கரம்கோர்க்க வா என் உயிரே-சஹானா Epi 16

0
988

காலனின் கண்களில் இருந்து வெளிவந்த வேந்தன் முதலில் சென்றது வனத்தின் மறுபுறம் இருந்த பால முருகர் கோவிலுக்கு தான்.. 
குழப்பங்கள் மேலோங்க அவரை பார்த்தவன் கண்களில் அவனையும் அறியாமல் நீர் சுரந்தது.. இன்னல்கள் பல வந்தும் துணையாய் நின்ற தன் குல தெய்வத்தை நினைத்தவன் ஆழ்ந்த பெருமூச்சு ஒன்றை வெளியேற்றியவன் பால முருகரிடம் கேள்வி கேட்க ஆரம்பித்தான்.. 
“அப்பனே என் ஐயனே உயிர் பொருள் மெய் அனைத்திலும் ஆழ கலந்தவனே இங்கே என்ன நடக்கிறது? உன் எல்லையில் தீய சக்திகள் இருப்பதா? அவர்களை தாங்கள் அழிக்காமல் விட்டு வைத்தது ஏன்? என்னை அவனோடு இணைய சொல்கிறான்.. இதற்கான அர்த்தம் என்ன? முருக பக்தனான நான் அவனை அழிக்க முற்படாமல் உரையாடி விட்டு வந்ததன் காரணம் என்னவோ? தாங்களே இதற்கான பதிலை அளியுங்கள் அப்பனே” என்றான் கண்களில் நீர் வழிய. 
அந்த நேரம் முருகரின் மீது கண்களை கூச செய்யும் அளவிற்கு ஒளி தோன்றியது ” வேந்தா உன் மனதை ஒரு நிலைப்படுத்திக் கொள் இல்லையேல் பெரும் அபத்தம் நிகழ வாய்ப்பிருக்கிறது.. அதில் உன் உயிர் பறிக்கபடலாம்” என்று கணீரென்று உரைத்ததும் அவ்வொளியும் குரலும் மறைந்தது. 
ஏற்கனவே குழப்பத்தில் இருந்த அவனோ மேலும் குழப்பத்திற்கு ஆளானான்.. குழம்பியபடியே புரவியை செலுத்தியவன் அரண்மனை தோட்டத்திற்கு வந்தது கூட தெரியாமல் யோசனையில் இருந்தவனின் சிந்தனையை கலைத்தது அகலிகையின் குரல். 
அழகிய மயில் ஓன்று தோட்டத்தில் அங்கும் இங்கும் ஓடி கொண்டு இருக்க அதனை பிடித்து விடும் நோக்கோடு அதனை விட அழகாக தன் மேல் வஸ்திரம் காற்றில் தோகையென பறக்க, சுட்டும் கருவிழிகள் இரண்டும் தன் குறியை மட்டும் நோக்கி கொண்டு இருக்க,  மயிலின் பெயரை இதழ்களை முழுதாக பிரிக்காமல் அழைக்கும் அவ்வழகு, அன்னமென நடந்து அதனை பிடிக்க செல்பவளை காண கண் கோடி போதுமா என்ற நிலையில் நின்றிருந்தான் வேந்தன். 
அதே நேரம் அவனை கண்ட காவலர்கள் ஓர்  நாடோடி உடையில் ஆடவன்(பயணத்தின் பொருட்டு வேந்தன் மாறுவேடம் பூண்டு இருந்தான்) அத்துமீறி தோட்டத்திற்குள் நுழைந்து விட்டதும் அல்லாமல் இளவரசியை விழுங்கும் பார்வை பார்த்து கொண்டு இருப்பவனை தாக்க முன்னேறி வந்தவர்கள் ஓர் நொடியும் தாமதிக்காது தங்கள் வாளை வீச தொடங்கினர்.. ஆனால் வேந்தனோ அவர்களை ஏறெடுத்தும் பார்க்காது அத்துணை வாள்களையும் காற்றில் பறக்க செய்தான்.. இதை கவனித்து கொண்டு வந்த நிமலேந்திரனோ நேராக அவனிடம் சென்றவன் தன் வாளை அவன் கழுத்தின் அருகில் வைத்து “யார் நீ? உன் உடைகளுக்கும் உன் வாள் வீச்சிற்கும் சம்மந்தமும் இல்லை.. சொல் நீ யார்? உன் வாள் வீச்சு சாமானியனை போன்று இல்லை பல போரை கண்ட வீரன் போலுள்ளது.. இப்பொழுது நீ யார் என்று சொல்ல போகிறாயா அல்லது உன் தலையை கொய்த்து எறியட்டுமா?” 
அவன் பேசுவதை சிரித்தபடி கவனித்து கொண்டு இருந்தவன்” நான் யார் என்று கண்டுபிடிக்க முயற்சி செய்து பாருங்கள்” என்றான் இளநகையோடு. 
வந்திருந்தவனை உற்று நோக்கியவன்” தங்களின் வாள் வீச்சு, பேசும் தோரணை, கண்களில் உள்ள தீக்ஷண்யம், உடல்வாகு இவை அனைத்தையும் வைத்து பார்க்கும் பொழுது தாங்கள் ஒரு ராஜ குமாரர் என்று நினைக்கிறேன்”என்றான் நிமலேந்திரன். 
அவன் பேசி முடிக்கவும் பணிப்பெண்களுடன் அங்கு வந்த அகலிகை ராஜ குமாரர் என்ற சொல்லை கேட்டு வந்திருந்தவனை உற்று நோக்கியவளுக்கும் நிமலேந்திரனின் கூற்று சரியெனவே தோன்றியது. 
” கூறுங்கள் நான் சொல்வது சரி தானே?”
” ஆம்” என்று தான் உடுத்தி இருந்த நாடோடிகளின் உடையை கலைத்தான் வேந்தன். 
அகலிகை, “தாங்கள் யார்? எந்த நாட்டை சேர்ந்தவர்? எதற்காக இங்கு வந்தீர்கள்?” என்று கேள்வி மேல் கேள்வி கேட்டு கொண்டு இருந்தாள். 
அவள் பேசும் அழகினை இரசித்த வேந்தன்” சொல்கிறேன் முதலில் கேள்வி கேட்டவர் இவர்”என்று  நிமலேந்திரன் புறம் திரும்பியவன் “நான்..” எனச் சொல்லும் முன் அவனோடு வந்த காவலர்கள் மயக்கம் தெளிந்து தலைதெறிக்க ஓடி வந்தவர்கள் பரந்து விரிந்து இருந்த அரண்மனை தோட்டத்திற்கு தான்.. தங்களின் இளவரசர் மற்றவர்களின் கேள்விகளுக்கு பதில் சொல்வதை விரும்பாதவர்கள் அவன் பேசும் முன் “இவர் சத்தியநாட்டின் முடி இளவரசர் ரிஷி வேந்தன்” என்ற படைதளபதியின் குரல் அங்கிருந்தவர்களை ஸ்தம்பிக்க செய்தது என்றால் அகலிகைக்கு மட்டும் கோபம் வந்தது. 
அனைவரின் முக மாற்றத்தையும் கவனித்தவன் அகலிகையின் கண்களில் இருந்த கோபத்தையும் கவனிக்க தவறவில்லை. 
நிமலேந்திரன்,” இளவரசே நான் நிமலேந்திரன் இந்நாட்டின் சேனாதிபதி.. தங்களை வரவேற்பதில் மிக்க மகிழ்ச்சியடைகிறேன் வாருங்கள்..”என்றான் முகம்மலர. 
காவலாளியிடம் விசயத்தை அரசரிடம் தெரிவிக்க சொன்னவன் வேந்தனோடு கிளம்பும் வேலையில் “இந்திரா சற்று பொறு நானும் உன்னோடு வருகிறேன்” எனக் கூறி அவனுடைய புரவியில் அமர்ந்து கொண்டாள்.. அதை கண்ட வேந்தனின் முகம் வாடவும் அதை எதிர்பார்த்தவள் போல் மனதிற்குள் சிரித்து கொண்டாள். 
ஆனால் நிமலேந்திரனின் கண்கள் வேந்தனின் கண்களில் தெரிந்த குரூரத்தை கவனித்து கொண்டது.. ஆழ்ந்த பெருமூச்சு ஒன்றை வெளியேற்றியவன் “கிளம்பலாமா இளவரசே?” எனக் கேட்டதும் தன்னிலை அடைந்தவன் “கிளம்பலாம்” என்பதோடு நிறுத்தி கொண்டான். 
தோட்டத்திற்கும் அரண்மனைக்கும் ஒரு மைல் தூரம்.. இருபுறமும் மாட வீதிகள்.. அங்காங்கே மக்கள் நடமாட்டம் இருந்தது.. மூவரும் அவரவர் சிந்தனையில் மூழ்கி இருந்தனர் நிமலேந்திரனின் மனதில் ‘ இவள் எதற்கு இவ்வாறு நடந்து கொள்கிறாள்? நாட்டிற்கு வந்த விருந்தினரை அவமானம் செய்ததாக அரசியார் என்னிடம் தான் கோபித்து கொள்வார்.. செய்வதை செய்து விட்டு இயற்கையை ரசிப்பது போல் நடித்து கொண்டு இருக்கிறாளாம்’ என்று கடிந்து கொண்டான். 
‘ இந்த இளவரசருக்கு நான் உதாசீனம் செய்தது கோபத்தை வரவழைக்கும் என்று பார்த்தால் இவர் பேசாமல் வருகிறாரே.. எதற்காக இங்கு வந்து இருப்பார்? முதலில் அதை கண்டறிய வேண்டும்’ என்று திரும்பியவளின் கண்களில் பட்டது தன் புரவியை தடவி கொடுத்தபடி உடன் நடந்து வந்து கொண்டு இருந்த நிமலேந்திரன் தான். அவனையே கண் கொட்டாமல் பார்த்து கொண்டு வருவதை கவனித்த வேந்தன்’ இவர்களை கண்டால் இளவரசிக்கும் ஒரு சேனாதிபதிக்கும் உள்ள உறவு போல் தெரியவில்லையே! இவள் அவரை பார்ப்பதும் அவரோ இவளை உதாசீனம் செய்வது போல் உள்ளது? இதனால் திருமணத்திற்கு ஒத்துக் கொள்ள மறுத்து இருப்பாளோ?’ என்று வேந்தனும் தன் சிந்தனையில் முழ்கி இருக்க ஒருவாறு அரண்மனையை அடைந்திருந்தனர்.. கஜங்களின் பிளிரலில் தன்னிலை அடைந்தனர் மூவரும்.. அதன் பின் வீரசிம்ம பூபதியும், பூவிழியாரும் அரண்மனை வாசல் வரை வந்து இன்முகத்துடன் வரவேற்றனர்.. அதனை ஏற்றவன் அவனுக்காக ஒதுக்கப்பட்ட அறையில் தன் கடன்களை முடித்து விட்டு அரசரை காண அரசவைக்கு விரைந்தவனை அங்கிருந்த அனைவரும் கண் சிமிட்டாமல் பார்த்து கொண்டிருந்தனர். 
வெண் பட்டாடை அணிந்து, அரச நகைகள் கழுத்தில் மின்ன, அவன் வாளின் பிரகாசம் கண்களை கூச செய்ய, அழுத்தமான நடை அவனின் முடிவு எடுக்கும் திறனை எடுத்து கூறியது.. 
நேராக அரசிடம் வந்தவன் அவரையும், அரசியையும் வணங்கி விட்டு அவர்கள் கைக்காட்டிய இருக்கையில் அமர்ந்தான்.. அவன் வந்த பிறகு இளவரசி அகலிகையும் அதன் பின்னர் நிமலேந்திரனும், தேவேந்திரனும் வந்து தன்னிருக்கையில் அமர்ந்தனர்..அகலிகையை கண்களுக்குள் நிரப்பி கொண்டிருந்தவனின் கண்களில் பட்டது இந்திரனுடனும், தேவாவுடனும் அவள் பேசுவது தான்..” என்ன ஒரு கவர்ந்திருழுக்கும் அழகு இப்பெண்ணுக்கு? செதுக்கி வைத்த சிற்பம் போல் அல்லவா இருக்கிறாள்? எத்தனை காலம் ஆனாலும் எத்தனை ஜென்மம் எடுத்தாலும் எனக்கானவள் இவளே.. இதை யார் தடுத்தாலும் செய்து முடிப்பேன்’ என்று தனக்குள் சூளுரைத்து கொண்டான். 
வீரசிம்மன்,” இளவரசே தங்களை வரவேற்பதில் நாங்கள் மிக்க மகிழ்ச்சி கொள்கிறோம்.. தங்களின் தாய் மாமனாகிய வல்லவ அரசர் இங்கு வந்திருந்த பொழுது எங்களையும் அறியாமல் சிறு பிழை ஏற்பட்டு விட்டது.. அதற்கு நாங்கள் மன்னிப்பை வேண்டுகிறோம்.. எங்கள் மகள் பேசியது முறையல்ல என்று நாங்கள் அறிவோம்.. அதற்காக கோபம் கொண்டு போர் தொடுத்தால் இரு நாட்டிற்கும் பெரும் சேதத்தை விளைவிக்கும், அதுவுமின்றி மக்களும் மிகவும் அவதிக்குள்ளாவர்கள்.. அதனால் இது அவசியமா என்று யோசித்து பாருங்கள்.. இல்லை நாங்கள் போர் தொடுக்க தான் போகிறோம் என்று கூறினால் அதற்கும் தயார் தான்” என்றார் திடமாக. 
வேந்தனோ சிரித்தபடி” அரசே நான் உங்களை விட வயதில் சிறியவன், என்னிடம் மன்னிப்பு வேண்டுவது தவறாகும் அதுவுமின்றி தாங்கள் எத்தவறும் செய்யாத பொழுது எதற்காக இந்த விவாதம்? போர் தொடுக்கும் எண்ணமில்லை.. வல்லவ அரசர் ஏதோ ஒர் கோபத்தில் அவ்வாறு சொல்லி விட்டார்.. நானும் நீங்கள் சொன்ன காரணத்தை முன் வைத்து அதனை தடுத்து விட்டேன்.. அது மட்டுமல்ல நான் இங்கே வந்ததற்கான காரணம் தங்களிடம் மன்னிப்பு வேண்டி நம் நட்பு எப்பொழுதும் போல் தொடரும் என்று அரசர் தங்களிடம் விளக்கி விட்டு வர சொன்னார்.. நீங்களும் தங்கள் நாட்டு மக்களும் எப்பொழுதும் போல் நட்பில் இருக்கலாம் அதற்கான பரிசு பொருட்கள் இதோ”என்று தன்னுடன் வந்தவர்களை செய்கை செய்ததும் தங்களுடன் கொண்டு வந்த பரிசு பொருட்களை அரசரின் பாதங்களுக்கு அருகே வைத்து விட்டு வணங்கி சென்று விட்டனர். 
பூவிழியார், ” இளவரசே நான் தங்களிடம் சில வினாக்களை கேட்க விழைகிறேன்”
” கேளுங்கள் அரசரியாரே”
” தங்களுக்கு எங்கள் மீதும் எங்கள் நாட்டு மக்கள் மீதும் எந்த கோபமும் இல்லை என்று கூறிவிட்டீர்கள்.. ஆனால் என் மகளின் மீது..” என்று அதற்கு மேல் பேச முடியாமல் அமர்ந்திருந்தார். 
“தாங்கள் கேட்க வருவதை என்னால் புரிந்து கொள்ள முடிகிறது.. எனக்கு தங்களின் புதல்வியை மிகவும் பிடித்து இருக்கிறது.. எத்துணை ஜென்மம் எடுத்தாலும் அவரே என் வாழ்க்கை துணை.. இங்கு வரும் வரை அந்த எண்ணத்தில் வரவில்லை.. ஆனால் இன்று விடியலில் தங்களின் புதல்வியை பார்த்ததும் எனக்குள் ஆயிரம் மின்னல்கள் இதை அவர்களிடம் உரைப்பது சரி என்று எனக்கு தோன்றவில்லை ஆதலால் தான் ஈன்ற தங்களிடம் கூறி கொண்டு இருக்கிறேன்.. இப்பொழுது முடிவு உங்கள் கையில்” என்று தான் பேச வந்தததை பேசி முடித்தாகி விட்டது என்ற தோரணையில் தன் இருக்கையில் அமைதியாக அமர்ந்து கொண்டான். 
அவன் அமர்ந்ததும் பூவிழியார் பேச ஆரம்பித்த சமயம்” ஒரு நிமிடம் நான் பேச வேண்டும்.. அரசே எனக்கு அனுமதி தாருங்கள்” என்று வேண்டி நின்றாள். 
அவளின் கண்களில் தெரிந்த கோபத்தை கண்டவர்கள் அனுமதி மறுக்க வேந்தனோ “அரசே இளவரசி ஏதோ பேச விரைகிறார் தாங்கள் அனுமதி மறுப்பது ஏன்? எனக்காக அனுமதி தாருங்கள்” என்று அவன் சொன்னதும் கிலியுடனே அவளுக்கு அனுமதி வழங்கப்பட்டது. 
என்ன சொல்ல போகிறாளோ என்று கலக்கத்துடன் பூவிழியார் இருக்க, அரசரோ விருந்தினரை அவமானம் செய்து விட்டால் என்ன செய்வது என்ற யோசனையில் இருக்க, நிமலேந்திரனும், தேவேந்திரனும் கூட அவளின் பேச்சிற்கு செவி மடுத்து அமர்ந்திருந்தனர். 
“இளவரசே நான் தங்களிடம் சில விசயங்களை தெளிவுபடுத்த விரும்புகிறேன்.. அதை இங்கே சொல்ல சொன்னாலும் சரி அல்லது சபை கலைந்தததும் சொல்ல சொன்னாலும் அதற்கும் தயார்” என்றாள் சற்றும் அசராமல் திடமான பார்வையுடன். 
அவளின் தீர்க்கமான பார்வையை கண்டவன் ஒரு நொடி அதிசயித்து போனான்.. பின்னர் தன்னை சமாளித்தவாறு நிமிர்ந்தவன்” அரசே இதில் தங்களின் கருத்து என்ன? “
” சபை கலையட்டும், இந்திரா, தேவா இருவரும் மட்டும் இங்கே இருங்கள்” என்றதும் மற்ற அனைவரும் தம் தம் பணிகளுக்கு கிளம்பி சென்றனர். 
வசந்த மண்டபம்.. ஒவ்வொருவரும் ஒரு வித சிந்தனையில் ஆட்கொண்டிருக்க பூவிழியார் மட்டும் அகலிகையை எரித்து விடும் பாணியில் பார்த்து கொண்டிருந்தார். 
” தந்தையே, இளவரசே நான் சொல்ல வருவது என்னவெனில் எனக்கு இத்திருமணத்தில் துளியும் சம்மதம் இல்லை.. அதற்கான காரணம் நான் முதலே சொல்லி விட்டேன்..அதனால் என்னை மன்னிக்க வேண்டும்” 
“அகலிகை என்ன இது பெண்கள் இவ்வாறு பேசுவது முறையன்று.. பெற்றவர்களாகிய நாங்கள் உனக்கு நன்மை மட்டுமே செய்வோம்.. அமைதியாக உள்ளே செல்.. இன்னும் சில திங்களில் உனக்கும் வேந்தனுக்கும் திருமணம்.. இது இந்த அரசரின் உத்தரவு”
” தந்தையே பெண்கள் பேசா மடந்தையாக மட்டுமே இருக்க வேண்டுமா? பின்னர் எனக்கு ஏன் போருக்கான பயிற்சி அளித்தீர்கள்.. ஆண் மகனுக்கு இணையாக வீரத்தை புகட்டி வளர்த்தீர்கள்? பெண் பிள்ளையாக எப்பொழுதும் தங்கள் சொல்படி கேட்டு நடக்க வேண்டும் என்று தாங்கள் என்னை வளர்க்கவில்லையே! எதிலும் சுய சிந்தனை வேண்டும், நான் நன்கு ஆராய்ந்து முடிவு எடுக்க வேண்டும் என்று சொல்லி சொல்லி வளர்த்துவிட்டு இன்று இவ்வாறு பேசினால் என்ன நியாயம்? அதுவுமின்றி திருமண விசியத்தில் என் சம்மதம் முக்கியம் என்று உரைத்து விட்டு மாற்றி பேசுவது தான் அரசருக்கு உகந்ததா?” என்று தீயென கொட்டி தீர்த்தாள். 
” முடிவாக என்ன சொல்கிறாய் அகலிகை?”
” இத்திருமணம் வேண்டாம் என்கிறேன்” என்றாள். 
” ஏன்? என்னிடத்தில் என்ன குறையை கண்டாய் அகலிகை? பார் போற்றும் புகழுடையவன் நான்.. என்னை மணக்க பெண்டிர்கள் போட்டி போட்டு கொண்டுள்ளனர்..இதுவரை எந்த பெண்களிடமும் சாயாத என் மனம் இன்று உன்னை கண்ட நொடி முதல் உன் பின்னே சிறு குழந்தையாய் சுற்றி வருகிறது.. என் நேசம் முழுவதும் உனக்கே என்று பறைசாற்ற துடிக்கிறது.. இன்னும் எத்தனை காலம் ஆனாலும் என் மனம் மாறாது உன் சம்மதத்துக்காக காத்திருப்பேன்.. இப்பொழுது சொல் அகலிகை என்னை மணக்க உனக்கும் சம்மதம் தானே?” என்றான் எதையோ அறியும் ஆவலோடு. 
” மன்னிக்க வேண்டும் இளவரசே என் மனம் கவர்ந்தவர் தாங்கள் இல்லை.. அதை உங்களிடம் தரும் எண்ணமும் இல்லை..”
பூவிழியார்,” அப்படியெனில் உன் மனம் கவர்ந்தவன் யார்?”
” அப்படி யாரும் இல்லை அன்னையே.. எனக்கானவன் வருவான் என்னை அவனோடு அழைத்து செல்வான்.. அப்பொழுது தெரியும்”
அதில் கோபம் கொண்ட வேந்தன் ” அகலிகை என்னை நிராகரித்து பெரும் தவறு செய்து விட்டாய்.. நன்றாக கேட்டு கொள்ளுங்கள் இனி நம் ராஜ்ஜியத்திற்கிடையேயான நட்பு இல்லை பகை மட்டுமே.. போருக்கான அழைப்புடன் உங்கள் கோட்டை வாசலை முற்றுகையிடுவான் இந்த ரிஷி வேந்தன்.. வருகிறேன்.. “என்று கோபத்துடன் திரும்பியவன் நிமலேந்திரனை தீப்பார்வை பார்த்து விட்டு காற்றை கிழித்து கொண்டு வெளியேறினான்.. அவன் எண்ணமெல்லாம் அகலிகை சொன்ன விசயமே ஆட்கொண்டு இருந்தது.. அந்த நேரம் சரியாக காற்றில் மிதந்து வந்தான் காலன். 
” என்ன வேந்தனின் முகம் மிகவும் வாட்டமாக உள்ளது..எதையோ நினைத்து கோப கொள்வது போல் உள்ளதே.. அரண்மனையில் தாங்கள் நினைத்தது நடக்கவில்லை போலும்? அதற்காக தான் சொன்னேன் அந்த முருகனை நம்பாதே என்னுடன் வந்துவிடு என் தாயை சரணடைந்துவிடு என்று.. என் பேச்சை மதிக்காமல் ஆணவத்துடன் சென்றாயே இப்பொழுது பார் என்ன நேர்ந்தது என்று.. நீ என்னோடு வா இளவரசியை நான் உன்னோடு சேர்த்து வைக்கிறேன்.. எத்துணை ஜென்மம் எடுத்தாலும் அவள் உன்னோடு தான் இருப்பாள்.. அந்த நிமலேந்திரனோடு அல்ல” என்று வேந்தனின் மனதை மாற்றும் முயற்சியில் ஈடுபட்டான் காலன். 
” மூடனே செல் இங்கிருந்து” என்றான் கோபமாய். 
” என் மேல் கோபம் கொள்வதில் எந்த பிரயோஜனமும் இல்லை வேந்தே.. தங்களை அகலிகை நிராகரித்துக்கு காரணம் அந்த நிமலேந்திரன் தான்.. அவனை இங்கே அழைத்து வா அவனை அழித்து அகலிகையை உன்னோடு சேர்த்து வைப்பாள் என் தாய் கண்டோதரி” 
அவன் மனதில் குரூர எண்ணம் தோன்ற ஆரம்பித்தது.. இதை கண்ட பால முருகர் சிரித்து கொண்டார். 
தொடரும். 

Facebook Comments Box
What’s your Reaction?
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here