கந்தகமாய் அவன் காதல் தமிழ் நாவல் அத்தியாயம் 4

6
3921

அத்தியாயம் 4

tamil novels

பெற்றவர்களிடம் விவரத்தை தெரிவித்த அபிநய வர்ஷினி அவர்களை அழைத்துக் கொண்டு ஹாஸ்பிடலுக்கு விரைந்தாள். அவள் பாதி தூரம் போன பிறகு தான் கவனித்தாள். அவளது பின்னாடியே ஒரு போலேரோ (Bolero) கார் தொடர்ந்து வருவதை… இந்த ஊரில் யார் அவளை தொடர்ந்து வருவது? யோசிக்க பிரமாதமான மூளை ஒன்றும் தேவை இல்லையே…

இப்பொழுது இறங்கி அவனிடம் சண்டை போடுவதை விட விஷ்வாவை போய் பார்த்து அவனது உயிரை பாதுகாப்பது தான் முக்கியமாகப்பட்டது அவளுக்கு.

முகம் கோபத்தில் செந்நிறமாக மாறி இருக்க… பெற்றவர்களிடமும் கூட எதையும் பகிர்ந்து கொள்ள முடியாமல் காரை வேகமாக மருத்துவமனையில் நிறுத்தினாள். விஷ்வாவிற்கு நடந்த விபத்தினால் மகளின் மனநிலை மாறி இருக்கிறது என்று பெற்றவர்கள் நினைக்க உண்மை நிலவரம் அவள் மனம் மட்டுமே அறிந்த ஒன்று.

அங்கே அவள் போய் செய்ய வேண்டியது என்று எந்த வேலையும் அவளுக்கு இருக்கவில்லை. விஷ்வாவின் மருத்துவமனை செலவுகள் அனைத்தும் ஏற்கனவே யாரோ செலுத்தி இருந்தார்கள்.

விஷ்வாவை அறையின் வெளியில் இருந்தே கண்ணாடி வழியாக  பார்த்தார்கள். தலையில் அடி பட்டு இருந்ததோடு , அவனது வலது கை தான் அதிகமாக பாதிக்கப்பட்டு இருப்பதாக நர்ஸ் சொல்ல… அபிநய வர்ஷினிக்கு சுருக்கென்று வலித்தது.

செலவுகளை ஏற்றுக் கொண்டது யார் என்று விசாரித்ததற்கு விஷ்வாவின் மீது லாரி ஏற்றிய கம்பெனியின் முதலாளி என்று சொன்னார்கள். அந்த முதலாளியின் பழுப்பு நிற கண்கள் அழைப்பு இல்லாமலே அபிநய வர்ஷினியின்  கண் முன்னே வந்து போனது.

டாக்டரிடம் விஷ்வாவின் நிலைமையைப் பற்றி தெரிந்து கொள்வதற்காக சென்றவள் பெற்றவர்களை அங்கேயே இருக்கும்படி சொல்லி விட்டாள்.

“நான் போய் டாக்டரை பார்த்துட்டு வர்றேன். நீங்க இங்கேயே இருங்க… துணைக்கு ஆள் தேவைப்படலாம் இல்லையா?” என்றவள் வேகமாக டாக்டரைப் பார்க்க விரைய… லிப்ட்டின் உள்ளே அவளை எதிர்கொண்டான் ஆதிசேஷன்.

உள்ளே செல்வதா வேண்டாமா என்று ஒரு நொடி தயங்கி அவள் நிற்க.. அடுத்த நொடி உள்ளே இழுக்கப்பட்டு இருந்தாள்.

“சீ!… இடியட்.. மேனர்ஸ் இல்லை உனக்கு? இப்படியா ஒரு பொண்ணு கையைப் பிடிச்சு இழுப்ப”

“என்ன அதிசயம் டாலி… முதலில் அடிச்சுட்டு அப்புறம் பேசுறது தானே உனக்கு பழக்கம்? இன்னிக்கு என்ன இன்னும் பேசிக்கிட்டு இருக்கே? அடிக்கலே… ” என்றான் நக்கலாக.

“உன்னை அன்னிக்கு ஒரு அடியோட நிறுத்தி இருக்கக்கூடாது..”

“ரியலி!” என்றான் குரலில் அதிசயத்தைக் கூட்டி…

“ராட்சசா… உண்மையை சொல்லு… விஷ்வாவோட இந்த நிலைமைக்கு நீ தானே காரணம்”

“சத்தியமா நான் இல்லை பேபி… என்னோட கம்பெனி லாரி டிரைவர் தான் காரணம்.. வண்டியில வேற பிரேக் பிடிக்காம இப்படி ஆகிடுச்சாம்” என்றான் முகத்தை பாவம் போல வைத்துக் கொண்டு…

“அவனை அப்படி செய்ய சொன்னது நீ தானே?”

“நான் எதுக்கு டாலி அப்படி செய்யப் போறேன்?”

“எனக்கு நல்லாத் தெரியும்… நீ வேணும்னு தான் இப்படி செஞ்ச… காலையில தோட்டத்தில் நாங்க பேசிட்டு இருந்தப்பவே கவனிச்சேன். உன் கண்ணில் அப்படி ஒரு குரூரம்… எதுக்காக இப்படி செஞ்ச? அவன் என்னோட கையை பிடிச்சதுக்கா? இல்ல என்னோட சிரிச்சு பேசுனதுக்கா?”

“என்ன பேபி நான் இவ்வளவு தூரம் சொல்றேன்… அப்பவும் நம்ப மாட்டேங்கிறே! தொட்டதுக்கு எல்லாம் அடிக்கிற குணம் உனக்குத்தான்… நான் ரொம்ப அப்பாவி தெரியுமா?”

“என் பொறுமையை ரொம்ப சோதிக்கிற… சொல்லு ஏன் இப்படி செஞ்ச?”

“இப்படி பிடிவாதம் பிடிக்காதே டாலி… நான் இதுக்கு காரணமே இல்லை… முழுக்க முழுக்க நீ தான் காரணம்” இயல்பாக சிரித்துக்கொண்டே பேசியவன் வார்த்தைகளை முடிக்கும்போது கற்பாறை என இறுகிப் போய் இருந்தது.

‘நானா? நான் என்ன செஞ்சேன்?’

“அப்படி பார்க்காதே பேபி… உன்னைத் தொடுறவங்க யாரா இருந்தாலும் அவங்களை தண்டிக்கிறது தானே உன்னோட வழக்கம்! உனக்கு எதுக்கு அந்த கஷ்டம்… அதான் இனி உனக்கு பதிலா அந்த வேலையை நான் செய்றதா முடிவு செஞ்சிட்டேன்” என்று இலகுவாக பேசியவனின் விழிகள் அசாத்திய பளபளப்பில் மின்னியது.

“என்ன உளர்ற?” தைரியமாக காட்டிக் கொள்ள முயன்றாலும் ஆதிசேஷனின் ஆளுமை நிறைந்த அலட்சியத் தோரணை அபிநய வர்ஷினிக்குள் லேசான பயத்தை விதைத்தது.

“இனி உன்னை யார் தொட்டாலும் அவங்களுக்கு இது தான் கதி… மத்தவங்க நல்லா இருக்கணும்னு நினைச்சா இனி எந்த ஆம்பிளையும் உன்னைத் தொடாம பார்த்துக்கோ… உன்னைத் தொட்டு உன் கையால அடி வாங்கினவன் நானா மட்டும் தான் இருக்கணும்.”

“லூசா நீ? என்னை யார் தொட்டாலும் நான் அவங்களை அடிக்க மாட்டேன்.. அப்படியே அவங்க தொடுறது எனக்கு பிடிக்காம இருந்து அடிக்கிறதா இருந்தா நானே அடிச்சுப்பேன்… நீ எதுக்கு இப்படி மிருகத்தனமா செஞ்சு வைக்கிற?”

“உன் வாழ்க்கையில் இனி உனக்கான முடிவுகளை எடுக்கும் அதிகாரம் உனக்கு இல்லை டாலி”

“என்ன உளறல்?”

“எப்போ என் மேல கை வச்சு என் வாழ்க்கையில் வந்தியோ அப்பவே உன்னோட வாழ்க்கையை நான் கையில் எடுத்துட்டேன்”

“நீ எடுத்துட்டா… போதுமா? என் வாழ்க்கை என்னோட கையில தான்”

“அப்படியா? உன்னோட வாழ்க்கை உன் கையில் இருந்திருந்தா இந்நேரம் நீ உன்னோட குடும்பத்தோட பொட்டானிகல் கார்டனில் தானே இருந்து இருக்கணும்? எப்படி இந்த ஹாஸ்பிடல் லிப்ட்டில் நின்னு என்னோட தனியா பேசிட்டு இருக்கே” என்று கேட்டவனின் கேள்விக்கு நிச்சயமாய் அவளுக்கு பதில் தெரியவில்லை.

“உன்னை எப்படி இங்கே வரவழைச்சேனோ அதே மாதிரி இனி நான் என்ன நினைக்கிறேனோ அதெல்லாம் நீ செய்யப் போற… செஞ்சாகணும்… செய்ய வைப்பேன்”

“விஷ்வா விஷயத்தில் ஜெயிச்சதனால எல்லா விஷயத்திலயும் ஜெயிச்சிடலாம்னு தப்பு கணக்கு போடாதே…”

“என்கிட்டே நீ இவ்வளவு எடுத்தெறிஞ்சு பேசாதே பேபி… உன்னோட தன்னம்பிக்கையை முழுசா உடைச்சு, நொறுக்கி என் காலடியில் விழ வைக்கணும்னு ஆசை, ஆசையா இருக்கு”

“டேய்! நீ என்ன பெரிய கடவுளா? நீ நினைச்சது மட்டும் தான் இந்த உலகத்தில் நடக்குமா?”

“டேய்!…ம்ம்ம்” கண்களை மூடி வெகுவாக ரசித்தான் அவள் பேச்சை.

“யாரும் என்னை இப்படி கூப்பிட்டதே இல்லை தெரியுமா? ஆங்! என்ன கேட்ட… நான் கடவுளான்னா? நீ ஒரு விஷயத்தை மறந்துட்ட டாலி… நீ இந்த லிப்ட்டில் ஏறி அஞ்சு நிமிசம் ஆச்சு.. இந்த அஞ்சு நிமிசத்தில் லிப்ட் எந்த மாடியிலாவது நின்னுச்சா? ” என்று வெகு சுவாரசியமாக அவன் கேட்ட பிறகு தான் அவளும் கவனித்தாள்.

அவள் ஏறியதில் இருந்து லிப்ட் எங்கேயும் நிற்கவில்லை. ஆதிசேஷனிடம் வாக்குவாதம் செய்து கொண்டிருந்ததில் இதை கவனிக்க அவள் தவறி இருந்தாள்.

கண்கள் அதிர்ச்சியில் விரிய… அப்பட்டமான பயத்துடன் அவனைப் பார்த்தாள்.

“இந்த முழி நல்லாயில்லை.. நீ கோபமா பார்க்கிறது தான் எனக்கு ரொம்ப கிக்கா இருக்கு”

“மரியாதையா லிப்ட் கதவை திற…” என்றவள் அவன் புன்னகை மாறாமல் நிற்பதைக் கண்டு லிப்டின் பட்டன்களை அழுத்திப் பார்த்தாள். எந்த பட்டனும் வேலை செய்யவே இல்லை. எந்த தளத்திலும் லிப்ட் நிற்கவும் இல்லை. கதவு திறக்கவும் இல்லை.

ஆத்திரம் மிக அவனைப் பார்க்க.. அவனோ இதற்கும் எனக்கும் எந்த சம்பந்தமும் இல்லை என்ற பாவனையில் நின்று விரல் நகங்களை ஆராய்ந்து  கொண்டிருந்தான்.

“ஒழுங்கா கதவைத் திற…” மனதின் நடுக்கத்தை வெளியே காட்டி விடாமல் இருக்க பெரும் பிரயத்தனம் செய்ய வேண்டி இருந்தது அவளுக்கு.

‘இவன் பேசுவதைப் பார்த்தால் விளையாட்டிற்கோ , தன்னை பயமுறுத்திப் பார்க்கும் ஆசையினாலோ செய்வது போல தோன்றவில்லை.. ஒரு வேளை இவன் எதிர்பார்ப்பது அவனை அன்று அடித்ததற்கு மன்னிப்போ’ என்று எண்ணியவள் அடுத்த நொடி தயக்கத்தை களைந்து விட்டு அவனுக்கு அருகில் போய் நின்றாள்.

“இதோ பார்… அன்னிக்கு நான் உன்னை அடிச்சது தப்பு தான். திடீர்னு ஒரு ஆண் என்னோட டிரெஸ்ஸ கிழிச்சதும் கோபத்துல அடிச்சுட்டேன். நிவேதிதா என்கிட்டே சொன்னப்போ அது பெரிய லாங் கவுன்னு தான் சொல்லி இருந்தா.. சடனா (sudden) நீ வந்து கிழிச்சு… என்னோட கால் வெளியே தெரிஞ்சு… ஊப்ப்” அந்த நொடிகளில் இருந்து மீள முடியாமல் அவள் தனக்குள் போராடுவதை கண்ணார கண்டு ரசித்துக் கொண்டிருந்தான் ஆதிசேஷன்.

‘இவனைப் போன்ற ஆட்களிடம் இருந்து விலகி இருப்பதே நல்லது’ என்று மீண்டும் ஒருமுறை மனதுக்குள் அழுந்த பதிய வைத்துக் கொண்டவள் தன்னுடைய விருப்பமின்மையை முகத்தில் காட்டி விடாமல் இருக்க வெகுவாக முயன்றாள்.

“சாரி… இதுக்காகத் தானே… இந்த வார்த்தையை நான் சொல்றதுக்காகத் தானே இப்படி என்னை துரத்திகிட்டே வர்றே? இப்போ தான் சொல்லிட்டேனே.. இனி உன் வழியைப் பார்த்து நீ போ.. என் வழியில நான் போறேன்”

“ம்ச்!… சோ… சேடு (Sad) இன்னுமா என்னைப் பத்தி நீ புரிஞ்சுக்காம இருக்க டாலி… உன்னை சாரி சொல்ல வைக்கணும்னு நான் முடிவு பண்ணி இருந்தா அதை அன்னிக்கு அந்த ஹோட்டலில் வச்சே செஞ்சு இருப்பேனே… என்னைப் பார்த்தா ஜஸ்ட் ஒரு சாரிக்காக ஒரு பொண்ணு பின்னாடி சுத்தி டைம் வேஸ்ட் செய்யிற மடையன் மாதிரியா இருக்கு? அத்தனை பேர் முன்னாடி.. அதுவும் என்கிட்டே வேலை பார்க்கிறவங்க எல்லார் முன்னாடியும் என்னை அடிச்சுட்டு யாருமே இல்லாத இந்த லிப்டில் வச்சு நீ கேட்கிற சாரி எல்லாத்தையும் சரி செஞ்சுடுமா என்ன?”

“…”

“நான் நினைச்சு இருந்தா அன்னிக்கு அந்த ஹோட்டலை விட்டு நீ வெளியேவே போய் இருக்க முடியாது… நீ என்னடான்னா சின்னப்பிள்ளை மாதிரி சாரி சொல்லி விளையாடிட்டு இருக்க…”

“…”

“இனியொருமுறை சாரி சொல்லாதே… என்கிட்டே மட்டும் இல்லை… வேற யார் கிட்டயும்… யூ ஆர் மைன்… மைன்ட் இட் (you are mine… mind it)”

அவள் பேசியதோ மன்னிப்பு கேட்டதோ எதுவுமே அவனுக்கு பெரிதாக தோன்றவில்லை. அவன் மனதை அவன் மாற்றிக் கொள்வதற்கான சாத்தியக்கூறுகள் இருப்பதாகவே அவளுக்கு தோன்றவில்லை. அவன் பார்வையில் இருந்த தீர்க்கமும், தெளிவும் அவளை அச்சம் கொள்ள செய்தது.

இவனிடம் பேசிப் பயனில்லை என்று உணர்ந்தவள் பொறுமையை இழுத்துப் பிடித்துக்கொண்டு பேசினாள்.

“இப்போ லிப்ட் கதவை திறக்கப் போறியா இல்லையா?”

“நீ சொல்லி செய்யாம இருப்பேனா? ஆனா இப்படி பத்தடி தள்ளி இருந்து கேட்டா எப்படி? பக்கத்துல வந்து கேளு” என்றவனின் விழிகள் கூறிய வார்த்தைகளின் அர்த்தம் புரியாத அளவிற்கு அவள் ஒன்றும் குழந்தை இல்லையே…

தன்னுடைய மொபைலை எடுத்து தந்தைக்கு அவள் அழைக்க முயல.. மின்னல் வேகத்தில் அவளது போன் பறிக்கப்பட்டு அவனது பேன்ட் பாக்கெட்டில் போடப்பட்டு இருந்தது.

“ஏய்!… அப்பாவும், அம்மாவும் பயந்துடுவாங்க… நான் சீக்கிரம் போகலைன்னா என்னை தேட ஆரம்பிச்சுடுவாங்க”

“அந்தக் கவலை உனக்கில்ல இருக்கணும்” என்றான் அசுவாரசியமாய்…

“ஒழுங்கா கதவைத் திற…”

“டாலி ஒரு விஷயம் சொல்லு… இப்போ இந்த லிப்ட் கதவு திறக்காம இருந்தா என்ன ஆகும்? எனக்குத் தெரிஞ்சு இன்னும் ஒரு பத்து நிமிசம் வரை உன்னையோ இந்த லிப்ட்டையோ பற்றி யாரும் கவலைப்பட மாட்டாங்க… ஆனா அதுக்கு அப்புறம் கண்டிப்பா தேடுவாங்க…

ஒரு இரண்டு மணி நேரம் இந்த இடத்துக்குள்ளேயே நீயும், நானும் அடைஞ்சு இருந்துட்டு அப்புறமா வெளியே போனா?

அப்படி போகும்போது நான் என்னோட கன்னத்தில உன்னோட லிப்ஸ்டிக் அடையாளத்தோட போனா?

லேசா தலை கலைஞ்சு… அங்கங்கே கசங்கின உடையோட நீ இங்கே இருந்து வெளியேறினா?

அந்த காட்சி எல்லாத்தையும் வெளியில இருக்கிற ஒரு போன் விடாம எல்லாத்துலயும் வீடியோ ரெகார்ட் செஞ்சு நெட்டில் வெளியிட்டா?

இதை எல்லாம் நேரில் ஆசை தீர பார்க்கும் உன்னோட பேரண்ட்ஸ்ல இரண்டு பேரில் ஒருத்தர் நெஞ்சை பிடிச்சுக்கிட்டு கீழே விழுந்தா?”

அவனது ஒவ்வொரு கேள்விக்கும் அவளது இதயம் அதிர்ந்ததை அவளது கண் வழியே கண்டு ரசித்தான் கொஞ்சமும் இரக்கமில்லாமல்…

“இதுக்கெல்லாம் நான் பயப்பட மாட்டேன்… இது மாதிரி ஒரு நாளைக்கு நெட்டில் ஆயிரம் வீடியோ வரும்… இன்னிக்கு ஒருநாள் இதைப் பத்தி பரபரப்பா பேசலாம்… நாளைக்கே வேற ஒரு நியூஸ் வந்தா இதை மறந்துடுவாங்க…”

“ம்ம்ம்.. தைரியமாத் தான் பேசுற… உங்க அப்பா, அம்மாவை மறந்துட்ட போல”

“அவங்களுக்கு என்னைப் பத்தி நல்லாத் தெரியும்… இந்த மாதிரி அல்ப விஷயத்துக்கு எல்லாம் உடைஞ்சு போய்ட மாட்டாங்க”

“அப்போ… இன்னும் கொஞ்சம் பெருசா செய்யணும்னு சொல்றியா டாலி” என்றவனின் பார்வை ஒரு வித அழுத்தத்துடன் அவளை தலைமுதல் கால் வரை அலச…

‘அவசரப்பட்டு இந்த கிறுக்கனிடம் வாய் விட்டு விட்டோமோ’ என்று காலம் கடந்து சிந்திக்கத் தொடங்கினாள் அபிநய வர்ஷினி.

“இப்போ உனக்கு இருக்கிறது ரெண்டே சாய்ஸ் தான் பேபி.. ஒண்ணு என் பேச்சைக் கேட்டு நடக்கணும். இல்லை… இப்போ நான் சொன்னதை விட அதிகபட்சமா நான் செய்வேன்… எது உனக்கு வசதி?”

“…”

“மௌனம் சம்மதம்… ம்ம்ம்.. அப்படியே எனக்குப் பக்கத்தில வந்து நில்லு பார்க்கலாம்…”

“…”

“ம்ம்ம்… வா” அழுத்தம் கூடியது அவன் குரலில்.

“…”

“ஓ… வெட்கமா இருக்கோ.. செல்லத்துக்கு… அப்போ நான் வர்றேன்” என்றவன் பயத்தில் விரிந்த அவளது விழிகளின் அதிர்ச்சியை அணுஅணுவாக கண்களால்  மென்று தின்று கொண்டே அவளை நெருங்கினான்.

எரிக்கும்….

Facebook Comments Box
What’s your Reaction?
+1
2
+1
0
+1
4
+1
0
+1
0
+1
0
+1
0

6 COMMENTS

    • நிறைய கதைகள் கை வலியினால் நிறுத்தி வச்சுட்டேன் மா… சீக்கிரமே ஆரம்பிக்கிறேன். நன்றி டா

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here