College Days article for agal

0
743

அனைவருக்கும் வணக்கம்.என்னுடைய கல்லூரி நாட்களைப் பற்றி அகல் மின்னிதழுக்காக நான் எழுதியவை. இதோ உங்களின் பார்வைக்கு.

ஸ்ரீரங்கம் தான் நான் பிறந்து வளர்ந்த ஊர். அரங்கனே எப்பொழுதும் தூங்கிக் கொண்டு இருக்கும் ஊரில் பிறந்த எனக்கு தூக்கம் வராமல் இருந்தால் தான் ஆச்சரியம்.எப்பொழுதும் போல என் அம்மா எனக்கு திருப்பள்ளியெழுச்சி பாடி என்னை எழுப்ப ‘விடியற்காலை’ ஏழு மணிக்கு எழுந்தவள் குளித்து முடித்து புடவையை கட்டிக் கொண்டு கல்லூரிக்கு கிளம்பினேன்.ஆம்! புடவை தான்.என்னுடைய கல்லூரியில் புடவையும்,தாவணியும் மட்டும் தான் அணிய வேண்டும்.மற்ற உடைகளுக்கு தடா.

பாதி சாப்பிட்டும் ,சாப்பிடாமலும் அரக்க பறக்க பஸ் ஸ்டாண்ட்க்கு ஓடிப் போய் பஸ் ஏறினேன்.அடுத்து அடுத்து வரும் பேருந்து நிறுத்தங்களில் என்னுடைய தோழிகள் ஏறுகின்றார்களா என்று பார்த்துக் கொண்டே போவேன் பயணம் முழுவதும்.

படித்தது அண்ணா சாலையில் உள்ள சீதாலக்ஷ்மி இராமசாமி பெண்கள் கல்லூரியில்.ஸ்டாப்பிற்கு வந்ததும் தோழிகள் அனைவரையும் ஒன்று சேர்த்துக் கொண்டு அவர்களோடு படையாக ரோட்டை அடைத்தவாறு முதல் நாள் பார்த்த கனாக் காணும் காலங்கள் சீரியலை பற்றி மிக முக்கிய விவாதம் நடைபெறும்.
“இந்த ராகவியும் சங்கவியும் எப்போ ஒண்ணு சேருவாங்க? இந்த பச்சை தன்னோட காதலை எப்போ தான் சொல்லுவான்?” இப்படியாக எங்கள் பேச்சு நீளும்.கல்லூரி வாசல் வரை அன்ன நடை நடந்து செல்லும் நாங்கள் கல்லூரியை நெருங்கியதும் பி.டி.உஷாவாக மாறி ஓட்டமெடுப்போம். பின்னே லேட் ஆகி விட்டால் பைன் காட்ட வேண்டுமே!

கல்லூரி வாசலை நெருங்கும் போது தான் அன்றைய டெஸ்ட் நினைவுக்கு வர வேகமாக அருகில் இருக்கும் ஸ்டேஷனரி ஷாப்க்கு போய் அந்த கூட்டத்தில் முண்டி அடித்துக் கொண்டு பேப்பரை வாங்கிக்கொண்டு ஒரு வழியாக வெளியே வந்த பின், காலையில் மேக்கப் செய்த போது கண்ணில் வரைந்த மை இந்த கூட்டத்தில் ஏற்பட்ட கசகசப்பினால் அழிந்து போய் இருக்குமோ என்ற எண்ணம். பெண்கள் கல்லூரிக்கு அருகிலேயே கடையை வைத்துக் கொண்டு ஒரு முகம் பார்க்கும் கண்ணாடி கூட வைக்காத கடைக்காரனை மனதுக்குள் சபித்தபடியே அங்கிருந்து வெளியேறுவேன்.பிரேயர் முடிந்ததும் நல்லபிள்ளையாக கிளாஸ்க்கு சென்று விடுவோம்.தமிழ் வகுப்பை எந்த காரணம் முன்னிட்டும் தவற விட மாட்டோம்.அதற்கு காரணம் எங்கள் தனலெட்சுமி மிஸ்.சோகமான காட்சிகளை கூட அதன் சாராம்சம் குறையாமல் சிரித்தபடியே சொல்லித் தருவார்.சரியான உதாரணத்தோடு சரியான நேரத்தில் நகையோடும், நேர்த்தியோடும் சொல்ல அவரால் மட்டுமே முடியும்.

அடுத்தடுத்து இரண்டு வகுப்புகள் முடிந்ததும் லஞ்ச்.எங்கள் அனைவரின் சின்ன சின்ன சந்தோஷங்கள், சண்டைகள்,கோபங்கள்,வருத்தங்கள்,செல்ல சீண்டல்கள் ,அரட்டைகள் இது அத்தனையும் நடைபெறுவது அந்த நேரத்தில் தான்.கையில் கொண்டு வந்து இருக்கும் உணவை தோழிகள் அனைவரும் பங்கு போட்டு உண்டு முடித்தாலும் வயிறு இன்னும் கொஞ்சம் என்று கெஞ்ச கால்கள் நேராக கான்டீன் நோக்கி இழுத்து செல்லும்.

ஆள் ஆளுக்கு கையில் கொண்டு வந்து இருக்கும் பணத்தை எல்லாம் ஒன்று சேர்த்து எல்லாரும் சேர்ந்து உண்ண சம்சா,பாப்கார்ன் இப்படி ஏதாவது வாங்கி நொறுக்குத் தீனி தின்ற படியே எங்களின் அரட்டை கச்சேரி மேலும் களை கட்டும்.

மற்ற தோழிகள் எல்லோரும் ஒன்றாக அமர்ந்து பேசிக் கொண்டே இருக்கும் போது என் நாசிக்கு மட்டும் அந்த கான்டீன் பரோட்டாவும் ,மீல்மேக்கர் குருமாவின் வாசனை மட்டுமே தெரியும். அதற்கு ஆசைப்பட்டு தான் NCCயில் சேர்ந்தேனோ என்ற ஒரு ஐயம் எனக்குள் இப்பொழுதும் உண்டு.(ஷ்…யாரும் சிரிக்கக்கூடாது)

வகுப்புகள் ஆரம்பிப்பதற்கு சரியாக சில நொடிகள் முன் எப்படியாவது மொத்த கல்லூரியையும் சுற்றி விட்டு வகுப்புக்கு சென்று விடும் நல்ல பிள்ளை நான்.

மதிய வகுப்புகள் சில நேரம் துக்கமாகவும்,பல நேரம் தூக்கமாகவும் தான் கழித்து இருக்கிறேன்.ஒரு வழியாக பெல் அடித்ததும் ஸ்கூலில் ஆரம்பித்த அதே பழக்கத்தின் படி அடித்து பிடித்து முதல் ஆளாக வகுப்பறையை விட்டு வெளியேறி தோழிகள் புடை சூழ அண்ணா சிலையில் எதிரே வரும் பஸ்சை மறித்து ஏறி காலையில் எந்த இடத்தில் சீரியல் கதையை நிறுத்தினோமோ அதே இடத்தில் இருந்து மறுபடி தொடங்குவோம்.யாருக்கு சீட் கிடைத்து பஸ்சில் அமர்கிறாளோ அவள் மடியில் எங்களது மொத்த புத்தக மூட்டையும் குடி பெயர்ந்து விடும்.

பஸ் கடைசியாக ஸ்ரீரங்கம் பஸ் ஸ்டாப்பில் நின்றவுடன் நேராக கிளாசிக் ஐஸ்கிரீம் கடைக்குள் புகுந்து விடுவேன்,நல்ல வெயிலில் அலைந்து திரிந்து வீடு திரும்பும் போது இரண்டு ரூபாய்க்கு கிடைக்கும் வெண்ணிலா ஐஸ்கிரீம் தேவாமிர்தமாக இருக்கும்.

வீடு திரும்பியதும் உடை மாற்றிக் கொண்டு அமர்ந்து படித்ததாக எனக்கு நினைவு இல்லை.கொஞ்சம் வெயில் தாழும் வரை பொறுத்து இருந்து விட்டு ஐந்து மணிக்கு மேல் கிளம்பி ஸ்ரீரங்கம் ராஜகோபுரம் வீதிகளில் அக்காவோடு வீதி உலா வருவேன்.கண்ணில் பட்டதை எல்லாம் வாங்கிக் குவிக்கும் அளவிற்கு கையில் காசு இருக்காது.இருக்கும் பணத்தில் அம்மாவுக்கு அண்ணனுக்கும் ராஜகோபுரம் அருகில் உள்ள தள்ளுவண்டி கடையில் இருந்து பானிபூரி சுண்டல் பார்சல் வாங்கிக் கொள்வோம்.அங்கே எல்லாம் ஆண்கள் கூட்டமாக இருப்பார்கள்.எனவே கடைக்கு சில பல அடிகள் தள்ளி நின்று அங்கு இருக்கும் யார் முகத்தையும் நிமிர்ந்தும் பார்க்காமல் கைக்கு பார்சல் வரும் வரை இருவரும் ஏதேதோ பேசி நேரத்தை போக்குவோம்.

அப்படி நாங்கள் பேசும் பேச்சுக்கள் அனைத்தும் எங்களை தவிர மற்றவர்களின் காதுக்கு விழாத வண்ணம் தான் பேசுவோம்.எனக்கும் அக்காவுக்கும் ஸ்ரீரங்க வீதிகளில் இருக்கும் விதவிதமான பொருட்களை எல்லாம் வேடிக்கை பார்த்துக் கொண்டே செல்ல பிடிக்கும்.ஸ்ரீரங்கம் கோவில் வருடத்தில் எல்லா நாளும் ஏதாவது ஒரு விசேஷம் நடக்கும்.அங்கு வரும் பக்தர்களுக்காகவே விதவிதமான பொருட்கள் விற்பார்கள்.

மண் பாத்திரங்கள்,குழந்தைகளுக்கான விளையாட்டு பொம்மைகள்,சாமி படங்கள்,பூஜை சாமான்கள்,பித்தளை பூஜை பொருட்கள்,தீனி வகைகள்… இப்படி ஆயிரம் பொருட்கள் அங்கே குமிந்து கிடக்கும்.

அதிலும் அங்கே உள்ள பழைய புத்தக கடையில் ஒரு புத்தகம் (ராணிமுத்து, குமுதம் போன்றவை மட்டும்) இரண்டு ரூபாய்க்கு கிடைக்கும்.பிடித்த ஆசிரியர்களின் புத்தகமாக வாங்கி வைத்துக் கொள்வேன்.கண் முன்னே இருபது,முப்பது புத்தகம் மலை போல கொட்டி குமித்து வைக்கப்பட்டு இருக்கும்.

அதில் ரொம்ப சிரமப்பட்டு ஒரு ஐந்து புத்தகத்தை மட்டும் தேர்ந்து எடுப்பேன்.கையில் பத்து ரூபாய் தான் இருக்கும்.அதற்கு பிறகு அக்காவும் நானும் செல்லும் இடம் ஹரிபிரியாவிற்கு (கடை பெயர் அதுதான் என்று நினைக்கிறேன்.நினைவடுக்குகளில் அந்த இடம் பதிந்த அளவிற்கு அதன் பெயர் பதியவில்லை).எங்களுக்கு அது தான் முக்கியமான இடம்.

எங்களின் ஆடைக்கேற்ற அணிமணிகள் விற்கும் கடை.எனக்கு இன்னும் நினைவு இருக்கிறது.பள்ளி படிக்கும் காலத்தில் தீபாவளிக்கு முதல் நாள் இரவில் இந்த கடைக்குள் பெண்கள் செல்ல முண்டியடித்துக் கொண்டு நிற்பார்கள்.சில நாட்கள் பொறுத்து பொறுத்து பார்த்து பின் நேரம் தாமதம் ஆகிறதே என்று வெறுத்துப் போய் கிளம்பிய கதைகளும் உண்டு.

இந்த விளையாட்டுத் தனம் நிறைந்த நாட்கள் எல்லாம் இரண்டாம் வருடம் வரை மட்டுமே.மூன்றாம் வருடம் ஆரம்பித்ததும் எங்கிருந்து வந்தது என்றே தெரியாமல் எதிர்காலம் குறித்த பயமும் கேள்வியும் தலையில் ஏறி அமர ஏற்கனவே இருந்த ஒன்று இரண்டு அரியரையும் கிளியர் செய்து விட்டு நிமிரும் முன் இறுதி செமெஸ்டர் வந்து இருக்க அடுத்தடுத்து எதை முடிக்க எதை விடுக்க என்று தெரியாமல் வரிசையாய் வேலைகள்.

ப்ராஜெக்ட் ஒருபுறம்,ட்ரைனிங் ஒருபுறம்,காம்பஸ் இன்டர்வியூ ஒருபுறம் என்று எங்களை பந்தாட வாசனையை மறந்த மலர்களை போல ஆனோம்.கல்லூரி வாழ்வின் கடைசி நாளில் ஒருவரை ஒருவர் கை கோர்த்து நின்று கொண்டு இருந்தோம் வெகு நேரம்.

எப்படி இருந்தாலும் இன்னும் கொஞ்ச நேரத்தில் இந்த கைகள் தானாகவே பிரிந்து விடும் என்று தெரிந்தாலும் பிரிய மனமில்லாமல் ஒன்றாகவே சுற்றினோம்.பேசாவிட்டால் அழுது விடுவோமோ என்று தோன்ற எதையெதையோ பேசி பொழுதை கழித்தோம்.

கடைசி நாள் என்ன பேசிக் கொண்டோம் என்று எனக்கு இப்பொழுது நினைவு இல்லை.தொழில்நுட்ப வளர்ச்சியின் காரணமாக எங்களில் ஒரு சிலர் இப்பொழுதும் இணைந்து இருக்கிறோம் வாட்ஸ்அப்பில்.முன்பு போல கான்டீன் அரட்டைகள் இல்லை,செல்ல சண்டைகள் இல்லை,கோபங்கள் எதுவும் இல்லை.ஏனெனில் எங்களுக்கு தெரியும் எங்களை போன்ற பெண்களுக்கு இதுவும் நிரந்தரம் இல்லை.

இப்பொழுது தொடர்பில் இருக்கும் நட்புகளின் எண்ணிக்கை எப்பொழுது வேண்டுமானாலும் கொஞ்சம் கொஞ்சமாக குறையத் தொடங்கலாம்.எங்களின் நட்பு வட்டம் சுருங்கலாம்.ஆனால் ஆழ்மனதில் பதிந்து போன சில விஷயங்கள் என்றும் மறப்பதில்லை.எங்கள் கல்லூரி கான்டீன் பரோட்டாவையும் குருமாவையும் போல.

மதுமதி பரத்.

Facebook Comments Box
What’s your Reaction?
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here