சமீபத்தில் காற்றின் மொழி திரைப்படம் பார்த்தேன்.என்னை கொஞ்சம் அல்ல நிறையவே அசைத்துப் பார்த்து விட்டது அந்தப் படம்.
அப்பா…என்ன மாதிரியான நடிப்பு ஜோதிகா அவர்களுடையது…ஒவ்வொரு சீனிலும் அசத்தி இருக்கிறார் என்று தான் சொல்ல வேண்டும்.
வேலைக்குப் போக விருப்பப் படும் ஒரு குடும்பத் தலைவியின் நிலையை இதை விட அழகாக சொல்லி விட முடியுமா?
இத்தனைக்கும் அவர் ஒன்றும் பகல் முழுக்க வேலைக்கு போகவில்லை.இரவில் ஒரு சில மணி நேரங்கள் மட்டுமே அவருக்கே வேலை.அதுவும் ரேடியோ ஜாக்கியாக…
எத்தனை விதமான மனிதர்கள்…அவர்களின் பிரச்சினைகள்…அதற்கு அவர் பதில் அளிக்கும் விதம்…அதிலும் அவர் கண்ணு..அப்படி பேசுது…
என்னுடைய மனதில் என்னையும் அவரையும் ஒரே இடத்தில் வைத்து பொருத்திப் பார்க்க முயற்சித்தேன்.
நான் பகலில் குடும்ப வேலைகளுக்கு இடையில் வந்து அவ்வபொழுது கமெண்ட்ஸ் போட்டு…இரவில் விழித்து இருந்து அப்டேட் போட்டு…சில சமயங்களில் வீட்டில் அதற்காக வசவுகளையும் வாங்கி இருக்கிறேன்.
என் உடல் நலம் குறையத் தொடங்கியதும் அதைப் பாதியாக குறைக்க முயற்சி செய்து…அப்பொழுதும் கதையை சரிவர எழுத முடியாமல் போக மீண்டும் இரவு வேலையை ஆரம்பித்து விட்டேன்.
எழுதுவதற்கு என்று அமர்ந்து விட்டால் சில நாட்கள் நேரம் போவதே தெரியாது…விடியற்காலை நாலு மணி வரை என்னுடைய எழுத்து என்னை உள்ளிழுத்துக் கொள்ளும்.
இருந்தும் நான் சோர்ந்து போனதில்லை.சமீபத்தில் சில நாட்கள் நான் வருந்தி இருக்கிறேன்.
‘அப்படி உடலை வருத்தி எதற்கு எழுத வேண்டும்?’ அப்படி நான் நினைக்க நான் சந்தித்த சில பச்சோந்தி நட்புகளும்,போலியான உறவுகளுமே காரணம்.
அந்தப்படத்தின் இறுதியில் ஜோதிகா ஒரு வசனம் சொல்வார்.
“நம்பாதவங்களுக்கு சரி சொல்ல வேண்டி இருக்கு…நம்பினவங்களுக்கு சாரி சொல்ல வேண்டி இருக்குனு” அது போலத் தான் வேலைப் பார்க்கும் எல்லாப் பெண்களின் நிலையும்…
இரவு எல்லா வேலையையும் முடித்து விட்டு வேலைக்கு செல்லும் ஒரு பெண்ணின் சூழ்நிலையையும்,சாதிக்கத் துடிக்கும் ஒரு பெண்ணின் மனநிலையையும் இதை விட சிறப்பாக யாராலும் சொல்ல முடியாது என்றே எனக்குத் தோன்றுகிறது.
இனி தன்னால் மைக் முன்னால் அமர்ந்து ஹலோ சொல்லவே முடியாது என்ற வருத்தத்துடன் கிளம்பும் ஜோதிகாவை விட…கடைசியில் எல்லாவற்றையும் சமாளித்து குறும்பு கொப்பளிக்க அதே மைக்கின் முன் அமர்ந்து கொண்டு ஹலோ சொல்லும் ஜோ மனதில் ஆழமாக பதிந்து விட்டார் என்று தான் சொல்ல வேண்டும்.