எங்கு நோக்கினும் இளஞ்சிவப்பு வண்ணத்தில் கம்பீரமாகவும் , கலைநயத்துடனும் , ராஜகுலத்தின் கம்பீரத்துடனும் கூடிய அரண்மனைகளைக்கொண்ட ராஜஸ்தானின் அழகை பருகியபடி வந்துகொண்டிருந்தது அந்த volvoc60 ரக கார் .
இதுவரையில் காணாத ஒரு புது இடத்திற்க்கு சுற்றுலா வந்ததினால் ஏற்பட்ட மகிழ்ச்சி காருக்குள் அமர்ந்திருந்தவர்களின் முகத்தில் பரவிக்கிடந்தது .
“கிருஷ்ணா …. சூப்பர் ப்ளேஸ்டா … பார்க்க பார்க்க அவ்வளவு அழகா இருக்கு…பிங்க் சிட்டின்னு சும்மாவா சொல்றாங்க…நல்ல ஆப்ட் ஆன பேர்தான் . எப்படிடா டூருக்கு இந்த இடத்த செலக்ட் பண்ண … உன் செலக்ஷன் எப்பவும் மட்டமாதானே இருக்கும் …திடீர்னு உன் டேஸ்ட் எப்படி ராயலுக்கு ஜம்ப் ஆச்சு ? ” ஜன்னல் வழியாக வெளியே வேடிக்கைப்பார்த்துக்கொண்டு வந்த பூர்வா காரை செலுத்திக்கொண்டிருந்த கிருஷ்ணாவிடம் கேட்டாள் .
ஓட்டுனர் இருக்கையில் அமர்ந்திருந்த கிருஷ்ணா ரியர்வியூ மிரரில் பின் இருக்கையில் இருந்த பூர்வாவை பார்த்தபடி ” என்னது … என் டேஸ்ட் மட்டமா ??? அதுவும் ஒரு வகையில கரெக்ட்தான் … என் டேஸ்ட் மட்டும் நல்லா இருந்துருந்தா நான் ஏன் உன் கூட ஃப்ரெண்ட்ஷிப் மெய்ன்டெய்ன் பண்ணிருக்க போறேன் … எல்லாம் என் நேரம் … உன்கிட்ட இப்படி பேச்சு வாங்கிட்டு இருக்கேன் .” என முகத்தை கோபமாக வைத்தபடி கேட்டான் . இதைக்கேட்ட பூர்வாவோ
” ம்க்கும் ….ஆமா … ஆமா… இல்லன்னா இவரு அமெரிக்கன் ப்ரெஸிடென்ட் கூடதான் ஃப்ரெண்ட் ஆகிருப்பாரு “
” ஏய் ….இப்போ வாய மூடப்போறியா ? இல்ல இங்கயே இறக்கிவிட்டுடவா ? “
“அப்பப்பா ….ஏய் …அமைதியா வாங்கயா ….சின்னப் புள்ளத்தனமா சண்டை போட்டுக்கிட்டு …” என பூர்வாவின் அருகில் அமர்ந்திருந்த அதிதி அவர்களின் வாக்குவாதத்தை நிறுத்தும் பொருட்டுக் கூறினாள் .
” நல்லா சொல்லு அதிதி … வீட்ல எவ்வளவு கஷ்டப்பட்டு ஹாலிடே டூருக்கு பர்மிஷன் வாங்கிட்டு வந்தோம் …இதுங்க சண்டைப்போட்டே ட்ரிப்ப கேன்சல் பண்ண வச்சிடுங்கும் போல இருக்கே …” என்று கிருஷ்ணாவின் அருகில் இருந்த சாகர் கூறினான் .
” சரி சரி நான் எதுவும் பேசல …அவளையும் கொஞ்சம் வாயை அடக்க சொல்லு …கன்னியாகுமரில இருந்து காஷ்மீர் வரைக்கும் வாய் கிழியுது அவளுக்கு” கிருஷ்ணா .
இதைக்கேட்டவுடன் வெகுண்டெழுந்து மீண்டும் எதையோ பேச முற்பட்ட பூர்வாவின் வாயை தன் கைகளால் அவசர அவசரமாக பொத்தி ” ப்ளீஸ் பூர்வா…கொஞ்ச நேரம் அமைதியா வாடி …” என கூறினாள் அதிதி.
வெடுக்கென்று அதிதியின் கையைத்தட்டி முகத்தை வெடுக்கென்று ஜன்னல் பக்கம் திருப்பிக்கொண்டாள் பூர்வா.
கிருஷ்ணா , சாகர் , அதிதி , பூர்வா , நால்வரும் ஒரே அலுவலகத்தில் பணிபுரிபவர்கள் . நெருங்கிய நண்பர்கள் . கொஞ்சம் மேல்தட்டு குடும்பத்தைச் சேர்ந்தவர்கள் . இக்கால இளைஞர்களின் பிரதிநிதிகள்.
வீட்டில் ராஜஸ்தானிற்க்கு சுற்றுலா செல்கிறோம் என்றவுடன் இவர்களுக்கு கிடைத்த முதல் பதில் ” முடியவே முடியாது …உங்களை அவ்வளவு தூரம் எல்லாம் அனுப்ப முடியாது ” என்பதுதான் .
பிறகு எப்படியோ கெஞ்சி கூத்தாடி அவர்களின் அனுமதியுடன் கிளம்பவும் செய்தாயிற்று . ஞாயிற்றுக்கிழமை காலையில் சென்னை ஏர்போர்ட்டில் ஏர் இண்டியா விமானம் ஏறியவர்கள் சிலமணி நேர பயணத்தில் ஜெய்ப்பூரை அடைந்தனர் .
ஜெய்ப்பூரில் கிருஷ்ணாவின் பெரியம்மா வசித்துவருவதால் அவரிடம் தாங்கள் வரும் விஷயத்தை முன்கூட்டியே கூறியிருந்தான் கிருஷ்ணா .
ஜெய்ப்பூர் இன்டர்நேஷனல் விமான நிலையத்தை வந்தடைந்தவுடன் பெரியம்மா அனுப்பியிருந்த காரில் அவரின் இல்லத்தை சென்றடைந்தனர் .
பின் சிறிது நேரம் இளைப்பாறியவர்கள் காலை உணவை முடித்துக்கொண்டு ஜெய்ப்பூரை சுற்றிப்பார்க்க பெரியம்மாவின் வண்டியையும் எடுத்துக்கொண்டு புறப்பட்டுவிட்டனர்.
அப்போதுதான் மேற்க்கண்ட வாக்குவாதம் நடைபெற்றுக்கொண்டிருந்தது . ஹவா மஹால் , ஜல் மஹால் , சிட்டி பேலஸ் , ஜந்தர் மந்தர் என கண்களுக்கு குளிர்ச்சியான இடங்களைப் பார்த்த களிப்பில் அகமகிழ்ந்திருந்தனர் .
ஹவா மஹால்

சிட்டி பேலஸ்

ஜந்தர் மந்தர்


ஜல் மஹால்
எல்லா இடத்தையும் சுற்றிப்பார்த்து முடித்து இரவு வீட்டிற்க்கு வந்தவர்கள் உறங்க ஆயத்தமாயினர் . கிருஷ்ணாவிற்க்கு தூக்கம் வராததால் பால்கனிக்கு சென்று ராஜஸ்தானின் சுற்றுலாத்தளங்களை கூகுளில் தேடிப்பார்த்துக்கொண்டிருந்தான்.
அப்போதுதான் அவனின் கண்ணில் பட்டது அந்த பன்கார் கோட்டை . அந்த கோட்டையைப்பார்த்தவுடன் அதன் சலனமில்லாத அழகில் ஒரு நொடி கிறங்கியவன் அந்த கோட்டையின் புகைப்படத்திற்க்கு அருகில் உள்ள செய்தியைப் படித்து ஸ்தம்பித்தான். Bhangarh: the most haunted fort in India. ” வாவ்வ்…ஹான்டட் ஃபோர்ட்ட்ட்….இன்ட்ரஸ்ட்டிங்… ” என மனதினுள் நினைத்தவன் அந்த கோட்டையைப்பற்றி மேலும் அறிந்து கொள்ளும் ஆவலில் மேற்க்கொண்டு அந்தக்கட்டுரையை படிக்க ஆரம்பித்தான். படிக்க படிக்க தமிழாக்கம் அவன் மனதில் ஓடியது .
பல நூற்றாண்டுகளுக்கு முன்னர் பான்கர் கோட்டையில் ரத்னாவதி என்ற இளவரசி இருந்தாள் . அப்சரஸைப் போல மின்னும் பேரழகியாக திகழ்ந்தவளின் பெருமை நாடெங்கும் பரவியருந்தது .தேவ கன்னிகை போல விளங்கும் அவளை மணம் புரிய யுவராஜாக்களிடையே பயங்கர பனிப்போரே நிகழ்ந்தது .
அவள் அழகில் மயங்கியவர்களில் மந்திர தந்திர வித்தைகளில் தேர்ந்த yaசிங்கியாவும் ஒருவன் . நாளுக்கு நாள் ரத்னாவதியின் மேல் உள்ள மோகம் அளவுக்கதிகமாக பெருக்கெடுக்க ஆரம்பித்தது . அதற்க்குமேலும் பொறுமைகாக்க முடியாத சிங்கியா ரத்னாவதியை நேர்வழியில் சென்று அடையமுடியாது என்பதை உணர்ந்து குறுக்குவழியை தேர்ந்தெடுத்தான் .
ரத்னாவதி தினமும் வாசனை தைலத்தை வதனத்தில் பூசிக்கொள்ளும் சுபாவம் கொண்டவள் . இதை எப்படியோ
அறிந்துக்கொண்ட சிங்கியா , இளவரசி ரத்னாவதியின் தாதிப்பெண் வெளியே செல்லும்போது அவளை வசியம் செய்து தன் இருப்பிடத்திற்க்கு கொண்டு வந்தான் . தனது துஷ்ட சக்திகளைப் பயன்படுத்தி ஒரு மந்திர வாசனாதி தைலத்தை அவளிடம் கொடுத்தனுப்பினான் . அந்த தைலத்தை யாரவது முகர்ந்தாலோ அல்லது மேனியில் பூசிக்கொண்டாலோ சிங்கியாவின்மேல் காதல் கொண்டு வசியம் செய்யப்பட்டவர்கள் போல் ஆகி சிங்கியாவை நோக்கி சென்றுவிடுவர் . எனவே மிகுந்த ஆவலுடன் காத்துக்கொண்டிருந்தான் சிங்கியா .
அந்த தாதிப்பெண் கோட்டைக்கு சென்றவுடன் அவளது வித்தியாசமான நடவடிக்கைகளை கவனித்த ஐயமுற்ற ரத்னாவதி இதன் பின்னர் இருக்கும் சதிவேலையை எப்படியோ கண்டுபிடித்துவிட்டாள். கோபத்தில் அந்த தலத்தை எடுத்து வெளியே உள்ள பாறையில் தூங்கி எறிந்தாள் .அந்த தைலம் பட்டவுடன் அந்தபாறையும் அனிச்சையாகவே சிங்கியாவை நோக்கி நகரத்துவங்கியது . அந்தப்பாறை சிங்கியாவை நசுக்கி கொஞ்சம் கொஞ்சமாக சாகடித்துக்கொண்டிருந்தது . இறக்கும் தறுவாயில் வஞ்சிக்கப்பட்ட சிங்கியா ரத்னாவதியும் அவளுடைய
ராஜாங்கமும் சின்னாபின்னமாகி அழிந்துவிடும் என்ற சாபத்தையும் கொடுத்துவிட்டே இறந்தான் .
அவன் இறந்த அடுத்த வருடமே அஜப்கர் சமஸ்தானத்திற்க்கும் பான்கர் சமஸ்தானத்திற்க்கும் போர் நடந்து ரத்னாவதியும் அவளுடைய படைவீரர்களும் ராஜ்ஜியமும் அடியோடு அழிந்துவிட்டனர் . அந்தக்கோட்டையும் சிதைந்துவிட்டது . அதிலிருந்து அந்தக்கோட்டையில் பல விசித்திரமான சம்பவங்கள் அரங்கேறத்துவங்கின . அந்தக்கோட்டையில் இறந்தவர்களின் ஆன்மாக்கள் இன்றளவும் உலவிக்கொண்டிருக்கின்றன . விதவிதமான சப்தங்கள் அமானுஷ்ய நிகழ்வுகள் என அந்த கோட்டை ஒரு மர்மபூமியாகவே திகழ்கிறது . சுற்றுலாப்பயணிகளுக்கு காலை 6 மணி முதல் மாலை 6 மணி வரை மட்டும்தான் அனுமதிக்கப்படுவார்கள் . சூரிய அஸ்தமனத்திற்க்குப் பிறகு அமானுஷ்ய நிகழ்வுகளும் சப்தங்களும் கேட்பதால் அங்கு சூரிய ஙஅஸ்தமனத்திலிருந்து சூரிய உதயம் வரை அனுமதி இல்லை .
அக்கட்டுரையை முழுமையாக படித்த பிறகு ” அடப்பாவிங்களா !!! இதெல்லாம் நம்பற மாதிரியா இருக்கு … சுத்த பேத்தல் … யாரோ கிளப்பிவிட்ட ரூமரா இருக்கும் . இந்த பேய் பிசாசு கதையெல்லாம் இன்னும் இந்த ஜனங்க நம்பிட்டு இருக்கிறத நினைச்சா சிரிப்புதான் வருது . அப்படி 6 மணிக்கு மேல அங்க தங்கினா என்ன ஆகுதுன்னு பார்த்துடலாம் … நாளைக்கு ஃபர்ஸ்ட் வேலையா அங்க கிளம்பற வேலையைப் பார்க்கனும் “. என்று முடிவெடுத்தான் . இரவு வெகுநேரம் ஆகிவிட்டிருந்ததால் உறக்கமும் கண்களைத்தழுவ ஆழ்ந்த நித்திரையில் ஆழ்ந்தான் கிருஷ்ணா .
மறுநாள் விடிந்தவுடன் தன் நண்பர்களிடம் ” ப்ரண்ட்ஸ் … நேத்து பெஸ்ட் டூரிஸ்ட் ஸ்பாட் இன் ராஜஸ்தான்னு கூகுள் பண்ணும்போது பான்கர் ஃபோர்ட்னு ஒரு கோட்டையைப் பார்த்தேன் … சிம்ப்ளி சூப்பர்ப்பா இருக்குடா … இன்னைக்கு அங்க போலாமா ? ” படித்த அத்தனையையும் முழுவதுமாக சொல்லாமல் பூசி மெழுகியவாறு கூறினான் கிருஷ்ணா .
” என்னடா நீ ? இன்னும் ஜெய்ப்பூரையே முழுக்க சுத்தி பார்க்கலையேடா ? முதல்ல இங்க இருக்கிறதை சுத்திப்பார்ப்போம் . அப்புறமா அங்க போகலாம் ” அதிதி .
இதைக்கேட்ட உடன் காற்று போன பலூன் போல ஆகிய கிருஷ்ணாவின் முகத்தை பார்க்க சகிக்காமல் ” இப்போ எதுக்கு மொகரக்கட்டை இஞ்சி தின்ன மங்கி மாதிரி ஆகிடுச்சு உனக்கு… அதிதி … அவன் சொல்ற இடத்துக்கே போகலாம் . இல்லைன்னா முகத்துல இப்படியே எக்ஸ்பிரஷன் காட்டி உயிரை வாங்கிடுவான் இந்த கிருஷ்ணா ” சாகரின் இப்பதிலில் கொஞ்சம் அசடு வழிந்தாலும் உள்ளூர உற்சாகமாகவே இருந்தது கிருஷ்ணாவிற்க்கு .
அடுத்த அரைமணி நேரத்தில் வீட்டிலிருந்து கிளம்பினர் . முதலில் இரயிலில் செல்ல முடிவெடுத்தவர்கள் பெரியம்மாவின் வற்புறுத்தலினால் அவரின் காரினையே எடுத்துக்கொண்டு கிளம்பினர் .
கூகுள் மேப்பின் ( கூகுள் இல்லைன்னா இன்னைய தேதிக்கு நாம இல்ல ????? ) உதவியுடன் சரியாக ஒன்றரை மணி நேரத்தில் அந்தக்கோட்டையை வந்தடைந்தனர். வாயிலின் பிராதான ராஜ அரண்மனைக்கு செல்ல நேடிய சாலை அமைக்கப்பட்டிருந்தது. கோட்டைக்கு செல்லும் சாலையின் இருமருங்கிலும் அழிவுகளின் மீதம் இருந்தது . பான்கர் கோட்டையின் நடனமாதர்கள் தங்கும் இடம் , பான்கரின் மார்க்கெட் என்று அனைத்தும் சிதிலமடைந்த நிலையில் கிடந்தது .மேலும் முன்னேறியவுடன் ஏராளமான கோவில்கள் காட்சியளித்தன.
இறுதியாக பிராதான கோட்டையை நெருங்கியவுடன் பிரமிக்க வைக்கும் பெரிய வாயிற்கதவுதான் அவர்களை முதலில் வரவேற்றது . கோபிநாத் கோவில் , சோமேஷ்வர் கோவில் போன்ற ஆலயங்கள் காணப்பட்டன . மேலும் சபா மண்டபம் , நீதிவிசாரணை செய்யும் இடம் என அனைத்துமே இடிபாடுகளில் சிதைந்திருந்தது .










இறுதியாக ரத்னாவதியின் அரண்மனையை அடைந்தனர் . இணையத்தில் உள்ள புகைப்படத்தில் கண்டதை விட அந்த ஹவேலி நேரில் இன்னும் பிரமாண்டமாகத் தெரிந்தது கிருஷ்ணாவிற்க்கு .
கோட்டையின் ஒவ்வொரு இடமாக சுற்றிப்பார்த்துக்கொண்டு வந்தவர்களுக்கு நேரம் சென்றதே தெரியவில்லை .
” அப்பப்பா…எவ்வளவு பெருசா இருக்கு இந்த கோட்டை…ஒரு ஊரே அழிஞ்சு போயிருக்கு பாரேன் … ஏன் இப்படி ஆச்சு இந்த ஊர் . கிருஷ்ணா … இந்த ஃபோர்ட் பத்தி ஹிஸ்டரி படிச்சிருப்பியே ! என்ன போட்டிருந்தது அதுல ? ” ஆர்வமாக கேட்டாள் அதிதி .
கிருஷ்ணாவும் தான் படித்த அத்தனை செய்திகளையும் கூறினான் . அங்கு உலவிவரும் ஆவிகளின் கதை உட்பட …
” என்னது…பேய்யா……அடேய் பாவி… என்னடா பொசுக்குன்னு குண்ட தூக்கிப்போட்ற… இவ்வளவு நேரம் பூத் பங்களாவத்தான் சுத்தி சுத்தி பார்த்துட்டு இருந்தேனா ??? அட கடவுளே ! “என தலையில் கைவைத்துக் கொண்டாள் பூர்வா .
” ஹோ Shut-up பூர்வா… பேய் , பிசாசு எல்லாம் ஒன்னும் இல்ல … இது ரொம்ப பழமையான இடம் … இர்ரெஸ்பான்ஸிபிள் பீப்பில்ஸ் கிட்ட இருந்தும் சமூக விரோதிகள் கிட்ட இருந்தும் புரொடெக்ட் பண்றதுக்காக லோக்கல் பீப்பில்ஸ் ஸ்ப்ரெட் பண்ணிருப்பாங்க …புரியுதா? இன்னைக்கு நைட் நாம இங்கதான் ஸ்டே பண்ண போறோம். இதெல்லாம் வெறும் வதந்தினு நான் ப்ரூஃப் பண்ணி காமிக்கிறேன் ” கிருஷ்ணா .
” கிருஷ்ணா…எதுக்குடா இந்த ரிஸ்க் … வந்தோமா பார்த்தோமா போனோமான்னு இல்லாம நமக்கு எதுக்கு இந்த தேவையில்லாத ரிஸ்க்டா …” சாகர் .
” ஸீ சாகர் … நான் முடிவு பண்ணிட்டேன் . என் கூட இருக்க விருப்பம் இருந்தா இருங்க …அதர்வைஸ் நீங்க கிளம்பிபோகலாம் நான் எதுவும் சொல்லமாட்டேன் “.
” உன்னை திருத்தவே முடியாதுடா …கழுதைக்கு வாக்கப்பட்டா உதை வாங்கிதான் ஆகனும் , ஆர்வக்கோளாறுக்கு ப்ரெண்ட்டா இருந்தா கிறுக்குத்தனம் செஞ்சிதான் ஆகனும்னு அப்பவே பெரியவங்க சொல்லிவச்சது எவ்வளவு சரியா இருக்குன்னு பார்த்தியா அதிதி ” பூர்வா .
பூர்வா அவ்வாறு கூறியவுடன் சிறிது சிரிப்பலை அவர்களுக்குள் எழுந்தது . அதற்க்குள் சூரியனும் அஸ்தமனம் ஆகிவிடவே இன்னும் சரியாக கோட்டையை சுற்றிப்பார்க்காமல் இருந்தவர்கள் மேற்க்கொண்டு கோட்டையினுள் முன்னேறிச் சென்றனர் .
மெதுமெதுவாக இருள் சூழ ஆரம்பித்தவுடன் தனது பேக்பேக்கில் தயாராக எடுத்து வந்திருந்த எமர்ஜன்ஸி லைட்டை ஆன் செய்தான் கிருஷ்ணா .முன்னிரவு நேரம் வரை எல்லாம் சுமூகமாகவே சென்று கொண்டிருந்தது .
முதலில் கிருஷ்ணா அவனுக்கு அருகில் அதிதி அவர்களுக்குப் பின்னால் பூர்வா மற்றும் சாகர் இந்த வரிசையிலேயே நால்வரும் மேல்மாடிக்கு செல்லும் படிகட்டில் ஏறிக்கொண்டிருந்தனர் . மேலே செல்ல செல்ல ஒருவித துர்வாடை மூக்கை நிரட ஆரம்பித்தது . அந்த வாடையின் வீச்சு அதிகமாகிக்கொண்டு வரவே
” கய்ஸ்… போதும்பா இப்படியே இறங்கிடலாம் இதுக்கு மேல நான் வரனும்னா மூக்கை தனியா கழட்டி வச்சாதான் உண்டு … முடியலை… குடலை புரட்டுது சாமி….” என்றாள் அதிதி .
அதுவும் நியாயமாக படவே அனைவரும் கீழே இறங்கினர் . அப்போது படபடவென்று ஏதோ உருளும் சப்தம் கேட்கவே பின்னால் திரும்பிப்பார்த்த கிருஷ்ணா , இரண்டு படிகளுக்கு மேல் மூன்றாவது படியில் ஒரு புகை போன்ற கருப்பு உருவம் கையை இவனை நோக்கி நீட்டிக்கொண்டிருப்பதைப் பார்த்து பயந்து போய் அலறிக்கொண்டு கீழே விழுந்தான் .

படிகளில் புரண்டு கீழே விழுந்தவன் மீண்டும் எழுந்து பார்க்கையில் அதிர்ந்தே போய்விட்டான் . படிகளில் பார்த்தால் அங்கே அந்த கருப்பு உருவம் இருந்ததற்க்கான அறிகுறியே இல்லை .
ஒரு நிமிடம் மூச்சே அடைத்துப்போய்விட்டது அவனுக்கு. இதேல்லாம் பிரமையா என நினைத்தவனுக்கு காத்திருந்தது மற்றொரு அதிர்ச்சி . அதிதி , சாகர் , பூர்வா என யாருமே அங்கே இல்லை . தலையே சுற்றிக்கொண்டு வந்தது கிருஷ்ணாவிற்க்கு . தன் நண்பர்கள் தன்னிடம் விளையாடுகிறார்களா என்ற சந்தேகமும் வந்தது . ஆனால் அந்த கருப்பு உருவம்…ஒரு நிமிடம் கூட தாமதியாமல் தன் நண்பர்களைத் தேடினான் கிருஷ்ணா .
” அதிதி…பூர்வா….சாகர்… எங்கடா இருக்கிங்க …? ப்ளீஸ்டா .. முன்னாடி வாங்கடா … விளையாடாதீங்கடா …” கிருஷ்ணா கிட்டத்தட்ட கத்தியே விட்டான் .
” கிருஷ்ணா…. நாங்க இங்க இருக்கோம் …. இங்க வாடா…” அதிதியின் குரல் போல் இருந்தது . குரல் வந்த திசையை நோக்கி ஓடினான். அந்த இடத்தை அடைந்ததும் ஸ்தம்பித்து நின்றான் . முதுகுத்தண்டில் ஐஸ்கட்டி போட்டது போன்ற ஒரு சில்லிப்பு…
அந்த இடம் முழுவதும் தீபவிளக்குகளால் அலங்கரிக்கப்பட்டிருந்தது . அறையே ஏசி போட்டது போன்ற ஒரு குளுமையை கொண்டிருந்தது . ” இது எப்படி சாத்தியம் … இங்க யாரும் வரமாட்டங்கன்னு படிச்சோம் …அப்படின்னா இங்க விளக்கேத்தி வச்சது யாரு…பேயா????? ஓ மை காட் … அப்போ பேய் இருக்கிறது உண்மையா …? ” .பயத்தில் சலைவாவைக் கூட்டி விழுங்கியவனுக்கு எதுவுமே புரியவில்லை . அங்கிருந்து நகர்ந்து வந்தான் . யாரோ தனக்கு பின்னால் நடக்கும் சப்தம் கேட்டு திரும்பினான் . யாரும் கண்ணுக்கு அகப்படாவில்லை ஆனால் திடீரென்று யாரோ அழும் அரவம் காதுக்கு பக்கத்தில் கேட்டது . அந்த சப்தம் கேட்டதுதான் தாமதம் பின்னங்கால் பிடரியில் அடிக்க திரும்பிப் பாராமல் ஓடினான்.
” கிருஷ்ணா … ஹெல்ப் மீ…” சாகரின் குரல். சட்டென்று தன்னிலைக்கு வந்த கிருஷ்ணா குரல் கோட்டையின் மேல்மாடியில் இருந்து கேட்பது போலே தோன்றவும் வேகவேகமாக இரண்டு இரண்டு படியாக ஏறி மேல்தளத்தை அடைந்தான் . அங்கு பிரமாண்டமான ஒரு அறை இருந்தது
அந்த அறைக்குள் குரல் கேட்பது போல் இருக்கவும் அந்த அறையினுள் நுழைந்தான் . அதுவரையும் அங்கு சுற்றிக்கொண்டிருந்த துர்வாடை அகன்று ஒருவித சுகந்தமான நறுமணம் வியாபித்திருந்தது அந்த அறையில் . இவன் அந்த அறைக்குள் நுழைந்தவுடன் அங்கிருந்த சட்டென்று வெளிச்சம் மறைந்து இருள் பரவியது . மனத்தினுள் பயம் மிருதங்கம் வாசித்தது . தன் டார்ச்சினால் அந்த இருட்கடலில் ஒளியை பாய்ச்சினான் .
ஒளியைப்பாய்ச்சியவுடன் அவன் காதுக்கு வளையோசை மற்றும் கொலுசொலி சப்திக்க கண்முன் மிகமிக அழகான ராஜஸ்தானின் பாரம்பரிய அணிகலன்களை அணிந்துக்கொண்டு கண்ணாடியில் தன்னை சிருங்காரம் செய்துகொண்டிருந்த பெண்ணைக் கண்டான் . அதைப்பார்த்தவுடன் இதயம் ஒரு எம்பு எம்பி வாய்வழியே வெளியே வந்துவிட்ட உணர்வு அவனுக்கு . ” ரத்னாவதி…” அனிச்சையாகவே உளறியது அவன் வாய் .

அப்பெயரைக் கேட்டவுடன் சடாரென்று திரும்பிப்பார்த்த அப்பெண் எழுந்து இவனருகே நடந்து வந்தாள் . அழகான அப்பெண்ணின் உருவம் அருகில் வர வர கோரமாகிக் கொண்டே வந்தது . கண்கள் இருந்த இடத்தில் இரண்டு கருப்பு துவாரங்களே தென்பட்டன . அந்த உருவம் இவனைப்பார்த்து ” கோன் ஹே தும்…….ஏ மேரே மெஹெல் ஹே …. மேரே இஜாசத் கே பீனா மேரே சாம்னே ஆனேகி துமாரா கித்னா ஹிம்மத்…. மே துஜே சோடேங்கி நஹி….”( யார் நீ? இது என்னோட மஹால் . என்னோட அனுமதி இல்லாம என் முன்னாடி வருவதற்க்கு உனக்கு எவ்வளவு தைரியம் ? . உன்னை சும்மா விடமாட்டேன் ) . என அந்த உருவம் இவனைப் பார்த்து கொடூரமான குரலில் கூறியது .

அவ்வளவுதான் !!! பயத்தில் பல்ஸ் தாறுமாறாக எகிற ஒரே தாவலில் அறைக்கு வெளியே விழுந்தான் கிருஷ்ணா . வெளியே விழுந்தவன் மீண்டும் எழுந்து கண்மண் தெரியாமல் வெளியே ஓடிக்கொண்டிருந்தான் . நாலுகால் பாய்ச்சலில் வாயிலைத் தாண்டுவதற்க்கு இது என்ன குடிசையா அல்லது வீடா ? பான்கர் கோட்டை …!!! எவ்வளவு விரைவாக ஓடினாலும் அவனால் அந்தக்கோட்டையின் வாயிலை அடைய முடியவில்லை . மேலும் பார்க்கும் இடங்களிலெல்லாம் புகை போன்ற மனித உருவங்களும் சிரிப்புச்சத்தமும் கேட்டு இம்சித்துக்கொண்டிருந்தன அவனை .


ஓடிக்கொண்டிருக்கும்போது திடீரென்று பெரிய கல் வழியில் இருக்கவும் திடீரென்று ஸ்திரமில்லாமல் கீழே விழுந்தான் . விழுந்தவன் தன்னை யாரோ கைகொடுத்து எழுப்பவும் நிமிர்ந்து யார் என்று பார்த்தவனுக்கு கண்ணெல்லாம் மடைதிறந்து கொட்டும் கண்ணீர் பிராவகம் ஊற்றெடுத்தது .
” சாகர்…. எங்கடா போய்ட்டீங்க…என்ன தவிக்க விட்டுட்டீங்களேடா … இனி ஒரு நிமிஷம் கூட இந்த இடத்துல இருக்க வேண்டாம்டா … இங்க பேய் இருக்கிறது உண்மைதான்டா….இன்னும் கொஞ்ச நேரம் இருந்தா நான் பயத்துலேயே செத்துடுவேண்டா….வாடா போகலாம்…அதிதி , பூர்வா எல்லாம் எங்கடா ??? என்னாலதானே இவ்வளவு கஷ்டம் உங்களுக்கு …” என கண்களைத் துடைத்துக்கொண்டு சொன்னவன் நிமிர்ந்து பார்த்தான் .
அங்கே சாகர் நின்றிருந்த இடத்தில் கிருஷ்ணா அந்த அறையில் பார்த்த ரத்னாவதி நின்று கொண்டிருந்தாள் . அவளுக்குப் பின்னால் அதிதி , பூர்வா , சாகர் மூவரும் ரத்தம் முழுவதும் வற்றிப்போய் வெளிறிய முகத்து
டன் நின்றிருந்தனர் . மெதுமெதுவாக அவனை நோக்கி அடியெடுத்துவைத்தனர் . கிருஷ்ணாவோ பயத்தில் ” நோ… நோ… லீவ்மீ லீவ்மீ…” என்று கதறினான். ஆனால் அவர்களோ அவன் கூறுவதைக் காதில் வாங்காமல் முன்னேறிக்கொண்டே வந்தனர் . அகோரச் சிரிப்பு ஒன்றை உதிர்த்த ரத்னாவதி அவனின் கழுத்தை நெரிக்க ஆரம்பித்தாள். பயத்தில் மிடறு விழுங்கப் பார்த்தவன் பின் தைரியத்தை ஒன்றுக்கூட்டி ஓங்கித் தள்ளினான்.
” ஆஆஆஆஆ…..எருமை எருமை இப்படியா தள்ளிவிடுவ…. கொரங்கு ….அப்ப்ப்பா…..வலிக்குதுடா மலைமாடு …” என்றபடியே கட்டிலின் அருகே விழுந்த அதிதி ஆயாசத்தடன் எழுந்தாள் .
” அதிதி…நீ இன்னும் சாகலியா…உயிரோடதான் இருக்கியா ….” ஆச்சரியம் விலகாமல் கேட்டான் கிருஷ்ணா .
” அட கிராதகா…என்னது…? சாகலியாவா…? என்னடா உளர்ற …ஏதாச்சும் கனவு கண்டியா …சீ போய் சீக்கிரம் ரெடியாகு …டைம் ஆகுது “
அப்போதுதான் சுற்றும் முற்றும் பார்த்த கிருஷ்ணா தன் அறையில் இருப்பதை உணர்ந்தான் . ” ச்சய் கனவா…. என் வாழ்க்கையில இந்த மாதிரி மோசமான கனவ கண்டதே இல்லடாப்பா…எவ்வளவு ரியலா இருக்கு … நினைச்சாலே goosebumps ஆகுது ” என்று முனகிக்கொண்டே குளியலறைக்குச் சென்றான் .
காலை உணவிற்க்காக அனைவரும் ஆஜரானபோது அதிதி ” கய்ஸ் … இன்னைக்கு நான் சொல்ற இடத்துக்குத்தான் எல்லாரும் போகனும்… இட்ஸ் அ யுனிக் ப்ளேஸ்… என் ப்ரெண்ட் இப்பதான் மெயில் பண்ணா …நானும் செக் பண்ணேன் … ரொம்ப நல்லா இருக்கு போகலாமா என்றாள் அதிதி .
” ஓஓஓஓ….தாராளமா போகலாமே ….என்ன இடம்.”
” பான்கர் ஃபோர்ட் “
முற்றும் ????
P.s
வணக்கம் நண்பர்களே…. முதல்லயே டிஸ்கிரிப்ஷன்ல சொன்ன மாதிரி இது ஹாரரா இல்லையான்னு எனக்கு தெரியல… ஏதோ பண்ணனும்னு ஆசையா இருந்தது எழுதிட்டேன் . இந்த ஸ்டோரில வர்ற பான்கர் கோட்டை உண்மையிலேயே ஹாண்டட் ப்ளேஸ்தான்னு கூகுள்ல இருக்கு . அந்த கதையும் கூகுள்ல இருக்கு . அதை படிச்சபோதுதான் இந்த ஸ்டோரி எழுதுற யோசனை வந்தது . ஏதாச்சும் மிஸ்டேக் இருந்தா பொறுத்துக்கோங்க அன்பர்களே ….☺☺☺☺☺… நீங்களும் ஒருமுறை பான்கர் பத்தி கூகுள்ல சர்ச் பண்ணுங்களேன் ????? ki