும் தன்னை தேடுகிறாள் என்று உணர்ந்தவள் வேகமாக சென்று திருவை தொல்லை செய்யாமல் கிளம்பினாள்…

தூரத்தில் கேட்ட சத்ததில் கண்விழித்த திரு, கண்ணாடியில் தலைவாரிக் கொண்டிருந்த வினுவை பார்த்து புன்னகைத்தான்.. மீண்டும் கண்ணை மூடி தூங்க ஆரம்பித்தவன் விருட்டென்று எழும்பினான்… நடந்தது எல்லாம் கனவு போல் தோன்ற.. வேகமாக எழுந்து தன்னை பார்த்தவனுக்கு,. நடந்தது அனைத்தும் கனவு இல்லை என்று உறைத்தது. அவனால் வினுவின் முகத்தை பார்க்க முடியவில்லை… தன் தலையில் தானே அடித்துக் கொண்டவன் எவ்வளவு பெரிய தவறு செய்துவிட்டோம் என்று குற்றவுணர்வில் தவித்தான்…

அவனது செய்கையை பார்த்திருந்தவள் வேகமாக அவனை நெருங்கி அவன் கைகளை பற்றினாள்…

“அரசு என்ன பண்ற???”

“வினு… வினு … ஐ யம் சாரி… நான்… நான்… உணர்ச்சிவசப்பட்டு… என்னை மன்னிச்சிடு… வா உடனே கல்யாணம் பண்ணிகலாம்…” அவள் கைகளை பிடித்துகொண்டு வேகமாக அவன் எழும்ப… வினு அவனை தடுத்தாள்…

“அரசு… நான் சொல்றதை கேளு… எதுக்காக இப்போ பதறுற???” அவனை கணவனாக நினைத்திருப்பவளுக்கு அவனின் இந்த குற்றவுணர்வு அவசியமற்றதாக தோன்றியது…

“புஜ்ஜி மா…. நான் பாவம் பண்ணிட்டேன்…நீ என்னை நம்பிதானே வந்த… விக்கி கூட என்னை நம்பி தான் உன்னை அனுப்பினான்… ஆனா நான்??? இனி விக்கி முகத்துல எப்படி விழிப்பேன்… நான் ஏன் இப்படி நடந்துக்கிட்டேன்…” சிறுவன் போல் புலம்பியவனை தன்னோடு சேர்த்து அணைத்துக் கொண்டவள்.,

“ரிலாக்ஸ் அரசு… தப்பு பண்ணிட்ட மாதிரி பேசாத டா… கஷ்டமா இருக்கு… எப்போவா இருந்தாலும் நீ மட்டும் தான் என்னோட வாழ்க்கை… இப்போ நடந்தது எனக்கு கஷ்டமா இல்லை.. என்னால உன் கஷ்டத்தை குறைக்க முடிஞ்சிதேன்னு சந்தோஷமா தான் இருக்கு… இதே விஷயம் ஒரு மஞ்சக்கயிறை கட்டிக்கிட்டு நடந்தா சரி… இல்லாட்டி தப்பா???” என்றவள் அவன் கண்களை ஆழ்ந்துப் பார்த்தாள்…

மேலும், “என்னோட முழுசம்மதத்தோட தான் நான் என்னை கொடுத்தேன்… இன்னும் நீ ஒரு நிமிஷம் இதை நினைச்சி ஃபீல் பண்ணினாலும், உனக்கு என் மேலே காதல் இல்லைன்னு அர்த்தம்….” வினுவிற்கு மனதில் லேசாக தாயை நினைத்து உறுத்தினாலும் திருவை சமாதனம் செய்வதே முதல் கடமையாக தோன்றியது… அதோடு அவளை பொறுத்தவரை என்றாக இருந்தாலும் அவள் அவனுக்கு தான்…

திருவிற்கு தான் அகிலின் தங்கை என்று தெரிந்தால் என்னவாகும் என்ற பயம் மலையளவு வினுவின் மனதில் இருந்தாலும், நிச்சயம் திரு புரிந்துக் கொள்வான் என்ற நம்பிக்கையும் இருந்தது…

வினு கூறியதில் இருந்து சிறிது தெளிந்தவன் மனதுக்குள், சுமி வந்ததும் வினுவை பற்றி கூறி உடனே வினுவை திருமணம் செய்துக் கொள்ள வேண்டும் என உறுதி எடுத்துக் கொண்டான்…

“புஜ்ஜி மா… சீக்கிரம் உன்னை கல்யாணம் செஞ்சுக்குவேன் டா… என்னை நம்புற தானே???? சுமி வந்ததும் நம்ம கல்யாணம் தான்…” அவள் கண்களை பார்த்து திரு கேட்க,

“நான் என்னை விட அதிகமா உன்னை நம்புறேன்…. போதுமா?? இப்போ கிளம்பலாமா… என் பொண்ணு என்னை தேடுறாளாம்…”குறும்புச் சிரிப்புடன் கூறியவள் எழும்பி., அவனையும் எழுப்பி குளியலறையில் தள்ளினாள்…

சிரித்தவாறே திரு குளிக்க செல்ல., வினுவிற்கு துயரமாக இருந்தது…

“நான் அகிலோட தங்கச்சின்னு தெரிஞ்சதும்.. என்னை வெறுத்திடாதே டா… என்னால தாங்கிக்க முடியாது… நீ இல்லாட்டி இந்த வினு செத்துடுவா…. என்னை புரிஞ்சிக்குவ தானே????” அவனிடம் கேட்பதாக நினைத்து மூடியிருந்த கதவிடம் கேட்டவள், எல்லாம் சரியாகிட வேண்டும் என்ற வேண்டுதலுடன் நின்றிருந்தாள்…

மறுநாள் மாலையில் பெங்களூரை வந்தடைந்தான் அகில்… அனுவிடம் வினு தங்கியிருக்கும் வீட்டின் முகவரியை வாங்கிக் கொண்டவன், அவளது குறுகுறு பார்வையை எல்லாம் ஒதுக்கி தள்ளிவிட்டு வந்திருந்தான்…

அனு அளித்திருந்த அட்ரெஸ்சை கண்டுபிடித்து ஆட்டோவில் வந்து இறங்கியவன், அந்த வீட்டை பார்த்தான்.. தான் வருவதை இருவருக்கும் தெரிவிக்கவில்லை அவன். அனுவிடமும் கூறக்கூடாது என மிரட்டிவிட்டு வந்திருந்தான்…

கேட்டை திறந்துவிட்டு வந்தவன் “யார் நீங்க” என்று கேட்ட குரலில் தன் நடையை நிறுத்தினான்…

சிறு குழந்தையின் குரல் போல் இருக்க, எந்த பக்கம் இருந்து சத்தம் வந்தது என்று அகில் தன் பார்வையை சுழட்ட, யாரும் தென்படவில்லை… பிரம்மையாக இருக்குமோ என்று நினைத்தவன் முன்னோக்கி நகர.,

“நான் தான் கேட்குதேனே…. யார் நீங்க???”

மீண்டும் அந்த குரல் கேட்கவே, யார் அது என்பது போல் பார்க்க., நடைபாதை அருகே இருந்த மரத்தின் முன்னால் இடுப்பில் தன் இரு கைகளையும் வைத்துக் கொண்டு முறைத்தவாறு நின்றிருந்தாள் ஹனி……

விழிகள் தொடரும்…..

Facebook Comments Box
What’s your Reaction?
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here