Kadhal karuvarai 7

0
774

கரு 7:
மூச்சு விடும் சத்தம் தவிர அந்த அறையில் வேறு எந்த சத்தமும் கேட்கவில்லை அந்த அளவு அவர்கள் இருவரும் இறுகி போயிருந்தனர், தாருண்யாவின் கண்கள் அந்த போட்டோவைப்பார்த்து வெறித்தது, இவனிடம சிக்காமல் இருக்கத்தான் எத்தனை போராட்டம் எல்லாம் உன்னால்தானே என்று தோன்றும் போதே ச்சீ ச்சீ அவள் நன்றாக இருக்க வேண்டும் என்று செய்தது, அதை போய் அவளை குறை சொல்வது போல் நினைப்பதா என்று தன்னை நினைத்தே கோபம் வந்தது.
“ நீயாக இழுத்துக்கொண்ட தண்டனை இது , இதிலிருந்து நீ தப்ப அவள் இருக்கும் இடத்தை சொல்” என்றான், இப்பொழுது அவனிடம் கோபம் தெரியவில்லை ஆனால் அந்த கண்களின் இறுக்கம் மட்டும் அவனின் ஆத்திரம் குறையவில்லை என்று காட்டியது.
அவள் அவனை நன்றாக நிமிர்ந்து பார்த்து “ எனக்கு தெரியாது, ஆனால் அவள் நன்றாக இருப்பாள், அவளின் வாழ்க்கை உங்களை விட்டு வெகு தொலைவில் போனதால் நன்றாகவே இருக்கும், அதைவிட எனக்கு அவள் இருக்கும் இடம் ஒருவேளை தெரிய வந்திருந்தால் கூட உங்களிடம் சொல்வதற்கில்லை “ என்றாள் திமிராக
“என்னடி சொன்ன” என்று நரம்புகள் புடைக்க அவன் கோபத்துடன் முன்னேறி வர திகைத்தாள். இன்னும் சிறிது விட்டியிருந்தால் அவன் அடித்திருப்பான், அவளின் திகைப்பை பார்த்தவன் நொடியில் தன்னை சமாளித்து அவளை பார்த்து சிரித்தான்
“சரி, அப்பொழுது உனக்கான தண்டனையை பெறுவது, அதுதான் உனக்கான விதி”
“நீங்கள் யார் என் விதியை தீர்மானிக்க?, இன்னும் இங்கு ஒரு நிமிடம் கூட இருக்கப்போவது இல்லை, உங்களை பார்த்ததும் எனக்கான முடிவு இங்கிருந்து வெளியில் செல்வதுதான் என்பதை முடிவு செய்துக்கொண்டுதான் உங்களை பார்க்க வந்தேன்”. என்றவள் திரும்பி நடக்க ஆரம்பிக்க,
அவன் அப்பொழுதுதான் நிதானமாக அவளுக்கு தன் வார்த்தைகளால் மின்சாரத்தை பாய்ச்சினான், ஆம் அதை அதிர்ச்சி என்று சொல்வதை விட மின்சாரம் என்றுதான் கூற வேண்டும், மின்சாரம் தாகியவர்கள் தங்கள் மூளை சொல்வதை உணர்ந்தாலும் அதை செயல்படுத்த முடியாமல் தன் எண்ணங்களை வெளிப்படுத்தமுடியாமல் அவர்களை கட்டுப்படுத்தும், அதிக அளவிலான மின்சாரம் நரம்பு மண்டலம் வழியாக பாய்ந்து உடலின் செயல்பாட்டை நிறுத்தும் அவனும் அவளை அப்படித்தான் செயல் இழக்க வைத்தான், அது உண்மை என்பதை தன் வார்த்தைகளால் நிரூபித்தான்.
“என்னம்மா, காதில் கேட்டது சரியா என்று யோசிக்கிறாயா?, நீ கேட்டது நிஜம் தான், உன் தந்தையின் சொத்து விஷயமும் உன் தாயின் ஆசையும் அதை நிறைவேற்ற நீ ஒளிந்து வாழ்வதும் உனக்கும் உன் சிதம்பரம் அங்கிளுக்கு மட்டுமல்ல எனக்கும் தெரியும்”
தன் சக்தி மொத்தமும் வடிந்த நிலையில் நின்றிருந்தவளை பார்த்து “இனி உன்னிடம் எதிர்ப்பிருக்காது என்று நினைக்கிறேன், பார்த்துக்கொள், உனக்கான பெரிய தண்டனையே எனக்கான இடத்தில் நீ அடைந்திருப்பது மட்டும் தான், இது உனக்கும் எனக்கும் நடக்கும் பிரச்சனை , இதில் அத்தை , குணா , சந்தோஷி என யார் சம்பந்தப்பட்டாலும் சரி , இல்லை நீ வேறு காரணம் கூறி இங்கிருந்து போகப்பார்த்தாலும் உன் நிலை என்ன என்பதை நீ அறிந்திருப்பாய் என்று நினைக்கிறேன்” என்றவன் அவளை இழுத்துக்கொண்டு போய் வாசல் கதவு வெளியில் தள்ளினான்,
“போ, போய் அத்தையிடம் நான் சம்மதித்துவிட்டேன் என்று கூறு” என்றவன் அவள் நின்றிருப்பதை துளியும் சட்டை செய்யாமல் கதவை அறைந்து சாத்தினான்.
கதவையே வெறித்து பார்த்து கொண்டு இருந்தவள், தன் ரூமிற்குள் வந்து மெத்தையில் விழுந்தாள் போயிற்று இனி எதுவுமே செய்ய முடியாது, அவன் வீசிய வெடி அணுகுண்டாய் அடுத்து என்ன செய்வது என்று யோசிக்க முடியாத அளவு கொண்டு வந்து நிறுத்தியது.
எதெல்லாம் அவன் தெரிந்து கொள்வதற்கு முன், அவள் போக வேண்டும் என்று நினைத்தாளோ, அது அனைத்தையும் ஒன்று விடாமல் தெரிந்து கொண்டிருக்கிறான் ஆக அவள் இங்கு இருப்பது அவனுக்கு தெரிந்திருக்கிறது அவனின் பதில்களே அதற்கு சாட்சி, தனக்கு நேர்ந்த அதிர்ச்சி எதுவுமே அவனுக்கு இல்லை, தெரிந்தே தன்னை இங்கு வைத்திருக்கிறான். சிறிது நேரம் யோசித்தவள், ஒரு முடிவிற்கு வந்தாள், இனி தனக்கு வேறு வழி இல்லை இங்கு இருந்துதான் ஆக வேண்டும், இவனை வேறு சமாளிக்க வேண்டுமென்று நினைத்தாலே கிலி பிடித்தது எத்தனையோ பார்த்துவிட்டாய் இதையும் நீ சமாளிப்பாய் என்று அவளின் மனம் தைரியம் சொல்லிற்று.
ஒரு பெருமூச்சுடன் எழுந்தவள் நேராக பெரியம்மா இருக்கும் அறைக்கு சென்றாள், எப்பொழுதும் சீக்கிரம் உறங்கசெல்பவர் இன்று நடந்த விழாவினால் களைத்திருந்தார் இருந்தும் அவனின் பதில் தெரிய அவளின் வரவுக்காக காத்திருந்தார்.
“என்னம்மா ஏதாவது ரொம்ப திட்டிட்டானா, சந்தோஷிக்காக ரொம்ப பார்ப்பான் ஆனாலும் நான் சொல்லி இருந்தேன்டா, நீ செய்தது எல்லாம் எனக்கு தெரியும் என்று, என்னடா ரொம்ப கஷ்டமாக இருந்ததா” தவிப்புடன் அவளின் பதிலை பார்த்தவரிடம் மனம் இளகியது.
திட்டினானா, உயிரை வேரோடு அல்லவா பிடுங்கி இருக்கிறான் உங்கள் செல்வ மகன் என்று நினைத்தவள் வெளியில் அதை காட்டிக்கொள்ளாமல் சிரித்தபடி “நான் தான் உங்கள் சிபாரிசு ஆயிற்றே அதனால் என்னை ஒன்றும் சொல்லவில்லை உங்களை பாதிக்காமல் செய்யும் எதிலும் தலையிட போவதில்லை என்றுதான் சொன்னார்” என்றதும் பெருமூச்சுவிட்டவர்
“அப்பாடா என்னமோ பரத் ஒத்துக்கொண்டுவிடுவான் என்று அவன் பேசியதிலே எனக்கு தெரியும் ஆனாலும் நீ அவனை பார்த்துவிட்டால் நிம்மதி என்று தோன்றியது இனி ஒரு பிரச்சனையும் இல்லை” என்றவரிடம் சிரிப்பை தந்து அவரை உறங்க சொல்லிவிட்டு தன் அறைக்கு வந்து விழுந்தாள். இந்த பேர் விஷயத்தில் கூட அவனை கண்டுகொள்ள முடியவில்லை இவர்கள் அவனை பரத் என்றாலும், மிதிலாவின் மனோவாக தான் அவளுக்கு இவனை தெரியும் முழுப்பெயர்கூட தெரியாமல் அவனிடம் எத்தனை போராட்டம், அந்த மனுபரதனால் இனி தனக்கு நிம்மதி என்பது ஒரு நாளும் இல்லை என்று தோன்றியது, நினைக்கும் பொழுதே மனம் வலித்தது ஆனால் அழுகை வரவில்லை இனி சமாளிக்க வேண்டும் என்ற எண்ணம் மட்டும் தோன்றியது. அவளின் அழுகையே அவளுக்கு ஒரு திடத்தை மனதிற்கு கொடுத்தது.
அவளுக்கு மிகபிடித்த ராமனின் படத்தை கையில் வைத்துக்கொண்டு “இனி உன் கையில்தான் எல்லாம் இருக்கிறது நான் போகும் வழிகளை காப்பாத்த வேண்டியது உன் வேலை,, சீக்கிரம் இந்த அசோகவனத்தில் இருந்து என்னை மீட்டு எடுப்பது உன் கடமை, அந்த சீதைக்கும் எனக்கும் நிலைமை ஒன்றுதான் ஆனால் அவள் இருந்த இடத்தில் அனைவரும் அரக்கர்கள், எனக்கு இவன் ஒருவன் மட்டும்” என்றவளின் மனமும் அந்த சீதையை போல் விடுதலைக்காக காத்திருக்க ஆரமித்தது.
அன்றுடன் தாருண்யா மனுபரதனிடம் வேலை செய்ய ஆரமித்து ஒரு வாரம் ஆகி இருந்தது , அவளை எப்படியெல்லாம் சித்ரவதை செய்வது என்பதை அவன் செயலில் காட்டிக்கொண்டிருந்தான், குணாவின் தந்தையிடம் தனக்கு கணக்குகளை பார்க்க ஆள் தேவை இருப்பதாக சொல்லி அவளை அவனிடம் வேலைக்கு எடுத்தான்
பெரியம்மா மனதில் மிகவும் சந்தோஷம் அடைந்தார் அவனிடம் “பார்த்தாயா நான் தேர்ந்தெடுத்த பெண்ணை நீ வேலைக்கு வைத்திருக்கிறாய் , அவ்வளவு திறமையானவள் அவள்” என்றார்
“ஆம், மிகவும் தந்திரமாக வேலை செய்கிறாள்” எந்தது அவன் சொன்னதை கூட திறமையை தான் சொல்கிறான் என்று நினைத்து சந்தோஷபட்டார்
“ஆனால் அவளை அதிக நவ்ரம் உன் வேலைக்காக செலவு செய்ய வைக்கக்கூடாது”
“என்ன அத்தை , எனக்கு அவள் வேலை செய்பவளா இல்லை அவளுக்கு நான் வேலை செய்கிறேனா, அவளுக்காக இத்தனை சட்டம் போடுகிறீர்களே” என்று சிரித்தபடி தினமும் அன்றைய வரவு செலவுகளை சரி பார்த்து அதை பற்றி கூற ஒரு மூன்று அல்லது நான்கு மணி நேரம் இருந்தால் போதும் என்றான்
அந்த விழா முடிந்த அடுத்த நாள் சந்தோஷி பரதனிடம் தாருண்யாவை வெளியே அனுப்ப சொல்லி அவளிடம் தாருண்யா நடந்து கொண்ட விதத்தையும் கூற நிதானமாக அவளை பார்த்தவன் “பார் சந்தோஷி இது அத்தையின் ஏற்பாடு அவர்களுக்கு நீ உதவி இருந்தால் வெளியிருந்து கண்டவர்களும் இங்கு வேலையென்று வந்து உட்கார்ந்திருக்க மாட்டார்கள், இதில் அவர்களுக்கு எதிராய் என்னால் ஒன்றும் செய்ய முடியாது ஆனால் அவள் நாளையிலிருந்து என் மேற்பார்வையில் இருப்பாள், அதனால் உனக்கு அவளால் எந்தவித தொந்தரவும் இருக்காது” என்றவன் அந்த பேச்சை முடித்தான்.
அன்றிலிருந்து தாருண்யா அவனிடம் வேலைக்கு சென்றாள் என்பதை விட தினமும் மூன்று மணி நேரம் அவனிடம் சிறையிருந்தாள், வேலையில், வார்த்தையில் அவளை குதறிக்கொண்டிருந்தான், எதற்கும் அவள் சட்டை செய்யாமல் இருக்க பழகி கொண்டாள், கணக்குகள் பற்றிய விஷயங்கள் அவளுக்கு புதிதல்ல என்பதால் சமாளித்தாள் ஆனால் அவள் செய்யும் வேளைகளில் அவளுக்கு தெரியாமல் அவனே சில தவறுகளை ஏற்படுத்தி அவளை வாட்டினான்.
அன்றும் அவன் சொன்ன அளவிலான கொட்டேஷனை அவள் டைப் செய்து கொண்டு வர டெண்டரின் மதிப்பு மாறி இருப்பதாக குற்றம் சுமத்தினான். “எப்படியும் எனக்கு இந்த வேலையினால் கிடைக்க வேண்டிய நற்பெயரையும், லாபத்தையும் தடுக்க தான் நீ தவறு செய்தாய், உன்னை போன்ற அன்றாடங்காய்ச்சிகளுக்கு இதை பற்றிய அக்கறை எப்படி இருக்கும், போ போய் மாற்றி அடித்துக்கொண்டு வா” என்று அவளிடம் பேப்பரை விட்டெரிந்தான்.
பொறுமையாக அவன் அடித்த பேப்பர்களை மெதுவாக பொறுக்க ஆரமித்தாள்,இப்பொழுதெல்லாம் இந்த மாதிரி விஷயங்களுக்கு கோபமே வருவதில்லை தெரியாமல் நடக்கும் விஷயங்களுக்கு தான் கோபம் வரும் ஆனால் இவன் தன்னை கேவலப்படுத்த வேண்டும் என்றுதான் குறை கூறிக் கொண்டிருக்கிறான், என்று நினைத்தவளுக்கு தன்னை நினைத்தே வியப்பாக இருந்தது தன் தாய் இருந்தவரை அவள் எவ்வளவோ கூறிக்கூட தன் கோபத்தை குறைக்காதவளுக்கு அவள் இறந்த பிறகு அன்னையின் ஆசையை நிறைவேற்ற வேண்டும் என்ற எண்ணமே அவளின் கோபத்தை முழுவதுமாக குறைந்துவிட்டது ஒருவேளை மனது மரத்துவிட்டதோ என்றுகூட தோன்றியது.
அப்படி இல்லை என்பதை அவனின் வார்த்தைகளும் அவளின் செயலும் காட்டியது, மெதுவாக நிமிர்ந்தவள் அவனை மரத்த பார்வை பார்த்து விட்டு திரும்ப
“நான் பணக்காரன் என்பது உனக்கு தெரிந்துதான் உன்னை விட அவளுக்கு பெரும் பணம் வரும் என்று நினைத்து அவளை பிரித்தாயா? நான் பணம் உள்ளவன் என்பதை எப்படி கண்டுபிடித்தாய், உனக்கு விஸ்வசமானவர்கள் கூறினார்களா? அப்படி எத்தனை பேரை பிரித்திருக்கிறாய்” என்ற பொழுது அவனின் கன்னத்தில் அவளின் கைதடத்தை பதித்தாள், அவனின் வார்த்தை என்னும் சாட்டைகள் அவளை சுழட்டி அடிக்க தன்னை மீறி திருப்பி கொடுத்துவிட்டாள்,அவளின் மனதும் சொன்னது நான் இன்னும் மரத்து போகவில்லை என்று.

Facebook Comments Box
What’s your Reaction?
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here