14. அது மட்டும் இரகசியம்

0
248

காலைக்கதிரவன் தன் மரகத மஞ்சள் நிற கரங்களை நீட்டி இவ்வுலக உயிர்களை எல்லாம் தன் இளஞ்சூட்டால் ஆரத்தழுவியிருந்த அந்த அழகான விடியற்காலைப் பொழுதில் விஷ்ணு தனதறையில் ஆழ்ந்த உறக்கத்தில் அமிழ்ந்திருந்தான் . ஒரு சில நாட்களாக சரியான உறக்கம் இன்றி தவித்தவனுக்கு இப்பொழுதுதான் நிம்மதியான தூக்கம் கிட்டியது .

நேற்றைய தினத்தின் இரவில் வேதாவைச்சந்தித்துவிட்டு தனதறைக்கு வந்தவன் அன்றைய தினம் தன் வாழ்வில் ஏற்பட்ட இருமாறுபட்ட முக்கியமான நிகழ்வுகளை நினைத்துப்பார்த்தான் . நினைக்கவே மலைப்பாக இருந்தது . ஒன்று தன் முன்ஜென்ம நிகழ்வினை அறிந்துகொண்டது . மற்றொன்று தன் காதலை வேதாவிடம் வெளிப்படுத்தியது . இரண்டுமே அவன் மனத்தினில் இதுநாள் வரை குழப்பத்தை விளைவித்த விஷயங்கள் . இன்றோ இவையிரண்டிற்க்குமே தக்க விடை கிட்டியதால் மனம் லேசானது போல இருந்தது .

” எவ்வளவு விரைவாக முடியுமோ அவ்வளவு விரைவாக மரகதலிங்கத்தை தேடிக்கண்டுபிடித்துவிடவேண்டும் ” என எண்ணி படுக்கையில் சரிந்தான் . படுத்தவுடன் அன்றைய தின அயர்ச்சி அவனை உறக்கம் எனும் மாயா லோகத்திற்க்கு சுற்றுலா அழைத்துச்சென்றது .

கனவுகளற்ற அற்புதமான அந்த உறக்கம் எனும் லோகத்தில் சஞ்சரித்துக்கொண்டிருந்தவன் திடீரென தன் மீது பொழியப்பட்ட நீரால் வாரிச்சுருட்டிக்கொண்டு எழுந்தமர்ந்தான் . அடிவயிற்றிலிருந்து கோபம் கொந்தளிக்க ” வாட் த ஹெல் … டாமிட்….இடியட் யாருடா தண்ணி ஊத்தினது” என திட்டிக்கொண்டே முகத்தில் வழிந்த நீரை தன் கைகளால் துடைத்தெறிந்துவிட்டு கண்களைத் திறந்தான் .

தனது எதிரில் கையில் தண்ணீர் வாளியுடன் நிற்க்கும் ராமைப்பார்த்து ” இடியட் என்னடா பண்ண இப்போ ? . நிம்மதியா தூங்க கூட விடாம டார்ச்சர் பண்றியே ! உருப்படுவியாடா நீ ! ” என ஆத்திரத்தில் கத்தினான் .

” டேய் கத்தாதடா ! நான் உன்கிட்ட நேத்து என்ன சொன்னேன் ? இன்னைக்கு மார்னிங் ஒரு இடத்துக்கு போறோம் . சீக்கிரம் ரெடியாகுன்னு சொன்னேனா இல்லையா ? அதான் உன்னை எழுப்ப வந்தேன் ” என கூறிய ராமை பார்த்து முறைத்துக்கொண்டே ” அதுக்கு இப்படியா தண்ணி ஊத்துவ ! சாதாரணமா எழுப்பியிருக்கலாம்ல ” என்றான் விஷ்ணு .

” அடப்பாவி … உன்னை எவ்வளவு நேரம் தெரியுமா எழுப்பினேன் ! நீ பாட்டுக்கு கும்பகர்ண சேவகம் செஞ்சிட்டு இருந்த . சரி இது வேலைக்கு ஆகாதுன்னு வாட்டர் ட்ரீட்மென்ட் ஃபாலோவ் செஞ்சேன் . பரவால்ல எவ்வளவு சூப்பரா வொர்க்கவுட் ஆகுதுல ” என நமட்டுச்சிரிப்புடன் கூறினான் ராம் .

அப்படிக்கூறிய ராமை நோக்கி ” அடப்பாவி … கிராதகா …ஓடிடு இங்க இருந்து … என்றவன் . திடீரென நினைவு வந்தவனாக ” மச்சி … உங்க ஃபேமிலி ஃப்ரண்ட் ராஜீவ்னு ஒருத்தர் வந்தாருல்ல … அவர் கிளம்பிட்டாரா ? ” என கேட்டான் விஷ்ணு .

” இல்லைடா… இன்னும் போகலை இன்னும் ரெண்டு நாள் இருந்துட்டு தான் போவான்னு அப்பா சொன்னாரு . எதுக்கு கேக்கறடா ? ” என வினாவினான் ராம் .

” ஒன்னும் இல்ல சும்மா தான் கேட்டேன் ” என்ற விஷ்ணுவிடம் ” சரி சரி சீக்கிரம் கிளம்பு … டைம் ஆகிடுச்சுடா ! ” என்று அவனை கிளப்பினான் ராம் . ” அடடா இவன் கூட ஒரு தொல்லையாப்போச்சே ! இவன் இப்போ வெளியே கூப்பிட்டு போனான்னா , நாம எப்போ அந்த லிங்கத்தை தேட போகறது ? ” என நினைத்தான் .

” டேய் எங்கடா போறோம் ? இன்னொரு நாள் போலாமே … கண்டிப்பா இன்னிக்கு போயே ஆகனுமா ? “

” பிச்சிடுவேன் இன்னைக்கு கண்டிப்பா போயே ஆகனும் . நீ வந்து பாரு … உனக்கே அந்த இடம் ரொம்ப பிடிச்சிடும் . அதுமட்டும் இல்லைடா . வேதாவும் பாவம் இங்க வந்ததில இருந்து வெளியவே போகலை வீட்டுக்குள்ளையே சுத்திட்டிருக்கா . அவளுக்காகவாவது நாம போயே ஆகனும் . ப்ளீஸ் மச்சி ” என கெஞ்சிய ராமின் கோரிக்கையை நிராகரிக்க முடியாத விஷ்ணுவும் ” சரி வரேன்டா … நீ போய் கிளம்பு … நானும் போய் ரெடியாகுறேன் ” எனக் கூறி கட்டிலில் இருந்து எழும்பினான் .

” ஹ்ம்ம் ஓகே … நான் காஃபி கொடுத்து அனுப்புறேன் . குடிச்சிட்டு ரெடியாகிடு … சரியா ? ” எனக் கூறியவன் அங்கிருந்து கிளம்பினான் .

ராம் அங்கிருந்து கிளம்பிய ஐந்து நிமிடங்களில் வேலைக்காரன் மூர்த்தி ஒரு ட்ரேயில் காஃபி கப்புடன் விஷ்ணுவின் அறையினுள் நுழைந்தார் . அவரைப்பார்த்தவுடன் அவரிடம் இருந்து காஃபியை வாங்கியவனுக்கு அன்றொருநாள் அவர் குன்றைப்பற்றி சொன்னது மனத்தினில் நிழலாடியது .

” தம்பி ! ரொம்ப வருஷத்துக்கு முன்னால ஒரு ராஜாவுக்கும் அவரோட தளபதிக்கும் நடுவுல ஏதோ சண்டை ஆகிடுச்சு … அதனால ஆத்திரப்பட்டு அந்த தளபதி ராஜாவைக் கொலைப்பண்ணிட்டாராம் . இதுனால கோபப்பட்ட அந்த ராஜாவோட தம்பி அந்த தளபதிய பழிவாங்க போனாராம் . இப்போ அந்த குன்று இருக்கு இல்லையா அந்த இடத்திலதான் அவங்களுக்கு நடுவுல சண்டை நடந்துச்சாம் … அந்த சண்டைல அந்த ராஜாவோட தம்பியும் அந்த தளபதியும் ஒருத்தர ஒருத்தர் கத்தில குத்திகிட்டு இறந்துட்டாங்கலாம் .

அதில இருந்து அவங்களோட ஆவி அந்த இடத்துல சுத்திறதா எல்லாரும் சொல்லுவாங்க… அந்த ஆவி அந்த பக்கம் யார் வந்தாலும் ஒன்னு அவங்க உயிர எடுத்திடுமாம் …. இல்லைன்னா அவங்கள சித்தப்பிரம்மை பிடிக்க வச்சிடுமாம் …அதனால சில மந்திரவாதிகளைக் கூப்பிட்டு வந்து அந்த ஆவிங்களைப் பிடிக்க மந்திரிச்சு பல பூஜைகள் பண்ணிணாங்க . ஆனாலும் இப்போ வரைக்கும் அந்த குன்றுக்கு பக்கத்துல போகக்கூட யாருக்கும் தைரியம் வரலை .

அவர் கூறியதை நினைத்துப்பார்த்து ஒரு பெருமூச்செறிந்தவன் பொய்க்குத்தான் உண்மையை விட எவ்வளவு கவர்ச்சி இருக்கு . இத்தனை இத்தனை ஜென்மமா அந்த கதையும் வாய்மொழியா நம்பப்பட்டு வருதே என வருத்தம் கொண்டான் . அதையே நினைத்து பிரயோஜனமில்லை இனி ஆக வேண்டிய வேலையைப் பார்ப்பதே உத்தமம் என்று எண்ணியவன்
பிறகு வெளியே செல்வதற்க்கு தயாரானான் .

அதற்க்குள் வேதாவும் , ராமும் கீழே ஹாலிற்க்கு வந்து விஷ்ணுவிற்க்காக காத்திருக்கத் தொடங்கினர் . கருப்பு நிற ஷார்ட் காட்டன் குர்தி , வெளிர் நீல ஜீன்ஸ் , காதில் குட்டி ஸ்டட் என அளவான ஒப்பனையில் அழகாக கண்களை உருட்டி ராமிடம் பேசிக்கொண்டிருந்தவள் வெள்ளை நிற டிஷர்ட் , நீல நிற ஜீன்ஸ் ,அதற்க்கு தோதான ஷு , கைவிரல்களில் சுழலும் கூலிங்க்ளாஸ் , கோதுமை நிற நெற்றியில் வந்து விழும் கற்றை முடி , அதை அலட்சியமாக கோதி விடும் நீண்ட கைகள் , மதுவும் புகைபழக்கமும் அறியாத அதரங்களில் தவழும் புன்னகை , என ஸ்டைலாக மாடியிலிருந்து இறங்கிவந்த விஷ்ணுவினைப் பார்த்து ஒரு கனம் ரசித்தவள் பின் தன்னைச்சுதாரித்துக்கொண்டு ராமிடம் ” ராம் …, அங்க பாரு … உன் ஃப்ரண்ட் வந்துட்டாரு … இப்பவாவது கிளம்பலாமா ? ” என கேட்டாள் .

” ஓ …. கிளம்பலாமே … மஹாராஜா வந்த பிறகு எதுக்கு டைம் வேஸ்ட் பண்ணணும் . வாங்க வாங்க போகலாம் ” என குதூகலமாக கூறியவனை தடை செய்தது விஷ்ணுவின் குரல் . ” ராம் … ஒரு நிமிஷம் இரு , ராஜீவ் இப்போ சும்மாதானே இருப்பாரு ?அவரையும் கூட்டிட்டு போகலாமா ? அவருக்கும் நம்ம வயசுதானே ? இங்க இருந்து அப்பா கூட என்ன பண்ண போறாரு ? ” என கேட்டவனிடம்

” டேய் அவன் கூட நான் சரியா கூட இதுவரை பேசினதில்லைடா … பழக்கமே இல்லடா … மோர்ஓவர் இது நம்ம வரையும் இந்த நாளை ஹாப்பியா ஸ்பென்ட் பண்ண நான் ப்ளான் பண்ணிருக்கேன் . இவன் எதுக்குடா அங்க ? ” என்று முகத்தைச் சுளித்து கேட்டான் ராம் .

உடனே வேதா ” அப்படி எல்லாம் சொல்லக்கூடாது ராம் . அதிதி தேவோ பவ ! கேள்விபட்ருக்க இல்ல ? விருந்தாளிய கடவுளா பாக்கனும் தம்பி … விஷ்ணுவைப் பாரு எவ்வளவு பொருப்பா பேசறாரு … அவரைப் பார்த்து கத்துக்கோ … விஷ்ணு நீங்க போய் ராஜீவ கூப்பிடுங்க . இவனை நான் பாத்துகாகுறேன் ” என வீரவசனம் பேசினாள் .

அவள் கூறியதைக்கேட்டு சிரித்த விஷ்ணு ” ஹ்ம்ம் … வேதா இருக்க என்ன கவலை … நீ எல்லாத்தையும் சமாளிச்சிடுவ தாயே ! சரி இருங்க நான் போய் அவரைக் கூப்பிட்றேன் ” என்றவன் மாடிப்படிக்கு வலப்பக்கம் இருக்கும் அறையில் தங்கியிருக்கும் ராஜீவை நோக்கிச்சென்றான் .

அவன் செல்வதையே பார்த்துக்கொண்டிருந்த வேதாவின் தலையை லேசாகத்தட்டிய ராம் ” ஏய் ! என்ன நடக்குது இங்க ? பார்த்தா எதுவும் சரியா நடக்கிற மாதிரி தெரியலை . அவனைப் பார்த்தாலே நீ பல்ல பல்ல காட்ற .. ஏற்கனவே அரை லூசா சுத்தற நீ அவனைப்பார்த்தா முழு லூசா மாறிட்ற … அவன் என்னடானா ஒரு மார்கமாவே திரியுறான் ..நீயே . உண்மைய சொல்லிடு … நானா கண்டுபிடிச்சன்னா அப்புறம் நடக்கிறதுக்கு நான் பொருப்பு இல்லை ” என சிடுசிடுத்தான் .

அவன் கூறுவதைக்கேட்ட வேதா ” தலையில அடிக்காத எருமை !நானே சொல்லிட்றேன் . நீதானே சின்ன வயசில இருந்து என் ஃப்ரண்ட் கம் கசின் உன்கிட்ட சொல்லாம இருப்பேனா ! நானே இதைப்பத்தி உன்கிட்ட சொல்லனும்னு நினைச்சேன் . ஆக்ட்சுவலி ஐ… ஐ ஃபெல் இன் லவ் வித் விஷ்ணு … விஷ்ணுவும் தான் …. நேத்துதான் ஹி புரோபோஸ்டு மீ. ” என கூறியவளை ஆச்சரியத்துடன் பார்த்தான் ராம் .

” அப்போவே நினைச்சேன் நான் …. ஃப்ராடுங்களா ! உங்க கூட தானே சுத்திட்டு இருந்தேன் நான் . எனக்கு தெரியாம எப்படிடா ? எது எப்படியோ நீங்க நல்லா இருந்தா போதும்டா ” என ஒரு பொருப்புள்ள நண்பனாக கூறினான் அவன் . மேலும் தொடர்ந்த அவன் ” சரி எனக்கு இப்போ இந்த மேட்டர் தெரியாத மாதிரியே இருக்கட்டும் . எனக்கு தெரியும்னு நீயும் அவன்கிட்ட சொல்லாத…. என்னோட மத்த ப்ரண்ட்ஸ்சும் வந்துடட்டும் அவனை ஒரு வழி பண்ணிட்றோம் ” என கூறினான்

அதே நேரம் ராஜீவின் அறையினுள் நுழைந்த விஷ்ணு ” எக்ஸ்கியூஸ் மீ , உள்ள வரலாமா ? என வினவினான் . அந்த நேரம் தன் லாப்டாப்பில் மூழ்கியிருந்த ராஜீவ் ” ஹாய் … வாங்க வாங்க … மிஸ்டர் விஷ்ணு ” என்றான் .

அவனருகில் சென்றவன் ” ஹாய் ராஜீவ் . இன்னைக்கு நீங்க ஃப்ரீயா ? நாங்க இன்னைக்கு அவுட்டிங் போக ப்ளான் பண்ணிருக்கோம் . ஃப்ரீனா நீங்களும் எங்க கூட ஜாயன் பண்ணிக்கோங்களேன் . இஃப் யூ டோன்ட் மைன்ட் ” என கூறினான் .

” ஓ… சூப்பர் , கண்டிப்பா நான் வரேன் … ஒரு 10 மினிட்ஸ் வெயிட் பண்ணுங்க . சீக்கிரம் கிளம்பிட்றேன் ” என்றவனின் பதிலில் திருப்தியடைந்தவன் . தன் நண்பர்கள் இருந்த இடத்திற்க்கு வந்து சேர்ந்தான் .

” என்னடா சொன்னான் அவன் ? வரானா இல்லையா ? ” என அலட்சியமாக கேட்டான் ராம் . ” அவர் வரேன்னுதான் சொல்லிருக்காரு . கொஞ்சம் பொறு கிளம்பிடலாம் ” என்று விஷ்ணு கூறினான் .

கூறியது போலவே சில நிமிடங்களில் ராஜீவும் வந்துவிடவே அனைவரும் புறப்பட்டனர் . ராம் கார் ஓட்ட அவன் அருகில் ராஜீவ் அமர்ந்தான் . பின் இருக்கையில் விஷ்ணுவும் வேதாவும் அமர்ந்தனர் . விஷ்ணுவின் மனத்திலோ ராஜீவ் ராஜசிம்மனைப்போலேவே இருப்பதால் ஒரு தனிப் பாசம் வந்துவிட்டது . மேலும் அவன் ராஜசிம்மனை ஒத்த உருவமாக உள்ளதால் அவன் ராஜசிம்மனாக இருந்து அவனுக்கும் பழைய நினைவுகள் வந்திருக்குமோ என்ற ஐயமும் மனத்தினில் உழன்று கொண்டிருந்தது .

கார் விடையூரைத் தாண்டி போய்க்கொண்டிருந்தது . இருமருங்கிலும் அழகிய இயற்க்கைக் காட்சிகள் விரிய அதை ரசித்துக்கொண்டே வந்தனர் . சில நிமிட இடைவெளிக்குப் பின் ஓரிடத்தில் காரை நிறுத்தியவன் அனைவரையும் பார்த்து ” எல்லாரும் இறங்குங்க இங்க இருந்து நடந்துதான் போகனும் . கார் உள்ள வர முடியாது . இங்க வர எல்லாரும் நடநதுதான் போவாங்க ” எனக் கூறினான் .

அவனின் சொற்படியே இறங்கியவர்கள் ராம் முன்னால் செல்ல அவனைப் பின்தொடர்ந்தனர் . அவர்கள் நடந்து போகும் வழியிலெல்லாம் இயற்க்கை அன்னை தன் தயாள குணத்தை ஏகபோகமாக காட்டியிருந்தாள் .

அந்த இடத்தில் ஏற்கனவே பிக்னிக் வந்த ஒரு சில குடும்பங்கள் அங்கு சுற்றிப்பார்த்த வண்ணம் இருந்தனர் . அந்த இடம் தன்னகத்தே பல தனித்தனியான பிரிவுகளைக்கொண்டு விளங்கியது . சுற்றுலா பயணியரைக்கவர்வதற்க்கென்றே அமைக்கப்பட்டு இருந்ததால் மிகவும் நேர்த்தியாக பராமரிக்கப்பட்டு இருந்தது அவ்விடம் .

ஒரு அழகான நந்தவனத்தினுள் நுழைந்தவர்கள் அங்கிருக்கும் பல வகையான பூஞ்செடிகளையும் , அதன் நறுமணங்களையும் ரசித்தவாறே சுற்றிப்பார்த்துக்கொண்டு வந்திருந்தனர் .

அப்போது வேதாவின் கவனத்தை அங்கிருந்த ஒரு அழகிய மலர் கவர்ந்தது . வெள்ளை மற்றும் மஞ்சள் நிறத்தில் இதழ்களும் பிங்க் நிறத்தில் மகரந்தமும் கொண்ட அப்பெரிய மலரை முகரப்போனவளை தடுத்த விஷ்ணு “ஏய்…. வேதா … என்னமா பண்ற நீ ? இந்த பூ பத்தி இதுக்கு முன்னால கேள்விபட்டிருக்கியா ? இது பேர் என்னன்னு தெரியுமா ? எதுவும் தெரியாதுல்ல ! இப்படி எதுவுமே தெரியாத பூ , செடிங்களை எல்லாம் ஸ்மெல் பண்ணக்கூடாது . சிலது பாய்சனஸ் ஆக கூட இருக்கலாம் . புரியுதா ? ” என அறிவுரைக் கூறினான் .

” அடக்கடவுளே ! அட்வைஸ் குருவே ! ஒரு பூக்கு இவ்வளவு பெரிய கதையா ? இனி மல்லிப்பூவக் கூட ஸ்மெல் பண்ண மாட்டேன் குருஜி ! ” என நக்கலடித்தாள் அவள் .

இதைக்கேட்டதும் அவளை முறைத்தான் விஷ்ணு . ” சரி அமுல் பேபி ! கோச்சிக்காதிங்க … இனி நான் அப்படி பண்ண மாட்டேன் . போதுமா? கொஞ்சம் சிரிங்க பாஸ் . முறைக்காதீங்க ” என கேட்டவளின் தொனியில் சமாதானமடைந்தவன் ராமும் ராஜீவும் அருகில் இல்லாமல் சற்று தூரத்தில் இவர்களுக்கு முன்னால் செல்வதைப் பார்த்தவன் ” ஓகே ஓகே வா ராம் கூடவே போகலாம் . அவங்க நம்மலை விட முன்னாடி போய்ட்ருக்காங்க . அவங்க கூட போய் ஜாய்ன் ஆகனும் ” என்றான் .

அவன் கூறியவாறே வேகமாக இருவரும் நடந்து சென்றனர் . சிறிது தூரம் சென்றவுடன் அங்கே ஒரு பெரிய மண்டபம் இருப்பதைக் கண்ணுற்றவர்கள் அதனுள் செல்லத்துவங்கினர் .

அதைப்பார்த்தவர்களுக்கு ஏதோ சுவர்க்க புரிக்கு வந்துவிட்டதாகவே தோன்றியது . உத்திரத்தில் தளத்திற்க்கு பதிலாக நீலநிறத்தில் வெள்ளைத்திட்டுக்கள் போன்று அமைத்து வான்வெளி போன்ற தோற்றத்தை உருவாக்கியிருந்தனர் . மேலும் ஆங்காங்கே நட்சத்திரவடிவில் மின்விளக்குகளை பொருத்தி ஒரு மாய லோகத்தையே படைத்திருந்தனர் .

பக்கவாட்டுச்சுவர்களில் ராஜா ரவிவர்மனில் தொடங்கி நந்தலால் போஸின் ஓவியங்கள் வரை மிகவும் நேர்த்தியாக வரிசைப்படுத்தப்பட்டிருந்தன . அந்த சௌந்தரியத்தில் தன்னைத் தொலைத்திருந்த விஷ்ணு எதிரில் வந்தவரின் மீது மோதிவிட்டான் .

இவன் மோதிய வேகத்தில் எதிரே வந்தவன் நிலைத்தடுமாறி கீழே விழுந்தான் . அவசர அவசரமாக அவனுக்கு கைக்கொடுத்து தூக்கிவிட்டவன் அப்பொழுதுதான் அவனின் முகத்தைப் பார்த்தான் .

அங்கே நின்றிருந்தவன் வளவனின் கலர் ஜெராக்ஸ் காப்பி போல இருந்ததால் ஒரு நொடி அதிர்ச்சியில் உறைந்தான் . அடுத்த நொடியே தன் முகபாவனையை மாற்றியவன் ” சாரி சார் …. தெரியாம இடிச்சிட்டேன் . ” என்றான் விஷ்ணு .

” இட்ஸ் ஓகே ப்ரோ … நோ ப்ராப்ளம் … பார்த்து போங்க” என்று கூறிய அவன் அங்கிருந்து அகன்றான் . அவன் சென்ற திக்கையே இமைக்கவும் மறந்து பார்த்துக்கொண்டிருந்தான் விஷ்ணு

Facebook Comments Box
What’s your Reaction?
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here