மின்னல் விழயே குட்டித் திமிரே 20

0
815
1551018907221|679x452

மின்னல் விழியே – 20

சுமியிடம் திரு மற்றும் வினுவின் திருமணத்திற்கு அகில் ஒத்துக் கொண்ட பின்னர் வேலைகள் துரிதமாக நடந்தது. திரு அவனது நண்பன் ஹரியை அழைத்து அனைத்தையும் கூற, அவனும் முதலில் வினுவின் மேல் கோபம் கொண்டாலும் அவளின் நல்ல மனதை புரிந்து கொண்டான். ஹரியின் உதவியோடு ரிஜிஸ்டர் ஆபிஸில் திருமணத்திற்கான அனைத்து ஏற்பாடையும் கவனித்தான் திரு. அகிலோடு பேச வேண்டும் என்றால் ஹரியின் மூலமாக பேசினானே தவிர அவன் மறந்தும் அகிலோடு பேசவில்லை..

ஹரியும் முதலில் அகிலிடம் வேண்டா வெறுப்பாக திரு கூறும் அனைத்தையும் கூறிக்கொண்டிருந்தான்.. ஆனால் போக போக அகிலின் பொறுமையை கண்டு அவனுக்குமே அவனை பிடித்தது..

இவ்வளவு பொறுமையானவன் எப்படி சுமியின் வாழ்வை கெடுத்தான் என்பது மட்டுமே தற்போது ஹரியின் மனதை அரித்துக் கொண்டிருக்கும் கேள்வி. அடுத்த நான்கு நாட்களில் ரிஜிஸ்டர் ஆபிஸில் வைத்து திரு மற்றும் வினுவின் திருமணம் என முடிவாக, இடைப்பட்ட நாட்களில் வினுவோடு திரு பேச முயன்றும் அவள் பேசவில்லை..

அந்த ரிஜிஸ்டர் அலுவலகத்தின் முன் வினுவோடு நின்றிருந்தான் அகில். ஒற்றை தங்கையின் திருமணம் இப்படி யாருமில்லாமல் நடக்க போவதை நினைத்து அவனுக்கு உள்ளம் வெதும்பியது.. இந்த நிலைக்கு தானும் ஒரு காரணம் என தன்னையே வெறுத்தான்….

அண்ணனுக்காக தான் திருமணம் என்றாலும் தன் குடும்பத்தினர் கூட இல்லாமல் திருமணம் செய்ய போவதை நினைத்து வேதனையாக இருந்தது வினுவிற்கு… தன் முகம் சற்று கலங்கினாலும் நிச்சயம் அகில் வருத்தப்படுவான் என்பதற்காகவே முகம் மாறாமல் நின்றிருந்தாள்..

“சாரி அம்மு.. எல்லாம் என்னால தான்…” தன்னருகே துயரத்தை விழுங்கிக் கொண்டு நிற்கும் தங்கையிடம் அவன் கூற,

அகிலின் கவலை அவளையும் தாக்கியது.. “இல்லை அண்ணா” என்று மறுத்து கூற வாயெடுத்தவள், “மம்மி..!!!” என்று கேட்ட குரலில் திரும்பி பார்த்தாள்..

சுமியின் கைகளில் இருந்து நழுவி ஓடி வந்துக் கொண்டிருந்தாள் ஹனி.. பட்டு பாவாடை சட்டை அணிந்து, தலையில் பூ வைத்து சிட்டாக பறந்து வந்துக் கொண்டிருந்தாள் ஹனி.

“இந்த ஒரு காரணத்துக்காகவே எதையும் தாங்கிக்குவேன் ண்ணா…” ஹனியை பார்த்தவாறே அகிலிடம் முனுமுனுத்தவள், தன்னிடம் ஓடி வந்த ஹனியை வாரி அணைத்துக் கொண்டாள்..

“மம்மி மம்மி.. நீ எங்க போன.. ஹனி மிஸ்ட் யூ… இனி போகாத மம்மி..” என்றவள் வினுவின் கன்னத்தில் தன் இதழை பதிக்க, வினுவிற்கு அத்தனை ஆனந்தமாக இருந்தது..

ஹனியின் மேல் தனக்கு ஏன் இத்தனை பாசம் என்று அவளுக்கும் புரியவில்லை ஆனால் அவளுக்கு ஹனி எப்போதுமே திருவை விட ஒரு படி மேலே தான். அனைவரும் அவளை வினுவை போல் இருக்கிறாள் என்று கூறினாலும், வினுவிற்கு ஹனி திருவின் மறுபதிப்பாக தான் தெரிந்தாள்.. ஹனியின் கோபம், அன்பு எல்லாமே அவள் திருவிடமும் பார்த்திருக்கிறாள். சில நேரம் திருவை போலவே அவள் ரெட்டவாலு என்று அழைக்கும் போது அவளுக்கு ஹனி திருவாக தான் தெரிவாள்..

“எங்கயும் போக மாட்டேன் பேபி.. மம்மி சாரி..” ஹனியை தன்னோடு அணைத்துக் கொண்டவள் கண்ணீரை துடைத்துக் கொண்டாள்.

நான்கைந்து நாட்களாக தான் செய்ததையெல்லாம் வரிசையாக ஹனி பட்டியலிட ஆரம்பிக்க, வினுவும் எல்லாவற்றையும் மறந்து ஹனியோடு ஐக்கியமாகிவிட்டாள்..

இந்த ஐந்து நாட்களும் ஹனியை, சுமி அகிலின் கண்ணில் காண்பிக்காமல் கண்ணாம்பூச்சி விளையாட, அதில் தவித்தது என்னமோ வினுவும் ஹனியும் தான். திருவிடம் கூறியிருந்தால் அவன் நிச்சயம் ஹனியை அழைத்து வருவான் தான். ஆனால் நீண்ட நாட்கள் கழித்து ஒன்று சேர்ந்திருக்கும் சுமியையும் ஹனியையும் அவளுக்கு பிரிக்க மனமில்லை.. அதோடு அவள் திருவோடு அதிகம் பேசவும் இல்லை..

அவர்களின் சம்பாஷனையை கவனித்தவாறே வந்தனர் சுமியும் திருவும்.

ஹனியோடு ஒன்றியிருந்த வினுவை ஆராய்ந்தது திருவின் கண்கள்.. மெல்லிய ஜரிகையிட்ட மெரூன் நிற பட்டில் இருந்தாள். முதல் முறையாக முடியை படிய வாரி ஜடையிட்டு பூ வைத்திருந்தாள்.. கழுத்தில் எப்போதும் அவள் அணிந்திருக்கும் மெல்லிய செயினும் திரு போட்டுவிட்டிருந்த சங்கிலியும் மட்டுமே கிடந்தது. ஆக மொத்ததில் கல்யாணத்திற்காக என்று எதுவும் சிறப்பாக செய்யாமல் மிக எளிமையாக இருந்தாள்.. இருந்தும் அவளின் அழகு மிளிரவே செய்தது..

அகிலை காண பிடிக்காமல் சுமி அவர்களை விட்டு தள்ளியே நின்றுக் கொள்ள, திரு மட்டும் வினுவின் அருகில் வந்தான்.. அவன் வந்தது கூட தெரியாமல் தன் மகளோடு அவள் பேசிக் கொண்டிருக்க, அவர்களையே ஏக்கமாக பார்த்துக் கொண்டிருந்த அகில், திருவை நோக்கி திரும்பினான்.

“என் தங்கச்சியை நல்லா பார்த்துக்கோ அரசு…” வினுவின் வாழ்வை குறித்த பயத்தோடு அகில் உரைக்க, திரு அவனை முறைத்தான்..

“என்னை நம்பி வர்றவளை உன்னை மாதிரி நான் எப்பவும் விட்டுட்டு போக மாட்டேன்..” சுள்ளென்று திரு கூற, அது சரியாக அகிலை தாக்கியது.

“நீ சொல்றது சரி தான்.. நான் விட்டுட்டு போனது தப்பு தான்.. அதுக்காக என் தங்கச்சியை பழி வாங்கிடாத அரசு.. அவ ரொம்ப நல்லவ…” அவன் கூறியது அகிலை காயப்படுத்தினாலும் தன் தங்கைக்காக மீண்டும் பேசினான்..

“ஜஸ்ட் ஸ்டாப் இட் அகில்.. எனக்கு அவளை எப்படி பார்த்துக்கனும்னு தெரியும் நீ எனக்கு அட்வைஸ் பண்ண வேண்டாம்..” கடுமையாக கூறியவன் அவனை வெட்டவா குத்தவா என்பது போல் பார்க்க, ஹரி ரிஜிஸ்டர் அலுவலகத்தினுள் இருந்து வந்தான்..

“டேய் மச்சான்.. சரியா பதினொரு மணிக்கு உள்ளே கூப்பிடுவாங்க.. இன்னும் டைமிருக்கு..” என்றவன் திருவை நெருங்க, திரு அகிலை விடுத்து அவனை கவனித்தான்..

“ஓ.கே டா.. இங்கேயும் என் சொந்தக்காரங்க வர வேண்டியது இருக்கு…”

“யாருடா அது??? எனக்கு தெரியாம புது சொந்தக்காரங்க??,” ஹரி யோசனையாக பார்க்க, வினுவும் அந்த கேள்வியில் திரும்பி பார்த்தாள்..

அவளுக்குள் சூறாவளியே அடித்துக் கொண்டிருந்தது.. தன் குடும்பத்தினரை அழைக்க வேண்டாமென அவன் கூறாவிட்டாலும், அவனுக்காக தான் அவள் யாரையும் வரவிடவில்லை.. தான் மட்டும் குடும்பத்தோடு நிற்க, அதுவே திருவுக்கும் சுமிக்கும் அவர்களின் தந்தையை ஞாபகப்படுத்தி வைத்துவிடும் என்பதற்காகவே தன் குடும்பத்தை வர விடாமல் தடுத்துவிட்டாள். இப்போது அவன் மட்டும் அவனது குடும்பத்தினர் வருவதாக கூறவும் அவளுக்குள் சிறுபிள்ளைத்தனமான கோபம் தோன்றியது.

“வரும் போது பாரு டா.. என்னோட அத்தை குடும்பம்.. எங்களுக்குன்னு இருக்கிற ஒரே சொந்தம்.. அவங்களை தான் வர சொல்லியிருக்கேன்..” என்றவன் ஓரக்கண்ணால் வினுவை பார்க்க, அவள் முகம் கோபத்தில் சிவந்து இருந்தது.

“முறைச்சாலும் சிரிச்சாலும் என் புஜ்ஜி மா அழகா தான் இருக்கா…” திரு வினுவை ரசிக்க, அவள் முகத்தை திருப்பிக் கொண்டாள்.. அதில் அவனுக்கு பெருமூச்சு எழுந்தது..

“ஹ்ம்ம் இந்த ராட்சசியை எப்படி தான் வழிக்கு கொண்டு வரப் போறேனோ???” மனதில் வினுவை செல்லமாக வைதவன் அப்போது தான் அவள் கழுத்தில் தொங்கிக் கொண்டிருந்த ஹனியை பார்த்தான்..

தன் மம்மியை தன்னிடமிருந்து பிரித்துவிடுவார்களோ என்று அவள் கழுத்தை சுற்றி கையை போட்டுக் கொண்டு அவள் இடுப்பில் அமர்ந்திருந்தாள் ஹனி.

“ஹனி.. டேடிகிட்ட வாங்க… மம்மிக்கு கஷ்டமா இருக்கும்..” வெகு நேரமாக அவளை சுமந்து கொண்டு நிற்கும் வினுவை பார்த்துவிட்டு அவன் கூற, வினு அவனை முறைத்தாள்..

“ம்ம்ஹும்.. மை மம்மி” திருவிடம் வரமாட்டேன் என்பது போல் மறுப்பாக தலையசைத்தவள் வினுவின் தோளில் சாய்ந்துக் கொண்டாள்..

“என்னால என் பொண்ண தூக்கிக்க முடியும்.. நீ ஒன்னும் சொல்ல வேண்டாம்..” திருவிடம் எரிந்து விழுந்தவள் மீண்டும் ஹனியோடு பேச துவங்க, திருவிற்கு பொறாமையாக இருந்தது..

“என்கிட்ட மட்டும் பேச மாட்டா ஆனா அவ பொண்ணுகிட்ட மட்டும் பேசுவாளாம். வர வர இந்த ஹனியும் சரி புஜ்ஜியும் சரி … நம்மளை கண்டுக்கிறதே இல்லை… கல்யாணம் முடியட்டும் அப்புறம் பார்த்துக்கிறேன் ரெண்டுபேரையும்” தனக்குள் முனங்கியவன் தன் தங்கை அருகில் சென்று நின்றுக் கொண்டான்..

அங்கே நடப்பதை சலனமே இல்லாமல் பார்த்திருந்தாள் சுமி. அவளும் மிக எளிமையாக வந்திருந்தாள்.. ஹனியை மட்டும் பார்த்து பார்த்து அலங்கரித்திருந்தாள்.. தன் அண்ணனின் திருமணம் என்று மகிழ்ச்சி பொங்கினாலும் அகிலோடு தான் செல்ல வேண்டும் என்பதே அவளை கலங்க செய்தது…

தன் எண்ணங்களில் உளன்றவாறு அனைவரும் இருக்க, சரியாக அங்கு வந்து சேர்ந்தது ஒரு கார்.. அதிலிருந்து விக்கி இறங்க அவனை தொடர்ந்து சுதா தன் கையில் ரித்தினை தூக்கிக் கொண்டு, தன் மகன் நிகில் மற்றும் அனுவோடு இறங்கினார்…. அவர்களை எதிர்பாராமல் பார்த்த மகிழ்ச்சியில் வினுவிற்கு பேச்சே வரவில்லை.. அவள் அசையாமல் தன் குடும்பத்தை பார்க்க, திரு தான் அவர்களை நோக்கி சென்றான்..

“வாங்க வாங்க அத்தை… எல்லாரும் கரெக்ட் டைம்க்கு வந்துட்டிங்க..” அனைவரையும் வரவேற்றவன் ரித்தினை கையில் வாங்கிக் கொண்டான்..

ஏழு வருடங்கள் கழித்து சந்திக்கும் சிநேகிதனை அன்பாக பார்த்தாள் அனு. இந்த ஐந்து நாட்களில் அவனோடு ஒன்றிரண்டு முறை போனில் பேசியிருந்தாலும் இப்போது தான் நேரில் பார்க்கிறாள்..

“திரு.. எப்படி டா இருக்க???”

“நான் நல்லா இருக்கேன் அனு.. நீ எப்படி இருக்க??”, திருவும் அனுவிடம் கேட்க,

“ம்ம்.. எனக்கென்ன.. எனக்காகவே எங்க அத்தை ஒரு அடிமையை பெத்து கொடுத்திருக்கும் போது நான் எப்படி நல்லா இல்லாம இருப்பேன்” என்றவள் குறும்பாக கண் சிமிட்ட.. நிகில் அவள் காதை திருகினான்.

“சரியான வாலு மாப்பிள்ளை… நீங்க எல்லாம் எப்படி தான் காலேஜ் டேய்ஸ்ல இவளை சமாளிச்சிங்களோ???” நிகில் தன் மனைவியின் காலை வார, அனு அவனை முறைத்தாள்..

நான்கு நாட்கள் முன்னாடி வினுவின் திருமணத்தை கேள்விபட்டதும் சண்டையிட்டு குதித்ததென்ன?? இப்போது திருவின் குணமறிந்து அவனோடு ஒன்றாகிவிட்ட மாயமென்ன?? என்பது போல் அனு நிகிலை கேலியாக பார்க்க, நிகில் அவள் பார்வையின் அர்த்தம் புரிந்தவனாக அவளை பார்த்து கண் சிமிட்டினான்.

நான்கு நாட்கள் முன், தன் அன்னைக்கு மைல்ட் அட்டாக் என்று அகில் கூறியதும், அடித்து பிடித்து ஓடி வந்தவன் அங்கு கண்டது, சுதா குத்துக்கல்லாக ஹாஸ்பிட்டல் மெத்தையில் அமர்ந்திருக்க, அவர் அருகில் அனுவும் விக்கியும் வட்டமாக அமர்ந்துக் கொண்டு சீட்டாடிக் கொண்டிருந்தார்கள்.. அதை பார்த்ததும் நிகிலுக்கு தான் ஹார்ட் அட்டாக் வரும் போல் இருந்தது.

“அம்மா!!! என்ன நடக்குது இங்க??? உங்களுக்கு உடம்பு சரியில்லைன்னு அகி சொன்னான்.. இங்க பார்த்தா நீங்க…” என்றவன் தன் மனைவியும் இதில் உடந்தையா என்பது போல் சீற்றமாக பார்க்க..

“நிகி.. அது வந்து…” அனு மெத்தையை விட்டு எழும்பி அவன் அருகே வர, நிகில் அவளை அடிக்க கை ஓங்கிவிட்டான்… ஆனால் கடைசி நிமிடத்தில் கையை இறக்கியவன் சுவற்றில் தன் கையை குத்திக் கொள்ள, அனு பதறிப்போனாள்,,

எப்போதும் அமைதியாக இருப்பவனிடம் இப்படி ஒரு கோபத்தை அவள் எதிர்பார்க்கவில்லை.. அவள் கலங்கி போய் நிற்க, சுதா தான் அவளை அணைத்துக் கொண்டு நிகிலை கடிந்துக் கொண்டார்..

“நிகி.. என்ன நடந்துச்சுன்னு தெரியாம பேசாதே..” என்றவர் அனைத்தையும் கூற, நிகில் பிரம்மித்து போனான்.. தங்கையை நினைத்து பெருமையாக இருந்த அதே வேளையில், தான் கூட தன் தம்பியின் வாழ்வை சரி செய்ய எந்த முயற்சியும் எடுக்கவில்லையே என்று குற்றவுணர்ச்சியாக இருந்தது..

“வினு பண்ணினது சரி தான் ம்மா.. நான் தான் கோபப்பட்டுட்டேன்” என்றவன் கண்களால் அனுவிடம் மன்னிப்பை வேண்ட, அவள் அவனை கண்டுக் கொள்ளாமல் நின்றாள்..

வினு மீண்டும் அலைபேசியில் அழைக்க, சுதா அழைப்பை ஏற்று பேசினார். அவரிடம் சுமியின் கண்டிஷனை பற்றி கூறியவள் என்ன செய்ய என்க, சிறிது யோசித்தவர்

“சரி ஒத்துக்கோ வினு… கல்யாணம் நடக்கட்டும்… உங்க கல்யாணம் என் மருமகளுக்கு சந்தோஷமா இருக்கும்னா அவளுக்கு அந்த சந்தோஷத்தை தர வேண்டியது நம்மளோட கடமை.. அதோட உன் அண்ணா பார்த்து வச்சிருக்க வேலைக்கு சுமி வரேன் சொன்னதே பெரிய விஷயம்..” மனதில் தங்கள் வீட்டின் இளவரசியின் திருமணம் அவசர கோலத்தில் நடக்க போவதை நினைத்து வருந்தினாலும் அவர் அதை ஏற்றுக் கொண்டார்.. போனை அனைத்தவர் அனைவரிடமும் வினுவின் திடிர் திருமணத்தை பற்றி கூற, அனைவருமே திகைத்துப் போனார்கள்…

“அம்மா என்ன பேசுறிங்க??? அவளுக்கு தான் அறிவில்லன்னா நீங்களும் இப்படி பேசினா??? அப்பாவுக்கு தெரிஞ்சா என்னவாகும் தெரியுமா???”, வினுவின் காதலை ஏற்றுக் கொண்ட நிகிலால் தன் தங்கையின் திருமணம் இப்படி திருட்டுக் கல்யாணம் போல் நடப்பதில் விருப்பமில்லை…

“தெரிஞ்சா என்ன ஆகும் அப்படிங்கறத நினைச்சி தான் எனக்கு பயமா இருக்கு டா.. ஏற்கனவே ஒருத்தன் அவங்க அப்பா பேச்சை கேட்டுட்டு வாழ்க்கைய தொலைச்சிட்டு நிக்கிறான்.. அதே மாதிரி என் பொண்ணும் நிக்கனுமா?? உன் அப்பா அமெரிக்கா போய் மூணு மாசமாச்சு.. எப்போ வேணும்னாலும் வந்து இங்க குதிச்சிடுவார்.. அதுக்குள்ள என் பிள்ளைங்க வாழ்க்கை சரியாகணும்.. இல்லாட்டி ஸ்டேட்டஸ் அது இதுன்னு சொல்லி என் பொண்ண அந்த பொறிக்கி ராம்க்கு கட்டி கொடுத்துடுவார்.. அதெல்லாம் பார்த்துட்டு என்னால உயிரோடவே இருக்க முடியாது…” ஆதங்கமாக பேசியவர் அழ துவங்க, நிகில் செய்வதறியாமல் நின்றிருந்தான்..

“அம்மா ப்ளீஸ் அழாதிங்க.. நீங்க சொல்றது எல்லாம் சரி தான் ஆனா அப்பா இல்லாம பண்றது தப்பும்மா.. அப்பா ரொம்ப கோபப்படுவாங்க..” கண்டிப்பானவர் என்றாலும் அவரின் அன்பை சில நேரம் உணர்ந்திருக்கிறானே அதனால் அவன் தயங்க… சுதாவிற்குள்ளும் அவன் கூறுவது சரிதானோ என்று தோன்றியது..

அனைவரும் என்ன செய்வது என்ற தடுமாற, அடுத்ததாக அகில் அழைத்தான்.. மகளின் வாழ்க்கை சிக்கலானதற்கு அகில் தான் காரணம் என்று உறுத்த, அழைப்பை ஏற்றவர் மகனை திட்டி தீர்த்துவிட்டார்..

“பாருடா நீ பண்ணின வேலை, உன் தங்கச்சி வாழ்க்கையை எப்படி பாதிக்குதுன்னு.. உன் அப்பாவுக்கு நான் என்னடா பதில் சொல்லுவேன்.. கண்டிப்பா உங்க விஷயம் எல்லாம் தெரிஞ்சா உங்களை வீட்டை விட்டு துரத்துவாறே தவிர, உங்க காதலுக்கு சம்மதம் சொல்ல மாட்டார்..” கணவனை பற்றி நன்கு அறிந்தவராக சுதா கூற, அகிலின் மனம் விழித்துக் கொண்டது..

தன் வாழ்வை போல தன் தங்கையின் வாழ்வும் பாழாக கூடாது என்று நினைத்தவன் உடனடியாக திருமணத்தை நடத்துவதில் மும்முரமானான்..

“அம்மா.. சுமி சொல்ற மாதிரி கல்யாணத்தை வச்சிக்கலாம்மா.. அப்புறம் அப்பா வந்தாலும் எதுவும் செய்ய முடியாது.. நான் சொல்றதை கேளுங்க ம்மா.. அப்பாவுக்கு தெரிஞ்சா எல்லாரையும் அழிச்சிடுவாங்க…” என்றவனின் குரலில் பயமிருந்ததோ???

அவனின் குரல் மாற்றத்தை உணராத அவனின் தாய், முதலில் முடிவு செய்தது போலவே திருமணத்தை நடத்த ஒத்துக் கொண்டார்.. நிகில் தான் அரை மனதாக இருக்க, மறுநாளே திரு அழைத்து அனைவரிடமும் பேசி சம்மதம் வாங்கினான்.. அதன்பின் தான் நிகில் முழுமனதாக சம்மதித்தான்..

திருவிடம் பேசியவரை நல்லவிதமாக தோன்ற, அவனை பற்றியும் விசாரித்தான்.. அனைத்தும் திருப்தியாக இருந்த பின்னே குடும்பத்தோடு வந்தான்.. இல்லையென்றால் நிச்சயம் கல்யாணத்தை தடுத்து நிறுத்தி தங்கையை கையோடு அழைத்துக் சென்றிருப்பான்…

கடந்து சென்ற நாட்களை எண்ணிக் கொண்டிருந்தவன் இன்னும் சிலைபோல் பார்த்துக் கொண்டிருக்கும் வினுவை பார்க்க, அவள் கையில் அச்சு அசலாக வினுவை உரித்து வைத்திருந்த ஹனி அவர்களை பார்த்துக் கொண்டிருந்தாள்… ஹனிக்கு அவர்கள் யாரையும் தெரியவில்லை என்றாலும் அந்த கூட்டத்தில் விக்கி இருப்பதை பார்த்து கையாட்டினாள்..

“பக்கி மாமா…” அவள் அழைக்க, விக்கி வேகமாக வந்து ஹனியை தூக்கி ஒரு சுற்று சுற்றினான்.. அதில் ஹனி கிளுக்கி சிரிக்க, வினு தன் அன்னையை ஓடிச் சென்று அணைத்துக் கொண்டாள்.

“அம்மா…” என்றவள் அதற்கு மேல் பேச்சு வராமல் சுதாவை கட்டிக்கொண்டு கண்ணீர் சிந்த, திருவிற்கு தன்னவளின் கண்ணீரை துடைத்து அவளை ஆறுதல் படுத்த கையும் உள்ளமும் பரபரத்தது..

“வினு…எதுக்காக இப்படி கண்ணீர் விட்டுட்டு இருக்க??? பொண்ணுங்க அழுறது எனக்கு பிடிக்காது.. பாரு என் பேத்தியும் உன்னை பார்த்து அழுற மாதிரி முகத்தை வச்சிருக்கா…” சுதா கூறியதும் வேகமாக நிமிர்ந்தவள் ஹனியை திரும்பி பார்க்க, சுதா கூறியது போல் விக்கியின் கையில் இருந்துக் கொண்டு அவள் அழுகைக்கு தான் தயாராகிக் கொண்டிருந்தாள்..

தன் கண்ணீரை துடைத்தவள் ஹனியை பார்த்து சிரிக்க, ஹனியும் சிரித்தாள்… அதை கண்ட அனைவருக்குமே அவர்களின் பாசத்தை கண்டு வியப்பாக இருந்தது.. சுமிக்கு கூட அவர்களின் இணக்கம் பார்த்து அதிசயமாக இருந்தது.. பெற்ற தாயான அவளிடம் கூட ஹனி இவ்வளவு ஒட்டுவதில்லை…

“சாரிம்மா இனி அழ மாட்டேன்.. நீங்க எல்லாம் வர மாட்டிங்கன்னு நினைச்சேன் அதான் உங்களை பார்த்ததும் சந்தோஷத்துல அழுகை வந்திடுச்சு…”வினு கூற, நிகில் தன் தங்கையின் தலையை வருடினான்..

“அது எப்படி??? என் செல்ல தங்கச்சி கல்யாணத்துக்கு நாங்க எல்லாம் இல்லாம போய்டுவோம்???” என்றவன் அவளை தன் தோளோடு அணைத்துக் கொள்ள, அனு அவள் கைகளை பற்றிக் கொண்டாள்..

“அண்ணி!!!” அண்ணனை விடுத்து அனுவை கட்டிக் கொண்டவள் ரித்தினை தேட, அவன் ஒய்யாரமாய் திருவின் கைகளில் இருந்தான்…

திருவை பார்த்தவள் இதெல்லாம் தனக்காகவா என்பது போல் பார்க்க, அவன் ஆம் என்பது போல் கண்ணை மூடி திறந்தான்.

“ரித்தின் குட்டி..” அண்ணன் மகனை கையில் வாங்கிக் கொண்டவள் அவன் கன்னத்தில் முத்தம் ஒன்றை வைக்க, அவனும் தன் அத்தையை இறுக கட்டிக் கொண்டான்..

அவர்கள் அனைவரையும் ஒரு ஓரம் நின்று வேடிக்கை பார்த்துக் கொண்டிருந்தாள் சுமி. அந்த இடத்தில் தனக்கும் தன் அண்ணாவிற்கும் யாரும் இல்லை என்ற உண்மை முகத்தில் அறைய, தந்தையின் இழப்பு பெரிதாக தெரிந்தது.. அனைத்திற்கும் காரணமான அகிலை வெ!றுப்புடன் பார்த்தாள்..

“அம்மா உங்களுக்கு இப்போ எப்படி இருக்கு??? டாக்டர் எப்போ டிஸ்சார்ஜ் பண்ணினாங்க??” அகில் தன் அன்னையின் உடல்நிலையை கருத்தில் கொண்டு கேட்க, நிகிலுக்கு சிரிப்பு வந்தது.

அகிலின் கேள்வியை கிடப்பில் போட்டவர்,

“என் மருமக எங்க???” சுதா அகிலிடம் கேட்டவாறே விக்கியின் கையில் இருந்து ஹனியை தன் கையில் வாங்கிக் கொண்டார்.. ஹனியும் அடம் செய்யாமல் அவர் கையில் செல்ல, அகில் திரும்பி சுமியை பார்த்தான்.. அவன் பார்வையை தொடர்ந்து பார்த்தவர் அங்கு சுமி தனியாக நின்றிருப்பதை பார்த்து அவளிடம் நெருங்கினார்..

அவளின் கன்னத்தில் தன் கையை வைத்தவர், “மன்னிச்சிடு மா… உனக்கு அவன் பண்ணின துரோகத்துக்கு நீ அவனுக்கு என்ன தண்டனை வேணும்ணாலும் குடு.. நான் எதுவும் கேட்க மாட்டேன் ஆனா நீயும் என் பேத்தியும் எங்களுக்கு வேணும்… எனக்காக நம்ம வீட்டுக்கு என் மகளா வந்துடு கண்ணா…” என்றவருக்கு குரல் தழுதழுத்தது.

ஏற்கனவே அவள் கண்களில் குளம் கட்டியிருந்த கண்ணீர் இப்போது அவரது அன்பில் அணையை உடைத்து வெளியே வர அவரை அணைத்துக் கொண்டாள்..

“ம்மா…” சிறு வயதிலே தாய் பாசத்தை இழந்தவள் சுதாவின் உருவத்தில், தன் அன்னையே மீண்டும் வந்துவிட்டதாக பாவித்து அவரை அணைத்துக் கொண்டு விசும்ப, அவர் அவள் தலையை கோதிவிட்டார்..

தன் தங்கையை அவர்கள் எந்த குறையும் கூறாமல் ஏற்றுக் கொண்டதை காணும் போது திருவிற்கு இனி தங்கையின் வாழ்வை நினைத்து கவலை கொள்ள தேவையில்லை என்றே தோன்றியது.

“அத்தை லேட்டாச்சு” திரு ஞாபகப்படுத்த, சுதா வேகமாக சுமியை தன்னிடமிருந்து பிரித்தார்.. அவளையும் வினுவையும் ஒருமுறை பார்த்தவர், தன் தலையில் அடித்துக் கொண்டார்..

“என்னப் பிள்ளைங்க நீங்க.. கல்யாணத்துக்கு இப்படி தான் வருவீங்களா ரெண்டு பேரும்…” என்று அலுத்துக் கொண்டவர் அனுவிடம் திரும்பி, “அனு அந்த பெட்டியை எடுத்துட்டு வா” என்க, அனுவும் நிகிலும் காரிலிருந்த பெட்டியை எடுத்துக் கொண்டு வந்தனர்…

அருகில் இருந்த கோவில் வளாகத்துக்குள் வினுவையும் சுமியையும் அழைத்து சென்றவர்கள் அடுத்த பத்து நிமிடத்தில் தாங்கள் கொண்டு வந்திருந்த நகைகள் அணைத்தையும் அவர்களுக்கு போட்டுவிட்டு அழகு பார்த்தார்..

சுமி எவ்வளவு மறுத்தும் கேளாமல் சுதாவே அவளை அலங்காரம் செய்தார்.. திருமணம் வினுவிற்கு தானே என்று அவள் தடுத்த போதும் அவர் தன் மருமகளுக்காக, தான் செய்கிறேன் என்றுவிட அதற்கு மேல் அவளால் தடுக்க முடியவில்லை. அகிலை காயப்படுத்த வேண்டும் என்று நினைப்பவளால் சுதாவின் அன்பின் முன்பு ஒன்றும் செய்ய இயலாமல் போனது.

வினு ஹனியோடு பேசியவாறே அனுவிடம் தன்னை அலங்காரம் செய்யும் பொறுப்பை கொடுத்துவிட்டு அமர்ந்திருந்தாள்… தன் குடும்பத்தை பார்த்த பின் அவளுக்கு யானை பலம் வந்தது போல் இருந்தது.

இருவரையும் தயார் செய்தவர்கள் சாமி சந்நிதிக்கு அழைத்து வந்தார்.. அங்கே அகிலும் வேஷ்டி சட்டையில் மாறியிருக்க, அவன் அருகில் சுமியை நிற்க வைத்தார்கள்.. அவர்கள் என்ன செய்ய போகிறார்கள் என்பது புரிய, சுமி இறுகிய தேகத்தோடு நின்றிருந்தாள்..

அவளின் இறுக்கத்தை கண்டுக்கொண்ட அகில் தன் அன்னையிடம் திரும்பி, “அம்மா… எதுக்கு இதெல்லாம்… நீங்க வினுவை பாருங்க.. ஏற்கனவே” தங்களுக்கு திருமணம் ஆகிவிட்டது என்பதை மனதில் வைத்துக் கொண்டு அகில் கூற, சுமிக்கு கோபமாக வந்தது..

தனக்கு ஊரறிய தாலி கட்டுவதில் இவனுக்கு என்ன தான் பிரச்சனை என்று அவளின் கோபம் சுடர்விட்டு எரிய, அது தெரியாத அகில் அவளுக்கு சங்கடத்தை அளிக்க வேண்டாம் என்பதற்காக தன் அன்னையிடம் பேசிக் கொண்டிருந்தான்..

“போதும் நிறுத்து அகில்.. நாங்க சொல்றதை மட்டும் செய்…” என்றவர் கட்டளையிட அவன் வேறு வழியில்லாமல் அமைதியானான்.

ஐயர் மாலையை எடுத்து வந்து சுமியிடமும் அகிலிடமும் மாலையை மாற்றக் கூற, சுமி அசையாது அவனை பார்த்தாள்… கண்களாலே ப்ளீஸ் என்று கெஞ்சிக் கொண்டிருந்தான் அகில்.. அவன் அருகில் திருவும் சுமியை பார்த்தவாறே தான் நின்றிருந்தான்…

தன் அண்ணனை பார்த்தவள் அவனின் “போடு மா” என்ற உதட்டசைவில் இயந்திரமாக அகில் கழுத்தில் மாலையை அணிவித்தாள்… அவனும் மாலையை அவள் கழுத்தில் அணிவித்தான்.. அடுத்ததாக ஐயர் தாலியை எடுத்து வந்து கொடுக்க, அகிலில் கைகள் நடுங்கியது.. அதை வாங்கிக் கொண்டவன் சுமியை பார்க்க அவளோ குற்றம் சுமத்தும் விழிகளோடு அவனை பார்த்தாள்..

‘மன்னிச்சிடு சுமிம்மா.. என்னால நீ ரொம்பவே கஷ்டத்தை அனுபவிச்சிட்ட… ஒருதடவை கல்யாணம் பண்ணி அதை அர்த்தம் இல்லாததா மாத்திட்டேன்.. ஆனா இந்த தடவை என் உயிரே போனாலும் உன்னை பிரிய மாட்டேன்…’ அவளுக்கு மனதளவில் வாக்களித்தவன் அவள் கண்களை பார்த்தவாறே அவள் கழுத்தில் மூன்று முடிச்சையும் போட்டான்…

அகில் தன் கழுத்தில் தாலியை கட்டவும் சுமிக்குள்ளும் பழைய நியாபகங்கள் அலையலையாக எழுந்தது… தான் இன்று இருக்கும் நிலைக்கு அவனே காரணம் ஆனால் அவனை ஒன்றும் செய்ய முடியாமல் அவன் கையாலே தாலி வாங்கிக் கொள்ள நேர்ந்த தன் அவல நிலையை நினைத்து அவள் கண்கள் கண்ணீரை வடித்தது…

அவளின் உணர்வுகள் புரிந்தாற் போல, அகில் அவள் கையை அழுத்தமாக பற்றிக் கொள்ள.. அதையெல்லாம் சுமி உணரும் நிலையில் இல்லை..

அவர்களின் திருமணம் முடியவும் சுதா சுமியை அணைத்துக் கொள்ள, நிகில் அகிலை அணைத்துக் கொண்டான்..

“கங்கிராட்ஸ் அகி..” அனு குதுகாலிக்க, அகில் அவளை பார்த்து புன்னகை புரிந்தான்..

“சரி அடுத்த ஜோடியை வர சொல்லுங்க..” சுதா பெரியவராக குரல் கொடுக்க, அனு வினுவை அழைத்து வந்து திருவின் அருகில் நிறுத்தினாள்..

அருகில் தேவதை போல் ஜொலித்துக் கொண்டிருந்தவளை யாருமறியாமல் ரசித்துக் கொண்டிருந்தான் திரு.. வினு எப்படி உணர்ந்தாள் என்று அவளுக்கே தெரியவில்லை.. தான் மிகவும் எதிர்பார்த்த தருணம் ஆனால் அவளால் மகிழ முடியவில்லை. அவனது வார்த்தைகள் நெருஞ்சி முள்ளாக உறுத்தினாலும் அவனை தவிர்க்கவும் முடியவில்லை.. மனம் காதலுக்கும் கோபத்திற்கும் மத்தியில் ஊஞ்சலாடியது. இருந்தாலும் தனக்காக யோசித்து தன் குடும்பத்திடம் பேசி அவர்களை வரவைத்து, என அவன் அவளுக்காக செய்தது எல்லாம் அவளை அவனிடம் மயங்கவே செய்தது..

இந்த நொடி இந்த நிமிடத்தை மட்டுமே நிஜம் என்று தனக்கு தானே சொல்லிக் கொண்டவள் அவன் விழிகளை நோக்க, அதில் தெரிந்த அளவுக்கடந்த காதல் அவளின் மனதில் இருக்கும் சஞ்சலங்களை நீக்கியது.. அவனை பார்த்து மெலிதாக புன்னகைத்தவள் ஐயர் கொடுத்த மாலையை அவன் கழுத்தில் அணிவித்தாள்… அவனும் தன் கையில் இருந்த மாலையை அவள் கழுத்தில் அணிவித்துவிட்டு தாலியை வாங்கினான்…

அவள் முகத்திற்கு தாலியை நீட்டியவன் கண்களால் சம்மதம் கேட்க, அவள் அவனை விழிவிரிய பார்த்தாள்.. அந்த நிமிடம் அவளுக்கு அவன் அவளது திரு என்பது மட்டுமே மனதில் நிலையாய் நின்றது..

சரி என்று அவள் தலையசைத்த மறுநொடி அவள் கழுத்தில் தாலியை கட்டியவன் அவள் காதுக்குள், “லவ் யூ ஸோ மச் புஜ்ஜி” என்க, அதில் அவள் கண்களாலே அவனை கபளிகரம் செய்துவிடுபவள் போல் அவனை பார்த்தாள்..

எத்தனை நாட்கள் அவனிடம் லவ் யூ சொல்ல சொல்லி கெஞ்சியிருப்பாள், இன்று எதிர்பார தருணத்தில் அவன் சொன்ன காதல் அவளை புல்லரிக்க வைத்தது… இந்த திருமணம் இப்போது சரியா என்று யோசித்துக் கொண்டிருந்தவளுக்கு எல்லாம் சரியே என்று பதிலளித்தது அவள் இதயம்…

தான் காதலை சொன்னதும் அவள் சந்தோஷப்படுவாள், நானும் டா அரசு என்று ஆர்பப்ரிப்பாள் என்று திரு எதிர்பார்க்க அவளோ ஆச்சரியமாக ஒரு பார்வை பார்த்தாளே தவிர வேறேதுவும் செய்யவில்லை.. அதில் திருவின் முகம் வாடி போனது..

நிகில் தான் திருவை அணைத்து தன் மகிழ்ச்சியை வெளிப்படுத்தினான்.. அகில் சுமியின் கையை பற்றியவாறு அவள் அருகிலே நிற்க, விக்கி முறைத்தவாறே வந்து திருவின் கைகளை பற்றிக் கொண்டான்..

“இங்க பாருங்க ஹிட்லர்.. என் அக்காவை நீங்க அழ வைக்கிறிங்கன்னு நான் எதாச்சும் கேள்விபட்டா…” யாருக்கும் கேட்காமல் முகத்தை சிரிப்பது போல் வைத்துக் கொண்டு திருவிடம் கூறியவன் அவன் கண்களை நேராக பார்த்து, “நான் சும்மா இருக்க மாட்டேன்” என்றவன் எச்சரிப்பது போல் கூற, திரு அசந்து போனான்.

‘புள்ளபூச்சியெல்லாம் நம்மளை மிரட்டுதே..’ மனதில் சிரித்துக் கொண்டவன் விக்கியை பார்த்து புன்னகைக்க, அவனோ “பீ கேர்பூல்” என்று எச்சரித்துவிட்டு சென்றான்… அதில் திருவின் புன்னகை விரிந்தது.

சாமி சந்நிதிதானத்தை ஒரு முறை வலம் வந்தவர்கள் பின் ரிஜிஸ்டர் ஆபீசுக்கு சென்று வினு மற்றும் திருவின் திருமணத்தை பதிவு செய்தனர். அதற்கு பிறகு அனைவரும் திருவின் வீட்டிற்கு கிளம்ப,. அனைவரும் தங்குவதற்கு திருவின் தற்போதைய வீடு போதாது என்பதால் திருவின் பழைய வீட்டிற்கு வந்தனர்.

வீட்டிற்கு வந்தவர்களை அனு ஆரத்தி எடுத்து உள்ளே அழைக்க, பூஜையறையில் சென்று விளக்கேற்றினாள் வினு. அதன்பின் ஹோட்டலில் ஆர்டர் செய்து சாப்பிட்டவர்கள், வினு மற்றும் விக்கியின் சிறுவயது சேட்டைகளை பற்றி பேசிக்கொண்டிருக்க திரு ஆர்வமாக கேட்டுக் கொண்டிருந்தான்.. சுமி யாருக்கு வந்த விருந்தோ என்பது போல் அமர்ந்திருந்தாள்..

இரவு நெருங்க ஆரம்பிக்க, ஹனியை விக்கியோடு தூங்க வைத்துவிட்டு தங்கள் அறைக்குள் நுழைந்தான் திரு.. வினுவோடு நிறைய பேச வேண்டும், எப்படியாவது சமாதானம் செய்துவிட வேண்டும் என பல பல திட்டங்களோடு திரு உள்ளே நுழைய, அவன் வந்ததும் வேகமாக அவன் கையில் பெட்ஷீட்டை திணித்தாள் வினு.

“நீ என்ன பண்றன்னா?? அப்படியே மொட்ட மாடிக்கு போற.. அங்க தான் எங்கண்ணன் தூங்கிட்டு இருப்பான்.. அவன்கிட்ட இதுல ஒரு பெட்ஷீட்டை குடுத்துட்டு, நீயும் ஒரு பெட்ஷீட்டை அவன் பக்கத்துலயே விரிச்சி படுத்துக்கிற” என்றவள் இன்னொரு பெட்ஷீட்டையும் அவன் கையில் கொடுக்க, திரு அதிர்ச்சியில் வாய் பிளந்தான்..

அவன் அதிர்ச்சியை கண்டவள், “என்னடா எதுக்கு அப்படி பார்க்கிற?? போ போய் என் அண்ணா கூட தூங்கு” என்க,

திருவோ முகத்தை பாவமாக வைத்துக் கொண்டு, “ஏன் புஜ்ஜி மா?? எனக்கும் உங்க அண்ணாவுக்கும் தான் ஃபர்ஸ்ட் நைட்டா??” என்றான் கேள்வியாக…

விழிகள் தொடரும்……

Facebook Comments Box
What’s your Reaction?
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here