மின்னல் விழியே – 26

0
1839

தன் கன்னத்தில் யாரோ தட்டுவது போன்று இருக்கவும் மெதுவாக கண் திறந்து பார்த்தாள் வினு… அவள் முன் பதட்டமாக நின்றிருந்தாள் சுமித்ரா.. கண்களில் இருந்து கரகரவென்று கண்ணீர் வடிய நின்றிருந்தவளை பார்த்தவள் கண்களை நன்றாக திறக்க முயன்றாள்.

“அண்ணி….” லேசாக முனகியவள், தலை பாரமாக இருப்பது போல் தோன்றவும் தலையை கையால் அழுத்தினாள்..

“வினு.. முழிச்சிக்கோ.. எனக்கு பயமா இருக்கு…” சுமி கண்களை சுழலவிட்டவாறே கூற, வினு அவளின் பயத்தையும், அழுகையையும் எதற்காகவென்று புரியாமல் கண்களை சுருக்கினாள்.. விருட்டென்று நடந்த அனைத்தும் ஞாபகம் வர, சுமியின் கைகளை பற்றிக் கொண்டாள்..

காலையில் வீட்டில் இருந்த அனைவரும் வெளியே சென்றிருந்த நிலையில், வீட்டு தொலைபேசிக்கு அழைப்பு வர, வினு தான் எடுத்து பேசினாள்.. மறுமுனையில் திருவிற்கும் அகிலிற்கும் விபத்து என்று கூறப்படவே, எந்த மருத்துவமனை என விசாரித்துக் கொண்டு வீட்டில் இருந்த சுமியையும் அழைத்துக் கொண்டு கிளம்பிவிட்டாள் வினு.

திருவிற்கு விபத்து என்றதுமே வினுவினால் எதையும் யோசிக்க முடியவில்லை.. வீட்டினருக்கு அழைத்து தகவல் சொல்லும் அளவிற்கு பொறுமையில்லாமல் போகவே, அவளாகவே காரை எடுத்துக் கொண்டு சென்றாள்.. வீட்டை விட்டு சிறிது தூரம் வந்த நிலையில் விக்கி, வினுவின் அழைப்பேசிக்கு அழைக்க, வினு இருந்த பதட்டத்தில் சுமி அதை அட்டென்ட் செய்து, அவனிடம் விபரத்தை கூறி மருத்துவமனைக்கு வர கூறினாள்.

போனை அணைத்தவளின் கண்களிலும் அகிலை நினைத்து கண்ணீர் இறங்கிக் கொண்டிருந்தது… சாலையை மறைக்கும் கண்ணீரை துடைத்தவாறு வினு வேகத்தை அதிகரிக்க, ஒரு திருப்பத்தில் கார் நுழைய முடியாதபடி மரம் சரிந்து விழுந்திருந்தது.. ரிவர்ஸ் எடுக்கலாம் என்றால் பின்னால் மற்றொரு கார் வந்து நின்றது..

சிறிது நேரம் ஹாரனை அழுத்திப் பார்த்தவள், அந்த கார் விலகாததும் காரை விட்டு இறங்கி கோபமாக அந்த காரை நோக்கி சென்றாள்.. இதற்காகவே காத்திருந்தார் போல் அந்த காரில் இருந்து இறங்கிய ராமின் அடியாட்கள் அவளிடம் வாக்குவாதத்தை தொடங்க, பின்னால் இருந்து ஒருவன் அவள் முகத்தை, மயக்க மருந்து கலந்த கர்ச்சீஃப்பால் மூடினான்.. எதிர்பார தாக்குதலில் வினு மயங்கி சரிய, சுமி காரில் இருந்து இறங்கி வந்து வினுவை காப்பாற்ற முயன்றாள். அவள் கத்தி உதவிக்கு யாரையும் அழைக்கும் முன் அவளையும் மயக்கமடைய செய்து காரில் ஏற்றியிருந்தார்கள்…

காலையில் நடந்த அனைத்தும் ஞாபகம் வர, வினுவிற்கு புரிந்தது தங்களை யாரோ திட்டமிட்டு கடத்தியுள்ளனர் என்று. அப்படியென்றால் திருவும் அகிலும் நலமாக தான் இருக்க வேண்டும் என்பது உறைக்க அதன்பின் தான் வினுவால் நிம்மதியாக மூச்சுவிட முடிந்தது. சுமியின் கைகளை பற்றிக் கொண்டு எழுந்தவள்,

“உங்களுக்கு ஒன்னும் இல்லையே அண்ணி????” என்க,

“இல்லை.. எனக்கு எதுவும் இல்லை.. ஆனா நாம எங்க இருக்கோம்???? நம்மளை எதுக்காக கடத்தினாங்க???” கண்களில் அப்பட்டமாக பயம் தெரிய, வினுவின் கைகளை பற்றிக் கொண்டு நின்றிருந்தாள் சுமி…

வினுவிற்குள்ளும் அதே கேள்வி தான். ஆனால் சுமி பயப்படுவதை பார்த்தவள், “அண்ணி பயப்படாதிங்க.. நமக்கு எதுவும் ஆகாது… இன்னும் கொஞ்ச நேரத்துல இங்க இருந்து போய்டலாம்” என்றவள், அந்த அறை கதவை திறக்க முயன்றாள்..

அது வெளிப்பக்கம் தாழ் போட்டிருக்காவும், சலித்தவள் கதவில் தன் பலம் கொண்டமட்டும் தட்டினாள்… அடுத்த நிமிடமே கதவு திறந்துக் கொண்டது… கதவு திடிரென்று திறக்கவும், அதில் வினு தடுமாறி கீழே விழப் போக, சுமி அவளை பிடித்துக் கொண்டாள்…

தங்களை கடத்தி வைத்து விளையாடுவது யார் என கண் மண் தெரியாத அளவிற்கு கோபம் வர, கோபமாக சுமியின் கையில் இருந்து விலகி பார்த்தவள், அங்கு ராம் நிற்கவும் அதிர்ந்தாள்…

இப்படி ஒருவன் உலகில் இருக்கிறான் என்பதையே அவள் மறந்து பல நாட்கள் ஆகியிருந்தது.. இப்போது மீண்டும் அவனை காண்கையில் அதுவும் தங்களை கடத்தியது அவன் என்று தெரிகையில் பற்றிக் கொண்டு வர,

“நீயா???” அவனை கண்டதும் அதிர்ச்சியாக இருந்தாலும் அவளுக்கு அவனை கண்டு பயமெல்லாம் வரவில்லை… அவளை பொறுத்தவரை அவன் ஒரு வெத்துவேட்டு… அதனால் தெனாவெட்டாகவே அவனை பார்த்தாள்…

அவளின் பார்வை மாற்றத்தை கண்டுக் கொண்ட ராமிற்கு உள்ளுக்குள் காந்தியது..

“இந்த சப்ப மூக்கு ராமை எதிர்ப்பார்க்கலையா வினு???” நக்கல் சிரிப்புடன் ராம் கூற, சுமி அவனை யாரென்று தெரியாமல் பார்த்தாள்…

“ஹாய் சிஸ்டர்.. சாரி உங்களையும் சேர்த்து நம்ம பசங்க கடத்திட்டு வந்துட்டாங்க…” புரியாமல் பார்த்தவளிடம் உரைத்தவன் மேலும், “இன்னும் கொஞ்ச நேரத்துல எங்களுக்கு கல்யாணம்.. அது முடிஞ்சதும் நானே உங்களை வீட்ல கொண்டு போய் விட்டுடுறேன்” என்றான் நல்லவன் போல்…

அவன் கூறியதில் ‘எங்களுக்கு’ என்ற வார்த்தையை வினு கவனிக்காமல் விட்டுவிட, “என்னது உனக்கு கல்யாணமா??? அந்த பொண்ணு ரொம்ப பாவம்… ச்சூ…” முகம் அறியா பெண்ணிற்காக பாவப்பட்டவள், “ஆனா அதுக்கு எதுக்கு டா எங்களை கடத்தின??? பத்திரிக்கை வச்சிருந்தா நாங்களே அந்த அப்பாவி பொண்ணு யாருன்னு பார்க்கிறதுக்காக மொத்த குடுப்பத்தோட வந்திருப்போமே…” வினு கிண்டலாக கூற, சுமி அவள் கையை இறுக்கமாக பற்றினாள்.. வினு கவனிக்காவிட்டாலுமும் சுமி அவன் கூறியதை கவனித்திருந்தாள்…

“என்னடி சொன்ன???? நான் கல்யாணம் பண்ற பொண்ணு பாவமா??? ஆமாம்டி பாவம் தான்.. ஆனா இனி அவளோட திருவிளையாடல் எல்லாம் என்கிட்ட பலிக்காது” என்றவன் எட்டி அவள் கூந்தலை பற்றியிருந்தான்…

“ஆஹ்… விடுடா” வினு கத்த, சுமியும் அவன் கைகளில் இருந்து வினுவை பிரிக்க போராடினாள்… சட்டென்று அவளை விட்டவன், “இன்னும் கொஞ்ச நேரத்துல உனக்கும் எனக்கும் கல்யாணம்” என்க, வினு திகைத்தாள்…

தன்னை கடத்தி வைத்து பணம் பறிக்க போகிறான் அல்லது தன் தந்தைக்கும் அவனுக்கும் தொழில் எதாவது மோதலாக இருக்கும் என்று அவள் எண்ணிக் கொண்டிருக்க, அவன் கூறியதை கேட்டு ஸ்தம்பித்து நின்றாள்.

“என்னடா விளையாடுறியா???? எனக்கு ஏற்கனவே கல்யாணமாகிடுச்சு…” திகைத்தவள் நின்றவள் அவனை எரிப்பது போல் பார்க்க,

“ஹாஹா அதனால என்ன??? இன்னொருக்கா என்னையும் கல்யாணம் பண்ணிக்கோ” என்றவன் கோணல் சிரிப்புடன் கூற, வினு அருவெறுப்பில் முகத்தை சுழித்தாள்…

“ச்சீ இப்படி பேச உனக்கு வெட்கமா இல்லை??? மனுஷ பிறவியா இருந்தா தானே அதெல்லாம் இருக்கும்.. நீ தான் அந்த லிஸ்ட்லயே கிடையாதே… “

“பேசுடி பேசு.. இதுக்கெல்லாம் சேர்த்து நீ என்கிட்ட அனுபவிப்ப…” என்றவனின் கண்கள் அவளை குரோதத்துடனும் பழிவெறியுடனும் நோக்கியது…

“இன்னும் கொஞ்ச நேரத்துல என் புருஷன் வந்து என்னை காப்பாத்திடுவான். அதுக்கபுறம் உனக்கு இருக்கு.” என்றவள் அவனை முறைக்க, அவனோ நக்கலாக சிரித்தான்…

“யார் வந்தாலும் நமக்கு இன்னைக்கு கல்யாணம் நடக்கிறதை தடுக்க முடியாது… அப்புறம் உன் ஸோ கால்ட் புருஷன் .. அவனுக்கு ஆயுசு கெட்டி போல… காரை ஏத்தி கொண்ணுடலாம்னு பார்த்தேன் ஆனா தப்பிச்சிட்டான்…” அவளை கடத்திய பின்னும் சிறிது கூட பயமில்லாமல் பேசுபவளை எப்படியாவது பயப்பட வைக்க வேண்டும் என்பதற்காக அவன் கூற,

வினுவின் கண்கள் கலங்கிவிட்டது.. அவனுக்கு எதாவது ஆகியிருந்தால் என்ற நினைப்பே பயங்கரமாக இருந்தாலும் நிச்சயம் அவளுக்கு எதுவும் ஆகியிருக்காது என நம்பினாள்.. அதனால் கண்ணீரை உள்ளிழுத்துக் கொண்டவள்., கோபத்தில் ராமின் கன்னத்தில் பலமாக அறைந்திருந்தாள்..

“என் அரசு மேல சின்ன கீறல் விழுந்தாலும்… நீ செத்த டா.. என்னை பத்தி தெரியும் தானே????” வினு வெடிக்க, சுமி அவளை ஆச்சரியமாக பார்த்தாள்.. தான் இப்படியொரு நிலையில் மாட்டிக் கொண்டாள் வினுவை போல் தைரியமாக இருப்போமா??? என்ற கேள்விக்கு இல்லை என்றே பதில் கூறியது அவளது உள்ளம்… இப்போது கூட அகிலை நினைத்து உடம்பெல்லாம் பதறுகிறது…

அகிலுக்கு விபத்து என்ற செய்தி அறிந்ததில் இருந்தே அவளின் மனம் அடித்துக் கொண்டிருக்கிறது.. அவனை ஒருமுறை பார்த்துவிட மாட்டோமா என உள்ளம் துடிக்கிறது.. அவனை பிரிந்து வாழ முடியும் என்ற நம்பிக்கை, துளி கூட இல்லை என்பதால் வாழ்வோ சாவோ அது அகிலோடு தான் என்ற நிலையில் இருந்தாள்…

வினு அடித்ததில் தன் கன்னத்தை பிடித்துக் கொண்ட ராமும் அவளை அடிக்க கையை ஓங்கிக் கொண்டு வர, ‘அடி டா பார்க்கலாம்’ என்ற ரீதியில் நின்றிருந்தாள் வினு…

“எல்லாத்துக்கும் உனக்கு இருக்கு டி.. இன்னும் கொஞ்ச நேரத்துல உன் அப்பா வந்துடுவார்.. அப்புறம் பார்த்துக்கிறேன் உன்னை..” வன்மமாக உரைத்தவன் கையை இறக்கிக் கொண்டு அங்கிருந்து வெளியேறப் போக,

“என் அப்பா வராரா??? அவர் வந்ததும் உனக்கு இருக்கு டா… என்னையே கடத்திட்ட தானே???” தந்தை வருகிறார் என்று அவன் கூறியதும் அதிர்ந்தாலும், வினுவிற்கு பயம் வரவில்லை மாறாக நம்பிக்கை தான் வந்தது. தன் தந்தை காப்பாற்றிவிடுவார் என்று…

அவளை மேலும் கீழுமாக பார்த்தவன், வயிற்றை பிடித்துக் கொண்டு சிரிக்க, வினுவும் சுமியும் அவளை விசித்திரமாக பார்த்தார்கள்…

“என்ன??? உன் அப்பா உன்னை காப்பாத்த வர்றார்னு நினைச்சியா???” என்றவன் மீண்டும் சிரிக்க, வினுவின் முகம் யோசனையாக சுருங்கியது..

“உனக்கும் எனக்கும் கல்யாணம் நடத்தி வைக்கப் போறதே அவர் தான்.. அதோட உன் புருஷனை கார் ஏத்தி கொல்ல சொன்னதே உன் அப்பா தான்…” என்றவன் எகத்தாளமாக சிரிக்க, வினு அவனை நம்ப முடியாமல் பார்த்தாள்..

“இல்ல நீ பொய் சொல்ற… நான் நம்ப மாட்டேன்…. என் அப்பா அப்படியெல்லாம் பண்ண மாட்டாங்க…” தடுமாறியபடி வினு உரைக்க, ராம் அவளை பார்த்து பரிதாபப்படுபது போல் உச்சு கொட்டினான்…

“அவரோட சொந்த பையனையே ஒரு வருஷம் ஹவுஸ் அரெஸ்ட் செஞ்சவர், உன் புருஷனை விட்டுடுவார்னு நினைக்கிறியா???” ராம் கேட்க, வினுவை விட சுமி தான் அதிகமாக அதிர்ந்தாள்..

தானும் தன் தந்தையும் அவரை காண சென்ற போது நடந்தது ஞாபகம் வரவே சுமிக்கு வினுவின் தந்தையை நினைத்து இகழ்ச்சியாக இருந்தது…

ஒவ்வொரு முறையும், “நான் சொல்றதை கேளு சுமிம்மா” என்று தன் பின்னால் சுற்றி வந்த அகில் கண் முன்னால் வந்து போனான்…

ராம் கூறிய ஒற்றை வார்த்தையிலே அவளுக்கு புரிந்து போனது.. தங்கள் வாழ்க்கையில் அகிலின் தந்தை தான் விளையாடியிருக்கிறார் என்று.. அது தெரியாமல் தான் அவனை காயப்படுத்திவிட்டோம் என்று குற்றவுணர்வில் தவித்தவள் தன்னையும் மீறி கதறி அழ துவங்கினாள்…

வினு அவளை தன்னோடு அணைத்துக் கொள்ள, ராம் குரூரமாக சிரித்துவிட்டு அங்கிருந்து அகன்றான்…

வினுவால் எதையும் நம்ப முடியவில்லை…ஆனால் நம்பாமல் இருக்கவும் முடியவில்லை.. முதலில் தயங்கினாலும் அதன்பின் தந்தை வருவதற்குள் திருமணத்தை நடத்த அகில் அவசரப்பட்டதை நினைத்தவளுக்கு இப்போது ஏனென்று புரிந்தது.. தந்தையை நினைத்து கோபமாக வந்தது வினுவிற்கு.. தன் அண்ணனின் வாழ்க்கையை கெடுத்த அவரை, அப்பாவென்றாலும் சும்மா விட மனமில்லை. சுமியை கட்டிக் கொண்டு தந்தையின் வரவிற்காக காத்திருந்தாள் அவள்…

சாலையில் சீறிப் பாய்ந்து சென்றுக் கொண்டிருந்தது அகிலின் கார்… தன் தந்தை வருவதற்குள் வினுவை காப்பாற்றிவிட சென்றுக் கொண்டிருந்தனர் திருவும் அகிலும்… தன் தந்தையை எப்படி சாமாளிப்பது என பல கேள்விகள் மனதில் உளன்றாலும், தற்போது தன் இணைகளை காப்பாற்றுவதே பிரதானமாக தோன்றியது..

அகில் வேகமாக காரை ஓட்டிக் கொண்டிருக்க, திரு விக்கிக்கு அழைத்து சில பல திட்டங்களை கூறினான்.. அதோடு நிகில் எங்கு இருக்கிறான் என்ற விபரத்தையும் அறிந்துக் கொள்ள திரு முயல, நிகில் அழைப்பை ஏற்கவில்லை..

“சே மச்சான் போன் எடுக்க மாட்டேங்கிறார் டா” நிகிலுக்கு அழைத்து அழைத்து ஓய்ந்து போனதில் திரு சலிப்பாக கூற,

“அப்பா கூட இருப்பாங்க அரசு அதனால தான் எடுத்திருக்க மாட்டான்…” காரை வேகமாக ஓட்டியவாறே திருவிற்கு பதிலளித்தான் அகில்..

சிட்டியை தாண்டி அவர்கள் கார் சென்றுக் கொண்டிருக்க, அவர்களை பின் தொடர்ந்தது மற்றொரு லாரி… அசுர வேகத்துடன் வந்த லாரியை கண்டு, அகில் அது தங்களை கடந்து செல்ல வழிவிட, அதுவோ அவர்களை இடிப்பது போலவே வந்தது…

“டேய் அகி.. அந்த லாரி நம்மளை குறி வச்சு தான் வருது…” திரு தான் சூழ்நிலையை யூகித்தவனாக கூறினான்… கண்ணாடியில் பின்னால் வரும் லாரியை கண்ட அகிலும், அதன் பின் மேலும் தன் வேகத்தை கூட்ட… ஒரு கட்டத்திற்கு மேல் அந்த லாரியால் அவர்களை பின் தொடர முடியவில்லை..

அங்கு செய்தியறிந்த ராம் கோபத்தின் உச்சநிலையில் இருந்தான்.. கையில் கிடைத்ததையெல்லாம் அடித்து நொறுக்கியவன், வினுவும் சுமியும் இருந்த அறைக்குள் நுழைந்து வினுவை மட்டும் வெளியே இழுத்து வந்தான்… சுமியை உள்ளேயே வைத்து ராமின் ஆட்கள் பூட்டிவிட, சுமி பயத்தில் கதவை தட்டிக் கொண்டிருந்தாள்…

“உன் புருஷன் ரொம்பவே என்னை தொந்தரவு பண்றான்.. இதுக்க மேல உன் அப்பா வர்ற வரைக்கும், என்னால பொறுமையா இருக்க முடியாது… இப்போவே நமக்கு கல்யாணம்…” பித்து பிடித்தவன் போல் கத்தியவன் வினுவை நெருங்க… அவளுக்கு சர்வமும் நடுங்கியது..

இவ்வளவு நேரமும் மனதின் ஒரு ஓரத்தில் இருந்த பயமெல்லாம் இப்போது பூதாகராமாக தோன்றி அவளை பயமுறுத்த அவனை அச்சத்துடன் பார்த்தாள்…

தன் குடும்பத்தினர் வந்துவிடுவார்கள் என்று அவளுக்கு மலையளவு நம்பிக்கை இருக்கிறது ஆனால் அதுவரை இவனிடமிருந்து எப்படி தப்பிப்பது என்று யோசித்தவள் பின்நோக்கி நகர, அவள் கண்களில் விழுந்தது அருகிலிருந்த பூஞ்சாடி.. அதை எடுத்து ராமின் மீது வீசியவள் அவன் சுதாரிப்பதற்குள் மற்றொரு அறைக்குள் சென்று கதவை அடைத்துக் கொண்டாள்…

பூஞ்சாடி நேராக சென்று ராமின் நெற்றியை பதம் பார்த்திருக்க, ரத்தம் சொட்டியது. எதிர்பாராத தாக்குதலில் துவண்டவன் வலியில் துடிக்க, அவன் ஆட்கள வினு சென்று மறைந்துக் கொண்ட கதவை தட்டினார்கள்…

படபடக்கும் நெஞ்சோடு கதவின் மேல சாய்ந்து நின்றிருந்தாள் வினு.. மனமோ, “அரசு எப்போ வருவ??? சீக்கிரம் வந்துடு.. எனக்கு பயமா இருக்கு” என்று அரற்றியது.. கதவு தட்டப்படும் வேகத்தில் எப்போது வேண்டுமானாலும் அவர்கள் உள்ளே வரலாம் என்றிருக்க, வினுவின் கை கால் எல்லாம் நடுங்கியது…..

“கதவை தட்டுறதை நிறுத்துங்க டா.. அவளை எப்படி வெளிய வரவைக்கணும்னு எனக்கு தெரியும்.. போய் அவ அண்ணிக்காரிய இழுத்துட்டு வாங்க..” அடிப்பட்ட பாம்பு போல் ராம் சீற, அவன் குரல் கேட்ட வினு, தன் தலையில் அடித்துக் கொண்டாள்..

“அய்யோ அண்ணி!!!” பதறியவள் அடுத்த நொடி எதை பற்றியும் கவலைக் கொள்ளாது வெளியே வந்திருந்தாள்… அவளை கண்டதும் ராம் எள்ளலாக சிரிக்க, வினு அவனை மிரட்சியுடன் பார்த்தாள்… ராம் மட்டும் அங்கிருந்தால் நிச்சயம் அவனை அடித்து நொறுக்கிவிடுவாள் ஆனால் தடிமாடு போல் அவனோடு இருக்கும் நான்கு அடியாட்களையும் அவளால் சமாளிக்க முடியாது… அதனால் அவனை பயப்பார்வை பார்த்தாள்…

அவளின் கண்களில் பயத்தை கண்டவன், வீடே அதிரும்படி சிரித்தவாறு வினுவை நெருங்க, அவன் தோளில் விழுந்தது ஒரு கரம்.. ராம் திரும்பிப் பார்க்க, அவனை உக்கிரமாக முறைத்துக் கொண்டு நின்றிருந்தான் திருநாவுக்கரசு… அவன் பின்னால் அகில் அங்கிருந்த அடியாட்களோடு சண்டையிட தொடங்கியிருந்தான்..

“ரொம்ப தப்பு ராம்…” கண்களில் கனலுடன் திரு கூற, ராமிற்கு உள்ளுக்குள் குளிரெடுத்தது.. இது தான் முதல் முறையாக இருவரும் சந்தித்துக் கொள்கிறார்கள்.. ராம் பார்த்த வரை திரு யாரிடமும் சண்டைக்கு செல்பவன் கிடையாது.. அதனால் அவனை எளிதாக வினுவின் வாழ்வில் இருந்து அப்புறப்படுத்திவிடலாம் என எண்ணியிருந்தான்… ஆனால் அதற்கு நேர்மாறாக இத்தனை முறை அவனை கொல்ல முயன்றும் தப்பித்து தன் முன்னால் வந்து நிற்பவனை, ராம் விதிர்விதிர்த்து போய் பார்க்க, திரு அவனை அடியில் பிண்ணிவிட்டான்.

கணவனையும் அண்ணனையும் கண்ட பின் தான் வினுவிற்கு போன உயிர் திரும்ப வந்திருந்தது… ஓடிச் சென்று சுமி இருந்த அறைக் கதவை திறந்தவள், சுமியை அணைத்துக் கொண்டாள்…

மேலும் ஐந்து நிமிடங்களில் விக்கி, போலீசாரையும் ராமின் பெற்றோரையும் அழைத்துக் கொண்டு வர, ராமை அவனது கூட்டாளிகளோடு பிடித்தனர் காவலர்கள்.

திரு அடித்ததில் ராமின் முகத்தில் இருந்து ரத்தம் வழிய, சட்டையெல்லாம் கிழிந்து பார்ப்பதற்கே பாவமாக நின்றிருந்தான். அவனை அந்த நிலையில் பார்த்த அவனது தாய் கண்ணீர் வடிக்க, தந்தையோ அவனை சரமாரியாக அடித்தார்…

அளவுக்கு அதிகமான பணம் மகனை சீரழிக்கிறது என்று தெரிந்தாலும், வினுவை கட்டிக்கொண்டால் அவன் திருந்திவிடுவான் என்றே நம்பினார்.. ஆனால் வினு எப்போது திருவை திருமணம் செய்துக் கொண்டாலோ அப்போதே அவர் அந்த எண்ணத்தை மாற்றிக் கொண்டார்.. என்ன இருந்தாலும் தன் நண்பனின் மகள்.. அவள் நன்றாக இருக்க வேண்டும் என்று தான் அவர் விரும்பினார்.. ஆனால் இன்று தன் மகன் செய்து வைத்திருக்கும் காரியம்??? நினைக்கையிலே தன் நண்பனுக்கு என்ன பதில் சொல்ல போகிறோம் என்று நெஞ்சு பதறியது…

அனைவரையும் பிடித்து காவலர்களிடம் ஒப்படைத்த திரு வினுவை காண, அவள் ஓடிச் சென்று அகிலை அணைத்திருந்தாள்… அகிலும் அவளை அணைத்து அவள் தலையை ஆதூரமாக தடவினான்.. இருவரின் பாசமலர் படத்தை பொறாமையுடன் பார்த்திருந்தான் திரு.. அவளை காணாமல் இவ்வளவு நேரம் அவன் தவித்திருக்க, அவளோ தன் அண்ணனோடு ஒட்டிக் கொண்டிருந்தாள்…

அடுத்ததாக விக்கியும் தன் அக்காவை அணைத்துக் கொள்ள, திருவிற்கு புசுபுசுவென கோபம் ஏறியது… பாச மலர் படத்தை முடித்தவள் கடைசியாக திருவிடம் வர, அவன் முறைத்துக் கொண்டு நின்றான்…

என்னடா?? வினு கண்களால் கேட்டவாறே அவனை அணைத்துக் கொள்ள, அவன் கோபமெல்லாம் பறந்து போனாலும்..

“என்கிட்ட வர்றதுக்கு இவ்வளவு நேரமா டி???” திரு அவள் காதில் முணுமுணுக்க, அவளும் அவனை போலவே மெல்லிய குரலில்,

“மக்கு அரசு.. கடைசியா உன்கிட்ட வந்தா தான் நிறைய நேரம் உன்னை அணைச்சிக்க முடியும்” என்க, மனைவியின் புத்திசாலித்தனத்தில் திருவிற்கு அத்தனை நேரமிருந்த இறுக்கம் தளர்ந்தது…

ஏற்கனவே அவள் அவனை அணைத்துக் கொண்டிருக்க, அவளை விட பன்மடங்கு இறுக்கமாக திரு அவளை அணைத்திருந்தான்.. அந்த ஒற்றை அணைப்பு கூறியது இவ்வளவு நேரம் அவன் பட்ட தவிப்பையும் துன்பத்தையும்…

அவள் உச்சந்தலையில் முத்தததை பதித்தவன், “செத்துட்டேன் டி” என்றான் கலங்கிய கண்களோடு… என்னதான் அவள் தன்னிடம் முதலில் வரவில்லை என்று கோபம் எழுந்தாலும், அவள் அவன் உயிரல்லவா..!!!!

அவன் பரிதவிப்புடன் கூற, இப்போது வினு அவனை பார்த்து முறைத்தாள்..

“ஏன் டா லேட்டா வந்த??? இவன் என்னை எவ்வளவு பயம் காட்டிட்டான் தெரியுமா???” அவனை விட்டு விலகியவள் முறைத்துக் கொண்டு நிற்க, திரு அவளை பாவமாக பார்த்தான்…

“புஜ்ஜி.. ஆக்க்ஷன் சீன் எல்லாம் முடிச்சிட்டு வர்றதுக்கு நேரமாகிடுச்சு மா” என்றவன் அவளை சமாதானம் செய்யும் முயற்சிகளில் இறங்கியிருந்தான்… அவர்களின் கொஞ்சல்களை குரூரத்துடன் பார்த்துக் கொண்டிருந்தான் ராம்…

சுமி பார்வையால் தன்னவனை வருடிக் கொண்டிருந்தாள்.. அகிலும் அதை தான் செய்துக் கொண்டிருந்தான்.. அவனுக்கும் அவளை இழுத்து அணைத்துக்கொள்ளும் வேகம் மனதில் தீயாய் எரிந்தாலும்.. அவனால் முடியவில்லை.. தயங்கியவாறே அவன் நின்றிருக்க, இந்த முறை அவன் மனைவி அவனை ஓடிச் சென்று கதறலுடன் தழுவியிருந்தாள்…

அவன் முகமெங்கும் முத்தமிட்டவள், “உனக்கு எதுவும் ஆகலையே அகி.. நான் ரொம்ப பயந்துட்டேன்…” சுற்றி யார் இருக்கிறார்கள் என்பதையெல்லாம் கருத்தில் கொள்ளாது அவன் செய்ய நினைத்ததை அவள் செய்துக் கொண்டிருந்தாள்…

அகில் தான் அவள் தன்னிடம் பேசுவதையும் தனக்காக பதறுவதையும், தன்னை கட்டியணைத்து முத்தமிடுவதையும் நம்ப முடியாமல் அவள் பிடிக்குள் நின்றிருந்தான்…

வினுவையும் திருவையும் பார்த்துக் கொண்டிருந்த காவலர்கள் இப்போது சிரிப்புடன் வேறு பக்கம் திரும்பிக் கொள்ள, திருவும் வினுவும் அவர்களை புன்னகையுடன் பார்த்திருந்தனர்…

ராமின் தந்தை இன்ஸ்பெக்டரிடம் வருத்தத்துடன் பேசிக் கொண்டிருக்க, தன்னை தவிர அனைவரும் சந்தோஷமாக இருப்பது போல் உணர்ந்தான் ராம்… அதில் அவன் மனதில் கனன்றுக் கொண்டிருந்த கோபம் அணையாமல் கொழுந்து விட்டு எரிய, அடுத்த நிமிடம் தன்னை பிடித்து வைத்திருந்த காவலரின் கையில் இருந்த துப்பாக்கியை வாங்கி திருவை குறி வைத்திருந்தான்…

“இவன் தானே உன் சந்தோஷம்?????” என்று கர்ஜித்தவன், அனைவரும் அவனை தடுக்கும் முன் திருவை குறி பார்த்து சுட்டான்….

அனைவரும் என்ன ஏதென்று சுதாரிப்பதற்குள் அனைத்தும் நடந்துவிட, கடைசி நொடியில் திருவின் முன் பாய்ந்து அந்த குண்டை தன் நெஞ்சில் வாங்கியிருந்தான் திருவின் ஆருயிர் தோழன் அகில் குமார்…

“அண்ணா!!!!” “அகி!!!!” எனப் பல குரல்கள் கேட்க, அகில் கீழே சரிய தொடங்கியிருந்தான்… அவன் சரிந்து விழவும் அங்கு வந்து சேர்ந்தனர் நிகிலும் அவனின் தந்தையும்…

திரு அகிலை தாங்கிக் கொள்ள, வினுவும் விக்கியும் அவனை பற்றிக் கொண்டு அழ துவங்கிவிட்டனர்.. சுமித்ரா திக்பிரம்மை பிடித்தது போல் அகிலை வெறித்தாள்.. ஒரு நிமிடம் முன்பு தன் கைக்குள் நின்றுக் கொண்டிருந்தவன் இப்போது ரத்த வெள்ளத்தில் கீழே கிடப்பதை திகைப்பாக பார்த்தாள்.. அதிர்ச்சியில் அவள் மூளை வேலை நிறுத்தம் செய்ய, அவள் கண்களுக்கு அவனை தவிர வேறு எதுவும் தெரியவில்லை… அவன் அருகே மண்டியிட்டு “அகி.. அகி” என அவனை எழுப்பிக் கொண்டிருந்தாள். நிகிலும் தன் தம்பியின் அருகே ஓடி வர, குமார் அங்கேயே சிலையாக நின்றிருந்தார்..

தன் மகன் தன் கண் முன் உயிர் போகும் நிலையில் இருப்பதை பார்த்தவர் அவனை நெருங்க, வினு அவரை பார்த்து கத்த தொடங்கினாள்..

“என் அண்ணாவை தொடாதிங்க…” மகளின் அழுத்தமான கட்டளையில் கிருஷ்ண குமார் தடுமாறி நிற்க, மற்றவர்கள் அவரை கண்டுக் கொள்ளமால் அகிலை மருத்துவமனைக்கு அழைத்து செல்ல தூக்கினர்.. விக்கி காரை எடுக்க… திரு அகிலை தூக்கிக் கொண்டு சென்றான்.. வினு சுமியை கைப்பிடித்து அழைத்தவாறு அவர்கள் பின் அழுதுக்கொண்டே சென்றாள்..

தன் பிள்ளைகள் தன்னை பொருட்படுத்தாமல் செல்வதை கண்ட கிருஷ்ண குமாருக்கு தன்னை யாரோ செருப்பால் அடித்தது போல இருந்தது… அவர் திகைத்து அங்கேயே நிற்க, நிகில் அவர் தோளை தொட்டான்..

“வாங்கப்பா ஹாஸ்பிட்டல் போகலாம்…” தம்பியை நினைத்து கண்கள் கலங்கியவாறு நின்றிருந்த மூத்த மகனை பார்த்தவரின் கண்களும் கலங்கியது.. இப்போது அவன் தான் தன்னை விட பெரியவன் போல் தோன்றியது..

நிகிலின் கையை பற்றிக் கொண்டவர், “இந்த நிமிஷம் செத்துட்டா கூட பரவாயில்லப்பா.. என்னோட இடத்துல இருந்து நீ பார்த்துக்குவ” என்றார்…

என்றும் உணர்ச்சிவசப்படாத தந்தை இன்று உணர்ச்சிவசப்படவும் நிகில் அவர் கையை தட்டிக் கொடுத்தான்.. அகிலின் நிலை அவரை பாதித்திருக்கிறது என்று புரிந்துக் கொண்டவன்,

“அகில் சீக்கிரம் சரியாகிடுவான்ப்பா.. நீங்க பயப்படாதிங்க” என்க,

குமாரும் தன் மகனை காண கிளம்பினார்… கிளம்பும் முன் ராமிடம் திரும்பியவர், “என் பிள்ளைகள் மேல கை வச்சிட்ட ராம்… இதுக்கு நீ பதில் சொல்லியே ஆகணும்…” எச்சரிக்கையாக கூறியவர் நிகிலோடு தன் மகனை காண சென்றார்..

காவலர்களும் ராமை கைது செய்து அழைத்து செல்ல, ராமின் பெற்றோர்கள் அழுதவாறே அவர்களின் பின்னால் சென்றனர்…

ராமின் தந்தையான ரகுவிற்கு தெரியும் தன் நண்பனை பற்றி.. இனி தன் குடும்பம் அழிவதை யாராலும் தடுக்க முடியாது என்பதை உணர்ந்தவர் அனைத்தையும் ஏற்பதற்கு தன் மனதை தயார் படுத்திக் கொண்டார்..

அகில் ஐ.சி.யு வில் அனுமதிக்கப்பட்டிருக்க, அவனுக்கு ஆபரேஷன் நடந்துக் கொண்டிருந்தது.. வெளியே திருவின் தோளில் சாய்ந்தவாறு வினு அழுதுக் கொண்டிருக்க, சுமி அந்த ஐ.சி.யு வை வெறித்திருந்தாள்… நிகிலும் விக்கியும் தன் சகோதரனுக்காக வேண்டிக் கொண்டு பதட்டத்துடன் நின்றிருந்தனர்..

திருவும் மனதுக்குள் அனைத்து தெய்வங்களையும் வேண்டிக் கொண்டு நின்றிருந்தான்… வினுவின் அன்னை சுதாவிற்கும் தகவல் சொல்லப்பட்டிருக்க, அவர் அனுவை அழைத்துக் கொண்டு வந்தார்… அகிலை நினைத்து அழுதவாறு ஓடி வந்தவர் தன் கணவனை அங்கு கண்டதும் அப்படியே நின்றார்…

“என்னங்க.. நம்ம பையன்..” அதற்கு மேல் பேச முடியாமல் சுதா வாயை மூடி அழ, வினு கோபத்தோடு எழுந்து வந்து தன் தந்தையை முறைத்தாள்..

“எல்லாம் இவரால தான்.. அண்ணா இப்படி இருக்க காரணம் இவர் தான்…” வினு கத்த துவங்க, சுதா அவள் கூறுவது புரியாமல் பார்த்தார்..

“வினு??? என்னப் பேசுற?? அவர் உன் அப்பா…” ஆயிரம் கோபங்கள் இருந்தாலும் தன் கணவனை விட்டுக் கொடுத்து பேச சுதாவிற்கு மனம் வரவில்லை.

“இவர் தான் மா எல்லாத்துக்கும் காரணம்.. இவர் நம்ம அகி அண்ணாவோட காதல் தெரிஞ்சு… அவரை ஒரு வருஷம் அமெரிக்காவுல ஹவுஸ் அரெஸ்ட் பண்ணி வச்சிருக்கார்.. இப்போ கூட என்னை கடத்த சொன்னது இவர் தான்.. எனக்கு கல்யாணமாகிடுச்சுன்னு தெரிஞ்சும் அந்த ராம்கிட்ட என்னை திரும்ப கல்யாணம் செஞ்சுக்க சொல்லியிருக்கார்… இவருக்கு என்மேல பாசமே கிடையாது ம்மா.. நம்ம யார் மேலயும் கிடையாது.. இவருக்கு இவரோட பணம் தான் பெரிசு…” அனைத்தையும் கூறி வினு வெடித்து அழ, சுதா அவரை வெறுமையாக பார்த்தார்…

அன்று தங்கள் வீட்டுக்கு சுமியும் அவளது தந்தையும் அகிலை தேடி வந்த போது அவர்களை அவமானப்படுத்தி அனுப்பியதில் தன் கணவணுக்கும் பங்கு உண்டு என வினு கூறி சுதாவிற்கு தெரியும்.. அப்போது கூட தன் மகன் செய்த செயலுக்கு, அவனை கண்டிக்காமல் அவனோடு சேர்ந்துக் கொண்டு சுமியை அவன் வாழ்க்கையில் இருந்து விலக்க உதவியுள்ளார் என்றுதான் சுதா இத்தனை நாட்களாக எண்ணியிருந்தார்…ஆனால் இப்போது வினு கூறியதை கேட்ட பின் அவருக்கு கணவனை எண்ணி வெறுப்பாக இருந்தது…

விக்கியும் நிகிலும் கூட அதிர்ந்து போனார்கள்… தன் தந்தை இந்த அளவிற்கு அகிலின் வாழ்க்கையோடு விளையாடியுள்ளாரா என்று….

“வினு என்னங்க சொல்றா???” சுதா கணவனிடம் கேட்க, அவர் எதுவும் கூறாமல் அமர்ந்திருந்தார்… அவரின் அமைதி சுதாவை வதைக்க,

“அப்போ என் பொண்ணு சொல்றது எல்லாம் உண்மை… என் பிள்ளைங்க வாழ்க்கையை கெடுக்க நினைச்சிருக்கிங்க.. உங்க கூட இவ்வளவு நாள் வாழ்ந்தேன்னு நினைச்சா அருவெறுப்பா இருக்கு.. பணத்துக்கு பின்னாடி ஓடினாலும் எங்க மேல பாசம் வச்சிருக்கிங்க.. எங்களுக்காக தான் ஓடி ஓடி சம்பாதிக்கிறங்கன்னு நினைச்சேன்.. ஆனா இப்படி இவங்க சந்தோஷத்தையெல்லாம் பறிச்சிட்டு என்னப் பண்ண போறிங்க???” மனதில் இருந்ததையெல்லாம் கொட்டியவருக்கு நெஞ்சை அடைப்பது போல் இருந்தது..

சுதாவின் தடுமாற்றம் உணர்ந்து வினு அவரை தாங்கிக் கொள்ள, கிருஷ்ண குமார் எதுவும் பேசவில்லை… வினு தன் தாயை அழைத்துக் கொண்டு சுமியிடம் சென்று அமர்ந்துக் கொண்டாள். அவர்களை தொடர்ந்து சுமியும் சென்றுவிட, விக்கி தன் தந்தையின் முன் வந்து நின்றான்..

அடுத்து நீயும் திட்டப் போகிறாயா என்பது போல் குமார் அவரை ஏறிட, அவன் எதுவும் கூறாது தன் பின்னால் மறைந்து நின்றிருந்த ஹனியை இழுத்து முன்னால் விட்டான்…

“உங்க பேத்தி.. அகில் அண்ணாவோட பொண்ணு…” என்றவன் அதற்கு மேல் எதுவும் கூறாமல் அங்கிருந்து அகன்றுவிட, ஹனி மட்டும் அவர் முன்னால் நின்றாள்…

ஏற்கனவே அவரது புகைப்படத்தை வீட்டில் பார்த்து அவள் சுதாவிடம் கேட்டிருக்கிறாள்.. அவரும் தாத்தா என்று சொல்லிக் கொடுத்திருக்க, அவரை புன்னகையோடு பார்த்திருந்தாள்…

“தாத்தா..!!!! நீங்க எப்போ ஸ்டார்ல இருந்து வந்திங்க???” கண்களில் எந்த மிரட்சியும் இல்லாமல் அவரின் அருகில் சென்றவள், அவர் அமர்ந்திருந்ததற்கு பக்கத்து இருக்கையில் ஏறி அமர முயன்றாள்..

சற்று உயரமான இருக்கை என்பதால் அவள் தடுமாற, அவளது செய்கையை பார்த்திருந்த குமாரின் கைகள் அனிச்சையாக அவள் அமர்வதற்கு உதவியது…

பார்ப்பதற்கு அப்படியே வினுவை உரித்து வைத்தாற் போல் இருந்தவளைவிட்டு பார்வையை திருப்ப முடியவில்லை அவரால்.. அனைவரும் தன்னை ஒதுக்கி வைத்துவிட, தன்னை ஏற்றுக் கொண்டு வந்த பேசும் அவளை கண்டவரின் கண்களில் இருந்து கண்ணீர் கோடாக இறங்க ஆரம்பித்தது…

“அச்சோ தாத்தா… ஏன் அழுறிங்க???” தன் இருக்கையில் இருந்து எக்கி அவரின் கண்ணீரை துடைக்க முயன்றவளை, அணைத்துக் கொண்டு கதற தொடங்கினார் கிருஷ்ண குமார்… !!!!!!

.
விழிகள் தொடரும்……..

Facebook Comments Box
What’s your Reaction?
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here